தீட்டு

death and life

நமச்சிவாயம் நாக்கு உலர்ந்து தவித்தார். அவர் சிகரெட் பிடிக்கும் நேரமிது. சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு சிகரெட் பிடித்தாக வேண்டும். வீட்டின் பின்கட்டு அறையில் தான் அவருக்கு வாசம். தனி கட்டில், டிவி. எப்போதும் டிவி ஓடிக்கொண்டிருக்க வேண்டும் அவருக்கு. ஒருமுறை இப்படித்தான் டிவியின் வயர் அறுந்துவிட்டது. தவியாய்த் தவித்தார். மேல்வீட்டில் இருந்து கணேஷைக் கூப்பிட்டு அனுப்பினார். அவன் எலெக்ட்ரீஷியன்தான் பார்க்கமுடியும் என்று சொல்லிவிட்டான். அவர் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார், எப்படியாவது சரிபண்ணித் தரும்படி. அவரால் ஹாலில் உள்ள டிவியில் படம் பார்க்க முடியாது. அங்கிருக்கும் சேரில் அவருக்கு உட்காருவது சிரமம். மனைவி செண்பகத்தம்மாளுக்குத் தனி அறை கிடையாது. நமச்சிவாயத்தின் பேரன் தனுஷுக்குத் தனியறை. அவர் பிள்ளை பாலுவும் மனைவிக்கும் தனியறை.மொத்தம் மூன்று படுக்கையறைகள். ஹால், டைனிங் ஹால், கிச்சன். மேல் போர்ஷனில இரண்டு வீடுகள். கணேஷின் குடும்பமும், சுப்பக்காள் குடும்பமும் வசிக்கின்றன.
மல்லாக்கக் கட்டிலில் படுத்திருந்தவர் வலதுபுறம் புரண்டு சாய்வாகப் படுத்தார். தோளால் உந்தி கால்களைத் தொங்கவிட்டு எழுந்து உட்கார, அவருக்கு மூச்சு வாங்கியது. கைக்கம்பு ஒரு ஆறடி தொலைவில் இருந்தது. கொஞ்சநேரம் காத்திருந்தார். செண்பகத்தம்மாள் அவர் அறையைத் தாண்டிப்போகையில் பலம் கொண்டமட்டும் கட்டிலில் ஓங்கியடித்தார். செண்பகத்தம்மாள் எட்டிப்பார்த்தார். கைக்கம்பை சைகையால் காட்டினார். மனைவியிடம் பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தையில்லை. ஆக்கிப்போட அவரைக் கவனித்துக் கொள்ள எல்லாம் செண்பகத்தம்மாள் தான். இப்போது கேட்டால் எப்படி ஆரம்பித்தது என்றே அவருக்கு ஞாபகமில்லை, ஒருவேளை செண்பகத்தம்மாளுக்கு நினைவிருக்கலாம்.
கம்பை ஊன்றியபடி நடக்க ஆரம்பித்தார். மூச்சு வாங்கியது அவருக்கு. ‘எப்படியாவது ஒரு சிகரெட் பிடித்தால் போதும். அக்கடாவென்று படுத்துவிடலாம். சனியன், இந்த மூட்டு வேறெல்லா குடையுது’. நான்கு அடிகளுக்கொருமுறை நின்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். இனி படியிறங்க வேண்டும். கம்பை அடுத்த படியில் வைத்து இடதுகாலில் உடல் எடையைத் தாங்கி வலது காலைக் கீழ்ப்படியில் வைத்தார். இடது மூட்டு விண்விண்ணென்று தெறித்தது. ‘சிவ சிவா’
வீட்டின் கிரில் கதவை அடைவதற்குள் ஐந்து நிமிடமாகிவிட்டது. தெருமுனைக்கடைக்குச் செல்ல மொத்தம் முந்நூற்று இருபது எட்டுக்கள். இதை ஆறுமாதத்திற்கு முன்புதான் கணக்கிட்டார். தினமும் நடந்துபோய் வரும் கடையல்லவா.
‘இருபத்தொன்று…இருபத்திரெண்டு…இருபத்தி மூன்று..ஊகூம். முடியாது. நகரவே முடியாது. உடல் நடுங்கியது. கம்பை இறுகப் பிடித்துக் கொண்டார். ரொம்பத் தாகமாயிருந்தது. ஒரு சொம்புத் தண்ணீராவது வறண்ட நாக்குக்குக் குடித்துவிட்டு வந்திருக்கலாம். இருபத்தி நான்கு…இருபத்தி ஐந்து…’ கால்கள் பலமே இல்லாமல் நடுங்கின. தள்ளாடினார். கம்பை இறுகப்பற்றியபடி உடல் எடை காலில் தங்காமலிருக்க முயற்சி செய்தார். பிடிமானம் தவறி அப்படியே முன்னால் விழ நடு நெற்றி நங்கென்று தார் ரோட்டில் முட்டியது. இரத்தம் சுற்றுலா வந்த் கூட்டம்போல படர்ந்தது. ‘அப்பாடி. இனி கடைக்குப் போக வேண்டியதில்லை. ஆ….சிகரெட்’. நெஞ்சு நிறைய காற்றை இழுத்து ஊதினார். இரண்டாவது வீட்டில் வண்டியை வெளியே எடுத்து வந்த ஜெபராணி அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தாள். நமச்சிவாயம் கடைசியாய் ஒருமுறை ‘ப்பூ’ வென்று ஊதித்தள்ளினார். அவள் அவரைத் தொட்டபோது இறந்து போயிருந்தார்.

oOo

ஜெபராணிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே புரியவில்லை. வீட்டுக்குள் ஓடி சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தாள். தாத்தா முகத்தில் விசிறியடித்தாள்.
“தாத்தா, தாத்தா” என்று கூப்பிட்டுப் பார்த்தாள்.
“அய்யோ!” ஓடிப்போய் தாத்தா வீட்டில் தகவல் சொன்னாள். நல்லவேளையாக நமச்சிவாயத்தின் மகன் பாலு வீட்டிலிருந்தார். அம்மா செண்பகத்தம்மாளுடன் ஓடிவந்தார்.
அவருக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு ஏன் அதிர்ச்சியே வரவில்லை என்று ஆச்சரியமாய் இருந்தது. ஒருவேளை இப்படி ஆனால்..என்று மனதிற்குள் பலமுறை ஒத்திகை பார்த்ததினால் தானோ?
செண்பகத்தம்மாள், “எய்யா, எந்திரிங்க….இங்க பாருங்க”
“இரும்மா நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்”
“வெரசா வாய்யா”
செண்பகத்தம்மாளுக்கு உடம்பு நடுங்கியது. ஜெபராஜிக்கு ஸ்கூலுக்குப் போகவேண்டும். ஏற்கெனவே லேட். ஒன்றும் சொல்லாமல் வண்டியை எடுத்தாள்.
“யம்மா. ரெண்டு நிமிஷம் இரும்மா. மவன் வரந்தண்டியும் இரு.”
“ஆட்டோ ஸ்டேண்டுக்குத்தான் பாட்டி போறேன். ஆட்டோ வருதான்னு பாக்கேன்”. வண்டியை எடுத்து நேராய் ஸ்கூலுக்கு விட்டாள்.
பாலு தெருமுனையில் நின்று அமெரிக்காவில் இருக்கும் தன் தம்பிக்குத் தகவல் சொன்னார். சென்னையிலிருக்கும் அண்ணனுக்குச் சொன்னார். அப்புறம் ஆட்டோவுடன் வந்தார். செண்பகத்தம்மாள் தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். தரையில் இரத்தம் ஓடி இறுக ஆரம்பித்திருந்தது.
“ஒன்னும் இல்லம்மா. சரியாயிரும்”
டிரைவருடன் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றினார். டூட்டி டாக்டர்தான் இருந்தார். நேராய் ஐசியூவிற்குக் கொண்டு போனார்கள். செண்பகத்தம்மாள் ‘எய்யா…எய்யா’ என்று அரற்றிக் கொண்டிருந்தார்.
டாக்டர் பார்த்துவிட்டு அவர் அங்கு வருமுன்பே இறந்துவிட்டார் என்றார்.
“அய்யோ..அய்யோ….எந்தங்கம் என்னை விட்டுட்டீரா…தொடச்சிப்போட மொதக்கொண்டு செஞ்சனே..என்னை விட்டுட்டீரே. அய்யோ..யம்மா….நா என்ன செய்வேன்” பாட்டி தலையிலடித்துக்கொண்டு ஐசியூவிலேயே சரிந்து விழுந்து அழுதாள். டாக்டருக்கு சலிப்பாயிருந்தது. அப்படியே பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த நர்ஸ்களிடம் கண் காட்டிவிட்டு வெளியேறினார். தாத்தாவின் உடலை ஆட்டோவில் ஏற்றினர். செண்பகத்தம்மாளை இரண்டு நர்ஸ்கள் கைத்தாங்கலாகக் கூட்டி வந்து ஏற்ற ஆட்டோ கிளம்பியது.

oOo

ஒரு கி.மீ. தூரமே இருக்கும் ஆசுபத்திரிக்கு நூற்றைம்பது ரூபாய் கேட்ட டிரைவரிடம் பாலு பேரம் பேசவில்லை. ஸ்டேண்டுக்கு வராமல் நேராய் வண்டியை வீட்டிற்கு விட்டார் ஆட்டோக்காரர். ஒருகுடம் தண்ணீரை மனைவியை எடுத்துவரச் சொல்லி பின்சீட், கதவு, கைப்பிடி என்று ஒரு அலசு அலசினார். பழைய துணியால் நன்றாகத் துடைத்தார். கால், கை முகம் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டார். வண்டியை ஸ்டேண்டுக்கு விட்டார்.
“மாமா, பாலுசார் அப்பா இறந்துட்டார்”
“பாலுசார்….சென்னைல இருக்கறவரா?”
“இல்லப்பா, இங்க கீழ் வீட்டில் இருப்பாருல தாத்தா, அவருதான்”
“அய்யோ! என்னாச்சி?”
“காலைய வெளிய நின்னு சிகரெட் குடிப்பாருல்ல. சிகரெட் வாங்கப் போயிருக்காரு. அப்படியே ரோட்ல விழுந்துட்டாரு. ஜெபராணிக்கா வீட்டு முன்னாடி. அவங்க பாத்துச் சொல்லிருக்காங்க. நல்லவேளை பாலுசார் அந்நேரம் வீட்டில இருந்ததால, ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க. வர்றதுக்கு முன்னாடியே இறந்துட்டதாச் சொன்னாங்களாம்”
“அடடா…பாலுசார் வீட்டம்மா வந்தாச்சா?”
“….ம்…யாரு எக்கேடு கெட்டா என்ன. அவளப்பத்தித்தான் இப்ப தெரியணுமாக்கும். வந்தாச்சி…வந்தாச்சி. நீங்க ஒரு எட்டு வந்துட்டுப் போறீங்களா?”
“இப்பயா? வேணாம் இப்ப வந்து குளிச்சி…ஆகற காரியமில்ல. நைட்டு வர்றேன்.”
கணேஷுக்கு எரிச்சலாய் இருந்தது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான் அவன். இந்த வீட்டுக்கு வந்து மூன்று வருடங்களாகின்றன. தாத்தாவிடம் அவன் மொத்தமே பத்து வார்த்தைகளுக்குள்தான் பேசியிருப்பான். அவர் முகம் எப்போதும் முறைத்துப் பார்ப்பது போல இருக்கும். ஆரம்பத்தில் அவன் அவரைப் பார்த்ததும் சிரித்து வைத்தான். குட்மார்னிங் கூடச் சொன்னான். அவர் முகம் மாறவேயில்லை. இவனும் அப்புறம் கண்டுகொள்ளவேயில்லை. காலை ஆறு முப்பதுக்கு அவர் வாசலில் பேப்பருக்காகக் காத்திருக்கும்போது இவனும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுக் காத்திருப்பான். இருவருமே மௌனமாய் இருப்பார்கள். ஒரே ஒருமுறை அவர் அறைக்குள் போயிருக்கிறான். வயதானவர்களின் அறைக்கே உரிய ஒரு அழுத்தமான நெடி வீசியது. டிவி பிளக் வயரின் முனை அறுந்து போயிருந்தது. டிவியிலிருந்து வரும் வயர் என்பதால், அதை எலெக்ட்ரீஷியன்தான் மாட்டவேண்டும் என்று சொன்னார். அவர் ‘இல்லை. இதை அறுத்து ஒரு இன்சொலேஷன் டேப் ஒட்டு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இவன் வந்துவிட்டான். அவனுக்கு அன்றாட அலுவல்களில் தடங்கல் என்றாலே எரிச்சல்தான் வருகிறது.
மதியம் பூரணி மிஸ்டு கால் கொடுத்தாள். அவள் மொபைலில் காசிருந்தாலும் மிஸ்டு கால்தான் கொடுக்கிறாள். அவள் செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இரண்டுமாதங்களுக்கு முன் இவன் சொன்னதிலிருந்து இந்த வேலை பார்க்கிறாள்.
கணேஷ், “என்ன?”
“இந்தா பாப்பா பேசணுமாம்”
“குட்டிம்மா! என்ன பண்றே”
“நானு…நானுக்கு கால்ல ஸ்டிக்கர் ஒட்டிருக்கே”
‘உங்கள் அழைப்பு தற்சமயம் ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளது.’ அழைப்பைத் துண்டித்தான். திரும்பப் போட்டான். லைன் பிஸி என்று வந்தது. ‘இந்தக் கருமாந்தரம் பிடிச்ச டச் ஸ்கிரீன் வந்ததும்தான் வந்தது தொந்தரவால்ல இருக்கு’ என்று சலிப்புடன் செல்போனை வைத்தான். கொஞ்சநேரத்தில் மீண்டும் மிஸ்டு கால் வந்தது. பேசினான்.
“சொல்லும்மா”
“பாப்பா தெரியாம கட் பண்ணிட்டா…கால்ல பாப்பாக்கு தீப்புண்ணு இருந்ததில்ல, அதுக்கு தாய்சேய் மையத்துல மருந்து போட்டுட்டு வந்தோம். மேல் தோலை வெட்டி, பேண்டேஜ் போட்டு வுட்டாங்க. அந்த அம்மா சொல்லுது ‘ரொம்ப தைரியசாலிதான். அழவேயில்லியே’ன்னு.
“ம்ம்…”
“சரிப்பா. நைட்டு வரம்போது, பாய்கடைல சாப்பாட்டு அரிசி வாங்குங்க. அப்படியே இட்லி அரிசி மூனுகிலோ, நல்லெண்ணெய் ஒருலிட்டர் வாங்கிருங்க. மளிகைச்சிட்டை எப்பக் குடுக்கலாம்?”
“சொல்றேன்…வேணாம். நீ எழுதி நாளைக்கே குடுத்து கொண்டுவரச் சொல்லிடு”
“நைட்டு ஒரு எட்டு கீழ்வீட்டில பாத்துட்டு வந்துடுங்க. என்ன?”
“ம்ம்ம்…”
“ஒன்னும் பிரச்சினையில்லியே”
பல்லைக் கடித்துக்கொண்டான். “ஒன்னுமில்லை”

oOo

‘இந்த மழை விடவே செய்யாது போலருக்கே’. கணேஷுக்கு ஆஸ்துமா உண்டு. மழை நேரத்தில் சளி பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் அவதிதான். படியேறிவந்தால் கூட இளைப்பு வந்துவிடுகிறது. அஸ்தாலின் இன்ஹேலர் இப்போதெல்லாம் சரியாய்க் கேட்பதில்லை. ஏரோகாட் அடிக்கவேண்டியிருக்கிறது. அது கொஞ்சம் பவர் கூடுதல். மணி 9:45. மழை இப்படியே பெய்தால் நல்லதுதான். இழவுவீட்டில் எல்லோரும் உள்ளே போய்விடுவார்கள். அப்படியே நைசாய் நழுவிவிடலாம். எங்கெ நழுவமுடியும். எப்படியும் காலையில் எட்டிப் பார்க்கத்தானே வேண்டும். காலையில் குளிக்குமுன் ஒரு எட்டு போய்வரவேண்டியதுதான். இந்நேரம் இந்தக் குளிரில் எப்படி குளிப்பது?
பாதியில் விட்ட புத்தகத்தை எடுக்கவும் பூரணி மிஸ்டு கால் கொடுக்கவும் சரியாயிருந்தது.
“மாமா, கெளம்பலையா. மணி என்னாவுது”
“என்ன வேணா ஆகுது, போடி. மழை எப்படி பெஞ்சிட்டிருக்கு”
“அரிசி மறந்துடாதீங்க. கீழே ஒருஎட்டு பாத்துட்டு வாங்க”
“ஏடி, நான் போயி என்ன செய்ய. எனக்கு என்ன கேக்கணும்னே தெரியாது”
“என்ன, பாலுசார் வெளிய நின்னா, கையப்பிடிச்சி அப்பா தவறிட்டாங்களாமேன்னு கேளுங்க”
“என்னடி லூசு மாதிரி பேசற”
“ஏயப்பா, எனக்குத் தெரியாது. போய்ப் பார்த்துட்டு வாங்க”
“ஏடி மழை வேற பெய்யுது. இப்பப்போய் பாத்து வந்து இந்த மழைல நான் குளிக்கவா. அப்புறம் எனக்கும் சேத்து பாடை கட்ட வேண்டியதான்.”
“பக்கி. அறிவுகெட்டத்தனமாப் பேசாத. அவரு காலைலயே இறந்துட்டாரு. இப்பக்கூட பாக்கலைன்னா நல்லாருக்காதில்ல. எல்லோரும் கீழ வெளியதான் உட்கார்ந்திருக்காங்க. நீங்க குளிக்க வேண்டாம் சாமி. சும்மா காலை மட்டும் கழுவிட்டு வாங்க போதும்.”
“சரி….பாக்கறேன்”
கணேஷ், பாய்கடையில் அரிசியும் நல்லெண்ணையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போகும் வழியில் துக்கவீட்டில் எப்படி நடந்துகொள்வது என்று யோசித்தபடியே சென்றான். அங்கு யாரையும் பார்த்தவுடன் வழக்கம்போல் சிரிக்கவோ, தலையசைக்கவோ கூடாது என்று ஞாபகப்படுத்திக் கொண்டான்.
பாலுசார் வாசலில்தான் நின்றுகொண்டிருந்தார். பூரணியிடம் அரிசியைக் கொடுத்துவிட்டு பாலுசார் வீட்டினுள் சென்றான். பாலுசார் மனைவிதான் இவனைப் பார்த்தவுடன் வாயெல்லாம் சிரிப்பாக ‘வாங்க’ என்றாள். ஆமாம், மருமகளுக்கு என்ன துக்கம் இருந்துவிடப்போகிறது. அத்தனை கவனத்தையும் மீறி பதிலுக்குப் புன்னகைத்துத் தலையசைத்தான்.  நல்லவேளை பூரணி பின்னால் இல்லை. ஹாலில் ஐஸ் பெட்டியினுள் தாத்தாவின் உடல் மாலைகள் போட்டு கிடத்தியிருந்தார்கள். கொத்தாக ஒருகட்டு ஊதுபத்தியும் புகைந்துகொண்டிருந்தது. கீழே உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் இவனையே வெறித்துப் பார்த்தனர். அமைதியாய் கைகளைக் கோர்த்துப் பிடித்தபடி தலையிலிருந்து கால்வரை தாத்தாவைப் பார்த்தான். உள்ளே எவ்வளவு குளிர் இருக்கும்? ஐஸ் பெட்டிக்கு மேலும் மாலைகள் கிடந்தன. ‘சே. ஒருமாலை வாங்கி வந்திருக்கலாம்’. தலையை நிமிர்த்தி பக்கவாட்டில் பார்த்தான். பேரன் தனுஷின் புகைப்படம்தான் தொங்கிக்கொண்டிருந்தது. தாத்தாவின் படம் இருந்திருந்தால் கொஞ்சம் அர்த்தப்பூர்வமாக இருந்திருக்கும். கரண்ட் இல்லை. இன்வெர்டரில்தான் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பேசுவதற்கு விசயம் கிடைத்தவுடன் பாலுசாரிடம்,
“ஜெனரேட்டர் எதுவும் சொல்லிருக்கீங்களா?
“பாத்துட்டே இருக்கோம். உங்களுக்குத் தெரிந்த இடம் எதுவும் இருக்குதா?”
கணேஷ் அப்படியே வெளியே வந்து போனில் ஒரு நண்பரைப் பிடித்தான். அவர் ஒரு கடை சொன்னார். வீடோடு சேர்ந்திருப்பதால் எந்நேரமும் கிடைக்கும் என்றார். பாலுசார் அவரது சொந்தக்காரர் ஒருவரிடம் ஸ்கூட்டி சாவியைக் கொடுத்து எடுத்துவரச் சொன்னார். சொந்தக்காரர் ஒரு பையனுடன் வண்டியை வெளியே எடுத்தார்.
சொந்தக்காரர், “ஒரு துணி வாங்கி சீட்டைத்துடை. ஒரே ஈரமா இருக்கு பாரு”.
அந்தப்பையன் பழைய துணி வாங்கி சீட், ஹேண்டில், ஹெட்லைட் என்று துடைக்க ஆரம்பித்தான். சொந்தக்காரர் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார். பாலுசார் கணேஷிடம்,
“இன்னும் ரெண்டு பேர்ட்ட சொல்லிருக்கேன். எங்க முதல்ல ஜெனரேட்டர் கிடைக்குதோ, பாக்கணும்”
பாலுசாரின் மனைவி பூரணியிடம் வந்தாள்.
“சுப்பக்கா இருந்தா கூப்பிடுங்களேன்”
“என்ன?”
“எப்படியும் தூங்க முடியாது. பேசிட்டு இருக்கலாம்ல”
இருவரும் சிரித்தார்கள்.
“அவங்க அப்பதையே படுத்துட்டாங்களே”
“ம்ஹூம்…”
எப்படி ஒரு துக்கவீடும் ஒரு கல்யாணவீட்டைப்போல  தேவையற்ற பரபரப்பும் அபத்தமுமாய் இருக்கிறது என்று வியந்தபடியே கணேஷ் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

One Reply to “தீட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.