க. நா. சு. கவிதைகள்

[ 1 ]
க. நா. சு. என்றழைக்கப்படும் கந்தாடை நாராயணஸ்வாமி சுப்பிரமணியம் கல்லூரி நாட்களில் அதாவது 17, 18 வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்.  1936-37ஆம் ஆண்டில் (அவர் பிறந்த வருடம் 1912 என்பதால்) அதாவது 22 ஆம் வயதில் தமிழிலும் கதைகளும், கவிதைகளும் எழுதலானார்.
kanasu1

திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏகம் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அழியாவண்ணம்
அழகி என்று
அவளை அறிவதெப்படி?

என்று ஆரம்பிக்கும் அவரின் முதல் கவிதை ’மணப்பெண்’ என்ற பெயரில் 14.05.1939 சூறாவளி இதழில் வெளியாகியது.
 
20 வருடங்களுக்குப் பிறகு ’புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக் கொண்டு நடந்தேன்,’ என ஆரம்பிக்கும் கவிதை ’மின்னல் கீற்று’ என்ற தலைப்பில் 1958 சரஸ்வதி இதழில் பிரசுரமாயிற்று.
 
இதற்கு அடுத்த ஆண்டு (1959) சரஸ்வதி ஆண்டுமலரில் சமகால ஆங்கில மற்றும் தமிழ் கவிதைகளின் போக்கு பற்றிய அவரின் கட்டுரையில் ‘புதுக்கவிதை’ என்ற சொல் அடிக்கடி பிரயோகமாகிறது. 1977 ஆம் ஆண்டு தன் கவிதை தொகுப்பின் முன்னுரையில் புதுக்கவிதை என்ற சொல்லை தமிழ் மொழியில் உண்டாக்கியது எப்படி என்பதையும் அவரே விளக்குகிறார்.

புதுக்கவிதை என்ற வார்த்தைச்சேர்க்கைக்கு ஏதோ மேதை, மேதாவித்தனம், அல்லது special மரியாதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வசன கவிதை என்கிற வார்த்தை போதுமானதாக இல்லை என்பதால் புதுக்கவிதை என்று 1930களில் கம்யூனிஸ்டுகளிடையே வழக்கிலிருந்த New verse என்கிற பதத்தை மொழிபெயர்த்துச் சொன்னேன். அவ்வளவுதான். பெயரில் ஒன்றும் பிரமாதமான பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு புதுமாதிரியான கவிதை முயற்சிக்குப்பெயர் சற்று பொருத்தமாக அமைந்தது – வசனகவிதை, லகு கவிதை, சுதந்திரக் கவிதை என்பதை விட இது ஏற்றதாக இருந்தது.  பின்னர் செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் என்கிற நூலுக்கு அந்தப்பெயர் பொருத்தமாக அமைந்தது போல (அந்தப்பெயரிலும் விஷேஷ மேதை அம்சம் ஒன்றும் இல்லை. New University English Poetry, என்பதன் மொழிபெயர்ப்பே அது. அந்தப்பெயரில் எனக்கும் கொஞ்சம் சம்பந்தம் உண்டு என்றுதான் எண்ணுகிறேன்).

 
இன்றைக்கு நமக்கு புதுக்கவிதை ஏன் தேவைப்படுகிறது? என்ற கேள்வியை விவாதித்து அதற்கான பதிலை 1959ஆம் ஆண்டு சரஸ்வதி ஆண்டுமலர் கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்:

இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச்சேர்க்கைகளில் நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்குப் புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்ககாலத்தின் சிறந்த கவிதைச் சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையையும் நாமும் இன்று எட்ட முடியும்.

தமிழ்நாட்டின் கல்லூரிகளில் புழங்க ஆரம்பிப்பதற்கு முன்பே டி.எஸ்.எலியட் பற்றி படித்ததாக தனி உரையாடலில் தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கும் க.நா.சு., டி.எஸ். எலியட்டையும், எஸ்ரா பவுண்டையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஏறக்குறைய A Retrospcect [first appeared in Poetry, I, 6; March 1913] கட்டுரையில் எஸ்ரா பவுண்ட் குறிப்பிடும் வரையறகளை முன்மொழிவாக கொண்டு நல்ல கவிதைகள் எப்படிப்பட்டவை என்பதை விவரிப்பதுடன், புதுக்கவிதை தமிழில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தையும் அவரே பிரஸ்தாபித்து விளக்குகிறார்:

எளிய பதங்கள் எளிய சந்தம் என்றும் தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுற மொழிந்திடுதல் என்று சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லஷணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை தெளிவு என்ற இரண்டு லஷணங்களை பின் பற்றி கவிகள் சிலர் எழுதினார்கள். செய்யுள் சிறப்பாக அமைந்த இவற்றிலும்கூடப் புதுக்கவிதை பிறந்துவிடவில்லை. பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை, இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்து என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான் உயர்கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது kanasu2தெரியவரும். உள்ளத்திலே உள்ள உண்மை ஒளி, வாக்கினிலும் வந்ததால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்து – பாரதியார் உயர்ந்து கவியானார். இப்படித்தோன்றிய வேகத்தால்தான் கம்பனும், இளங்கோவடிகளும், பட்டினத்தடிகளும், ஜெயங்கொண்டானும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், தாயுமானவரும், அவரவர் அளவில் உயர் கவிகள் ஆகிறார்கள். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப்பார்க்கவே முடியாது – ஆனால் சூஷமமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர் இது.
இலக்கணம் என்று எதையும் சொல்லி கட்டுப்படுத்தப்படக்கூடாதது கவிதை – அது தூர விலகிப் போய்விட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.  இலக்கண அமைதிகள் பற்றி சிருஷ்டி காரியத்திலே இலக்கணத்துக்கோ, அதன் இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது. பொதுவாக நான்கு விஷயங்களைச் சொல்லலாம் – புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை. வார்த்தைச்சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக – எந்தக்காலத்திலுமே வாழ்க்கை எந்தக்காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்தது வந்திருக்கிறது. அந்தக்காலத்துக்கவிதை – நல்ல கவிதை – அந்தக்காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றைய புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச்சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்தது, படிக்கப்படிக்க புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது, இந்தக் கவிதையின் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமே யில்லாமால் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?
எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம் ஆம், என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக்கவிதை நல்ல கவிதை – உயர் கவிதை என்று நாம் முடிவுகட்டிவிடலாம். கவிதைக்கு உரை அவசியமே இல்லை; எந்தக் கவிதையையும் அர்த்தப்படுத்திக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. அனுபவித்தால் போதுமானது. ஆம், ஆம், ஆம் ஆம் என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் கூறிக்கொள்வதுதான் நல்ல கவிதை. ரசிகன் தன் கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டிய காரியம்.
தெளிவு தொனிக்க வேண்டும், ஆனால் சிக்கல் விடுவிக்கக்கூடாததாகவும் இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்து விடக்கூடாது. திரும்பத் திரும்பி படித்துப்பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கு ஒரு வேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தை பிடித்துக்கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப்புதுக்கவிதையிலே, என்றுதான் எண்ணுகிறேன்.

oOo

 
[ 2 ]
 
kanasu3For I will consider my cat Jeoffrey என்று ஆரம்பித்து, For God has blessed him in the variety of his movements. For, tho he cannot fly, he is an excellent clamberer. For his motions upon the face of the earth are more than any other quadruped. For he can tread to all the measures upon the music. For he can swim for life. For he can creep, என்று முடியும்படி கிறிஸ்டோபர் ஸ்மார்ட் 1750களில் எழுதியிருப்பதை முதல் பூனைக்கவிதையாக சொல்லலாம்.
இருவிழிகள் நட்சத்திரங்கள் பார்க்கும் பார்வையில் சிதறிஓடும் இருள் எலிகள்’ என்ற அழகிய படிமமாக விரிந்து பிறகு சற்று நின்று நிதானப்பட்டு ’ஞாபகப்படுத்திப்பாருங்கள் உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள் இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?’ என்று நம்மைக் கேள்விகேட்டு சிந்திக்கச் செய்பவை தேவதேவனின் வரிகள்.
 

பூனைகள் குறுக்கே வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது.
குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்
தாவரவியல் மாணவனின் நோட்டில் இலைபோல ஒட்டிக் கிடப்பதைக்
கண்டதுண்டு. சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம்.
அவற்றின் மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்.
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது.
இருப்பினும் அவை இருக்கின்றன பிறப்பிறப்பிற்கிடையே.

–என்று அன்றாடத்தின் சர்லியஸ சிந்தனைகளாக நீண்டு விரிவது சுந்தரராமசாமியின் பூனை. மனுஷ்யபுத்திரனின் ’பசித்தபொழுது’ தொகுப்பின் அட்டையை அலங்கரிப்பது, சந்தேகமுள்ள ஒரு மிருகம், ஒருபோதும் என்னை அது முழுமையாக நம்புவதில்லை (பூனை என்னும் மிருகம்) என்று சொல்லும்படியாக காவியுடையில் அமர்ந்து முகத்தில் பெரிய கேள்விக்குறியுடன் நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனை.
நகுலனின் பூனை உயர்தரமானது. புனுகுப் பூனை கூட்டினுழலும், அதன் கழிவு சவ்வாது போல் கம கம வென மணமணக்கும். அட்டையில் ’ஒரு தடித்த கண்ணாடி போட்ட பூனை’ படத்துடன் அதே தலைப்பில் நண்பர் போகனின் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது (இன்னும் வாசிக்கவில்லை).
பூனைகள் நாய்களுக்கு சில நூற்றாண்டுகள் கழித்து மனிதனின் குடியிருப்புக்கு வந்தவை. ஆனால் நாய்களைப்போல முழுமையாக வீட்டுப்படுத்தி பழக்கமுடிந்தவை அல்ல பூனைகள். அவை மர்மமானவை அவற்றை நம்மால் முழுக்கவும் புரிந்துகொள்ள முடியாதவை. ஆகவேதான் வினோதமான குணாதிசயத்துக்கும், புரிந்துகொள்ள முடியாத விஷயங்களுக்கும் பூனைகள் குறியீடாகின்றன.

மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் நுனியைப் பல்லால் கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடிக் கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி

 
-எனும் எளிய சித்தரிப்பாகவும்,
 

மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது
 
நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது
 
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி

 
-என அன்றாட வாழ்வின் நடைமுறைச் சிக்கல்களாகவும் தொந்தரவுகளாகவும் பூனைகளை குறியீடாக்குவது க.நா.சு.வின் வரிகள்.
  

oOo

[ 3 ]
 
kanasu4

என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கணமாகவும் உருவெடுக்க வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பலன் தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தே தான் நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம் பெறுகிற விஷயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மெளனம் எல்லாமே என் கவிதைக்கு விஷயம்,

என்று எழுதியதைப்போல அதற்கு உதாரணம் சொல்லும்படியாகவும் பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.
 

இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமாவனவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து செய்து பார்க்க வேண்டும். அவ்வளவுதான்’

என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல பரிசோதனை முயற்சிகள் என்று சொல்லும்படியானவை பல.
 
ஏகாதேசியன்று கோயிலுக்குள் நுழைய காத்திருக்கும் வரிசையைப்போலவே மெலிந்தும் பருத்தும் தொடராகி உருவெடுத்து நீண்டு செல்லும் ’வைகுண்டம்’ கவிதை இப்படி முடிகிறது:
 

வைகுண்ட
வாசல்
தாண்ட
செல்
லரித்த
கன
மான
மரம்
கதவாய்க்
கிறீச்சிட
 
காத்
திருந்த
க்யூவும்
கரையாது-
கரையாது
காண்!

நான் வாஷிங்டனிலிருந்தபோது என்ன நடந்தது தெரியுமா? என்று கேள்வியாகவும், நான் கேட்கவில்லையே! என்று பதிலாகவும் பிரச்னோத்ரம் என்ற தலைப்பில் இருப்பதுவும் சற்றேறக்குறைய இதே வகையானது.
 

பட்டுக் கருநீலப் புடவையு மல்ல, பதித்த
நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி
அதனைக் கண்களால் தொட்டுப்பார்த்தால்
அறிவோம் – பூச்சி அரித்த, ஒளிப்பூச்சி
அரித்த கறுப்புப் பழம் கம்பிளி அது.

 
-என்றோ,
 

கடலிலே பல்லாயிரக்கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையுள்ள சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்
செல்கிறார்கள். கடலுக்கும்
ஆனந்தத்திற்கும் வெகுதூரம்
என்றறியாமல்

 
-என்றோ,
மதுரை மீனாஷியின் கன்னிமை கழியும் போது அகத்தியன் மேற்கே வருவான், -என்றோ,

உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
இப்போது அவன்
ஆடுவது
குண்டுக்கொசு விரட்ட
கைமறித்துக் கால் தூக்கி
ஆடுகிறான்
பக்கத்தில்
மீளாத துக்கத்தில் ஆழ்ந்துறங்கும்
கோவிந்த ராஜனையோ
எந்தப் பட்டணத்து
எத்தனை கொசு கடித்தாலும்
எழுப்பி இயலாது.

-என்றோ, செல்பவை இன்னொருவிதம். வரவேற்பரையின் கதகதப்பில் அமர்ந்து கொண்டு சூடான தேநீருடன் பக்கோடாவும் முறுக்கும் சாப்பிட்டபடி பெரிய ஜன்னலின் வழியே வெளியே கனத்து பெய்யும் மழையை பார்க்கும்போது உருவாகும் சுபிட்ச நிலையின் மோனமும். அதைத்தொடந்து வரும் செளகர்யமான நினைவுகளும் வேடிக்கையான சிந்தனைகளும் என்று சொல்லும்படியானவை. ஆ என்று முடியும் கவிதை, பல்லியும் முதலையே, ஒருதலைப்பட்சம் ஆகிய தலைப்பிலானவை இதற்கு மாதிரிகள்.
 

oOo

[ 4 ]
 
ஜென் கவிதைகளின் மனநிலையை பிரதிபலிப்பவை என்று சொல்லும்படியாக தமிழில் சங்ககாலம் முதலே (குறிப்பாக குறுந்தொகையில்) பல பாடல்கள் உண்டு. என்றாலும், நவீனத் தமிழ்க்விதைக்கென ஜென் பாணியிலான முன்மாதிரிகளையும் க.நா.சு உருவாக்கி அளிக்கிறார்.
 

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துவிட்டான். இவற்றில்
எத்தனை எட்டுகள் கவிதையால்
சாத்தியமாயின?
(க.நா.சு.)

 

என் கவிதைகளை
கவிதைகள் என அழைப்பது யார்?
என் கவிதைகள் கவிதைகள் அல்ல
என்ற அறிதலுடன்
நாமிருவரும்
பேசத்தொடங்குவோம்,
கவிதைகள் பற்றி
(டைகு ரயோகன்).

 

oOo

 
ஒன்பதாம் நூற்றாண்டு சீனாவின் ஹான் ஷான் கவிதைகள் யின்-யாங் தாவோயிச சிந்தனைகளை வெளிப்படுத்துபவை. சீனாவின் செக்கியாங் மாகாணத்தில் புனிதமாகக் கருதப்படும் டி-இயன்-ட்ஐ மலையில் வாழ்ந்த இவர் இம்மலைகளை மையப்படுத்தி எழுதியவை ’குளிர்ந்த மலைக்கவிதைகள்’ என்றழைக்கப்படுகின்றன.
 

ஏறிச்செல்கிறேன்
குளிர்ந்த மலையின் பாதையில்.
முடிவற்றது,
உறைந்த மலையின் பாதை.
 
கற்கள் சிதறிய பள்ளத்தாக்குகள், நெடியவை
அடர்ந்த புல்லுடன் அகன்றவை, ஓடைகள்.
 
பாசிகள் வழுக்குகின்றன
மழை பெய்திருக்கவில்லை என்றாலும்
பெருமூச்செறிகின்றன பைன்மரங்கள்
ஆனால் காற்றில்லை
 
உலகின் கட்டுக்களை அறுத்துக்கொண்டு
வெண்ணிற மேகங்கள் சூழ
என்னுடனும் அமர்ந்திருக்க –
வேறு எவரால்தான் முடியும்?

 
என்பதுபோல, இயற்கையின் பிரம்மாண்டத்தின்முன் கட்டற்ற விடுதலையை அடைபவை இவை. க.நா.சு.வின் கஞ்சிஞ்ஜிங்கா ஹான் ஷானின் உணர்வெழுச்சிக்கு எதிர்த்திசையில் நிற்பது என்றாலும் உள்ளடக்கத்திலும் வாசிப்பு அனுபவத்திலும் ஒரு ஜென் கவிதைக்கு நெருக்கமானது. இயற்கையின் பிரம்மாண்டம் காலாதீதம் ஆகியவற்றின் முன் மனிதனின் நிலையாமையும் சிறுமையையும் ஒப்பிட்டுக் காண்பிப்பது.
 

எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது
டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று
கஞ்சிஞ்ஜிங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப்
பார்த்திருக்கிறேன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது பார்க்கிறேன், வித்தியாசம் ஒன்றும்
தெரியவில்லை, என் கண் தான்
சற்று மங்கி விட்டது.
(க.நா.சு.)

 

oOo

[ 5 ]
 
பல்வேறு பாத்திரங்களின் வழி ஊடாடி கிளைத்து பெருங்ககதையாக நீளும் பழங்கவிதைகள் போலன்றி ஒருமித்த வர்ணனைகளாகவும், தன்னுரையாடலாகவும், எளிய காட்சியின் சித்தரிப்புகளாகவும் சிதறி நிற்பவை என்பதால் பிற இலக்கிய வடிவங்களை விடவும் கவிஞனின் அகத்துடன் நேரடியான உறவுடையவை என்று நவீனக்கவிதைகளை சொல்லமுடியும். ஆகவே எழுத்தாளனின் ஆளுமைக்கும் அவன் படைப்புக்கும் இடையேயான நேர்கோடான உறவுமுறை நவீனக்கவிதைகளைப் பொறுத்தவரை ஓரளவாவது சாத்தியமாகிறது எனலாம்.
வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை -எனும் அவரின் விருப்பத்திற்கு சான்றாக, ’என்ன செய்ய? என்ற தலைப்பிலான நீண்ட கவிதை க.நா.சு.வின் பெரும்பாலான கவிதைகளை ஒப்பிட இன்னும் சற்று தீவிரமானதும், ஆழமானதும். ஏதோ ஒரு தொந்தரவான மனநிலையில் எழுதியிருப்பாரோ என்று சொல்லும்படியானது:

எங்கேயோ, எவன் உள்ளத்திலோ
எழுந்த ஒரு சிந்தனை எப்படியோ
என்னை எட்டி என்னைப் பாதிக்கிறது
அவன் எப்படி, கறுப்பனா, சிவப்பனா, வெளுப்பனா,
 
ஆழ்ந்த உறக்கம் கெட்டு
நள்ளிரவில் காதில் விழுந்து நாயின் குலைப்பைக் கருத்தில் வாங்கி
ஏன் என்ன எது என்று
அவஸ்தைப்படுகிறேன்,
இதுவா என் சுதந்திரம்?
இதுவா என் ஆஸ்தி? இதுவா என் நிலைமை?

 

oOo

மனதுக்குப்பிடித்த ஒருவருடன் சாலையில் மாலை நடை செல்லும்போதும் உணவகத்திற்கு சாப்பிட செல்லும்போதும் உண்மையில் இப்படியெல்லாம் ஒப்புமை சொல்லத் தோன்றுமா? என்று அசூசையும் இருண்மையுணர்வையும் கிளர்த்துவது டி.எஸ்.எலியட்டின் ’மேசையில் மயக்கமூட்டப்பட்டுக்கிடக்கும் நோயாளியைப்போல வானத்தின் கீழ் விரிந்துகிடக்கும் மாலையில் செல்வோம்’ என்று தொடங்கும் காதல் கவிதை. அப்போதைய ஐரோப்பாவின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றியமைத்துக்கொண்டிருந்த உலகப்போரின் துன்பவியல் சம்பவங்களும், வாழ்வியல் நெருக்கடிகளும் உண்டாக்கிய பதற்றத்தையும் கிலியையும் குறியீடாக்கும் இருண்மையின் கிலேசம் வெளிப்படுவதாக சொல்லப்படுவது. அதைப்போல,
 

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்துபோய் பார்க்க
செத்துக் கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது

 
என்ற வரிகள். க.நா.சு.வும் ஏதோ ஒரு விஷயத்தின் இருண்மையை, சிக்கலை சொல்ல முயல்கிறாரோ என்று எண்ணத்தூண்டுவது.
அதே சமயம்,

“எனக்கு என்னமோ இந்தப்படிமங்கள் விஷயம் முக்கியமான விஷயமாகப் படவில்லை… மொழி என்பதே மொத்தத்தில் ஒரு படிம வரிசைதான். இதைத் தனியாகக் கவிதையின் மேல் ஏற்றிவைத்துத் தேடிப்பிடித்து வளையததை வளைத்தும் படிமங்களை உற்பத்தி செய்யும்போது கவிதையில் இலக்குத் தவறி விடக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது. படிமத்தையும் அணி அலங்காரங்களில் ஒன்றாக, அதன் உரிய இடத்தில் முக்கியமானதாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர மற்றபடி அதற்குமேல் அந்தஸ்து இருப்பதாக, முக்கியமாகக் கவிதையில் எனக்குத் தெரியவில்லை”

என்று 1981ஆம் ஆண்டு ஞானக்கூத்தனுக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியதைப் போலவே உரைநடையைப்போன்ற எளிமையுடன் Plain Poetry எனப்படும் படிமங்கள் உருவகங்களின் சிக்கல் இல்லாமல்
 

எட்கார் ஆலன் போவின் கவிதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டுவிட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய்விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது.

 
என்றும், ’புதுமைப்பித்தன் இருந்த வீட்டைத்தாண்டிச் செல்லும்போது’ –என்றும் நீளும் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு.

oOo

 
[ 6 ]
 
1958 ஆம் ஆண்டு ’சரஸ்வதி’யில் இரைச்சல் என்ற தலைப்பில் வெளிவந்த

மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள்
பூக்கும் ஓசை, புழுக்கள் காலை உணவு
அருந்தும் ஓசை – இப்பேரிரைச்சலில்…

 
-என்ற வரிகள் தமிழில் புதுக்கவிதையின் நுண்மை எத்தகையது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், அதன் பிறகு எழுதப்பட்ட எத்தனையோ வரிகளுக்கு ஆரம்பம் போலவும் அமைந்தவை.

க.நா.சு.வுக்கு இலக்கியம் என்பது ஒரு பதவியோ, பணியோ அல்ல. அது அவரது வாழ்க்கை இலட்சியம். அவரது உபாசனை அது. அதில் சமரசமோ அலட்சியமோ அவருக்குச் சாத்தியமில்லை. பூரணமான அர்ப்பணிப்புடன் மட்டுமே அவரால் அதைச் செய்யமுடியும். அதில் சுயநலமோ, தன்னகங்காரமோ சாதிமத இனமொழிப் பிரிவினைகளோ அவருக்குக் கிடையாது. அவரது இலக்கிய ஈடுபாடு என்பது ஆத்திகனின் கடவுள் பக்திபோல (ஜெயமோகன்)

-எனும் கூற்று வெறும் கருத்தல்ல என்பதை நினைவுறுத்துவது போல, ’மயன் கவிதைகள்’ என்ற அவரின் தொகுப்பின் முன்னுரையில் (24.1.1977) கா.நா.சு. இப்படிச்சொல்கிறார்:

kanasu5நான் எழுதுவதில் நல்ல காபி சாப்பிடுவதில்போல, அழகிய யுவதி ஒருத்தியைப் பார்ப்பதில்போல, நல்ல நூல் ஒன்றை படிப்பதில்போல – ஒரு ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தம் வாழ்வை நிறைவுறச்செய்ய எனக்கு அவசியமாக இருக்கிறது. எழுதுகிறேன், தினமும், இடைவிடாமல் எழுதுகிறேன் நான் – கவிதை, கதை, நாவல், விமரிசனம், சிந்தனைகள் எல்லாம் எழுதுகிறேன். இப்படி எழுதுவதிலே ஒரு விஷேஷம் என்னவென்றால் தமிழில் எழுதுவதில் – மற்ற மொழிகளில் எழுதுவதை விட – அதிக ஆனந்தம் கிடைப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறேன் – தினம் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவ்வளவில்லா விட்டாலும் – சற்றுக் குறைவான ஆனந்தம் இருக்கிறது என்று கண்டு ஆங்கிலத்திலும் வேறு சில மொழிகளிலும் கவிதைகள், கதைகள், நாவல்கள், விமரிசனங்கள் எழுதுகிறேன். ஆயினும் எனக்காகவேதான் எழுதிக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதுவதை நீங்கள் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமோ, சந்தோஷக் குறைச்சலோ இல்லை. அதனால்தான் G.M.L. பிரகாஷ் இந்த நூலை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது, முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதித்தேன்

Kanaasu_Ka_na_su_Poemsசொந்தப் பெயரிலும் ’மயன்’ என்ற புனைபெயரிலும் சூறாவளி, சரஸ்வதி, எழுத்து, இலக்கிய வட்டம், கசடதபற, அஃ, நாற்றாங்கால் ஆகியவற்றில் கா.நா.சு. எழுதிய முன்னோடியான கவிதைகள், கவிதை மொழிபெயர்ப்புகள், தமிழில் நவீனக்கவிதையின் உருவாக்கத்திற்கு ஆதாரமான கட்டுரைகள் அனைத்தும் ஒற்றைத் தொகுப்பாக ”க.நா.சு. கவிதைகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.
என் கவிதைகளை நூலாகப் படித்துப்பார்ப்பது எனக்கே ஒரு நூதனமான அனுபவமாகப் பட்டது என்பது தொகுப்பு பற்றிய அவரின் கருத்து. நமக்கும் நூதனமான அனுபவமாகத்தான் இருக்கிறது. இதன் இன்னொரு முக்கியமான அம்சம் பல அரிய தகவல்களுடன் உள்ள ஞானக்கூத்தனின் முன்னுரை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்;
வெளியிட்ட ஆண்டு 2002;
முகவரி:  52, முதல் தளம் நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600 083,
தொலைபேசி, 044-24899968.

 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.