குளக்கரை


[stextbox id=”info” caption=”மீண்ட சொர்க்கம்”]

Pope_Francis_HeavenS-ky_Finger_Vatican_Rome_God

உலகத்து யூதர்களே உங்கள் வாழ்க்கை பொலிவுறப் போகிறது. இனி நீங்கள் மகிழ்ச்சியில் ஆனந்தப் பள்ளு பாடலாம். இதுவரை நீங்கள் காண முடியாதிருந்த உலகு ஒன்று உங்களுக்குத் திறக்கப்படவிருக்கிறது. ஆம், இத்தனை நாள் பாழ் நரகத்துக்குப் போய்க் கொண்டிருந்த நீங்கள், இனிமேல் கிருஸ்தவ சொர்க்கத்துக்குப் போகலாம் என்று சொர்க்கத்தின் கதவுக்குச் சாவியைத் தம் கையில் வைத்திருக்கும் போப், ரோம் நகரில் இருந்து அறிவிக்கவிருக்கிறாராம். அதுவும் என்ன கருணை பாருங்கள். நீங்கள் கிருஸ்தவராகாமலே கூட, அதாவது பாழாகப் போகிற யூதத்தை விட்டு நீங்க மறுத்தாலும் கூட, உங்களைச் சொர்க்கத்துக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறாராம் போப் அவர்கள். தவிர, என்ன ஒரு தாராள மனது பாருங்கள்- நீங்கள் கிருஸ்தவராகாதது மட்டுமல்ல, கிருஸ்து ஒரு இறைவன் அல்லது இறைவனின் தூதுவர், அவரே வழி என்பதை எல்லாம் நம்ப மறுத்தாலும் கூட நீங்கள் கதோலிக்கச் சர்ச்சின் சொர்க்கத்து வாசல் வழியே உள்ளே அனுமதிக்கப்படப் போகிறீர்கள். பாக்கியமென்றால் அப்படி ஒரு பாக்கியம்!

இப்படி ஒரு நற்பேறு உங்களுக்குக் கிட்டும் என்று எப்போதாவது நீங்கள் கற்பனை கூடச் செய்ததுண்டா? என்ன ஒரு பெரும் திருப்பம் உங்கள் வாழ்வில்.

இனி என்ன வேண்டும் உங்களுக்கு? 21 ஆம் நூற்றாண்டை, அதுவும் 2015 ஐ உங்கள் யூதக் கூட்டத்தின் வாழ்வில் ஒரு பொற்காலமாக, பொன்னாண்டாகக் குறிப்பீர்கள்தானே? இனியாவது ஹோலோகாஸ்ட் என்று புலம்புவதை விடுவீர்களா?

க்கும்….போய் விடாதீர்கள், கொஞ்சம் பொறுங்கள். இதையும் கேட்டு விடுங்கள். அதோடு இந்த இஸ்ரேல் என்று ஒரு நாட்டை, யூதருக்குப் புகலிடம் என்ற பெயரோடு பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்களே, அது இனிமேல் எதற்கு, அதை விட்டு விடலாமே? இதை போப் அவர்கள் சொல்லவில்லை, நாம்தான் சொல்கிறோம். ஆனால் அதை அவர் சொல்லும் நாள் அதிக தூரமில்லை என்றுதான் தோன்றுகிறது. உலக இஸ்லாமிசத்துக்கு ஏதாவது ஒரு இரை போட்டால் அதைக் கூண்டுக்குள் அடைக்கலாம் என்று உலகக் கிருஸ்தவம் கருதுகிறது. இப்போதைக்கு இரையாக உடனடியாகக் கிட்டுபவர்கள் யாராக இருக்க முடியும்? வெள்ளையரா, யூரோப்பியரா? அவர்களெல்லாம் பொக்கிஷங்கள் இல்லையா? உடனடியாக விட்டுக் கொடுக்க முடியுமா? ஏதோ கிரேக்கர், பல்கேரியர் என்று கொஞ்சம் பேரை வேண்டுமானால் தியாகம் செய்யலாம். அதைப் பின்னால் பார்க்கலாமே. கூண்டில் அடைக்க முடியாது மிருகம் உலாவினால் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நீங்கள் முன்னணியில் இருக்கிறீர்கள். ஐந்து ஆறு நூற்றாண்டுகள் முன்பு பின்னால் எங்கோ இருட்டில் ஒளிந்து கொண்டிருந்தீர்கள், அப்போது உங்களை முதலில் அனுப்ப முடியவில்லை. அதுதான் இப்போது ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம்…..

தவிர, உங்களுக்கும் ஒரு போக்கிடம் வேண்டும் இல்லையா. அப்படி எல்லாம் அனாதரவாக உங்களை விட்டு விடுவார்களா? அதனால்தான் சொர்க்கக் கதவுகளையும் திறக்க முடியும் என்றும் சுட்டுகிறார்கள்.

இனி என்ன, ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க. அப்படியே நாட்டை விட்டுப் போக மூட்டையையும் கட்டுவீங்கதானே! கொஞ்சம் நெருக்கடியாக இருக்கிறது அவங்க நிலைமை இப்போது. பாருங்க பாரிஸிலேயே குண்டு வைச்சுட்டாங்க. ரோம் அங்கிருந்து ரொம்ப தூரம் இல்லையே? அவங்களோட அவசரத்தையும் கொஞ்சம் மனசிலெ வச்சுக்குங்க. எப்பவும் உங்களைப் பத்தியே நெனச்சுகிட்டிருந்தா எப்படி?

என்ன இருந்தாலும் இஸ்ரேல் ஒரு கற்பித நாடுதானே? பெனடிக்ட் ஆண்டர்ஸன் வேறு இதை 1983 இலேயே புட்டுப் புட்டு வைத்து விட்டாரே, படித்திருப்பீர்களே? நாடு என்பதே கற்பிதம் என்று சொல்லி விட்டார் அவர். அப்புறம் இஸ்ரேல் என்னங்க இஸ்ரேல்? சொர்க்கமே கிடைக்கிறது உங்களுக்கு.

கதோலிக்கம் மட்டுமில்லை, செகுலரிய, தாராளவாத, இடது சாரி, சந்தை நம்பிக்கையாள—அனைத்து யூரோப்பியருமே இஸ்ரேல் என்ன வெறும் கற்பனை நாடுதானே என்று சொல்லத் துவங்கும் நாட்கள் நெருங்கி வருகின்றன. முன்கூட்டியே விழித்துக் கொள்ளுங்கள். சொர்க்கம் திறக்கும்போதே பயன்படுத்திக் கொண்டால் நல்லது, அப்படி எல்லாம் தமக்குக் கதவு திறக்காதா என்று கோடிக் கணக்கில் இந்தியர்கள் ஏங்குகிறார்களாமே, உங்களுக்குத் தெரியாதா அது? எங்கள் ஊரில் சுவர்களில் அப்படித்தான் நோட்டிஸ் அடித்து ஒட்டுகிறார்கள் மதமாற்றும் புண்ணியவான்கள். உங்களுக்கு அடுத்தது காவு கொடுக்க இந்தியாதான் என்றும் எதிர்பார்க்கலாம். அதற்கு ஏற்கனவே இந்திய ‘முற்போக்காளர்கள்’ தயாரிப்புகள் செய்கிறார்கள். இந்தியாவே ஒரு கற்பனை நாடுதான் என்று முன்னாடியே ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதி விட்டார்கள். இனிமேல் நோட்டிஸ் அடித்துத் தெருவில் ஒட்ட வேண்டியதுதான் பாக்கி. முதலில் நீங்கள் மூட்டை கட்டுங்கள்..

http://www.slate.com/blogs/the_slatest/2015/12/10/can_jews_go_to_heaven_vatican_reconfirms_yes.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”கற்பனையில் உருவாகும் சமூகக் கற்பிதங்கள்”]

Benedict_Anderson_Imagined_Communities_Country_Nationals_Language_Foreign_World_Race_Sociology_Anthropology

ஆசியாவை ஆசியர்களுக்கு மறுபடி அறிமுகம் செய்து வைத்த புண்ணியச் செயலைச் செய்த யூரோப்பியர்களில் இன்னொருவர் சமீபத்தில் காலமானார். காலனியம் வந்து அழித்துப் போன பின்பு ஆசியர்களில் பெரும் ஜனத்திரளுக்குத் தாம் யாரென்பதே தெரியாமல் போயிருந்ததில்லையா? 1983 இல் பெனடிக்ட் ஆண்டர்ஸன் மீட்பராக வந்து காத்தருளினாராம்.

ஆசியர்களுக்கு வரலாறு என்பதே தெரியாது என்று மகாலே என்னும் தீர்க்கதரிசி எப்போதோ சொல்லி- தப்பு தப்பு, அறுதியாக நிறுவி விட்டுப் போயிருக்கிறார் இல்லையா? எத்தனை இந்திய அறிவு ஜீவிகள் அதை அப்படியே ஏற்று வழி மொழிந்து தமது அறிவு மரபாக்கி இன்னும் கூட இந்தியப் பத்திரிகைகளில் விடாது கட்டுரைகள் எழுதி, மக்களுக்குப் பரிந்துரைத்து மறுக்க முடியாத உண்மையாக்கி வைத்திருக்கிறார்கள்? வரலாறு தெரியாதவர்கள் என்று சொல்வதோடு நின்றுவிடாமல், புராணம்தான் நமக்குத் தெரியுமாமே? நம்மை மீட்டு நாகரீக உலகுக்குக் கொணரும் பரோபகாரச் சிந்தனை தூண்டியதால், ஏதோ ஒரு கட்டத்தில் மக்காலே, மார்க்ஸ், மாவோ ஆகிய பெருந்தெய்வங்களோடு, உப தேவதைகளான எங்கல்சு, காஸ்ட்ரோ, இசுடாலின், லெனின், செ, கால்டுவெல் ஆகியோர்களின் சிலைகளையும் எழுப்பி வழிபடச் சொல்லிக் கொடுத்து வரலாற்றுணர்வை உடலில் ஏற்றி விட முயற்சி செய்கிறார்கள். அப்படியும் தொடர்ந்து அந்த உணர்வு அழிந்து கொண்டே போகிறதென்பதுதான் என்னவொரு துர்ப்பாக்கியமான நிலை. அது மக்காலேயின் தீர்க்கதரிசனத்தைத்தானே உறுதி செய்கிறது இல்லையா?

அதனால்தான் வேறொரு திக்கில் மேற்கின் இக்காலத்துத் தீர்க்க தரிசிகள் அவ்வப்போது எழுந்து – தம் மொத்த வாழ்வையே தியாகம் செய்து, ஆசிய நாடுகளில் வாழ்ந்து, உலாவி, தேநீர், தேள், தேன், தேறல் என்று பல தே…க்களை அனுபவித்து அந்த அனுபவத்தின் படிவுகளைப் புத்தகமாக எழுதி நமக்கு அளிக்கிறார்கள்.

இந்தியர்களுக்குத்தான் இந்த பரிதாப நிலை என்று நீங்கள் நினைத்திருந்தால், இல்லை, பெரும்பாலான ஆசியர்கள் இந்த நிலையில்தான் உழல்கிறார்கள் என்பதை அறியுங்கள். அவர்களின் வரலாறுகளையும் ஆங்காங்கே வெள்ளையரோ, யூரோப்பியரோ, கிருஸ்துவின் அடியொட்டிப் பார்த்து தராசில் எடை போட்டு எழுதி அந்தந்த நாடுகளின் பல்கலைகளில் பாடமாக்கி வருகிறார்கள்.

புராணங்களை நம்பும் நீங்கள், ஏதோ பெத்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்று நீங்கள் உங்கள் மொழிக்குழுவின் நடுவே நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம். அதெல்லாம் சுத்த மாயை, உங்களுக்குப் புராணம்தான் தெரியும். அந்தப் புராணமும் எல்லாம் தப்பு. வெண்டியையும் அவரது சிஷ்ய கோடிகளையும் கேளுங்கள். அவர்கள் எழுதுவதுதான் இனி புராணம். வியாசராவது, வான்மீகியாவது? அவர்களெல்லாமே கட்டுக் கதை ஐயா. இன்று மார்க்ஸிய லென்ஸில் பார்த்து எழுதும் நாவல்கள்தான் உண்மையான புராண வரலாறு.

அதோடு, நீங்கள் ஒரு மக்களா என்பதே உங்களுக்குத் தெரியாதே? மேற்கத்தியர் நம்மை அங்கீகரிக்காவிடில் நாம் உயிரோடு கூட இருக்கிறோமா என்பது உங்களுக்குத் தெரியுமா என்ன? நம்மில் சில லட்சம் பேர்கள் அங்கு அவ்வப்போது புகவோ, வாழவோ அனுமதிக்கப்பட்டாலும் சமீபத்தில் நம் போன்றவர்களுக்குக் குடியுரிமை என்பதெல்லாம் புரியாத மர்மங்கள் என்பதால் நம் போன்றவர்களை மறுபடி ஆசியாவுக்கே திருப்பி அனுப்பலாம் என்று கூட சட்டங்கள் இயற்ற பிரேரேபித்துக் கொண்டு வருகிறார்கள். (ஆஃப்ரிக்கர் கதியும் இதேதான், கவலை வேண்டாம். நம்மை மட்டும் மோசமாகக் கருதும் பாரபட்சம் யூரோப்பியருக்குக் கிடையாது. தம்மைத் தவிர மற்றெல்லாரையும் அவர்கள் ஒரே போல மட்டமாகத்தான் வைத்திருக்கிறார்கள். சமத்துவத்தில் நிறைய நம்பிக்கை உண்டு அவர்களுக்கு என்பது இதிலேயே தெரியும். அதிலும் பாருங்கள் அவர்கள் எத்தனை மேலிடத்தில்? உங்களுக்கு மோசமான அதிகார அடுக்கு சமுதாயத்தைத் தவிர வேறெதாவது தெரியுமா? மான் வேடம் போட்டதற்காக மாரீசனை வதம் செய்தாரே உங்கள் அவதாரம்? எந்தக் கிருஸ்தவ அரசராவது யாரையாவது எப்போதாவது வதம் செய்திருக்கிறாரா? விரல் நீட்டிச் சொல்ல முடியுமா உங்களால்? பிறக்கும்போதே பகுத்தறிவு ரொம்பி வழிந்தபடி பிறக்கும் மனிதர் யூரோப்பியர். நீங்களானால்?…. ஹ்ம்.. கூச்சம் கூட இல்லை உங்களுக்கு, என்ன பிறவி நீங்கள்? )

ஆனால் பாருங்கள், அவ்வப்போது இடது சாரியினருக்கும் சரி, மேற்கத்திய அறிவு ஜீவிகளுக்கும் சரி, தம் மேன்மையான அறிவுலகில் ஏதோ இடறுகிறது என்பது புரியும்.

முழுப் பகுத்தறிவு என்கிற போதையிலேயே எந்நேரமும் யாரால் இருக்க முடியும். வாழ்க்கை என்பதும், எதார்த்தம் என்பதும் அப்படி எல்லாம் சுத்தமாக அழிக்கப்பட்ட ஒரு கனவுலகில், அதுதான் என்ன பகுத்தறிவுத் தீர்க்கத்தால் கட்டப்பட்டதென்றாலும், நிரந்தரமாக மேற்படி மூக்கு தூக்கிகளால் வாழ முடியுமா என்ன? அவர்களும் தரையிறங்கி வந்து இன்னும் மனிதக் குரங்குகளாகவே இருக்கும் ஆசியர்களைப் பார்ப்பதோடு அவர்கள் நடுவே வாழவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

அப்போது இந்த சங்கடமான நிலையை ஒருவாறாகச் சமாளித்துக் கட்டுவதற்காகச் சில புத்தகங்களை அவசரமாக எழுதி விடுவார்கள். அவசரம் என்றால் ஒரு சில தினங்கள், அல்லது மாதங்களில் என்றுதான் அல்ல. சில சமயம் சில வருடங்கள் கூட ஆகும்.

நன்கு ஊறிய தேறல் சிறப்பானது என்று கேள்விப் பட்டிருப்பீர்களே. அது போல சில வருடங்கள் ‘ஆய்வுக்கு’ப் பிறகு எழுதப்படும் இந்த வகை ஆய்வுப் புத்தகங்கள் அசாதாரணத் தேறலாக, மேற்படியாருக்கு மிக்க களிப்பையும், உன்னதங்களைத் தாம் மறுபடி எட்டியதான எழுச்சியையும் கொடுக்கும். அப்புத்தகங்கள் பற்றி ஒரு ஆயிரம் புத்தகங்கள் எழுதி அவற்றைத் தமக்குள்ளேயே புளகித்துப் படித்து தம் மூக்குகளை இன்னும் சில அங்குலங்கள் உயர்த்திக் கொண்டு திரிவார்கள்.

இதனால் இவர்கள் பெரும் ஆடம்பர வாழ்வும் குபேர சம்பத்தும் கொண்டு வாழ்கிறார்கள் என்று அர்த்தமாகாது. பல நேரம் தாமாகவே வருந்தி வரவழைத்துக் கொண்ட எளிமையிலும், ஏன் வறுமையிலும் கூட வாழ்வார்கள் அப்போதுதான் ஒரு புனித ஆத்மா என்ற மாயாஜாலப் போர்வையும் சுற்றிக் கொள்ளக் கிட்டும். தியாகிகள் ஐயா, தியாகிகள். பிறக்கும்போதே தியாகம் உடலில் ஊறிப் பிறக்கிற ஜன்மங்கள் அவர்கள்.

இத்தகைய புனிதாத்மாக்களில் ஒருவர் பெனடிக்ட் ஆண்டர்ஸன் என்பார். 1983 இல் ஒரு புத்தகம் எழுதி விட்டார். ‘கற்பித சமூகங்கள்’ என்று இந்தப் புத்தகத் தலைப்பை மொழி பெயர்க்கலாம். சற்று இளக்கி மொழி பெயர்த்தால் கற்பனா தேசங்கள், அல்லது கற்பனை நாடுகள். [உங்களுக்குப் பிடித்த சுறா மீனோ, நெத்திலியோ, திமிங்கிலத் துண்டோ- எடுத்து உண்ணலாம்.]

அவர் எழுதுகிறாராம், ‘இந்நாட்களில் உள்ள முற்போக்குகளும், உலகமாநகர வாசிகளுமான அறிவு ஜீவிகளும், இதுகாறும் (குறிப்பாக யூரோப்பில்?) தேசியம் என்பது ஒரு புத்தி பேதலிப்பு என்றே கருதி வந்திருக்கிறார்கள். அதன் வேர்கள் பீதியிலும், மற்றவர் என்பார் பேரில் வெறுப்பும் கொண்டவை, அதன் சார்புகள் இனவெறியோடு என்றே கருதி இருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் நாம் தேசங்கள் அன்பையும், சமயத்தில் சுயத்தையே தியாகம் செய்யுமளவு தீவிரப் பற்றையும் கூட எழுப்புபவை என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.” இது மேற்படி புத்தகத்தில். “தேசியத்தின் விளைவுகளான- கவிதை, உரைநடைக் கதைகள், இசை, பல இளகலான கலைகள்- எல்லாம் இந்தப் பேரன்பை பல்லாயிரம் வடிவுகளிலும் பாணிகளிலும் காட்டுகின்றன.”

இந்தக் கருத்தையே விரிக்கும் புத்தகம், 80களில் மேற்கின் பல்கலைகளில் மனித ஆய்வுத் துறைகள் என்று கருதப்பட்ட ஒரு மிருக்க் காட்சி சாலையில் ஒரு கலகத்தை உருவாக்கியதாக இன்றும் கருதப்படுகிறது. அந்த காட்சி சாலையில் அனேகமாக ஆட்சி செய்த பெரு மிருகங்கள் உலக இடது சாரிகளின் நாயகர்கள்தான். அவர்களுக்கோ எதார்த்தம் என்பது ஒரு இலட்சியமே தவிர அது அணுகப்படக் கூடியது இல்லை. எனவே மிக எளிய, எந்த ஆசிய நாட்டுப் பாமரனுக்கும் என்றுமே தெரிந்திருக்கிற உண்மைகள்தாம் ஆண்டர்ஸனின் ‘கண்டு பிடிப்புகள்’ என்று மட்டும் சாதிக்காதீர்கள். அந்த உண்மைகள் மேற்படி மேதைகளுக்குத் தெரியாதது மட்டுமல்ல, புரியவும் புரியாத்தில் நமக்கு வியப்பு எழத் தேவை இல்லை. நாம்தான் மாக்களாயிற்றே. அதனால் நமக்கு என்ன எழவு வேண்டுமானாலும் புரிந்து விட்டதான கற்பனை அல்லது பிரமை இருக்கலாம்.

பிரமைகளைத் தோலுரித்து, கற்பனாவாதங்களை அழித்து, அமிலமான உண்மை நிலையை, திரைக்குப் பின்னே மறைந்திருப்பதை இழுத்துவந்து ஆரத் தழுவும் தீரர்களான மேற்படி அறிவிலேயே ஜீவிதம் செய்யும் மனிதர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே அதுவரை இருந்த்தில்லை. அவர்களோ உலகமே களமாக, மொத்த மானுடமே தம் இலக்காக வாழும் பெரும் போராளிகள். குறிப்பிட்ட மண்ணில், நாடுகளில், மக்கள் கூட்டத்தில் எல்லாம் வாழும் அவதியில் கிட்டும் அன்றாடப் பாடங்கள் அவர்களுக்கு ஏற்குமா என்ன?

அதனால் ஆண்டர்ஸன் அநியாயமாக ஒரு புகைக் குண்டை – கண்ணீர்ப் புகைதான் அது என்பது பின்னாளில்தான் தெரிய வந்த்து- இந்த மேதைகளின் நடுவே வீசி எறிந்ததாக, அந்த மேதைகள் கருதி ஒரே களேபரம் நடந்தது.  திடீரென்று மாக்கள் என்று தாம் அதுகாறும் கருதியவர்களும் மனிதர்களே என்று இவர் சொல்கிறார் என்னவொரு ஆகாத்தியம் என்று பொங்கி எழுந்தார்கள். பிறகு சூட்சுமமாக யோசித்து, போர்த்தந்திரம் பற்றி எல்லாம் தமக்குத் தெரிந்ததை எல்லாம் மறு வார்ப்பு செய்து, அதன் விளைவாக எதிர்ப்பாக வரும் வெல்ல முடியாத சக்தியைத் தம்முடையது என்று அறிவித்து விட்டால் அதை முனை மழுக்கலாம் என்ற பல நூற்றாண்டு  மாக்கியவெல்லிய போர்த்தந்திரத்தைப் பின்பற்றி, ஆண்டர்ஸனை மேதையாக அறிவித்து, பொன்னாடைகள் போர்த்தி, பல்கலைப் பாடமாக அவர் புத்தகங்களை வைத்து விழாவெல்லாம் எடுத்துப் பின் அவரை மூலையில் உட்கார்த்தி வைத்து விட்டார்கள். அடுத்த இருபது முப்பது ஆண்டுகள் அந்தப் புத்தகம் ஏன் சரியல்ல என்று எழுதி மறுபடி தேசம், நாடு என்பதெல்லாம் கற்பனை என்பதால் தேசியம் என்பது ஃபாசிஸம் என்று வரையறுக்கத் துவங்கினார்கள். என்ன இருந்தாலும் வண்டிச் சோடையில் போவதுதானே வண்டி மாட்டுக்கு நல்லது, இல்லையா?

அப்போது மூலையில் போய் உட்கார்ந்த ஆண்டர்ஸன் சமீபத்தில் இறந்து மறுபடியும், சாவு என்றும் ஒரு எதார்த்தம் இருப்பதை மேற்படி இடது சாரியின் அறிவாளர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அவரும் பாருங்கள் தொடர்ந்து இப்படிக் கலகம் செய்பவராகவே இருந்து மறைந்திருக்கிறார்.

உடனே பல மேலைப் பத்திரிகைகளில் ஆண்டர்ஸனின் அளிப்பு என்னவொரு உன்னதமானது என்று கட்டுரைகள் எழுதிக் களித்தார்கள். குறிப்பாகச் சொன்னால், ஆண்டர்ஸன் யூரோப்பியரே இல்லையாம். இந்தோநேசியாதான் அவருக்கு தாய்நாடு போலவாம். இனிமேல் யூரோப்பிய அறிஞர்கள் அவரவரவர் இரண்டு மூன்று வருடம் ஆய்வு செய்த நாடுகள்தாம் தம் தாய் நாடு போல என்று அறிவிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். நம் இந்திய முற்போக்குகள் ஏற்கனவே யூரோப் தான் தம் தந்தை நாடு என்றுதானே கருதுகிறார்கள். லெனினும் இசுடாலினும்தானே இவர்களுக்கு மூதாதையர். அந்த வகையில் இந்தியர் கூட சில விஷயங்களில் முன்னோடிகள்.

ஆண்டர்ஸனின் அளிப்புகளை, வாழ்க்கையை சிலாகிக்கும்  ஒரு கட்டுரையை இங்கு சுட்டுகிறோம். [இது படிக்கப் பயனுள்ளது என்றும், சிறிதும் அங்கதமின்றி, அங்கீகரிக்கிறோம்.]

https://newrepublic.com/article/125706/benedict-anderson-man-without-country
[/stextbox]


[stextbox id=”info” caption=”போப் ஃப்ரான்சிஸ் ஆசீர்வாதம்”]

church_ban_HIV_AIDS_Pope_Cartoons_condom_Vatican_use_pope

இந்தக் கட்டுரையின் முதல் பத்திகளை அப்படியே மொழி பெயர்த்துக் கொடுத்தாலே போதும். தனிக் குறிப்பு எழுத்த் தேவை இல்லை. ஆனால் கட்டுரையை நீங்கள் படிக்கத்தான் போகிறீர்கள் என்பதால் மொழி பெயர்க்கவில்லை. சுருக்கிய கருத்து இது.

பல கருத்துக் கட்டுகளைப் போல மதங்கள் எனப்படுபவையும் கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கலந்து கட்டியவை என்று துவங்கும் இந்தக் கட்டுரை எப்படி கதோலிக்க மதம் ஆஃப்ரிக்க மக்கள் நடுவே பரவி இருப்பது அம்மக்களுக்குப் பேராபத்தாக்க் கூடும் என்று எச்சரிக்கையை எழுப்புகிறது. ஆஃப்ரிக்காவில் ஏற்கனவே பல கொடும் வியாதிகள் உலவுகின்றன. சில இயற்கையாகப் பன்னெடுங்காலமாக இருப்பவை- மலேரியா, ஸிக்கில் செல் அனிமியா, எபோலா போன்றவை இவை. ஆனால் நவீன உலகின் அளிப்புகளான எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோய்கள் ஆஃப்ரிக்காவில் வருடந்தோறும் பல லட்சம் மக்களைக் கொல்கின்றன. இவற்றுக்கு எதிரான சக்தி வாய்ந்த தடுப்பு சாதனம் மிக எளிய ஒன்று. அது ஆணுறை (பெண்ணுறையும்தான்). கதோலிக்க சர்ச் ஆஃப்ரிக்காவில் இந்த ஆணுறையைப் பயன்படுத்துவது பெரும்பாவம் என்று பிரச்சாரம் செய்வதாக இந்த அறிக்கை பழி சாட்டுகிறது. இப்படி ஒரு நம்பிக்கையைப் பரப்பி வருவதன் மூலம் பல லட்சம் சாவுகளுக்கு இந்த நம்பிக்கை காரணமாகிறது என்றும் அச்சுறுத்துகிறது.

சரி ஐயா, யார் இப்படி ஒரு நம்பிக்கையைப் பேணச் சொல்கிறார்கள், ஆஃப்ரிக்கர்களுக்கு சுய புத்தி எங்கே போயிற்று என்று கேட்பீர்களாயின், ஆரியப் படையெடுப்பு என்ற ஒரு யூரோப்பிய இனவெறிப் பொய்யை அசைக்க முடியாத வரலாற்று உண்மையாக நம்பும் தமிழகத்துத் திராவிட அரசியல் சூழலில் இருக்கும் நீங்களா இப்படி எல்லாம் கேட்கிறது ?

http://www.salon.com/2015/11/30/catholic_dogmas_are_killing_people_in_africa/
[/stextbox]


[stextbox id=”info” caption=”மக்கள் அரசாங்கமும் பெரும்பணத்தின் ஆட்சிக் கவிழ்ப்புகளும்”]

சமீபத்தில் யூரோப்பிய ஒன்றியம் கடும் சிக்கலில் மாட்டியது நினைவிருக்கலாம். கிரேக்கம் தன் அன்னியக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதோடு மட்டும் அல்லாமல், வட்டியைக் கூடக் கட்ட முடியாத நிலைக்கு வந்திருந்த்து. அது போதாது என்பது போல வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக அடுத்த வருடத்து அரசாட்சியை நடத்தவும் நிதி இல்லாத்தால் அதற்கும் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருந்தது.

இதே போன்ற நிலையில் இல்லை என்றாலும் இப்படி வரப் போகிற நிலையில் இருக்கும் நாடுகள் என்று ஸ்பெயினும், போர்ச்சுகலும் கருதப்பட்டன.

ஆங்கெலா மெர்க்கெல், என்னும் ஜெர்மன் அரசின் அதிபரோ, கிரேக்க நாட்டுக்கு ஒரு சலுகைகளும் கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். கிரேக்க மக்கள் இதுகாறும் பதவியிலிருந்த மரபுக் கட்சிகளை ஒழித்து விட்டு சிரிஸா என்ற புத்தம் புதுக் கட்சியை பதவிக்குக் கொணர்ந்தனர். (ஆப்புக் கட்சி என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறதே அது போன்றது என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமக்கு ஆப்பு வைக்க ஒரு கட்சி என்றால், அங்கு சிரச் சேதம் செய்ய ஒரு கட்சி. )

மெர்க்கெல்லும் யூரோப்பிய வங்கிகளும் சேர்ந்து ஒரு பக்கம் விடாக்கண்டர்களாக, அடாவடியாக நின்றால், மறுபுறம் கொடாக்கண்டர்களாக இந்த இடதுசாரிக் கூட்டணியினர். கடைசியில் கிரேக்க அரசு, மறுபடி வாக்களிப்பு ஒன்றை நடத்தி யூரோப்பிய வங்கிகளின் மறு கடன்களை ஏற்பதா வேண்டாமா என்று மக்களைக் கேட்டபோது கடனைத் திருப்புவதற்கு மறுபடி கடன் வாங்கும் அந்த ‘புத்திசாலித்தனமான’ யோசனை தோற்றது. கிரேக்கம் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று யோசனை எழுந்த்து. ஆனால் பேச்சு வார்த்தைகள் மூலம் கிரேக்க அரசும் கடன் கொடுத்த நாடுகள்/ வங்கிகளும் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றனர்.

இந்த இழுபறியை எல்லாம் ஒரு நான்கு பாகத் தகவல் படமாக (ஒவ்வொன்றும் சுமார் 15 நிமிடங்கள் ஓடும்) தயாரித்திருக்கின்றனர் ஸ்கார்லடோஸ் மற்றும் மேஸன் என்கிற இரு திரைப்பட இயக்குநர்கள். இந்தப் படங்கள் டிசம்பர் 15 ஆம் தேதியிலிருந்து ஃபீல்ட் ஆஃப் விஷன் என்கிற ஒரு வலைத் தளத்தில் ஓடும்.)

http://www.salon.com/2015/12/11/what_can_we_learn_from_the_greek_defeat_the_global_struggle_against_austerity_reaches_the_screen/

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.