காலத்தினால்….

chennai rains
பொன்னியின் செல்வனை முதன்முதலில் இருபதாண்டுகளுக்கு முன் வாசித்த போது எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த உரையாடல் இது “இவங்களுக்கு கம்யூனிகேஷன் தான பிரச்சினை.இப்ப மாதிரி போன் இருந்திருந்தா குந்தவை ஆதித்த கரிகாலனுக்கும் அருண்மொழிவர்மனுக்கும் பேசி இருவரையும் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை அழித்திருக்கலாம்”. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் போன்றவர்களின் ரகசியத் தகவல் பரிமாற்றம் தேவையிருந்திருக்காது”
பெருமழையும் வெள்ளங்களும் படகுகளும் காவிரியிலும் கெடிலத்திலுமாய் கற்பனேயில் கண்டவற்றை வேளச்சேரியிலும் முடிச்சூரிலும் இந்நவீன யுகத்தில் கண்டது எத்தனை வேதனையான நிலை.   எத்தனை பணம் இருப்பினும் எத்தகைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பினும் இயற்கையின் சீற்றத்தின் முன் அனைவரும் சாமானியர்களே என உணர வைத்தது சென்னை மழை.   ஐந்து நாட்களாய் எவ்வித தொலைத்தொடர்புமின்றி சென்னை மக்களை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது இயற்கை.வாட்சப்,பேஸ்புக் இணையம் ஸ்மார்ட்போன்,பீட்சா,விமானம் மெட்ரோ ரயில், மின்சாரம் எதுவுமின்றி எப்படி வாழ்ந்தார்கள் என்று இன்றைய மக்களை சிந்திக்க வைத்தது மழை.பக்கத்தில் செல்லும் மனிதன் யாரெனத் திரும்பிக் கூட பார்க்க விருப்பமற்ற நகரில் யாரென்றே அறியாதவர்களின் வீடுகளில் தங்கவும்,பசியுடனிருந்த அனைவரும் ஒன்றே என எண்ணி வாழ வைத்தது பெரு வெள்ளம்.
என் பால்யத்தில் ஜவ்வாது மலையில் மழைக்காலங்களில் மின்கம்பம் விழுந்து விட்டால் மீண்டும் மின்சாரம் வர பத்து முதல் பதினைந்து நாட்களாகும்.அந்நாட்களில் இரவுகளில் மழையின் ஓயாத சத்தமும் பூச்சிகளின் ரீங்காரங்களும் இடி ஓசையும் நிறைந்திருக்க   அரிக்கேன் விளக்கொளியில்  அமர்ந்து நாங்கள் உண்ட கதைகளை என் பிள்ளைகளுக்குக் கூறினேன்.இதைப் போன்ற பல நினைவுகள்  பலருக்கும்  வந்திருக்கும்.இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
இயற்கையெனும் மாபெரும் ஆற்றலுக்கு முன் மனிதன் எத்தனை எளிய உயிர் என நவீன மனிதர்களுக்கு தோன்றியது.ஒரு துண்டு ரொட்டியும் ஒரு கவளம் சோறும் ஒருவாய் தண்ணீரும் எத்தனை மகத்துவமானது என செல்வந்தர்களும் உணரவைத்தது.ஆபத்தில் உதவும் உள்ளங்கள் எத்தனை உன்னதமானவை என இயந்திர நகர வாழ்விற்கு அறிவினை அளித்தது.எத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அடிப்படையான கட்டமைப்புகள் எளிமையானவேயே என்ற நிதர்சனம் பொட்டில் அடித்தாற்போல தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் இயற்கைக்கு எதிரான செயல்களும் உண்டாக்கும் பேரழிவினை பற்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கூறிய போது அவர்களை ஏளனமாய் அலட்சியப்படுத்திய இருபத்தோராம் நூற்றாண்டு நாகரீகத்தின் உச்சந்தலையில் தட்டி    உண்மையை    புரிய வைத்திருக்கிறது .
ஒரு பெரு மழையைக்கூடத் தாங்காதவையா நம் நவீனப் பெருநகரங்கள்? காரணங்கள் எவை?
சென்னை என்றாலே தென்னிந்தியர்கள் அனைவருக்குமே ஒரு அன்பும் சிறிது எரிச்சலும் வரும்.உணர்வுகளுடன் இணைத்தே ஊரைப் பார்க்கப் பழகியவர்கள் நாம்.நம் திரைப்படங்களும் இலக்கியங்களும் சென்னையைப் பல கோணங்களில் நம்மிடையில் இணைத்து விட்டன.எனவே அந்நகரை சாமானியன் முதல் விஐபிகள் வரை ஏதோ ஒரு விதத்தில் அடைய எண்ணுவதே இயல்பு.தமிழகம் மட்டுமின்றி கேரளம் ஆந்திரம் கர்நாடகம் என பல மாநில  இளைஞர்கள் எப்படியேனும் பிழைக்க முன்னேற சென்னையைத் தேர்ந்தெடுக்க காரணம் அந்நகரின் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்.இருப்பினும் எல்லாப் பெருநகரங்களைப் போன்றே சென்னைக்கும் வறிய முகமும் உண்டு.
வெயில்,நெரிசல்,ஏமாற்றும் மக்கள் ,மனிதத்தன்மையற்ற இடம் என எல்லோரும் தூற்றினாலும் அனைவர் மனதிலும் சென்னை வாழ்வின் மீது,ஊரின் அழகிய விலைமாதின் மீது கொள்ளும் ரகசிய ஆசையைப் போன்ற ஒரு ஏக்கம் உண்டு.அந்த ஈர்ப்பே இன்றைய சென்னையின் ஏற்றத்திற்கும் இழிவிற்கும் அடிப்படை.மேலும் எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை நம் திரைப்பட நாயகர்களின் சாகசங்களின் இடம் சென்னை தானே.
கடந்த இருபது நாட்களாய் நம் கண் முன்னே அழிகிறது இம்மாநரம்.எப்படியாயினும் நகரம் திரும்பக் கட்டப் பட்டுவிடும் ஆனால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களே அழிந்து விட்ட நிலையில் என்னவாகும் சாமானியனின் நிலை.ஆயிரம் காரணங்கள் இருப்பினும் அரசியல் இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தற்போதைய அவசியம்.
இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… அதே போன்று பொதுவெளியில் பயன்படுத்த தயங்கும் ஆபாச வசைகளை வார்த்தைகளை மிகச் சரளமாக இந்த இளைஞர்களின் இணையப் பதிவுகளில் பார்த்து நான் அரண்டதுண்டு. இளைஞர்களின் பேரற்றல் இத்தகைய எளிய அரட்டைகளில் வீணாகிறதே என் வருந்தியதுண்டு.ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது.
ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து     மிக மிக      உண்மையாய் உயிர்களைக் காக்க உதவினார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களை, தமிழர்களை இணைத்து அதி விரைவில் பொருளுதவி பெற்று நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.யாரென்றே தெரியாத குழந்தையையும் கர்ப்பிணித் தாயையும்,முதியவர்களையும் பெண்களையும் காத்தார்கள்.இவர்கள் அளித்த உணவுகள்  அன்று பல ஆயிரம் சென்னை மக்களைக் காத்தது.இவர்கள் தொடங்கிய உதவிகளே பலமடங்காய் பெருகி பிற ஊடகங்கள் மூலம் பலரையும் இணைய வைத்தது.நேரடியாக பணியாற்றியவர்களுடன் இணையம் மூலம் பல இடங்களிலிருந்து சரியான தகவல்களை இணைத்தவர்கள் பல ஆயிரம் முகம் தெரியா இணைய இளைஞர்களே.பெண்களுக்கு நாபகின்கள்,குழந்தைகளுக்கு பால் பவுடர் காய்ச்சலுக்கு பேராசட்டமால் போர்வை டார்ச் செல்போன்களுக்கு பவர்பேங்க் என பல அத்தியாவாசிய உதவிப் பொருட்கள் பற்றி இணையவாசிகளே முதலில் தெரியப் படுத்தினர்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் போன்று பேசிய பலரும் ஒன்றும் செய்யாமல் குறை கூறிக்கொண்டிருந்த வேளையில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி உண்மையாய் உதவிய இளைஞர்களே மனிதம் இன்னும் இருக்கிறது என உணர்த்துகிறார்கள்.இந்த இளைஞர் சக்தியை சரியானபடி இணைத்து வழிநடத்தும் திறமையான உண்மையான லட்சிய வழிகாட்டிகள் அமைந்தால் நிச்சயம் மாபெரும் மாற்றங்கள் இந்திய அரசியலில் உண்டாகும்..கிண்டலும் கேலியுமாய் பதிவிட்டுக் கொண்டிருந்தாலும் இவர்களின் சமூக அக்கறையும் ஈடுபாடும் போற்றத்தக்கவை.
பேரிடர் காலங்களில்  மழையை இயற்கையை தூற்றுவதும் சபிப்பதும் இயல்பானதே … என்றாலும்

மாமழை போற்றுதும் !!மாமழை போற்றுதும்!!

 

One Reply to “காலத்தினால்….”

  1. அருமையான கட்டுரை. மனிதம் என்பது கற்றுக்கொடுத்து வருவதல்ல. தானாக எழும் உணர்வு என்பதையும், அது சென்னைவாசிகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் இருக்கிறது என்பதையும் இந்த பெருமழை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது.

Comments are closed.