கவிழ்ந்த பாத்திரமென
கவிதைகளெல்லாம் பொழிந்து தள்ளிவிட்டன.
முதல் கவிதையின் முதல் துளி
இன்னும் சுவடின்றி அலைக்கழிகிறது.
கவிதைகளைத் தொலைத்து
வெள்ளம் எங்கே பாய்கிறது?
நம் பெரு நகரின் சிறு சந்துகளில் சிக்கி
எதைத் தேடுகிறது?
வேகமாக ஓடிக்கொண்டிருந்த நம் பொழுதை
அறைந்து நிறுத்திவிட்டதே!
தன் உறுமலின் பெருமழையால்
என்னக் கேட்டுக்கொண்டிருக்கிறது?
சுத்தப்படுத்துகிறதா? சுற்றி இறுக்குகிறதா?
அதை எங்கே போக சொல்வது?
நூறு மழைகளைப் பார்க்க நம்
இடைவெளி வாழ்க்கைகள் போதாதென்று நினைத்ததோ?
கொட்டித் தீர்த்தபின்னும், மனதின்
இடுக்குகளில் நிரம்பி வழிகிறதே!
நினைவுகளும் தளும்பி சிதறிடுமா?
மீண்டும் ஒரு மழைக் கவிதை முளைத்திடுமா?