ஈராக் – ஓர் அறிமுகம்

உலக நாகரிகத்தின் தொட்டில்கள் என அறியப்படும் யூஃப்ரடிஸ் (பாபிலோன் அருகில் ஓடும்போது இதன் பெயர் ஃபராத்) மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா அல்லது இன்றைய ஈராக். மெசபடோமியா என்ற வார்த்தைக்கு ‘இரு நதிகளின் நாடு ‘எனப்பொருள். உலகின் முதல் மனிதன் குடியேறி, நாகரிகங்களை வளர்த்ததும், எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டதும், உலகின் முதல் சட்டங்களை இயற்றியதும், ஒரு முழுமையான மக்கள் சமுதாயமாக இருந்ததும், விவசாயம், மீன்பிடித்தொழில், கைத்தொழில்கள் என எல்லாம் வளர்ந்ததும் இங்கேதான். இதன் தொன்மம் கிறிஸ்து பிறப்பதற்கு 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஈராக்கின் முதல் குடிகளாக அறியப்பட்டவர்கள் அக்காடியர்கள் என்போர், அதன் பின்னர் வந்தவர்கள் சுமேரியர்கள். இவர்களின் காலத்து நாகரிகம் சுமேரிய நாகரிகம் என்று அறியப்படுகிறது. அதன் பின்னர் வந்தவர்கள் அசிரியர்கள். அசிரியர்களுக்குப் பின்னர் பாபிலோனியர்கள். இதன் தொடர்ச்சி பல்வேறு ஆட்சிகளுக்கு மாறி ஒட்டோமன் காலம்வரை வந்து அதன் பின்னர் பிரித்தானியர்கள் கையிலிருந்து இன்றைய ஈராக் வரை வந்துள்ளது.
மன்னராட்சியில் இருந்த ஈராக் 1932ல்தான் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1958 வரை மன்னராட்சியே நீடித்தது. மக்கள் புரட்சியால் மன்னராட்சி அகற்றப்பட்டு சுதந்திர ஈராக்காக தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை கிட்டதட்ட 60 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு ஆட்சியாளர்களின் கையில் ஈராக் சிக்கி, ஜனநாயகம் என்ற ஒன்று மலர்வதற்குமுன் சதாம் ஹுசைன் கையில் மாட்டி, கொடுங்கோல் ஆட்சியில் சின்னாபின்னமாகியது. ஈராக்கிய மக்கள் இப்போதுதான் சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். ஈராக் குடியரசு என்ற பொருளில் இன்றைய ஈராக் ‘ரிபப்ளிக் ஆஃப் ஈராக்’ என்றழைக்கப்படுகிறது. இன்றைய ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல் லப்பாதி. இவருக்கு முன்புவரை இருந்த பிரதமர் நூர் அல் மாலிக்கி. அவரது ஆட்சிக்காலத்தில்தான் ஐ.எஸ் என்றும் இஸ்லாமிய நாடு என்றும் தன்னை அழைத்துக்கொள்ளும் இஸ்லாமியக் கொடூரர்கள் ஈராக்கின் மீதும், சிரியாவின் பகுதிகள் மீதும் படையெடுத்து இரு நாடுகளிலும் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமதாக்கிக்கொண்டு ஆண்டு வருகின்றனர். அந்தக் காரணத்தைச் சொல்லி அவரை ஆட்சியிலிருந்து அகற்றி ஹைதர் அல் லப்பாதியை பிரதமராக்கினார்கள்.
இன்றைய சுதந்திர ஈராக்காவது முழுமையானதா என்றால் அதுதான் இல்லை. வெளியே தெரியாவிட்டாலும், சட்டபூர்வ அனுமதி இல்லாவிட்டாலும் ஈராக் இன்றைய தேதியில் மூன்று பகுதிகளாகி உள்ளது. ஒன்று மெயின்லாண்ட் ஈராக் எனப்படும் பகுதிகள், குர்திஸ்தான் எனப்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பகுதி. எர்பில் என்ற நகரை தலைநகராகக் கொண்டுள்ளது. ஈராக்கில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக ஆவதே இவர்களின் லட்சியம்.  மூன்றாவது, இவற்றைத்தவிர ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஐஎஸ் என்ற பயங்கரவாதக் குழு பிடித்து வைத்துள்ள பகுதிகள்.
ஈராக்கின் பொருளாதாரம் இன்றைய நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை நம்பியே உள்ளது. ஈராக்கின் மொத்த எண்ணெய் வளத்தின் எழுபது சதவிகிதம் ஈராக்கின் தென் மாகாணமான பாஸ்ராவில் உள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தின் ஆட்சியாளர்கள் இத்தனை எண்ணெய் வளம் உள்ள பாஸ்ராவை கண்டுகொள்வதில்லை என்ற எரிச்சல் பலகாலமாய் இருந்து வருகிறது. அதன் முற்றிய நிலைக்குச் சென்று பாஸ்ரா நாடு என்ற தனிநாடு கோரிக்கையும் கிளம்பி இருக்கிறது. இன்றைய நிலையில் இது வெறும் கவன ஈர்ப்பு போலத் தென்பட்டாலும், பாஸ்ராவிகளுக்கு (பாஸ்ரா வாழ் மக்கள் பாஸ்ராவிகள், பாக்தாத் வாழ் மக்கள் பாக்தாதிகள்) கிடைக்க வேண்டிய வசதிகளை காலாகாலத்தில் செய்துகொடுக்கவில்லையெனில் நிச்சயம் இது மிகப்பெரிய தலைவலியை பாக்தாத்திற்குக் கொண்டுவரும்.
ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுருக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும்.
ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்.

history_Iraq_Persia

பாக்தாத் – ஈராக்கின் தலைநகர்

பாக்தாத் நகரம் ஈராக்கின் மையப்பகுதியில் டைகிரிஸ் நதிபாயும் கரையில் அமைந்துள்ளது. ஈராக்கின் பெரும்பான்மை ஷியா பிரிவு (60%) இஸ்லாமியர்கள். தலைநகரான பாக்தாத்திலும் ஷியாக்களே அதிகம். 1980க்கு பிறகு எந்தவித வளர்ச்சியும் இன்றி காலத்தால் உறைந்துபோன நகரமாகக் காட்சியளிக்கிறது பாக்தாத்.
பெரும்பாலான கட்டடங்களில் வளைகுடா போர்க்காலத்தில் பாய்ந்த குண்டுகளின் தாக்குதல்களை இப்போதும் காணமுடியும்.
ஷியாக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், ஸுன்னி பிரிவு இஸ்லாமியர்களும், அசிரியர்கள் என்றழைக்கப்படுவோரும், துர்க்மானியர்களும், குறைந்த சதவீதத்தில் கிறிஸ்தவர்களும், இதர சில பிரிவினரும் வாழ்ந்து வருகின்றனர். சதாம் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் வந்த அமெரிக்கர்களின் கொடூரச் செயல்களால் ஏற்பட்ட கோபத்தை ஈராக்கியர்கள் சக கிறிஸ்தவ ஈராக்கிகளிடம் காண்பிக்க, அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பித்துச் சென்றனர். இப்போது இருக்கும் கிறிஸ்தவர்களும் எப்போதும் ஒரு பயத்துடனேயே வாழ்கின்றனர். ஈராக்கியர்களுக்குள்ளும் ஷியாவா, ஸுன்னியா என்ற சண்டையில் அவர்களும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.

Iraq water

குடிதண்ணீர், மின்சாரம்

பாக்தாத்தின் குடிநீர் தேவையை டைகிரிஸ் நதி பூர்த்தி செய்கிறது. அந்த நதிநீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்குகிறது அரசு. டைகிரிஸ் நதியில் படகுப் போக்குவரத்தும் உண்டு. டைகிரிஸ் நதியின் நீர் நன்னீர் என்பதால் நன்னீர் மீன்பிடிப்பும் உண்டு. இதனால் பாக்தாத்தின் பெரும்பாலான உணவகங்களில் மீன் உணவு பிரசித்தமாய் உள்ளது.
தண்ணீரும் தடையின்றிக் கிடைப்பதில்லை. அதேசமயம், மிக மோசமாக தண்ணீர்ப்பஞ்சம் என்ற அளவிலும் இல்லை. அரசாங்கம் குழாய்களில் வழங்கும் தண்ணீர் குடிப்பதற்கு உபயோகப்படுவதில்லை. அவ்வளவு உப்புச்சுவை. முறையாக சுத்திகரிக்கப்படாததும் கூட. இதனால் ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் கேன்களிலும், சிறிய பாட்டில்களிலும் நல்ல குடிநீர் வாங்கி பயன்படுத்தவேண்டிய சூழல். ஈராக்கியர்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி குடிதண்ணீருக்குப் போவது அவர்களின் சாபங்களில் ஒன்று.
பாக்தாத்தை ஒப்பிடும்போது பாஸ்ராவில் தண்ணீர் இன்னும் மோசம். கிட்டத்தட்ட கடல்நீரை ஒத்த உப்புச்சுவையுடனே தண்ணீர் குழாய்களில் வருகிறது. அதுவே குளிக்கவும், துணிதுவைக்கவும், இதர வீட்டுத்தேவைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நஜஃப், கெர்பலா பகுதிகளிலும் இதே நிலை. ஆனால், நிலத்தடிநீரும் இந்தப் பகுதிகளில் கிடைக்கிறது.
சதாம் மறைவுக்குப் பின்னர் புதிய மின்சாரத் திட்டங்கள் ஏதுமின்றியே நாடு இருந்திருக்கிறது. இருக்கும் வசதிகளைக் கொண்டு மின்சாரத்தைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தனர். 2014 முதல் போர்க்கால அடிப்படையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டிக்கொண்டுள்ளனர். இவை வேலை முடிந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் 2017 வரை ஆகலாம். பொதுமக்கள் மின்சாரத் தேவையைச் சமாளிக்க அவரவர்கள் வீட்டில் தனியாகவோ அல்லது தெருவுக்கு ஒன்றுவீதம் ஜெனரேட்டர்கள் அமைத்தோ மின்சாரம் இல்லாத நேரங்களில் மின்சாரத்தைப் பெறுகின்றனர். ஆகும் செலவை அவர்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றனர். பலருக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு விஷயமாக இந்தத் தனியார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளது. இவர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என்பதால் அரசாங்க மின்சாரக் கம்பத்தையே தங்களின் வயர்களைக் கொண்டுசெல்லப் பயன்படுத்துகின்றனர். முறையான வயரிங் ஏதுமின்றி கொத்து கொத்தாய் வயர்கள் அபாயகரமாய் ஒவ்வொரு தெருவிலும் தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

iraq-electricity-wires-Power

போக்குவரத்து

ஈராக்கில் தொழில்துறை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் அல்லது தொழில்துறை என்ற ஒன்று இல்லாததால் பெரும்பாலான இளைஞர்களுக்கு டாக்ஸி ஓட்டுதலே மிக முக்கிய தொழில்.
ஈரானிலும்  சீனாவிலும் தயாரிக்கப்பட்ட கார்கள் 10,000 டாலர்களுக்கு கிடைக்கின்றன. அதை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகின்றனர். பாக்தாத் மட்டுமல்ல, ஈராக்கின் பெரும்பான்மையான நகரங்களில் டாக்ஸிகள் மூலமே பெருவாரியான போக்குவரத்து நடக்கின்றது. ஈராக்கின் போக்குவரத்துத்துறை இப்போதுதான் சீன அரசிடமிருந்தும், கொரிய அரசிடமிருந்தும் வாங்கிய அடுக்குமாடிப் பேருந்துகளைப் புழக்கத்தில் விட்டிருக்கிறது. ஆனால், எந்தக் குறிப்பிட்ட கால அட்டவணையையும் பின்பற்றாது, எப்போதாவது வரும் என்ற அளவிலேயே உள்ளது.
இந்த சிறு சிறு டாக்ஸிகள் தவிர இரு சக்கர வாகனத்தைக் கொஞ்சம் மாற்றி வடிவமைத்து மூன்று சக்கர வாகனமாக்கி அதில் கிட்டத்தட்ட 10 பேர்கள் அமர்ந்துசெல்லும் அளவுக்கு இருக்கைகள் அமைத்து, நம் சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் போல ஓட்டுகின்றனர். இரு கிலோமீட்டர் பயணம் செய்ய 500 ஈராக்கிய தினார். அதாவது நம்மூர் மதிப்பில் 30 ரூபாய்.
இவை தவிர 20 பேர்கள் அமரும் வேன்களும், நீண்ட தூரங்களுக்கும் பாக்தாத் நகருக்குள்ளும் சிறு பேருந்துகள் போல செயல்படுகின்றன. எங்கே ஏறினாலும், இறங்கினாலும் 30 ரூபாய் என்ற அளவிலும், குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் இரு மடங்காகவும் வசூலிக்கின்றனர்.
வெளியூர்களுக்குச் செல்ல டாக்ஸிகளும், மினி வேன்களும் அரசுப் பேருந்துகளும் உள்ளன. பொதுமக்கள் தனியார் வேன்களையே அதிகம் நம்புகின்றனர். நம்மூரில் தனியார் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர். பயண நேரம் கிட்டத்தட்ட 6 மணி நேரம். இரு இடங்களில், உணவுக்காகவும் நிறுத்துவார்கள்.

ரயில்வண்டிகள்

ஈராக்கின் இருப்புப்பாதை மற்றும் ரயில் வண்டிகள் சதாம் காலத்தில் இந்தியாவால் அமைக்கப்பட்டவை. மீட்டர்கேஜ்களாக இருந்தன. தொடர் போரினாலும், இருப்புப்பாதைகள் பெருமளவு சேதமடைந்ததாலும் 25 ஆண்டுகளாக ரயில்சேவை என்ற ஒன்று இல்லாமலிருந்தது. தற்போது பாக்தாத் – பாஸ்ரா ரயில் சேவை சீன ரயில் பெட்டிகளுடன் இயங்கிக்கொண்டுள்ளது. மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றி இயக்கிக்கொண்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்கள் மிதமான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. அதனால் ஷேர் டாக்ஸியில் 6 மணி நேரத்தில் பாஸ்ரா செல்ல முடியும்போது இந்த ரயில்கள் 12 மணி நேரத்துக்குக் குறையாமல் எடுத்துக்கொள்கின்றன.

Iraq_Tour_Travels_Wiki_Baghdad_International_Airport

விமான சேவைகள்

வளைகுடா போருக்கு முன் கொடிகட்டிப்பறந்த ஈராக்கி ஏர்வேஸ் எனும் அரசாங்க நிறுவனம் போருக்குப்பின்னர் பல விமானங்களை இழந்து, பலநாடுகளால் திருடப்பட்டு கிட்டத்தட்ட அழிந்த நிலையில் இருந்தது. அது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளூர் விமான சேவைகளை பாஸ்ரா, மொசுல், எர்பில், நஜஃப், சுலைமானியா ஆகிய நகரங்களுக்கும், துபாய், அங்காரா, லெபனான், அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய வெளிநாடுகளுக்கும் தன் சேவையை நடத்துகிறது. எமிரேட்ஸ், இதிஹாத், கத்தார் ஏர்வேய்ஸ் போன்ற விமான சேவையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே அதன் சேவைகள் உள்ளன. மிகப்பழமையான விமானங்களே கடந்த ஆண்டுவரை இயக்கப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 100 புதுவிமானங்களுக்கு ஈராக்கி ஏர்வேய்ஸ் ஆர்டர்கள் கொடுத்துள்ளது. அவைகள் வந்தால் நிலைமை சீரடைந்து விமான சேவையில் கௌரவமான இடத்தைப்பெறும்.
விமான நிலையத்திற்குள் செல்வதற்குள் கிட்டத்தட்ட ஏழு கடல்தாண்டி, ஏழு மலைதாண்டி செல்வதைப்போன்ற பிரமை ஏற்படும். அது ஏன் என்பது கீழே.
பறப்பதென்னவோ ஒரு மணி நேரம். ஆனால், 4 மணி நேரம் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்கும்படி வேண்டுகின்றனர் பாக்தாத் விமான நிலையத்தார்.
ஏர்போர்ட்டுக்கு 4 கிலோமீட்டர் முன்னதாகவே நாம் இறங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விமான நிலையமே வைத்திருக்கும் ஜி எம் சி அல்லது செவர்லேயில் ஷேரிங் டாக்ஸியில் விமான நிலையம் நோக்கிப் பயணம். தற்போது ஏர்போர்ட் டாக்ஸி என்ற கம்பெனியிடம் முழுக்காண்ட்ராக்டுகளையும் அளித்திருக்கின்றனர். ஒரு பயணத்திற்கு 31 அமெரிக்க டாலர் அல்லது 40,000 ஈராக்கிய தினார். இதுதவிர விமான நிலையமே இலவசமாய் இயக்கும் பேருந்துகளும், குறைந்தகட்டணத்தில் ( 10,000 தினார் = 8 டாலர்) இயங்கும் பேருந்துகளும் உண்டு.
முதலில் ஒரு செக்போஸ்ட். பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் இருக்கிறதா என சோதிக்க.
அடுத்தது மோப்ப நாய்கள் வந்து செக் செய்யும் செக் போஸ்ட். வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கி தூரமாய்ப் போய் நிற்க வேண்டும்.
அதற்கு அடுத்த செக் போஸ்ட்டில் மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் பரிசோதனை மற்றும் லக்கேஜ் செக்கிங். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கீழே எடுத்துப்போட்டு செக்கிங். ஈராக்கியர்களுக்கு தாவு தீர்ந்து விடும். இந்தியன் என்பதால் கொஞ்சம் விடுதலை.
அதன் பின்னர் மீண்டும் எக்ஸ்ரே ஸ்கேனிங். நமக்கும் ஸ்கேனிங்.
ஏர்போர்ட் வந்தாயிற்று. மீண்டும் சாமான்களுக்கு எக்ஸ்ரே ஸ்கேனிங் மற்றும் நமக்கு ஸ்கேனிங்.
அடுத்து ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தாயிற்று. இப்போது உங்கள் விமானம் புறப்பட 1 மணி நேரம் முன்பு மட்டுமே செக்-இன் கௌன்டருக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.
அனுமதித்த பின்னர் மீண்டும் ஸ்கேனிங். லாப்டாப்பை வெளியே எடுத்து எல்லா சாமக்கிரியைகளும் மீண்டும்.
அடுத்து போலிஸின் உடல் சோதனை. அப்பாடா என செக்-இன் கௌன்டர் வந்து பெட்டியைப் போட்ட பின்னர்தான் நிம்மதி.
இப்போது இமிக்ரேஷன். பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். அரைவலில் போட்டோவும் எடுப்பார்கள்.
இதைத் தாண்டியபின்னர்தான். பெல்ட், வாட்ச் எல்லாம் எடுத்து கட்டிக்கொள்ளலாம்.
ஒருவகையில் இத்தனை செக்கிங் இருப்பதால்தான், பாக்தாதே பற்றி எரிந்தாலும் இன்றுவரை ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததில்லை.

பொழுதுபோக்குகள்

சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில் பாக்தாத் நகரத்தில் மேலை நாகரிகமும், பார்களும், நைட் கிளப்புகளுமாக உல்லாச வாழ்வு கொடிகட்டிப் பறந்தது. மேலும், மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தமையால் மக்கள் எளிதாக வெளியே வரமுடிந்திருக்கின்றது. ஆனால், இன்றைய பாதுகாப்பற்ற சூழலில் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கே அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதுவேண்டுமானாலும், எங்குவேண்டுமானாலும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்ற நிலை இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுகை குறைவே. இருப்பினும், டைகிரிஸ் நதியை ஒட்டியுள்ள ஹோட்டல்களிலும், பார்க்குகளிலும் மக்கள் கூட்டம் மாலை வேலைகளில் அலைமோதுகிறது.
கூட்டமாக அமர்ந்து ஹூக்கா அருந்தியபடியே, ஈராக்கிய தேநீர் அருந்துவதும், நம்மூர் தாயக்கட்டைகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டும், பில்லியர்ட்ஸ், சீட்டுக்கட்டு போன்றவைகளை சிறுசிறு கிளப்களில் சென்று விளையாடுவதும் இங்கே முக்கியமான பொழுதுபோக்கு.
சட்ட அனுமதி இல்லாமல் இயங்கும் இரவுநேர கிளப்களும் உண்டு.

ஈராக்கிய சினிமா

ஒருகாலத்தில் சினிமா எடுக்கும் கேந்திரமாக விளங்கிய ஈராக் சதாம் காலத்திற்குப் பின்னர் அப்படியே இருண்ட காலத்திற்குச் சென்றுவிட்டது. இரவு நேர நடனங்களும், நாடகங்களும், சினிமாக்களும் ஈராக்கிய மக்களின் மாலைநேரப் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்று பாழடைந்த சினிமா கொட்டகைகளையும்  நாடக அரங்குகளையுமே பார்க்கக் கிடைக்கிறது. பழைய ஈராக்கிய சினிமாக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்குமா என்பதே தெரியவில்லை.
தற்போது பாக்தாத்தில் கராடா என்ற இடத்தில் ஒரு நாடக அரங்கு செயல்படுகிறது. அதில் அரசாங்கத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் நாடகங்களும், மதரீதியான நாடகங்களுமே பெரும்பாலும் போடப்படுகின்றன. மாதம் இரண்டு முதல் 3 நாடகங்கள் நடந்தாலே அதிகம். உச்சநிலைப் பாதுகாப்புடன் இயங்குகின்றது இந்த நாடக அரங்கு.
Iraqis celebrate in Basra, Iraq's second-largest city, 550 kilometers (340 miles) southeast of Baghdad, Iraq, Tuesday, June 30, 2009. U.S. troops pulled out of Iraqi cities on Tuesday in the first step toward winding down the American war effort by the end of 2011. (AP Photo/Nabil al-Jurani)

உணவு மற்றும் உணவகங்கள்.

ஈராக்கின் உணவில் பெரும்பகுதி மீன் உணவு மட்டுமே. டைகிரிஸ் நதியும், யூப்ரடிஸ் நதியும் வழங்கும் அபரிமிதமான மீன்களால் உணவில் மீன் அதிகம் உண்டு. ஆடு, மாடும், கோழியும் பிரதான உணவுகளாய் இருக்கின்றன. நம் நாட்டைப்போல மசாலாக்கள் சேர்த்து உண்பதில்லை ஈராக்கியர்கள். மாமிசத்தை அடுப்புக்கரியில் சுட்டு அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு மற்றும் வினெகரில் ஊறவைத்த காய்கறிகளைச் சேர்த்து உண்கின்றனர். பெரும்பாலான ஈராக்கிகளுக்கு காரம் பிடிப்பதில்லை. இந்தியர்களைக் கண்டாலே காரம் சாப்பிட்டதுபோல ‘ஆ, காரம்’ எனச் சொல்லி சிரிப்பார்கள். நான் பச்சை மிளகாயை ஈராக்கிய ரொட்டிக்கு தொட்டுக்கொண்டு உண்பதை வேடிக்கை பார்க்கக் கூடும் அளவுக்கு அவர்களுக்குக் காரம் என்பது ஒவ்வாது.
சாலையோர உணவகங்களில் பெரும்பாலும் மேலே சொன்ன ஆடு மாட்டு மாமிசத்தைச் சுட்டு வைர வடிவில் இருக்கும் ஈராக்கிய ரொட்டியினுள் வைத்து உண்கிறார்கள். தொட்டுக்கொள்ள வினிகரில் ஊறிய காய்கறிகளும், பச்சையாக வெட்டிவைத்த வெங்காயம், தக்காளி மற்றும் கீரைகளும்.
லபான் எனப்படும் மோர் உணவுக்குப்பின்னர். அதை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் உண்டு. உணவு அருந்திய பின்னர் ஈராக்கிய தேநீர்.
ஈராக்கியர்கள் தேநீரில் சர்க்கரையை நாம் சேர்ப்பதைவிட மும்மடங்கு சேர்த்து அருந்துகின்றனர். அது தேநீரா அல்லது சர்க்கரைப்பாகா என்ற சந்தேகம் வரும் அளவில் இருக்கும்.
ஹோட்டல்கள் எல்லாம் அரபுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. அரபு உணவு வகைகளே அதிகம். மாமிசத் துண்டுகள் கலந்த ரொட்டியை நம்மூரில் ஸ்டார்ட்டர் என வழங்கப்படும் உணவுகள் போல வழங்கின்றனர். தயிரில் ஊறவைத்த வெள்ளரிக்காய், ஸ்பகட்டி, கீரைவகைகள், ஹமூஸ் எனப்படும் கொள்ளுப்பயிரை அரைத்து தண்ணீர் சேர்த்து செய்யப்படும் ஒரு பதார்த்தம் ஆகியவை அவர்களின் உணவில் பங்கு வகிக்கின்றன. மேலை நாகரிக வளர்ச்சி அங்கேயும் தென்படுகிறது. பர்கர்கள், சாண்ட்விச்கள், பீட்சாக்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அவை உலக நாடுகளின் ப்ராண்டுகளாக இல்லாமல் (பீட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி போன்றவை) உள்ளூர்த் தயாரிப்புகளாக இருக்கின்றன.
நல்ல ஹோட்டலில் மிதமாக உணவு உண்ண சராசரியாக 20 அமெரிக்க டாலர் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான ஈராக்கியர்கள் 1 டாலருக்கு கிடைக்கும் சாண்ட்விச்சுகளை சாப்பிட்டு ஈராக்கியத் தேநீரை உண்டு மதிய உணவையோ, இரவு உணவையோ நிறைவு செய்கின்றனர்.
சாலையோரக் கடைகளில் லப்லபி என்றழைக்கப்படும் வேகவைத்த கொண்டைக்கடலையை விற்கின்றனர். அதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுப்பொடி அல்லது சிவப்பு மிளகாய்பொடி, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிடுகின்றனர். ஒரு கப் 750 ஈராக்கி தினார் அல்லது முக்கால் அமெரிக்க டாலர். இதே சாலையோரக்கடைகள் வெயில் காலங்களில் பழரசக் கடைகளாக மாறிவிடும். வெள்ளரி விதையை வறுத்து விற்பார்கள்.
பெரும்பாலான ஈராக்கியர்களின் தினசரி வருமானம் 20 டாலர்களுக்கும் குறைவு என்பதால் அவர்களின் வாழ்க்கை இந்தச் சிறிய சாலையோரக் கடைகளை நம்பியே உள்ளது.
பாக்தாத்தில் ஆல்கஹால் தடையின்றிக் கிடைக்கிறது. குர்திஸ்தானிலும் ஆல்கஹால் கிடைப்பதுடன், இரவு நேர பார்களும் உண்டு. பாக்தாத்தில் பார்கள் கிடையாது. ஆனால், நம்மூர் டாஸ்மாக் போல சுகாதாரமற்ற இடத்தில் நின்றுகொண்டு குடிக்கின்றனர். இஸ்லாமில் ஆல்கஹால் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இளைஞர்களும் பெரியவர்களும் குடிக்கின்றனர். பாஸ்ராவில் பாக்தாத் போல ஆல்கஹால் பொருட்கள் விற்கும் கடைகள் கிடையாது. ஆனால், கள்ள மார்க்கெட்டில் வேண்டிய எந்தச் சரக்கும் கிடைக்கும். விலை பாக்தாத்தைவிட இருமடங்கு. இதர அரபு நாடுகளை ஒப்பிடுகையில் மும்மடங்கு.

வாழ்க்கைத்தரம் மற்றும் குடும்ப அமைப்புகள்

ஈராக்கியர்களில் பெரும் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கமும், ஏழை வர்க்கமும், பரம ஏழை வர்க்கமும் உண்டு. பெரும்பணக்காரர்கள் என்போர் ஏக்கர்கணக்கில் உள்ள பங்களாக்களில் வசிப்போர். இவர்கள் ஈராக்கிய சமுதாயத்தில் ஐந்து சதவீதம் இருக்கலாம். இதில் பூர்வ பணக்காரர்களும், சதாம் மறைவுக்குப்பின்னர் லஞ்ச லாவண்யம் மூலம் பெரும் பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு. ஒரு சாதாரண போலிஸ் கான்ஸ்டபிளின் மாதச்சம்பளம் 1500 டாலர். ஈராக்கில் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாகவே உள்ளதால் இந்த ஒரு சம்பாத்தியத்தில் குறைந்தது 10 பேராவது சாப்பிடுவார்கள்.
நாலுபேர் கொண்ட குடும்பத்திற்கு வீட்டு வாடகையின்றி மாதம் 750 டாலர்கள் தேவைப்படும். அரிசி, பலசரக்கு, குடிதண்ணீர், காஸ், அரசு மின்சாரம், தனியார் மின்சாரம், பள்ளிக் கல்விக்கட்டணம், மருத்துவம் எல்லாம் சேர்த்து.
10 பேர் கொண்ட குடும்பத்தில் 1500 டாலர் என்பது கடலில் கரைத்த பெருங்காயம். இதனால் லஞ்சம், ஊழல் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக இங்குள்ளது. ஈராக் நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் லஞ்சம் வாங்கினால் கைது செய்யப்படுவீர்கள் என்ற வாசகம் அடங்கிய படம் இருக்கும். கைவிலங்கு இட்ட ஒரு கை படத்துடன். ஆனால் பணம் கொடுக்காமல் ஒருவேலையும் ஒருபோதும் நடப்பதில்லை. அரசாங்க அதிகாரிகளை அணுக என்றே ஒரு ஏஜெண்ட் கூட்டம் இருக்கும். அவர்கள் மூலமே நமக்கு வேண்டிய காரியங்களை சாதிக்க இயலும். இவர்களை நாம் அலுவலகத்தில் சந்திக்க முடியாது என்பதால் பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த சந்திப்புகள் நடக்கும். பெரிய பெரிய உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்த ஏஜெண்டுகளை அழைத்துவருவோரும், மிகப்பெரும் பணக்கார குடும்பங்களுமே.

குடும்ப அமைப்பு

இஸ்லாத்தில் நான்கு மனைவியரை மணந்துகொள்ளுதல் தவறில்லை என்றாலும், நான் பார்த்தவரையில் அனேகருக்கும் ஒரு மனைவிக்கு மேல் இல்லை. நான்கு மனைவியை மணந்தவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர் மனதுக்கு பிடித்த பெண்ணைத்தவிர இதர மனைவியருக்கு உயிர்வாழ எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு பணம் மட்டுமே கொடுக்கிறார்.
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் என்ற கூட்டுக்குடும்பமாகவே பெரும்பாலும் இருக்கிறது. நம்மூரைப்போலவே திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் செல்கின்றனர். மூத்த அண்ணனே அப்பாவின் ஸ்தானத்தில். தங்கைகளுக்கு மணம் செய்விப்பதும் அவரே. பெண் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்கும் (நம்மூர் வரதட்சிணைபோல) முறை இங்குள்ளது. அந்தந்த குடும்பத்தின் வசதிநிலை, குடும்ப கௌரவத்தைப் பொருத்து அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டிய தட்சணையின் அளவு மாறுபடும். திருமணத்திற்குப் பின்னரும் பெற்றோர் குடும்பத்துடன் எப்போதும் தொடர்பு உண்டு. தம்பிக்கு நல்ல வேலை கிடைத்து அமரும்வரை அவனை, அவர்களைக் தாக்க வேண்டியது அண்ணனின் கடமை. குடும்ப கௌரவம் மிக முக்கியம். தங்கையோ, அக்காளோ தவறு செய்தால் அது குடும்ப கௌரவத்தைப் பாதித்தால் சுட்டுக்கொல்லவும் தயங்குவதில்லை. தைரியமாக போலிஸ் ஸ்டேஷன் சென்று ஆமாம், நான்தான் கொன்றேன் என வாக்குமூலம் கொடுக்கின்றனர்.
குடும்பச் சண்டைகளில் துப்பாக்கிகள் பேசுவதே அதிகம். உள்ளூர் போலிஸுக்கும் அது தெரியுமென்பதால் அவர்களுக்குள் சண்டைபோட்டு பிணம் விழுந்தபின்னர் சென்று சுட்டவனைக் கைது செய்வது மட்டுமே வழமை.
ஒவ்வொருவீட்டிலும் சராசரியாக இரு துப்பாக்கிகள் உண்டு. அரசாங்கம் எல்லாத் துப்பாக்கிகளையும் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் எல்லோரும் நான்கு துப்பாக்கிகள் வைத்திருந்தால் இரு துப்பாக்கிகளை மட்டுமே அரசிடம் கொடுத்திருக்கின்றனர். சதாம் ஹுசைன் ஆட்சி தூக்கி எறியப்பட்டபோது எல்லா போலிஸும் ராணுவமும் போட்டது போட்டபடி ஓடிவிட்டனர். இந்தத் துப்பாகிகள் எல்லாம்  மக்கள் போலிஸ் ஸ்டேஷனையும், ராணுவ பேரக்குகளையும் கொள்ளையடித்துச் சேர்த்தது. அப்படி கொள்ளையடித்தவர்கள் விற்றதை வாங்கியது. மேலும், அமெரிக்க ராணுவத்தை எதிர்க்க ஈரான் நாடு ஈராக்கிய மக்களுக்கு வழங்கிய துப்பாக்கிகளும் அடங்கும். எனவே ஊருக்குள் சண்டை எனில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு சாவது என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது.
ஊர்த்தலைவர்கள் உண்டு. ஆனால் நம்நாட்டில் இருந்த கிராம முன்சீப்புகள்போல இருந்தவர்கள் இன்றைக்கு நம்மூர் வி.ஏ.ஓ அளவுக்குக் கூட மதிக்கப்படுவதில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன். பணம் படைத்தவன் வைத்ததே சட்டம்.

நாகரிகம்

நாகரிகத்தைப் பொருத்தவரை பாக்தாத் இதர நகரங்களுடன் ஒப்பிடும்போது மிக ’முன்னேறிய’ நிலையில் உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு இளம் தலைமுறையினரிடம் அதிகம் தென்படுகிறது. மினி ஸ்கர்ட்டுகள் முதல், மைக்ரோ ஸ்கர்ட்டுகள் வரை அணிந்த பெண்களையும், ஹிஜாப் அணியாத பெண்களையும் கல்லூரி வாசல்களிலும் பெரிய பெரிய ஹோட்டல்களிலும் காணலாம். பெரியவர்களைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மேற்கத்திய உடையை அணிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். சதாம் காலத்தில் இப்படி உடையணிவது இயல்பாய் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படைவாதிகளின் கையில் நாடு சென்றதால் மீண்டும் இஸ்லாமிய கலாசாரம் வந்திருந்தது. இப்போது மீண்டும் நாகரிக கலாசாரம் தொடங்கி இருக்கிறது.
ஒருவருக்கொருவர் முகமன் கூறுவதில் பெரும் அன்பைப் பொழிகின்றனர். சலாம் அலைக்கும் என ஆரம்பித்து குடும்பம், தொழில் எல்லாம் நலமா எனக்கேட்டு, கன்னத்தோட கன்னம்வைத்து முத்தமிட்டு அன்பைத் தெரிவிக்கின்றனர். ஈராக்கியர்கள் தங்கள் மனைவியரை பிற ஆடவருக்கு அறிமுகம் செய்து வைப்பதில்லை.. சாலையில் சந்திக்க நேர்ந்தாலும் பெண்கள் கொஞ்சம் தூரமாக சென்று நின்றுகொள்ளுதலே மரபாக இருக்கிறது. வீடுகளுக்கு அழைத்து உணவிட்டாலும் ஆண்களே பரிமாறுவர். ஆண்கள் இருக்கும் இடத்திற்குப் பெண்கள் வருவது இல்லை. திரை மறைவில் இருந்து சலாம் அலைக்கும் மட்டும் குரலாக எழும்.
‘மெஸ்ஸையா’ என ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அழைக்கின்றனர். அவர்களின் கலாசாரமெல்லாம் கிட்டத்தட்ட மேற்குலகின் கலாசாரமே. கைகொடுத்தல், அருகில் அமர்ந்து பேசுதல், அவர்களே நமக்கு உணவு அளித்தல் என இயல்பாய் இருப்பர்.
பாக்தாத் குறித்து மேலும் சில தகவல்களை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

5 Replies to “ஈராக் – ஓர் அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.