அற்புத மானுக்கு முடிவில்லாத வேட்டை

svetlana-alexievich_Nobel_Prize_Literature

அவர் அப்படி ஒரு ஆளாக இல்லையென்றால், நான் ஒரு நாளும் மறுபடி மணம் செய்து கொண்டிருக்க மாட்டேன். என்னிடம் எல்லாம் இருந்தன: ஒரு குழந்தை, என் வேலை, என் சுதந்திரம். திடீரென்று அவர் அங்கே தோன்றினார்… அலங்கோலமானவராகவும், கிட்டத்தட்ட பார்வையே இல்லாதவராகவும்,இழுப்புடன் மூச்சுத் திணறலோடும் வந்தார்… இத்தனை சுமைகளோடுள்ள ஒருவரை நம் வாழ்வில் நுழைய விடுவது…ஸ்டாலினிய கட்டாயப் பாசறைகளில் பனிரெண்டு வருடங்கள் (கழித்திருந்தார்), சிறுவனாக அவரை இழுத்துப் போனார்கள், பதினாறு வயதில்… அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்பது என்ன ஒரு பாரம்… அந்த மாற்றங்கள். அதைச் சுதந்திரம் என்று நான் அழைக்க மாட்டேன். பின் அதுதான் என்ன? அதற்கு என்ன பொருள்? அவரிடம் எனக்கு இரக்கம் மட்டும்தானா இருந்தது? இல்லை. அது பிரேமையும்தான். சரியாகச் சொல்வதானால், அது காதல்தான். (அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டார், என்னிடம் அல்ல.) அவர் போய் ஏழு வருடங்கள் ஆகி விட்டன, இன்று இருக்கிற என்னை அவருக்கு ஒரு போதும் தெரிந்திருக்கவில்லை என்பதை நினைக்க எனக்கு நிஜமாக வருத்தமாக இருக்கிறது. இப்போது நான் அவரை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் எங்கே இருந்தாரோ அந்த அளவுக்கு நான் முதிர்ச்சி பெற்று இருக்கிறேன், ஆனால் அவர் கூட இல்லாமல். பார்…என்ன கதையை நான் சொல்கிறேன்… நான் மறுபடி பயப்படுகிறேன்…நான் நானாக இல்லாமல் போய்விடுவேனோ என்று பயப்படுகிறேன். சிலசமயம் அது என்னை அச்சுறுத்துகிறது… கடலில் இருப்பது போல…கரையிலிருந்து வெகுதூரம் நீந்திச் செல்வதை நான் மிக விரும்பியதுண்டு, ஒரு நாள் எனக்குப் பயம் மேலிடும்வரை- நான் தனியாக இருக்கிறேன், அது கீழே அங்கே ஆழமாக இருக்கிறது, எனக்கோ அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாது.
(நாங்கள் டீ குடிக்கிறோம். வேறெதைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கிறோம். நினைவுகள் திடீரெனத் துவங்குகின்றன, முன்னால் எப்படித் திடீரென்று நின்றனவோ அதே போல.)
ஓ, அந்த கடற்கரைக் காதல்கள்.  நாள்பட இராதவை.  மிகவுமே குறுகிய காலத்தவை. வாழ்வின் ஒரு சிறு முன் மாதிரி.  நீங்கள் எழிலுடன் துவங்கலாம், எழிலோடே விட்டும் செல்லலாம்- நமக்கு வாழ்வில் எதெல்லாம் சாத்தியப்படவில்லையோ,  எதற்கெல்லாம் நாம் ஆசைப்பட்டிருப்போமோ.  அதனால்தான் நாம் பயணங்கள் மீது மோகம் கொள்கிறோம்.  பாருங்கள்…. எனக்கு இரண்டு பின்னல்கள் உள்ளன, கடல் நீலநிறத்து வட்டங்கள் கொண்ட ஒரு உடை, குழந்தைகள் உலகு கடையில் நாங்கள் கிளம்புவதற்கு முன் தினம் வாங்கியது இருக்கிறது.  அந்தக் கடல்.. நான் கரையிலிருந்து வெகு தூரம் நீந்திப் போகிறேன். உலகத்தில் வேறெதையும் விட நீந்துவதையே நான் விரும்புகிறேன். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த வெள்ளை வேல மரத்தினடியில் உடற்பயிற்சிகளைச் செய்கிறேன்… ஒரு ஆண் நடந்து போகிறான். ஒரு நபர், அவ்வளவுதான், பார்வைக்கு மிகச் சாதாரணமாக இருப்பவன், இளைஞனும் அல்ல, என்னைப் பார்க்கிறான், ஏதோ காரணத்தால் குதூகலிக்கிறான். அங்கு நின்ற வண்ணம் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“இன்று இரவு உனக்குச் சில கவிதைகளைச் சொல்லிக் காட்டுகிறேன் என்றால் அது உனக்குப் பிடிக்குமா?’
“இருக்கலாம். ஆனால் இப்போது நான் கரையிலிருந்து வெகுதூரம் நீந்திப் போகவிருக்கிறேன்.”
“ஆகட்டும், நான் உனக்காக இங்கே காத்துக் கொண்டிருப்பேன்.”
அவன் மோசமாக  ஒப்பிக்கிறான், மூக்குக் கண்ணாடியை அடிக்கடி நேராக்கியபடி. ஆனாலும் மனதைத் தொடுகிறான். எனக்குப் புரிந்தது.. அவன் என்ன உணர்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அவனுடைய இடைவிடாத உடல் கோணல்கள், அந்தக் கண்ணாடி, அவனுடைய அதிர்வுகள்.. ஆனால் அவன் என்ன ஒப்பித்தான் என்பதை நான் சுத்தமாக மறந்து விட்டேன், அது ஏன் முக்கியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டேன். உணர்ச்சிகள் தனிப் பிறவிகள்- கஷ்டப்படுவது, காதல், மென்மையாக உணர்தல்.  அவற்றுக்குத் தமக்கென வாழ்வு இருக்கிறது; நாம் அவற்றை உணர்கிறோம், ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. நீங்கள் திடீரென்று வேறு ஒருவரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விடுகிறீர்கள், அதுபற்றி சிறிது கூட ஏதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களுக்கு எல்லாம் நடந்துவிடும், நீங்கள் இல்லாமலேயே. அதே நேரம்….”உன்னைச் சந்திப்பதை நான் எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா,” அவன் அடுத்த நாள் காலை சொல்கிறான். அவன் என்ன மாதிரி குரலில் அதைச் சொல்கிறான் என்றால், கேட்ட மாத்திரத்தில் அதை நான் நம்புகிறேன். நானென்னவோ அதைக் கேட்கச் சிறிதும் தயாராக இருக்கவில்லை என்ற போதும்.  உண்மையில் அதற்கு எதிர்மாறாகத்தான் இருந்தேன்.  ஆனால் என்னைச்  சுற்றி ஏதோ மாறிக் கொண்டிருந்தது, அது என்ன, எப்படி என்று எனக்குச் சொல்லி இருக்க முடியாது. என்ன நடந்தாலும் நான் அதை ஏற்கும் அமைதி என்னிடம் வந்திருந்தது. அது இன்னும் காதலாக இல்லை, நான் எளிதாக எதையோ உணர்ந்தேன்.. இதுதான் அந்த உணர்வு… என்னிடம் ஏதோ ஒரு பெரிய விஷயம் கொடுக்கப் பட இருக்கிறது என்பதாக உணர்ந்தேன்.  ஒரு நபர் பேசியதை இன்னொருவர் கேட்டிருக்கிறார். அவர் எப்படியோ வந்தடைந்து விட்டார். நான் கரையிலிருந்து வெகு தூரம் நீந்தினேன். நான் திரும்பி வந்தேன். அவன் காத்திருந்தான். மறுபடி சொல்கிறான், “உனக்கும் எனக்கும் இனி அருமையாக இருக்கப் போகிறது.” ஏதோ காரணத்தால் நான் அதை மறுபடி நம்புகிறேன். இங்கே பாருங்க… அவன் என்னை ஒவ்வொரு நாளும் கடலருகே சந்தித்தான்…. நாங்கள் ஷாம்பெய்ன் அருந்தினோம்: “இது சிவப்பு ஷாம்பெய்ன், ஆனால் விலையைப் பார்த்தால் நல்லதான ஷாம்பெய்ன் தான்.” எனக்கு அந்த வாக்கியம் பிடித்திருந்தது. (அவள் சிரிக்கிறாள்.) அவன் முட்டைகளைப் பொரித்தெடுக்கிறான்:” இந்த முட்டைப் பொரியலுக்கு எனக்கு ஒரு நல்ல பேரம் படிந்தது. ஒரு தடவையில் பத்து முட்டைகள் வாங்குகிறேன், ஒவ்வொரு தடவையும் இரண்டைச் சமைக்கிறேன், ஆனால் கடைசியில் எப்போதும் ஒரு முட்டை பாக்கி இருக்கும்.” நம்ப முடியாதபடி இனிமையான விஷயங்கள்.
எங்களைப் பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள், “ இது உன்னோட தாத்தாவா? இது உன்னோட அப்பாவா?’ நான் இந்த குட்டை ஆடையில் இருக்கிறேன். எனக்கு இருபத்தி எட்டு வயது ஆகிறது. … பின்னால்தான் அவன் கம்பீரமாக ஆகிறான். என்னோடு சேர்ந்து.  எதற்கு என்னை? நான் எல்லா நேரமும் மிகவுமே நம்பிக்கையற்றவளாக இருந்தேன்.  பணி செய். வேறு ஏதும் வழியில்லை. அல்லது துவங்கவே செய்யாதே. ஒரு ரஷ்யப் பெண் கஷ்டப்பட எப்போதும் தயாராக இருக்கிறாள். வேறென்ன செய்ய முடியும் அவளால்? நாம் நமது ஆண்களுக்கு, அவலட்சணமான, மகிழ்ச்சியில்லாத ஆண்களுக்கு ப் பழகிப் போய் விட்டோம். என் அம்மாவும் பாட்டியும் பழகிப் போன மாதிரி. நாம் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை; அது நமக்குத் தலைமுறையாகக் கடத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் மோசமான கனவுகள் காண்பவர்கள்….
“நான் உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.”
“என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்?”
“நானும் நீயும் எங்கோ போவோம் என்று விருப்பப்பட்டேன்.  ரொம்பத் தொலை தூரத்துக்கு.”
நீ என் கைகளைப் பற்றினாய். எனக்கு நீ அருகாமையில் இருப்பதைத் தவிர வேறொன்றும் தேவைப்படவில்லை. அப்படி ஒரு இளகலைத்தான் நான் உன்னைப் பார்க்க உணர்கிறேன் – உன்னைப் பார்ப்பதும், உன் அருகில் நடப்பதும் போதும்.
நானும் அவனும் பல மணிகள் சேர்ந்து கழித்தோம், குழந்தைத்தனமான மணிகள். நல்ல மனிதர்கள் எல்லாம் எப்போதும் குழந்தைகள் போலே இருக்கிறார்கள். குழந்தைத்தனமாக, எதுவும் செய்ய இயலாதவர்களாக.  நாம்தான் அவர்களைக் காக்க வேண்டும்.
“ஒருக்கால் நீயும் நானும் எங்கோ ஒரு தீவுக்குப் போய், மணலில் படுத்துக் கிடப்போமோ?”
இது எனக்கு நேர்ந்தது… ஆனால் பொதுவாக இது எப்படி இருக்க வேண்டும், அது எனக்குத் தெரியாது. இது ஒருவரோடு இப்படி, இன்னொருவரோடும் இப்படியே. சரி, எப்படி இருக்க வேண்டும் அது? யார் அதை அளக்க முடியும்? அளக்கும் அளவைகள்தான் எங்கே இருக்கின்றன? இது…மொத்த ரஷ்யப் பண்பாடுமே துரதிர்ஷ்டம்தான் சிறப்பான பாடசாலை என்ற உண்மையின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. நாங்கள் வளர்ந்தது அந்த நம்பிக்கையோடுதான். ஆனால் நான் சந்தோஷத்தை விரும்புபவள். … நான் இரவில் விழித்துக் கொள்கிறேன்: நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? பாருங்க… எனக்கு ஏதோ சங்கடமாக இருந்தது, அந்த இறுக்கம் என்னை ஏதோ செய்தது…. “உன் கழுத்து எப்போதுமே இறுகலாக இருக்கே,” அவன் குறிப்பிட்டான். ஆனால் நான் எப்படி அதை வளர்ப்பது, என் மனதிலிருந்து நீக்குவது? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதற்குள் விழுந்து கொண்டிருக்கிறேன்? அங்கே இருப்பது ஒரு அதல பாதாளம்….
அவன் முதலில் என்னை அச்சுறுத்தினான். … அவன் ஒரு ரொட்டிப் பைத்தியம். ரொட்டியைப் பார்த்த மாத்திரத்தில், அதைச் சாப்பிட ஆரம்பிப்பான், திட்டவட்டமாக. எவ்வளவானாலும் சாப்பிடுவான். ரொட்டியை எங்கும் விட்டுச் செல்ல முடியாது. அது நமது ரேஷன். ஆக, அவன் நிறுத்தாமல் சாப்பிடுவாம், எத்தனை ரொட்டி இருந்தாலும், அத்தனையையும் அவன் சாப்பிட்டு விடுவான். எனக்கு அது முதலில் புரியவில்லை…
அவர்கள் அவனை ஒளியைக் கொண்டு சித்திரவதை செய்தார்களாம்… ஒரு பையனை. கடவுளே.. பதினாறு வயதே ஆனவனை.. அவனை நாள் கணக்கில் தூங்க விட மாட்டார்களாம்.எனக்கு மேகங்கள் உயரே இருக்கையில், தலைக்கு மேலே மிக உயரத்தில் அவை மிதந்து போகையில். காலைக் காற்றில் இருக்கும் பிரகாசம் ரொம்பப் பிடிக்கும்.  ஆனால் அவனோ … ஒளியைப் பார்த்தால் ஜுரவேகம் கொள்வான்.
பள்ளிக் கூடத்தில் அவனை அடித்தார்கள், அவனுடைய நாற்காலியின் பின்பக்கம் சாக்கட்டியால் எழுதினார்கள்:”மக்களின் எதிரியோட பிள்ளை.” பள்ளியின் தலைமையாளர் இதைச் செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தார். … குழந்தைப் பருவ பயங்கள் அழிவதில்லை; சாகும் வரை ஒரு நபருள் அவை தங்கி விடுகின்றன. துன்பமான கணங்களில் அவை குதித்து வெளியே வருகின்றன.. துருத்தி நீள்வன… அதை அவனிடம் நான் உணர்ந்தேன்.
நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ரஷ்யப் பெண்கள் இந்த மாதிரி அபலைகளைக் கண்டெடுப்பதை மிக விரும்புகிறார்கள். என் பாட்டி இப்படி ஒரு நபரைக் காதலித்தாள், அவளுடைய பெற்றோர்கள் அவளை இன்னொருவருக்கு மணமுடித்தனர். அவள் எப்படி அந்த நபரை வெறுத்தாள். அப்படி மணந்து கொள்வதை எவ்வளவு வெறுத்தாள்! கடவுளே!  சர்ச்சில் பாதிரியார் அவளை அந்தக் கேள்வி கேட்கும்போது-உன் சுதந்திரமான விருப்பத்தோடு நீ மணந்து கொள்கிறாயா?-அவள் இல்லை என்று சொல்வதாக இருந்தாள். பாதிரியாரோ விபரமானவர், அவர் கேட்கவேண்டிய அந்தக் கேள்வியைக் கேட்காமல், அவர் சொன்னாராம்,”நீ அவரை அவமதிக்காதே. போரில் பனியில் தன் கால்களை உறைய விடும்படி ஆனவர் அவர்.” அதற்கப்புறம் வழியின்றி அவரை அவள் மணக்க வேண்டி வந்தது. அப்படித்தான் என் பாட்டிக்கு என் தாத்தா கிட்டினார், அவரைத் தன் மொத்த வாழ்விலும் அவள் காதலிக்கவில்லை. அதுதான் எங்கள் முழு வாழ்வின் குறுங்கதை. “அவரை அவமதிக்காதே. அவர் தன் கால்களைப் போரில் உறைய விட்டவர்.” என் அம்மாவின் கணவரும் போரில் இருந்தவர்தான், நாசமாகித் திரும்பி வந்தார். அப்படி ஒரு நபரோடு, ஏதேதோ  பாரங்களோடு வருபவரோடு, வாழ்வது ஒரு பெரும் வேலை, அதெல்லாம் பெண் தான் சுமக்க வேண்டி வருகிறது. யாரும் இல்லை! யாருமே இதை, வெற்றி பெற்றவர்களோடு வாழ்வது எத்தனை கஷ்டம் என்று, எழுதியதில்லை, நான் ஒரு போதும் அதைப் படித்ததுமில்லை. க்ளெப் தன் நாட்குறிப்புகளில் மிகச் சரியான ஒரு விஷயத்தைச் சொல்கிறார்: அந்தப் பாசறையில் அவருக்கு புரிந்தது ஒன்று, ரஷ்யாவில் ஒவ்வொரு இரண்டு பேரிலும் ஒரு நபர் இப்படிச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது அது, அப்பா கைது செய்யப்பட்டிருக்கிறதாலோ, கூட்டுப் பண்ணையின் நிலத்திலிருந்து ஒரு சோளக் கொண்டையைப் பறித்ததாலோ, வேலைக்கு வருவதில் பத்து நிமிடம் தாமதமாகியது என்பதாலோ, மற்றவர் மீது உளவு சொல்ல மறுத்ததாலோ, வெறுமனே வேடிக்கை என்பதற்காகவோ, அல்லது கருக்கலைப்பு செய்ததற்காகவோ…. நமது ஆண்கள் தியாகிகள், அவர்கள் எல்லாமே கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்- போராலோ அல்லது கட்டாய உழைப்புப் பாசறைகளாலோ. பலருக்குப் போர் முடிந்ததே இந்தப் பாசறைகளில்தான்; அணி அணிகளாகப் போர் முனையிலிருந்து நேரே சைபீரியப் பாசறைக்கு அனுப்பப் பட்டிருந்தார்கள். வெற்றி பெற்ற உடனேயே. வென்றவர்களின் அணிகள். அதுதான் நமக்கு வழக்கமான நிலை, யாருடனாவது போர் புரிந்த வண்ணமே இருக்க வேண்டும். பெண் தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவள் தன் ஆணை சிறிதளவு நாயகன் போல நடத்துவாள், சிறிதளவு குழந்தையைப் போல. அவனைக் காப்பாற்றுவாள். இன்று வரை இதுதான்…. சோவியத் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. இப்போது நாம் இந்தப் பெரும் சரிவுக்குப் பலியானவர்களைப் பார்க்கிறோம். உங்களைச் சுற்றிப் பாருங்கள், ஓடுகிற ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள், எத்தனை பேர் ஓரமாய் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.  ராணுவத்தில் ஆள் குறைப்பு நடக்கிறது, தொழிற்சாலைகள் சும்மா கிடக்கின்றன…. எஞ்சினீயர்களும், டாக்டர்களும் சந்தையில் நின்று காலுறைகளை,…. வாழைப்பழங்களை…. விற்கிறார்கள்…. எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும், ஆனால் சிறைச்சாலைகளே, கட்டாயப் பாசறைகளேதான் அவர். ரஷ்யாவில் போர் என்பது நிரந்தர பேசுபொருள்; நாம் ஒரு போதும் முடிவுரைக்குப் போய்ச் சேர்வதே இல்லை. பாருங்க… (அவள் நிறுத்துகிறாள்.)  நாம கொஞ்சம் இடைவெளி விடுவோம். கொஞ்சம் டீயைச் சூடுபண்ணுகிறேன். அப்புறம் நாம் தொடரலாம். நான் இந்தப் பயணத்தை முடிக்கணும், ஆரம்பத்திலேருந்து முடியற வரை. என்னுடைய அனுபவம்கிற சிறிய கோப்பையை வைத்துக் கொண்டு.
(அரை மணி கழித்து எங்கள் பேச்சு தொடர்கிறது.)
ஒரு வருஷம் கழிந்திருக்கும், இல்லே கொஞ்சம் கூடுதலா இருக்கலாம். அவர் என் வீட்டிற்கு என்னைப் பார்க்க வருவதாக இருந்தது, நான் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தேன், என் அம்மா பரவாயில்லை, ஆனால் என் மகள்..பாருங்க, அவள் அத்தனை… அவள் என்னவென்றால்… அவள் அவரை எப்படி வரவேற்பாள் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியவில்லை.  ஓ, என்னோட அன்கா இருக்கிறாளே… (அவள்  சிறிது குலுங்கிச் சிரிக்கிறாள்) அவள் எல்லாவற்றையும் பிடித்துத் தன் காதருகில் கொண்டு வைப்பாள், அவை எப்படி ஒலிக்கின்றன என்று பார்க்க! நான் அவளுக்கு இசையை ரொம்ப சீக்கிரமே துவக்கி வைத்து இருந்தேன், ஆனால் அவள் ரொம்பவே பிடிவாதமான குழந்தை, ஏதாவது இசைத் தட்டை நான் ஒலிக்க வைத்தால் அவள் உடனே திரும்பிக் கொண்டு போய் விடுவாள். அவளுக்கு யாருடைய இசையும் பிடிக்காது- ஒரு இசை அமைப்பாளரின் லட்சணம் இது. தன்னுள் என்ன ஒலிக்கிறதோ அதில்தான் அவளுக்கு ருசி. சரியா, க்ளெப் வந்து சேர்ந்தார், பாருங்க, ரொம்ப கிலேசத்தோட இருந்தார்.  அவர் மோசமாகத் தலை முடியை வெட்டி இருந்தார், ரொம்ப ஒட்ட வெட்டி இருந்தார், பார்க்கவும் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை. அவர் இசைத் தட்டுகளைக் கொணர்ந்திருந்தார். அவர் தான் எப்படி நடந்து வருகையில் இந்த இசைத் தட்டுகளை வாங்கினார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அன்காவுக்கு நல்ல கேட்கும் செவி. அவள் சொற்களைக் கேட்பதில்லை- பேச்சின் தொனி ஏற்ற இறக்கங்களைத்தான் கேட்கிறாள். அவள் இசைத் தட்டுகள் என்பதை உடனே புரிந்து கொண்டாள். “எவ்ளோ அழகு லெகல்டு எல்லாம்.” அப்படித்தான் அவர்களிடையே பாசம் தொடங்கியது. கொஞ்ச நாள் கழித்து அவள் என்னை மடக்கினாள், “ நான் அவரை  அப்பா என்று எப்படிக் கூப்பிடாமல் இருக்க முடியும்?” அவள் தன்னை விரும்புமாறு செய்ய அவர் முயலவில்லை, அவருக்கு நிஜமாகவே ஈடுபாடு இருந்தது. அவர்கள் இருவரும் பரஸ்பரம் காட்டிய அன்பு அவர்கள் என்னிடம் காட்டிய அன்பை விட அதிகம். இருவருமே. அவரும் அவளும். அது சரிதான், என் நினைப்பில். எனக்கு அதில் ஏதும் மனக் குறை இருக்கவில்லை. எனக்கு வேறொரு பாத்திரம் இருந்தது செயல்பட… அவர் அவளிடம் கேட்கிறார், “ அன்கா, நீ திக்குகிறாயா என்ன?” “ நான் இப்ப மோசமாத் திக்குகிறேன். ஆனா முன்னே ரொம்ப நல்லாத் திக்கினேன்.”அவர்கள் ஒரு போதும் சலிப்புக்கு ஆளாகவே இல்லை. அதனால்தான்: “நான் அவரை  அப்பா என்று எப்படிக் கூப்பிடாமல் இருக்க முடியும்?” நாங்கள் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறோம். க்ளெப் சிகரெட் வாங்கப் போயிருந்தவர், திரும்பி வருகிறார். “பெண்களா, நாம எதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்?” நான் அவளைப் பார்த்து கண்ணடிக்கிறேன் – எந்தச் சூழ்நிலையிலும் அது குறைந்தது வேடிக்கையாக இருக்காது.  ஆனால் அவள் சொல்கிறாள்:”அப்ப நீங்களே சொல்லுங்க அவர்கிட்டே.” நான் என்ன செய்ய? எனக்கு என்ன வழி இருக்கு அப்ப? அவரிடம் நான் ஒத்துக் கொண்டேன், அவள் வாய் தவறி அவரை அப்பா என்று கூப்பிட்டு விடுவோமோ என்று தயக்கப்படுகிறாள் என்று. அவர் சொல்கிறார். “இது சங்கடமானதுதான் இல்லையா, ஆனா, உனக்கு நிஜம்மா பிடிச்சா, அப்படியே என்னை கூப்பிடேன்.””நீங்க கவனமா இருக்கணும்.” என்னோட அந்த அதிசயக் காதுக்காரி சொல்கிறாள் ரொம்பத் தீவிரமாக, “எனக்கு இன்னொரு அப்பா இருக்கார், ஆமாம், ஆனால் எனக்கு அவரைப் பிடிக்காது, அம்மாவுக்கும் அவர் மேலே பிரியம் கிடையாது.” அவளும்  நானும் எப்போதுமே இப்படித்தான்.  நாங்க பழசை எல்லாம் எரிச்சுடுவோம். வீட்டுக்குத் திரும்புகிற வழியில் அவர் ஏற்கனவே அப்பா ஆகியாச்சு. அவள் ஓடினாள், கத்திக் கொண்டே. “அப்பா! அப்பா!” அடுத்த நாள் கிண்டர் கார்ட்டன் வகுப்பில் அவள் எல்லாரிடமும் அறிவித்து விட்டா
ள். “ என் அப்பா எனக்கு எப்படிப் படிக்கிறதுன்னு சொல்லிக் கொடுக்கிறார்.””அது யாரும்மா உன் அப்பா?””அவர் பேரு க்ளெப்.” அடுத்தநாள் அவளோட குட்டி நண்பி வீட்டிலிருந்து இந்தச் செய்தியைக் கொணர்ந்தாள்: “அன்கா, நீ பொய் சொல்றே. உனக்கு அப்பா இல்லை. அது ஒண்ணும் உன்னோட நிஜ அப்பா இல்லெ.” “கிடையாது, அந்த இன்னொருத்தர்தான்  என்னோட நிஜ அப்பா இல்லே. இவர்தான் என் அப்பா.” அன்கா கிட்டே வாதம் செய்வது பயனற்றது. அவர் இப்போது ‘அப்பா’ ஆகியாச்சு. ஆனால் நான் என்ன ஆவது? நான் இன்னும் அவருடைய மனைவி ஆகவில்லை…..
எனக்கு விடுமுறைக் காலம். நான் மறுபடி வெளியூருக்குப் போகவிருக்கிறேன். அவர் நிறைய நேரம் கையசைத்தபடி, ரயிலோடு ஓடி வருகிறார். ஆனால் ரயிலிலேயே ஒரு புதுப் பிரேமை துவங்குகிறது. கார்கோவிலிருந்து இரண்டு இளம் பொறியாளர்கள் சோச்சிக்குப் பயணம் போகிறார்கள், என்னைப் போலவே. கடவுளே! நான் எவ்வளவு இளமையானவளாய் இருக்கிறேன். அந்தக் கடல். அந்தச் சூரியன். நாங்கள் நீச்சலடிக்கிறோம், முத்தமிடுகிறோம், நாட்டியமாடுகிறோம். எனக்கு இதெல்லாம் சுலபமாகவும், எளிமையாகவும் இருக்கிறது, ஏனெனில் என் உலகம் எளியது. ஒரு சா-சா-சா வும் ஒரு கா-ஸா-சோக் கும் இருந்தால் போதும், நான் எனக்கு இயல்பான இடத்தில் இருக்கிறேன். அவர்கள் என்னை மிக விரும்புகிறார்கள், என்னை மலைமீது இரண்டு மணி நேரம் தூக்கித் திரிகிறார்கள். இளைஞர்களின் தசைகள். வாலிபச் சிரிப்பு. காலை வரை காட்டுக் கணப்பு. நான் கனவு காண்கிறேன்: மேல்தளம் திறக்கிறது…. வானம்… நான் க்ளெப்பைப் பார்க்கிறேன். நானும் அவரும் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம், கரையோரமாக நடக்கிறோம், அங்கே தெரிவது அலைகளால் மிளிர வைக்கப்பட்ட கடல்நாரையில்லை, ஆனால்  மிகக் கூர்மையான பாறைகள், மெல்லிய, கருக்கான விளிம்புடன் கூர்மையானவை, ஆணிகளைப் போல. நான் காலணிகள் அணிந்திருக்கிறேன், ஆனால் அவர் வெறுங்காலோடு இருக்கிறார். “வெறுங்காலில்,” அவர் விளக்குகிறார், “ நாம் கூடுதலாக உணர்கிறோம்.” “நீங்கள் கூடுதலாக உணர்வதில்லை, கூடுதலாக காயப்படுவீர்கள். நாம் மாறலாம்.” “உனக்கு என்ன ஆச்சு? அப்புறம் என்னால் பறந்து செல்ல முடியாது?”அதைச் சொன்ன பிறகு அவர் உயர எழுந்து பறக்கிறார், ஒரு இறந்து போன மனிதன் போல கைகளைக் குறுக்காகக் கட்டி இருக்கிறார், அந்த நிலையிலேயே பறக்கிறார், காற்றில் எடுத்துக் கொண்டு போகப்படுகிறார். இப்போது கூட, அவரை ஒரு கனவில் பார்த்தால், அவர் எப்போதும் பறப்பதாகத்தான் இருக்கிறது. ஏதோ காரணத்தால் அவர் கைகள் குறுக்காகக் கட்டிக்கொண்டு இருப்பவராகத்தான் தெரிகிறார், இறந்து போனவர் போல. இறக்கைகள் என்று ஏதும் இருப்பதில்லை.
கடவுளே, நான் பித்தாக இருக்கிறேன். இந்தக் கதையை எல்லாம் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இருந்தாலும், இந்த வாழ்வில் நான் சந்தோஷமாக இருந்தது அப்படி இல்லாததை விடக் கூடுதல்தான். அவர் போன பிறகும் கூட. நான் அந்தக் கல்லறைக்குப் போனேன், இப்போது எனக்கு நினைவு வருகிறது, நான் நடக்கிறேன்… அவர் இங்கேதான் எங்கேயோ இருக்கிறார், அப்படி ஒரு உயர்நிலை சந்தோஷத்தில்- நான் உரக்கக் கூவ விரும்புகிறேன். ..என் கடவுளே. (தனக்குள். முனகுகிறாள்.) நான் பைத்தியம்தான். … நாம் சாவோடு ஒண்டிக்கு ஒண்டியாக விடப்படுகிறோம். அவர் பல முறை இறந்தார்; 16 வயதிலிருந்து தன் சாவை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். “நாளைக்கு நான் வெறும் தூசியாகி இருப்பேன், நீ என்னைக் கண்டு பிடிக்க முடியாது.” நாம் முக்கியமான விஷயத்துக்கு அருகில் வந்திருக்கிறோம். .. காதலில் நான் மெள்ள மெள்ள வாழத் துவங்குகிறேன், மெள்ள வாழ்கிறேன்… கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் கொண்டு..  நமக்கு இந்தக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொள்ள. நாம் தொடர்களை விரும்புகிறவர்கள்.
விடுமுறை முடிந்தது, நானும் திரும்பி வந்தேன். அந்தப் பொறியாளர்கள் என்னை மாஸ்கோ வரை கொண்டு வந்து விட்டார்கள். எனக்கு க்ளெப்பிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி இருந்தது. அவரைப் பார்க்கப் போனேன். அவரது மேஜையில் ஒரு வாரப் பத்திரிகை பூராவும் கிறுக்கப்பட்டுக் கிடந்தது, சுவர்க்காகிதம் எல்லாம் எழுதப்பட்டிருந்தது, அவர் படிக்கிற செய்தித்தாள்கள் கூட எழுதப்பட்டிருந்தன. எல்லா இடத்திலும் மூன்றே எழுத்துகள்: ஆ, எ, மு.  முதலெழுத்து வடிவிலும், இதர இட எழுத்துகளிலும், அச்செழுத்தாகவும், கையெழுத்தாகவும்.  நான் அவரைக் கேட்டேன், “இது என்ன?” அவர் புதிரை விடுவிக்கிறார்: “ஆனால் எல்லாம் முடிந்ததா?” எல்லா இடங்களிலும் கேள்விக் குறிகள்.. சாவிகளைப் போல. ஆக நாங்கள் பிரியப் போகிறோம் என்பதாகத் தெரிகிறது, இதை நாங்கள் அன்காவுக்கு எப்படியோ விளக்க வேண்டி இருக்கும். நாங்கள் அவளை அழைத்து வரப் போனோம், அவளோ கட்டடத்தை விட்டுப் போகுமுன் படம் வரைய வேண்டுமென்று அடம் பிடிக்கிறாள். ஆனால் அவள் விருப்பம் நிறைவேறவில்லை, அதனால் காரில் அமர்ந்து விம்முகிறாள். அவருக்கு அவளுடைய கிறுக்குத் தனம் பழகி இருந்தது; அது திறமைக்கு ஒரு சான்று என நினைக்கிறார். அது ஒரு குடும்பத்துக் காட்சியாக இருந்தது: அன்கா அழுகிறாள், அவர் அவளுக்கு எதையோ விளக்குகிறார், நான் இருவருக்கும் இடையில் இருக்கிறேன். அவர் பார்க்கிறார், பார்க்கிறார், என்னையே பார்க்கிறார். (அவள் சற்று இடைவெளி விடுகிறாள்.) நானும் உணர்கிறேன், அவர் எத்தனை கடுமையான தனிமை பீடித்த மனிதன் என்று. (அவள் நிறுத்துகிறாள்.) அவரை நான் தாண்டிச் சென்று விடவில்லை என்பதுதான் எத்தனை மகிழ்ச்சிகரமான நிகழ்வு. என்ன ஒரு சந்தோஷம் அதில்! நாங்கள் மணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. ஏற்கனவே இரண்டு முறை மணம் புரிந்து இருந்ததால் (1) அவருக்கு அச்சம். பெண்கள் அவருக்குத் துரோகம் செய்திருந்தனர். அவரிடம் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டது, அது அவர்கள் குறை இல்லை. நான் அவரைத் தாண்டிச் செல்லவில்லை…. அதனால் நான்… அவர் எனக்கு ஒரு முழு வாழ்வையே கொடுத்தார்.
அவரைக் கேள்விகளுக்குட்படுத்துவதை அவர் விரும்பவில்லை. அபூர்வமாகத்தான் தன்னைத் திறந்து காட்டினார், ஒருக்கால் பழையதைப் பற்றிப் பேசினால் அதில் தற்பெருமை கலந்து இருப்பார், அதை நகைச்சுவையாக்குவது போல, ஏதாவது கட்டாய உழைப்பு முகாமிலிருந்துதான் இருக்கும், வேறு தீவிரமான எதையெல்லாமோ, அமைப்பில் வேறேதோ தளத்தில் இருப்பதை, மறைப்பதாக இருக்கும். உதாரணமாக, அவர் எப்போதும் சொல்வது இது, ”என்னுடைய சிறு சுதந்திரம்” , அது “சுதந்திரம்” என்பதற்குப் பதிலாக வரும். “மேலும் அங்கே என் சிறு சுதந்திரம்”.  ஏதாவது அபூர்வமான மனநிலையில்…. அவர் அத்தனை ருசியான கதைகளைச் சொல்வார்.  என்ன ஒரு சந்தோஷங்களை திரும்பி வருகையில் அவர் கொண்டு வந்தார் என்று என்னால் அதை வைத்துச் சொல்ல முடிந்தது. ஒரு சமயம் அவர் எப்படிச் சில டயர் துண்டுகளைக் கண்டெடுத்தார், அவற்றைத் தன் மென் தோல் காலணிகளில் கட்டிக் கொண்டார், அவர்களுக்கு ஒரு நீண்ட தூர கட்டாய நடைப்பயணம் இருந்தது, இந்த டயர் துண்டுகளிருந்தது அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.  ஒரு தடவை அவர்களுக்கு ஒரு சிறு பை நிறைய உருளைக் கிழங்குகள் கிட்டி இருண்டன, அவருடைய ஏதோ ஒரு சிறிய சுதந்திரப்போதில், எங்கோ வேலை செய்து கொண்டிருந்தபோது, யாரோ அவர்களுக்கு ஒரு பெரிய மாமிசத் துண்டைக் கொடுத்தார்களாம். அன்று இரவு பாய்லர் அறையில் அவர்கள் சூப் தயாரித்தார்களாம்: “ உனக்குத் தெரியுமா, அது எத்தனை ருசியாக இருந்தது என்று! அற்புதமாக இருந்தது!” அவரை விடுவித்தபோது அவருடைய அப்பாவுக்காக அவர்கள் ஒரு நஷ்ட ஈடு கொடுத்தார்கள், பிறகு சொன்னார்கள்: ‘உன் வீட்டிற்கும், உன் மரச் சாமான்களுக்கும் நாங்கள் ஈடு கொடுக்க வேண்டும்…” அது நிறையப் பணம். அவர் ஒரு புது சூட், புதுச் சட்டை, புதுக் காலணிகள் எல்லாம் வாங்கினார், பிறகு ஒரு காமிரா வாங்கினார்,  அந்த நேஷனல் கட்டடத்தில் ஒரு உணவு விடுதிக்குப் போய் மிகச் சுவையான உணவு வகைகளை த் தருவித்துச் சாப்பிட்டார், அவர்களுடைய பிரசித்தி பெற்ற டொர்ட்டெ என்கிற இனிப்பு வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பிராண்டியும் காஃபியும் வாங்கி அருந்தினார். இறுதியில், முட்ட முட்ட எல்லாம் சாப்பிட்ட பிறகு யாரையோ கூப்பிட்டு இவற்றையெல்லாம் சாப்பிட்டதை, தன் வாழ்வில் மிக்க மகிழ்வான அந்தக் கணத்தை ஒரு ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். ”அங்கு வாழ்ந்த அடுக்ககத்துக்குத் திரும்பிப் போனேன், பின்னே நோக்கி யோசித்தேன் – அப்போது நான் சிறிதும் மகிழ்ச்சியை அடையவில்லை என்று உணர்வதை அறிந்து கொண்டேன். அந்த சூட், அந்தக் காமிரா. இதெல்லாம் ஏன் சந்தோஷம் தரவில்லை? அப்போது அந்த டயர் துண்டுகள் நினைவு வந்தன, அந்த பாய்லர் அறையில் தயாரித்த சூப் நினைவு வந்தது. நிஜமாகச் சொன்னால் அதுதான் சந்தோஷம்.” நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயன்றோம். பாருங்க…. இந்த சந்தோஷம்ங்கிறது எங்கே இருக்கிறது? அவர் அந்த முகாமை வேறெதற்குப் பதிலாகவும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்.  பதினாறு வயதிலிருந்து, சுமாராக முப்பது வயது வரை அவருக்கு வேறு வாழ்க்கையே தெரிந்திருக்கவில்லை, சிறைப்படாமல் இருப்பதை யோசிக்கச் சொன்னால் அவர் மிகவும் அச்சப்படுவார். “முகாம்களில் அடைக்கப்படாமல் இருந்தால், நீங்கள் என்ன ஆகியிருப்பீர்கள்?” என்று நான் கேட்டால், அவர் சொல்லும் பதில் இப்படி, “இருப்பதற்குள் ரொம்ப பகட்டான  ஒரு சிவப்பு ரேஸ்காரை ஓட்டிக் கொண்டிருக்கும் காவாலிப் பயலாக இருந்திருப்பேன்.” முகாமில் இருந்தவர்கள் மிக அரிதாகவே மறுபடி கூடுவார்கள். ஏதோ அவர்களைத் தடுத்தது. என்னது அது? என்ன ஆயிற்று என்பதை ஒருவர் மற்றவர் கண்களில்  அவர்களால் தடயமாகப் பார்க்க முடிந்தது; அங்கு அடைந்த அவமானங்கள் எல்லா
் தடையாகி விட்டிருந்தன. அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு. பழைய முகாம் வாசிகள் மிக அரிதாகவே எங்கள் வீட்டுக்கு வந்தனர், அவரும் அவர்களைத் தேடிப் போனதில்லை.
அவரைத் திருடர்கள் நடுவே வீசி இருந்தனர். .. ஒரு சிறுவனை…. அங்கே அவருக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தன் அவமானங்களைப் பற்றி ஒரு பெண் பேசக் கூடும், ஆனால் ஒரு ஆண் அப்படிச் செய்வதில்லை. ஒரு பெண்ணால் அப்படிப் பேச முடிவதற்குக் காரணம், வன்முறை என்பது அவளுடைய உடற்கூறின் ஒரு பகுதி, பாலுறவு என்ற செயலிலேயே அது இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவள் வாழ்வைப்  புதிதாகத் துவங்குகிறாள். அந்த சுழற்சிகள்… இயற்கையே அவளுக்கு உதவுகிறது.
போஷாக்கற்ற நிலைக்கு உதாரணமாக இருவர். அடுக்குப் படுக்கையில் தன் இடத்தில் அவர் உடல் முழுதும் கட்டிகளோடு படுத்திருந்தார், சீழில் ஊறிய உடல். அவர் இறந்திருக்க வேண்டும், ஆனால் என்ன காரணத்தாலோ அவர் இறக்கவில்லை. அவருக்கு அடுத்துப் படுத்திருந்தவன் இறந்த போது, இறந்தவனைச் சுவரை நோக்கித் திருப்பிப் படுக்க வைத்தாராம். அப்படிக் கிடந்த உடல் அருகில் மூன்று நாட்கள் உறங்கி இருக்கிறார்.  “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா?” “ஆமாம்.” அது அவருக்கு இரட்டை ரேஷனாக ரொட்டியைக் கொடுத்தது. அந்தச் செயலின் பயங்கரம் அவருக்கு அத்தனை தீவிரமாக உறைத்ததால், எதார்த்தத்தோடு அவருக்கு இருந்த உறவு அற்றுப் போயிருந்தது, பிறகு சாவு அவரைப் பயமுறுத்தவில்லை. அது குளிர் காலம். வெளியில் வரிசையாக பிணங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பெரும்பாலும் ஆண்களின் உடல்கள்.
அடுக்குகளில் மேல் தளத்தில் அவர் வீட்டுக்குத் திரும்பினார். ரயிலுக்கு ஒரு வாரம் ஆகியது. பகலில் அவர் கீழே இறங்கி வரவேயில்லை, கழிப்பறைக்கு இரவில்தான் சென்றார். அவருக்குப் பயமாக இருந்தது. அவருடைய பயணத் தோழர்கள் எதையாவது அவருக்குக் கொடுத்தால் – அவருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தால் அவர் முகாமில் இருந்து வருபவர் என்று அவர்களுக்குத் தெரிந்து விடும்.
அவர் கடுமையான விதத்தில் தனிமை பீடித்தவர்.
இப்போது அவர் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்லிக் கொண்டார், “ எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.” ஒரு சாதாரணக் குடும்ப வாழ்வு இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு நாளும் அவருக்குப் பிரமிப்பு எழுந்தது, அதிலெல்லாம் அவர் மிக்க பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் பயம்தான்… அந்த பயம் அவரை உறிஞ்சிக் காய வைத்துக் கொண்டிருந்தது, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது. இரவில் ஒரேயடியாக வியர்த்தபடி அவர் திடீரென்று விழிப்பார், தன் புத்தகத்தை அவரால் முடிக்க முடியாதோ என்று , தன் குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடியாது என்று, நான் அவரை விட்டுப் போய் விடுவேன் என்று, பயம் பீடித்திருக்கும்.  முதலில் பயம், பிறகு தன் பயத்தைக் கண்டு வெட்கம் பீடிக்கும். “க்ளெப், உங்களுக்காக நீங்கள் என்னைப் பாலே நடனம் ஆடச் சொன்னால் கூட நான் ஆடுவேன்.  உங்களுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.”முகாம்களில் அவர் தப்பிப் பிழைத்து வந்தார், ஆனால் சாதாரண வாழ்வில்… ஒரு சாதாரண தெருக்காவல்காரர் அவரை நிறுத்தி விசாரித்தால், அவருக்கு நெஞ்சடைப்பே வந்து விடும். “ அங்கே நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்து வந்தீர்கள்?””ஒரு சிறுவன் என்று எல்லாரும் என்னிடம் அன்பு காட்டினார்கள்.” நம்மை எது காப்பாற்றுகிறது என்றால், நமக்குக் கிட்டியதில் எத்தனை அன்பை நாம் உள்வாங்குகிறோம் என்பதுதான், அதுதான் நம்முடைய வலுவின் கிடங்கு. நான் அவருடைய செவிலியாக இருந்தேன்… தாதி…. நடிகை.  அப்போதுதான் அவர் தானிருந்த விதத்தைக் காணாமல் இருந்திருக்க முடியும், தன்னுடைய பயத்தை அவரே அறியாமல் இருந்திருக்க முடியும். அல்லால் அவர் தன் மீது சிறிதும் அன்பு பாராட்டி இருக்க முடியாது. அப்போதுதான் எனக்கு அதெல்லாம் புரிந்திருந்தது என்பதை அவர் அறியாமல் இருக்க முடியும். . அன்பு என்பது ஒரு ஊட்டச் சத்து, அதில்லாமல் ஒரு மனிதர் உயிர் தரிக்க முடியாது, அவருடைய ரத்தம் சுண்டி விடும், இதயம் நின்று விடும்.  ஓ, இதற்காக நான் எனக்குள்ளே எத்தனை தோண்டி எடுக்க வேண்டி இருந்தது. உயிரோடு வாழ்வது என்பது ஒரு நூறு மீட்டர் பந்தயத்தில் ஓடுவது போன்றது. (அவர் நிறுத்தி விட்டு, தன் யோசனைகளின் தாளத்துடன் சிறிது ஆடுகிறார்.) அவர் சாவதற்குச் சற்று முன் என்னிடம் என்ன கேட்டார் தெரியுமா? அவருடைய ஒரே வேண்டுகோள்: “ என் புதைகுழிக் கல்லில் இதைப் பொறி. நான் மகிழ்ச்சியாக இருந்த மனிதன். நான் தப்பித்து ஜீவித்திருந்தேன், அன்பு பாராட்டினேன், ஒரு புத்தகம் எழுதினேன், எனக்கு ஒரு மகள் இருந்தாள், இத்தனையும் நான் சாதித்தேன்.  என் கடவுளே, நான் எத்தனை சந்தோஷமான மனிதனாக இருக்கிறேன்.” இதைக் கேட்கிற அல்லது படிக்கிற ஒரு அன்னியனுக்கு இதை நம்பவே முடியாது. மனநோயாளி என்று சொல்வாராக இருக்கும். ஆனால் அவர் ஒரு சந்தோஷமான மனிதனே! எனக்கு அத்தனை அள்ளிக் கொடுத்தவர். நான் மாறிய மனுஷியானேன்…. நம் வாழ்க்கைதான் எத்தனை சிறிய விஷயம். எண்பது, ஒரு நூறு, இரு நூறு வருடங்கள் கூட எனக்குப் போதாதவை. என் அம்மா அந்தத் தோட்டத்தைப் பார்த்ததை என்னால் பார்க்க முடிகிறது.  அவள் அதை விட்டுப் போக விரும்பியதே இல்லை. யாருமே அதை விட்டுப் போக விரும்புவதில்லை. …நான் வருந்துகிறேன், எவ்வளவு துக்கப்படுகிறேன்… இன்று நான் இருக்கும் விதத்தை அவர் அறியவேயில்லை என்பதை நினைக்கையில். நான் அவரைப் புரிந்து கொண்டு இருக்கிறேன். இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். பாருங்க…. அவர் கொஞ்சம், சிறிதே போல் என்னிடம் அச்சம் கொண்டிருந்தார். என் ஏதோ ஒரு பெண் தன்மையைப் பார்த்து அச்சம் கொண்டிருந்தார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வார்: “ஞாபகம் வைத்துக் கொள், நான் மோசமாக இருக்கையில், தனியாக விடப்படுவதையே விரும்புகிறேன்.” ஆனால்… எ
்னால் அப்படி விட முடியவில்லை…. எனக்கு அவரைத் தொடர்ந்து கவனிக்க வே ண்டியிருந்தது. (அவள்  நிறுத்தி எதையோ தீர யோசித்துப் பார்க்க முயன்றாள்.) நாம் சாவதற்கு முன் நம் வாழ்விலிருந்து எல்லாக் கேட்டையும் ஒழித்து விட்டு, சாவைப் போன்ற சுத்தத்தை அதற்குக் கொணர முடியாது. அப்போதுதான் ஒரு மனிதன் தன்னைப் போல அழகனாகிறான். வாழ்வின் அப்படி ஒரு சாரத்துக்கு எல்லாவற்றையும் உடைத்துப் போய் அடைவது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. நாம் அதற்கு அருகில் வரக் கூடும்.
அவருக்குப் புற்று நோய் என்று தெரிய வந்தபோது, நான் இரவெல்லாம் கண்ணீரில் ஊறிக் கிடந்தேன், காலை வந்ததும், ஓடோடிப் போய் மருத்துவ மனையில் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஜன்னல் கட்டையில் அமர்ந்திருந்தார், காமாலை பீடித்திருந்தது, ஆனால் மிக்க மகிழ்வோடிருந்தார். அவர் வாழ்வில் ஏதாவது மாறுகையில், எப்போதுமே அவர் மிகச் சந்தோஷமாக இருப்பார். முகாமிலிருக்கையிலோ,  வெளியேற்றப்பட்ட அகதி நிலையிலோ, அவரது விடுதலை துவங்கிய போதோ, இப்போதோ அது வேறேதோவாக இருந்தது. சாவும் விடுதலைதானே… ஒரு மாறுதல் என்ற அளவில்.
“நான் சாகப் போகிறேன் என்று பயப்படுகிறாயா?”
“ஆமாம்.”
“ஆமாம். முதலாவதாக, நான் உனக்கு ஒருபோதும் எந்த சத்தியமும் பண்ணவில்லை. இரண்டாவதாக, அது நம் வீட்டில்தான் இருக்கும், அதுவும் உடனடியாக நடக்கப் போவதில்லை.”
”இது நிஜமா?”
எப்போதும் போலவே, நான் அவரை நம்பினேன். என் கண்ணீரை எல்லாம் துடைத்துக் கொண்டேன், நான் அவருக்கு மறுபடி உதவ வேண்டும் என்று, என்னை நானே நம்ப வைத்துக் கொண்டேன்.  அப்புறம் நான் அழவில்லை. காலைகளில் நான் மருத்துவப் பிரிவுக்கு வருவேன், எங்கள் வாழ்க்கை துவங்கும், நாங்கள் வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை இப்போது மருத்துவ மனையில் நடந்தது. அந்தப் புற்று நோய் சிகிச்சை மையத்தில் அரை வருடம் இருந்தோம்.
என்னால் நினைவு கொள்ள முடியவில்லை… நாங்கள் அத்தனை பேசினோம், முன் எப்போதையும் விடப் பேசினோம், பல நாட்கள் தொடர்ந்து… ஆனால் இப்போது சில துண்டுப் பகுதிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.. தாவிப் பிடித்த சில பகுதிகள்.
யார் அவரைக் காட்டிக் கொடுத்தவர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடைய ’இளம் முன்னோடிகள் வீட்டில்’ ஒரு பையன். அவன் ஒரு கடிதம் எழுதி இருந்தான். அது அவனே செய்ததாக இருக்கலாம், அல்லது வேறு யாராவது அவனை அப்படி எழுத வைத்தார்களோ என்னவோ. க்ளெப் காம்ரேட் ஸ்டாலின் மீது வசவு பொழிந்தான், மக்களின் எதிரியான தன் அப்பாவை நியாயப்படுத்தினான் என்று… அவரை விசாரித்தவர் இந்தக் கடிதத்தை அவரிடம் காட்டி இருந்தார். தன் வாழ்நாள் பூராவும் க்ளெப் இது தனக்குத் தெரிந்து விட்டது என்பது காட்டிக் கொடுத்தவருக்குத் தெரிந்து விடுமோ என்று பயப்பட்டார். அவரைப் பற்றித் தன் புத்தகத்தில் ஒரு தடவை சொல்லவும் நினைத்தார், ஆனால் அந்த மனிதனுக்கு ஒரு மூளை மழுங்கிய குழந்தை இருப்பதாக அவரிடம் யாரோ சொன்னதும், அவர் மேலும் அச்சப்பட்டார். அது ஒரு வேளை எதிர்வினையாக இருந்தால் என்ன செய்வது? முகாம் வாசிகளுக்குத் தம்மைக் காட்டிக் கொடுத்தவர்களுடனும், தம் சிறைக் காவலர்களுடனும்…அவர்களின்  மரண தண்டனையை நிறைவேற்றியவர்களுடனும்…. தனிப்பட்ட வகை உறவுகள் இருந்தன. இந்த இருவரும் அடிக்கடி தெருவில் சந்தித்தனர், ஒரு சமயம் அடுத்தடுத்த வீடுகளில் கூடக் குடியிருந்தோம். க்ளெப் இறந்த பின் ஒரு பொது நண்பரிடம் இதைச் சொன்னேன். அவள் அதை நம்ப முடியாமல் இருந்தாள்: “ந வா? அப்படி இருக்காதே. அவர் க்ளெப்பைப் பற்றி அத்தனை நல்லபடியாகப் பேசுகிறார், அவர்கள் குழந்தைகளாக இருக்கையில் எத்தனை நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்று சொல்கிறார், கல்லறைக்கு வந்து அழுதாரே.” நான் அப்போது புரிந்து கொண்டேன்.. நான் பேசக் கூடாது… கூடாது.. அங்கே ஒரு கோடு, தாண்டப்படக் கூடாத அபாயமான கோடு இருக்கிறது. முகாம்களைப் பற்றி அனைத்துமே பலியானவர்களாலேயே எழுதப்படுகின்றன. அவர்களை ஒடுக்கியவர்கள், தண்டித்தவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். நம்மால் அவர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துப் பார்க்கக் கூட முடியாது… பாருங்க.. அவரும் அதை விரும்பவில்லை. அது ரொம்ப அபாயகரமானது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.
சிறுவனாக இருந்ததிலிருந்தே சாவது என்பது அவருக்குப் பழகி இருந்தது. இந்தச் சிறு சாவைப் பார்த்து அவர் பயப்படவில்லை…. அந்தத் திருடர்களின் தலைவர்கள்  பிறரின் அளவு உணவில் கிட்டும் ரொட்டிகளை விற்று விடுவார்கள், அல்லது அவற்றை இழப்பார்கள், அதனால் கரியைத் தின்பார்கள். கருப்புக் கரியை. அவர்களின் வயிறு ஒட்டிப் போய் இறப்பார்கள். இவர் சாப்பிடுவதை நிறுத்தினாலும், நீர் மட்டும் குடிப்பார். ஒரு பையன் ஓடிப்போய் விட்டான். … வேண்டுமென்றே ஓடினான், அப்போது அவர்கள் அவனைச் சுடுவார்கள் என்பதால். பனி மீது, நல்ல சூரிய ஒளியில் ஓடினான். அவர்கள் குறிபார்த்தார்கள்.. சுட்டார்கள்…. அது அவர்களுக்குக் கேளிக்கை… வாத்து ஒன்றைச் சுட்டுக் கொல்வது போல.  அவனைத் தலையில் சுட்டார்கள், கயிற்றால் இழுத்து வந்தார்கள், வெளியில் தூக்கிப் போட்டார்கள். க்ளெப்புக்கு அங்கே எல்லாம் பயம் இருக்கவில்லை, ஆனால் இங்கே அவருக்கு நான் தேவைப்பட்டேன்.
”முகாம் என்பது என்ன?”
“அது கடும் உழைப்பு.”
என்னால் கேட்க முடிகிறது… ஏதோ அவர் குரலையே இப்போது கேட்பது போலிருக்கிறது.
“தேர்தல் தினம். வாக்களிக்கும் இடத்தில் நாங்கள் ஒரு இசை நிகழ்ச்சியை அளிக்கிறோம். நான் நிகழ்ச்சியை நடத்துபவன். மேடையில் வந்து அறிவிக்கிறேன். “கூட்டிசைக் குழு இப்போது இசைக்கும்.”அரசியல் கைதிகள், வ்ளாஸொவைட்கள், வேசையர், ஜேப்படித் திருடுபவர்கள்- எல்லாரும் வரிசையாக நின்றார்கள், பின் ஸ்டாலின் பற்றிய ஒரு பாட்டைப் பாடினார்கள். ’நாடுகள் மீதே நம் பாடல் பறந்து க்ரெம்ளினின் உச்சிக்குப் போகிறது.’
ஒரு செவிலி ஊசி ஒன்றுடன் வருகிறாள். “உங்கள் பின்புறம் பூரா சிவந்து போயிருக்கிறது. ஊசிக்கு இடமே இல்லை.”  “எனக்குப் பின்புறம் சிவப்பாக இருப்பது இயற்கைதானே. நான் சோவியத் யூனியனிலிருந்தல்லவா வருகிறேன்.” நாங்கள் அவருடைய கடைசி நாட்களில் கூட நிறைய சிரித்தோம். நாங்கள் நிறையவே சிரித்தோம்.
“அது சோவியத் ராணுவ தினம். நான் மேடை மீதேறி வ்ளாடிமீர் மாயகோவ்ஸ்கியின் ‘சோவியத் பாஸ்போர்ட்டின் கவிதை’யை ஒப்பிக்கிறேன்.  ‘படியுங்கள அதை, பொறாமைப்படுங்கள் அதன் மேல். நான் சோவியத் யூனியனின் குடிமகன்.” பாஸ்போர்ட்டுக்குப் பதில் நான் ஒரு கருப்பு அட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதைக் காட்டுகிறேன், எல்லாக் காவலாளர்களும் என்னைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார்கள். ’நான் சோவியத் யூனியனின் குடிமகன்.’வேசையர், முன்னாள் சோவியத் போர்க்கைதிகள், ஜேப்படித் திருடர்கள், எஸ் ஆர்கள் (2) இவர்கள் எல்லாம் என்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்.”
அது நிஜமாக எப்படி இருந்தது என்று யாருக்கும் ஒருபோதும் தெரியப்போவதில்லை, அவர்கள் என்னென்னவற்றோடெல்லாம் திரும்பி வந்தார்கள் என்பது. அவர் ஒரு கடுமையாகத் தனிமைப் பட்ட மனிதர். நான் அவரைக் காதலித்தேன்.
கதவருகில் நின்று நான் திரும்பிப் பார்த்தேன், அவர் கையசைத்தார். சில மணிகள் கழித்து நான் திரும்பி வந்தபோது அவர் ஏற்கனவே சுயநினைவிழந்து மூர்ச்சையில் இருந்தார். அவர் யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தாராம், “கொஞ்சம் பொறுங்கள், கொஞ்சம் பொறுங்கள்.” அப்போது அவர் நிறுத்தினார், அப்படியே நினைவிழந்து படுத்திருந்தாராம். பிறகு இன்னும் மூன்று தினங்களுக்கு அப்படி. அதற்கும் நான் பழகிக் கொண்டிருந்தேன். அவர் அங்கே, படுத்திருக்கிறார், நான் இங்கே உயிரோடு இருக்கிறேன். அவர் படுக்கைக்கு அருகில் ஒரு படுக்கையை எனக்குத் தயார் செய்தார்கள். பாருங்க…. மூன்றாவது நாள்… இதற்குள் அவருக்கு ரத்தக் குழாய் வழியே ஊசி குத்தி எதையும் செலுத்துவது கூட கடினமாகி விட்டிருந்தது. .. ரத்தக் கட்டிகளால்… மருத்துவர்களுக்கு எல்லாவற்றையும் நிறுத்தி விட நான் அனுமதி வழங்க வேண்டி இருந்தது. அது அவருக்கு வலிக்காது, அவர் எதையும் உணரும் நிலையில் இல்லை. நானும் அவரும் தனியே விடப்பட்டோம். ஒரு சாதனங்களும் இல்லை, மருத்துவர்கள் இல்லை, யாரும் அவரைச் சோதிக்க வந்து போவாரும் இனி இல்லை. நான் அவர் அருகே படுத்துக் கொண்டேன். நல்ல குளிராக இருந்தது. நான் விரிப்புக்கு அடியில் புகுந்து அவருடன் இருந்து கொண்டேன், தூங்கிப் போனேன். நான் விழித்தேன் ஆனால் கண்களைத் திறக்கவில்லை. நாங்கள் இருவரும் வீட்டில் உறங்குவது போலவும், பால்கனிக் கதவுகள் திறந்திருந்தது போலவும் இருந்தது. ….அவர் இன்னும் விழிக்கவில்லை. என் கண்கள் மூடி இருந்தன. நான் அவற்றைத் திறந்தேன் – எனக்கு எல்லாம் திரும்பி வந்தது. நான் உருண்டு புரண்டேன். எழுந்து நின்றேன், என் கைகளை அவர் முகத்தில் வைத்தேன்: “ஆ.ஆ.ஹ்.” அவர் என்னைக் கேட்டார் போலும். சாவுக்கான வேதனைகள் துவங்கின, மேலும் நான்… நான் அப்படியே அமர்ந்திருந்தேன், அவர் கையைப் பிடித்துக் கொண்டிருந்தேன். அவருடைய இதயத்தின் கடைசித் துடிப்பை அறிந்தேன். அப்படியே ரொம்ப நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு உதவியாளரை அழைத்தேன், அவள் அவருக்கு அவர் சட்டையைப் போட்டு விட எனக்கு உதவினாள், அந்த நீலச் சட்டை, அவருக்கு மிகப் பிடித்த நிறம். நான் கேட்டேன், “இங்கே இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா?””நிச்சயமாக. நீங்கள் இருப்பது வரவேற்கப்படும். உங்களுக்குப் பயமாக இல்லையா?”அவரை யாரிடமும் கொடுத்து விட எனக்கு மனதில்லை. அவர் என் குழந்தை போல, ஒரு அம்மா தன் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்படுவதை எப்படி விரும்புவாள். அவளுக்கு இனி பயப்பட என்னவிருக்கிறது? காலைக்குள் அவர் மிக அழகாகி விட்டார். அவருடைய பயமெல்லாம் அவருடைய முகத்திலிருந்து போயிருந்தது, அந்த இறுக்கமெல்லாம் போய் விட்டிருந்தது. வாழ்க்கை எல்லாமே தோற்றம் பற்றிய கர்வம்தான். அவருடைய தோற்றத்தின் நுட்பமான, மேன்மையான அம்சங்களை அப்போது நான் கவனித்தேன். ஒரு ஓரியண்டல் அரச குமாரன் போல இருந்தார். அவர் அப்படிப்பட்ட மனிதன் தான். நிஜமாகவே அப்படி ஒரு மனிதன் தான் அவர்! நான் அவரை அப்படி அறிந்திருக்கவே இல்லை. என்னோடு அவர் அப்படி ஒருபோதும் இருக்கவில்லை. (அவள் அழுகிறாள். எங்கள் மொத்த உரையாடல் நேரத்தில் இதுதான் முதல் முறையாக அழுவது.)
நான் எப்போதுமே பிரதிபலித்த ஒளியில் மின்னி இருக்கிறேன். என்னால் உருவாக்க முடியும், படைக்க முடியும்… ஆனால் எப்போதும் எனக்கு வேலைதான் இருந்தது.. எப்போதும் வேலை… படுக்கையில் கூட. அவரை உச்சிக்குக் கொணர- அவர் முதலில், பின்னர் நான். “நீங்கள் வலுவானவர், நீங்கள் நல்லவர், நீங்கள் மிக உயர்ந்தவர், நீங்கள் அபாரமானவர்.” என் வாழ்வில் தாதியாக இருக்கத் தேவை இல்லாமல் ஒரு மனிதனைக் கூட நான் அடையவில்லை. ஒரு அம்மாவாக…. ஒரு செவிலியாக… நான் எப்போதுமே தனிமைப்பட்டவளாகத்தான் இருந்திருக்கிறேன். பின்னால் எனக்கு ரசிகர்கள் கிட்டினார்கள். ரொமான்ஸெல்லாம் கிட்டியது. இப்போது கூட எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான், அவனும் உள்ளெல்லாம் இறுகித் திருகிப் போனவன், மகிழ்ச்சியிழந்தவன், நிலையில்லாதவன். ஏனெனில் நம் மொத்த வாழ்வே அப்படி இருக்கிறது. நாம் இருக்கும் நாடு அப்படி. நம் சரித்திரம்தான் நம் துரதிருஷ்டங்கள், பெருநஷ்டங்களுக்குக் காரணம். க்ளெப் கூட தைரியமானவராக இருந்தார். முகாமுக்குப் பிறகு. அவருக்குச் சிறிது தற்பெருமை கூட இருந்தது: பார், நான் தப்பி வந்து விட்டேன்! நான் தாங்கிக் கொண்டு விட்டேன்! என்னவெல்லாம் பார்த்து விட்டேன்! அவர் கர்வத்துடன் இருந்தார். ஆனால் இவருக்கோ இன்றைய பயங்கள் இருக்கின்றன.. உடலில் ஒவ்வொரு அணுவிலும். எனக்கு மறுபடி நடிக்கக் கிட்டுவது அதே பாத்திரம்தான்.. எப்போதும் அதே பாத்திரம்தான். …
எப்படி இருந்தாலும், நான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன். அது கடினமான வேலையாகத்தான் இருந்தது, யார் இல்லை என்பார். ஆனால் அந்த வேலை நல்லபடியாக முடிந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என் வாழ்வில் பெரும்பாலான நேரம் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பதாக எனக்கு நினைப்பு. நான் இப்போதுகொஞ்சம் கண்களை மூடப் போகிறேன்.

( ரஷ்ய மூலத்திலிருந்து இங்கிலிஷில் மாரியன் ஷ்வார்ட்ஸ். 2005)
The Wondrous Deer of the Eternal Hunt – Words Without Borders
பின் குறிப்புகள்:
(1) அவை முறிந்ததால், என்று அர்த்தம்- மொழி பெயர்ப்பாளர்)
(2) SRs- சோஷியலிஸ்ட் ரெவல்யூஷனரி பார்ட்டி என்ற ஒரு கட்சி புரட்சியின் போது இரண்டாகப் பிரிந்து வலதாகவும் இரண்டாகவும் ஆனது. இடது குழுவினர் போல்ஷெவிக்குகளுடன் ஒத்துழைத்தனர். வலது குழுவினர் எதிரிகளாகக் கருதப்பட்டு கட்டாய உழைப்புப் பாசறையில் அடைக்கப்பட்டவர்களாக ஆனார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.