What a wonderful world

அட்மிரல் பார்க்கினுள் வரும் போதே கழுத்து கசகசத்தது. எதிர் சைக்கிள் காரரின் கண்களைத் தொட்டு பரஸ்பரம் தலையசைத்துக்கொண்ட பின் சீட்டின் முன் வந்து சற்றே ஏறி பெடலை மிதித்த போது வியர்வை ஒரு சொட்டு சைக்கிள் பாரில் மோதியது. புன்னகைத்துக்கொண்டேன்.

சைக்கிள் பாதையில் கவனமாகத் திரும்பி மேட்டில் ஏறி மிதிக்கும் போது அனிச்சையாக வானத்தைப் பார்த்தேன். ஒரு மேகத்துணுக்கு கூட இல்லை. எங்கும் எங்கெங்கும் நீலம். இன்று நிச்சயம் 28 டிகிரியாகவாது இருக்கும்.

இங்கிலாந்தின் வேனிர் காலமென்பது பெரும்பாலான நாட்களில் வெறும் வானிலை அறிக்கைத்தாளில்தான். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அல்லது அதிகப் பட்சம் மூன்று வாரங்கள் 28-32 டிகிரி இருக்கும். அதற்கே எல்லாரும் வில்கின்சனுக்கு ஓடுவார்கள், டேபிள் பேனை வாங்க.

சைக்கிள் பாதை டெஸ்கோ கார் பார்க் வரை கூட்டிச் சென்று மறைந்தது. கார் நிறுத்துமிடங்களில் சைக்கிளை விட்டு இறங்காமல் மெல்ல ஓட்டிக்கொண்டு கார்த்திக் என்னைத் தொடர்கிறானா என்று அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.

கார்த்திக்கின் முகம் சுருங்கி இருந்தது. அப்படித்தான் இருக்கும். வழக்கமாக காரில்தான் அவனது பள்ளிக்குப் போவோம். போன வாரம் லிட்டில் வால்தம் போய்விட்டு திரும்பி வரும் போது ஒரு ரவுண்ட் அபவுட்டில் காரின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது. பெரிதாகச் சேதம் இல்லை; பின்பக்கம் பெரிய “பள்ளம்” மற்றும் பெயிண்ட் சிதைந்திருந்தது. இருந்தும் இன்ஷூரன்ஸ் கம்பெனி சொன்ன கராஜ்ஜில் அடுத்த வாரம்தான் கார் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

கார்த்திக் ஐந்தாம் வகுப்பு வரை கூட வாரக்கடைசியில் சைக்கிளை எடுத்துக்கொண்டு, “நானும், நானும்” என்று என்னுடன் ஆர்வமாக வருவான். சைக்கிள் பாதையில் அவ்வப்போது நின்று ஓரத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பெர்ரிச் செடிகளில் உற்சாகமாக கறுத்த பெர்ரிகளை எட்டிப் பறிப்பான். ஆனால் இன்று ஏழாம் வகுப்பில் சைக்கிள் கசக்கிறது.

நிதானிப்பதற்குள் மாறிவிடும் குளிர் கால மாலை பொழுது போல் குழந்தைகள் சட்டென மாறிவிடுகிறார்கள்

பாதை இப்போது உயர்ந்து பாலமானது. நெருங்கும் முன்னரே வேகத்தைக் கூட்டி மிதித்தாலும் பாதிப் பாலத்திலேயே சைக்கிளிலிருந்து இறங்கிக்கொண்டேன். சின்னப் பாலம்தான்; சைக்கிள் மற்றும் பாதசாரிகள் மட்டும்தான் செல்ல முடியும். பால நடுவில் நின்று கொண்டு எட்டிப்பார்த்தேன்.

செல்மர் நதி உற்சாகமாக சுழித்துச் சென்றது. இன்று மதகுகளைத் திறந்து விட்டிருப்பார்களாக இருக்கும். சுளீர் வெயிலில் நதியின் ஆழத்தில் எண்ணற்ற பச்சைத்தாவரங்கள் ஏதோ ஓர் இசைக் கோர்வைக்கு அசைந்து கொண்டிருந்தன. இந்த இடம் எனக்கு எப்போதுமே பிடிக்கும். இங்கு நதி சுருங்கி பெரிய கால்வாயாக அடக்கமாக இருக்கும். அவ்வப்போது வரும் சைக்கிள்களைத் தவிர வேறு நடமாட்டமே இருக்காததும் ஒரு காரணம்.
IMG_5358

கார்த்திக் என்னைத் தாண்டிச் சென்று நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தான். பார்வைகள் அவ்வப்போது புதிதாக இருக்கின்றன. சமீபத்தில் ஒரு நாள் சாப்பாட்டு மேசையில் குனிந்து மவுனமாகச் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் சட்டென நிமிர்ந்துப் பார்த்தான். எனக்குப் புரியவில்லை. மீராதான் “கொஞ்சம் சத்தம் வராமல் சாப்பிடுங்க” என்றாள்.

பாலத்தின் கீழ் சிறு படகுகள் நீரைக் கிழித்துக்கொண்டு நீர்த் தாவரங்களின் மேல் விரைந்து சென்றன.தொலைவில் Chelmsford canoe club என்ற பெயர் பலகை தெரிந்தது. அதன் கீழ் சற்று பொடி எழுத்துகளில் 1946. கைக் கடிகாரம் காலை நேரம் 10:30 என்றது. சைக்கிளிலில் ஏறி கார்த்திக்கை நெருங்கும் போது அவன் சிநேகமாக முறுவலித்தான்.அவனது கால் பந்து ஆட்டம் துவங்க இன்னும் நேரம் இருந்தது.

நாங்கள் இப்போது நகர சதுக்கத்தை அடைந்து விட்டிருந்தோம். சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே சனிக்கிழமை கூட்டத்தினுள் நடக்கச் சற்று சிரமம்தான். நகரச் சதுக்கத்தைத் தாண்டியபின் மறுபடியும் சைக்கிளில் ஏறி நகர தேவாலயத்தை ஒட்டிய பெரும் கற்கள் பாவித்த தெருக்களில் சற்று வேகமாக மிதித்தோம். இரு புறங்களிலும் உயர உயர நூற்றாண்டுகள் தாண்டிய சுவர்களுக்கும் நடுவில் தெருவே குறுகிய கால்வாயாகத் தோன்றியது. எதிரில் இன்னொரு சைக்கிள் வந்தால் கூட உரசும் அபாயக் கால்வாய். ஐரோப்பிய முடுக்கு என்ற வார்த்தை இந்த ஊருக்கு மாறி வந்த போதே தோன்றி இருக்கிறது. அன்று போலவே இன்றும் சிரிப்பு வந்து விட்டது. தெரு முடிவில் திரும்பி இன்னொரு சற்றே பெரிய கால்வாயில் கலந்தோம்.

எப்போதும் போலவே அன்றும் பள்ளி ஒரு புராதான தேவாலயம் போல் தோற்றமளித்தது. மதில் சுவர்களில் உற்சாகச் சிரிப்பாக மஞ்சள் பூக்கள். சின்ன வயதில் கார்த்திக் சாப்பிட்ட இடம் போல வெளிச்சுற்று பாதையிலும் நிறையச் சிந்தியிருந்தன.

நுழைவாயிலின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் Welcome to King Edward Grammar school summer fete, Chelmsford என்று எழுதியிருந்தது.

கார் பார்க்கைத் தாண்டினால் பள்ளி அலுவலக வளாகம். பள்ளி இலச்சினையில் 1551 துருத்திக்கொண்டு இருந்தது.
சிறு சிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட பெரிய பெரிய கண்ணாடி சன்னல்கள் ஓங்கிய சுவர்கள் முழுவதும் பரவி இருந்தன. வலது உயர சன்னலின் திரை விலகி ஷேக்ஸ்ப்யர் காலக் கோட்டணிந்த ஆசாமி தென்பட்டால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

வலது புறத்தில் இருந்த சைக்கிள் ஸ்டேண்ட்டில் இருவரின் சைக்கிள்களையும் சேர்த்துப் பூட்டிவிட்டு கால் பந்து மைதானத்திற்குள் நுழைந்தோம்.

திருவிழாக் கூட்டம். மைதானத்தைச் சுற்றி ஸ்டால் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் கொஞ்சம் பேர் மொய்த்துக்கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு பாதியில் அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் ஒரு பையன் கிதாரை மீட்டிக்கொண்டிருக்க எதிரில் சற்றே பெருங்கூட்டம் புல் தரையில். மைதானத்தின் மறுபாதியில் கால் பந்து ஆட்டத்திற்காக கோல் போஸ்ட்கள் வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் அவனது கால் பந்து அணி நண்பர்கள் கூட்டத்தில் மறைந்துவிட்டான். இந்த வேனிர் கால விழாவின் ஒரு பகுதியாக ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் இடையில் இன்றைய கால்பந்து போட்டி. ஏழாம் வகுப்பு அணியில் இடம் பெற்ற செய்தியை கார்த்திக் சொன்ன போது அவனது கண்கள் ஒளிர்ந்தது இன்னும் நினைவு இருக்கிறது.
“அப்பா, CDM position” என்றான்.

நான் இலக்கில்லாமல் ஒவ்வொரு ஸ்டாலாக நுழைய ஆரம்பித்தேன். முதல் ஸ்டாலின் நுழைவில் Radio city என்று சின்ன அறிவிப்பு இருந்தது. செம்ஸ்போர்ட்டில் இருந்த உலகின் முதல் ரேடியோ பாக்டரி படங்கள், மார்க்கனி, மோர்ஸ் கோட், டைட்டானிக் என்றெல்லாம் படங்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் இருந்தன. சுவாரசியமாக எதுவும் இல்லை. உடனே வெளியே வந்துவிட்டேன்.
அடுத்த ஸ்டாலில் சுடச்சுட சமோசாக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். முக்கோண சமோசா வில்லைகளை வெள்ளைக்காரர்கள் இரண்டு இரு பவுண்ட்கள் வீதம் கொடுத்து வாங்கினார்கள். நான் வாங்காமல் வெளியே வந்த போது எதிரில் ஆடம்.

“ஹலோ, ஹலோ! எப்படி இருக்கிறாய்?”
“ஹாயா, நான் நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”
“மோசமில்லை; கார்த்திக் இன்றைய மாட்சில் ஆடுகிறானல்லவா?”
“ஆம், ராடும் ஆடுகிறான்தானே?”

கார்த்திக்குடன் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில் தொடர்ந்து படித்து இப்போது உயர்நிலை பள்ளி வரை தொடர்பவர்கள் ஓர் ஏழெட்டு பேர்களாவது இருக்கும். பெற்றோர்கள் அனைவரும் ஏகப்பட்ட பிறந்த நாள் பார்ட்டிகளில் பரிச்சயம்.

“உனக்கேற்ற வெயில் இன்றைக்கு. போதுமா உனக்கு?” என்று கண்ணடித்தவாறே கடந்து போனார். “என்ன அண்ணை! உனக்கு ஏத்த வெயில் அடிக்குதுன்னு சொல்றரரோ?”
என்று புறங்கழுத்தில் கேட்டது. திரும்பி நிமிர்ந்தால் மின்னும் கண்களுடன் செல்வேந்திரன்.
“ஆங்! வாங்க, எப்படி இருக்கிங்க”

“ என்ன சொல்றது, இவங்களை! ஹூம்!” என்று அருகில் அப்போதுதான் காலியான பிக்னிக் பெஞ்சில் போய் உட்கார்ந்தார்.
நானும் அருகே அமர்ந்தேன்.
ஒரு பெரிய மரத்தின் அருகில் அமர்ந்ததைப் போலிருந்தது.
“நாட்டுல இருந்து வெளிக்கிட்டு கனகாலமாச்சு. இந்த நாட்டுக்கு பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி வந்தனன். இத்தரை வருசத்தில் ரெண்டு தடவைதான் கொழும்புக்கு போயிருக்கறன். வெயிலும் குளிரும் இந்தச் சனம் போலத்தன்னே எனக்குக்கும். ஆனாலும் என்ட கடைகளுக்கு வரவர் அல்லாம் சம்மர் தவறாம  இந்த வெயில் உனக்குப் பிடிக்குமேன்னு கேப்பனம். ஹூம்!” பக்கவாட்டில் திரும்பி உயரே பார்த்தேன். சிறுகுன்றில் முகம் செதுக்கியது போல் இருந்தது. கடைவாயில் மட்டும் புன்னகை மெலிதாக ஓரிரு அவல் பருக்கைகள் போல ஒட்டியிருந்தது.

முதல் பெற்றோர் கூட்டத்திலேயே அவராக வந்து அறிமுகம் செய்து கொண்டார். தமிழர்கள் என்றுதான் பெயரே தவிர அவர் பேசியது எதுவும் எனக்கு முழுதாகப் புரியவில்லை. கொஞ்சம் தள்ளி நின்று கேட்டால் மலையாளத்தில் பேசுகிறாரென்று தோன்றியது. இன்னொரு சாயலில் எனது கல்லூரி நண்பன்- களியக்காவிளைக்காரன் – பேசுவது போல் இருந்தது.  பேச்சிலேயே ஒரு ராகம் இருக்கிறது என்று தோன்றியது. எல்லாவற்றிற்கும் மையமாகத் தலையை மட்டும் ஆட்டிவிடுவேன்,
அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன. விஜய்யின் தீவிர ரசிகர் என்று ஒரு முறை மீரா சொல்லியிருக்கிறாள். கால்பந்து பயிற்சி வகுப்பு முடிந்து பல முறைகள் கார்த்திக்கை வீட்டில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். எங்களுக்குத்தான் சங்கடமாக இருக்கும். அத்தனை நன்றி வார்த்தைகளையும் அவல் பருக்கையால் தாண்டிப் போய்விடுவார்.

சுற்றி உற்சாகக் கூக்குரல்கள். பெற்றோர்களைப் மேடைக்கு பாட அழைத்தார்கள். ஒரு வெள்ளைக்காரர் மேடையேறினார். கீழே இருந்து யாரோ கத்த, கிண்டலாகத்தான் இருக்கவேண்டும், வெடிச்சிரிப்பு கூட்டத்திலிருந்து எழுந்தது.

“நெல்ல ஹோப்பியா இருக்காங்கள்…நாங்களும் பள்ளி காலத்தில் இப்படித்தன் இருந்தனம்”. கையிலிருந்த கோக் பாட்டிலையும் ஜாகுவார் சாவிக்கொத்தையும் எங்களுக்கு இடையில் வைத்தார். கார் பார்க்கிலேயே கவனித்தேன், All New XF உண்மையிலே ஓர் பதின்ம சிறுத்தை மாதிரி இருந்தது.

“அப்ப தெரியுமோ இப்படி நாடு நாடாகப் போய் அலைய வேண்டி வருமென”

செல்வன் பிரிட்டன் வருவதற்கு முன் ஜெர்மனி, ஸ்விஸ் போன்ற நாடுகளில் இருந்தவர் என்பது மீரா மூலம் தெரியும். ஆனால் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார் என்பது தெரியாது. கேட்கவும் விருப்பப்படவில்லை.

பெஞ்சில் நன்றாகச் சாய்ந்து கொண்டு தலையை நிமிர்த்திப் பார்த்தேன். ஒட்டிய மரக்கிளைகளின் நிழல் சுகமாக இருந்தது.

“கொழும்பு போயிருந்திங்களா? எப்படி இருக்கிறது ஊர் நிலவரம்?” ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்றுதான் ஆரம்பித்தேன்.

“என்ன இருக்கிறது அங்கே… களவாணிச் சனியன்கள், அரசியலில், ராணுவத்தில் எல்லா இடத்திலும் இருக்கினம், எதுவும் சரியில்லை”.
சற்றேயான மவுனத்திற்குப் பின்,
“தமிழ் நாட்டை நிறைய நம்பினம், கருணாநிதியை நம்பினம், எப்படியும் உதவி வருமென நம்பினம்”

எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை தடவை சொன்னாலும் படித்தாலும் ஈழத் தமிழனின் வேதனையை இந்தியத் தமிழனால் முழுவதாக உணரவே முடியாது.
“அரசியல்வாதிகளை நம்ப முடியுமா என்ன?” என்று மெல்லியதாய் சொல்லி வைத்தேன்.

அந்த 2009 மே மாத தினத்தில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று நினைவு இருக்கிறது. அன்று சோலிஹில்லில் ஒரு வாடிக்கையாளர்ச் சந்திப்பிற்காக காலையில் மோட்டார் பாதையில் விரைந்து கொண்டிருந்தேன். பிபிஸி பத்திரிக்கையாளரிடம் ஶ்ரீலங்கா அரசு அதிகாரி சந்தோஷம் பொங்கும் குரலில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். பின்னர் வந்த வாநிலை அறிக்கைக்குப் பின் ரேடியாவிலிருந்து சீடிக்கு மாறிவிட்டேன்.அடுத்த நாள் தமிழ் பத்திரிக்கையை இணையத்தில் வாசிக்கும் வரை இலங்கை போர் நிலவரம் பற்றி நினைவே இல்லை…
“ஸ்கூல் டேஸ்ல ஜூனியர் விகடன்ல குட்டி மணி, தங்கதுரை, ஜெகன்னு ஒரு தொடர் வந்ததில்ல” எதையாவது சொல்லவேண்டுமே என்றுதான் சொன்னேன். செல்வேந்திரன் முகத்தில் அதிக மாறுதல் இருந்ததாக நினைவில்லை. நெடிய, இறுகிய கரிய பாறை முகம்… அந்த நிமிடம் செல்வேந்திரன் எங்கு இருந்தார் என்று தெரியாது, ஆனால் இங்கு இங்கிலாந்தில் இல்லை என்று மட்டும் தெரியும்.

சில நிமிடங்கள்தான். “என்ன விஜய் புதுப் படம் ஏதேனும் உண்டோ?” என்று பேச்சு சகஜமான நிலைக்குத் திரும்பிய போது மேடைப்பக்கம் ஆரவாரம் கேட்டது. இப்போது மேடையில் ஒரு பருமனான, இரு காதுகளும் பொன்னிற முடிகளால் மூடியிருந்த பெண் ஏறினார்

அந்தப் பெண் முகம் முழுவதும் சிரிப்பாக மைக்கை கையில் பிடித்ததும் கூட்டம் அமைதியானது. அவரை விடப் பருமனாக இருந்தது அவர் குரல். பின் மேடையில் கீபோர்ட் வாசித்த பையனும் அவருடன் ஒத்துப் போனான்.

“ம்…அடேல்…ஸ்கைபால்” என்று அவரது சட்டையைக் கீழே இழுத்துவிட்டுக்கொண்டே செல்வேந்திரன் கிசுகிசுத்தார். நான் அப்போது ஒன்றும் சொல்லாவிட்டாலும் பாட்டு முடிந்தவுடன் “நல்ல முயற்சி” என்று சொல்லிவைத்தேன்.

அடுத்ததாக ஒரு கருப்பர் மேடையேறினார். அந்த வெயிலில் அவர் தலை மின்னிக்கொண்டிருந்தது ஆச்சரியமில்லை. பரிட்ச்சிய முகம். இவரை அடிக்கடி பெற்றோர் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். “நான் இப்போது பாடப் போவது லூயிஸ் ஆர்ம்ஸ்ராங்க்கின்…” என்று அறிவித்ததும் கூட்டம் ஆரவாரித்தது. நான் மெல்ல செல்வேந்திரனைப் பார்த்தேன்.

“பழம் பாட்டு…இந்த சனத்திற்குப் பழசுதானே பிடிக்கும், விட மாட்டாங்க, ஹ?” என்று பின்னால் திரும்பி பள்ளியை மொத்தமாக பார்த்துவிட்டு என்னை நோக்கி சன்னமாக முறுவலித்தார். “ஆமாமாம்…நெனச்சே பாக்க முடியலை, பள்ளியே பதினாறாம் நூற்றாண்டு ஆரம்பிச்சதில்ல?” என்றேன்.

“ஆமா, அப்பம் பாதிரி மாருங்களுக்கான பள்ளியா இருந்திருக்கவேணும், பைபிள் படிக்க ஏதுவா லத்தீன் சொல்லிக்கொடுத்திட்டு இருந்திருப்பினம்”

“இருக்கலாம். இருந்தும் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நடந்துட்டு வர பள்ளின்னா எவ்வளவு பெரிய விஷயம், இல்லை?” என்றேன்.
இத்தனை பிரபல பள்ளிக்காகத்தானே ராலேயிலிருந்து இந்த புராதன நகருக்கு வீடு மாறி வந்திருக்கிறோம். தினமும் ராலேயிலிருக்கும் எனது கன்சல்டன்சி அலுவலகத்திற்கான அலைச்சலையும் சகித்துக்கொண்டு.

“இதுக்கே மலைச்சாச்சா? கோல்செஸ்டர் பள்ளி பதிமூன்றாம் நூற்றாண்டாக்கும், தெரியும் தானே?” சின்னதாய் கெக்கெக் சிரிப்பு.

“ரியலி?”

“ஓம், 1206 எண்டு அவங்க வெப் சைட் சொல்றது. பள்ளியா அது மியுசியம்!”

“ம்ம்ம்…இந்த ஊரே மியுசியம்தானே!”
“ஓம், ஹால் ஸ்ட் ரீட்ல மார்க்கனியின் ரேடியோ பேக்டரி இருந்த கட்டிடம் 2010 வரை இருந்தது. இப்போ அபார்ட்மெண்ட்டா மாறி போச்சோ… தெரியலை.”

உண்மைதான். பள்ளி இண்டக்‌ஷன் நாளன்று பள்ளிப் பெருமை பேசும் ஸ்லைடுகளில் முதலாம் இரண்டாம் உலகப்போர்களில் உயிரிழந்தப் பள்ளி மாணவர்களைப் பற்றி இருந்தன. அந்தக் கறுப்பர் ஏதோ ஒரு குட்டிக் கதை போலச் சொல்லி இருக்க வேண்டும். கூட்டம் அவரது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா போல் சிரித்துக்கொண்டிருந்தது. இப்போது அவர் இரு கைகளையும் உயர்த்தி அசைத்ததும் அமைதி சூழ்ந்தது. “என் கையில் சாக்ஸபோன் இல்லை, இருந்தும் முயற்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கண அமைதிக்குப் பின்

I see trees of green, red roses too

I see them bloom, for me and you

And I think to myself

What a wonderful world

அவர் முக சதைகள் பல்வேறு வடிவெடுத்து பின் மறைந்து பின் வேறு வடிவாகத் தெரிந்தன. கொஞ்சம் தொலைவிலிருந்து பார்த்தாலும் பற்ற வைக்கும் போது எரிய ஆரம்பிக்கும் தீக்குச்சிகளாக கண்கள் ஒளிர்ந்தன.

LA

மீதமுள்ள வரிகளைப் பாடிவிட்டுப் பின்
Yes, I think to myself
What a wonderful world
நிதானித்து நிதானித்து முடித்தவுடன் கரவொலி வெடித்தெழுந்தது.

“சரி, சரி, மேட்ச் ஆரம்பிச்சாச்சு, வாங்கோ” என்று செல்வன் அவசரமாக எழுந்தார். எனக்கு அந்தக் கருப்பரை மீண்டும் பாடச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆம், நாங்கள் மைதானத்தின் மறுபாதியை அடைந்த போது மேட்ச் ஆரம்பித்துவிட்டது. கார்த்திக்கை கண்கள் தன்னால்த் தேடின. கடைசியாக அவனை மைதானக்கோட்டை ஒட்டி வார்ம் அப் செய்துகொண்டிருந்தவர்களினிடையே கண்டுபிடித்தேன். முதல் பதினோரு பேர்களில் அவனில்லை. நானும் செல்வேந்திரனும் கோல் போஸ்ட்டை ஒட்டிய எல்லைக்கோட்டின் அருகில் அமர்ந்தோம்.
“தீபனும் முதல் பதினோன்றில் இல்லையா?”
“ஓம், அப்படித்தான் நான் நெனைக்கறன்…அதோ” அவனும் வார்ம் அப் செய்து கொண்டிருந்தான்.

“கிரிக்கெட் எல்லாம் நம்ம காலத்தோட போயிட்டது என்ன” என்றார். எல்லைக்கோட்டை ஒட்டி இருந்த பிற மாணவர்கள் “எல்வின், எல்வின்” என்று மெலிதாக ஒரே தாளத்தில் கூவிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கருப்புச் சிறுவன்தான் எல்வின் போலிருக்கிறது. எதிர் அணியின் ஸ்றைக்கர்.  என்ன ஓட்டம். Long passஐ , அவனை நோக்கி ஆவேசமாக வானத்திலிருந்து வந்த பந்தை கையால் அதிராமல் கண்ணாடிக் குடுவையை வாங்குவது போல் காலால் வாங்கி, எதிர் கோல் போஸ்ட்டை நோக்கி zig zag ஆக வர ஆரம்பித்தான். தலையிலிருந்து முடி கொத்து சடையாகப் பிரிந்து அவன் திரும்பிய திசையெல்லாம்  திரும்பின.

தடுப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஐந்து பேரை அநாசயமாகத் தாண்டி கோல் கீப்பரை ஒரு சின்ன ஏமாற்றலில் விலகி பந்தை செல்லமாக கோல் போஸ்ட்டினுள் தட்டி விட்டு எக்காளச்சிரிப்போடு அவன் அணியினரை நோக்கி திரும்பினான்.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்குள் இரண்டு கோல்கள் போட்டு விட்டான், ஒரு சந்தர்ப்பத்தில் எதிர் அணி பையன் குறுக்கே பாய்ந்ததில் மூன்றாவது கோல் தடைபட்டுவிட்டது. ஒவ்வொரு கோலிற்கும் விதவிதமான சேஷ்டைக் கொண்டாட்டங்கள்.

எல்லைக்கோட்டின் அருகில் அவன் பந்தைக் கவர்ந்து கொண்டு வரும் போது கவனித்தேன், கண்களும் தசைகள் மேல் வியர்வை முத்துகளும் கருப்பாக ஜொலித்தன.

ஆட்ட இடைவெளி முடிந்தவுடன் கார்த்திக்கும் தீபனும் உள்ளே இறக்கப்பட்டார்கள். கார்த்திக் ஓரளவிற்கு ஓடி எதிர் அணியினருக்கு ஈடு கொடுத்தான். ஐந்து நிமிடத்திலேயே தெரிந்து விட்டது; இவனால் கொஞ்ச நேரத்திற்கு மேல் சமாளிக்க முடியாது. அதுவும் எல்வின் இவனைப் பார்த்ததும் மெல்லியதாய்ச் சிரித்தது போல் தெரிந்தது.
பூனை சுண்டெலியை கொல்வதற்கு முன் விளையாடிப்பார்ப்பது போல் எல்வின் சற்று நேரம் கார்த்திக்குடனும் தீபனிடமும் விளையாடிவிட்டு பந்தை அவர்களைக் கடந்து கொண்டு போய்விட்டான்.

“What a step over” என்று முனகினார் அருகிலிருந்த வெள்ளையர்.
கார்த்திக்காவது எல்வினை பின் தொடர்ந்து கொஞ்சம் ஓடினான். தீபன், அங்கேயே மூச்சு வாங்க நின்றுவிட்டான்.
கார்த்திக் அணி பயிற்சியாளர் எல்லைக்கோட்டின் அருகில் நின்று கொண்டு ப்ரிமியர் லீக் பயிற்சியாளர் அளவிற்கு இரைந்தார்.

நான் ஸ்கோர் போர்ட் இருக்கும் திசையைத் தவிர்த்து வானம் பார்த்தேன். துளி மேகத்துண்டு கூட அற்ற, துல்லிய, முடியவே முடியாத நீல வானம். காற்று சொட்டும் இல்லாமல் மைதானத்தை கண்ணாடி மூடியால் மூடினது போல் இருந்தது.

செல்வேந்திரன் “நம் பிள்ளைகள் எப்பமும் க்ரிஸ்ப்பும் எக்ஸ் பாக்ஸும் இருந்த பின்ன எப்படி ஓடுவம்?” என்றார்.
“இல்ல, எல்வினைப் பாருங்க, அடேயப்பா, என்ன எனர்ஜி, ஓட்டம், பனிரெண்டு வயசில, உடம்பெல்லாம் தசைகள் திண்டு திண்டா” எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.

உண்மையில் எல்வினின் ஓட்டம் மூர்க்கமானது இல்லை, அளவிட முடியாத சக்தியை உள் வைத்துக்கொண்டு கவனமாக, தேவைக்கேற்றாற்ப்போல் வெளியிடுவது போல் இருந்தது அவனது ஓட்டமும், திறமையும். கால்களும் கண்களும் ஒருங்கிணைந்து செயலில் இருந்தன. வியர்வை எண்ணெய் தேய்த்த கருங்கல் சிலை கால்பந்து விளையாடுவது போல் இருந்தது. அத்தனைக் கண்களும் அச்சிலையைத் தொடர்ந்தன. “எப்படி, எப்படி, இந்த வயசுல இத்தனை சக்தி, அபாரம்” என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டேன்.

“எப்படி ஓட்டமா?, ம்…”
செல்வேந்திரன் மெல்ல எழுந்து கொண்டே தனது இரு கைகளால் பக்க உடலை சொறிவது போல் காட்டிக்கொண்டு, “அவங்க இன்னும் மங்கியல்ல, இன்னம் மாறலல்லை” என்றார். நான் நிமிர்ந்து அவரை நோக்கியபோது சிறு புன்னகை ஒரு கணம் மட்டும் தெரிந்தது. பிறகு சாதாரணமாக மாறிவிட்டது.
என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அனிச்சையாகச் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன்.

One Reply to “What a wonderful world”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.