சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு
கவிதை என்பது, ’உயர்ந்து எழுந்து வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ? என்று எண்ணும்படி, வாசிப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில். எழுத்தாளரின் வேலை என்பது “ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று வாசகனை சொல்ல வைப்பது. முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது” என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் இயைந்தது போல அமைந்தவை தேவதச்சனின் கவிதைகள்.
ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.
ஆகவேதான் அன்றாட வாழ்வின் எளிய, சாதாரணமான, சிறப்புகள் ஏதுமற்ற விஷயங்களும்கூட நவீனக்கவிதையின் பாடுபொருளாகி விடுகின்றன. பாடுபொருளின் வழி நவீனக்கவிதை முன்வைக்க முயல்வது மானுட வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய ஒரு சிண்டை மட்டுமே என்பதாலும் வர்ணணைகளைத் தாண்டி வாசிப்பிற்குப் பிறகு விரியப்போகும் கவிதைக்கு ஒரு எளிய தொடக்கம் மட்டுமே என்பதாலும் பாடுபொருள் என்பது நவீனக்கவிதைக்கு ஒரு முகாந்திரம் மட்டுமே. அன்றாட எளிய விஷயங்களை அவதானித்து அதன் அழகை காட்சிப்படுத்துவதும், அதன் வழி கேள்விகளை எழுப்பிக்கொண்டு தத்துவவிசாரத்துக்குள் புகுந்து செல்வதுமே நவீனக்கவிதையின் பாணி.
தவறுதலாகக் கூட ஒரு தட்டைக் கீழே போட்டு விடாதே, அதன் ஓசை விரிவில், தட்டு பிரம்மாண்டமாகிவிடும். தற்செயலாகக்கூட தண்ணீரைச் சிந்தாதே, அதன் சத்தத்தில் பேரருவி வீட்டிற்குள் பாயந்துவிடும் என நமக்கு அறிவுறுத்துவது ஒருபுறம். ஆனால் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்? தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்? என்ற நிதர்சனத்தின் கட்டாயத்தால், வினோத ராட்சசனின் வீட்டுக்கு குடிபுக நம்மையும் அழைத்துச்செல்பவை தேவதச்சனின் கவிதைகள். பூக்காரன், சாலையோரத்தில் தன்கழுத்தை விட உயரமான சைக்கிளை பிடித்தபடி நிற்கும் சிறுமி, மைனா, பட்டாம்பூச்சி, ஆஸ்பத்திரியில் ஈ, பலூன், மீன், நகவெட்டி, அமரர் ஊர்தி, நிலா வெளிச்சம், வானவில் ஆகிய தனக்குத்தேவையான எதையுமே அது பாடுபொருளாக்க தயங்குவதில்லை.
காற்றுமானியின் ரசவாதம்
தேவதச்சனின் கவிதை தொகுதியின் ஒன்றின் பெயர் ”ஹேம்ஸ் எனும் காற்று”. ஹேம்ஸ் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள இரண்டு வழிகளில் முயலலாம். இது தமிழ்நூல் என்பதாலும் ஹேம்ஸ் என்ற சொல்லுக்கு நேரடியான தமிழ்ப்பதம் இல்லை என்பதாலும் அதை ஹேம்/ ஹேம என்ற மூலச்சொல்லாக எடுத்துக்கொண்டு தமிழிலும் தமிழுக்கு நெருக்கமாக உள்ள இந்திய மொழிகளிலும் தேடுவது முதலாவது.
’ஹேம’ என்ற மூலச்சொல் ஆண்பாலுக்கு உரிய பெயர். பெரும்பாலும் இந்து மதத்துக்குள் புழங்கும் பெயர் என்றாலும் இன்னொரு வகையில் புத்தரையும் குறிப்பது என்ற வகையில் பெளத்தத்துக்கும் உரியது.
ஹேம என்பதற்கு சம்ஸ்கிருத அகராதி தரும் கூடுதல் அர்த்தங்கள், தங்கம், பழுப்பு நிற (பொன்னிற) குதிரை, ஆகியவை. புராணங்களில் ருஷத்ரதனின் மகன் பெயரும், ஸுதபஸின் தந்தையின் பெயரும் ஹேம என்பதே. ‘ஹேமா’ என்ற பெண்பால் பெயருக்கு தமிழ், தெலுகு, கன்னடம், வங்காளம், பஞ்சாபி குஜராத்தி, ஆகிய எல்லா மொழிகளிலும் தங்கமான, அழகான என்ற பொருள் மட்டுமே.
இரண்டாவது, இந்திய மொழிகளுக்கு வெளியே தேடுவது. Häme, என்ற பெயரில் வடமேற்கு பின்லாந்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடம் உண்டு. ஹெலின்ஸிக்கு வடக்கே ஆரம்பித்து பஹானே ஏரி வரையிலான பகுதியை கொண்டது. தானிய உற்பத்திக்கும் கால்நடைகளுக்கும் பெயர் பெற்றது இது.
Hames என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ’சுமை இழுக்கும் குதிரையின் கழுத்துப்பட்டைச் சட்டம்’ என்பது நேரடியான பொருள். either of two curved pieces lying upon the collar in the harness, to which the traces are fastened என்பது (மாற்று சொற்கள்: Hämeen Lääni; Tavastehus Län). அதாவது சற்றேறக்குறைய (குதிரையை இறுத்தும்) நுகம். இது circa 1100 முதல் 1500 க்குள் ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்திருக்கலாம் என்கிறது ஒரு குறிப்பு.
இதற்கு சம்பந்தமில்லாதது போல, அயர்லாந்தின் ஆங்கிலத்தில் ’ஹேம்ஸ் படுத்துவது’ ’ஹேம்ஸ் ஆக்குவது’ (i.e., making a hames of) என்றால் குழப்புவது, அல்லது நன்றாக உள்ள ஒன்றை கவனமின்மை, சோம்பேறித்தனம் அல்லது திறமையின்மயின் காரணமாக கெடுப்பது என்று பொருள். ஹேம்ஸ் என்ற சொல் விரிக்கும் அர்த்தங்களைப்போலவே, நம் சிந்தனையை பல திசைகளிலும் தூக்கிச் சென்று நிறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்.
கூடுவிட்டு கூடுபாய்தலும் உருமாற்றமும்
காண்கிற பொருளின் அழகில் கவரப்பெற்று அதில் தோய்ந்து கரைந்து அதன் ஒரு பகுதியாகவே தன்னை ஆக்கிக்கொள்வது கவிஞனின் இயல்பு. இதன் மூலம் மனித உடலின், மனங்களின் எல்லைகளையெல்லாம் ஒரு அசுரனைப்போல நீந்திக்கடந்து இயற்கையின், காலாதீதத்தின், ஒரு பகுதியாகவே தன்னை ஆக்கிக்கொள்கிறான். தன் கவிதையின் வழியாக தன் இருப்பையே இல்லாமல் ஆக்கிக்கொண்டு பிரபஞ்சத்தின் ஒரு துளியாகவும் தன்னையே பிரபஞ்சமுமாகவும் உணர்பவன் கவிஞன்.
I wandered lonely as a Cloud
That floats on high o’er vales and Hills,
–Beside the Lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze. (William Wordsworth), –என்றும்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான் (சுப்பிரமணிய பாரதி)
என்றும், பிறருக்கு வாய்க்காத அழகின் தரிசனத்தின் கண்டடைதலின் காரணமாகவே மனிதநிலையின் எளிமையின் சாதாரணத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது கவிஞனின் இயல்பு.
வீட்டின்
முன்கதவு இரும்புக் கிராதியில்
செங்குத்தாய் படிந்து
நின்றுகொண்டிருந்தது ஓணான் ஒன்று
மெல்லவே கதவு திறந்து
வீட்டினுள் நுழைந்து
தூங்கிவிட்டேன்
காலை எழுந்து
கதவை நெருங்குகையில்
அங்கேயே அச்சு
அசைவற்று நின்றுகொண்டிருந்தது
ஓநான்.
என ஓணானை கண்ட இரவு, இரவு முழுக்க ஓணானாகவே மாறி கதவுக்கு வெளியே நின்று கொண்டிருப்பதும்,
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்
என்று பலூனை ஏந்திச்செல்லுகையில் பலூனாகவே மாறி விடுவதும் இக்கவிதைகளில் நிகழ்வது. அதையும் தாண்டிச்சென்று, தான் உருமாறிக்கொண்ட பொருளின் நிலையிலிருந்து, தன்னைப் பிளந்து இரண்டாக்கி, தன்னையே காணமுடிவதும், இக்கவிதைகளில் சாத்தியமாகியிருக்கிறது.
எப்பவெலாம்
மைனாவை பார்க்கிறேனோ
அப்பவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலனவன் என்று,
–என்று மைனாவை அவதானித்து அதனுடன் கலந்து விடுதல் முதல் நிலை.
அதன்
குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான் –
என பறவவையின் சிறகை குளிப்பாட்டும் தண்ணீராகவுமே மாறி சுயத்தை பெருக்கிக்கொள்ளும் பிரம்மாண்டத்தில் தன்மீதே தெறித்துக்கொண்டு நிற்பது இரண்டாம் நிலை.
இதைப் போலவே, கண்களை நழுவவிட்டு காதுகளை உதிர்த்துவிட்டு நாசியை மறையச்செய்து வாயும் வயிறுமாக மிஞ்சி நின்று மெல்ல மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் சென்று கரையோரம் வந்து காத்துக்கிடப்பது(ஜெல்லிமீன்) முதல் நிலை என்றால், மாலையில் சிறுவர்கள் உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லிமீன் என கத்தும்போது அவர்களிடமிருந்து விரல்களையும் கண்களையும் நாசியையும் வாங்கிக்கொண்டு ஜெல்லிமீன் ஜெல்லிமீன் என அவர்களின் வழி தன்னுடனேயே விளையாடத் தலைப்படுவது இரண்டாம் நிலை. இதில் சாத்தியமாகி இருக்கும் மனநிலையின் விரிவு பாரதியையும் வோர்ட்ஸ்வொர்த்தையும் நெருங்கிச் செல்வதுடன் ஒருவகையில் அவர்களை தாண்டிசெல்ல முயல்வதும் கூட.
காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைதல்
நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது
–என்ற வரிகளில் வரும் வண்ணத்துப்பூச்சி லெளகீக வாழ்க்கையின் பயணத்தில் இழந்து போன ஏதோ ஒன்று என்றால்,
பண்ணாட்டு நிறுவனங்களிடமிருந்து
அதன் கரையோர நாணலி
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும் பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
என்ற வரிகளில் வருவது வேறொரு வன்ணத்துப்பூச்சி. ஒரு வகையில் கவிஞரின் கவிமனதையும் ஆளுமையையும் குறியீடாக்குவது கூடத்தான் என்று சொல்லலாம். காற்றின் வேகத்துக்கு ஈடுகட்ட முடியாமல் தடுமாறி சிரமப்படும் வண்ணத்துப்பூச்சிகளை பார்க்கும் கவிஞர், வேறொரு இடத்தில்
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன –
என்கிறார். பறவைகளைப் போலவோ, தேனீக்களைப் போலவோ குளவிகளைப் போலவோ பறக்கும் ஆற்றல் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சசிகளுக்கு இல்லை. அவை நெடுந்தூரம் பறக்க முடியாமல் தள்ளாடுவதற்கு காரணம் அவை எப்போதும் காட்டையும் சேர்த்தே கால்களில் தூக்கிக்கொண்டு அலைவதுதான் என்பதாக இதை பொருள் கொள்ளலாம். இதைத்தான் அருண் கொலாட்கர் ’வண்ணத்துப்பூச்சி’ என்ற கவிதையில் ‘கொடிய மலைகளை தன் சிறகுகளுக்குள் கொண்டுள்ள’ என்கிறார்.
தேவதச்சன், கொலாட்கர் இருவரின் கவிதைகளில் வரும் வண்ணத்துப்பூச்சியும் மஞ்சள் நிறமுடையவைதான். என்றாலும் இவை இரண்டும் ஒன்றல்ல. கொலாட்கரின் வண்ணத்துப்பூச்சிக்கு,
எதிர்காலமில்லை
இறந்த காலத்துடன்
இணைப்பு ஏதுமில்லை
என்பதால் அது முற்றிலும் விடுதலையடைந்த ஒன்று. ஆகவேதான்இறந்தகாலத்துடனும்எதிர்காலத்துடனும்தன்தொடர்பைஅறுத்துக்கொண்டு
இஃதொரு
நிகழ்காலச் சிலேடை
என்று சொல்லும்படியாக, தன்னியல்பாக, நிகழ்காலத்தில் மட்டுமே சஞ்சரிப்பது. ஆனால் தேவதச்சனின் வண்ணத்துப்பூச்சி இதற்கு நேர்மாறானது. அது விடுதலையடைந்தது அல்ல, இன்னும் காட்டை தூக்கிக்கொண்டே அலைந்து கொண்டிருப்பது. கால்களில் இழுக்கும் காட்டின் எடை வண்ணத்துப்பூச்சிகள் பறந்து விடுதலையாவதினின்றும் தடுக்கிறது. காட்டை பற்றிக் கொண்டிருப்பதாலேயே பறந்து விடுதலையாக முடியாமல் இருப்பது.
இங்கு காடு என சுட்டப்படுவது எது? வண்ணத்துப்பூச்சி என சுட்டப்படுவது எது? பல விதமான ஆசைகளாலும் அவற்றின் சுமையாலும் கட்டுண்டு பறக்க முடியாமல் தத்தளிப்பது என இங்கு கவிஞரால் குறிப்பிடப்படுவது மனிதனின் அகம்தானா? என்ற கேள்வியின் வழி இக்கவிதை நம்மை அடுத்தநிலைக்கு அழைத்துச்செல்கிறது.
அடர்த்தியாகிக்கொண்டுவரும் வானவில்
படைப்பிலக்கிய வடிவங்களை நீளம், வடிவம் மற்றும் உள்ளடக்கத்தின் விரிவு ஆகிய அம்சங்களை முன்வைத்து ஏறுவரிசையில் அமைப்பதானால், கவிதை < சிறுகதை < குறுநாவல் < நாவல் எனலாம். கவிதையையின் குணாதிசயங்களாக, குறிப்புணர்த்துதல், பிரத்யோகமான குறுகிய வடிவம், வரிகளின் இசைத்தன்மை ஆகியவற்றை சொல்லலாம். என்றாலும், சொற்சிக்கனம், ஒப்பீட்டளவில் விரிவான வர்ணனைகள் இல்லாமல் இருப்பது, விலாவாரியான தகவல்களை தவிர்ப்பது, முழுமையான சொற்றொடர்களில் எழுதப்படாமல் இருப்பது, ஆகியவற்றை கவிதைக்கே உரிய, கவிதையை சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள் எனலாம்.
இவை இரண்டுமே கதையை கூறவல்லவை என்றாலும் சிறுகதையையும் விடவும் கவிதை சிறிய வடிவிலானது என்பதை இன்னும் முக்கியமான வேறுபாடகவும் சொல்லலாம். அவ்வகையில் ஹேம்ஸ் எனும் காற்று தொகுதியில் உள்ள பல கவிதைகளுள் ’வலது பக்கம்’ என்ற கவிதை முக்கியமானதாகிறது.
அவளது வலது பக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்
எதிரில் இருக்கும் அதிகாரியோ
தேநீரை ஒவ்வொரு மடக்காக சுவைத்துக்கொண்டிருக்கிறார்
அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம்
அப்பாவினுடையது
ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவரின் எச்சம் அது
அதில் முள் ஒரு விநாடி நகரும்போது, எதிர்காலம்
எல்லாமும் நகர்ந்து விடுகிறது
அம்மா பதட்டத்தோடு பேசுகிறாள்
சில ஆவணங்களையும் சான்றிதழ்களையும்
காட்டுவதற்கு, பாலிதீன் பையிலிருந்து
அவற்றை எடுக்கிறாள்,
வழக்கம் போல் அவை நழுவி
தரையில் விழுகின்றன.
அம்மாவின் வலது பக்கம் யாருமில்லை
என, ஏறக்குறைய ஒரு சிறுகதையின் அனுபவத்தை உருக்கொண்டிருப்பது இதை தனித்துவமானதொரு கவிதையாக்குகிறது. அப்பா இறந்து எவ்வாறு? எதற்காக அம்மா அதிகாரியின் முன் உட்கார நேரிடுகிறது? அந்த அதிகாரி யார்? அம்மா ஏன் பதட்டமாக இருக்கிறாள்? என்ற கேள்விகளுக்கான பதில்களை வாசகன் தன் கற்பனைக்கு எற்றவாறு விரித்து பொருள் கொள்ள முடியும். ‘அம்மாவின் வலது பக்கம் யாருமில்லை’ என்று முடியும் இதன் கடைசி வரிகூட சிறுகதையைப் போலவே இருப்பது இக்கவிதையை சிறுகதையின் அனுபவத்திற்கு நெருக்கமாக கொண்டுவருகிறது.
வானவில்லின் நிறபேதங்கள்
சுருக்கமாகச் சொல்லப்போனால், தேவதச்சனின் கவிதைகள் மூன்று வகையான வண்ணங்களினால் ஆனவை எனலாம்: அ) காதுகள் இன்றுவரை பயின்றிரா ஒலியைக் கிளர்த்தவேண்டி, தேய்த்து பளபளத்து உருட்டிவிடப்படும் வார்த்தை நாணயங்களின் வழியில், கற்பிதத்தில் உருக்கொள்ளும் அர்த்தங்களின் இடைவெளியை பிணைக்கும் அறைகூவலை ஏற்றுக்கொண்டது போல,
மரங்களின் நினைவில்
மழையின் முகம்.
சிறைவாசியின் பிரக்ஞயில்
மண் மதில் சுவரின்
உருவம் கரையும்.
கைகள் விரியும் நேரம்
மறையும்
பேச்சின் கட்டற்ற கதறல்.
போக்குவரத்து சமிக்ஞைகளின்
ஆரஞ்சு நிறத்தில்
பதற்றம் தெறிக்கும்.
செல்லின் விதியை மீறிய
யோகியின் உடல்
புற்றில் அழுகும்.
இசை மறந்துபோனால்
பாறையின் உருகும் குழப்பத்தில்
ராவணா
உன் வீணை சிக்கும்.
கவிதையின்
உள்ளில்
புறம்
உடைத்தால்
அகம்
சிதைந்து சரியும்.(ஞாபக சிற்பம்: பிரம்மராஜன் தேர்ந்தெடுத்த கவிதைகள், 2004)
–என்றபதைப் போலவோ,
Let us go then, you and I,
When the evening is spread out against the sky
Like a patient etherized upon a table;
…Streets that follow like a tedious argument
Of insidious intent
To lead you to an overwhelming question
…And indeed there will be time
For the yellow smoke that slides along the street,
..And time for all the works and days of hands
That lift and drop a question on your plate;
Time for you and time for me,
And time yet for a hundred indecisions,
And for a hundred visions and revisions,
Before the taking of a toast and tea.
(T.S. Eliot, 1915)
என, ஆல்ப்ரெட் புரூப்ராக்கின் காதல் பாடலைப்போலவோ தனித்துவ வீச்சில் ஒலிப்பவை முதல்வகை. அதாவது, தொடர்பற்ற எண்ணங்களாகவும் படிமங்களாகவும் வரிகளுக்கிடையில் பதங்கமாகியபடி வரும் நனவோடையின் வெளியாகி காட்சிப்புலத்தையும் செவிப்புலத்தையும் நிறைத்தபடி, ஸ்தூல வடிவாகவும் அரூபமாகவும், நிற்பவை.
பற்கள் நகங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மிருதுவாக இருக்கும் தெருநாயிடமிருந்து தென்கிழக்காகவும் சாலையின் அலறியபடி செல்லும் ஆம்புலன்ஸில் நிழலுக்கு மேற்காகவும், வெவ்வேறு காலை நேரங்களிலும் வெவ்வேறு ஊர்களிலும் பறந்து கொண்டிருக்கும் காகங்களுக்கு நடுவிலும், சரியாக வாரப்படாத தலையோடு பூக்கடை வாசலில் நிற்கும் பெண்ணிடமிருந்து கூப்பிடு தொலைவிலும் உள்ளவை. லோயா தீவின் எரிமலையைப் போல அங்கிருந்து வீசும் ஹேம்ஸ் எனும் காற்றில் லோகாய மலர்களின் வாசனையும் கலந்தவை இவை.
அவற்றில் சில வழிதவறிவிட்டாலும், மரத்திற்கு மரம் தாவி, மேகச்சரிவுகளில் நுழைந்து வெளியேறி பறக்கும் காகத்திடமும் கழுகிடமும் பாதை வாங்கி எதிர்ப்புறம் செல்லும் வாகனங்களில் ஏறி, நிலவின் மீதேறி பவுர்ணமிக்கு இரண்டு நாள் முன்னதாகவோ பின்னதாகவோ அவை நம்மிடம் வந்து சேருகின்றன.
ஆ) என்
சைக்கிள்
சாலையோரம்
ஊர்ந்து சென்று
ஸ்டாண்டில் சென்றமர்ந்தது
நான்
ரேஷன் கடை க்யூவில்
ஒரு புத்தகத்தைப் புரட்டியவாறு
நின்றேன்
வெயில் கொடுமலையை
மேலே தட்டியும், நீர்த்தொட்டியும்
தணிவு செய்தன
க்யூ மெல்ல நகர்ந்து
என் யாத்திரையும்
என ஒரு சாமன்யனின் வாழ்கையின் சாதாரண நிகழ்வையும் யாத்திரையின் அசாதாரணத்துவமாக மாற்றிக்கொள்பவை.
காலம், அகாலம் இவை இரண்டுக்குமுள்ள சரிவில் வீடமைத்துக்கொண்டு, முதுகிலிருந்து கிளைத்தெழும் கெக்கலிச் சிரிப்பில் குடைபிடித்து சோகமற்று, சுரண்டல் பூதங்களை தீண்ட முயல்பவை இவை. நட்சத்திரங்களை வானில் வைத்து, ஜலத்தை ஆற்றில் விட்டு மனனியை சரித்திரத்தில் நிலைநிறுத்தி இலைகளை தாமே வியக்கும் மரநிழலில் ஊஞ்சலாடுபவை இவை. ’உன் பூதத்தை வெளியோட திறந்து வை உன்னை’ என வாசகனை அறைகூவி அழைப்பவை, இவை.
இ) அகாலத்தில் எழுப்பிச்
சொல்லப்பட்ட செய்தியொன்றைக் கடந்து
எவ்வளவோ தூரம் வந்து விட்டேன்
இப்போது வருந்த ஒன்றுமில்லை
அன்று கலைந்த தூக்கம் மட்டும்
இன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது
யாரோ ஒருவரின் வரவேற்பறையில்
நான் காத்திருக்கும் இந்த நாற்காலிவரை
(அகாலத்தில்: நீராலானது 2001)
என்று எவ்வித தயக்கமும் பாசாங்குகளும் இன்றி பொதுவில் தன் இதயத்தை காட்சிக்கு வைக்கத் துணிந்து விட்டதைப்போல
இன்னும் ஒரு மணி
நேரமிருக்கிறது வேலைக்கு
இடையில் இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
தண்ணீர் குடித்துவந்து
திறந்துவைத்த பேனா
வெளியில் காத்திருக்க
திரும்பி இப்போ எடுத்தாகிவிட்டது(இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது: அவரவர் கைமணல், 1981)
என்று நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாசகனுடன் உரையாட முயல்பவை இன்னொரு வகை.
ஓர் இலை உதிர்ந்தபோது ஒரு மரம் அதிர்ந்த விதத்தைப் பார்த்தோ, ஒரு குருவி திடீரெனெப் பறந்தபோது காற்றில் ஏற்பட்ட விரிசலைக் கேட்டோ, இவ்வளவு மெலிதானதை எப்படிக்கொண்டு வருவது என்று சற்று குழம்பினாலும், நம் நாசியில் விழுந்து உடையும் பிரியத்தின் ஒரு தனித்த மழைத் துளியைப் போல, காற்றை மூர்க்கமாய் கடந்து மறுமுனையறியாமல் பயணித்து இயல்பாக நம்மிடம் வந்து சேரும் இக்கவிதைகள், குழந்தையின் விரல்கள் மூடி வைத்திருக்கும் இனிப்பு மிட்டாயைப்போல நம் ஆதுரத்தையும் பிரியத்தையும் முந்திச்செல்பவை.
எரிமலைகள் தீண்டியிருந்தாலும் தண்ணீருக்கு அடியில் கிடந்து மெல்ல மெல்ல தன் கூர்மையை இழந்து கூழாங்கல்லாகி, நம் கண் வழியே பாய்ந்து செல்லும் நீரோட்டத்தின் என்றுமுள்ள ரகசியங்களை காட்டியபடி இருப்பவை இவை. தன் ரசனைக்கும் விருப்பத்தேர்வுக்கும் ஏற்ப, இக்கலைக்கூடத்திலிருந்து வாசகன் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும்.