தமிழர்  பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது

tamilcomputingநமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற  மாத கட்டணங்கள்  எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்!

 

பெரும்பாலான கணினி செயலிகள் (programs) ஆங்கிலம் பேசும் சந்தையில் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதால் மற்ற மொழிகளின்  (தமிழ் உட்பட) கலை நயங்களை உட்கொள்ளாமல் செயல்படுகின்றன. இதனால் நாம் இந்த செயலிகளை ஒரு மாற்றான்-தாய் மனப்பாங்குடன் பயன்படுத்துகிறோம். உதரணத்துக்கு Facebook  (முகநூல்) தளத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் வருமாறு பயன்படுத்துங்களேன். இவை ஒரு செயற்கையான ஒரு மொழிபெயர்ப்பின் இடைமுகத்தையும் எதிர்நோக்கையும் அளிக்கின்றன.

 

செயலிகள் தமிழில் இல்லை என்றாலும் குற்றம், அவை செயற்கையாக தமிழாக்கம் செய்யபட்டலும் குற்றம் என்று மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்றபடி இந்த நிலையில் நாம் என்ன பண்ணுவது? உண்மையில் இது அவ்வளவு மோசமான நிலையில் அல்ல – இயங்கு தளத்தின் (Operating System) அளவில் தமிழாக்கம் போதுமானதே; சமுக வலை தளங்களும், கணினி வழி விளையாட்டுகளும், பொழுதுபோக்கு செயலிகளும் வேறு பட்டவை – இதற்கு   தமிழில் முதன்மையாக செயலிகளை உருவாக்கவேண்டும் என்பது எனது உத்வேகம்.

 

முதலில் ஒரு ஆராய்ச்சி  நோக்குடன் இந்த நிலை எப்படி உருவானது என்று பார்க்கலாம்; பெரும்பாலான கணினி சார்ந்த செயலிகளும், இணைய சேவைகளும் கலிபோர்னியா சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூகுள்,  பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களினால் உருவாக்க படுகின்றன. இது பொருளாதாரத்தின் முதன்மை குறிக்கோளினால் மட்டுமே உருவாக்கப்பட்டு இலாப நோக்குடன் வெளியிடப்படுகின்றன. தமிழ் உலக மொழிகளில், பேசுவோர் எண்ணிக்கையில் இருபதாம் இடத்தில (70 மில்லியன்) உள்ளதால், இந்திய மொழிகளில் ஆறாம் நிலையில், இந்தி, வங்காளம், தெலுங்கு, உருது, மராத்தி, என்பவற்றின் பின் உள்ளது. ஆகவே நீங்களும் இதே பொருளாதார நோக்குடன் முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்? கேட்கவேவேண்டம் – தற்போது நன்றாக அனுபவித்துகொண்டிருக்கிறோம்.

 

ரொம்ப “நாம் என்ன ஒரு இளக்காரமான கடவுளின் தீண்டத்தகாத குழந்தைகளா?,” என்று உணர்சிவசப் படவேண்டாம்! கணினியும் நமது உடன்பிறப்பே; நமது இரத்தத்தின் இரத்தமாக தமிழ்ப் பற்று கொண்டது என்ற வகையில் பல கணித்தமிழ் வல்லுனர்கள் 1970-இள் இருந்து இன்று வரை செய்த அரும்பணியில் நமக்கு ஒருங்குறி, தமிழ் விசைப் பலகை, சங்க இலக்கியங்களின் மின் தரவு (பிராஜெக்ட் மதுரை), தமிழ் இணைய மாநாடு, ஆண்டிராய்டு, ஆப்பில் செயலிகள் என்ற அவர்களின் பங்களிப்புகளினால் நாம் இந்த நிலையில் உள்ளோம். நாம் கணினி உலகின் கோட்டைக்குள் ஒரு இடம் பிடித்துவிட்டோம் – ஆனால் சிகரம் எட்டி ஆங்கிலம் என்ற நாட்டில் நாடோடிகளாக இருப்பது என்னவோ கூச்சமான உண்மை செய்தி தான்.

 

ஏன் தமிழ் பேசும் பொறியாளர்கள், சிலிகான் பள்ளத்தாக்கின் நிறுவனங்களில் தலைவர்களாக இருந்தாலும், இந்தியாவில் கணினியின் எல்லா மொழிகளிலும் நிரலி எழுதும் நிறுவனங்கள் குக்கிராமங்களில் கூட சகஜமாக இருந்தாலும், தமிழ் கணிமையின் நிலை கேட்பாரே இல்லாமல் போனது? இதற்கு நேற்று இன்று நடந்த விளைவுகளை எதுவும் சுட்டி கூறமுடியது.  சிலருக்கு பொருளாதார வெற்றியை இது தராமல் இருக்கலாம்; ஆங்கிலம் காட்டிலும் தமிழ்-சார்ந்த தாழ்மை உணர்வு இருக்கலாம்; தமிழ் பற்றி ஒரு அக்கறையின்மை, இன அடையாளம்/இன-பற்று  இல்லாமை என எப்படியாகவும் இருக்கலாம். பற்று இருப்பவர்கள் பங்களிப்பார்கள் – பங்களித்து கொண்டிருக்கிறார்கள்.

 

இதை விவாதம் செய்ய என்னால் இங்கு முடியாது. இந்த நிலை மாறுவதற்கு என்னதான் வழி ?

 

சமுதாய மென்பொருள் உருவாக்கம் என்ற திற மூல மென்பொருள் வழியாக நாம் இந்த நிலையை மாற்றலாம். எனது நம்பிக்கையானது ஒரு திற மூல கட்டமைப்பை நாம் பொறியாளர்களாக இருந்து உருவாக்கினால் நாளை நாமும், அடுத்த தலைமுறையும் தமிழில் செயலிகளை எளிதாக உருவாக்கலாம். இந்த கட்டமைப்பு திற மூல மென்போருள் வழியாக மட்டும் சரியே உருவாகும்; இது ஒரு ஜி.என்.யூ. செயலிகள் (GNU tools), என்ற யூனிக்ஸ் (UNIX) கருவிகளின் அடிப்படையான தொகுப்பு, போல் அமையும்.

 

திற மூல மென்பொருள் என்பது ஒரு தாராளமான உரிமத்துடன் வழங்கப்படும். மேலும் இது பங்களிக்க ஆசை உடைய அனைவருக்கும் சுலபமாக கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

தமிழ் கணிமையில் நான் அறிமுகமானது ‘ஒலிமாற்றி’ என்று கூறப்படும் ‘transliterator’; இதை தமிழ்கருவி என்று நான் வெளியிட்டேன். இதனை தொடர்ந்து எனது வாழ்க்கை அடையாள-தேடலில் முக்கியமான ஒரு தருணத்தில் ‘எழில்’ என்ற தமிழ் வழி நிரலாக்கம் செய்யும் ‘நிரல் மொழி’ ஒன்றை 2007-ஆம் ஆண்டில் உருவாக்கி, மேலும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். ஆனால் இவை இரண்டும் பொதுவாக பயன்படாது – இவை குறிப்பிட்ட ஒரு குழுவிற்க்கென்றே உருவாக்கப்பட்டது.

 

எனது தமிழ் கணிமை அனுபவத்தில் ஓபன்-தமிழ் என்ற நிரல் தொகுப்பை சென்ற இரண்டு ஆண்டுகளாக பைத்தான் (Python), ஜாவா (Java), ரூபி (Ruby), என்ற கணினி மொழிகளில் தமிழ் நிரல்களை எளிதாக இயற்றும் வண்ணம் வழங்கி வருகிறேன். இந்த முயற்சியில் மட்டற்ற ஐந்து  பங்களிப்பாளர்கள் உள்ளனர். இது முற்றிலும் இலவசமாக கிடைகிறது.

 

இதனை கொண்டு ஒரு தமிழ் சொல் அடைவை உருவாக்கலாம்; தமிழ் தரவின் மொழி நடை, பயன்பாட்டின் அடிப்படையில் சொற்களை வரிசைபடுத்தலாம், எண்களை தமிழ்-எண் ஒலி வடிவாக்கலாம்; கேட்டு உணரும் செயலிகளை உருவாக்கலாம்; பேசும் கணிப்பான் உருவாக்கலாம். இந்த தொகுப்பில் தமிழ் சொற்களின் கரந்துறைமொழி (anagrams), இருவழிச் சொற்கள் (palindromes), வரிசைமாற்றம் (permutations) என்று இந்த சொல்லின் அருகில் உள்ள மற்ற சொற்களை ஆய்வு செய்யலாம். இந்த தொகுப்பை கொண்டு நீங்கள் காக்கா-வடை, கேள்வி பதில், சொல் புதையல், சொல் புதிர், என பல தமிழ் சொல்வளம் வளர்க்கும் வகை  பொழுதுபோக்கிற்கு உகந்த நிரல்களையும் வடிவமைக்கலாம்.

 

தமிழ் மென்பொருள் சந்தை உருவானால் நமது மொழி, வேறு ஒரு பரிணாம நிலையை எட்டிவிட இயலும். முதன்மை செயலிகள் உருவாக வாய்ப்புக்கள் அதிகமாகும் – இது நான் மட்டும் சொல்வதல்ல – குவாண்டம் இயற்பியல் கூட பெர்மியின் பொன் விதி (Fermi’s Golden rule)  என்ற கோட்பாடில் கூறுகிறது – “ஒரு புதிய குவாண்டம் நிலையை எட்டுவதற்கு முதல் நிலையில் உள்ள ஊக்க அளவும், முடிவு நிலையில் உள்ள வரவேற்பும் சேர்ந்து தீர்மானிப்பது”. அமெரிக்காவில் இதை “கட்டிவிடுங்கள், எல்லோரும் பயன்படுத்த வருவார்கள்!” என்பர்.

 

கணினி எண்களை மட்டுமே பேசும்; நாளடைவில் அங்கிலம் மட்டுமே அசுர வளர்ச்சி பெற்றதால், தமிழ் சில காலம் மட்டுமே பின்தங்கியுள்ளது. நாம் ஐந்தில் வளைத்து கொள்வோமே, அறுபது ஆகும் வரை தாமதிக்காமல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.