ஃபிரைட் ரைஸ்

கோபால் இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டுத் திரும்பும் போதே விக்னேஷை பார்த்துவிட்டான். கண்ணெல்லாம் சிவந்து ஓரமாக அமர்ந்திருந்தான். கோபால் பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து “ஏன்டா ராஜா” என்றான். விக்னேஷ் பேசாமல் வாசலை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். அரை டவுசர் அணிந்த காலில் வெள்ளையாக சொறிந்து கொண்ட தடங்கள். கோபால் சட்டையை கழட்டி கொக்கியில் மாட்டிவிட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு பாத்ரூமுக்கு சென்றான். முகங்கழுவி நிமிர்ந்த போது கையில் துண்டுடன் லலிதா “டீ சாப்டறேளா, இல்ல சாதம் போடவா” என்றாள்.
“அவன் என்னத்துக்கு உர்ருன்னு இருக்கான். நீ திட்டினயா?”
“உங்க புள்ளைக்கு காரணமா வேணும், எதுக்கெடுத்தாலும் நீலிக்குக் கண்ணு நெத்தீலன்னு வந்துடுமே” என்றாள் லலிதா.
“சாதம் போடு” என்று மேசை முன் அமர்ந்தான். “சாம்பவி எங்க?”
“எதுத்தாத்துல விளையாடீண்டுருக்கா. இவன் தான் சாய்ந்தரத்துல இருந்து மூஞ்ச தூக்கி வைச்சுண்டுருக்கான். இவன் ஃபிரெண்டு வைஷ்ணவ் ஆத்துல எங்கயோ சைனிஸ் ஹோட்டலுக்கு போறாளாம். என்னையும் கூட்டிண்டு போன்னு ஒரே அடம் புடிச்சுண்டுருக்கான்”
“வைஷ்ணவ் யாரு?”
“இன்னும் கொஞ்சம் சாம்பார் விட்டுகுங்கோ” என்று மேலும் ஊற்றினால் லலிதா.
சாப்பிடத் தொடங்கியவுடனே ஒரு கல் வாயில் கடிப்பட்டது. அதை வெளியே எடுத்தான்.
“குடுங்கோ வீசிடறேன்” என்று கையில் வாங்கி குப்பையில் கொண்டு போட்டாள்.
“இந்த மாசம் அரிசி ரொம்ப மோசம். எவ்வளவு தான் நானும் சுத்தம் பன்றது.” என்றாள்.
Father And Sonகோபால் வெளியே பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான். வீட்டுச் சுற்று சுவரின் மேல் ஒரு அணில் எதையோ கொறித்து கொண்டு அமர்ந்திருந்தது. இன்னொரு அணில் பின்னே வர அது மேல் சுவரின் மீது பாய்ந்து ஓடியது.
“சாதம் போட்டு மோர் விடு.” என்றான்.
அவனுக்குப் பரிமாறிவிட்டு கீழே சுவரோரம் அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் லலிதா. மெல்லும் போது தாடை இறுகி இறுகி இலகியது. கிட்டத்தட்டக் கண்ணங்கள் குழித்துவிட்டது. கண் உள்ளே போய் தலைமயிர் நரைக்க ஆரம்பித்துவிட்டது. ’கல்யாணத்துபோ எவ்வளவு செழிப்பா இருந்தார். கண்ணங்கள் புஸ்ன்னு இருந்தது. எனது தங்கைகள் அவர் கண்ணத்தை அழகு காட்டித்தான் கிண்டல் பன்னுவா…’ என்று நினைத்துக்கொண்டாள்.
கோபால் தட்டைத்தூக்கி மோரைக் குடித்துவிட்டு எழுந்தான்.
“தட்டுலயே அலம்பிக்குங்கோ.”
கையைத் துடைத்துவிட்டு ஈஸி சேரில் அமர்ந்தான். “சொல்லு, அவனுக்கு என்ன வேணுமாம்.”
“போன மாசம் அவன் ஃபிரேண்ட் ஆத்துக்கு விளையாட போனும்னு கொண்டு போய் விட்டுட்டு வந்தேளே, அன்னைக்கு அவா ஆத்துல திடீர்னு ஏதோ சைனீஸ் ஹோட்டலுக்கு போயிருக்கா. இவன் இருந்தான்னு இவனையும் கூட்டீண்டு போயிருக்கா. அவால்லாம் கார்ல போறாளேன்னு இவனும் ஆசப்பட்டு போயிருக்கான். அங்க போயி இவனுக்கும் சாப்ட வாங்கித் தந்திருக்கா..”
“சைனீஸ் ரெஸ்டாரன்டுலயா?” என்று கேட்டான்.
“ஹும். ஆனா அந்த வைஷ்ணவோட அம்மாக்கு தெரியும். அதனால இவனுக்கு வெஜிடபிள் ஃபிரைடு ரைஸ் வாங்கித் தந்திருக்கா.”
“இவனுக்குத் தான் ஃபிரைட் ரைஸ் பிடிக்காதே?” என்றான் கோபால்.
“இவனுக்கு சொல்லரத்துக்கு கூச்சம். அவால்லாம் இங்கிலிஷுலேயே வேற பேசீண்டுருந்திருக்கா. இவன் வாய மூடிண்டு சாப்டுருக்கான். ஆனா அந்த கடைல வேற மாதிரி இருந்திருக்கு. அது அவனுக்கு புடிச்சுபோயிடுத்து.”
“அவன் உங்கிட்ட சொன்னானா?”
“ஆமாம். சாப்ட்டுட்டு வந்து அடுத்த நாள் தனியா சொன்னான். அப்பவே நாலு போட்டேன். கண்டவாளோட போய் சாப்பிடுவியான்னு. ஆனா இன்னைக்கு மறுபடியும் வைஷ்ணவ் ஆத்துல அந்த ஹோட்டலுக்கு போறாளாம். விக்னேஷயும் கூட்டீண்டு போறோம்னு அந்தப் பையன் இங்க வந்தான். நான் தான் நாங்க இன்னிக்கி கோயிலுக்கு போறோம்னு அந்தப் பையன அனுப்பிச்சுவிட்டேன். இவன் அப்போத்துலருந்து அழுதுண்டுருக்கான்”
கோபால் விக்னேஷை திரும்பி பார்த்தான். பேனாவைத் தரையில் நகர்த்தி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். மண்டையில் சுருள் சுருளாய் மயிர். ’என்னைப் போலவே’ என்று நினைத்துக்கொண்டான் கோபால். விளையாடும் போது தனியாகவே பேசிக்கொள்வான். அவ்வப்போது அவனுக்குத் தெரியாமல் கோபால் அதைக் கேட்பதுண்டு. எப்போதும் வன்முறையான வசனங்கள் தான் வரும் “டேய், ஒன்ன கொன்னுருவேன்டா.. ஒதச்சேன்னா தலசுத்தி குப்புற விழுவ..” என்று.
“அந்தப் பையன இவனுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் கோபால்.
“அந்தப் பையன் ஆத்துக்கு எதுதாப்புல தான் இவன் விளையாட்ர கிரவுண்டு. அவாத்துல இருக்கற நாய இவன் போய் போய் பாக்கறதுனால அந்த பசங்கோ ஆத்துக்குள்ள அழைச்சு விளையாட விட்டுருக்கா. அதுலேருந்து இவன் அப்பப்போ விளையாட அங்க போவான்”
லலிதா சமையிலின் காட்டம் தாளாமல் இருமினாள். ஜன்னல்களைத் திறந்துவிட்டாள். கரித்துணியில் வாணலியை பிடித்துக் கொண்டு எதையோ வதக்கிக் கொண்டிருந்தாள். கோபால் விக்னேஷை பார்த்து “இங்க வாடா கண்ணா” என்றான். விக்னேஷ் குனிந்தவாறே கண்களை மட்டும் தூக்கி பார்த்துவிட்டு விளையாட்டை தொடர்ந்தான்.
“ஃபிரைட் ரைஸ் கேட்டயாமே. அது எங்கப்பா இருக்கு?” என்றான் கோபால்.
மெதுவாக எழுந்து தலையை குனிந்து கொண்டே வந்தான் விக்னேஷ். ஈஸி சேரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டான். கோபால் அவனை கைகளால் அணைத்துக்கொண்டு “சொல்லு கண்ணா, அம்மாக்கிட்ட ஃபிரைட் ரைஸ் கேட்டயா” என்றான்.
ஒரு நொடி அம்மாவைப் பார்த்துவிட்டு திரும்பி இறுகிய முகத்துடன் அடித் தொண்டையிலிருந்து “ஆமா” என்றான் விக்னேஷ்.
வாயை கோணித்து “ஆம்மா” என்று பழிப்பு காட்டினாள் லலிதா. “உங்கப்பாவ கண்டா உனக்குக் கொஞ்சல் வந்துடுமே”.
லலிதாவை பார்த்து முகத்தைச் சுருக்கி தலையசைத்து “ப்ப” என்றான் விக்னேஷ்.
“ப்ப கீன்ன வாய கிழிச்சுவிட்டுடுவேன் பாத்துக்கோ” என்றாள்.
“அந்தக் கடை எங்க இருக்கு”
“அது உன் ஆபிஸ் போனோல்ல அங்க தான் இருக்கு” என்றான் விக்னேஷ்.
“எங்கடி அது?”
“என்னண்ணா அவன் தான் கேக்கறான்னா நீங்களும் அவனொட சேந்துண்டு”
“சொல்லேன் பாப்போம்” என்றான் கோபால்.
“ஏதோ ஜிங்கோ பிங்கோ.. அந்த பையன் தான் இன்னைக்கு இவன அழச்சுண்டு போக வந்தப்போ சொன்னா…”
“அதான் நீ விடலயே” என்றான் விக்னேஷ் கோபமாக.
“என்னடா வாய் நீள்றதா. இரு உங்கப்பா போகட்டும்…”
“சொல்லுமா” என்றான் கோபால்.
“பேர் சரியா தெரியல. ஆனா நுங்கம்பாக்கத்துல உங்க ஆபீஸன்ட தான்”
“ஜிங் சாவா”
“ஆமாம் அத மாதிரி தான் ஏதோ பேரு” என்றாள் லலிதா.
“வாசல்ல தண்ணியெல்லாம் பீச்சி அடிக்கிற மாதிரி இருக்கும்பா” என்றான் விக்னேஷ்.
கோபால் சிறிது நேரம் பேசாமல் விசிறிக் கொண்டிருந்தான். விக்னேஷ் அங்கேயே நின்று அப்பாவின் முகத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.
“சரிப்பா நாளைக்கு அப்பா உனக்கு வாங்கீண்டு வரேன். நீ போய் விளையாடு” என்றான்.
விக்னேஷ் சிரித்த முகத்துடன் ”அப்பா, அந்த ஃபிரைட் ரைஸ்ல அரிசி நீள நீளமா இருக்கும்பா.. குட்டிக் குட்டி சேவ மாரி. மொளகால்லாம் நீள நீளமா அறுத்து போட்டுருப்பா. ஆனா அது காரமே இருக்காது. சிவப்பு கலர் மொளகா மஞ்ச பச்சனு கலர் கலரா இருக்கும். ரொம்ப நன்னாருக்கும்”
“இருக்கும் இருக்கும்” என்று முறைத்தாள் லலிதா.
அதைக் கண்டுகொள்ளாமல் விக்னேஷ் தொடர்ந்தான், “அப்பறம் நீ அன்னைக்கு வாங்கீண்டு வந்தயே ஒன்னு. கொட்ட கொட்டயா இருக்குமே”
“நவாப்பழமா”
“இல்லப்பா, மஞ்ச கலர்ல பல்லு மாறி இருக்குமே”
“மக்காச்சோளமா”
“ஆங், அது குட்டிக் குட்டியா இருக்கும் அதுக்குள்ள” என்றான் விக்னேஷ்.
“சரிடா கண்ணு. அப்பா கண்டிப்பா நாளைக்கு வாங்கீன்டு வறேன், நீ போய் விளையாடு.”
விக்னேஷ் “நான் மகேஷ் ஆத்துக்கு விளையாடப் போறேன்.” என்று சொல்லிவிட்டு குதித்துக் குதித்து வெளியே ஓடினான்.
கோபால் அவன் சென்றபின் சிறிது நேரம் கழித்து “அந்த கடைல கொஞ்சம் வெல தான் ஜாஸ்தியா இருக்கும். ஒரு தடவ எங்க ஆபிஸ்ல இருக்கறவாளுக்கு வாங்கீண்டு வரப் போனேன். நானூறு ஐநூறுன்னு வந்தது ஒரு ஆளுக்கே.
“அப்ப எதுக்குன்னா.. அதுவும் மாசக் கடைசி வேற”
“பரவால்லடி. கொழந்தேளுக்கு என்ன வாங்கி தரோம், ரேஷன் அரிசி தான் பாவம். எப்பாவாவது ஒரு தடவ தானே, சாப்ட்டு போட்டும் பாவம்.”
சாம்பவி உள்ளே வந்தாள். “தண்ணி குடும்மா” என்றாள். “ஆமா, வெளிய போய் ஆடு ஆடுன்னு ஆடவேண்டிது. வீட்டுக்கு வந்ததும் டிவி பாத்துட்டு, சாப்ட்டு தூங்கவேண்டிது. இன்னும் ரெண்டு வருஷம் ஆனா பப்ளிக் எக்ஸாம் எழுதனும். படிக்கலாமோல்யோ”. என்றாள் லலிதா.
“இந்த அம்மா எப்பவுமே இப்படிதான்பா நை நைன்னு ஏதாவது சொல்லீண்டே இருப்பா” என்றாள் சாம்பவி. தனது அம்மாவின் தலைக்கு பின் கையை தூக்கிப் பழித்துக்காட்டினாள்.
கோபால் சிரித்து கொண்டே “உங்கம்மா பப்ளிக் எக்ஸாம்ல எவ்வளவு மார்க் வாங்கினான்னு கேளேன்” என்றான்.
“என் புராணம் இப்ப என்னத்துக்கு. உங்க அப்பா மட்டும் என்ன? பிளஸ் டூ ரெண்டு தரம் கோட்டு. கைகால் அலம்பீண்டு வாடி”
மின்சாரம் வரவே காற்றாடி சுழன்றது. கோபால் அப்படியே கண்ணை மூடினான்.
வண்டிகள் நிறுத்துமிடத்தில் நின்று தான் அங்கு வேலை பார்ப்பவர்கள் புகைபிடிப்பார்கள். பிரபாகருடன் கோபாலுக்கு கொஞ்சம் நட்புண்டு. இருவரும் துக்ளக் வாசகர்கள். பிரபாகருக்கு தான் அன்று மதியம் காத்திருந்தான். உள்ளே இருந்து யார் வெளியே வந்தாலும் திரும்பி திரும்பிப் பார்த்து கொண்டிருந்தான். நல்ல வேளையாகப் பிரபாகர் வரும் போது இவனோடு வேறு செக்கயூரிட்டிகள் யாருமில்லை. பிரபாகர் அவன் நண்பர்கள் சூழ புகைபிடித்துக் கொண்டிருந்தான். கோபால் அவனை பார்த்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த பிரபாகர் பிற நண்பர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்றவுடன் கோபாலின் இடத்துக்கு வந்தான். இவன் அசட்டுப் புன்னகை செய்தான்.
“என்ன கோபால் சார். போன வாரம் நைட் ஸிஃப்டா? அதான் பாக்கவே முடியல” என்றான்.
“ஆமா சார்” என்று சொல்லிவிட்டு லேசாக சுற்றி பார்த்துக்கொண்டான்
கண்களை சுருக்கி வலிந்த சிரிப்புடன் “சார்..” என்றான் கோபால்.
“என்ன கோபால், சொல்லுங்க”
“இந்த மாசம் பையனுக்கு கொஞ்ச..”
“பணம் எதுவும் வேணுமா கோபால்” என்றான் பிரபாகர்.
“ஆமா சார். ஒரு ஐநூறு. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் குடுத்துடறேன்” என்றான்.
“பிரச்சினை இல்லை கோபால்” என்று மெதுவாக பர்ஸை திறந்து பணத்தை எடுத்து அவன் மேசை மேல் இருந்த ஃபோனுக்கு கீழே நுழைத்தான். “போதுமா கோபால்?”
“போதும் சார். ரொம்ப தேங்க்ஸ்” என்றான் கோபால்.
மாலை போகும் வழியில் ஜிங் சா ரெஸ்டாரன்டில் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்தான். “இது ஃபுல் வெஜிடேரியன் தான? முட்டை எல்லாம் இருக்காதுல்ல?” என்று கேட்டான் கோபால்.
“நோ சார். ப்யூர் வெஜ்ஜி”
“ஓகே. ஒன் பார்சல்” என்று ஐநூறை நீட்டினான்.
கோபால் வீட்டருகே வண்டியில் செல்லும் போதே விக்னேஷ் அவனை எங்கிருந்தோ பார்த்துவிட்டான். வண்டியுடனே ஓடி வந்தான். கோபால் வண்டியை நிறுத்தி விக்னேஷை வண்டியின் முன் ஏற்றி அமர்த்திக் கொண்டான்.
வண்டியில் போக போக “டேய் ராம்! எங்க வீட்டுல இன்னைக்கு ஃபிரைட் ரைஸ் தெரியுமா, சைனா ஃபிரைட் ரைஸ்!” என்று சொல்லி கையசைத்தான்.
வீட்டுக்கு வந்தவுடன் ஓடிசென்று கை கால் கழுவி வந்து அமர்ந்து கொண்டான் விக்னேஷ்.
“லலிதா வா சாப்டலாம் எல்லாத்துக்கும் வாங்கிண்டு வந்துருக்கேன்” என்றான் கோபால்.
“எல்லாத்துக்குமா?”
“அவனுக்கு மட்டும் சைனா நமக்கு எல்லாம் மசால் தோச, ரவா தோச”
“இவன் பெரிய சைனாக்காரன்.” என்று அவனை இடித்தாள் சாம்பவி.
“கீழ உக்காருடா. பெரிய இவன். டேபில்ல தான் சாப்டுவயோ” என்றாள் லலிதா.
“விக்னேஷ், அக்காவுக்கும் கொஞ்சம் குடுக்கனும் என்ன?”
“ஊம், சரி” என்றான் விக்னேஷ்.
அவனுக்கு முன் வெள்ளை அட்டைப் பெட்டியை வைத்தார்கள். லலிதா உற்றுப்பார்த்து “இதென்னடா வரைஞ்சுருக்கு” என்று பெட்டியை தடவினால்.
“அது சைனீஸ்மா” என்று சொல்லி விக்னேஷ் உரக்கச் சிரித்தான்.
“இவுனுக்கு ரொம்ப தெரியும்” என்றாள் லலிதா. பெட்டியை பிரித்து “சாப்பிடுப்பா.. சாப்டு.” என்றாள்.
“அந்த முள்ளு ஸ்பூன் இருக்குமே அது எங்க? அதுவும் வேணும்” என்றான் விக்னேஷ்.
“அது ஃபோர்க்குடா” என்றாள் சாம்பவி.
“அந்தப் போர்க்க குடுங்கோண்ணா. அதில்லாம இவன் சாப்ட மாட்டானாம். தினம் அதுல தான் ஐயா சாப்டறாரு”
“அது ஃபோர்க்டி. போர்க்குனா மாம்சம். அதுவும்… சரி இந்தா” என்று பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான் விக்னேஷ்.
முகமெல்லாம் சிரிப்புடன் வாயில் ஃபிரைட் ரைஸை எடுத்து வைத்தான் விக்னேஷ்.
“ஙை ஙை” என்று ஓசையிட்டு மென்றான் சாம்பவியை பார்த்து.
“இங்க பாரு மொளகா.. ஆனா காரமே இல்லயே..” என்று வாயில் போட்டான்.
அடுத்த மிளகாயைக் குத்தி எடுத்தான். முள் கரண்டியின் முனையில் மெல்லிய சிவப்பு நிறத்தில் ஒரு துண்டு. மிதமாக வறுக்கப்பட்டது.
“இதென்னடா., உருளகிழங்கா” என்று உற்றுப்பார்த்தாள் லலிதா. அந்தத் துண்டின் பரப்பில் நார் நாராய் தெரிந்தது. எல்லோருக்கும் அது என்னவென்று தெரிந்துவிட்டது.
“ஏண்ணா! இது வெஜ்ஜிட்டேரியன்னு தானே வாங்கினேள்?”
குழந்தை வாய் நிறைய ஃபிரைட் ரைஸை வைத்துக்கொண்டு உறைந்துவிட்டது. கண்ணில் கத கத வென்று நிறைந்த கண்ணீரில் விளக்கின் வெளிச்சம் மின்னி ததும்பியது. சாம்பவிக்கும் கண்ணீர் வந்துவிட்டது. அறையின் நிசப்தத்தை சொட்டும் நீர்த் துளிகள் கலைத்து கொண்டிருந்தது.
கோபால் தான் அந்த மௌனத்தை உடைத்தான்.
“அது ஒன்னும் இல்லப்பா.. குடு வீசிடலாம்” என்று முள் கரண்டியை கொண்டு போய் வெளியே வீசிவிட்டு வந்தான்.
குழந்தை வாயில் சாதத்துடன் அப்படியே உட்கார்ந்திருந்தது. லலிதா அவளது பார்சலை மூடி விட்டாள்.
“சாப்டு கண்ணா.. ஒன்னுல்ல” என்றான் கோபால்.
“ஏண்ணா…” என்றாள் லலிதா.
அவளிடம் கண்ணைக் காட்டி அமைதியாக்கினான் கோபால். “சாப்டுப்பா. ஒன்னும்ல்ல. அப்பா சின்ன வயசுல முட்டை எல்லாம் சாப்டுருக்கேன். நீ சாப்டு” என்றான்.
குழந்தை கண்ணில் நீர் வழிய விழித்துக் கொண்டே இருந்தது. கோபால் ஃபிரைட் ரைஸை தன் பக்கம் இழுத்து ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு “சாப்டுடா.. அப்பா சாப்டறேன் பாரு” என்றான்.
குழந்தை தயக்கத்துடன் எடுத்துச் சாப்பிட தொடங்கியது. பின் இயல்பாக ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தது. கண்ணீர்த் தடம் உலர்ந்திருந்த முகத்தில் விழி மலரப் புன்னகைத்தது, வாய் நிறைய சோற்றோடு.

3 Replies to “ஃபிரைட் ரைஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.