ஸ்வெட்லானா அலெக்ஸவிச் – என் நாட்குறிப்பிலிருந்து

 svetlana

2015இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கிய ஸ்வெட்லானா அலெக்ஸ்விச் ரஷ்ய ஆஃப்கானிஸ்தானிய யுத்த அனுபவங்கள் பற்றி விரிவாக எழுதிய புத்தகம் Zinky Boys. இந்த இதழ் தொடங்கி, அப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகிறோம்.

14 ஜூன் 1986

யுத்தத்தைப் பற்றி இனி ஒரு சொல் கூட எழுதக்கூடாது என எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். இரண்டாம் உலகப்போர் பற்றி எழுதிய ‘யுத்தம் என்பது பெண்ணல்ல’ (War is not a Woman) புத்தகத்தை முடித்த வெகுநாட்களுக்குப் பின்னும் மூக்கில் ரத்தம் வரும் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் மனம் ஒடிந்துப்போவேன். கிராமப்புறங்களில் ஆற்று மணற்படுகையில் மீனவர்கள் வீசும் மீன்களைப் பார்ப்பதற்குத் திராணியற்று இருந்தேன். ஆறின் ஆழமறியாப் பகுதிகளிலிருந்து இழுத்து வரப்படும் மீன்களின் கண்ணாடியைப் போன்ற பளபளப்புடனான முட்டைக்கண்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வயிற்றைப்பிரட்டும். உடலலளவிலும் மனதளவிலும் நம் எல்லாருக்கும் வலியைப் பொருத்துக்கொள்ளும் உச்சநிலை ஒன்றுண்டு. அதை நான் அடைந்துவிட்டிருந்தேன். கார் ஏறிய பூனையின் கிரீச்சிடல், நசுங்கும் புழு எனப் பார்த்தவை எல்லாம் என்னை பைத்தியமாக்கிக்கொண்டிருந்ததோ எனத் தோன்றியது. மிருகங்கள், பறவைகள், மீன் என சகல ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கான உரிமை இருப்பதை முழுமையான உணர்ந்தேன்.
திடீரென ஒரு நாள், திடீரென்று எனச் சொல்லமுடியுமா எனத் தெரியவிலை ஏனென்றால் யுத்தம் என்னவோ ஏழு வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தது…
இளம் பெண் ஒருத்தியை ஒரு நாள் வண்டியில் ஏற்றிக்கொண்டோம். அவளது அம்மாவுக்கு உணவு வாங்கிவருவதற்காக மின்ஸ்க் பகுதிக்குச் சென்றிருந்தாள். ஒரு பெரிய பையிலிருந்து கோழித்தலை எட்டிப்பார்த்தது. கூடவே, பை நிறைய ரொட்டியும் அடைத்திருந்தாக ஞாபகம்.
அவளது அம்மாஅவளுக்காக கிராமத்தில் காத்திருந்தாள். இல்லை, தோட்டத்துக்கதவுக்கு அருகே நின்று கதறிக்கொண்டிருந்தாள்.
‘அம்மா’, அந்தப்பெண் அம்மாவிடம் ஓடினாள்.
‘ஐயோ என் குழந்தையே. நமக்கு ஒரு கடிதம் வந்துவிட்டது. ஆஃப்கானிஸ்தானில் நமது ஆன்ரே..ஐயோ..வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இவான் ஃபெடொரினோவ்வைப் போல. சின்ன குழந்தைக்கு சின்ன சவப்பெட்டி போதும், இதுதானே அவர்கள் சொன்னது? ஆனால் என் அருமை ஆன்ரே நல்ல தடிமனா ஆறடியில் இருப்பானே. “என்னைப் பற்றி பெருமைப்படு அம்மா, நான் இப்போ பறக்கும் போர்வீரன்” அப்படின்னு எழுதினானே. ஐயோ ஏன்? ஏன்? யாராவது சொல்லுங்களேன்? ஏன்?’
‘ஒவ்வொரு வருத்தமும் இருபது நிழல்கள் கொண்டவை ‘ – ஷேக்ஸ்பியர் ‘ரிச்சர்ட் 2’
பின்னர் அடுத்த வாரம் வேறொன்று நடந்தது.
பாதி காலியாயிருந்த பஸ் நிறுத்தத்தில் இருந்தேன். ஒரு பெட்டியோடு ஆபிசர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே உட்கார்ந்திருந்தவன் ஒல்லியான சிறுவனாக இருந்தாலும் மொட்டை அடித்திருந்ததால் ராணுவ வீரன் எனச்சொல்லிவிடலாம். ஒரு முள்கரண்டியால் கையிலிருந்த செடித்தொட்டியை நோண்டிக்கொண்டிருந்தான். கிராமப்புறப்பெண்கள் சிலர் அவனருகே சென்று உட்கார்ந்தனர். அவர்களுக்கே உரிய இயல்புடன் புது முகங்கள் யார் எங்கு செல்கிறார்கள் என விசாரித்தனர். ராணுவச்சிறுவனை அவனது வீட்டுக்கு ஆபிஸர் அழைத்துசெல்வதை அறிந்துகொண்டனர். அவனது மனம் பேதலித்துவிட்டது: ‘காபூலிலிருந்து கிளம்பியதியலிருந்து அவன் நோண்டிக்கொண்டே இருக்கிறான். கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு நோண்டுகிறான். முள்கரண்டு, மண்வெட்டி, குச்சி, பேனா..எதைக்கொடுத்தாலும் நோண்டுகிறான்’. முதல் முறையாக நிமிர்ந்து பார்த்த அந்த சிறுவன் ‘எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டும்…ஒரு அகழியை நோண்டுகிறேன்..அதிக நேரம் ஆகாது..சகோதரக்குழிகள் என அவற்றைக் கூறுவோம்..உங்க எல்லாருக்கும் அப்படி ஒரு ஆழமான அகழியை நோண்டுகிறேன்..’
கண்களளவுக்கு பெரிய கருவிழிகளை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.

zinky

யுத்தம் தொடங்கி ஏழு வருடங்கள் ஆன பின்னும் என்ன பேசுகிறார்கள் அவர்கள்? பத்திரிக்கைகளில் என்ன எழுதுகின்றனர்? நமது கிழக்கு எல்லையைப் பாதுகாக்கவும், வர்த்தக வீழ்ச்சியை சரிசெய்யவும் இம்மாதிரியான உலக அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டியிருப்பதாக எழுதுகிறார்கள். நகரத்தின் அடுக்குமாடிக்குடியிருப்புகளுக்கும், அழகான கிராமப்புற வீடுகளுக்கும் கடிதங்கள் சென்றுகொண்டிருப்பதாக கிசுகிசுப்பான ரகசியங்கள் கேட்கின்றன..அவற்றைத் தொடர்ந்து கொஞ்ச நாட்களில் துத்தகப் பெட்டிகள் தொடர்கின்றன. 1960களில் செய்யப்பட்ட முயல் பெட்டிகளில் அடக்கமுடியாமல் பிதுங்கி வரும்…(க்ருஷ்செவ்கி எனும் பெயர்). ஜில்லிட்ட உலோக சவப்பெட்டி மீது தாங்கஒண்ணா துயரத்தில் கவிழும் அம்மாக்கள் சில நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ‘இந்த நாற்றுப்பற்று உன் கடமை’ என பள்ளிக்கூடங்களில் மேடையில் உரையாற்றி பிற குழந்தைகளுக்கு வலியுறுத்தச் செய்யவும் தயாராகிறார்கள். நம் இழப்புகளை சிறிதளவேனும் குறிப்பிடும் நாளிதழ்களின் குரல்வளையை நெருக்கி ஊமையாக்கிவிடுகிறார்கள். ‘நம் ராணுவப்படைகளின் சிறுக்குழுக்கள் உடன்பிறந்த சகமனிதர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கான எதிர்காலத்தை நித்தியப்படுத்துகிறார்கள்’ என நம்ப வைக்கப்படுகின்றனர். நமது கிராமங்களில் (கிஷ்லாக்ஸ்) நல்லதொரு பணியை செய்துவருகிறார்கள் எனவும், நமது ராணு மருத்துவர்கள் ஆஃகானிய பெண்களுக்குப் பிரசவம் பார்க்கிறார்கள் எனவும் நம்பவைக்கிறார்கள். பலரும் அதை நம்பவும் செய்கிறார்கள். விடுப்பில் வரும் ராணுவ வீரர்கள் பள்ளிக்கூடங்களில் நாம் அழுதபடி சொல்லவேண்டிய செய்திகளை பாடிக்காட்டுகிறார்கள்.
அவர்களில் ஒருவரோடு நான் நீண்ட நேரம் பேசினேன். அவர் முன்னால் இருந்த இரு முடிவுகளின் அபத்தத்தை புரிய வைக்க முயற்சித்தேன்: சுடுவதா அல்லது சுடாமல் இருப்பதா. ஆனால் எங்களால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அவருக்கு இந்த இரு திசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. எது சரி? எது தவறு? ‘சமத்துவம், சோஷியலிசத்தின் பெயரில் கொல்வது சரியா?’ நியாய உணர்வின் எல்லை அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கட்டளையில் இருந்தது என நம்பிய இளம் வயதினர்.
யூர் கர்யாகின் ஒரு முறை எழுதினார்: ‘ஒரு மனிதனை பற்றிய கருத்தைக் கொண்டு அவனது வாழ்வை நாம் எடைபோட முடியாது. அப்படிப்பட்ட கோணம் முழுமையானதாக என்றைக்கும் இருக்காது’. மனிதன் தனக்குள்ளாகவே தொலைந்துபோனவன் என காஃப்கா எழுதியதை பின்னர் படித்தேன்.
ஆனாலும் நான் யுத்தத்தைப் பற்றி மீண்டும் எழுத விரும்பவில்லை…

5-25 செப்டம்பர் 1986

டாஷ்கெண்ட் விமானநிலையம். நாசியைத் துளைக்கும் பப்பாளிப்பழ வாசம். விமானநிலையம் என்பதை விட பப்பாளித்தோட்டம் எனும்படியாக. அதிகாலை ரெண்டு மணி. முப்பது டிகிரி செல்ஷியஸ். காட்டுப்பூனைபோன்று தடித்திருப்பவர்கள் என அழைக்கப்படும் ஆஃப்கான் மக்கள் பயமறியாத வேகத்தில் வண்டி ஓட்டுகிறார்கள். சிறுவர்களைப் போலிருக்கும் ராணுவ வீரர்கள் வெப்பத்தைத் தேடி வந்திருந்த பயணிகளுக்கு இடையே தங்களது உடைந்த கைகால்களால் பெட்டிப்படுக்கைகளை உந்திச்சென்றனர். யாரும் அவர்களை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை – இங்கு அவர்களைப் பார்ப்பது மிக சகஜமான விஷயம். சரடோபவ், கஸான், நோவோசிபெர்க்ஸ், வோரோஷிலோவோகிராட், கீவ், மின்ஸ்க் ஊர்களுக்குக் டிக்கெட் கிடைக்காது வாரக்கணக்கில் பழைய செய்தித்தாள்கள், தினசரிகள் மீது படுத்துறங்கும் கும்பல். எப்படி முடமானார்கள்? எதைக் காப்பதாக சொல்லிக்கொண்டார்கள்? அதெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை. அவர்களை தனது மலர்ந்த கண்களால் பார்த்தபடி அமர்ந்திருந்த சிறுவன், ஒரு ராணுவ வீரனை யாசகம் கேட்கும் குடிகாரப்பெண் ஒருத்தி ‘இங்க வா அன்பே..உன்னை நன்றாக கவனிக்கிறேன்…’ என்பவள் தவிர இவர்களை யாரும் லட்சியப்படுத்துவதில்லை. தனது கைத்தடியை வீசி அவளை விரட்டுக்கிறான். ஆனாலும் அவள் அசராமல் மென்மை மாறாது சோகமாக ஏதோ முணுமுணுத்துவிட்டு விலகிச்சென்றாள்.
மலினமான உறுப்புகள் பொருத்தப்பட்டதாகப் பேசியபடி சோவியத் உயரதிகாரிகள் என்னருகே உட்கார்ந்திருந்தனர். காலரா, மலேரியா வியாதிகள் பற்றியும் பேசினர். அது தவிர, யுத்தம் தொடங்கிய காலத்தில் குளிப்பதற்கும் கழுவுவதற்கும் கிணறோ, சமையலறையோ, குளியலையறையோ இல்லாது எப்படித் திண்டாடினர் எனப் பேசினர். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ரேடியோ பெட்டிகள், காணொளிகளைப் பதிவு செய்யும் சாதனங்கள் சோனியா ஷார்ப்பா என்பதைப் பற்றியும் பேசினர்.