ஜெஸ்ஸா க்ரிஸ்பினை பேட்டி காண்கிறார் மாட்டில்டா பெர்ன்ஸ்டைன்.
அக்டோபர் 15, 2015
“எங்களிடம் வாருங்கள், புரிந்துகொள்ளும் திறனுடையவர்களிடையே, உங்களுடைய நொறுங்கலை முழுதாக முடிக்கலாம்,” என்று எழுதினார் ஜெஸ்ஸா க்ரிஸ்பின், தன் “The Dead Ladies Project: Exiles, Expats and Ex-countries (University of Chicago Press) புத்தகத்தில். வெகு காலமாக உன்னத்தமாக வாழ்வாரும், சளைத்தவரும், கனவுலகில் குடியிருப்போரும், எதுவும் உற்சாகப்படுத்தாதவரும் வந்தடையும் இடமாக அறியப்பட்ட பெர்லின் நகரையே அப்படி உருவகப்படுத்தி இருக்கிறார், ஆனால் அவர் தன்னுடைய இந்த நுழைவையும் அப்படிச் சொல்லி இருக்கலாம். இது இலக்கிய அலசல், வரலாறு, வாழ்க்கைச் சித்திரம், பயணக் குறிப்பு, தத்துவம் மேலும் ஊக இலக்கியம்.
மரித்த பெருமாட்டிகள் பற்றிய செயல்திட்டம் எனும் தலைப்புள்ள இது ஒரே நேரம் விசாரணையாகவும், உயிரூட்டும் முயற்சியுமாக உள்ளது. இதில் கிரிஸ்பின் அயல் நாட்டு வாசியாக இருந்து இறந்தவர்களில், மரபுடைத்தவர்களில் சிலரின் வாழ்வை அலசுகிறார். முன்னாளில் அவர்கள் நாடு கடத்தப்பட்டவர்களாக வாழ்ந்திருந்த யூரோப்பிய நகர்களினூடே பயணிக்கிற போது இதைச் செய்கிறார். படைப்புணர்வுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்றும், தொடர்ந்த நசுக்கல்களையும், அன்னியப்பட்ட நிலையையும், நம்பிக்கையின்மையையும்,சுய சந்தேகத்தையும் தாங்கிக் கொண்டு அவற்றை மீறி வாழ்வதற்கு இருந்த பிடிவாதத்தை எது சாத்தியமாக்கியது என்றும் ஆராய்கிறார். “சுயாதீனமாக நான் எடுக்கும் முதல் நடவடிக்கையாக சுய விருப்பின் மீது நம்பிக்கை கொள்வதாகவே இருக்கும்,” வில்லியம் ஜேம்ஸின் இந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டும் க்ரிஸ்பின் அவருடைய இந்த உறுதிப்பாட்டை தன் ‘மரித்த பெருமாட்டிகள் பற்றிய செயல்திட்டத்தின் மையமாக வைக்கிறார். அதே நேரம் தன் சொந்த வாழ்வின் கட்டுமானத்தையும், மற்றெல்லாவற்றையும் நொறுங்கவும், மறு உருவாகவும் அனுமதிக்கிறார்.
புக்ஸ்லட் (bookslut- புத்தகவேசை என்று பொருள்படும்) என்ற இலக்கியபத்திரிகையை நிறுவியவர் க்ரிஸ்பின். இது இணைய இலக்கிய விமர்சனத்தின் முன்னோடிகளில் ஒன்று, 2002 இல் இது துவங்கப்பட்டது. விமர்சனங்கள், பேட்டிகள், பத்திகள் மேலும் பிரசுரத் தொழிலமைப்பின் அழுத்தங்களால் செலுத்தப்படாமல் அவற்றுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் ஆகியனவற்றுக்கான தளமாக இருந்தது. பிறகு வந்த வருடங்களில் இவர், பரந்த வாசிப்புள்ள ஒரு விமர்சகர், பதிப்பாசிரியர் என்று அறியப்பட்ட தன் திறமைகளைக் கூர்மையாக்கிக் கொண்டதோடு, தன் விசாரிப்புகளைப் பரவலாக்கவும் செய்திருக்கிறார். அது இந்த மரித்த பெருமாட்டிகள் பற்றிய செயல்திட்டத்தை கருத்தாழம் மிக்கதாக ஆக்குவதோடு, (வாசகர்களின்) அறியும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உருவாக்கி இருக்கிறது.
இங்கு நான், தொடர்பு உருவாக்குவதில் உள்ள அபாயங்கள், பதிப்புத் தொழிலமைப்பின் முன்வரைவுகளில் உள்ள வீழ்ச்சிகள், நாடுகடத்தப்பட்டு வாழ்வதில் உள்ள சாத்தியக்கூறுகள், இலக்கிய நாயகர்களின் இயலாமைகள்/ வரையறைகள், தானாக வலிந்து மேற்கொண்ட ஒடுக்கத்தின் வசீகரம், ‘வீடு’ என்று அழைக்கப்படும் ஒரு மர்மப் பொருளுக்கான தேடல் ஆகியவை குறித்து க்ரிஸ்பினுடன் நடத்திய உரையாடல்தான் இது.
oOo
மேட்டில்டா பெர்ன்ஸ்டைன் ஸைகமோர்: நீங்கள் இந்த செயல்திட்டத்தை முதலில் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைப் பற்றிப் பேசலாமா என்று யோசிக்கிறேன் – யூரோப்பில் நெடுகப் பயணம் மேற்கொண்டு, இறந்த எழுத்தாளர்களின் ஆக்கம்,அழிப்பு ஆகிய உந்துதல்கள் பற்றித் தேடும் முயற்சி – என்பது வரலாறோ, நினைவுக் குறிப்போ, வாழ்க்கைச் சித்திரமோ, பயணக் கட்டுரையோ, வம்பிலக்கியமோ அல்லது இலக்கிய விமர்சனமோ எதுவாகவும் அமையாது, ஆனால் இவை எல்லாமே சேர்ந்த ஒன்று எனலாமா?
ஜெஸ்ஸா க்ரிஸ்பின்: இந்தப் புத்தகம் என்னவாக இருக்கப் போகிறது என்பது எனக்கும் இதை எழுதத் துவங்கும் வரை தெரிந்திருக்கவில்லை. நான் போக விரும்பின இடங்கள் பற்றியும், எழுத விரும்பிய கலைஞர்கள் பற்றியும் ஒரு முன்வரைவு என்னிடம் இருந்தது, ஆனால் அமர்ந்து பெர்லின் அத்தியாயத்தை எழுதத் துவங்கும் வரை இவற்றில் என் ஈடுபாடு எத்தனை இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பக்கங்களில் நான் எவ்வளவு இருப்பேன் என்று எனக்கு நிச்சயம் ஏதும் இல்லை.
ஆனால், எழுதும் முன் எனக்கு தொனி பற்றியோ, அல்லது என்னவெல்லாம் தேவைப்படும் என்பது பற்றியோ ஒரு முன் எண்ணமும் இல்லை. , உண்மையைச் சொன்னால் (எழுதுவதான) அந்த இயக்கத்தில் அதிகம் தலையிட நான் விரும்புவதில்லை. என் வேலை நடப்பைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதை ஏதோ ஒரு உருவுக்குள் அடைக்க அப்படி இப்படிச் சரிக்கட்டுவதைச் செய்யவோ நான் விரும்புவதில்லை. அது எப்படி அமைய விரும்புகிறதோ அப்படியே விடுகிறேன்.
உங்கள் இப்போதைய வாழ்க்கை, 50 வருடங்கள் முன்பு இறந்த அந்த எழுத்தாளர்களின் வாழ்க்கை ஆகியன . உங்கள் இப்போதைய விருப்பங்கள், அன்றைய விருப்பங்கள். உங்களுடைய நோவுகள், துயரங்கள், தேட்டங்கள் -இவை எல்லாம் இப்போது எப்படி இணைத்து நெய்யப்பட்டிருக்கின்றன என்பது இந்தப் புத்தகத்தின் வலு என்று நான் நினைக்கிறேன். ஓரிடத்தில், “நான் எழுதுவது மார்கரெட் ஆண்டர்ஸனைப் பற்றியா அல்லது என்னைப் பற்றியா என்பது குறித்து திசை இழந்து விட்டேன்,” என்று சொல்லவும் செய்கிறீர்கள். இந்த திசை இழந்து போவதுதான் உணர்ச்சிகளின் ஒத்திசைவுக்கு ஒரு திறப்பைக் கொடுக்கிறது. இதை ஒற்றை வகைத்தான படைப்பு கொடுத்திருக்காது என்று நினைக்கிறேன். பதிப்பாளர்கள், பதிப்பாசிரியர்கள் அல்லது முகவர்கள் இந்தப் புத்தகத்தின் தொலைவுகள், பாணி மேலும் உள்ளீட்டைக் குறுக்கச் சொல்லி ஏதும் எதிர்ப்பு தெரிவித்தார்களா?
ஓ, எத்தனையோ இருந்தது! நான் முதலில் ஒரு முகவரிடம் இந்தக் கருத்தைச் சொல்லி, பின் கருத்தை விரிவாக விளக்கி முடிக்கும் வரை மௌனமாக இருந்தார், பின் சொன்னார், ‘இது ஒரு புத்தகம் இல்லை. இதற்குப் பதில் நினைவுக் குறிப்புகளாக ஏன் எழுதக் கூடாது?’ என்றார். நான் ஒரு குளியலறையில் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு அழுதேன்.
நீண்ட சங்கிலியான பற்பல மறுப்புகள் கிட்டின. அவை எல்லாமே ஒரே விதமாகத்தான் இருந்தன. இது ரொம்ப அதிகம், நீங்கள் எக்கச்சக்கமாகச் செய்ய முயல்கிறீர்கள், குறைவாகச் செய்யுங்கள்… இப்படி. இதற்கெல்லாம் நான் ஏதோ வினோதமாக எதிர்வினை செய்கிறேன். மேலோட்டமாகப் பார்த்து நான் விட்டு விடவேண்டியதுதான் என்று நினைக்கத் துவங்குகிறேன், ஆனால் உள்ளுக்குள் நான் இன்னும் ஆழமாகப் புதைந்து நிற்கிறேன். ‘சரிதான், போங்கடா!’ என்று ஒரு உணர்வு பொங்க ஆரம்பித்து, 100 சதவீதம் அசைக்க முடியாத பிடியாகி விடுகிறது. ஆனால் அப்புறம் சிகாகோ பல்கலைப் பிரசுரத்தில் சூஸன் பியெல்ஸ்டைனைக் கண்டு பிடிக்கிறேன், அவரோ துவக்கத்திலிருந்தே ஏக உற்சாகமாக என் திட்டத்தை ஊக்குவிக்கிறார். நான் என்ன செய்ய முயல்கிறேன் என்பதை அவர் முழுக்க நம்பினார், நான் என்னை நம்பியதை விடவும் கூடுதலாக நம்பினாரோ என்னவோ. ஒரு முறை கூட என் செயல்திட்டத்தை எளிதாக்கவோ, விற்பனைக்கு ஏற்றதாக மாற்றவோ சொல்லிக் கேட்கவில்லை. அவரோடு சேர்ந்து இயங்குவது ஒரு அற்புத அனுபவம்.
ஆக, இந்தப் புத்தகத்தில் நீங்களும் ஒரு நாட்டை விட்டு வெளியேறி வாழ்பவராகிறீர்கள், அயல்நாட்டில் வசித்த எழுத்தாளர்களின் வாழ்க்கைகளை ஜாலமாக மறு உருவாக்கம் செய்கிறீர்கள். உங்கள் வாழ்வின் நியதிகளை மறுப்பதோ, அல்லது நெறிப்படுத்துவதோ அல்லது வரையறை செய்வதோ அல்லது அவற்றை என்னவென்று இனம் காண்பதோ இந்தப் பயணத்துக்கான உந்துதலில் ஒரு பகுதியாக இருந்ததா?
என் தலைக்குள் சில சமயம் ஒரு பயனுமில்லாத சில வாக்கியங்கள் எழும். உதாரணமாக, இந்தப் புத்தகத்தின் துவக்கத்தில் இருப்பது போல, ‘நான் வீட்டுக்குப் போக விரும்புகிறேன்.’ என்பது அப்படி எழுந்தது. இது எப்போதுமே எனக்கு நானே பேசிக்கொள்வதுதான், வேறென்ன? அதுவும் நான் ஏற்கனவே தூலமாக என் வீடாக உள்ளதில்தான் இருந்தேன். எனவே நான் வெகு நேரம் இதைப் பற்றி யோசிப்பதில் செலவழித்தேன், இந்த வீடு ஏன் எனக்குப் போதவில்லை ? எங்கேதான் நான் என் வீட்டில் இருப்பதாக உணர்வேன்? கான்ஸஸ் மாநிலத்தில் நான் வளர்ந்த வீட்டைப் பற்றி நான் இதைச் சொல்லவில்லை என்பது எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது- அந்த வீட்டிலிருந்து தப்பிக்கவே நான் எப்போதும் முயன்றிருக்கிறேன். ஆனால் அந்த வாக்கியம் என்ன காரணம் பற்றி எழுந்தது? த்ரியெஸ்டே நகரில் எங்கோ இருக்கையில் இந்த வாக்கியம் ‘என் வாழ்வு எனக்குத் திரும்ப வேண்டும்.” என்று ஆயிற்று. யாரிடமிருந்து இதைத் திரும்பிப் பெற வேண்டும்? அது மிகவும் விசித்திரமாக இருந்தது ஏனெனில் இந்த யோசனைகள் என்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொள்ளும், அதே நேரம் இவை மிக அவசரமானவை என்றும் தோன்றும். இவற்றுக்கு ஒரு விடையும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது என்னை நம்பிக்கை இழக்கச் செய்தது. அதற்குப் பிறகு இந்தக் கேள்விகளுக்கு நான் விடை கண்டு விட்டேனா என்றால் அதில்லை, அவை மறுபடி எழவில்லையா என்றால் அதுவுமில்லை, ஆனால் அவை இப்போது அத்தனை அவசரமாகத் தெரியவில்லை.
ஆகவே, மிகை நாடகமாக ஆக்காமல் இதைப் பார்த்தால், வெகு நாட்களாக நான் என் நிஜ வாழ்க்கையிலிருந்து வெளியேறியவளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இந்த வாழ்க்கை என் சுயத்தேர்வால்தான், மேலும் இந்த செயல்முறையே ஒரு விதமாக அங்கே போய்ச் சேரத்தான் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு என்ன பொருளென்றால், முன்னதாக வந்ததை எல்லாம் எரித்து வீழ்த்துவது என்பதாகும். தவிர, வேறு முன்மாதிரிகளைக் கண்டு பிடிப்பதும், மற்ற மனிதர்கள் தோல்விகளை அடைந்து சிலகாலம் இருட்டில் தடுமாறியலைந்து இருப்பதையும், தமக்குக் கிட்டிய அந்த கால அவகாசத்தை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கவும், பூரண அழிவிற்குப் பின் மறுபடி நிர்மாணிக்கவும் பயன்படுத்துவதைப் பார்த்து, அதை எனக்கொரு வழிகாட்டும் தீபமாகக் கொள்வதும் இதிலடங்கும்.
எனக்கு இந்தப் புத்தகத் தலைப்பு மிகவும் பிடித்தது- இந்தப் புத்தகத்துக்கு ‘மரித்த பெருமாட்டிகள் பற்றிய செயல்திட்டம்’ என்று பெயரிட்டதால், நீங்கள் ஒரே நேரம் இந்த இறந்த எழுத்தாளர்களை அழைப்பது போலவும், அவர்களைத் தம் செயல்களுக்கு விளக்கம் கொடுக்குமாறு சவால் விடுவது போலவும் இருக்கிறது. அவர்களை அழைக்கும் அதே முறையில் உங்களையும் நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். பெருமாட்டி என்பது ஒரே நேரம் வழிபாடு போலவும், விமர்சனமாக இருக்கிறது என்பீர்களா?
அது நேர்மையானதும், கிண்டலும் சேர்ந்தது. அந்தச் சொல் அத்தனை சூதாக இருக்கிறதில்லையா? சமூகத்தில் ஏற்பு கிட்டியவராக இருந்தால் நீங்கள் ஒரு பெருமாட்டியாவீர்கள், ஆனால் அதிகம் இடத்தைப் பிடுங்காதவராக இருக்கவும் வேண்டும். இந்தப் பெண்கள் – அல்லது ஆண்கள்- யாருமே சமூக அங்கீகரிப்பில்லாதவர்கள், அவர்கள் எல்லாருமே ஏகப்பட்ட இடத்தைப் பிடுங்கிக் கொண்டவர்கள். அவர்கள் வழிதவறியவர்கள், கோணங்கிகள், எல்லாரும்- யாரும் பெருமாட்டி போன்றவர்களில்லை. நான் என்ன சொல்கிறேன் பாருங்கள், அவர்களில் ஒருவர், மோவ்ட் கான் (1) தன் ஆத்மாவை சாத்தானிடம் விற்றவர், ஐயோ கடவுளே.
அதே நேரம் நான் உண்மையாகவும் இந்தச் சொல் இப்படிப்பட்ட உயர்த்தலைக் குறிக்க வேண்டும் என நினைக்கிறேன் – மரபான வழியில் பணத்தாலும், வரைமுறைகளுக்குள் அடங்கியிருப்பதாலும் அல்ல, மாறாக மன உறுதியாலும், ஒருவருடைய சுயத் தேட்டையாலும் உயர்வதாக. அதாவது உங்களுக்கு இந்த அடிப்படையான உடற்கூறுப்படி கிட்டிய பெண்ணெனும் அடையாளம் இருக்கிறது, அதற்குப் பிறகு நீங்கள் அதை விட மேன்மையான ஒரு தளத்துக்குச் செல்ல பாடுபட்டு உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்- ஒரு பெருமாட்டியாக ஆகிறீர்கள் என்ற பொருளில் சொல்கிறேன். அந்தக் கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது.
போதுமான அளவு கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தீர்களானால், அவற்றில் எப்போதும் ஒரு கணம் வரும், அக்கணம் அந்த கலைஞர், அனேகமாக எப்போதுமே ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தால் விலக்கப்பட்டவராக இருப்பார் ( வறுமையாலோ, அவலட்சணமாக இருப்பதாலோ, அல்லது நம் வரலாற்றுக் கட்டத்தில் இவர்கள் நாகரீகமற்றவர்களாகக் கருதப்படுவதாலோ), அவர் திடீரென்று சமூகத்தில் பெருமைப்படுத்த அழைக்கப்படுவார். சமூகக் கொண்டாட்டத்திற்கு. ஆனால் அங்கே போன கணமே அவர்களுக்குப் புரியும், அட கடவுளே, இந்த மனிதர்கள் படுமோசமானவர்கள். இவர்களின் அங்கீகாரம் தேவை என்று நான் எப்போது விரும்பினேன்?
உதாரணமாக,மார்கரெட் ஆண்டர்ஸன் உண்மையிலேயே முக்கியமான நவீனகர்த்தாக்கள் எல்லாரையும் முதலில் பிரசுரித்தவர், ஆனால் வறுமையிலும், நிலையில்லாத வாழ்விலும் அவதிப்பட்டுத்தான் இப்படிப் பிரசுரித்தார், அதற்காக அதிகாரம், வளம் பெற்றிருந்தவர்கள் இவரை இளக்காரமாகப் பார்த்தனர், இன்னும் என்னென்னவோ. இறுதியில் ஜேம்ஸ் ஜாய்ஸும் பிறரும் எழுதியவை விற்கத் தொடங்கின, அவருக்கு ஒரு மரியாதை கிட்டியது, ஆனால் இதற்குள் அவரோ ‘கிடக்கிறார்கள் கேவலமான இந்தப் போலிகள்’ என்று ஆகி விட்டார். அவர் இவர்களின் உண்மை சொரூபத்தைக் கண்டு கொண்டிருந்தார்.
இந்த மரித்த பெருமாட்டிகளில் பலர் பொதுவாக ‘ஆண்கள்’ என்று கருதப்படுவார்கள். இவர்கள் அவர்கள் காலத்திலும் இருந்த பால் பகுப்பு அமைப்பின்படியும், நம் காலத்தில் உள்ள அதே பகுப்பின்படியும், விளிம்பு நிலையில் இருப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்பது ஏன் என்று இன்னும் விளக்குங்களேன்.
தலைசிறந்த ஆண் மேதை என்று நம்மிடையே உள்ள ஒரு சோம்பேறித்தனமான கருத்தைப் பிரித்து அலசிக் காட்ட வேண்டும் என்று ஒரு நினைப்பு, இது ஒரு பகுதி. இதை என் சந்தோஷத்துக்காகச் செய்ய விரும்பினேன். இந்த ஆண்கள் தன்னந்தனியாக பெருமுயற்சி செய்தார்கள், வெறுத்தவர்களையும், மறுத்தவர்களையும் லட்சியம் செய்யாது, கடும் தடைகளை எல்லாம் மீறி தம் புத்தித் திறனாலும், பிரும்மாண்டமான அகந்தையாலும் மட்டுமே வாழ முடிந்தவர்கள் என்றும் இந்தக் கருத்து நிலவுகிறது. இதைத்தான் நாம் பிகாஸோ, ஹெமிங்வே ஆகியோரைப் பற்றி நமக்குச் சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் ஏதோ காலவெளிக்கு அப்பால் வாழ்ந்திருந்தனர் என்பது போலவும், யாராலும் பாதிக்கப்பட்டதில்லை என்றும், அப்படி ஒரு சுத்தமான ஏதோ ஒன்று அவர்களிடம் இருந்தது அது வெளிப்பட்டே ஆக வேண்டி இருந்தது என்றும் சொல்லிக் கொள்கிறோம். அத்தனையும் வெறும் குப்பை.
அதனால் அவர்களை ‘பெருமாட்டிகள்’ என்று அழைக்க விரும்பினேன். அவர்களுடைய பெண் இயல்புகளைக் கண்டெடுக்க விரும்பினேன். விலியம் ஜேம்ஸைப் பொருத்தவரை, அவருடைய பிரும்மாண்டமான தேவை அவரை ஒரு பெண்பாலராக எனக்குக் காட்டியது. அவர் இதயத்துக்குப் பதில் ஒரு பெரும் கரும் குழியோடு துவங்குகிறார், எதுவும் அந்தக் குழியை நிரப்ப இயலாத நிலை, அவருடைய நண்பர்களிடமிருந்தும், உடன் பிறந்தவர்களுடனும், சூழலிலிருந்தும் அவருக்கு எத்தனையோ வேண்டி இருக்கிறது. ஏன் என்றால் அவர் இந்த ஆண் மேதையாக இருக்க முயன்று, தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு (உலகம் சுற்றும்) சாகசக்காரராக முயல்கிறார், ஆனால் உடனே நோய்வசப்படுகிறார், நலமாவதற்கு வீட்டுக்குத் திரும்பி வர வேண்டியதாகிறது. ஆனால் அப்போது எப்படியோ அவருடைய கருங்குழியின் பள்ளம் காணாமல் போகிறது- அவர் இயற்பியலையே தலைகீழாக்குகிறார், இந்த பெரும் அவநம்பிக்கை பீடித்த போதும், அதன் நடுவில் ஒரு ஆழ்ந்த கருணையைக் கண்டு பிடிக்கிறார், அதுதான் அவரை மானுடராக்குகிறது. ஆணாக உலகை வெல்லும் பாத்திரத்தைத் தரிக்கப் பெரும் முயற்சி எடுப்பதை விட்டு விடுகிறார்; அதற்குப் பதிலாக அவருடைய படைப்பு முயற்சி தொடர்புகள் பற்றி, கரிசனம் பற்றியதாகிறது.
இது ஒரு விதத்தில் சாமர்செட் மாமின் கதை போன்றதே. அவரும் விலியமின் சகோதரர் ஹென்ரியைப் போல, பெண்களைப் பற்றி எழுதுவதையே மிக அவசியமாக உணர்ந்தவர். சமூகத்தால் கீழே தள்ளி வைக்கப்பட்ட அவர்களின் கதைகள் கூடுதலான சுவாரசியம் கொண்டவையாக இருந்தன, அவர்களிடம் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் ஒப்பீட்டில் அதிகமாக இருந்தன. மாம் பெண்களை மிக நேசித்தார். அவர் தன் மனைவியை வெறுத்தார், ஆனால் பெண்களை நேசித்தார். தன் சொந்த வாழ்க்கையை ஒட்டியே புனைவுகளை எழுதினார், இதிலும் ஹென்ரி ஜேம்ஸைப் போல, அவர் பெண் பாத்திரங்களையே அதிகம் பயன்படுத்தி அதையும் பூர்த்தி செய்தார்.
நீங்கள் விசாரிப்புக்கு உட்படுத்திய நகரங்கள், எழுத்தாளர்கள் எல்லாவற்றையும் எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? அயல் மண்ணில் வாழ்ந்த யூரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்கள் என்று எடுத்தால் ஒரு நீண்ட பட்டியலே கிட்டுமே. ஏன் ஜேம்ஸ் பால்ட்வின், அல்லது ஆலிஸ் பி. டொக்லாஸ் ஆகியோரை எடுத்துக் கொள்ளவில்லை? நீங்கள் எப்படி உங்கள் விசாரணையின் எல்லைகளைச் சுருக்கினீர்கள்?
நான் வெகு காலமாக யோசித்து வந்திருக்கிற எழுத்தாளர்கள், கலைஞர்களைத்தான் எடுத்துக் கொண்டேன். ஒரு கட்டுமானத்தை நான் ஊகித்துக் கொண்ட பின் – அதாவது அவர்கள் எல்லாம் அயல்நாட்டில் வாழ்ந்தவர்கள் என்றான பின், அந்தக் கலைஞருக்கும், நகரத்துக்கும் எனக்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு தேவைப்பட்டது- அதற்குப் பிறகு யார் உள்ளே பொருந்துவார்கள் என்பதும், நான் எங்கெல்லாம் போக வேண்டும் என்பதும் தெளிவாகி விட்டது.
ஜேம்ஸ் பால்ட்வின் நேராகவே ஒரு வேட்பாளராகி விடுகிறார், ஆனால் அவர் ஏற்கனவே தன் அயல்மண் வாசம் பற்றி மிக அழகாகவும், ஆழ்ந்த யோசனையோடும் எழுதி விட்டிருக்கிறார். இந்தக் கருத்தை அவருக்கு மேல் எங்கும் நான் எடுத்துக் கொண்டு போயிருக்க முடியாது. அன்னிய வாசத்தைப் பற்றி எழுதவோ அல்லது யோசிக்கவோ விரும்பும் எவரும் ஃப்ரான்ஸில் தன் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதியதைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
ஆனால் ஃப்ரான்ஸில் வாழ்ந்த அமெரிக்கர்களைப் பற்றி எழுத நான் விரும்பவும் இல்லை. அயல்நாட்டில் வசித்தவர்கள் பற்றி எழுத வந்தால் முதலில் தட்டுப்படுவது இந்த அமெரிக்கர்கள்தாம்: ஹெமிங்வே, ஃபிட்ஸ்ஜெரல்ட், மேலும் கெர்ட்ரூட் ஷடைன் ஆகியோர். ஏகமாக எழுதி புளித்துப் போன அந்தப் பகுதிகளில் திரிந்து கொண்டிருக்க நான் விரும்பவில்லை. தெற்கு ஃப்ரான்ஸில் வாழ்ந்த ஒரு அமெரிக்கரைப் பற்றி நான் எழுதிய போது கூட- மார்கரெட் ஆண்டர்ஸனை எடுத்துக் கொள்ளுங்கள்- அந்த வாழ்வைப் பற்றி எழுத எனக்கு ஊக்கமில்லை, அவருடைய அமெரிக்க வாழ்வைப் பற்றித்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஃப்ரான்ஸுக்குப் போகக் கூட நான் விரும்பவில்லை. என் வாழ்வில் ரத்தான இந்த விமானப் பயணம் பற்றி நான் மகிழ்வடைந்தது போல வேறெது பற்றியும் நான் மகிழ்ந்ததில்லை.
பயணங்களில் இனவெறியும், காலனியப் பார்வையும் ஒரு குணமாக இருப்பதை எதிர்த்து நீங்கள் எழுதி வருகிறீர்கள், ஆனால் பயணம் மேற்கொண்டுதான் எழுதுகிறீர்கள். இதில் உள்ள ஒரு முரண் தான் இந்தப் புத்தகத்தின் மையமாக உள்ளதா?
ஓ, ஆமாம்- மறுபடியும் சொன்னால், அது சுலபமில்லை. நாம் எப்படி வளர்க்கப்பட்டோமோ அதை தடாலடியாகத் தொலைத்து விட முடியாது. நான் எத்தனையோ காலமாக பெரும் ஆண் பயண எழுத்தாளர்களை வழிபட்டுக் கொண்டிருந்தேன் – அந்த கேடு கெட்டவர்களை எல்லாம் படித்து அவர்களின் படைப்புகளை வசீகரமானவை எனக் கருதிக் கொண்டிருந்தேன். அப்படி அது ஊறிப் போயிருந்தது- நான் யோசிக்கும் விதத்தில் ஒரு பகுதியாக மாறி இருந்தது. ஒரு வழியாக அந்த வசீகரத்தைத் தாண்டிப் பார்க்க நாம் கற்றுக் கொள்கிறோம், அங்கு இருக்கிற அதிகார இயக்கத்தைப் புரிந்துகொள்கிறோம், இந்த மாதிரி ஆட்களின் காலனிய மனோபாவத்தை ஊடுருவிப் பார்க்கிறோம். அவர்களுடைய ஆண் வீரியமெனும் பாவனை. அதையெல்லாம் நாம் பார்த்து விடுகிறோம் என்பதால் அதே விதமாக நாமும் செயல்பட மாட்டோம் என்பதுமில்லை.
ஆகவே ஆமாம், அந்த விதத் துரத்தலை நாம் கைவிட்டு விட முடியாது. இந்த வகைப் பிரச்சினையை நான் முற்றிலும் தவிர்க்கப் போகிறேன், அதனால் என் உலகைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன், என் சுயத்தைப் பற்றி எழுதுவேன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் அது கோபர்னிகஸுக்கு முந்தைய காலத்து அண்ட பேரண்டமும் என்னைச் சுற்றி இயங்குகிறது என்கிற பழங்குப்பைச் சங்கதியாகி விடும்.
நாம் அதோடு மல்லுக்கு நிற்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றி அசாதாரணமான விழிப்புணர்வு இருக்க வேண்டும், நம் நோக்கங்கள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். பாருங்க, பாஸ்டன் ரெவ்யு பத்திரிகைக்கு என்று பயணக் கட்டுரைகளில் காலனியம் இருப்பதைப் பற்றிய ஒரு கட்டுரையை நான் எழுதினேன், அது பற்றி எனக்கு அதிகமாக அடிக்கடி கிடைத்த ஒரு மறுவினை, ”நீங்க இதைப் பற்றி ரொம்ப அதிகமா யோசிச்சுக் குழப்பிக்கிறீங்க.” ஒரு சக பயண எழுத்தாளர் சொல்லக் கூட செய்தார், நான் இதையெல்லாம் பத்தி யோசிக்கிறதே இல்லை, எனக்கு எது நல்லா விற்குமுன்னு தோணுதோ அந்தக் கருத்துகளைத்தான் நான் எடுத்துப் போடுவேன். எனக்குத் திக்கென்று இருந்தது. நாம் இதைப் பற்றி யோசிக்கத்தான் செய்யணும், இது ரொம்ப முக்கியமானது, நம் உலகைப் பற்றி நமக்கே நாம் சொல்லிக் கொள்ளும் கதைகள் இவை. மற்ற ஜனங்களோடு நாம் எப்படி உறவாடுகிறோம் என்பதின் மீது இவற்றுக்கு ஒரு தாக்கம் உண்டு. எழுத்தாளர்கள் என்ற வகையில் நமது வேலையே சிந்திப்பதுதான்.
இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- அது கிட்டத்தட்ட என் மூச்சை நிறுத்திப் பிடிக்க வைக்கிற செயல்; இது உரைநடையின் சாத்தியக்கூறுகளை ஆழப்படுத்தும் ஒரு அந்தரங்கத்தைக் கொடுக்கிறது. பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா? நாம் எப்போதுமே தப்பி விட முடிவதில்லை. உங்களை இதில் சிக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்தது பற்றிக் கொஞ்சம் பேச முடியுமா?
உலகில் உள்ள எல்லாரையும் போலவே, இதை நான் ஊகிக்கிறேன், பெண்கள் அத்தனை மதிப்பில்லாதவர்கள் என்று எனக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. நாம் ஆண் குணங்களுக்கும், சிறப்பியல்புகளுக்கும் மதிப்பு கொடுக்கிறோம்- பகுத்தறிவு என்பதை எடுத்துக் கொள்வோம், அது உலகத்தில் மிக முக்கியமானதாக ஆக்க விடுகிறோம் இல்லையா? பிறகு வேறு சில பண்புகளைப் பெண் குணங்களாக முத்திரை குத்தி, அவற்றைப் பயனற்றவை அல்லது மெலிவானவை என்று ஆக்கி விடுகிறோம்.
நான் கான்ஸாஸ் மாநிலத்தின் கிராமப்புறத்தில் மிகப் பழமை பாராட்டும் பின்னணியிலிருந்து வருகிறேன், அங்கு பால் பாத்திரங்கள் கல்லில் பொறித்தவை போல நிரந்தரமானவை, பெண்களிடமிருந்து அதிகம் எதையும் எதிர்பார்க்காத ஒரு குடும்பத்திலிருந்து வருகிறேன், அவர்கள் தம் வழிக்காகப் போராடி வென்றால்தான் ஆண்களுக்குச் சமமாகக் கருதப்படுவர், ஆனால் அதற்காக அவர்கள் ஆண்களின் குணங்களைத் தாமும் கொண்டு நடக்க வேண்டி இருக்கும். அந்த விஷயங்களைச் சும்மா தூரப் போட்டு விட முடியாது, நமது முதல் அனுமானங்களைத் தொடர்ந்து கேள்வி கேட்டபடி இருக்க வேண்டும், அதுதான் நாம் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானத்துக்கும் நம்முடைய முதல் தன்னிச்சையான எதிர்வினையாக இருக்கும், (அந்தத் தயக்கம்). நாம் சில சிந்தனைகளைப் பிறப்பிக்கவே செய்வோம்- அப்போது நாம் அவற்றை அக்கக்காகப் பிரித்துப் பார்த்து, வேறு புது வழிகளில் எதிர்வினை செய்வதையும், நமது மதிப்பீடுகளை மாற்றி வகைப்படுத்துவதையும் சாதிக்க வேண்டி இருக்கும். என்னை வளர்த்த அந்த மனோநிலைப் படிவுகளில், அந்த நடுமேற்கு அமெரிக்க வழியின் சிந்திப்பு முறைகளில் என்னுடைய சில பகுதிகள் இன்னும் சிக்கி இருக்கவில்லை என்று பாவனை செய்வது நேர்மையின்மையாகும். நான் இன்னும் அந்த அருவருப்பான பெண் சமாச்சாரங்களை இழிவாகவே பார்க்கிறேன். நான் இன்னும் எத்தனை பெரிய அறிவுஜீவிப் பெரிய ஆசாமி நான் என்று நிரூபிக்கவே விரும்புகிறேன், இத்தனைக்கும் எனக்கு அது ஊழலான ஒரு ஒரு விருப்பம் என்பது மிகத் தெளிவாகவே தெரியும்.
அங்கே கான்ஸாஸில், அனேகர் உங்களை ஒரு அன்னியர் என்றுதான் படிக்கிறார்கள். நீங்களும் ஒரு வெளியாராகத்தான் உணர்ந்தீர்கள். ஆனால் யூரோப்பில், நீங்கள் அந்த மொழிகளைப் பேசுவதில்லை என்றாலும், அல்லது அங்கே பொருந்தி இருப்பதாக உணராத போதும், நீங்கள் ‘நம்மில்’ ஒருவராகப் படிக்கப்படுகிறீர்கள். இதை எப்படி விளக்குவீர்கள்?
என்னுடைய சொந்த ஊரிலும், குடும்பத்திலும் நான் நிறைய காலம் செலவழித்தபோதெல்லாம் ஒரு பரமண்டலத்திலிருந்து வந்த அன்னிய ஜீவன் போலத்தான் உணர்ந்தேன். நான் ஏதோ கேவலமான விதத்தில் தவறான ஓரிடத்தில் கொண்டு போடப்பட்டு விட்டதாக உணர்ந்தேன். அடிப்படையில், பிறப்பிலிருந்தே இப்படித்தான்.
நீங்கள் அப்படி ஒரு சிறு பிள்ளையாக இருக்கையில், அது வாழ்நாள் பூராவும் இடமிழந்த ஒரு நபராக வாழவே உருவாக்கி விடுகிறது. உங்களையே நீங்கள் பழி சாட்டுவதிலிருந்து தப்பமுடிகிற வரையில், அதற்கும் சில அனுகூலங்கள் உண்டு: உலகில் எல்லா இடங்களிலும் அவை வீடு என்பது போலவே உங்களால் உணர முடியும், ஏனெனில் அன்னியனாக இருந்து உங்களுக்கு அத்தனை பழக்கமாகி விட்டிருக்கும், இனி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது அத்தனை முக்கியம் இல்லாது போயிருக்கும். உலகெங்கும் அரங்குக்குப் பின் புறம் போக உங்களுக்கு ஒரு சிறப்பனுமதி கிட்டியது போல இது.
யூரோப்பில் நான் எங்கே இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டே அல்ல, என்னிடம் யாராவது வழி கேட்பார்கள். என் தோற்றத்தில் ஏதோ என்னை ஒரு உள்ளூர்க்காரராக அவர்களுக்குக் காட்டுகிறது போலும்.
பலவிதங்களில், இந்தப் புத்தகம் மொழியைப் பற்றியதும் – நாம் எப்போதாவது ஒருவரோடு ஒருவர் நிஜமாகவே தொடர்பு கொள்ள முடியுமா என்ன? நம்மை யாராவது புரிந்து கொள்வார்களா?
இதையெல்லாம் நான் துவங்கியபோது, பெர்லினுக்குப் போக நான் கிளம்பிய தருணத்தில்தான் இது துவக்கம், நான் ஜனங்களோடு எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இருந்தேன். பெரும் தேவையோடு, ஆழ்ந்த கருங்குழியான மனதோடு இருந்த விலியம் ஜேம்ஸைப் போலத்தான் நான் இருந்தேன். அதனால் எந்த ஊர் மொழியை நான் பேசவில்லையோ, எங்கு யாரையுமே எனக்குத் தெரியாதோ, அந்த ஊருக்குத்தான் நான் போகத் தீர்மானித்தேன். அப்புறம் அங்கு வசதியாக உணரத் தொடங்கிய உடனே, வேறொரு இடத்துக்குப் பெயர்ந்தேன், மறுபடி மொழியோடும், ஜனங்களோடும் முதலிருந்தே நான் மறுபடி துவங்க வேண்டி இருக்கும்படி. இப்படித்தான்…
புத்தகங்கள் எழுதுவதும், பயணங்கள் மேற்கொள்வதும் பெரும் விஷயங்கள். ‘என்னை யாராவது கவனியுங்களேன்’ என்கிற நகர்த்தல்கள் அவை. என்னுடைய படுபுத்திசாலியான தோழி வேதா ஹில்லெ, க்ரெய்க் லிஸ்டில் ‘நழுவ விட்ட தொடர்புகள்’ விளம்பரத்தில் தன்னைத் தேடிய ஒரு பெண்ணைப் பற்றி ஒரு பாட்டு எழுதினார், அது “டிட் எனி ஒன் ஸீ மீ டுடேய்?” என்று அழைக்கப்பட்டிருந்தது, அந்தப்பாட்டு என் மனதைப் பிசையும் ஏனெனில் நான் அந்தப் பெண்ணின் ஒரு மாற்றுத் தோற்றமாகத்தான் நான் இருந்திருக்கிறேன்.
ஆகவே, நாம் நிஜமாகவே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியுமா? அனேகமாக இயலாது. அவர்களுடைய நாவல்களைப் படித்தபடி,மிக அருமையான எழுத்தாளர்களோடு பின்னிரவில் நீண்ட நேரம் நாம் ஒரு உரையாடல் நிகழ்த்தினால்; ஒருவேளை சாலைப் பயணத்தில் முழுதும் புதிய ஒரு நபரோடு பத்து நிமிடங்கள் செலவழிக்கிறோம் என்று வையுங்கள், அது எப்படியோ நம்மைத் தாங்கிப் பிடிக்கிறது என்றால்; ரயிலில் ஒரு நபரும் நீங்களும் கண் கலக்கிறீர்கள், உடனே எப்படியோ நீங்கள் பார்க்கப்பட்டதாகவும், கேட்கப்பட்டதாகவும், தெரிந்து கொள்ளப்பட்டதாகவும் உணர்கிறீர்கள், அந்தக் கணம் உங்களை உலகுக்குள் மறுபடி பொருத்துகிறது என்றால்,ஒருவேளை முடியலாம்
புத்தகத்தின் நடுவில், நீங்கள் கேட்கிறீர்கள், “ நாம் எப்போது வளர்வதையோ அல்லது சண்டை போடுவதையோ அல்லது துரத்துவதையோ நிறுத்துகிறோம்?” இந்தப் புத்தகத்தை எழுதுவது வளர்ந்து கொண்டிருப்பதையும், சண்டை போடுவதையும், துரத்துவதையும் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வழியாக இருக்கிறது என்று சொல்வீர்களா?
நான் சுயதிருப்தி அடைய விரும்புவதில்லை. எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை, இரண்டு வருடங்களுக்கு பயணம் செய்வதையும், எழுதுவதையும் மேற்கொள்கையில் ஒவ்வொன்றிற்கும் நிஜமாகவே முழுக் கவனம் செலுத்த வேண்டி இருந்ததே அது என் வழியில் அப்படிக் குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராகச் சண்டை போடுவதுதான்.
நான் இறக்கும் போது, என் வாழ்வைத் திரும்பிப் பார்த்து, ‘சரி, குறைந்தது நான் எப்போதும் மிகவும் வசதியாக இருந்தேன்.” என்று நினைக்க விரும்பவில்லை.
oOo
மாடில்டா பெர்ன்ஸ்டைன் ஸைகமோர் சமீபத்தில் ஒரு நினைவுக் குறிப்புப் புத்தகம் எழுதினார், ‘சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் முடிவில்,’ என்னும் அது லாம்ப்டா இலக்கியப் பரிசை வென்றது.
(1) மோ(வ்)ட் கான் யார்? 1866 -1953 காலகட்டத்தில் வாழ்ந்த இந்த அதிசய மனுஷியைப் பற்றிய விடியோ இங்கே உள்ளது. இத்தனைக்கும் இவர் ஒரு ஐரிஷ் பெண் இல்லை. அயர்லாந்தில் சிறு பிள்ளைப் பிராயத்திலிருந்து வளர்ந்தவர். பெண்கள் எப்படி சமூக அரங்கிலிருந்து புறத்தே தள்ளி வைக்கப்பட்டார்கள் என்பதை இவர் தன் குரலில் பேசுகிறார் இங்கு. இந்த விடியோ பிரிட்டனின் மோசமான அடக்குமுறையில் ஐரிஷ் மக்கள் எப்படித் துன்புற்றனர் என்பதையும் மோ(வ்)ட் கான் எப்படி இந்த ஒடுக்கு முறையை மீறி ஐரிஷ் பெண்கள், குழந்தைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொண்டு வர முற்பட்டார் என்பதை இந்தச் சிறு விடியோ சொல்கிறது.
இந்த பேட்டி லாஸ் ஏஞ்சலிஸ் ரெவ்யு ஆஃப் புக்ஸ் என்கிற மின் பத்திரிகையில் வெளி வந்தது.
தமிழாக்கம்: மைத்ரேயன் /28 அக்டோபர் 2015