கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம்

மேகக்கணிமை (Cloud Computing)
க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன.
ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்சேவைகள் தவிர வேறு எங்கெல்லாம் க்ளவுட் இருக்கிறது?  நோண்டிப் பார்த்தால் நம் கண்கள் இன்னும் அகல விரியும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பலவும் இன்று பல்வேறு விதங்களில் மேகக்கணிமையைப் பயன்படுத்துகின்றன. சென்ற ஆண்டு வால்மார்ட் நிறுவனம் தனது மின் வணிகக் கட்டமைப்பு முழுவதையும் க்ளவுடுக்கு நகர்த்தியது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. க்ளவுடுக்கு நகர்த்துவது என்றால்…? ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் பார்ப்போம்.
க்ளவுட் பிறந்த கதை
கணிப்பொறி வன்பொருளில் அந்தக் காலத்து ஜாம்பவான்களில் ஒன்றான காம்பாக் (Compaq) நிறுவனத்தின் ஹ்யூஸ்டன் நகரத்து அலுவலகம். 1996ஆம் ஆண்டு. இணையம் பொதுமக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம். டாட்காம் கூத்தெல்லாம் நடப்பதற்கு முந்தைய தேனிலவுக் காலம். இணையம் குறித்துப் பொதுவான நல்லெண்ணமும் எதிர்பார்ப்பும் மிகுந்து, பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இணையத்தில் இடம்பிடிப்பது அத்தியாவசியம் என்று உணர்ந்திருந்த நேரம்.
இணையத்தின் வணிக சாத்தியங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த காம்பாக் விற்பனை நிர்வாகிகள் சிலர் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்கினர். அத்திட்டத்தின் முதல் இலக்கு: ”மேகக்கணிமையின் முக்கியத்துவத்தையும் அதை நோக்கிய பயணத்தையும் நிறுவத்திற்கு விளக்கியுரைத்தல்”. அவ்விவாதத்தில் பங்களித்த ஒரு நபர் ஒரு வருடம் கழித்து Cloud Computing என்ற பதத்தை ட்ரேட்மார்க் செய்யவும் முனைந்தார். ‘மேகம்’ என்னும் சொல்லைக் ’கணிமை’ என்னும் நோக்கம் சார்ந்து பயன்படுத்தியது இதுவே முதல்முறை எனலாம்.
கணிமை எனப்படுவதியாதெனின்
Computing என்பது ஒரு பொதுவான சொல். கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பணியை முடிப்பது என்று இங்கு அதற்குப் பொருள் கொள்ளலாம். இன்னும் சற்று விரிவாக – வன்பொருள், மென்பொருள், வலையமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தரவுகளைச் சேமிக்கவும், நிர்வகிக்கவும், மாற்றவும், பரிமாறவும் செய்வதே கணிமை என்று வரையறுத்துக்கொள்வோம்.

கணிமைகள் பலவிதம்

மெயின்ஃப்ரேம் கணிமை
1996க்கு முன்னமே கணினித் தொழில்நுட்பத்தில் மேகம் எக்கச்சக்கமாகப் பயன்பட்டிருக்கிறது. கணினி வலையமைப்பு (Computer Networking) குறித்துப் பேசும்போது எங்கோ தொலைவாக இருக்கும் கணினி வலைப்பின்னலைக் குறிக்க ஒரு மேகத்தை வரைவது 1960களிலேயே வந்தாயிற்று. இன்னும் சொல்லப் போனால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கோலோச்சிய மெயின்ஃப்ரேம் கணினிகளை ‘க்ளவுட்’ முறையில்தான் பயன்படுத்தினர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். நிறுவனத்தின் தரவுமையத்தில் இந்த ராட்சதக் கணினி ஆஜானுபாகுவாக வீற்றிருக்க, அதை வேறெங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு பயனர் தனது ஊமை முனையத்திலிருந்து (dumb terminal) இயக்குவார். இதை க்ளவுடுடன் ஒப்பிடுவதன்மூலம் மேகக்கணிமையின் முக்கியமான ஒரு பண்பு புலனாகிறது:

  • கணிமையின் ஏதேனும் ஒரு பகுதி உங்களிடம் இல்லாமல் வேறெங்கோ இருக்கும்
  • நீங்கள் ஒரு வலையமைப்பின் மூலம் அதனுடன் தொடர்புகொள்வீர்கள்

மெயின்ஃப்ரேம்கள் மிகவும் விலையுயர்ந்தவை. பெரிய நிறுவனங்கள் தவிர மற்ற அனைவருக்கும் இது எட்டாக்கனியாகவே இருந்தது. அதுமட்டுமல்லாமல், மெயின்ஃப்ரேமில் தொகுதி தொகுதியாக வேலைகளை முடித்துக்கொள்ள முடியுமேயொழிய, பயனர்கள் ஊடாடும் வகையில் செயலிகளை அமைப்பது ஓரளவுக்குமேல் சாத்தியமில்லை.
கிளையண்ட்சர்வர் கணிமை
பெருநிறுவனங்களில் மெயின்ஃப்ரேம்கள் புழங்கிவந்தாலும் எண்பதுகளில் நிகழ்ந்த மேசைக்கணினிப் புரட்சிதான் அன்றாட வாழ்க்கையில் கணினியின் தாக்கத்தைத் தொடங்கி வைத்தது. மேகத்திலிருந்து கீழிறங்கி வீட்டுக்குள் நுழைந்த வன்பொருளும் மென்பொருளும் கணிமையை உங்கள் கையருகே வைத்தன. மிகப்பெரிய விஷயம்தான் என்றாலும் அந்நேரத்தில் கணிமை மொத்தமும் அந்த ஒரு கணினியிலேயே நடந்தது. உங்களுக்கும் எனக்கும் சில சிறுநிறுவனங்களுக்கும் அது போதுமென்றாலும் பெரு நிறுவனங்களுக்கு அது பற்றாது.
நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளும் ஒரு வலையமைப்பில் இணைந்து, அவற்றிற்கிடையே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அனைத்துக் கணினிகளுக்கும் உயர்தர வன்பொருள் தருவதும் இயலாது. அதனால் சில கணினிகள் சக்திவாய்ந்தவையாகவும் மேலும் பல சோப்ளாங்கிகளாகவும் அமைக்கப்பட்டன. சக்திவாய்ந்த கணினிகள் நிறுவனத்தின் தரவுமையத்தில் சர்வர்களாயின. மற்றவை பயனர் முனையங்களாயின. இப்போது பயனர்களின் கணிமை எங்கே நிகழும்? கையிலுள்ள முனையத்தில் சில அடிப்படை வேலைகளும், சர்வரில் மேலும் பல கடினமான வேலைகளும் நிகழும். இங்கும் மேகக்கணிமையின் பண்புகள் தென்படுகின்றன:

  • ஒரு சில சக்திவாய்ந்த கணினிகளை மட்டும் பயன்படுத்தி, ஓரளவு குறைந்த செலவில் பயனர்கள் அனைவருக்கும் கணிமை வழங்க முடிகிறது
  • சர்வர் பகுதியில் மாற்றங்கள் தேவைப்பட்டாலும், அதனால் பயனர்கள் பெரும்பாலும் பாதிப்படைய மாட்டார்கள்

கணிமையின் பயன்கள் பல்வேறு தளங்களில் விரிந்து பரவ கிளையண்ட்-சர்வர் கணிமை காரணமாக இருந்தது. இதிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்தன:

  1. பல சமயங்களில் பயனர் முனையங்களிலும் வன்பொருள்/மென்பொருள் மாற்றங்கள் செய்யத் தேவையிருந்தது
  2. ஒரு பயனர் தனது முனையத்தின் முன் அமர்ந்திருக்காவிடில் அவரால் ஆணிகள் எதுவும் பிடுங்க இயலாத நிலை இருந்தது
  3. சர்வர் படுத்தால் சர்வமும் காலி

இணையக் கணிமை
தொண்ணூறுகளின் மத்தியில் வெடித்துப் புறப்பட்ட இணையக் கணிமை, அடுத்த சில வருடங்களில் டாட்காம் ஆர்வக்கோளாற்றில் அடிபட்டுத் திருந்தி, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் தெளிவடைந்திருந்தது. பொதுவாகவே கணினி வன்பொருட்களின் விலை குறைவு, மென்பொருள் பெருக்கம் ஆகிய காரணங்களால் மேசைக்கணினி மென்பொருட்களின் பயன்பாடு மிகுந்திருந்தது (உதாரணம்: மைக்ரோசாப்ட் வேர்டு, எக்ஸெல், ஃபோட்டோஷாப் இத்யாதி). இதன்கூடவே இணையம் சார்ந்த மென்பொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கலானது. வலைதளங்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இவற்றில் இருவகையுண்டு. முதல்வகை: மாற்றங்கள் ஏதும் இல்லாத நிலையான இணையப்பக்கங்கள், படங்கள், அவற்றிற்கிடையான இணைப்புகள். இவற்றையே வலைதளங்கள் என்றழைக்க வேண்டும். இரண்டாம் வகை – நிமிடத்துக்கு நிமிடம் மாறும் தரவுகளைக் கொண்ட தளங்கள் (உதாரணம்: அமேசான் போன்ற மின்வணிகத் தளங்கள்). இவற்றை வலைச்செயலிகள் என்றழைப்பதே பொருந்தும்.
கிளையண்ட்-சர்வர் கணிமைக்கும் வலைச்செயலிகளின் கணிமைக்கும் சில வேறுபாடுகள் உண்டு. இவை, மேகக்கணிமையின் பண்புகளாகவும் தென்படுவது தற்செயலன்று:

  • வலைச்செயலிகளில் பயனர் தரப்பு செயலியாக (கிளையண்ட்) இருப்பது அக்கணினியின் உலாவியே. அதனால், மென்பொருளின் பெரும்பாலான வேலைகளும் சர்வரிலேயே செய்யப்பட்டு, விளைவுகள் மட்டும் உலாவியில் வழங்கப்படும். இதனால் கிளையண்ட் மாற்றங்கள் எதுவுமே தேவைப்படாது
  • பயனர் முனையம் என்று குறிப்பிட்ட ஓர் கணினி தேவையில்லை. உங்கள் பக்கத்து வீட்டிற்குப் போய் அவர்களது கணினியில்கூட இந்த வலைச்செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

ஓடமும் ஒருநாள் வண்டியேறும், வண்டியும் ஒருநாள் ஓடமேறும் என்பதுபோல், இது கிட்டத்தட்ட மெயின்ஃப்ரேமின் கணிமைக்கு இணையான முறையாகவேகூட உங்களுக்குத் தோன்றலாம்.
என்னதான் சொல்ல வருகிறேன்?
1960ல் தொடங்கி 2010 வரை பல்வகையான கணிமைகளைப் பார்த்தாயிற்று. அங்கங்கே இவை மேகக்கணிமையின் பண்புகள் என்று பலவற்றைக் குறித்து வந்தாயிற்று. இவையெல்லாம் மேகக்கணிமை என்றால், ஒட்டுமொத்தமாய் மேகக்கணிமையின் பொருளும் நோக்கமும்தான் என்ன? இவற்றைத் தாண்டி மேகக்கணிமையில் வேறென்ன புதிதாய் இருக்கிறது? அடுத்த பகுதியில் பார்க்கும்வரை யோசித்து வைக்கிறீர்களா?

3 Replies to “கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம்”

  1. Dear Sir, this is very much informative for a common man like me.
    But , you have mentioned in the article ‘OOLAVI’,its bit difficult to understand,so as you have given in same article microsoft`s photoshop, word & xell in Tamil, if you add it`s equivalents for some technical words in English that would help us to go still more smoothly with your writing the article.
    Thank you for your great service.
    With regards:
    Chandrasekaran

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.