“மாப்ளே உங்கிட்ட பேசணுங்கறார்” என்று கிருஷ்ணமூர்த்தி அலைபேசியை பக்கத்திலேயே நின்று ஒட்டுக் கேட்க முயன்று கொண்டிருந்த மாலாவிடம் கொடுத்தார். மாலா அதை ஏறக்குறைய பிடுங்கிக் கொண்டு பேசினாள்.
“என்னாச்சு, உங்க இந்தியா எம்.டி.யை வழிக்கு கொண்டு வந்துட்டீங்களா? கம்பெனி செலவில உனக்கு கர்நாடகா காமிக்கறேன்னு சொன்னீங்களே, நடக்குமா நடக்காதா?” என்று ஆங்காரத்தோடு கேட்டாள்.
“ஆ ஆங் ஆச்சு. அவனுக்கு வேணுங்கற ப்ராஜெக்ட யூ.எஸ்.ல பண்றதுதான் பெட்டர்னு கொஞ்சம் ஆர்க்யூ பண்ணேன், புரிஞ்சுண்டுட்டான்.” என்று அலட்சிய தோரணையோடு ரமேஷ் பதில் சொன்னான்.
மாலாவின் முகம் மலர ஆரம்பித்தது. “பிரச்சின ஒண்ணுமில்லியே?” என்று கரிசனக் குரலில் கேட்டாள்.
ரமேஷின் குரலில் வெற்றியின் பெருமிதம் இன்னும் அதிகமாகத் தெரிந்தது. “ஹெச்ஆர்காரன்தான் கொஞ்சம் தகராறு பண்ணினான். நீ யூ.எஸ். கம்பெனி மானேஜர், உன் ட்ராவல், ஹோட்டல் மட்டும்தான் எங்க செலவு அப்படின்னு ரூல்ஸ் இருக்கு, போனாப் போறது, உனக்கு ஹோட்டல்ல ஒரு ஸ்வீட் வேணா புக் பண்ணித் தரோம், அதில எத்தன பேர் இருக்கான்னு கண்டுக்கல, ஆனா உன் பொண்டாட்டி குழந்தைகளுக்கு நீதான் ப்ளேன் சார்ஜ் போடணும்னு நியாயம் பேசினான். என்கிட்ட இதல்லாம் வச்சுக்க முடியுமா? அப்புறம் ஒரு வழியா காம்ப்ரமைசுக்கு வந்துட்டான்.”
“காம்ப்ரமைசா? என்ன காம்ப்ரமைஸ்?”
ரமேஷ் கொஞ்சம் எச்சரிக்கை தொனிக்கும் குரலில் “உங்க மூணு பேருக்கும் லக்சரி ட்ரெய்ன் – ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ்ல டிக்கெட் புக் பண்ணி இருக்கா.” என்று சொன்னான்.
மாலா “ப்ச!” என்றாள். அவள் குரலில் இளக்காரமும் ஏமாற்றமும் தெரிந்தது. “ப்ளேன் இல்லையா? ட்ரெய்னா?”
“இது ரொம்ப சௌரியமா இருக்குமாம். ராஜ உபசாரம் பண்ணுவாளாம். கேக்கும்போது எனக்கே அதில வந்திருக்கலாமோன்னு தோணறது. ப்ளேனுக்கும் இதுக்கும் ஏறக்குறைய ஒரே சார்ஜ்தானாம். எப்படியும் உனக்கு பெரம்பூர்லருந்து மீனம்பாக்கம் வர்ர நேரம், ஏர்போர்ட்ல வெயிட் பண்ற நேரம், அப்புறம் பெங்களூர்ல லோகல் ட்ராவல் டைம் எல்லாம் சேத்தா அதே நேரம்தாம் ஆகும் மாலா” என்று ரமேஷ் பதில் சொன்னான்.
“அப்படின்னா ப்ளேன் சார்ஜையே கொடுத்துத் தொலைக்கப்படாதோ?”
“அது ஆடிட்ல மாட்டிக்க சான்ஸ் இருக்காம். சார் தயவு பண்ணுங்கோன்னு அந்த ஹெச்ஆர்காரனும் எம்.டி.யும் கெஞ்சறா. சரி இதையும்தான் பாரேன்”
“ஹெச்ஆர்காரன் தகராறு பண்ணினான்னு சொன்னேளே, இப்ப கெஞ்சறாங்கறேள்?”
“அப்டித்தான். மிஞ்சினா கெஞ்சுவா கெஞ்சினா மிஞ்சுவா. உனக்குத் தெரியாதா?”
“சரி என்னிக்கு டிக்கெட்டு?”
“உனக்கு கூரியர்ல அனுப்பறா. நாளன்னைக்கு டிக்கெட்டு. நா ஸ்டேஷனுக்கு வந்துடறேன். நேரா விண்ட்சர் மேனர் ஹோட்டலுக்கு போய்ட்டு, அங்கியே லன்ச் கின்ச் சாப்டுவோம். வேணும்னா ஒரு தூக்கம் போடு. சாயங்காலமா விதான் சவுதா, கப்பன் பார்க், லால்பாக் எல்லாம் பாக்கலாம். வியாழன் வெள்ளி நா ஆஃபீஸ் போனதும் நீ ஷாப்பிங் கீப்பிங் போ. சனி ஞாயிறு மைசூர், ஸ்ரீரங்கப்பட்ணம் எல்லாம் சுத்திப் பாக்கலாம். திங்கக்கிழம உனக்கு திருப்பிப் போக டிக்கெட் புக் பண்ணி இருக்கு. சரிதானே ப்ரோக்ராம்?”
“சரி. நாளைக்கு வந்துடுங்கோ. நானும் போய் வேண்டியதெல்லாம் பாக் பண்ணறேன். பை!” என்று மாலா தொலைபேசியை வைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி பக்கத்திலேயே நின்று என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மாலா “உன் மாப்ளே ஒரு வழியா கம்பெனி செலவில எங்களுக்கு ஒரு பெங்களூர் ட்ரிப் அரேஞ்ச் பண்ணிட்டார்ப்பா. நாளைக்குக் கிளம்பி மண்டே திரும்பி வந்துடுவோம்” என்றாள். கிருஷ்ணமூர்த்தி “ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டார். “ஆமா, அவருக்கு மட்டும்தான் ட்ராவல், ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம், ஃபேமிலிக்கே பண்ணமாட்டோம்னு சொன்னாளாம். இவர் ஏதோ பேசி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாராம்” என்றாள். “அதானே! ரமேஷா கொக்கா? மனுஷன யாரும் பேச்சில ஜெயிச்சுக்க முடியாது. கல்லுல நார் உரிச்சுடுவார்!” என்று வியந்துகொண்டார். மாலா “அது என்னவோ உண்மைதான். பேசிப் பேசியே எல்லாரையும் கரச்சுடுவார்” என்றாள்.
அடுத்த நாள் பெங்களூர் ஸ்டேஷனில் “வாங்கடா பசங்களா” என்று சூர்யாவையும் ஆர்யாவையும் ரமேஷ் தூக்கிக்கொண்டான். கூட வந்த டிரைவர் பெட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டார். “என்ன மாலா எப்டி இருந்தது ஷதாப்தி?” என்று கேட்டான். “பிரமாதங்க! நான் கூட இவ்ளோ சௌரியமா இருக்கும்னு நினைக்கல. பசங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருந்துது. ப்ரேக்ஃபஸ்ட்லாம் ரொம்ப நன்னாருந்துது” என்றாள். “அதான் நா சொல்லல? நா சொல்லி ஒண்ணு தப்பாப் போயிடுமா?” என்றான்.
அடுத்த நாலைந்து நாட்களில் ரமேஷுக்கு நிறைய வேலை இருந்தது. பெங்களூரைத் தன் பிள்ளைகளுக்கு சுற்றிக் காட்டுவது, மனைவியுடன் கடைகளுக்குப் போவது, முடிந்த வரை கடைகளில் பேரம் பேசுவது, மைசூர், பிருந்தாபன் தோட்டம், காவேரி ஆறு என்று ஊர் சுற்றுவது என்று பல வேலைகள். அலுவலகத்தில் பேருக்குத் தலையைக் காட்டுவதோடு சரி. திங்கள் அன்றும் அலுவலகம் போக வேண்டாமென்றுதான் முதலில் நினைத்திருந்தான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. மதியம் திரும்பி வந்து மாலாவையும் குழந்தைகளையும் ஏற்றிவிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனான்.
ஆனால் அது ஒரு மோசமான திங்கட்கிழமை. எல்லா திங்களுமே மீண்டும் பணிக்குத் திரும்புவது கஷ்டம்தான். ஆனால் அன்று ஒவ்வொரு விஷயமும் ரமேஷுக்குத் தடுக்கியது. காலையில் போக்குவரத்து நெரிசலால் ஒரு மீட்டிங்குக்குக் தாமதம் ஆயிற்று. அவனுடைய பாஸ் அவன் தாமதமாக வந்ததைப் பற்றியும், போன வாரம் அவன் ஓபி அடித்ததைப் பற்றியும் கிண்டலாகப் பேசினார். அவனுடைய ப்ராஜெக்ட் தாமதம் ஆவதைப் பற்றி எல்லாரும் நிறைய அலசினார்கள். அடுத்த மீட்டிங்கில் முக்கியமான ஜப்பான் கிளையன்ட் ஒருவர் ஒரு பிரச்சினையைக் கொண்டுவந்தார். அதனால் பனிரண்டு மணிக்கு கிளம்பிவிட வேண்டும் என்று அவன் நினைத்தது நடக்கவில்லை. எல்லாவற்றையும் விட அதிமுக்கிய பிரச்சினை – ட்ராவல் ஏஜென்சிக்காரர்கள் டிக்கெட்டை இன்னும் கொண்டு வந்து தரவில்லை. இரண்டு மூன்று நாளாக ஊர் சுற்றியதில் இதைக் கவனிக்க ரமேஷும் மறந்துவிட்டான். இப்போது ஃபோன் மேல் ஃபோன் போட்டாலும் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்கிறார்களே தவிர டிக்கெட் இன்னும் வந்தபாடில்லை.
மாலா தொலைபேசியில் அழைத்து ட்ரெய்னைத் தவற விட்டுவிடுவோமோ என்று கவலைப்பட்டாள். ரமேஷுக்குத் தலைவலி ஆரம்பித்தது. மாலாவோ பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். ரமேஷ் ஆஃபீஸ் அசிஸ்டண்டிடம் கத்தாமல் இருக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். அந்த அசிஸ்டன்ட் ட்ராவல் ஏஜென்சிக்காரனிடம் கத்திக் கொண்டிருந்தாள்.
ரமேஷ் நிதானித்துக் கொண்டான். மாலாவிடம் தான் ஹோட்டலுக்கு வந்தவுடன் காரில் ஏறத் தயாராக இருக்கச் சொன்னான். டிரைவரிடம் வேகமாக போக வேண்டி இருக்கும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்தான். அலைபேசியை அணைத்தான். அசிஸ்டண்டிடம் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை ஃபோன் செய்து விசாரிக்கச் சொன்னான். கிளையன்ட் பிரச்சினையை எப்படி அணுகுவது என்று ஒரு திட்டம் போட்டு அதை தன் மானேஜர், அவருடைய மானேஜர் எல்லாருக்கும் ஈமெயிலில் அனுப்பினான். அதை செயல்படுத்த வேண்டியவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டான். அடுத்தபடி தான் ஓபி அடித்ததை கிண்டல் செய்த தன் மானேஜருக்கு தான் இந்திய விஜயத்தில் குறுகிய காலத்திலேயே செய்து முடித்த சாதனைகளைப் பற்றி ஒரு ஈமெயில் எழுத ஆரம்பித்தான். அப்போதுதான் டிக்கெட் வந்தது.
டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ரமேஷ் விரைந்தான். டிரைவரும் பெங்களூரின் பல குறுக்கு வழிகளில் புகுந்து வேகவேகமாகச் சென்றார். ராணுவ முஸ்தீபுடன் தயாராக இருந்தவர்களை வண்டியில் ஏற்றினான். ஸ்டேஷனின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து அவர்களை வண்டியில் ஏற்றிய பிறகுதான் ரமேஷ் மூச்சு விட்டான். அப்போது வண்டி புறப்பட இன்னும் ஐந்தே நிமிஷம்தான் இருந்தது.
கொஞ்சலான குரலில் மாலா “வெள்ளிக்கிழம சென்னை வந்துருவீங்க இல்ல?” என்று கேட்டாள். கட்டாயம் வந்துவிடுவதாக ரமேஷ் உறுதி அளித்தான். இருந்த ஐந்து நிமிஷத்தில் வார இறுதியில் எங்கே போகலாம் என்று பேசிக் கொண்டார்கள். ரயிலும் கிளம்பியது.
ரமேஷ் விட்டு விடுதலையான உணர்வோடு ஸ்டேஷனின் பின்வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். திடீரென்று அவனை ஒரு வெள்ளை சீருடை அணிந்த உருவம் நிறுத்தியது. “டிக்கெட் ப்ளீஸ்” என்று கேட்டது.
ரமேஷ் ஒரு நிமிஷம் வியந்தான். பிறகு தான் தன் மனைவி குழந்தைகளை வழியனுப்ப வந்ததாகவும், தான் வேறு எங்கிருந்தும் பயணம் செய்து இங்கே இறங்கவில்லை என்றும் சொன்னான். அதற்குள் டிக்கெட் பரிசோதகரின் பெயரைப் படித்திருந்தான். “பாலாஜி சார், மை ட்ரைவர் அண்ட் கார் இஸ் ஜஸ்ட் அவுட்சைட். இஃப் யூ வாண்ட், யூ கான் வெரிஃபை வித் ஹிம்” என்று சொன்னான்.
பாலாஜி, “ஓகே, வேர் இஸ் த ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்?” என்று கேட்டார்.
ரமேஷ் அதிர்ச்சி அடைந்தான். அவன் இந்தியாவுக்கு வந்து பத்து வருஷம் இருக்கும். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தோ அதற்கு மேலேயே இருக்கும். அமெரிக்காவில் தினமும் ரயிலில்தான் அலுவலகம் செல்வான் என்றாலும் அங்கெல்லாம் பயணச்சீட்டு இருந்தால்தான் ரயிலுக்கு அருகில் போக முடியும். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் என்று ஒன்று இருப்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது.
மீண்டும் பாலாஜியைப் பார்த்தான். பாலாஜியின் நெற்றியில் விபூதி தெரிந்தது. “பாலாஜி சார், நீங்க தமிழா?” என்று கேட்டான். பாலாஜி தன்னிச்சையாக தலையாட்டினார்.
“சார், இங்க பாருங்க, வேணும்னு பண்ணலை. நான் அமெரிக்காவில இருக்கேன். இந்தியாவுக்கு வந்தே பத்து வருஷம் ஆச்சு. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னே எனக்கு மறந்து போச்சு. ப்ளேன்லதான் இவங்க எல்லாம் போறதா இருந்தது, ஆனா சதாப்தி ரொம்ப சவுகரியமா இருக்குன்னு எல்லாரும் சொன்னா, அதனாலதான் இதில ரிசர்வ் பண்ணோம். பாருங்க சதாப்தில மூணு டிக்கெட் வாஙகற யாரும் அஞ்சு ரூபா ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுக்கு ஏமாத்தணும்னு நினைக்கமாட்டா. நீங்க என்னை இந்த ஒரு முறை எக்ஸ்க்யூஸ் பண்ணிண்டீங்கன்னா ஐ வில் பீ வெரி க்ரேட்ஃபுல்.”
பாலாஜிக்கு எரிய ஆரம்பித்தது. ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டும் இல்லை, இதில் விமானத்தில் பயணிக்கும் அமெரிக்காக்காரன், ரயிலில் எல்லாம் போகமாட்டார்கள் என்று பீற்றல் வேறு என்று கோபம் வந்தது. “சரி சார், நீங்களோ பெரிய மனுஷர், சதாப்தில மூணு டிக்கெட் வாங்கறீங்க, ப்ளேன்லயும் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்லதான் போவீங்கன்னு நினைக்கறேன்” என்று ஆரம்பித்தார். ரமேஷ் முகத்தில் சின்னதாக புன்னகை வர ஆரம்பித்தது. “உங்களுக்கு 255 ரூபா ஃபைன் எல்லாம் ஒரு விஷயமே இல்ல, கட்டிட்டுப் போயிடுங்க” என்று தனது ரசீதுப் புத்தகத்தில் எழுத ஆரம்பித்தார்.
ரமேஷ் முகம் மாறியது. “என்ன சார் சின்ன விஷயத்தை பெரிசு பண்ணறீங்களே?” என்றான்.
“உங்களுக்கு சின்ன விஷயம் சார், எனக்கு இதுதான ட்யூட்டி!”
“சார், புதுசா வரவங்களுக்கு – அதுவும் வெளிநாட்டுக்காரங்களுக்கு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கணும்னு எப்படி சார் தெரியும்? அமெரிக்காவில, யூரப்ல எல்லாம் இப்படி ஒண்ணும் கிடையாது தெரியுமா? என்ன வெளிநாட்டுக்காரன்கிட்ட பணத்தைக் கறக்கன்னே இப்படி ஒரு திட்டமா?” என்று கோபப்பட ஆரம்பித்தான்.
“பணத்தைக் கட்டிடுங்க. அப்புறம் எங்க ப்ளாட்ஃபார்ம் டிக்கட் வாங்கணும்னு போர்ட் வச்சிருக்கோம்னு நானே கூட்டிட்டுப் போய் காட்டறேன்!” என்றபடி பாலாஜி நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
ரமேஷ் எவ்வளவோ கரணம் அடித்தும் காரியம் நடக்கவில்லை. கடைசியில் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்ட வேண்டியதாயிற்று.
பாலாஜி ஐந்து ரூபாய் சில்லறையாக இருக்குமா என்று கேட்டார். ரமேஷ் உடனடியாக உச்சிக் கொம்பில் ஏறினான். இந்திய அரசு சட்டப்படி அடித்திருக்கும் நோட்டை இந்திய ரயில்வே மறுக்க முடியாது என்றும், சில்லறையாகத் தர வேண்டும் என்று எந்த அரசு சட்டமோ ரயில்வே விதியோ இல்லை என்றும் நீளமாக உரையாற்றினான். ஆனால் பாலாஜியும் விடவில்லை. கடைக்காரர் ஒருவரிடம் மாற்றி ஐந்து ரூபாய் நாணயமாகவே 245 ரூபாயைத் திருப்பித் தந்தார்.
இரவு பத்து மணிக்கு ரமேஷுக்கு மாலாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சவுகரியமாக போய்ச் சேர்ந்தீர்களா என்ற சம்பிரதாயக் கேள்விகள் முடிந்து இருவரும் தொலைபேசியை கீழே வைக்கும் நேரத்தில் ரமேஷ் சொன்னான்.
“இன்னிக்கு ஒரு இண்டரஸ்டிங் திங் ஹாப்பண்ட்.”
“என்ன?”
“உங்கள வழியனுப்பிட்டு திரும்பறப்ப ஒரு டிக்கெட் செக்கர் வந்து ப்ளாட்ஃபார்ம் டிக்கட்ட எடுன்னு பிடிச்சுண்டுட்டான்!”
“அய்யய்யோ? இப்டி ஒண்ணு இருக்கறதே எனக்கும் மறந்து போச்சே! என்ன பண்ணீங்க?”
“விடலியே? நான் அமெரிக்கன் சிடிசன், அங்க எல்லாம் இப்படி ஒரு கான்செப்டே கிடையாது, எனக்கும் மறந்து போச்சு, வாங்கணும்னு நீங்க வச்சிருக்கற போர்டு ப்ராமினண்டா இல்லே, அப்டி இப்டீன்னு ஒரு பெரிய லெக்சர் அடிச்சேன். ஃபைனும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் ஆள விட்ரா சாமின்னு என்ன அனுப்பிட்டான்!”
மாலா கடகடவென்று சிரித்தாள். “கில்லாடிதான் நீங்க! சரி பை!” என்றபடியே அலைபேசியை வைத்தாள். தொடர்பு அறுபடுவதற்கு முன் “அப்பா, உன் மாப்ள உண்மையாவே கல்லுல நார” என்று அவள் சொல்வது ரமேஷுக்குக் கேட்டது.
இந்த மாதிரி வாய்ச்சவடால் பேசும் ஆட்களை சுலபமாகவே கண்டு பிடித்து விடமுடியும். ஆனால் மனைவியால் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் போவது, அவளது அப்பாவித்தனம்/ கணவனின் அதிர்ஷ்டம்.