கனேடிய தேர்தல்

கனேடிய தேர்தல் பற்றிய கட்டுரையை ‘சொல்வனத்தில்’ படித்தேன். நல்ல நகைசுவையோடு எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் ஆங்கிலம் தூக்கலாக இருந்தது மட்டுமே குறை.
முதலில், அட நம் நாட்டைப் பற்றி கூட ‘சொல்வனம் போன்ற பத்திரிக்கைகள் கட்டுரைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.

Canada_2015_Federal_Election.svg

சில முக்கிய கனேடிய அரசியல் விஷயங்கள், சமீபத்திய லிபரல் கட்சி வெற்றிக்கு வழி வகுத்தது.
1. ஹார்பர், ஒரு ஏழு எட்டு ஆண்டுகளாக ஏறக்குறைய புஷ் பாணியில் இயங்கத் தொடங்கி விட்டார். முதலில், பூச்சாண்டி கட்டுவது – இதோ ஐசிஸ் வந்துவிடும் (மற்றவர்களைப் போல, இவர்களுக்கும் கனடா எங்கிருக்கின்றது என்றே தெரியாது). அடுத்தபடி, உலகப் பொருளாதாரம் சரிந்து விட்டது என்று எங்களுடைய பொருளாதார சரிவை நியாயப் படுத்துவது. கனேடியர்களுக்கு இது புரியாத ஒன்று. சைனாவிலிருந்து டாலர் கடை தவிர எந்த பொருளாதார தாக்கமும் நாங்கள் அறியோம். நாங்கள் அறிந்ததெல்லாம், எங்களின் அமெரிக்க சார்ந்த பொருளாதாரம் மட்டுமே. அமெரிக்க பொருளாதாரம் முன்னேறுகையில் ஏன் கனடா பிந்தங்கி உள்ளது – இதுபோன்ற பொதுக் கேள்விகளுக்கு ஹார்பர் சரியான பதில் சொல்லவில்லை
2. ஹார்பர் தன்னுடைய கன்சர்வேடிக் கட்சியில் இரண்டாம் நிலையில் யாரையும் வளர விடவில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் உட்பட பலருக்கும் இந்த கட்சியில் அதிக முக்கியத்துவம் இல்லை. ஏறக்குறைய யாரையும் நம்ப மறுத்தார். இதனால், பல ஊழல் புகார்கள் அவரது அலுவலகத்தையே சுட்டிக் காட்டின
3. பல அரசாங்க அமைப்புகளை உதாசீனப் படுத்துவதில் ஹார்பர் தீவிரம் காட்டினார். உதாரணத்திற்கு, உலகப் புகழ் பெற்ற கனேடிய புள்ளியியல் கழகத்தின் தலைவர், வெறுத்துப் போய் பதவியிலிருந்து விலகினார். ஜஸ்டின், இதை ஒரு தேர்தல் வாக்குறுதியாகவே முன் வைத்தார்
4. கனேடிய விஞ்ஞான அமைப்புகள் ஹார்பர் காலத்தில் நிதி ஒதுக்கீடின்றி தவித்தன. உதாரணத்திற்கு, கனேடிய அணுமின் கழகம், மற்றும் கனேடிய வின்வெளிக் கழகம். ஏதோ விஞ்ஞானிகளை புறக்கணித்ததால் ஹார்பர் தோற்றார் என்று சொல்ல வரவில்லை. அவரின் அணுகுமுறை, பல்லாண்டுகளாய் சிறப்பாக இயங்கி வரும் அமைப்புகளை நிராகரிப்பது என்பதற்கான உதாரணங்கள் இவை
5. புவி சூடேற்ற விஷயத்தில் கனடா தலை குனிந்ததும் ஹார்பர் தலைமையில்தான். தனக்கான எந்த ஒரு பன்னாட்டு பொறுப்பையும் தட்டிக் கழிக்காத நாடு கனடா. ஆனால், இந்த விஷயத்தில் பயங்கர அந்தர் பல்டியடித்தது. இன்றும், ஆல்பர்டாவின் பிடுமின் டார் மண்ணிலிருந்து எண்ணெய் எடுக்கும் விஷயம் ஒரு கனேடிய தலைகுனிவு. விண்வெளியிலிருந்து தெரியும் மிகப் பெரிய சுற்று சூழல் தலைகுனிவு இது
6. பிராந்திய முதல்வர்களுடன் ஹார்பர் பத்தாண்டுகளாய் ஒத்துழைக்க மறுத்த பிரதமர். இதனால், பல கனேடிய மாநிலங்கள்/நகரங்கள் னிதி ஒதுக்கீடு இல்லாமல் தேங்கத் தொடங்கின
7. பத்தாண்டுகளாக, கனேடிய பெரிய வங்கிகள் தவிர வேறு தொழில்கள் முன்னேறவில்லை. GM மற்றும் Chrysler நிறுவனங்களுக்கு கனேடிய அரசாங்கம் 2008 –ல் உதவிக்கரம் நீட்டி வரிப்பணத்தை வாரிக் கொடுத்தாலும், அதிக நிபந்தனைகள் எதுவும் வைக்காமல் இன்று கார் உதிரி பாகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கு இடம் பெயர்ந்து விட்டன. இதனால், அன்டேரியோவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது
8. $200,000 –க்கும் அதிகமாக சம்பாதிக்கும் கனேடியர்களுக்கு அதிக சலுகைகளை ஹார்பர் அரசு அளிக்கத் தொடங்கியது. ஜஸ்டின் இதை எதிர்த்து ஒரு வாக்குறுதியை அள்ளி வீசியது பல கனேடியர்களையும் கவர்ந்தது
9. கனடா, பல்லாண்டுகளாக, அமைதிக்காக பன்னாட்டு அரங்கில் கைதூக்கும் நாடாகவே இருந்து வந்துள்ளது. ஹார்பர், தொட்டதற்கெல்லாம், அமெரிக்காவுடன், இதோ போர் விமானம் அனுப்புகிறோம் என்பது மக்கள் மத்தியில் உதைக்கத் தொடங்கியது
10. ஹார்பர் செய்த ஒன்னொரு மிகப் பெரிய தவறு அமெரிக்க முறையில் கனேடிய குடிமக்களை வேவு பார்க்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை C-51 என்று அழைக்கப்படுகிறது
ஆக, ஹார்பர் ஒரு கனேடிய பிரதமராக இயங்கியதை விட, ஆல்பர்டாவின் (கனடாவில் எண்ணெய் வளம் மிக்க மாநிலம்) தலைவர் போலவே இயங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.