மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா?

 

dia_konrad-lorenz

ல்லா உயிரினங்களிலிருந்தும் காலப்போக்கில் இன்னொரு உயிர் பரிணாமம் அடைவதை நாம் பார்க்கிறோம்.
ஒரே வகை எறும்புகளைப் பிரித்து ஒரு கூட்டத்தைப்  மா மரத்திலும், மற்றொன்றை வேறொரு சூழலில், வேறொரு மரத்தில் விட்டு வளர்த்து வர, ஒன்றின் நடவடிக்கை, உடல் உறுப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு உயிராக பரிணாமம் அடைவதைப் பாடபுத்தகத்தில் படித்தும் இருக்கிறோம்.
இதே போல மனிதனிடம், பரிணாம வளர்ச்சியோ அல்லது மாற்றங்களோ சுட்டிக் காட்டும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
மனிதர்களும் வெவ்வேறு சூழல், உணவுப் பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை என வெவ்வேறு சூழலில் இருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமே இல்லை. அல்லவா? அது ஏன்?
மிருகங்களில் வெவ்வேறு சூழலில் இருந்து புது இனம் உருவாகும் எனில், மனிதனும் அப்படி இருக்கையில் ஏன் மாற்றம் ஏதும் இல்லை?
மிருகங்களில் ஏற்படுவதுபோல மனிதனில் முற்றிலும் புது இனம் ஏன் பரிணமிக்கவில்லை?
மனிதனிலிருந்து அவனைவிட பலம் பொருந்திய, அல்லது குறைவான, உடலுறுப்புகளில் அவன் சூழலுக்கேற்ற பெரும் மாற்றங்களைக் கொண்ட ஓர் இனம் ஏன் இன்னமும் உருவாகவில்லை? அந்த நிகழ்விற்கு இந்தக் கால அவகாசம் போதவில்லையா?
…அல்லது மிருகங்களைப் போலவே மனிதனிடையேயும் முற்றிலும் புது இனம் உருவாகி அதன் மாற்றத்தை நாம்தான் காணத் தவறிவிட்டோமா?
ஆம் எனில், நம்மிடையே இருக்கும் இனப்பாகுபாடு அல்லது இனப் பிரிவு என்பது இயற்கையான ஒன்றுதானா? அது இயற்கைதான் எனில் அவற்றை இன்னொரு பிரிவு ஏற்காமல் இனப்பாகுபாடு களையப்படவேண்டும் எனச் சொல்வது இயற்கையானதா? அல்லது எதனால் சொல்லப்படுகிறது?
மனிதரிடையே இனம், புது மனித இனப் பரிணாமம் உண்டா?
இயற்கையில் உண்டுதான். ஆனால், அதை மனிதன் தவிர்க்கவே விரும்புகிறான். மனிதரிலிருந்து முற்றிலும் புது இனம் உருவாவதை அவன் விரும்பவில்லை.

oOo

குதி உள்ளது தப்பிப் பிழைக்கும். இது எல்லாருக்கும் தெரிந்து ஏற்ற, உணர்ந்த ஒரு சொலவடை. ஆனால், மனித இனத்தில் இப்படித்தான் நடக்கிறதா?
 
தப்பிப் பிழைத்தல் என்பது என்ன? எல்லா உயிர்களுக்கும் தப்பிப் பிழைத்தல் என்பது உயிர் வாழ்தல். இதுதான் இயற்கை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்த விளக்கம். உயிர் பிடித்திருக்க உணவும், அதன் நீட்சியாக இன விருத்தியும், அவசரகாலங்களில் மற்ற உயிர்களின் உதவியும், தேவை. எனவே அவை கூட்டாக வாழவே முயலுகின்றன.
மற்ற உயிர்களின் உதவி என்பதில், ஒரே இன உயிரிகளின் உதவியும்தான், பிற இன உயிரிகளின் உதவியும்தான்.
வெவ்வேறு இன உயிர்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்வதை, அவைகளுக்கிடையேயான இணைப்பை, உறவை Symbiosis என்கிறார்கள். இரு வெவ்வேறு உயிரினங்கள், உதாரணமாக இரு தாவரங்கள், இரு வெவ்வேறு இன மிருகங்கள், மிருகம் மற்றும் ஒரு தாவரம் என ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதை இப்படிச் சொல்கிறார்கள்.
உதவிக்கொள்வதில் இரண்டும் பலன் அடைகின்றன எனில் அதை mutualism என்றும், ஒன்று மட்டும் பலன் அடையும், மற்றதற்கு எந்த பாதிப்பும் வராது எனில் commensalism என்றும், ஒன்று பலனடையும் ஆனால் மற்றது அழிக்கப்படும்/பாதிப்படையும் எனில் Parasitism என்றும் கூறுகிறார்கள்.
 
மனிதர்களைப் போல Altruism எனும் பொது நலப் பண்பு மிருகங்களுக்கு உண்டா? தன் இனத்திற்காக எந்த மிருகமாவது ஆபத்திற்கான வாய்ப்புள்ள சூழலில் தன்னை நிறுத்திக் கொள்ளுமா? மனித இனம் தவிர, மற்ற உயிரிகளில் அவை மற்ற உயிர்களுக்கு இரக்கம் காட்டுகின்றனவா? அடுத்த உயிர்கள் தப்பிப் பிழைக்க தன்னையே இழந்து உதவுகின்றனவா? எதிர்காலம் குறித்து அவை பயம் கொள்கின்றனவா? என்றெல்லாம் அறிய விரும்பித் தேடினால்…
அங்கே கதை வேறாக இருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற Konrad Lorenz ஒரு கருத்தைச் சொல்கிறார். பொது நலப்பண்பு கொண்ட சில உயிர்களாவது ஒரு இனத்தில் இல்லை எனில் அந்த இனம், பெருகுவதில்லை. இன உற்பத்தியில் வெற்றி பெறுவதில்லை. இந்த Altruism எனும் குணம் தனி உயிர்களைப் பாதிக்கும். அவைகளை அழிக்கும்; ஆனால், அந்த இனம் மொத்தத்தில் சுலபத்தில் அழிவதில்லை என்கிறார்.
உதவுதல் என்பதில்…
மோசமான சீதோசணங்களில், எறுப்பினங்கள் அஃபிட் எனும் சிறுபூச்சியினத்தைப் பாதுகாக்கின்றன. காரணம் அந்த சிறு பூச்சிகள் இலை, தழைகளிலிருந்து தனக்கான உணவைப் பெற்று, இனிப்பான திரவத்தை வெளியேற்றுகின்றன. அந்தத் திரவம் எறும்புகளுக்குப் பிடித்தமான உணவு.
Vampire Bats இது போல உணவில்லாத பிற வெளவால்களுக்கு உணவூட்டுகின்றன. அவற்றைப் பாதுகாக்கின்றன. ஆனால் இதன் நோக்கம் தன் இனத்தின் எண்ணிக்கையைக் கூட்டுவது மட்டுமே.
Velvet Monkeys ஆபத்து சூழுவதை உணர்ந்தால், பெருங்குரலிட்டு தன் இனத்திற்கு ஆபத்தை உணர்த்துகின்றன. இது நுணல் தன் வாயால் கெடும் என்பதைப் போல அந்த குரங்கை ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்றாலும் அந்த்க் குரங்கு வேறு வழி இல்லாத சூழலிலேயே இப்படிச் செய்வதால், இந்தப்பண்பு அதாவது தன்னை இழந்து தன் இனத்தைக் காக்கும் பண்பு என இதைச் சொல்ல இயலாது. வேறு வழி இல்லாத சூழலில் குறைந்தபட்ச உதவியாக இதைச் செய்கிறது.
Parasitism வகை உயிர்கள், ஒன்று மற்றொன்றை ஆளுமை செய்வதாகவே இருக்கின்றன.
ஆக, உயிர்கள் தன் உயிர் பிழைப்புக்காகவோ, அடுத்தகட்டமாக தன் இனம் பிழைத்திருக்கவோ மட்டுமே பொதுநலப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
இப்படி இருக்க மனிதனின் தியரி மட்டும் ஏன் மாற்றாக இருக்கிறது? வேறு இனத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்வதும், அவர்களுக்கு உதவுவதைப் பெருமையாக நினைக்கும் போக்கும் எந்த இயற்கைத் தூண்டலில்?
மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் எல்லா உணர்வுகளுமே ஒன்றாக இருக்க..
இரக்கம், புனிதம், இவை எல்லாம் ஏன் அவைகளிடம் இல்லை?
ஏன் எனில், இவை இயற்கையே இல்லை.
தப்பிப் பிழைத்தல் என்பது உயிர் பிடித்திருத்தல், இன நீட்டிப்பு எனப் பார்த்தோம் அல்லவா? இங்கே மனிதனின் தகுதி என்பது இவை மட்டுமல்லாமல் பலவற்றை தானாகவே கற்பிதம் செய்து கொண்டதே காரணம்.
ஏன் மனிதன் கற்பிதம் செய்து கொள்கிறான்?
மற்ற மிருகங்கள் உயிர் வாழ்வதே நோக்கமாக இருக்கின்றன. முதலில் தான் பிழைத்திருத்தல், பிறகு தன் இனம் பிழைத்திருத்தல்.
வெவ்வேறு இனக் குரங்குகள் ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்வதில்லை. பிரச்சனை என எதுவும் வந்தால் தன் உயிருக்கு அடுத்ததாக தன் இனக் குரங்குகளுக்கு உதவிக் கொள்கின்றன. அதற்கும் அடுத்ததான் மற்ற இன குரங்குகள், உயிர்களுக்கு உதவுகின்றன.
மனிதனுமே, இதையே செய்கிறான். தான், தன் குடும்பம், தன் இனம் அதன் பின் மற்றவை. இதனால், மனிதர்களுக்குள்ளும் வெவ்வேறு இனங்கள் பரிணாமம் ஆனதாகத்தானே அல்லது ஆக ஆரம்பித்திருப்பதாகத்தானே பொருள்?
அந்த பரிணாமத்தை  நம்மில் சிலர் தவறு எனத் தடுக்கிறோம். ஏன் எனில், மனித இனம் என ஒற்றை இனமாக மட்டுமே இருந்தால், மற்ற உயிர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம்.
மற்ற உயிர்களின் நோக்கம் ”இருப்பது.”
மனிதனின் நோக்கம் ”மனிதனாகவே தொடர்ந்து இருப்பது”.
பூமியில் மாற்றம் வந்தால், சுற்றுச் சூழலில் மாற்றம் வந்தால், அதைப் பொறுத்து மிருகங்களிலும் மாற்றம் நிகழலாம். அந்த மாற்றத்துடனேயே மிருகங்கள் உயிர் வாழும். அல்லது அழிந்து போகும். ஆனால், மனிதன் தன் இனத்தில் அப்படி ஒரு மாற்றம் நிகழுமாயின் அதற்கு ஒப்புவதில்லை. ஏனெனில், இயற்கை மாற்றத்தால் தன் இனம் டைனசோரைப் போல அழிவதை விரும்பவில்லை. வேறு இனமாக மாறுவதை விட பூமியில் இருந்து வேறிடம் தேடிக் கண்டடைய முயலுகிறான். மாற்றம் ஏதும் இல்லாமல் மனிதனாகவே பிழைத்திருக்கத் தோதாக.
ஆக தப்பிப் பிழைத்தல் என்பது மிருகங்களுக்கு வேறாக, மனிதனுக்கு வேறாக, இருக்கிறது.
இந்த தப்பிப் பிழைத்தல் வேறாக இருப்பதாலேயே இந்த தகுதி என்பதும் வேறாக இருக்கிறது.
மனிதனிடையே உயிர் பிடித்திருத்தல், இனம் பெருக்குதல்தான் இயற்கை அவனுக்கு விதித்த ”தப்பிப் பிழைத்திருத்தல்” என்றாலும், அவன் மற்ற உயிர்களைப் போல் அல்லாமல், இயற்கையை எதிர்த்து, அதன் மாற்றங்களுக்கு தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாமல் மனிதனாகவே பயணிக்க விரும்புகிறான்.
இதனாலேயே இயற்கை விதிக்கும் இவனின் விதிக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள்.
மிருகங்களிடம் இரக்கம் என்ற ஒன்று கிடையாது. அதாவது மனிதன் உணர்வது போல… ஒரு குரங்கு புலிக்குட்டிக்குப் பால் கொடுத்தால் அந்த Symboyatic relationship இரக்கம் அல்ல.
ஆனால் மனிதன் மற்றொரு மனிதனுக்கு இரங்குவதற்குக் காரணம், தன் இனத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல. மனித இனத்தை மனித இனமாகவே வைத்திருக்கும் முயற்சிதான்.
மிருகங்களைப் போலவே, மனிதனிலும் புது இனம் உருவாகும்/பரிமாணம் அடையும் என்பதே இயற்கை. ஆனால் அப்படி ஒரு இனம் உருவாகி அது தன்னை விட பலம் பெற்றிருந்தால் இவன் எங்ஙனம் பிழைத்துக் கிடப்பது? இதனாலேயே இயற்கையாக எழுந்த பரிணாம வளர்ச்சியினைத் தடுக்கும் முகமாக இவனே அவற்றைக் கலைக்க இரக்கம், புனிதம், மனிதருக்குள் இனப்பிரிவு இல்லை எனும் புது விதிகளைச் சமைக்கிறான். சிலர் இயற்கையை ஒட்டியும், சிலர் இந்த விதிகளை ஒட்டியும் இருப்பதே கலவரம்.
இந்த விதிகளுக்குத் தோதாக ”தகுதி” என்பதற்கான விளக்கத்தையும் தானாகவே கற்பித்துக் கொள்கிறான்.
மனிதனைப் பொறுத்தவரை ”தகுதி” என்பது உயிர் பிடித்திருத்தல் அல்ல. இரக்கம் உள்ளவனாக, இன பேதம் பார்க்காதவனாக…இன்னபிற விதிகள்.
இவையெல்லாம் இருந்தால்தானே இவனின் நோக்கமான ”மனிதனாகவே தப்பிப்பிழைத்தல்” நடந்தேறும்?
இனம், பிரிவுகள் பல மனிதனில் உண்டு எனச் சிலர் சொல்லக்காரணம் அது இயற்கை. மிருகங்களின் நடப்பதைப் போல..
இனம், பிரிவுகள் பல மனிதனில் உண்டு ஆனால் அவை வேண்டாம் எனச் சிலர் சொல்லக்காரணம் அவனிலிருந்து வேறொரு பரிணாமத்தில் இவனை விட பலம் பொருந்திய ஓரினம் வருவதில் விருப்பமில்லை.
இயற்கையாக இனமும் பிரிவுகளும் இருந்து பரிணாமம் அடையப்போகிறோமா?
அல்லது பிரிவுகள் இல்லாமால் ஆனால் மனிதனாகவே தொடரப் போகிறோமா?
***இயற்கையை மீற முயற்சிப்பதால் மனிதன் இந்த பூமியில் முளைத்தவன்தானா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.