வெள்ளைப் புறா
என்றும் போல்
அன்றும் பேசி விட்டுப் போக வந்திருப்பார் நண்பர் அறைக்குள்.
எங்கிருந்தோ பறந்து வரும்
எங்களிடம் பேசி விட்டுப் போக வருவது போல் ஒரு வெள்ளைப் புறா.
ஒரு பகல் வேளை வெள்ளை மேகத்தை அது உடுத்தியது போலிருக்கும்.
ஜன்னலண்டை
அமரும்.
காலம் அவசரமாய் இருப்பது போல்
தத்தும்.
காற்றின் அனல் மொழியை
முனகும்.
அதன் மேல் வைத்த விழி வாங்காமல் கண்டு கொண்டே இருக்க கைவிடப்பட்ட வார்த்தைகள் கொட்டிக் கிடக்கும் அறையில்.
வாரி அவற்றை ஜன்னலின் வெளியே வீசி எறிய
அறை காலி செய்யப்பட்டது போல் அறைக்குள்ளே அறைக்கு வெளியேயிருந்து காண்பது போல் காண்போம் நண்பரும் நானும்.
வெள்ளைப் புறா பறந்து போயிருக்கும் பொருளற்ற வார்த்தைகளைத் தேடியுண்ண.
நிலா தத்தளிக்கும்
இரவு சேர் இருட் கடலுள்
மலை மூழ்கும்.
மலை மூழ்க
மலைக் காடு மூழ்கும்.
காடு மூழ்க
காட்டு மரம் மூழ்கும்.
மரம் மூழ்க
மரம் மேல் ஒரு பறவை மூழ்கும்.
பறவை மூழ்க
பரந்த வானம் மூழ்கும்.
வானம் மூழ்க
மூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய் இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.
– கு.அழகர்சாமி
oOo
தொலைந்த மனம்…
பச்சை விளக்கின் காத்திருப்பில்
பிச்சை எடுக்கும் சிறுமிகள்
அலறும் இசையும், உறுமும் வாகனமும்
தொலைக்க செய்தன அவர்களின் யாசிப்பை
சிறு விரல்கள் என் உடல் தீண்ட
அவள் உள்ளங்கையில் என் மகள் போன்றே மருதாணி
காத்திருப்பு முடிவுக்கு வர முண்டியெலுந்த வாகனங்கள்
எனை முன்னகர்த்தி சென்றன
வெகு தூரம் கடந்து திரும்பி பார்க்கையில்
அனல் பறக்கும் சாலையை அலை அலையாய் கடந்து கொண்டிருந்தாள்
எதற்கோ காத்துக்கொண்டு இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தது என் மனம்.
oOo
“இன்றைய செய்தி – இந்திய மீனவர் எல்லை தாண்டினால் 25 கோடி அபராதம் – இலங்கை, இலங்கை மீனவர் தாண்டினால் 75 கோடி அபராதம் – இந்தியா. இதற்கு என்னதான் முடிவு? மீனவர் பிரச்சனையை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை கீழே.”
வழியொன்றுண்டா?
அலையெறியும் கடலினிலே எல்லைக்கோடு
அதையறியா மனிதருக்குத் துவக்குச் சூடு
வலை வளையச் சென்றவரின் வாழ்விற் கேடு
வரவழைக்க கடற்படையோர் படுத்தும் பாடு
நாடிரண்டைப் பிரிப்பதற்கு நிலத்தில்வேலி
நட்டிடலாம் தவறில்லை மீன்கள்துள்ளி
ஆடுமலைக் கடல்மீது எல்லைக் கோட்டை
அமைத்திவர்கள் ஆடுவதேன் மனித வேட்டை
காடுமலை மேடெல்லாம் எல்லை தாண்டி
களவாகப் போவோரைக் கைது செய்து
போடுவதாற் சிறையினிலே அர்த்தமுண்டு
புரியாத கடல்தன்னில் என்னவுண்டு
மீன்பாடு கண்டவர்கள் வலையை வீச
மிகுபாடு பட்டவர்கள் செல்லும்போது
ஏன்பாடு படுகின்றார் அரசை ஆழ்வோர்
இரக்க மின்றி முடிப்பதற்கு அவர்கள் வாழ்வை
தாய் தமரை சுற்றத்தை ஊரை விட்டு
தனியாகக் கடல்மீது போவோர் கப்பற்
பாய்விரித்து செல்லுகையில் காற்று எங்கே
படை நிற்கும் என்றறிந்தா வழியை மாற்றும்?
கொதியறிந்து வலை வீசக் கொஞ்ச தூரம்
கோடறியா தெல்லைதனைத் தாண்டிவிட்டால்
கொலை வெறியில் வந்தவரைத் தாக்குகின்றார்
கொடுமையிதைத் தடுப்பதற்கு வழியொன்றுண்டா?
எத்தனைதான் வேண்டுதல்கள் செய்திட்டாலும்
இனி வேண்டாம் இக்கொடுமை என்றிட்டாலும்
அத்தனைக்கும் ஆமென்பார் மீண்டும் அந்த
அப்பாவி மீனவர் மேல் கொடுமை செய்வார்
இத்தரையில் இனிவேண்டாம் இந்தத் துன்பம்
இருதரப்பு அரசாரும் வலைஞர் வாழ்வை
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி
காப்பதற்கு வழியொன்றைக் காணுவாரா?
– எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி)
oOo