ஊமை வலிகள்

முத்துராசு நாக்கில் தொட்டு அந்தத்துணுக்கை எடுத்துப் பார்த்தான். டீயில் விழுந்த ஆடையா அல்லது மேலண்ணத்தில் தோலுறிந்து வந்துவிட்டதா தெரியவில்லை. அவனுக்கு வாயில் அடிக்கடி பிரச்சினைகள் வரும். முருங்கைக்காயை வாயின் ஓரத்தில் வைத்துச் சவைத்து அதன் சாறை உறிஞ்சுவது அவனுக்கு சொர்க்கானுபவம். முருங்கைக்காயின் சுவைக்கு அவன் அடிமை. இதனாலேயே இரண்டுதாடை ஓரங்களும் அடிக்கடி புண்ணாகி விடுகின்றன. கறி சாப்பிட்டாலும் எலும்பு வேண்டும் அவனுக்கு. எலும்புகளுக்கு இடையே இருக்கும் மஜ்ஜையின் சுவையறியாதார் கறி தின்ன லாயக்கில்லை என்பது அவன் அபிப்பிராயம். சாறைமட்டும் கவனமாய் உறிஞ்சிவிட்டு எலும்பைக் கூழாக்கி அதன் சக்கையைத் துப்பிவிடுவான். இந்தப் பழக்கத்தால் அவன் விருந்தினர் வீடுகளில் கறி சாப்பிடக் கூச்சப்படுவான். இப்படிச்சாப்பிடாவிட்டால் அவனுக்குக் கறிசாப்பிட்ட திருப்தி இருக்காது.

இதனால் அடிக்கடி அவனுக்கு வயிற்றில் வலி வந்துவிடுகிறது. பாமா தியேட்டர் ரோட்டில் உள்ள இரண்டாவது சந்தில் ஒரு பாட்டி தொக்கம் எடுத்துவிடும். எலும்புத் துண்டுகளும், முடியுமாய் வந்து விழும். முடிக்கொத்தைப் பார்க்க முதலில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு பெண் தலைவாரி முடித்தவுடன் சுருட்டிப்போடும் முடிகள் அளவுக்கு இருந்தது. ஒருமுடியானாலும் தொண்டையில் தட்டிவிடுமே எப்படி இவ்வளவு முடி வயிற்றுக்குள் போனது என்று ஆச்சரியம். எப்படியோ வயிற்றுவலி நின்றுபோனதால் அந்தப் பாட்டியை நம்பினான். 

கறிச்சோறு என்றால் அவன் அம்மா கைப்பக்குவம் தான். கனகதுர்காவுக்கு அந்தப் பக்குவம் வராது. அம்மாவுக்கு முன்னைப்போல வேலை பார்க்கமுடியவில்லை. அம்மாவை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு நடுக்கமெடுக்கிறது. அம்மா அவன் பிரியத்துக்குரிய அம்மா.

walking

முத்துராசு சின்னப் பிள்ளையாய் இருக்கையில் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே அலைவான். எந்த ஊருக்குப் போனாலும் அம்மா அவனையும் கூட்டிச் செல்வது வழக்கம். இரண்டாம் ஆட்டம் படத்துக்குப் போனாலும் இடுப்பில் தொத்திக் கொள்வான். காரணம் இரவில் தூங்கிக்கொண்டே வருவான். ஒருமுறை கைவலிக்கிறதென்று அம்மா இறக்கிவிட்டது, தூங்கிக்கொண்டே நடந்து சாக்கடைக்குள் விழுந்து கழுத்துவரை சகதி. அம்மா விளையாட்டாய் இவனிடம் கேட்பாள், ‘நான் செத்துப்போய்ட்டா என்ன செய்வ‘. ‘நானும் செத்துப் போய்டுவேன்என்பான். இப்போது யோசித்துப் பார்க்கையில் தான் ஏன் வளர்ந்தோம் என்றுதான் இருக்கிறது. தான் மட்டுமா அம்மாவும்தான் மாறிவிட்டாள். அம்மாவுக்கு பிள்ளைகள் மேலெல்லாம் அவ்வளவு பிடிப்பு இல்லை. அவளுக்கு பேரப்பிள்ளைகள் தான் முக்கியமாய்ப் போய்விட்டது. ஒருவேளை வளர்ந்துவிட்ட எங்களை தொட்டுக் கொஞ்ச முடியாததினாலா அல்லது பெரியவர்களுக்கு தன் குடும்பத்துக் குழந்தைகளை மட்டுமே பிடிக்கிறது என்பதாலா தெரியவில்லை. அம்மா இதை ஞாபகம் வைத்திருப்பாளா? ஒருகாலத்தில் தான் செத்தால் தன்னுடன் செத்துவிடுவேன் என்று சொன்ன அவள் அன்புப் பிள்ளை முத்துராசு. இல்லை, முத்துராசு குழந்தையில்லை அவனுக்கு மனைவி இருக்கிறாள், இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அந்தக் குழந்தை முத்துராசுவை விலக்கிவிட்டாளா? அம்மா நேற்றுக்கூட பேரனிடம் சொன்னாள், ‘எத்தனை பெரியவனானாலும், உனக்கு அப்பனேயானாலும் அவன் என் பிள்ளை தானடா‘. 

அம்மா திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தாள். வாசல்படி மிதிக்கும்முன்னே மஞ்சள் பையிலிருந்து எனக்கும் பிள்ளைகளுக்கும் கொண்டுவந்த மாவுருண்டையையும், கொய்யாப்பழத்தையும் எடுத்தாள். முத்துராசுவுக்கு எரிச்சலாய் இருந்தது. இது அவள் வீடல்லவா. இங்குவந்து இருக்க கப்பம் கட்டுவதுபோல, இலஞ்சம்போல இதைக் கொடுக்கிறாள் என்று நினைத்தான். அம்மா கூடவே கணேசனையும் கூட்டிவந்திருந்தாள். கணேசன் முத்துராசுவின் அண்ணன். வயது ஐம்பது. பதினேழுவயதில் மனப்பிறழ்வு ஏற்பட்டது, தீரவேயில்லை. எத்தனையோ சாமிகள், எத்தனையோ ஆஸ்பத்திரிகள். இப்போதுகூட யாராவது ஏதாவது கோயில் குளம் என்றால் அம்மா நம்பிக் கிளம்பத்தயாராகத்தான் இருக்கிறாள். ஒரு நப்பாசையில் கணேசனுக்கு கல்யாணம்கூடச் செய்துபார்த்தாள். அப்போது முத்துராசு எவ்வள்வோ சொல்லிப்பார்த்தான், சண்டைபோட்டான். அம்மா கேட்கவில்லை. கல்யாணம் ஆனால் அவனுக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்றாள். இரண்டுவருடங்கள் கன்னியாய் வீட்டில் காலம் கழித்துவிட்டு விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விட்டாள். பாவம். விவாகரத்து வாங்கிய அன்று அந்தப்பெண் தலையில் அடித்துக் கொண்டு அழுதபோது அந்தப்பாவத்தில் தனக்கும் பங்குண்டு என்று மனதார நினைத்தான் முத்துராசு. 

கணேசன் முன்னைக்கு இப்போது எவ்வளவோ தேவலை அல்லது மிகமோசம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முன்னெல்லாம் இருக்கும்போதே திடீரென்று ஆவேசம் வந்ததுபோல் தலையில் நறுக் நறுக்கென்று குட்டிவிடுவான். யாரென்று பார்க்கமாட்டான். கம்பை எடுத்து சகட்டுமேனிக்கு அடித்து விட்டு எங்காவது போய்விடுவான். அவனைத்தேடி முத்துராசுவும், அம்மாவும் ஊரெல்லாம் அலையோ அலையென்று அலைவார்கள். ஒருமுறை இப்படித்தான் கோவில்பட்டி இரயில்வே ஸ்டேஷன் கக்கூஸில் போய் உட்கார்ந்துவிட்டான். தண்ணீரைத் திறந்துவிட்டு உட்கார்ந்தவன் தான் இராத்திரியிலிருந்து காலைவரை அப்படியே இருந்திருக்கிறான். எப்படியோ ஒருவர் பார்த்து ஒருவர் சொல்லி கடைசியில் அவனைக் கூட்டி வந்தார்கள். அவனால் எழுந்திரிக்கவே முடியாமல் கால்கள் மரத்துவிட்டன. அந்த காய்ந்துபோன மலம் நிறைந்த கக்கூஸில் தவழ்ந்தே வந்தான். இப்போதெல்லாம் யாரையும் அடிப்பதில்லை. வயதானதன் காரணமாகத்தான் இருக்கும். கணேசனுக்கு ஐந்தாண்டுகளாக வலிப்பு வருகிறது. அம்மாவும் கணேசனும்தான் தனியே இருக்கிறார்கள். அம்மாவுக்கு எழுபத்தைந்து வயதுக்கு மேல். அப்பாவுடன் வாழ்ந்து பிள்ளைகளைக் கரையேற்றி, பேரப்பிள்ளைகள் தவழ்ந்து பார்த்த, சொந்தமாய் அவள் பெயரில் உள்ள வீடென்பதால் அம்மா முத்துராசுவுடனோ, இளையவன் முருகேசனுடனோ வந்து இருக்கமாட்டேன் என்றுவிட்டாள். ஆனால் வாழ்க்கை முழுக்க அவளுக்குத் தீராத பாரமாய், எப்போதும் கவனிப்பைக் கோரும் குழந்தையாகவே கணேசன் இருக்கிறான்.

ஒருமுறை கணேசனுக்கு வலிப்பு வந்து நின்றபடியே டமாரென்று தரையில் விழுந்துவிட்டான். தலையெல்லாம் இரத்தம் குபுகுபுவென்று கொட்டுகிறது. அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. யாரையும் போனிலும் கூப்பிடத்தெரியாது. நல்லவேளையாக அந்நேரம் முத்துராசுவின் பையன் வந்ததால் உடனே முதலுதவி செய்து ஒரு கம்பவுண்டர் மூலம் கட்டுப்போட்டுவிட முடிந்தது. அதற்குப் பிறகுதான் அம்மா செல்போன் வைத்துக் கொண்டாள். ஒன்று இரண்டு மூன்று என்று ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பர் வைத்துக் கூப்பிட கற்றுக் கொண்டாள். 

அம்மாவால் தரையில் படுக்கமுடியாது. நடந்துநடந்து இடுப்போடு இணையும் எலும்புகள் தேய்ந்து விட்டன. முதுகெலும்பும் தேய்ந்து விட்டது. முத்துராசுவின் வீட்டில் ஒரே கட்டில்தான். அம்மா அதில் படுத்துக்கொள்ள குடும்பத்துடன் தரையில் படுத்துக்கொண்டான். ஹாலில் ஃபேன் ஓடுகிறது என்றுதான் பெயர். கொசுக்கடி தாங்க முடியாது. கணேசனுக்கு இன்னொரு படுக்கையறை ஒழித்துக் கொடுத்திருந்தான். மறுநாள் வேலைக்குச் சென்று ஒருமணிநேரம்தான் இருக்கும், வீட்டிலிருந்து மனைவி கனகதுர்கா போனில் கூப்பிட்டாள், ‘உங்க அண்ணனுக்கு ஃபிட்ஸ் வந்துடுச்சு. சீக்கிரம் வாங்க‘. இவன் சில முக்கிய வேலைகளில் இருந்தான். முடித்துவிட்டு கிளம்பிவர ஒருமணிநேரம் ஆகிவிட்டது. வீட்டிற்குள் வந்தால் ஒரே மலநாற்றம். கனகதுர்கா பினாயிலும் டெட்டாலும் போட்டு வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஜீவனே இல்லை. வலிப்பு வரும்போது கணேசன் வேட்டியிலேயே மல ஜலம் கழித்துவிடுவான். அம்மா அந்தத்துணிகளை எத்தனை சொல்லியும் கேளாமல் தானே கையால் துவைத்தாள். முத்துராசு வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் துணிகளைக்கூட அவளேதான் துவைக்கிறாள். துர்கா எவ்வள்வோ கேட்டுப்பார்த்தாள். ஒருமுறை அம்மாவுக்கு வாஷிங் மெஷின் வாங்கித்தருகிறேன் என்று முத்துராசு சொன்னான். அம்மா அது எதுக்கு காசுக்குப் பிடிச்ச தெண்டமாஎன்று சொன்னாலும் வாங்கித்தந்தால் அவளுக்கு ரொம்பவும் உபயோகமாய் இருக்கும். அம்மாவுக்கு இளைப்பு இருக்கிறது, பிரஷர் இருக்கிறது. சுகர் இருக்கிறது. சுகர் வந்தபோது அம்மாவால் நம்பவே முடியவில்லை. எத்தனை உழைத்த உடம்பு இது, எனக்கு சுகரா என்று அங்கலாய்த்தாள். சுகர் பணகாரவியாதி என்பது அம்மாவின் எண்ணம். கோவில்பட்டி ஒரு கந்தகபூமி. சின்னவயதில் முத்துராசுவையும் தூக்கிக் கொண்டு தலையில் ஒருகுடத்தையும் தூக்கிக்கொண்டு இரண்டுகிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடிபம்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டு நாலைந்து நடைகள் போய்வருவாள். சிலநேரம் பக்கத்து வீட்டில் அவனை விட்டுவிட்டு இடுப்பில் ஒருகுடம் தலையில் ஒருகுடமுமாக எடுத்துவருவாள். அப்படி நடையாய் நடந்துதான் தனக்கு இளைப்பு வந்துவிட்டது என்பாள். முத்துராசுவுக்கும் இளைப்பு வரும்.

துர்கா இரவு இவனைத் தனியே கூப்பிட்டாள். என்ன சொல்லப்போகிறாள் என்று தெரியும். பேசாமல் சுவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அம்மா உள்ளே தூங்கிக்கொண்டிருந்தாள்.

நான் இன்னிக்கி முழுக்க சாப்பிடலை தெரியுமா?’

‘…….’

ஒரு வாய் வாயில வைக்கமுடியலை. வீடெல்லாம் அவ்வளவு நாத்தம். உங்களுக்கு ஒன்னும் தெரியலியாப்பா?’

அப்படி ஒன்னும் இப்பத் தெரியலியே. இதுக்காகவா சாப்பிடாம இருந்தே. ஹோட்டலுக்குப் போவமா?’

ஒன்னும் வேணாம்…..என்னாலல்லாம் இப்படி இருக்கமுடியாதுப்பா‘ 

என்னடி இப்படிப் பேசறே. எங்கம்மாக்கு பொம்பளைப் புள்ளைங்க கிடையாது. நாளைக்கு நடக்கமுடியாம கெடந்தா யாரு பாப்பா

எனக்குத் தெரியாது. எங்கம்மாவா இருந்தாலும் என்னால முடியாது. நாம் மோசமானவ இல்லை மாமா. ஆனா என்னால நிச்சயமா இப்படி இருக்கமுடியாது

சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். அம்மா எதையுமே வாய்திறந்து கேட்டது இல்லை. ஊருக்குப் போய் மூன்றுமுறை ஏதாச்சும் வேணுமாம்மான்னு கேட்டாத்தான் என்னத்த வாங்கப்போற. எல்லாம் கிடக்குஆனால் அடுப்படியில் போய்ப் பார்த்தால் பருப்போ காய்கறியோ இருக்காது. அம்மா எப்படியாவது சமாளித்துக் கொள்வாள். அவள் இதுவரை கொடுத்துத்தான் வந்திருக்கிறாள். வாங்கிப் பழக்கமேயில்லை. 

அம்மா மறுநாள் கிளம்பிப் போய்விட்டாள். நான் செத்துப்போனா என்ன செய்வஎன்று கேட்டது மட்டும் முத்துராசுவுக்கு உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

One Reply to “ஊமை வலிகள்”

  1. பாலாவின் பதிவுகளை மு.நூ. லில் வழக்கமாக வாசிப்பவன். படிப்பதற்கு பத்தி எழுத்து மாதிரியிருந்தாலும் நன்கு வந்திருக்கிறது. அவரின் எழுத்துகளில் நிறைய சுய அனுபவம் உண்டு.இதை படிக்கும் போதும் அவரே அவரின் அனுபவம் சொல்வது போலிருக்கிறது.சிறுகதை என்பதற்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.லாசரா தன் கதைகளை கணக்கற்ற முறை திருத்தி எழுதுவாராம்.ஒரு கதையை ஏராளமான முறைகள் திருத்தி திருத்தி எழுதியும் திருப்தி வராமல்…கடைசியாக தன் மகனிடம் மறு நாள் காலை தனக்கு தெரியாமலே கதையை தபாலில் அனுப்பக் குறியுள்ளார்…ஏனெனில் மறுபடியும் திருத்த ஆரம்பித்து விடுவோம் என பயந்தே கூறியுள்ளார்…..அது போஅல இக் இக்கதையையும் இன்னும் கொஞ்சம் திருத்தியிருக்கலாம்…திருத்தியிருந்தால் நடை கொஞ்சம் வித்தியாசமாக யிருந்திருக்கும்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.