வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்

வண்ண நிலவன்

VeSaa_Venkat_Saminadhan_Ramalakshmi_3

1970 என்று நினைவு. அப்போது சேலத்திலிருந்து ‘நடை’ என்ற சிற்றிதழ் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. இலக்கியம் மட்டுமின்றி ஓவியம், நாடகம் போன்ற துறைகளிலும் நவீனத்துவத்தை முன்னிருத்திய பத்திரிகை அது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கலை-இலக்கியத் துறைகளில் மார்க்ஸியத்தின் தாக்க கணிசமான அளவு இருந்தது. கலைத்துறைகளில் ‘முற்போக்கு’, ‘பிற்போக்கு’ என்ற கருத்துகள் உலவி வந்த காலம் அது.
மார்க்ஸீய அணுகு முறை தவிர 50-களில் மிகுந்த திராவிட இயக்கத்தின் தாக்கமும், வெகுஜன சினிமா, அரசியல் துறைகளில் நீடித்து வந்தது. அரசியலிலும், சினிமாவிலும் அண்ணாதுரை, கருணாநிதி போன்றார்  தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அண்ணாதுரை ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய இரண்டே படங்களுக்குத்தான் கதை வசனம் எழுதினார். ஆனால் கருணாநிதி மந்திரி குமாரி, மனோகரா, பராசக்தி என்று பல திரைப்படங்களுக்குக் கதை-வசனகர்த்தாவாக இருந்தார். காங்கிரஸ்காரர்களும், தேசியவாதிகளும் பாரதியைக் கொண்டாடினர் என்பதால், தி.மு.கழகம் பாரதிதாசனைக் கொண்டாடியது.
vslபெரிய அளவில் இலக்கிய உலகிலோ, கருத்துத் துறையிலோ தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், கே.ஜி. ராதாமணாளன், ஸ்ரீனிவாசன் ( ’ஆடும் மாடும் ’ தொகுப்பின் ஆசிரியர்) , எஸ்.எஸ்.தென்னரசு போன்றோர்  தி.மு.கழகத்தின் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் கண்ணதாசன் கூட தி.மு.கழகத்தில்தான் இருந்தார். காங்கிரஸும், ம.பொ.சியின் தமிழ் தேசியக் கட்சியும் தேசியத்தை முன்னிருத்தின என்றால், தி.மு.க திராவிட நாடு, திராவிட கலாசாரம் என்ற குறுகிய வட்டத்துக்குள் தமிழர்களை அடக்கி விடப் பாடுபட்டது.
1965 –இல்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளந்தது. ஒரே கட்சியாக இருந்த போதும் சரி, இரண்டாகப் பிளந்த போதும் சரி, கம்யூனிஸ்டுகள் விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’, தொ.மு.சி.ரகுநாதனின் ‘சாந்தி’, பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வந்த ‘தாமரை’ முதலான பத்திரிகைகளின் மூலம் இலக்கியத்தில் முற்போக்குக் கொள்கையை வலியுறுத்தினர். அத்தகைய கம்யூனிஸ்ட்களான த.ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோர் முற்போக்கு இலக்கியத்தில் நம்பிக்கை கொண்டு சிறுகதைகளை எழுதினர். திராவிட, தி.மு.கழகத்தின் கலை-இலக்கியச் செயல்பாடுகளை விட, கம்யூனிஸ்ட்களின் செயல்பாடு தமிழ் இலக்கிய உலகில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாதை தெரியுது பார், உன்னைப்போல ஒருவன் (த.ஜெயகாந்தன் இயக்கத்தில்) போன்ற திரைப்படங்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்த திரைப்படங்களாக வெளி வந்தன.
70களில் வானம்பாடி, சிவந்த சிந்தனை, மனிதன் என்று பல முற்போக்குப் பத்திரிகைகள் வெளி வந்தன. வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன், தமிழ் கலாசாரச் சூழலில் நெடுங்காலமாக ஆட்சி செய்து வந்த திராவிட, மார்க்ஸீயக் கலாசாரம் இரண்டையும் எதிர்த்துக் கட்டுரைகள் எழுதி வந்தார். அப்போதுதான் ’நடை’யில் வெளிவந்த அவரது ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து’ என்ற கட்டுரைத் தொடரை முதல் முதலாகப் படித்தேன். வெங்கட் சாமிநாதன் என்ற பெயரை முதல் முதலாக அறிமுகம் செய்து கொண்டது இப்படித்தான்.
யார் இந்த வெங்கட் சாமிநாதன் என்று அவரைத் தேடத் துவங்கினேன். அவரது உணர்ச்சிகரமான, வேகமான உரை நடை எல்லாரையும் போல என்னையும் தொற்றிக் கொண்டது. அதன் பிறகு, ‘எழுத்து’ இதழ்களில் அவர் எழுதியிருந்த சில கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன. ’நடை’யில் வெ.சா எழுதிய டி.கே.பத்மினி என்ற நவீன ஓவியரைப் பற்றிய கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
70-களில்தான் அவர் ‘உள்வட்டம், வெளிவட்டம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். ‘பிரக்ஞை’, ‘கசடதபற’ போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய அக்காலத்திய கட்டுரைகளில் இந்த உள்வட்டம்- வெளிவட்டத் தியரியின் தாக்கம் இருந்தது. சாகித்ய அகாடமி அகிலனுக்கு விருது தந்தபோது அதை வெ.சா எதிர்த்தார். 90களுக்குப் பிறகு தமிழ் நாட்டிலேயே திராவிட, மார்க்ஸீயக் கொள்கைகளின் தாக்கம் மெலிந்து குறைந்து தேய்ந்து போய்விட்டதால் வெ.சாவும் தனது திராவிட- மார்க்ஸீய எதிர்ப்புக் கணைகளைக் குறைத்துக் கொண்டார். இதுவரை கலாசார, இலக்கிய அரசியல் கட்டுரைகளில் அதிக ஈடுபாடு காட்டி வந்த வெங்கட் சாமிநாதன் 90-களுக்குப் பிறகு பெரும்பாலும் இலக்கியத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
அவரது உள்வட்ட-வெளிவட்டத் தியரியை நான் ஏற்கவில்லை. க.நா.சு என்ற க.நா.சுப்ரமணியத்தைப் போலவோ, சி.சு.செல்லப்பாவைப் போலவோ வெங்கட் சாமிநாதன் இலக்கிய விமர்சகரல்ல. வெங்கட் சாமிநாதன் ஒரு கலாசார விமர்சகர். ‘பாலையும் வாழையும்’ என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு இதைத்தான் வலியுறுத்துகிறது. வெ.சா.விடம் ஒரு உணர்ச்சி வசப்பட்ட, புளகாங்கித மயமான தன்மை அவரது கட்டுரைகளில் தொடர்ந்து துருத்திக் கொண்டிருக்கின்றன. தனக்குப் பிடித்தமான கதையை, ஓவியத்தை, சினிமாவை, நாடகத்தைக் கொண்டாடி விடுவார் வெ.சா. இது ஒரு விமர்சகனது வேலையல்ல. நிறைகுறைகளை உணர்ச்சி வசப்படாமல் சொல்லத் தெரியாது வெ.சாவுக்கு. இந்த உணர்ச்சி வசப்பட்ட, அருள்வயப்பட்டது போன்ற அவரது உரைநடைதான் அவருக்குப் பல வாசகர்களைத் தேடியும் தந்தது.
வெ.சாவிடமுள்ள இன்னொரு பெரிய குறை தனது அபிப்பிராயங்களை ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே போவார். ஆனால், அந்த முடிவுக்குக் காரணமென்ன என்பதை அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். காரண-காரிய அடிப்படையில் தனது அபிப்பிராயங்களை அவர் முன்வைத்திருந்தால் அவர் ஒரு சிறந்த கலை விமர்சகராகி இருப்பார். சுப்புடுவின் சங்கீத விமர்சனத்திலுள்ள அதே உணர்ச்சிகரமே அபிப்பிராய உதிர்த்தலுமே வெ.சாவிடமும் அப்படியே உள்ளன.
அவருடைய இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக் காட்டி தான் 1978 வாக்கில் ‘சுவடு’ என்ற இலக்கியப்பத்திரிகையில் எழுதினேன். ஆனால், என்னை வெ.சா. தனக்கு வேண்டாதவனாக ஒரு போதும் பாவித்ததில்லை. இது அவருடைய சிறப்பான குணம் என்பேன். புது டெல்லியிலுள்ள ஒரு அமைப்பு அசோகமித்திரன், சோ, வலம்புரிஜான் போன்றவர்களுக்கு மனித நேய விருது அளித்துக் கௌரவித்து வந்தது. இந்த விருதுக்கு வெங்கட் சாமிநாதன்  என் பெயரைச் சிபாரிசு செய்து, அந்த விருது பெறக் காரணமாக இருந்தார். 1999 வாக்கில் நடந்த அவரது மகனின் திருமணத்திற்கு எனக்கு மறக்காமல் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்.
அவரது கட்டுரைகளில் நிறைகுறைகள் உண்டு. ஆனால், அவரது திராவிட-மார்க்ஸீய கலாசார எதிர்ப்பு அவரது முக்கியமான பங்களிப்பு என்று தோன்றுகிறது.

2 Replies to “வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்”

  1. பிடித்தமான கதையை, ஓவியத்தை, சினிமாவை, நாடகத்தைக் கொண்டாடி விடுவார் வெ.சா. இது ஒரு விமர்சகனது வேலையல்ல
    புரிய வில்லை இந்த வரி.
    ஒரு விமர்சகரின் பணி நல்லவற்றை எடுத்துக் காட்டி பாராட்டுதலும்,
    அதை முன்மாதிரியாகக் கொண்டு பிறரும் தரத்தை உயர்த்திக்
    கொள்ள வேண்டும் என்பதும் விமர்சகரின் பணி தானே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.