“உண்மை ஏன் அதிரடியாக இருக்க வேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகிறதென்றால் அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்க வேண்டும்” என்றும், “தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள்தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் மூடியிருக்க வேண்டும்” என்றும் அக்கறையோடு தொடர்ந்து கூறியவரும், “உண்மையான கலைஞனின் உண்மையான விமர்சனம் ஒரு புதிய படைப்புதான்” என்று தான் கூறியதை நிகழ்த்திக் காட்டியவருமான வெங்கட் சாமிநாதன் அவர்கள் நினைவுக்கு இவ்விதழ் ஓர் எளிய அஞ்சலி.
நூல்கள்
I. விமர்சனங்கள்
1. அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்) வெளியீடு: அன்னம், சிவகங்கை (1985)
2. பாவைக்கூத்து – வெளியீடு: அன்னம், சிவகங்கை
3. என் பார்வையில் சில கவிதைகள் (விமர்சனக் கட்டுரைகள்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
4. என் பார்வையில் சில கதைகள் நாவல்கள் (விமர்சனம்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
5. சில இலக்கிய ஆளுமைகள். வெளியீடு: காவ்யா, சென்னை (2001)
6. பான்ஸாய் மனிதன் (விமர்சனம்). வெளியீடு: கவிதா, சென்னை (2001)
7. இச் சூழலில் (கலாச்சார விமர்சனம்). வெளியீடு: மதி நிலையம், சென்னை (2001)
8. கலை வெளிப் பயணங்கள் (கலை விமர்சனம்) அன்னம் வெளியீடு: தஞ்சை (2003)
9. திரை உலகில் (சினிமா விமர்சனம்) காவ்யா, சென்னை (2003)
II. தொகுப்புகள்
10. தேர்ந்தெடுத்த ந. பிச்சமூர்த்தி கதைகள் – தொகுப்பு: வெங்கட் சாமிநாதன், வெளியீடு: சாகித்ய அகாடமி (2000)
11. பிச்சமூர்த்தி நினைவாக – பிச்சமூர்த்தி நினைவாஞ்சலிக் கட்டுரைகள் தொகுப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு : மதி நிலையம், சென்னை (2000)
III. மொழி பெயர்ப்புகள்
12. A Movement for Literature: க. நா. சுப்பிரமணியம். தமிழிலிருந்து ஆங்கிலத்தில்: வெங்கட் சாமிநாதன், சாகித்ய அகாடமி வெளியீடு
13. ஏழாம் முத்திரை (ஸ்வீடிஷ் திரைக்கதை) – இங்மார் பெர்க்மன் (தமிழ் மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன்). வெளியீடு: தமிழினி, சென்னை (2001)
14. தமஸ் (இருட்டு) ஹிந்தி நாவல் : பீஷ்ம ஸாஹ்னி. மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை
15. ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைக் கதைகள், சுற்றுச்சூழல் பற்றியவை; ஜப்பானிய மூலம்). ஆங்கிலத்திலிருந்து தமிழில்: வெங்கட் சாமிநாதன், வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை
IV. திரைப்பிரதி (ஃபிலிம் ஸ்கிரிப்ட்)
16. அக்கிரகாரத்தில் கழுதை (திரைப்பிரதி) இரண்டாம் பதிப்பு. வெளியீடு: காவ்யா, சென்னை. (1997)
V. இன்ன பிற
17. உரையாடல்கள் (பேட்டிகளின் பதிவு) வெளியீடு: நவீன விருட்சம், சென்னை
18. விவாதங்கள்… சர்ச்சைகள். (எப்ரல் 1969 – இலிருந்து டிசம்பர் 2003 வரை) அமுதசுரபி வெளியீடு
VI. வெ.சா.வைப் பற்றி
க.நா.சு.
என்னுடைய மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்
– Financial Express 23.9.84
க.நா.சு.
சிந்தனையைத் தூண்டும் புஸ்தகங்கள் தமிழில் குறைவாகவே இன்னமும் வெளிவருகின்றன. அதுவும் புதுச் சிந்தனைகள் என்றால் பலரும் ஓடி விடுகிறார்கள். சிந்தனைக்குப் பல விஷயங்களை அள்ளித் தருகிற வெங்கட் சாமிநாதனின் நூல், பாராட்டப்படவேண்டிய ஒன்று.
– தினமணியில் மதிப்புரை :: அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அக்டோபர் 1986
சி.சு. செல்லப்பா
சாமிநாதன், ஒரு ‘ப்ரொவோகேடிவ்’ விமர்சகர். இக்கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்கவும் வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும், மற்ற கலைத் துறைகளிலும் அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள், ‘புலிக்குத் தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்…
– பாலையும் வாழையும் (27.2.76) முன்னுரையில்
கோமல் சுவாமிநாதன்
மகாபாரதத்திலுள்ள கர்ணனின் பாத்திரம், போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் மிகவும் ஆளான ஒன்று. இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன், நிறைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆலானவர். போற்றுதலை விட தூற்றுதலையே அதிகமாக வாங்கிக் கொண்டவர். கானகத்தில் தனிக்குரலாக இவர் – இலக்கிய உலகில் தனக்குத் தோன்றிய விஷயங்களைப் பக்கபலம் சேர்த்துக் கொள்ளாமல், கொடி பிடிக்கும் ஆட்களைத் திரட்டாமல், ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை அணுகவிடாமல் ஒலித்து வருகிறார், எவ்வித சமரசமுமின்றி. தன் மனதிற்குப் பட்டதை பளிச்சென்று எழுதும் வழக்கம் உள்ளவர். எழுத்து பத்திரிகையின் மூலம் அறிமுகமான இவர் தனது பாலையும் வாழையும் என்ற விமர்சன நூலால், தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். எந்த மேல் நாட்டு விமர்சன பாணியையும் கைக் கொள்ளாமல், தன்சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்னணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமர்சனம்… இவர் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் “இதோ ஒரு விமர்சகர்” என்று சுட்டிக் காட்டுவதற்கு கோபுர உச்சியிலே உட்கார்ந்திருக்கும் ஒரு விமர்சகர், வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மட்டுமல்லாமல் – இசை, ஓவியம், நாடகம், சினிமா போன்ற பல துறைகளிலும் கால் பதித்து, அவைகளைப் பற்றியெல்லாம் விமர்சனம் எழுதுபவர்.
– சுபமங்களா அக்டோபர் 1995
இமையம்
சுந்தர ராமசாமியைத் தவிர வெங்கட் சாமிநாதன் மட்டும் தான் என் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு நடப்பார்.
– காலச்சுவடு – இதழ் 118