வெ.சா – இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு நினைவுப் பயணம்

VeSaa_Venkat_Saminathan_5

வெங்கட்சாமிநாதன் மரணம் குறித்து அன்று விடியற்காலையில் சுரேஷ் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை 8 மணிக்கு மேல் பார்த்தபோது கொஞ்ச நேரத்துக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.
அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை உடனடியாகத் தெரிந்து கொள்ளவும் தோன்றவில்லை.
என்னைப் பொறுத்த வரையில் வெ.சா.வின் மரணம் மற்ற எல்லா மரணங்களைப் பற்றி மற்ற  எல்லோரும் சொல்வதைப் போல    – அதன் தீவிரத்தில்,  நேரடி அர்த்தத்தில் திடீர் மரணம் என்றுதான்  மிகுந்த கோபம் கலந்த வேதனையுடன் கூற வேண்டியிருக்கிறது.
அவருடன் தற்செயலாக அல்லது எங்களின் நீண்ட கால வழக்கப்படி ஏற்பட்ட ஒரு மனப்பிணக்கை மீண்டும் அவருடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  அவர் கடிந்து கொண்டாலும் அல்லது அவர் என்னை ஏதாவது எரிச்சல் மூட்டி நான் அவரை கடிந்த கொண்டாலும் மீண்டும் அவருடன் பேசவேண்டும் என்று முடிவு செய்து வழக்கப்படி கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தேன்.
இதோ பேசலாம், அதோ பேசலாம் என்று பல ஞாயிற்றுக்கிழமைகள் நழுவிக் கொண்டே இருந்தன.
ஆனால் அந்த மனிதர் எனக்கு அப்படி எந்த வாய்ப்பும் தராமல் இப்படி அநியாயமாக திடீரென்று மரணித்து இருக்கிறார்.  இதை நான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை.
அவருடன் ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மிக நீண்ட நேரம் (ஒரு மணி நேரத்துக்கு மேல்)  பேசிக்கொண்டிருந்தேன்.  இறுதியில் எப்போதும் போல வழக்கமாக உச்சபட்ச கோபத்துடனும்  மனக்கசப்புடன் தான்  தொலைபேசியை துண்டிக்க வேண்டியிருந்தது.
வெ.சா. வுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றி என் மனைவியுடனும் நண்பன் சுரேஷூடனும் மிகவும் ஆத்திரத்துடனும் ஒருவகையில் அகங்காரத்துடன்தான் பின்னர் விவரிக்க வேண்டியிருந்தது.  அதுதான் எப்போதும் வழக்கமாக நடக்கும்.  அவர்களுக்கும் அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.
vslபெரிய அளவில் அவருடன் எப்போது சண்டை போட்டாலும் பிறகு சுரேஷ், குருமூர்த்தி இன்னும் பிற நண்பர்களுடன் பேசும்போதெல்லாம் “என்னய்யா, கலைஞர் எப்படி இருக்கார்?” என்று ஒருவகையான நக்கலும் பாசமும் கலந்த விசாரிப்பு அவரிடம் எப்போதுமே இருக்கும்.
“கலைஞர்” என்று என்னை என்னுடைய நண்பர்கள் வட்டத்தில்  அவர் விளிப்பது கெட்டுப் பிரிந்த மகனைப் பற்றிய தந்தையின் விசாரிப்பில் உள்ள அக்கறை கலந்த கரிசனம் அதில் தொனிப்பது போல எனக்கு தோன்றும்.
பரஸ்பரம் நேரடியாக அறிமுகம் ஆன நாளில் இருந்து எனக்கும் வெ.சா.வுக்கும் இடையிலான உரையாடல் என்றும் சகஜமாக இருந்தது இல்லை.  சகஜமாக முடிவடைந்ததும் எப்போதும் கிடையாது.
என் மனைவியும் சில நண்பர்களும் அவர் என்னை எதற்கோ சீண்டுகிறார் என்றே கூறுவார்கள்.
சில நேரங்களில் அன்பாக சௌஜன்யமாக அவருடன் உறவை தொடர வேண்டும் என்று வலிய முயற்சித்து நான் சமர்த்தாக நடந்து கொள்ள முயற்சிக்கும் போது ஏதோ கலவரம் அடைந்தது போன்ற முகத்தோற்றத்தை   காட்டுவார் வெ.சா.
“என்னய்யா?  இன்னிக்கு வேறே ஏதாவது பெரிசா கிடைக்கும் போலிருக்கேய்யா… சாதாரணமாகவே இருய்யா… பயமா இருக்குய்யா… என்று மேலும் என்னை சீண்டுவார்.
நாங்கள் சந்திக்கவே பயந்து நடுங்கிக் கொண்டே இருந்த ஒரு மனிதருடன் இத்தனை நெருக்கமான உறவை உருண்டு நழுவி ஓடிய காலம்தான் எங்கள் கைவசமாக்கியிருந்தது என்றுதான் கூறவேண்டும்.
இதையும் விட எங்களுக்கு இடையில் கண்ணாமூச்சி காட்டி எங்களிடையில் களியாட்டம் ஆடிய பரஸ்பர நேசம், அன்பு, பாசம் இப்படி ஏதோ  வகைப்படுத்த முடியாத ஒன்றுதான் என்னையும் வெ.சா.வையும்  பிணைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
80-களின் துவக்க ஆண்டுகள்.  தேடித்தேடி நவீன இலக்கியப் படைப்புக்களையும் குறிப்பாக விமர்சன கட்டுரைத் தொகுப்புக்களையும் நவீன நாடக தொகுப்புக்களையும் படிக்க துவங்கிய நேரம்.  எனக்கு வாய்த்த நல்வரமாகவும் உற்ற தோழமையாகவும் சுரேஷ் சுப்பிரமணியம் கிடைத்தான்.  உள்துறை அமைச்சகத்தின் இந்தியா காபி ஹவுசில் அன்றாடம் நடந்த எங்கள் சந்திப்புக்களின் போது, புத்தக பரிமாற்றல்களின் போது பல படைப்பாளிகளை போலவும் விமர்சகர்கள் போலவும் எங்களுக்கு ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ மற்றும் பாலையும் வாழையும் கட்டுரை தொகுப்பின் மூலம் பரிச்சயமானார் வெ.சா.  எங்கள் குழுவில் பின்னர் இணைந்த கோ.விஜயராகவனும் வெ.சா.வின் ‘பிரக்ஞை’ கொல்லிப்பாவை, யாத்ரா இதழ்களில் வெளிவந்த சில உதிரிக் கட்டுரைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
வெ.சா. காட்டிய உலகம் எங்களுக்கு முற்றிலும் புதியதாகவும் அறிமுகமற்றதாகவும் இருந்தது,  வெ.சா.வின் பரந்துபட்ட பார்வை எங்களுக்கு ஒருவகையான கலாச்சார அதிர்ச்சியளித்தது என்றும் கூறலாம்,  நாங்கள் மாய்ந்து மாய்ந்து வெ.சா.வின் பார்வை பற்றி பேசினோம்.  பேசிக் கொண்டே இருந்தோம்.  க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு ஆகியோரின் எழுத்துக்களையும் துரத்தினோம்.
வெ.சா. மூர்க்கமாக தாக்கிய இடதுசாரி எழுத்துக்களை துரத்தினோம்.  வெ.சா.மூர்க்கமாக சிலாகித்த படைப்பாளிகளையும் துரத்தினோம்.
வெ.சா. வின் தாக்குதலிலும் சிலாகிப்பிலும் பொதிந்திருந்த நேரடித்தன்மை  மற்றும் நேர்மை எங்களுக்கு மிகவும் புதியதாக இருந்தது.
வெ.சா. முன்வைத்த படைப்பாளிகளையும் படைப்புக்களையும் துரத்துகின்ற மும்முரத்திலும் அவரையும் தேடினோம்.
மனிதர் டெல்லியில்தான் இருக்கிறார் என்று எங்களுக்கு கிடைத்த தகவல் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது.
அப்போது யதார்த்தா நாடக இயக்கம் துவங்கி வெளிமுற்ற நாடகங்களை அங்கங்கு நண்பர்களுடன் மேடையேற்றத் துவங்கியிருந்தேன்.
லோதி கார்டனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நாங்கள் நடத்திய நாடகத்துக்கு வந்திருந்த நாக.வேணுகோபாலன் அறிமுகம் எனக்கு கிடைத்தது.  அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வெங்கட்சாமிநாதன் பங்கேற்பில் வெளிவந்த யாத்ரா இதழில் தானும் எழுதியிருப்பதாக கூறினார் நாக.வேணுகோபாலன்.
வெ.சா. வை பற்றிய பல தகவல்களை எங்களுக்கு கூறினார்.  குறிப்பாக அவருடைய கோபத்தை பற்றியும் வெடுக்கென்று அவர் பேசி எதிரில் உள்ளவர்களை திக்குமுக்காட வைப்பது பற்றியும் ஒரு மர்மக்கதையின் சுவாரசித்துடன் நாக.வேணுகோபாலன் எனக்கு கூறினார்.  ஒரு வகையான கிலியும் அடையாளம் தெரியாத உற்சாகத்தையும் விரவிக்கொண்டு வேணுகோபாலனின் விவரிப்புக்கள் என்முன் விரிந்து கொண்டிருந்தன.
மறுநாள் சுரேஷிடம் மிகவும் உற்சாகமாக வெ.சா. டெல்லியில் இருப்பது பற்றியும் அவரை சந்திப்பதற்கான சாத்தியத்தின் துவக்கம் பற்றியும் கூறினேன்.
நாக.வேணுகோபாலனை அன்று மாலையே லோதி எஸ்டேட்டில் உள்ள அவருடைய வீட்டில் நானும் சந்தித்து வெ.சா.வை சந்திக்கும் எங்கள் ஆர்வம் பற்றி கூறினோம்.
அதற்கு அவர் நேரடியாக நீங்கள் போகவேண்டாம். வெ.சா. வசிக்கும் பகுதியில் உள்ள மற்றொரு நண்பர் கவிஞர் சேஷாத்திரியை முதலில் சந்தியுங்கள்.  அவர் வெ.சா.விடம் உங்களை அறிமுகப்படுத்துவார் என்று கூறினார்.
ஓரிரு நாட்களிலேயே சேஷாத்திரி சார் வீட்டுக்கு நானும் சுரேஷூம் படையெடுத்தோம்.  சேஷாத்திரி சார் எங்களை அதிகமாக உற்சாகப்படுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும்.  நேரடியாக இல்லாவிட்டாலும் ஒருவகையான தயக்கத்துடன் “ஏன் அவரை போய் பார்க்கணும்னு ஆசைப்படறீங்க?  அந்த மனுஷர் சடார்னு எதையாவது பேசி காயப்படுத்திடுவார்யா… ஆனாலும் உற்சாகமாக இருக்கீங்க.  இந்த ஏரியாவில்தான் இருக்கார்.  நான் முதல்லே நீங்க ரெண்டு பேரும் அவரை சந்திக்க ஆசைப்படறீங்கனு சொல்றேன்.  அவர் சரின்னு சொன்னப்புறம் போய் பாருங்க.  நிறைய படிச்ச மனுஷன்.  ஆனால் அத்தனை இங்கிதமாக நடந்துக்க மாட்டார்.  அதிர்ச்சி ஆகவேண்டாம்.  உள்ளுக்குள்ளே நல்ல மனுஷன்” என்று ஏதோ வெடிகுண்டை  பதுக்கி வைத்த மலர்க்கொத்தை கொடுப்பது போன்ற அதிஜாக்கிரதையான ஒரு அறிமுகத்தை எங்களுக்கு செய்துவைத்தார் சேஷாத்ரி சார்.
அதே நேரத்தில் மறுநாளே வெ.சா. விடம் எங்களை பற்றி கூறி நாங்கள் சந்திக்க ஆவலாக இருப்பதையும் கூறியிருக்கிறார்.
வெ.சா.வும் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை அவருடைய வீட்டில் மதியம் 3.00 மணிக்கு நாங்கள் சந்திக்கலாம் என்றும் கூறினார்.
வெ.சா. மத்திய உளவுத்துறையில் பணியில் இருந்தார்.  அதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது என்றும் சேஷாத்ரி சார் கூறினார்.
3.00 மணின்னு சொன்னா சரியா அதே நேரத்துலேயே அங்கே போய் நில்லுய்யா.  அந்த ஆளுக்கு  சொன்ன நேரம் தவறினால் அசாத்திய கோபம் வரும்.  கத்துவாரு.  பார்த்து நடந்துக்குங்க” என்று மேலும் பீதியூட்டினார் சேஷாத்திரி சார்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நானும் சுரேஷூம்   ஞாயிற்றுக்கிழமைக்கு  ஆவலுடன் காத்திருந்தோம்.
ஞாயிற்றுக்கிழமை குறித்த நேரத்தில் வெ.சா.வீட்டில் இருந்தோம்.  எங்களை பற்றிய விபரங்களையும் எங்கள் ஆர்வம் பற்றியும் விசாரித்து அறிந்த வெ.சா. நிறைய பேசலாம் என்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை கரோல்பாக் பகுதியில் பேராசிரியர் செ.ரவீந்திரன் வீட்டில் சந்திக்கலாம் என்றும் கூறி அவருடைய முகவரியை கொடுத்தார்.
அந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் வாழ்க்கையில் பல சாளரங்களை, பல வாயில்களை திறந்து வைத்த நாளாக நான் எப்போதும் கருதி இப்போதும் நெகிழ்கிறேன்.
முதலில் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக அறிமுகமாகி பின்னர் நண்பராகி ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தின் மூத்த உறுப்பினராகி, என்னுடைய வழிகாட்டியாக ஆசானாக உடன் நின்று என்னை நெறிப்படுத்தி வரும் ரவீந்திரன் அறிமுகம் அன்று வெ.சா. வழியாக கிட்டியது.
மதுக்கிண்ணங்களுடனும் உலக சினிமா, கலை, இலக்கியம், நாடகம், ஓவியம் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய அறிமுகங்களுடன்,  உரையாடல்களுடன் என்னுடைய வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றின தொடர்ந்து வந்த ஞாயிற்றுக் கிழமைகள்.
அந்த ஞாயிற்றுக்கிழமை சபைகளில் நண்பர்கள் சாரு நிவேதிதா, சுப்பிரமணியன், மோகன் இன்னும் பல நண்பர்கள் கலந்து கொள்வார்கள்.  வெ.சா. நடுநாயகம் வகிப்பார்.  அவருக்கும் ரவீந்திரனுக்கும் இடையில் நிகழும் சம்பாஷணைகளில் மிகப்பெரிய உலகம் எங்கள் முன்பு விரிந்து செல்லும்.  வெண்திரையில் விரியும் திரைப்படமாக, ஓவியச்சீலையில் படரும் வண்ணங்களின் சுவாரசியமான சிதறல்களாக வாழ்க்கை எங்கள் முன்பு  பரந்து விரிந்து ஜாலங்களைக் காட்டியது.
வெ.சா. ஆர்வம் கொண்ட துறைகள் அநேகம்.  கவிதை, உரைநடை, நாவல்கள், சிறுகதைகள், விமர்சனம், நாடகம், தொன்மக்கலைகள், ஓவியம் என்று கலையின், படைப்பின் அத்தனை பரிமாணங்களையும் ஒன்றாக, குவிமையமாக தரிசிக்க கற்றுக் கொடுத்தார்.
அன்னம் பதிப்பில் வெளியான அவருடைய “அன்றைய முயற்சியில் இருந்து இன்றைய வறட்சி வரை” என்ற நாடகம் பற்றிய கட்டுரை தொகுப்பு நாடகத்தின் மேல் என்னை மேலும் வெறிகொள்ளத் தூண்டியது.
என்னையும் சுரேஷையும் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே டெல்லியின் “தஸ்வீர்”, டெல்லி பிலிம் சொசைட்டி போன்ற திரைப்பட சங்கங்களில் உறுப்பினராக்க உதவினார்.  உடனிருந்து திரைப்படங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்.
திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்-
நாடகத்தை எப்படி அணுகவேண்டும்
கவிதையை எப்படி வாசிக்க வேண்டும்
இசையை எப்படி கேட்கவேண்டும்
ஓவியத்தை எப்படி அணுக வேண்டும்
ஒரு சிறுகதையை எப்படி வாசிக்க வேண்டும்
ஒரு நாவலில் உள்ள உலகத்தை எப்படி தரிசிக்க வேண்டும்
என்று கலையின் பல பரிமாணங்களை அவற்றின் நுணுக்கங்களை எங்களுக்கு தரிசனம் செய்து வைத்தார் வெ.சா.
அலுவலகம் எப்போது முடியும் என்று காத்திருந்து மாலையில் திரையரங்குகளின் வாயில்களில் எங்களுக்காக வெ.சா.வும் அவருக்காக நாங்களும் காத்திருப்பது வழக்கமாகிப்போனது.
என்னுடைய நாடக செயல்பாடுகள் தீவிரம் அடைந்தது.  திரைப்படங்களை பார்ப்பது தீவிரம் அடைந்தது.  வாசிப்பு தீவிரம் அடைந்தது.
அபிதா பர்வீன், வதாலி சகோதரர்கள் போன்ற இசை மேதைமைகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஓவிய கூடங்களுக்கு அழைத்து சென்று சிறுபிள்ளைகளுக்கு விளக்குவது போல் அவற்றை எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்லி தந்தார்.
சி.சு.செல்லப்பா, க.நா.சு. சுந்தரராமசாமி, ந.முத்துசாமி, புரிசை கண்ணப்பதம்பிரான் போன்ற கணக்கற்ற ஆளுமைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  பல ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிமுகப்படுத்தினார்.
நானும் சுரேஷூம் பரவசம் கொண்டு திளைத்த பல கணங்களை எங்களுக்கு எங்கள் தோழமையின் பரிசாக தொடர்ச்சியாக அளித்து வந்தார் வெ.சா.
எங்களுடைய மது அருந்தும் நேரங்கள் மிகுந்த சுவாரசியமாக மாறத் துவங்கின.
தோழமையும் அன்பும் கொடுத்த நெருக்கமான தைரியத்தில்  அவருடன் வாதங்களில் ஈடுபடும் சௌஜன்யம் கிளர்ந்தது.
வாதங்கள் கூச்சல்களாகவும் சண்டைகளாகவும் சிறுசிறு பூசல்களாகவும் உருமாறத் துவங்கின.
தவறு எப்போதும் என் பக்கமே இருக்கும்.
கூச்சல் எப்போதும் என் பக்கமே இருக்கும்.
போதை தரும் சௌகர்யத்தில் அவருக்கு எதிராக என்னுடைய கெட்ட வார்த்தைகளால் ஆன அர்ச்சனையும் வாணவேடிக்கையாக தொடர்ந்தன.
அத்தனை அர்ச்சனைக்கு பிறகும் சிரித்துக் கொண்டே அவற்றை ரசிப்பார்.  “கலைஞர் நல்லா நடிக்கிறாருய்யா…” என்பார்.
அவரை திட்டாத கணங்களில் போதையின் உச்சத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவருடைய கால்களில் விழுந்து வணங்கிய தருணங்களும் உண்டு.
“யோவ் கால்லே எல்லாம் விழாதய்யா… இழுத்துடப் போறே… என்று சிரித்துக் கொண்டே விலகிக் கொள்வார்.
வெ.சா. வை திட்டி எழுதப்படும் கட்டுரைகளை தேடித் தேடிப் படிப்பேன்.  அவற்றை அவருக்கு நினைவுபடுத்துவேன்.  அல்லது புதிய வசவுக் கட்டுரைகளை அவருடைய கவனத்துக்கு கொண்டு வருவேன்.
அவற்றை மிகவும் ரசிப்பார்.   ஒருத்தன் என்னை திட்டினா கலைஞருக்கு எத்தனை சந்தோஷம் பாருய்யா… என்று சிரித்துக் கொண்டே கூறுவார்.
பல நேரங்களில் தவறான ஆட்களை, அவர்கள் தன்னை இழிவு செய்வதையும் மீறிக் கொண்டாடுவார்.
அது எரிச்சல் ஏற்படுத்தும்போதெல்லாம் அவரை நான் கன்னா பின்னாவென்று திட்டுவேன்.
அநேகமாக அவரை நான் திட்டியது எல்லாம் இதுபோன்ற ஏமாற்றங்களுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்குத்தான் என்பதை அவரும் உணர்ந்து இருந்தார் என்றுதான் தோன்றுகிறது.
எல்லாவற்றையும் மீறி என்னை ஒரு நாடகக்காரனாகவே நானே உணர்ந்து கொள்ளும் வகையில் என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் சண்டை உச்சகட்டத்தில் இருந்த சந்தர்ப்பங்களில் என்னுடைய இயக்கத்தில் நாடகம் ஏதாவது மேடையேறினால் சொந்த சண்டையை மறந்து மிகவும் நியாயமான விமர்சனத்தை முன்வைப்பார்.
என் மீதான அக்கறை சார்ந்தே பல நேரங்களில் அவருடைய சண்டைகள் இருந்ததை எண்ணிநான் பலமுறை நெகிழ்ந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் இதழ்களில் தான் எழுதிய அனைத்து கட்டுரைகளையும் நூலாக கொண்டுவரவேண்டும் என்று அடிக்கடி சொல்லி கொண்டிருந்தார்.
அதில் எந்த அக்கறையும் நான் காட்டாததில் பெருத்த கோபம் கொண்டிருந்தார்.
எப்போதும் யதார்த்தாவுக்காக நாடகங்களை பரிந்துரைக்காத அவர் ஒருமுறை ஜெயந்தன் நாடகம் எதையாவது மேடையேற்று என்று என்னிடம் பரிந்துரைத்தார்.  ஜெயந்தன் நாடகப் பிரதி எதுவும் என்னிடம் இல்லை.  ஜெயந்தனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக அவருடைய நாடகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டேன்.  என்னுடைய தொனியோ ஏதோ ஒன்று ஜெயந்தனுக்கு தவறாக பட்டிருக்க வேண்டும்.  “அப்படியா… சரி.. என்று ஒன்றும் கூறாமல் தொலைபேசியை துண்டித்தார் ஜெயந்தன்.  பிறகு வெ.சா.வுக்கும் அவருக்கும் என்ன நடந்தது என்று தெரியாது.
என்றும் இல்லாத அளவு வெ.சா. என்னை காய்ச்சி தீர்த்து விட்டார். உனக்கு ஏதாவது மரியாதை இருக்கிறதா?  அவர் கிட்டே போய் நாடகத்தை அனுப்புங்க.  சரியா இருந்தா போடறேன்னு சொல்லியிருக்கே… என்று கன்னாபின்னாவென்று கூச்சல் போட்டார்.  நானும் பதிலுக்கு கூச்சல் போட்டேன்.  அவர் மிகவும் பதட்டத்துடன் என்னிடம் நடந்து கொண்டார்.  ஒரு  படைப்பாளியை நான் அவமதித்து விட்டேன் என்பதுபோலவும் அதை தான் சற்றும் விரும்பவில்லை என்பதையும் மிகவும் கடுமையாக பதிவு செய்தார்.  நண்பர்களிடமும் பின்னர் இதை சொல்லி வருத்தப்பட்டார் என்று கேள்வி பட்டேன்.  இந்த விஷயத்தில் என்னுடைய தரப்பை அவர் எடுத்துக் கொள்ளவே இல்லை.
இதே அளவில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனக்காகவும் வேறு ஒரு நண்பரிடமும் இதே போல கோபமும் வருத்தமும் கொண்டார் என்று கேள்விப்பட்டேன். அதுதான் வெ.சா.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு நள்ளிரவில் தஞ்சை பிரகாஷ் என்னை தொலைபேசியில் அழைத்து நான் இயக்கிய சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை தஞ்சையில் மேடையேற்ற தயாராக இருப்பதாக அழைப்பு விடுத்தார்.  உடனே அது குறித்துச் செயல்படுமாறும் என்னை கேட்டார்.
வெங்கட்சாமிநாதன் பலமாக சிபாரிசு செய்திருப்பதாகவும் இந்த நாடகம் மீண்டும் தஞ்சை மதுரை போன்ற இடங்களில் மேடையேற வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாகவும் கூறினார்.
அப்போது அந்த நாடகத்தில் நடித்த நிறைய நண்பர்கள் உத்தியோக மாறுதலில் ஊர் மாறியிருந்தனர்.  புதிதாக யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டும்.  மேலும் அந்த நேரத்தில் என்னுடைய குடிப்பழக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது என்னுடைய மாலை நேரங்கள் முழுதும் போதையிலேயே கரைந்து கொண்டிருந்தன.  போதைப்பழக்கம் எதிலும் என்னுடைய தீவிரத்தை முற்றாக அழித்திருந்தது.  எனவே தஞ்சை பிரகாஷ் அழைப்பை நான் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
இது சாமிநாதனுக்கு அடங்கவொண்ணாத ஆத்திரத்தை உண்டுபண்ணியது.  என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதைத்து இருந்தது.  அந்த கோபத்தை மிகவும் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டார்.
வெ.சா. வின் கட்டுரை தொகுப்பு ஒன்று – வியப்பளிக்கும் ஆளுமைகள்.  அந்த நூலில் கவிஞர் வைரமுத்து, சோ ஆகியவர்களின் ஆளுமை பற்றி புகழ்ந்து எழுதியிருப்பார் வெசா.  அந்த நூலின் மீதான மதிப்புரையை நண்பர் க.திருநாவுக்கரசு வடக்கு வாசல் இதழுக்கு எழுதி கொடுத்தார்.  அந்த கட்டுரையின் தலைப்பு – வியப்பளிக்காத ஆளுமைகள் –  வியப்பளிக்கும் நூல்.  அந்த கட்டுரையில் வெங்கட்சாமிநாதனை முற்றாக மறுத்து எழுதியிருந்தார்.  அதனை எடிட் செய்ய வேண்டாம் என்றும் அப்படி எடிட் செய்ய வேண்டும் என்றால் பிரசுரிக்காமல் திருப்பிக் கொடுத்துவிடுமாறும் திருநாவுக்கரசு என்னிடம் கூறினார்.
கட்டுரை நன்றாக இருந்தது.  அதனால் அதனை அப்படியே பிரசுரித்து இருந்தேன்.  அதில் வெ.சா. என் மீது பெருத்த கோபத்தில் இருந்தார்.  ஒருநாள் வெளிப்படையாகவே என்னிடம் கூறினார்- “உன்னை மாதிரி மட்டமான ஆளை நான் பார்த்தது இல்லை.  அவனைக் கேட்டு எழுத வச்சு இப்படி என்னைத் திட்டற மாதிரி கட்டுரையை போட்டிருக்கே…
நான் என்ன சொல்லியும் அவர் கேட்க தயாராக இல்லை.  இறுதி வரை அந்த கருத்தில் அவர் மாற்றம் கொள்ளவே இல்லை.  நான் அவரிடம் மறுத்து கூறிய எதையும் கேட்கவும் நம்பவும் அவர் தயாராக இல்லை.
ஆனால் அதை மீறி நான்கேட்டுக் கொண்டதற்கு இணங்க வடக்கு வாசல் இதழில் சில கட்டுரைகளை எழுதினார்.
என்னுடைய சனிமூலை கட்டுரை தொகுப்புக்கு மிகவும் அற்புதமான ஒரு முன்னுரையை எழுதிக் கொடுத்தார்.
இதுபோன்ற பல தருணங்கள் பல சம்பவங்கள் எங்களுக்கு இடையில் இருந்தது,
வெ.சா. தான் கொண்டிருந்த நம்பிக்கைகளை மதித்தார்.
விழுமியங்களை மதித்தார்.
நட்பை மதித்தார்.
மதிப்பீடுகளின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவற்றுக்கு ஊறு நேரும்போதெல்லாம் மிகவும் கொதிப்புடன் நடந்து கொண்டிருந்தார்.
இவை எல்லாவற்றையும் மீறி என் மீது அவர் அன்பு காட்டிய தருணங்கள், என்னை நெகிழ வைத்த தருணங்கள், என்னை அழ வைத்த தருணங்கள் எத்தனையோ உண்டு.  அவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதாக இல்லை.
ஒரு சிலர் ஒரு சில சலுகைகளை அவருக்கு வழங்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதை பார்க்க நேரும்போது ஒரு மனிதன் எப்படி எல்லாம் தன்னுடைய நல்லதொரு பக்கத்தை வெளிக்காட்டாமல் இத்தனை ஆண்டுகள் இத்தனை பேருடன் பழகியிருக்க முடியும் என்ற ஆச்சரியம் என்னை மிகவும் படுத்தி எடுக்கிறது.
இன்று தமிழ் படைப்புலகில், கலை இலக்கியப் பரப்பில் வெ.சா. காட்டிய தரிசனங்கள்தான் புதுப்புது ரூபங்கள் எடுத்து நமக்கு பெருமை அளித்து வருகிறது.
தெருக்கூத்துக்கு சிம்மாசனம் வழங்கி  சிறப்பளித்தவர் வெ.சா. அவர் நடேச தம்பிரான் டெல்லியில் மேடையேற்றிய கர்ணமோட்சத்தை பற்றி எழுதிய பிறகுதான் நவீன நாடகக்காரர்களின் கவனம் தெருக்கூத்தின் பக்கம் திரும்பியது.
நவீன நாடகம் பற்றி, ஓவியங்கள் பற்றி, கவிதைகள் பற்றி, இசை பற்றி, புதினங்கள் பற்றி, சிறுகதைகள் பற்றி சாமிநாதனின் கருத்துக்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் சற்று நிதானித்து பொருட்படுத்தக் கூடியதாக இருந்தன.  பல மாற்றங்களுக்கும் அவை அடி கோலின என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.
வெ.சா.வின் கருத்துக்கள் மியூசியத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியவர்கள் கூட அவர் தங்களுடைய படைப்புக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதை அறிய துடித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.
அவர் சென்னை சென்றதும் அங்கிருந்து பெங்களூருக்கு நகர்ந்ததும் அவருடன் தொலைபேசியில் கூட பேசும் சந்தர்ப்பங்கள் அநியாயத்துக்கு குறைத்தன.
இப்போது அந்த தூரம் அநியாயத்துக்கு அதிகரித்து விட்டது.
அதனால் என்ன?
காத்திருங்கள் வெ.சா.
எனக்கான நேரம் வந்ததும் நேரில் வந்து மீதி சண்டையை உங்களுடன் தொடருகிறேன்.

கி.பென்னேஸ்வரன்
25 அக்டோபர் 2015

6 Replies to “வெ.சா – இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு நினைவுப் பயணம்”

 1. பென்னேஸ்வரனின் கட்டுரை வெ.சா. என்கிற ஆளுமையின் வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கங்களைப் படித்ததுபோல் நிறைவு தந்தது. ஒரு பக்கம் படு கறாராகவும், இன்னொரு பக்கம் அன்பு மனம் கனிந்தவராயும் இருந்திருக்கிறார் மனிதர். எப்படிப்பட்டவரை நாம் இழந்துவிட்டோம் என்கிற துயரம் நெஞ்சைச் சுடுகிறது.
  -ஏகாந்தன்

 2. //ஆனால் அந்த மனிதர் எனக்கு அப்படி எந்த வாய்ப்பும் தராமல் இப்படி அநியாயமாக திடீரென்று மரணித்து இருக்கிறார். இதை நான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை. // ஒரு வகையில் என்னிடமும் கோபம் கொண்டிருந்தார். அவருடைய கட்டுரைகளை நான் வரிசையாக மரபு விக்கியில் ஏற்றவில்லை என்ற கோபம்! 🙁 ஆனால் மரபு விக்கியில் ஒரு சில தொழில் நுட்பப் பிரச்னைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டியும் அவர் அதை ஏற்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை! அவரை நேரில் பார்க்கையில் அவர் முன்னிலையிலேயே கட்டுரை ஒன்றை மரபு விக்கியில் ஏற்றிக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் பார்க்கவே முடியாமல் போய்விட்டது! 🙁 கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள். அது உண்மை தான்! அருமையான மனிதர் ஒருத்தரை இழந்துவிட்டோம் என்பது பெண்ணேஸ்வரனின் கட்டுரையிலிருந்து புரிகிறது.

 3. Penneshwaran admits he came to know him during the 80s. But Venkat Saminathan was a contemporary of Kaa Naa Subramanian and writing for a long time before.
  //பல மாற்றங்களுக்கும் அவை அடி கோலின என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.//
  In which field? Venkat Saminathan was not a creative writer. He was a Central government employee in a lowly post, which gave him ample leisure to have litery life after office him spend time in reading books in Tamil, that too, only those books which come under the circumference of his personal likes. So, he kept off from all kinds of writings. He was a pretentious literary critic who assumed for literary criticism, a page need to be filled with prejudices and predilections only; and, at the same time, the literary criticism of KNS was erudite and sober. KNS’s reading was wide in world literature.
  For Penneswaran, the subject of his memoirs inspired changes. What changes can such a writer inspire?
  There is no legacy the writer has left for posterity to preserve. Penneswaran used the occasion as a projection of his egoistic personality. Maybe that is the legacy he means: the writer inspired egos 🙂

  1. இந்த ஆளுக கு அவர் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை். தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு கோழை இப்படி சாமிநாதன் பற்றி எருதியிருப்பது எனக்கு ஆச.சரியம் அளிக்கிறது.

   வெசா நிலவை சுட்டினார்.

   இது விரலை மட்டும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது.

   போகட்டும்.

   1. என் பெயர் விநாயகம். இப்போது வீரனாகிவிட்டேனா?

    கருத்து முக்கியமா? பெயர் முக்கியமா? பெயரைச் சொல்லிவிட்டால் கருத்து மாறிவிடுமா? பென்னேஸ்வரன் என்ற பெயரை மாற்றி வெறும் ஈஸ்வரன் என்று வைத்துக்கொண்டால் பென்னேஸ்வரனின் எழுத்துக்களின் வண்ணங்கள் மாறிவிடுமா? எழுத்துக்கும் எழுத்தாளரின் பெயருக்கும் தொடர்பு இருக்கிறது என்பவன் பேதை.

    வெ சா ஓர் இலக்கிய விமர்சகர். படைப்பாளி அல்ல என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேனே? மறுக்க முடியுமா?

    அவர் நிலவைச் சுட்டவில்லை. நிலத்தைச் சுட்டினார். படைப்பாளி நிலவையும் நிலத்தையும் சுட்டுவான். அவன் கற்பனையால் வாழ்பவன். இலக்கிய விமர்சகன் நிலத்தை மட்டுமே சுட்ட முடியும். கற்பனையால் விமர்சனம் எழுத முடியாது. எந்த படைப்பைப்பற்றி விமர்சனமோ அதைப்பற்றி மட்டுமே பேச முடியும்.

    அடிப்படைகள் தெரிந்து வாதம் பண்ணலாமே!

    ஓர் இலக்கிய விமர்சகரின் வீச்சு ஓர் குறுகிய எல்லைக்குள் அடங்கும். அது கூட காலமாற்றத்தில் காணாமல் போகும். அதாவது எல்லா விமர்சனங்களும் அழியும். ஆனால் எந்த படைப்பிலக்கியத்தை விமர்சனம் பண்ணியதோ, அந்த இலக்கியம் (சிறப்பானதாக இருந்தால்) தொடர்ந்து வாழும். பாரதியாரின் பாடல்கள் இருக்கின்றன. அப்பாடல்களை விமர்சித்தோர் காணாமல் போய்விட்டார்கள். புகழுந்து பேசியவர்களையும் சேர்த்துத்தான்.
    வெ சாவை, பாமர தமிழ் மக்களுக்குத் தெரியாது. பென்னேஸ்வரனுக்குத் தெரிய காரணம் நேரடி பழக்கம் எனபதால். இதன் பொருள்: இலக்கிய விமர்சகன் புகழடைவதில்லை.

    படைப்பிலக்கியம் என்பது கோவில். இலக்கிய விமர்சனம் என்பது அக்கோயில் பூசாரி. பூசாரி வாழ்க்கை ஒரு தலைமுறை மட்டுமே. கோவில் தொடர்ந்து இருக்கும் காலங்காலமாக.

    பாரதியார் படைப்பிலக்கியவாதி. அவ்வப்போது தான் படித்த நூல்களை விமர்சனம் சுதேசமித்திரனின் தொடர்ந்து எழுதியவர். இருப்பினும். அவரின் பாடல்களே நிலைக்கின்றன‌. இன்னும் நிலைக்கும். பாடல்கள் பற்றிய விமர்சனங்கள் காணாமல் போய்விட்டன. பாரதியாரை, அவர் ஊர்க்காரர்கள் அழைத்தது போல, ஒரு ‘பாட்டுக்காரர்’ (a poet or a singer) என்று மட்டுமே பொதுமக்களுக்குத் தெரியும். பாடல்கள்தான் மக்களுக்கு வேண்டும்.

    விமர்சகராகிய ஒரே ஒரு நபரின் உள்ளக்கிடைக்கையை மட்டுமே அவர் விமர்சனம் பேசும்.
    சில இலக்கிய விமர்சனஙகள் வாசிக்க சுவையாக இருக்கும். சொல்லும் கருத்துக்கள், எழுத்து நடையால் சுவை கிடைக்கிறது. சிலவேளைகளில் அவை படைப்பு இலக்கிய அந்தஸ்தைக் கூட பெறலாம். தமிழ் அழகுணர்ச்சி நிறைந்த ஒரு மொழி. அழகுணர்ச்சியோடு தமிழை எழுத முதலில் எழுத்தாளனிடம் அந்த உணர்ச்சி இருக்க வேண்டும். வெ சாவிடம் அப்படி எதுவுமே எனக்குக் காணக் கிடைக்கவில்லை. உப்பு சப்பில்லாத எழுத்து நடை. His criticism on modern Tamil literary works is an outlet for his prejudices and predilections. He takes us on an ego tour. We cannot expect anything from an admiring friend of Ve Sa like Penneshwaran but a hagiography.

 4. வியப்பளிக்கும் ஆளுமைகள் – அமுதசுரபியின் சார்பில் நான் பதிப்பித்த புத்தகம். அவருடைய நீண்ட கட்டுரைகளை, தொடர்களைத் தொடர்ச்சியாகப் பல்வேறு இதழ்களில் வெளியிடும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. எந்த ஒரு செய்தி / தகவல் மறந்துவிட்டாலும் முதலில் என்னைத்தான் அழைப்பார். மிகவும் எளிய ஐயமாக இருக்கும். உடனே சொல்லிவிடுவேன். எனக்குத் தெரியாத போது, உடனே இணையத்தில் தேடி, அந்த அழைப்பு முடிவதற்குள் சொல்லிவிடுவேன். எல்லாவற்றையும் விரல்நுனியில் வைத்திருப்பதாக என்னைப் பாராட்டுவார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதத் தூண்டினேன். அதைத் தொடராகவும் வெளியிட்டேன். அது புத்தக வடிவம் பெற்றபோது, எனக்கு அர்ப்பணம் செய்திருந்தார். வயது பேதமின்றி, எப்போதும் உற்சாகமாக உரையாடக் கூடியவர். என் நண்பர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.