வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

VeSaa_Venkat_Saminathan_3

புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது  அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும். மாதாந்திரிகளில் தீபமும் கணையாழியும் புத்தம்புதிதாக வைத்த இடத்திலேயே இருக்கும். அவற்றை வாசிக்கத் தொடங்கியபோது அறிமுகமான பல பெயர்களில் ஒன்று வெங்கட்சாமிநாதன். இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும்போதே இவ்விரு பத்திரிகைகளையும் வாங்கிச் சேகரிக்கும் பழக்கம் தொடங்கியது. சேகரிப்புப் பட்டியலில் யாத்ரா, வைகை, இலக்கியவெளிவட்டம் எல்லாம் சேர்ந்துகொண்டபோது வெங்கட்சாமிநாதன் என்ற பெயரும் திடமாக எனக்குள் நுழைந்துகொண்டது. பட்டப்படிப்புக்காலத்திலேயே என்னை இக்காலத்தமிழ் இலக்கிய மாணவன் என்று அடையாளப்படுத்திக்கொண்டுதான் பல்கலைக்கழகத்திற்குப் போனேன்

இக்கால இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கான சூழல் அங்கு கூடுதலாகவே இருந்தது. பல்கலைக்கழகத்தின் அழைப்பில்லாமலேயே மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு எழுத்தாளர்கள் வருவார்கள்; ஆசிரியர்களோடு மாலைவரை பேசிக்கொண்டிருப்பார்கள்; மாலையில் போடிமெட்டிலிருந்து கூட்டம் அதிகமில்லாமல் வரும் ரயிலிலேறிப்போவார்கள். தி.சு. நடராசனைப் பார்க்க இடதுசாரி எழுத்தாளர்கள் வருவார்கள். குறிப்பாகக் கலை இலக்கியமன்றத்தைச் சேர்ந்தவர்கள். நானும் இருப்பேன்; அவர்களோடு போவேன். இரவு கடைசிப்பேருந்து பிடித்து விடுதிக்குத்திரும்புவேன். மு.ராமசாமியோடும் அவரைப் பார்க்கவரும் இளம் எழுத்தாளர்களையும் விலகிநின்று பார்த்திருக்கிறேன் பின்னர் அவரோடு நெருங்கிப் போய் நானும் ஒரு நாடகக்காரனான கதை தனி.  புதுக்கவிதை கனகசபாபதியெனப் பெயர் பெற்றிருந்த சி.க.வைப் பார்க்க வந்த சி.சு. செல்லப்பாவோடு சேர்ந்து மதுரைத் தெருக்களில் அலைந்திருக்கிறேன். எழுத்துப் பத்திரிகையில் கவிதைபற்றியும் தமிழ்க்கவிதையில் மரபும் புதுமையும் சந்தித்து விலகும் இடங்கள் பற்றியும் நிறையக் கட்டுரைகள் எழுதியவர் சி.க.,  அவர் தான் வெ.சாமிநாதனை முதன்முதலில் பார்க்கக் காரணமானவர். வெ.சா.வை முதன்முதலில் பார்த்த இடம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் வடக்குக்கோபுரவாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில். பல நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பார்கள். 50 பேருக்கு அதிகமில்லாத கூட்டம் அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்.

முதன் முதலில் அவரைப் பார்ப்பதற்கு முன்பே தனித்தனியாக அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்தவனாக மட்டுமல்லாமல் முதல் விமரிசனக் கட்டுரைத் தொகுப்பான பாலையும் வாழையும் நூலை வாசித்து முடித்திருந்தேன். அந்த நூலின் கட்டுரைகள் எழுப்பிய பெரும்பாலான கேள்விகளோடு எனக்கு உடன்பாடு இருந்தது. குறிப்பாகத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கியப்பார்வையின் வறட்சியைச் சுட்டிக்காட்டுவதை முதன்மையாகச் செய்ததோடு இன்னொரு முக்கியமான முரண்பாட்டையும் அவரது கட்டுரைகளில் ஆங்காங்கே எழுப்பியிருந்தார். நாட்யம், இசை போன்றவற்றைப் பற்றிய பார்வையிலும் ரசனையிலும் உன்னதத்தையும் சரியானவற்றையும் அங்கீகரிக்கும் பிராமணர்கள், குறிப்பாகச் சென்னைவாழ் பிராமணர்கள் இலக்கியம், நாடகம், சினிமா என்று பேசும்போது வெகுஜன ரசனையையே முதன்மையாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தது என்னை ஈர்க்கும் ஒன்றாக இருந்தது. குறிப்பாகச் சபா பண்பாடு பற்றிய சொல்லாடல்களில் இந்த முரண்பாடுகளைத் தீவிரமாகக் கேள்வியெழுப்பு ஆவேசப்பட்டுப் பேசியிருந்தது எனக்குள் உற்சாகமான ஒன்றாகப் பதிந்திருந்தது.

vsl

இதையெல்லாம் பற்றி விவாதிப்பார்கள் என்று நினைத்துத்தான் நான் சி.கனகசபாபதி, “வெ.சா.வந்திருக்கிறார்; வாங்கப் போகலாம்” என்றபோது,  “என்னகூட்டம்? யார் ஏற்பாடு?” என்று கேள்விகளை அடுக்கினேன். கூட்டமெல்லாம் இல்லை; சும்மா வாங்க: போய்ப்பார்ப்போம் என்று அழைத்துப்போனார். தீந்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ், அன்னைத்தமிழ் என்றெல்லாம் பேசுகிறவர்களைக் கேலியாகவும் கேள்வியாகவும் பார்த்துக்கொண்டிருந்த எனது வாசிப்பு வழியாக அந்தச் சொல்லாடலுக்குக் காரணமான திராவிட இயக்கத்தை விமரிசித்த வெ.சா.வைப் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.  ஆனால் வெ.சா. ஒரு வலதுசாரி; க.நா.சு. வகையறா என்ற சொல்லாடல்களும் காதில் விழுந்து வளர்ந்தவன் என்பதில் அவரோடு நெருங்கிவிடும் ஒருவனாகவும் இல்லை. சிற்றிதழ்களாக வந்த எல்லாவற்றையும் வாங்கிப் படிக்கும் அதே வேகத்தில் மாஸ்கோவிலிருந்து வந்த முன்னேற்றப் பதிப்பக நூல்களையும் தொடர்ச்சியாக வாசிக்கும் இளம்பருவத்துப்புரட்சிமனம் அவரை விலக்கிவைக்கவேண்டிய நபராகவே அடையாளப்படுத்தியிருந்தது. வடக்குக் கோபுரவாசல் மண்டபத்தில் வெ.சா.வைச் சந்தித்த அந்தச் சந்திப்பில் எந்த உரசலும் இல்லை; விவாதமும் இல்லை. அவரோடு உட்கார்ந்திருந்த நண்பர்களோடு மீனாட்சியம்மன் கோவிலின் பரப்பு, ஆயிரங்கால் மண்டபத்தின் சிற்பங்கள், அதற்குள் இருக்கும் ஓவியங்கள் அழிந்துகொண்டிருப்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வந்துவிட்டேன். என்னைச் சி.க. பெயர் சொல்லி இக்கால இலக்கிய ஈடுபாடுள்ள மாணவர் என்று அறிமுகப்படுத்தினார். வணக்கம் சொன்னதோடு அந்தச் சந்திப்பு முடிந்துவிட்டது. அந்த சந்திப்பு தந்த உற்சாகத்தோடு அவரின் ஓர் எதிர்ப்புக்குரல் வந்தபோது வாசித்துவிட்டு நானும் நண்பர் முருகேசபாண்டியனும் விவாதித்திருக்கிறோம்.

இரண்டாவது தடவை அவரை மதுரையில் சந்தித்தது சுவாரசியமும் பரபரப்புமான சந்திப்பு. 1993 இல் நடந்ததைச் சொல்வதற்கு முன்னால் சென்னையிலும் டெல்லியிலும் சந்தித்திருக்கிறேன். அவையெல்லாம் ஒரு நாடகக்காரன் – நடிகன் என்ற முறையிலான சந்திப்பு தான். அவரும் 1990 களில் நாடகங்கள் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். தொண்ணூறுகள் இந்தியா முழுவதும் நாடகங்கள் புதிய பாய்ச்சலைக் கொண்டிருந்த காலகட்டம். மைய அரசின் சங்கீத நாடக அகாடெமியின் உதவியோடு இந்தியாவெங்கும் நாடகங்கள் மரபுக்கலைகளை உள்வாங்கி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதனை வெ.சா. கடுமையான விமரிசனங்களோடு எதிர்கொண்டார். மரபுக்கலைகள் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டிய கட்டுரைகளையும் நூல்களையும் அவர் எழுதினாலும், நவீன நாடகங்களில் மரபுக்கலையை இணைப்பது என்பதையும், அதற்காக நடிகர்கள் செய்யும் சாகசங்களையும் கடுமையான விமரிசனங்களை அந்தக் கட்டுரைகள் வெளிப்படுத்தின. அதே நேரத்தில் செவ்வியல் நாடகப்பிரதிகளைக் கொண்டு மரபுவழியில் சொல்லப்பட்ட நாடகங்களைப் பாராட்டவே செய்தார். நாடக மேடையேற்றத்திற்குக் கட்டுக்கோப்பான பனுவல் அவசியம் என்பது அவரது வாதமாக இருந்தது. அந்தப் பார்வையிலிருந்து வ. ஆறுமுகத்தின் கருஞ்சுழி, ந.முத்துசாமியின் நற்றுணையப்பன், இங்கிலாந்து போன்ற நாடகங்களை விமரிசித்து எழுதிய விமரிசனக்கட்டுரைகள் எனது அரங்கியல் பார்வையை உறுதிசெய்த கட்டுரைகள். ‘அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சிவரை’ , ’இன்றைய நாடக முயற்சிகள்’ முதலான நூல்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்தத்தின் வழியாகவே எனது அரங்கியல் பார்வை வலுப்பெற்றது. இந்திய அரங்கம், தமிழ் அரங்கம், நவீன நாடகப்பிரதிகள், செவ்வியல் நாடகப்பிரதிகள் போன்ற அடிப்படையான புரிதலை எனக்குள் உருவாக்கிய கட்டுரைகள் அவருடையவையே. அதே நேரத்தில் அவரது விமரிசனக்கட்டுரைகளில் படைப்பை மையப்படுத்திய பார்வை குறைவு; நபர்களை மையப்படுத்திய பார்வையே அதிகம் இருக்கிறது என்பதையும் உணரமுடியும். தமிழில் எழுதிய எந்தப் படைப்பாளியைப் பற்றியும் ஏற்கத்தக்க படைப்பாளியாக முன்மொழிந்ததில்லை. அவரது மொழிநடையே எப்போதும் எதிர்மறைப்பார்வையோடுதான் இருந்தது. தொடங்கும்போது வெளிப்படும் இந்த அசூயையான மனப்போக்கு கட்டுரையின் இடையில் சில இடங்களில் மாறினால் மொத்தத்தில் குறைகாணுதல் என்பதையே நோக்கமாகக் கொண்டதோ என்ற ஐயத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். ஒரு படைப்புக்கு முழுமையான ஒற்றைப் பரிமாணம் கொண்ட வெளிப்பாட்டுத்தன்மையும் உணர்வெழுச்சியும் வேண்டுமென அவர் எப்போதும் எதிர்பார்ப்பவராக இருந்தார். இதனாலேயே அவரது விமரிசனப் பார்வை நவீனத்துவத்திற்கெதிராக இருப்பதாகத் தோன்றுகிறது. நவீனத்துவம் ஒற்றைப்பரிமாணத்தை முற்றாக நிராகரிக்கும் ஒன்று.  சாகித்திய அகாடெமி வெளியீட்டுள்ள பெருந்தொகுப்பான திறனாய்வுப்பனுவல்கள்  என்பதில் இடம்பெற்றுள்ள அவரது எதிர்ப்பிலக்கியம் என்னும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள இந்தப் பகுதியினை வாசித்துப்பார்த்தால்கூட இது புரியும்.

எதிர்ப்பு இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன் இவ்வார்த்தைகளை எந்த அர்த்தத்தில் நான் எடுத்துக்கொள்கிறேன் என்பதைச் சொல்லவேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பிரதாயமாகிவிட்ட தர்மங்கள், ஸ்தாபனங்கள், மதிப்புகள் இவற்றின் நியாயத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பும் எழுத்துக்கள்தான் எதிர்ப்பு இலக்கியம் என்று நான் சொல்கிறேன். ஓர் ஆழ்ந்த நோக்கில் இருக்கும் ஏனெனில் ஆழ்ந்த பார்வையுடைய ஒரு சீரிய இலக்கிய கர்த்தாவின் அக்கறை, முதலும் இறுதியுமாக, மனிதகுலம் தானே தவிர அவ்வப்போதைய தேவைகளுக்காகப் பிறப்பிக்கப்படும் தர்மங்களும், ஸ்தாபனங்களும் மதிப்புகளும் அல்ல. மனித குலத்திற்காகத்தான் இம்மதிப்புகள் முதலான மேல்பூச்சுகளே தவிர, இம்மேற்பூச்சுகளுக்காக மனிதகுலம் இருக்கவில்லை. மனிதமதிப்புகளும் தர்மங்களும் நமது ஞாபகத்திற்கும் பிறப்பிற்கும் முற்பட்டவையாதலால், அவை புனிதமானவையாக , மீறப்படாத தெய்வக்கட்டளையாகத் தோற்றமளிக்கின்றன.  —

உண்மையில் இலக்கியத்தின் அடிப்படையே தனிமனிதனும் சமூகமும் மனிதத்துவ தொடர்பு அறுந்துவிடாமல் அதை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் வலியுறுத்துவதான். ஆகவே எந்தச் சீரிய இலக்கியமும் எதிர்ப்பு இலக்கியம்தான்.

இந்த முன்வைப்போடு தொடங்கும் அந்தக் கட்டுரை தி.ஜானகிராமன், அம்பை, சார்வாகன், தி.சோ.வேணுகோபாலன், ந.முத்துசாமியின் முதலிரண்டு நாடகங்கள் எனப் பரவலான கவனம் பெற்ற எழுத்துகளை நிராகரித்துவிட்டு நகர்கின்றது. அதையும் மீறி அவரது பங்களிப்பைத் தமிழின் இளைய தலைமுறையினர் கொண்டாடவே செய்தனர். தமிழ் விமரிசன வரலாற்றில் நவீனத் திறனாய்வாளர்களில் முன்னோடியாக நினைக்கப்பட்டார். தமிழினி 2000 கருத்தரங்கின் பெருந்தொகுப்பில் ஆர்.சிவக்குமார் எழுதியுள்ளதை இங்கே தருகிறேன்:

எழுத்து உருவாக்கிய விமரிசனச்சூழலில் எழுதத்தொடங்கிய விமரிசகர்கள் வெங்கட்சாமிநாதனும் பிரமிளும். எழுத்துவின் நேர்மறையான மரபுகளை உள்வாங்கிக்கொண்டு அதன் எதிர்மறையான சில சனாதனக்கருத்துகளை உதறிவிட்டு மேற்சென்றவர்கள் அவர்கள். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தமிழ்ச் சமூகத்தின் இலக்கியம், கலாச்சாரம், ரசனை போன்றவற்றின் சாரங்களையும் சக்கைகளையும் தீவிரமாக ஆராய்ந்து சில அடிப்படைக் கேள்விகளை முன்வைத்தவர்கள். தமிழ் விமர்சனத்தின் புதிய போக்குகளுக்கு வித்திட்டவர்களில் அவர்கள் முக்கிய இடம்பெறுகிறார்கள். இலக்கியம், இசை, ஓவியம், திரைப்படம் ஆகிய படைப்புத்துறைகளின் அடியோட்டங்கள் ஒன்றானவை என்றும் படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் நிறுவமுயன்றவர்கள். தமிழ் நவீனத்துவ விமர்சனத்தைத் தொடங்கியவர்கள் என்ற இருவரையும் சேர்த்துப்பார்த்தாலும் வெங்கட்சாமிநாதன் விமர்சனத்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு செயல்பட்டவர். ஆன்ம எழுச்சி, சத்திய ஆவேசம், சத்திய தரிசனம் போன்ற மதிப்பீடுகளைப் படைப்புகளில் தேடும் விமர்சனம் அவருடையது. விமர்சனப்பரப்பின் எல்லைகளை விரிவாக்கியது முக்கிய பங்களிப்பு. ( ஆர். சிவக்குமார்,விமர்சனம் – தமிழகத்தில் புதிய போக்குகள், தமிழினி 2000, காலச்சுவடு.2005 )

இந்த மதிப்பீடு அவருடைய தொடக்கக்கால விமரிசனக்கட்டுரைகள் சார்ந்தது என்பது என்னுடைய கருத்து.  குறிப்பாக வெகுஜன மனோபாவத்திற்கெதிராகவும், கட்சி அமைப்பு சார்ந்தும் இயங்கிய இலக்கியவாதிகளை நோக்கி அவர் வைத்த விமரிசனங்களை வாசிக்கும் யாருக்கும் அவர் நவீனத்துவ அடையாளத்தை முன்வைக்கிறார் என்று தோன்றும். ஆனால் அவர் நிகழ்கால அமைப்பை நிராகரித்துவிட்டு மரபான கருத்தியல் கொண்ட வெளிப்படா அமைப்புகளை முன்வைக்கிறாராரோ என்ற ஐயம் தொடர்ந்து எழும்பிக்கொண்டே இருந்தது அவரது எழுத்துக்குள்.

இப்போது பரபரப்பான -சுவாரசியமான மதுரைச் சந்திப்பைச் சொல்லிவிடலாம். தொண்ணூறுகளின் மத்தியில் கோமல் சாமிநாதன் சுபமங்களா இதழை நடத்திக் கொண்டிருந்த நேரம். கோமல் சாமிநாதன் தமிழகப் பெருநகரங்களில் நாடகவிழாக்களையும் நடத்திக் கொண்டிருந்த காலகட்டம். மதுரையில் இருக்கும் லட்சுமி சுந்தரம் அரங்கில் சுபமங்களா நாடகவிழாவிற்கு நாடகம் போடுவதற்காக எனது நாடகக்குழுவோடு இரண்டாவது நாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். வெ.சா. முதல் நாளே வந்துவிட்டார். நான் போனவுடன் தமிழவன் என்னைத் தனியாக அழைத்து ,  “சாமிநாதன் கொஞ்சம் பயந்துகிட்டிருக்காருப்பா.. உன்னோட கூட வந்திருக்கிற பசங்ககிட்டெ கொஞ்சம் சொல்லிவச்சிடு. இங்கெ எதுவும் ரசாபாசமா செய்யவேண்டாம்” என்றார். எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவரே சொன்னார். ’ஒன்னோட பொஸ்தகத்துக்கு எழுதின விமரிசனத்திற்காக எதாவது செஞ்சிடுவீங்களோன்னுதான் பயப்படுறாரு’ இப்போது எனக்குப் புரிந்தது.

என்னுடைய நாடகங்கள் விவாதங்கள் என்னும் நூலைக் கடுமையாகத்திட்டி இந்தியாடுடே இதழில் விமரிசனம் எழுதியிருந்தார் வெ.சா. கலையும் விபரீதமும் என்பது அதற்கு அவர் தந்திருந்த தலைப்பு. சாரு நிவேதிதா அரங்கேற்றிய “இரண்டாம் ஆட்டம்” என்ற நாடகம் பற்றிய 3 பக்கப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த விமரிசனத்தையும் எழுதியிருந்தார். அந்த நூலில் இடம்பெற்றிருந்த 3 நாடகங்களையோ, பிறபகுதிகளையோ அவர் பேச நினைக்கவில்லை. நான் முதலிலேயே சொன்னதுபோல ஒருவரைப் பிடிக்காது என்றால், அதிகப்படியான எல்லைவரை போய்க் கோபத்துடன் – தர்ம ஆவேசமாகத் திட்டுவது அவரது பாணி. அதைச் செய்திருந்தார்.  அந்த விமரிசனத்திற்கான பதிலை நான் இந்தியாடுடேக்கு அனுப்பிவைத்தேன். அதன் ஆசிரியராக இருந்த வாசந்தி அதைப் போடாமல், டெல்லிக்கு அனுப்பிவிட்டேன். அதை மனதில் வைத்து நாங்கள் ஏதாவது கலகம் செய்வோமோ என்று பயத்தில் இருந்தார். அந்த பயத்தின் காரணம் அந்தக் காலகட்டத்தில் பாண்டிச்சேரி என்பது இலக்கியக்கலகத்தின் பூமி என்பதாக அறியப்பட்டிருந்ததே. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாடுடேயின் இலக்கியமலர் மலம் துடைக்கத்தக்க ஒன்று எனத் தீர்மானம் போட்டிருந்த கூட்டமும் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் அதிகமும் விமரிசனத்திற்காளான எழுத்தை எழுதியிருந்தவரும் வெ.சா. தான். அதற்குப் பிறகு அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். இந்தப் பயத்தைப் போக்கத் தீர்மானித்த நான் அவர் அருகில் போய் வணக்கம் சொல்லிவிட்டுப் பேசத்தொடங்கும் முன்பு அவரிடம் ஒரு பீடி ஒன்றை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு பேசினேன். பீடியின் வாசத்தில் கோபமும் பயமும் காணாமல் போய் நட்பு கூடிவிட்டது. விமரிசனத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லையென்று சொன்னபோது இழுத்து அணைத்துக்கொண்டார் அந்தப் பெரியவர்.

வெ.சாமிநாதனிடமும் தமிழ்ச் சிற்றிதழ் மரபினரிடம் காணப்படும் முக்கியமான குறைபாடு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தொல்காப்பியம் தொடங்கி வைத்த கவிதையியல் மரபு ஒன்று இருப்பதை இவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் நவீனக்கவிதையியல் என்று பேசுவதுகூட நவீனக்கவிதையியல் மரபல்ல. சமஸ்க்ருதக் கவிதையியல் மரபு தான். அதனை ஆங்கிலத்தில் வாசித்திருப்பதாலும், சம்ஸ்க்ருதக் கலைச்சொற்களுக்கீடான ஐரோப்பியக் கவிதையியல் கலைச்சொற்களைப் பயன்படுத்த முடிகிறதென்பதாலும் அதுவே நவீனத்திறனாய்வுக்கான சொற்களஞ்சியங்களாக நினைக்கின்றனர். ஆனால் தமிழ்ச் செவ்வியல் கவிமரபையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான கதை தழுவிய நெடுநிலைத்தொடர் செய்யுளையும் உருவாக்கிய தமிழ் மரபுக்கெனத் தனியான கவிதையியல் இருக்கிறது. அதனைக் கற்கத் தொல்காப்பியத்தைப் படித்திருக்கவேண்டும். நிகழ்காலத்தில் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமே இதனைப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவரும்கூட இந்தப் புரிதலை நிகழ்கால இலக்கியம் பற்றிய சொல்லாடல்வரை இன்னும் நீட்டிக்கவில்லை.

பொதுவாகவே தமிழ்ச்சிற்றிதழ் மரபு ஆய்வு மனோபாவத்திற்கெதிரானது. அறிவியல் அல்லது தர்க்கம் சார்ந்த கேள்விகளை முன்வைத்துப் பேசும் திறனாய்வுமுறையை நோக்கிய நகர்வு அதற்குக்கிடையாது. அத்தகைய முறையியலை முன்வைத்த திறனாய்வுமுறையை ,  இடதுசாரிப்பார்வை என நிராகரித்துவிட்டுப் போகும் விருப்பம் கொண்டதும் கூட. இதற்கான முதல்விதையைப் போட்டவர் க.நா.சு. அதன் வலிமையான பின்னோடி வெங்கட்சாமிநாதன். குறிப்பாக நாட்டார் கலைகள், சடங்குகள் , சடங்குகளோடு தொடர்புடைய கலைகளில் வெளிப்படும் சமூகத்தொடர்பு பற்றியெல்லாம் வெ.சாமிநாதனின் எழுத்துகள் பேசியிருந்தாலும், அவற்றில் தர்க்கம் சார்ந்த முன்வைப்புகளோ, முறையியலோ இல்லாததால் கல்விப்புலத்தினரின் கவனத்தைப் பெறாமலேயே போய்விட்டன. அவற்றை நவீன இலக்கியத்தின் வாசகர்களும் கவனிக்கவில்லை.

கடைசிப்பத்தாண்டுகளில் வெ.சா., எழுதிய பலவும் ஏற்கெனவே எழுதியதின் மறுபிரதிகள் தான். அப்பிரதிகளில் மேலுமொரு ஆபத்து சேர்ந்துகொண்டது. ஐரோப்பிய நவீனத்துவத்தை மறுத்து இந்தியப் பாரம்பரியத்தில் எல்லாம் இருக்கிறது; இருந்தது என்பதை நோக்கி அவரை நகர்த்திவிட்டது. அதனாலேயே தமிழ் இந்து போன்ற இந்துத்துவ ஆதரவு இணையத்தளங்களில் தொடர்ந்து எழுதும் நெருக்கடிக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டார். அதையெல்லாம் எடுத்துக்காட்டி விளக்க இது நேரமல்ல. தமிழ் எழுத்தில் தன்னை முழுமையான விமரிசகன் என்ற எல்லைக்குள் நிறுத்திப் பேசிக்கொண்டிருந்த அவரின் மறைவு நினைக்கப்பட வேண்டிய ஒன்று. அந்தக் குரலை – எதிர்ப்புக்குரலை இனிக்கேட்க முடியாது என்பதால் வருத்தம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

One Reply to “வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை”

  1. வெ.சா.வைப் பற்றிய சரியான மிகையற்ற மதிப்பீடு. தனிநபர்களோடு தனக்கிருந்த விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் தன் அபிப்பிராயங்களைச் சமைத்துக் கொண்டவர்.(வாசிக்க: வெ.சாவின் இலக்கிய ஊழல்கள்)தமிழில் இலக்கியச் சிற்றேடுகளின் கலாசாரமும் அதுதான் என்பதால் அது இயல்பாக ஏற்றுக் கொள்ளவும்பட்டது.இலக்கியத்திற்கும் பிற கவின் கலைகளுக்குமிடையே உறவை உருவாக்கவும், அவற்றிற்கிடையேயான தொடர்பை ஆராய்ந்து வலுப்படுத்துவதற்குமான ஒரு தேவையும் முயற்சிகளும் தீவிரப்பட்ட காலகட்டத்தின் (70களின் துவக்கம்)தாக்கம் காரணமாக தமிழுக்குக் கிடைத்த விமர்சகர் அவர். அந்தக் காலகட்டத்தில்தான் கசடதபற ஓவியக் கல்லூரியின் நவீன ஓவியர்கள், சிற்பிகளை அச்சுப் பரப்பிற்குள் கொண்டு வர முனைந்திருந்தது. முத்துசாமி நாடகங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருந்தார். அஃக் லினோகட் ஓவியங்களை வெளியிடத் தொடங்கியிருந்தது.அந்தச் சூழலின் இன்னொரு பிரதி நிதி வெ.சா. கட்டுரை அவரை ஒரு வழிபாட்டுக்குரிய பிம்பமாகச் சமைக்காமல், all dead men are good men, all brides are beautiful என்ற வசனத்திற்கு இரையாகிவிடாமல் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்

Comments are closed.