வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்

வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து, அவரைக் குறித்து கட்டுரை கேட்டு எழுத்தாளர் திரு திlலீப்குமார் அவர்களை அணுகியபோது, சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் மொழிபெயர்ப்பு பயிலரங்கு ஒன்றில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார் அவர். என்றாலும்கூட, வெங்கட் சாமிநாதன் பற்றி அவசியம் எழுத வேண்டும், ஆனால் அதற்கு நேரமில்லை- உங்களால் இங்கு வர முடியும் என்றால் நாம் அவரைப் பற்றி பேசலாம், என்றார். ஏறத்தாழ இரண்டு மணி நேரங்கள் அவர் வெசா வாழ்ந்த காலகட்டம், அவரது பங்களிப்பு ஆகியவற்றை மிகுந்த உற்சாகத்துடன் பேசவும் செய்தார்.
vsl“நவீன தமிழிலக்கியம் என்பது ஒரு இரண்டாயிரம் பேர்கள் மட்டுமே இயங்கக் கூடிய குறுகிய வெளி. இந்த வெளியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் பதற்றம் தான் இங்கு இத்தனை மனக் கசப்புகளுக்கும் மோதல்களுக்கும் காரணம். வெ.சாவைப் பற்றி நினைக்கும்போது, இந்த எண்ணம் தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒரு வகையில் ஒரு குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். “அவர் அத்தைக்குச் சரியா செய்யல, ஆனா நல்ல மனிதர்,” என்றோ, “சித்தப்பா அதிகம் படிக்கலை, ஆனாலும் குடும்பத்துக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்,” என்றோ சொல்வது மாதிரிதான் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் சொல்ல வேண்டியிருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் துவக்கம் முதல் இன்று வரையுள்ள இலக்கியப் போக்குகளைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் ஒரு எண்பத்து எட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறோம். அதில் பாரதி, புதுமைப்பித்தன் போன்ற பத்து இருபது பேர் தவிர எழுத்தாளர்கள் அத்தனை பேரிடமும் நேரடி பழக்கம் உண்டு,ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பதுதான் இந்த இலக்கிய உலகின் சுவாரசியமாக இருக்கிறது,” என்கிறார் அவர். எவர் ஒருவர் பற்றியும், “இவர் இப்படிச் செய்திருக்க வேண்டாம்,” என்று நினைத்தாலும், தன்னைப் பிறர் இடத்தில் வைத்து ஏற்றுக்கொள்ளும் இயல்பு அவருக்கு உண்டு. எனவே திலீப்குமாருடன் உரையாடுவது என்பது உற்சாகமான, எதிர்மறை எண்ணங்களற்ற, ஆனால் யதார்த்தத்தை உணர்த்தத் தவறாத அனுபவம். இயல்பு நிலையை ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்வதால்தான் அவரால் தன் விழுமியங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன், அதன் சுவாரசியம் உங்களுக்கும் தொற்றிக் கொள்ள இதுவே காரணமாகவும் ஆகலாம்.
இனி வெங்கட் சாமிநாதன் குறித்து அவர் கூறிய விஷயங்கள் தொடர்கின்றன.

oOo

vesa001-resized

தமிழில் நவீன இலக்கியம் என்று பேசும்போது வெங்கட் சாமிநாதன் பெயரைத் தவிர்க்க முடியாது. 1950களின் இறுதியில் அவர் நமது கலை இலக்கியங்களை முன்வைத்து, ஒரு நவீன சிந்தனைப் பண்பாட்டைப் பற்றி சிந்திக்க முற்பட்டார். நாட்டார் கலைகள், காண்கலைகள், இசை, இலக்கியம், நடனம் என்று பல துறைகளையும் அவர் தன் விமரிசனத்தின் களமாய் எடுத்துக் கொண்டார். தன் காலத்தில் நிலவிய பண்பாட்டுச் சூழலின் அடிப்படைகளையே கேள்வி கேட்ட அவரது எழுத்து தமிழ் விமரிசனத்தின் எல்லைகளை விரித்தது, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
நமது மரபின் உள்ளார்ந்த போதாமைகளைக் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து செய்து வந்தார். வேறொரு கோணத்தில், மரபை நிராகரித்தவர்கள் என்று மார்க்சியம் பேசிய இடதுசாரிகளையும் பகுத்தறிவு பேசிய திராவிட இயக்கத்தவர்களையும் சொல்லலாம். தன் எதிர்வாதங்களை இவர்களுடன்தான் வெங்கட் சாமிநாதன் நிகழ்த்த வேண்டியிருந்தது.
வெங்கட் சாமிநாதனின் தார்மீக கோபம், அவர் வலியுறுத்திய நேர்மை, அவர் முன்வைத்த எழுத்து, அவர் நிராகரித்த விஷயங்கள், அவரது விருப்பு வெறுப்புகள், அதன் விளைவுகள் என்று பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு விமரிசகராக அவர் என்னென்ன சொன்னார், செய்தார் என்பதை அத்தனை விளக்கமாகப் பேச முடியாது. வெங்கட் சாமிநாதன் எனக்கு எந்த விஷயத்தில் இன்றைக்கு முக்கியமாக தெரிகிறார் என்பதைப் பார்க்கலாம்.
தி. ஜானகிராமன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைச் சொல்வது அவரது விமரிசனம் எப்படிப்பட்டது என்று புரிந்து கொள்ள உதவும். தி. ஜானகிராமன் ஓரிடத்தில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் பற்றி அலட்சியமாக எழுதியபோது வெங்கட் சாமிநாதன் மிகவும் காட்டமாக அதற்கு பதிலளித்தார். தி. ஜானகிராமன் கர்நாடக சங்கீதத்தை இவ்வளவு நுட்பமாக ரசிப்பவர், இவ்வளவு நுட்பமான புனைவுகளை எழுதுபவர், அவர் மற்றொரு கலை வடிவை அலட்சியமாக நினைக்கலாமா என்பது போல் வெங்கட் சாமிநாதன் கேள்வி கேட்டிருந்தார். அது மட்டுமல்ல, மரபு வடிவம் என்பதால்தான் கர்நாடக இசையை ரசிக்கிறீர்களா, எழுத்தில் வெளிப்படும் மரபு மீறல் உண்மையானதுதானா, உண்மையான ஒரு கலைஞன் இது போல் செய்வானா என்று தி. ஜானகிராமனின் நம்பகத்தன்மையையே கேள்விக்குட்படுத்தினார். இத்தனைக்கும் தி. ஜானகிராமன் அவரது நெருங்கிய, மதிப்புக்குரிய நண்பர்.
இதுதான் வெங்கட் சாமிநாதனின் பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். கலைஞர்கள் மன விரிவு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். ஒரு கலைஞனிடம் காணப்படும் எந்தவிதமான குறுகிய போக்கும் அவனது கலை வெளிப்பாட்டை பாதிக்கும் என்று நினைத்தார். தனிமனித நிறைகுறைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது, ஆனால் சுயநலமும் குறுகிய பார்வையும் அவரைக் கோபப்படுத்தின. கலை படைக்கும் தகுதியையே அவை குலைத்து விடுகின்றன என்று அவர் நினைத்தார். இது பிரச்சினைக்குரிய கருத்துதான். எத்தனையோ கலைஞர்கள் அவர்களின் தனி வாழ்வின் அவலங்களைத் தாண்டி உன்னதமான படைப்புகள் அளித்திருக்கின்றனர். ஒருவனின் தனி வாழ்வை அவனது படைப்போடு தொடர்புபடுத்த வேண்டியதில்லைதான்.
ஆனால் நான் ஒன்று நினைத்துப் பார்க்கிறேன். பிற கலைகள் போல் இல்லாமல் இலக்கியம் மனிதனின் சிந்தனையோடு நேரடியாக உரையாடுகிறது, அதில் தாக்கம் செலுத்துகிறது. தன் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையில்லாத ஒருவன், பொய்மைகளுக்கு அஞ்சாத ஒருவன், இலக்கியம் படைக்கும்போது அதன் சாயல் அவனது படைப்பில் விழாமல் இருக்குமா? நேர்மையைக் கடைபிடிக்காத ஒருவன் அதை வலியுறுத்தும் தகுதியை இழந்து விடுகிறான்.
1990களில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டோம். சமூக, அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் இலக்கியத்திலும் எதிரொலித்தன. வெங்கட் சாமிநாதன் கலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஆனால், இலக்கியம் சமூகப் பிரக்ஞையும் அரசியல் விழிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.  ஒரு புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் என்ன எழுதியிருக்கிறார் என்று கேட்கும் நிலை மாறி, அவர் எழுதினால் நல்லது, எழுதாவிட்டால் ஒன்றும் மோசமில்லை என்ற நிலை உருவானது. அதுவரை சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வந்த வெங்கட் சாமிநாதன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்.
சொல்ல போனால், இணையம் என்ற ஒரு வாய்ப்பு உருவான பின்புதான் அவரது கருத்துலகம் மீண்டும் தமிழ்ச் சூழலில் புத்துயிர்ப்பு பெற்றது. ஆனால் அதற்குள் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிலைமைகள் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தன. தமிழ் இலக்கிய, பண்பாட்டு அரசியல் சூழல் மற்றும் ஆளுமைகளின் போதாமை குறித்து அவர் தெரிவித்து வந்த ஆவேசமான கருத்துகளை முன்வைத்து தமிழ் சிறுபத்திரிக்கை அல்லது இலக்கிய உலகின் அடிப்படை குணாம்சத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்கள் அவரை ஸ்வீகரித்துக் கொண்டார்கள். புறக்கணிப்பின் வேதனையிலும், அது ஏற்படுத்திய நெகிழ்ச்சியிலும் வெங்கட் சாமிநாதன் அவர்களும் அத்தகையோரின் ஆதரவை அங்கீகரிக்க நேர்ந்தது. தமிழ் பண்பாட்டு இலக்கியச் சூழல் குறித்து அவரது பார்வையில் முன்பிருந்த தீட்சண்யம் திடீரென்று மழுங்கத் துவங்கியது. வெங்கட் சாமிநாதனுக்கு நெருக்கமாக இருந்த பலரும் அவருடன் முரண்படத் துவங்கியதும் இந்தப் புள்ளியில்தான். சாமிநாதன் போன்ற ஒரு விசாலமான அறிவும் வாசிப்பும் மிக்க ஒருவர் எப்படி இந்த ஆஷாடபூதிகளை சகித்துக்கொண்டார் என்பது ஒரு பெரிய புதிர்தான். ஆனால், சி சு செல்லப்பா, க நா சு, ஆகியோரைக் கடந்து மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த வெ சா அவர்களை வெறும் புத்தக மதிப்புரையாளராகச் சுருக்கி விட்ட நமக்கும் அவரைப்பற்றி புகார் சொல்லும் தகுதி உண்டா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், நாம் அவருடன் வாதிக்கவும் விவாதிக்கவும் மறுத்துவிட்ட ஒரு சூழலில் அவரையும் அவரது பணிகளையும் மறுவாசிப்பு செய்யும் நோக்கில் நாங்கள் 2010-ல் “வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற புத்தகத்தை தொகுக்கும் முயற்சியில் இறங்கினோம். இந்த நூலில் அவரைப்பற்றிய முக்கியமான சில கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக ப. கிருஷ்ணசாமியின் கட்டுரை சாமிநாதனின் பங்களிப்பையும் குறைகளையும் துல்லியமாக விளக்குகிறது. நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
இன்று நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறோம். தீமை கலவாத நன்மை என்ற ஒன்றே இல்லாதது போலிருக்கிறது. இவற்றுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய இலக்கியவாதி, தன்னளவில் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாம் எப்படி குறை சொல்ல முடியும்? வெங்கட் சாமிநாதன் போல் அனைத்துக்கும் மேலாக நேர்மையை உயர்த்திப் பிடிப்பது சாத்தியமில்லை, அது சரியுமில்லை. ஆனால், அவரைப் போன்ற ஒரு ஆதர்சம் நமக்குத் தேவைப்படுகிறது. அனைத்து அரசியலுக்கும் கோட்பாட்டுக்கும் அப்பால் இலக்கியத்தில் நேர்மையும் கலைத்தன்மையுமே முக்கியம் என்று வாதிட்டவர் அவர். பரந்த நோக்கும் படைப்பு நிலையும் நேர்மையுடன் நேரடி தொடர்பு கொண்டவை. இலக்கியவாதியின் படைப்பாற்றல் முழுமை பெற வேண்டுமென்றால் அவனுக்கு பரந்த நோக்கும் நேர்மையும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் அவர், அதை தன் தனி வாழ்வில் எந்த சமரசமும் இன்றி கடைபிடிக்கவும் செய்தார்.
இன்று நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பார்க்கும்போது, இலக்கியத்தின் வாயிலாக எந்த ஒரு சமூக, அரசியல் நோக்கத்தையும் கை கொள்ள முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. இந்த அபத்தத்தை எதிர்கொள்ள, மற்ற எல்லாவற்றையும் விட, சாமிநாதன் பரிந்துரைத்த நேர்மையும் தனி மனித மதிப்பீடுகளும் நமக்கு ஒரு வேளை உதவக்கூடும். இது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று போல் தோன்றினாலும், சமூக அக்கறையுள்ள ஒருவர் தன் அகத்திலும் புறத்திலும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? சாமிநாதனின் விமர்சனங்களை விடவும், அவர் வலியுறுத்திய இந்த பண்புதான் நாம் அவரை நினைவு கூர்வதற்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.