வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்

This entry is part 34 of 48 in the series நூறு நூல்கள்

“நான் என்றும் அரசியலை ஓர் அடிப்படையான ஆழ்ந்த உந்து சக்தியாக கருதியதே இல்லை. அது மேலோட்ட விவகாரம். அரசியல் விழிப்பு உணர்வு, அதனினும் ஆழ்ந்த நிலையில் கலை விழிப்பு உணர்வு, சிந்தனைத்துறையின் விழிப்பு உணர்வு, இவற்றுக்கும் அடியே, ஓர் ஆழ்நிலையில் எழும் விழிப்பு உணர்வு தான் பிறப்பிடம்”
– வெங்கட் சாமிநாதன், தொடரும் பயணம் – இலக்கிய வெளியில் 2

பொதுவெளியில் புழங்கிய ஆளுமைகள் மறைந்த பின்னர் அவர்களது ஒருமைத்தான கருத்துகளை அசைபோடுவதை சங்கடத்துடனேயே செய்ய வேண்டியுள்ளது. இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல என்றாலும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டிய விழுமியங்களை கடைபிடிக்காமல் போனாலும் வெறுமனே அசை போடுவதும் ஒரு அஞ்சலியாகவும் அமைந்துவிடலாம். அதுவும் வெங்கட் சாமிநாதன் போல கடைசி காலம்வரை புதுமையில் நாட்டம் கொண்டவருக்கு இது கசப்பூட்டும் காரியமாக இருக்காது. அவரது மறைவுக்கு வந்த அஞ்சலி குறிப்புகளைப்படிக்கும்போது இதில் கொஞ்சம் உண்மை இருப்பது தெரியும்.

release2

கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட வெங்கட் சாமிநாதன் எழுதிய குறிப்பு பல வடிவங்களில் அவரது கட்டுரைகளில் வந்துள்ளது. அவரது கட்டுரைகளைப் படிக்கும்போது கலை விமர்சகர் எனும் தளத்திலிருந்து மேலெழுந்து ஒரு காலகட்டத்தின் குரலாக ஒலிப்பதை உணராமல் இருக்க முடியாது. குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் தொடங்கி சா.கந்தசாமி, பாமா, சு.வேணுகோபால் எனும் நவீன இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் வரை தொடர்ந்து தனது ரசனை விமர்சன அளவுகோலை போட்டுப்பார்த்துள்ளார். இலக்கிய படைப்புகளை மட்டும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கவில்லை.இலக்கியம், நிகழ்த்துக்கலை, இசை, நாடகங்கள், திரைப்படங்கள் எனப் பலதரப்பட்ட வெளிப்பாடுகளில் அவர் ரசித்த அம்சங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். வாசகர்களுக்கு இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட கலை வெளிப்பாடுகளாகத் தோன்றினாலும் வெ.சா. ரசனை விமர்சன அளவுகோலுக்கு இவை அனைத்தும் உண்மை, சத்தியம் எனும் ஆப்தசக்தியின் பல வடிவங்கள் மட்டுமே.

“இந்திய மக்களின் எந்த புத்துயிர்ப்பும், அப்புத்துயிர்ப்பு இந்திய மக்களின் கலைகளில் வெளிப்பாடு பெற இயலாதென்றால், அத்தகைய எந்த புத்துயிர்ப்பிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஏனெனில், எந்த புதிய எழுச்சியும், அது புது எழுச்சி எனப் பெயர் சொல்லத் தகுந்ததுதான் என்றால், அது கலையாக வெளிப்பாடு பெற வேண்டும்”

இது ஆனந்த குமாரஸ்வாமி அவர்களது கூற்று. அனந்த குமாரஸ்வாமியின் மிக முக்கியமான சிந்தனை முடிவாக அமைந்திருந்தாலும், அதை நேரடியாக தனது கோட்பாடாகக் கொள்ளாமல், வெங்கட் சாமிநாதனுக்கே உரிய விதத்தில் பல திரள்வெளிப்பாடுகளில் இக்கூற்றைப் போட்டுப்பார்க்கிறார். தனது வாழ்நாளில் அலையலையாக அவரை வந்தடைந்த கம்யூனிஸ மற்றும் திராவிட அரசியல் கோஷங்களை அவற்றின் வளர்சிதை மாற்றங்களை கூர்ந்து அவதானிப்பதன் வழி இக்கூற்றை அடைகிறார். கம்யூனிஸ எழுத்துக்கள் எதுவும் கலையான சரித்திரம் இதுவரை இல்லாத காரணம் அது மனிதாபிமான அடிப்படையற்ற அரசியல் முறை என்பதால். உண்மையற்ற காரணத்தால் இது கலையாகவும் வாய்ப்பில்லை என்கிறார். “திராவிட இயக்கம் பிறப்பித்த எழுத்து மலைகள் எதுவும் கலையாகாததும் இதனாலேயே. சுய தரிசனம், தத்துவார்த்த அடிப்படை இல்லை, உண்மையில் அதில் காண்பது சுயசாதிவெறியும், சுயலாபத்தேட்டையும், உத்தியோக வேட்டையும்தான்” என அவரால் தனது சிந்தனையையும் நடைமுறையும் இணைத்துப்பேச முடிந்தது.
vslவெங்கட் சாமிநாதன் தீவிரமாக இயங்கி வந்த நாட்களில் – இப்படி சொல்வது கூட சரியில்லைதான். எழுதுவதுதான் இயங்குவதா? அல்லது தொடர்ந்து சமூகத்தை அவதானித்து தைரியமாகத் தனது கருத்துகளைக் கூறுவதா? – தமிழ் சமூகத்தை நீண்ட காலத்துக்கு பாதிக்கும் விஷயங்களாக, திராவிட அரசியலையும், தமிழரின் கலை ஞான வறட்சியையும் தொடர்ந்து அடையாளம் காட்டியபடி இருந்திருக்கிறார். இவ்விரண்டும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்த்த இரு விஷங்களாக அவர் அவதானித்தது இன்றுவரை நம்கண்முன்னே பாதகங்களைக் காட்டியபடி உள்ளது. ஆஸ்திகத்தையும், பார்ப்பனீயத்தையும், நிலப்பிரபுத்தவத்தின் விளைச்சல் எனக்கூறி முற்போக்கு, திராவிட அரசியல்வாதிகள் கோயில் சார்ந்த கலைகளை அழித்ததை வெ.சா. மிகக்கடுமையாக எதிர்த்துள்ளார். ஒரே வயிற்றில் பிறந்த தாயாக இருக்கும் தமிழ்நாடு மற்றும் கேரள நாட்டின் கலை வளர்ச்சியில் ஏன் இத்தனை வேறுபாடு? ஏன் தமிழ்நாட்டில் தெருக்கூத்து, பாவைகூத்து போன்ற நாட்டாரியக்கலைகள் பாதுகாக்கப்படுவது கிடையாது? அதே நேரத்தில், தமிழ் சமுகத்தை விட அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த கேரளத்தில் இத்தனை விதமான ஜாதியினரும், மதத்தாரும், அரசியல் கொள்கைகளும் இருந்தாலும் கலைகள் வளர்ந்தபடி உள்ளன? மேற்சொன்னபடி இதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமல்லாது பொதுவாக தமிழரது கலைஞான வறட்சியும் ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்.

“பக்தி இயக்கம் என்றால், முகஞ்சுளிக்கத் தோன்றும் இன்றைய போலி அறிவு ஜீவிகளுக்கு, போலி பகுத்தறிவாளர்க்கு. இதையே வேறு வார்த்தைகளில் சொல்லலாம்: தான்- ஐ மறந்த, ‘தான்’ ஐ அழித்த ‘தன்’னினும் மகத்தான வேறு ஒன்றிற்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உத்வேகம், மனநிலை என்று சொன்னால் அது Secular ஆகவும் இருக்கும். எல்லாக்காலங்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும் ஒன்றாகவும் இருக்கும்”

VeSaa_thodarum-payanam-books

1980களில் எழுதிய மேற்சொன்ன பத்தி இன்று வரை எத்தனை பொருத்தமான ஒன்றாக இருக்கிறது! இன்று பக்தி இயக்கம், பக்தி கதைகள் என்றால் அதை ஏதேனும் மாற்றுவடிவில் தரத்துடிக்கும் இலக்கிய ஆக்கங்களும், ஆன்மிக உணர்வுகளை தர்க்கபூர்வமாக ஆராய்ந்து நடைமுறை விளக்கங்கள் தந்து ‘நம்பவைக்கும்’ போக்கும் அதிகமாயிருப்பதற்கு பக்தி, ஆன்மிகம் எனும் மரபுகளுக்குக் கொடுக்கப்பட்ட வசவுகளும் ஒரு காரணம். சிந்தனைவாதிகளும், எழுத்தாளர்களும், பெரும் கலைஞர்களும் பக்தி/ஆன்மிகம் போன்றவற்றை ஏதேனும் ஒரு தர்க்கத்துக்குப் பின்னால் ஒளித்துவைக்கப்பார்க்கிற காலம் இது. திடீர் விருந்தாளிகள் வரும்போது தரைவிரிப்பின் கீழே வேண்டாதவற்றை போடுவது போல. ஆன்மிகம்/பக்தி போன்ற சிந்தனைகளையும் அவற்றின் நடைமுறை இயக்கத்தையும் நேரடியாக அவதானிப்பது ‘பிற்போக்கு’ வாதமாகக் கருதப்படுகிறது. வெசா இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதினார்.

கலை விழிப்பு/ஒருமைத்தான ஆளுமை

தனது கலை ரசனை அளவுகோலை வெசா ஒரு சிந்தனை முறையில் பொருத்திப்பார்ப்பதை அவரது கட்டுரையில் தொடர்த்து படிக்கமுடிகிறது. நேரடியாக அரசியல் சக்தியை கலைவெளிப்பாடாகக் கொள்ளாமல் கலைவிழிப்பு, கலையின் ஆழ்நிலை, கலைஞனின் பித்துநிலை , கலைவெளிப்பாட்டில் உள்ளுணர்வும் தியான உச்சமும் (trance) கூடும் கணங்கள் போன்றவற்றை அவர் பேசுகிறார். தன்னை மறந்து தனக்கும் மேலான ஒன்றோடு இணையும் பண்டைய மனிதர்களின் சடங்குகளிலிருந்து அவர் இவற்றைப் பெற்றிருக்கலாம். கலை வெளிப்பாடு என்பதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகப் பார்க்காமல் அதை ஒரு பிரபஞ்ச அனுபவமாகப் பார்க்கிறார். Shamanism, folk dances, கோயில் தீ மிதிவிழாக்கள் போன்ற சடங்குகளில் மனிதர்கள் காணாமல் போகிறார்கள்; அங்கு நடப்பது ஒருமித்த பிரபஞ்ச நிகழ்வு. அவற்றின் வெளிப்பாடுகள் மனித ஆழ்மனதை மட்டும் நம்பியிராதிருப்பதால் பிரபஞ்சம் நிகழ்த்தும் பேருண்மையின் ஒரு பிம்பமாக நிகழ்த்துகலை அமைந்துவிடுகிறது. அக்கணத்தை எவ்வித கீழ்மைகளும் தீண்டா. தீயவை கூட மனோன்னுதமான வடிவைப்பெற்றுவிடும். இதனாலேயே இது ஒரு தொடர்நிலையாக அமையாது. அந்நொடியில் வெளிப்படும் கலையில் உண்மை உண்டு. இந்த இடத்தில் இவரது சமகாலத்தவராக சிந்தனையாளர் மு.தளையசிங்கம் அவர்களது மெய்யுள் கோட்பாட்டை இணைத்துப் பார்க்க முடிகிறது. மனித பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி, ஒரு முழுமையை நோக்கி நகர்வதற்கான வாசலாக அவர் ஆழ்மன உணர்வுகளை முன்வைத்தார். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டம் ஆழ்மனம், ஜாக்ரத், கூட்டுநனவிலி என மனதின் பல படிநிலைகளை அறியும்போது விரிவடையும் எனும் மெய்யுளின் சிந்தனையுடன் வெ.சா ரசனை அளவுகோல்கள் இணைகிறது.
வெசாவைப் பொறுத்தவரை தர்க்கத்தை மீறும் ஆழ்மன வெளிப்பாடுகள் மட்டுமே கலை. ஒவ்வொரு முறையும் புதியது. இயற்கையோடு இயைந்த நிகழ்வு என்பதால் இயல்பானது.
இதனாலேயே,

ஒரு பறவையின் பறத்தலென,
இயல்பாய்
ரம்மியமாய்
சலிப்பற்றதாய்
பிரம்மிப்பாய்,
புத்தம் புதிதாய்
ஜீவத்துடிப்புடன்
இருக்கவேண்டும்
கவிதை.

எனும் ராஜமார்த்தாண்டன் கவிதையை அவரால் கவிதைக்கான மிகச்சிறப்பான வரையறையாகக் கருதமுடிகிறது. வெசா வரையறுத்த கலை அளவுகோல்களுக்கு மிக நெருக்கமாக அமைந்துவிடுகிறது இக்கவிதை.

கலாசார விழிப்பு

தமிழ் ஜனங்களின் இருவித தடைகற்களுக்கு (அரசியல் கட்சிகள் மற்றும் கலை வறட்சி) வெசா விமர்சனத்தின் வழி தீர்வு இருந்ததா?
அரசியல் விமர்சகராக, பத்திரிக்கையாளராக, காளியின் தவப்புதல்வனாக, மகாகவியாக, கம்யூனிசத்தை வரவேற்ற கையோடு அதன் கொடூர முகத்தை முளையிலேயே அவதானித்து மூலையில் கடாசிவீசிய சிந்தனாவாதியாக பாரதியாரை ஒருமைத்தான ஆளுமையாக முன்வைக்கிறார். வெ.சா விமர்சன வழிமுறைப்படி தனிப்பட்ட ஆளுமைகளின் கலைமேன்மையிலிருந்து தொடங்கி ஒரு பொதுவயப்பட்ட கலை அளவுகோள்களுக்குள் நுழைகிறார். பாரதியார், வ.வே.சு ஐயர், தாகூர், வள்ளத்தோல், சிவராம் காரந்த் போன்றோரின் பங்களிப்பையும் சமூகத்தில் அவர்களால் நிகழ்ந்த மாற்றங்களையும் முன்மாதிரியாகக் கொண்டு ‘கலாசார விழிப்பு’ எனும் கருதுகோளுக்குள் நுழைகிறார். இசை, இலக்கியம், நாடகம், நாட்டாரியல், திரைமொழியியல், சமூக கலைச் சிந்தனை எனும் தரப்புகளை பிரதிநிதிப்படுத்தும் ஒருமைத்தான ஆளுமை தமிழ் திரளில் உருவாகாதது கலாசார வறட்சிக்குக் காரணம் எனும் முடிவுக்கு அவரைத் தள்ளுகிறது. தாகூரைப் போலொரு பன்முக ஆளுமை நம்மிடையே உலவும் காலத்தில் கலைஞர்களிடையே மட்டுமல்லாது பொதுமக்களின் ரசனையும் மேம்படும். உண்மையை தரிசனமாகக் கொண்டு வார்க்கப்பட்டது என்பதால் கலை ரசனையின் தீற்றல் சமூகத்தின் மேன்மைக்கு வித்திடும் என வெ.சா சிந்தனைப்போக்கு அமைந்திருக்கிறது. ஆழ்மனதில் உருவாகும் கலாரசனை ஒத்திசையும் மனங்களை சென்றடையும்போது அடிப்படை சிந்தனைகளில் ஒரு தெளிவும், செல்லவேண்டிய பயணத்தின் திசையிலும் புரிதல் ஏற்படும். இதன்வழி நடைமுறை சக்திகளான அரசியல் கோஷங்களின் போலித்தனங்களை பிரித்தறியும் சிந்தனைத்தெளிவும் கைவசமாகும் என நினைத்தார். குறிப்பாக, கைவிளக்கென வழிநடத்தும் பன்முக ஆளுமையைத் தொடரும்போது உள்ளொளியும், மனிதாபிமானமும் கைகூடி கலாசார விழிப்பு சாத்தியமாகும் என நினைத்தார்.
உள்ளுணர்வின் வழியே ஆதிமனிதன் இயற்கையோடு கொண்டிருந்த உறவை கலையின் முக்கியமான விகசிப்பாகக் கொண்டவர் வெ.சா. கலையும் கலைஞரும் வெவேறல்ல எனும் விமர்சன அடிப்படையை அவர் சென்றடைய இயற்கையோடு ஆழ்மனம் கொண்டிருக்கும் தொடர்பைப் பற்றிய புரிதலும் ஒரு காரணம். இதனாலேயே அவருக்குத் தொன்மையான நாட்டாரியல் மரபு மீது பெரும் ஈடுபாடு உருவானது. செழிப்பு கடவுளர்களை (fertility gods) வழிபடும் பண்டைய இனக்குழுகளின் நம்பிக்கைகள் வரலாற்றின் பிரவாகத்தில் பலவிதமாகக் கிளைபிரிந்து தழைத்து நவீன மனதில் குறியீடாகத் திரண்டு நிற்பதை அவர் நவீன கலை வடிவங்களில் அடையாளம் கண்டார். நாட்டுப்புறக் கூத்துகள், பாவைக் கூத்துகள், சீன மரபு நடனம், ஐரோப்பிய பாலே நடனம், நாடகம், திரைப்படம் (நாம் நினைக்கும் வகையிலான திரைப்படத்தை கேலிக்கூத்து என்கிறார். ரித்திக் கடக், பீடர் ப்ரூக்ஸ், சத்யஜித் ரே போன்றோரின் கலை பற்றியது அவரது அளவுகோல்கள்.) போன்றவற்றை இணைத்து ஜீவத்துடிப்புடன் கூடிய கலை வெளிப்பாடு எப்படி உண்மையுடன் தொடர்புடையது என முன்வைக்கிறார். சொல்லப்போனால், அசலான கலை வடிவம், அது எவ்விதமான வெளிப்பாட்டு முறையில் இருந்தாலும், உண்மை, சத்தியம், தனிமனித நேர்மை போன்றவற்றின் ஆடிப்பிம்பங்களே. தனது காலத்தில் வெகுஜனமாகியதால் மலிவாகிப்போன கலைகளைத் தொடர்ந்து அடையாளம் காட்டுகிறார். இதில் பெயர் சொல்லி சுட்டிக்காட்டுவதற்கு அவர் தயங்குவதே இல்லை. சுஜாதா, ஜெயகாந்தன், கருணாநிதி, முற்போக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகார அமைப்புகள் என அவர் தைரியமாக எதிர்க்கருத்து சொல்ல தயங்கியதாகத் தெரியவில்லை.
சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார். சொல்லப்போனால் இலக்கியம், இசை, ஓவியம், நாட்டியம், நாடகம் என எல்லா கலை வடிவங்களிலும் ஆழச் சென்று அவற்றின் அடிப்படை மரபுக்கூறுகளை அலசுகிறார். தனிப்பட்ட கலை அனுபவங்களிலிருந்து தொடங்கி பிரபஞ்ச தரிசனமாக அவற்றை அலசுகிறார். இதனாலேயே அவர் சுட்டிக்காட்டும் கலை ரசனை மனித மனதின் ஆழ்மன உள்ளுணர்வையும், trance  அனுபவங்களையும் அடிப்படையாகக்கொள்கிறது. ‘குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளா தவர்’ எனும் குறள் சொல்லும் கருத்தை விமர்சிக்கும்போது ஏன் வள்ளுவர் தம் மக்கள் என குறுக்கிக்கொண்டார், தம்மக்களில்லாது போன குழந்தைகளின் சொற்களும் மதுரமே என விசாலமாகச் சிந்திக்கிறார். மரபு, ஆன்மிக தரிசனத்தைப் பற்றி பேசத்தொடங்கினாலே மதவாத அடிப்படைவாதத்தை விதந்தோதுவதாகச் சொல்லும் ‘Secular சிந்தனையை’ அவர் பல கட்டுரைகளில் சாடியுள்ளார்.
“நான் என்றும் அரசியலை ஓர் அடிப்படையான ஆழ்ந்த உந்து சக்தியாக கருதியதே இல்லை” – எனக் குறிப்பிடும் வெ.சா. எழுத்துகளை இந்துத்துவ சார்புடைய எழுத்து, ஆரிய எழுத்து எனக் குறுக்குவது தவறான புரிதல் மட்டுமே. காலம் முழுவதும் அரசியல் பிரசாரத்துக்கு எதிராக உழைத்து, அதை மேலோட்ட விவகாரமாகத் தட்டிக்கழித்து, கலை, கலாசார விழிப்பு போன்ற அடியாழச் செயல்பாடுகளை அலசிய விமர்சகரை அணுகுவதற்கு இப்படிப்பட்ட குறுக்கல்வாதப் பார்வை தவறான வழிமுறையாகும். சொல்லப்போனால், இவ்வகை விமர்சனங்கள், வெ.சா. முன்வைத்த ரசனை விமர்சன அளவுகோலுக்கு முற்றிலும் எதிர்த்திசையில் செல்லும் பயணம்.

Series Navigation<< தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்திருவரங்கன் உலா >>

One Reply to “வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.