வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்

vesa-003

இத்தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது சில பழைய நினைவுகள் மனத்தில் படர்கின்றன. ‘எழுத்து’ ஆறாம் இதழில் (1959) ஜம்முவிலிருந்து வெ. சாமிநாதன் என்ற பெயரில் வெளியாகியிருந்த கடிதத்தில் என் கவனம் விழுந்தது. பின் வெளிவந்த பிற கட்டுரைகளும் என்னையும் என் நண்பர் கிருஷ்ணன் நம்பியையும் வெகுவாகக் கவர்ந்தன. பேசி அலுக்கும்போது, புதுப்பித்துக் கொள்ள நாங்கள் சேர்ந்து படித்தவற்றில், வேறு பலவற்றுள், இவர் எழுத்துகள் பல சமயம் கைகொடுத்தன.
அன்றைய இலக்கியச் சீரழிவுகளுக்கு எதிரான க.நா.சு.வின் தாக்குதல்களை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றுக்கொண்டிருந்த எங்களுக்கு, சாமிநாதனின் போராட்டம், முன்னவரின் கருத்துகள் தீவிரம் அடைந்துவிட்ட நிலையையும் விவரணங்களில் உட்புகுந்து அக்கருத்துகளைச் சீரழிவின் சகல பரிமாணங்களுக்கும் விஸ்தரித்ததையும் ஸ்திதியின் உள்ளீடற்ற தன்மையை அம்பலப்படுத்தியதையும் காட்டியது. சீரழிவுக்கு எதிரான ஒரு விமர்சன ஆளுமையைக் க.நா.சு. காட்ட, சாமிநாதனின் கருத்துகள் சீரழிவின் பூதாகாரத் தன்மையையே காட்டி அதிர்ச்சி கொள்ளச் செய்தன. விமர்சனம் க.நா.சு.வைத் தாண்டி, அடுத்த படிக்கு நகரும் ஆரம்பத்தையே இதில் நான் கண்டேன்.
ஸ்திதியின் சீரழிவுக் காட்சிகளைவிட, சீரழிவின் ஊற்றுக் கண்ணாக மனித மனத்தைக் கண்டு, அதன் ஆன்மீக ஓட்டைகளை, சிடுக்குகளை சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் வெளிப்படையாகச் சொல்லாத நேரங்களிலும்கூட அடிச் சலனமாக வெளிப்படுத்திய தருமு சிவராமுவின் இக்காலத்தியக் கட்டுரைகள், அப்போதைய என் மனநிலைக்கு, சாமிநாதனின் தருக்க உலகைவிட இதமாக இருந்தன. நம்பியோ ‘சிவராமுவின் பாஷையைத் தொற்றிக் கொண்டு ஏறுவது கடினமாக இருக்கிறது’ என்றார். சாமிநாதனின் எழுத்தில் சில சமயம் கடுமை ஏறிவிடுவதை நான் ஒரு குறையாகக் காண, அவரது போர்க்குணமே நம்பியை அதிகம் கவர்ந்தது எனலாம். தன் முதல் சிறுகதைத் தொகுதிக்கு சாமிநாதனிடமே முன்னுரை வாங்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார் நம்பி. சாமிநாதனின் ஆரம்ப கால எழுத்துகளில் நாங்கள் இருவரும் கொண்டிருந்த ஈடுபாடு பற்றியும் வேற்றுமைகள் பற்றியும் நாங்கள் அவரைப் படிக்க ஆரம்பித்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த நேர் சந்திப்பில் நம்பியே சாமிநாதனிடம் தொட்டுப் பேச நேர்ந்தது. வருடங்கள் ரொம்பவும் ஓடிவிட்டன; இழப்புகளுடனும் நம்பிக்கைகளுடனும் . . .
இருபது வருடங்களாக வெங்கட் சாமிநாதன் கருத்துலகில் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார். இக்காலங்களில் இவர் நம் வாழ்வின் அநேக முகங்களை – இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நம் எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து, உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் நாம் என புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவற்றைப் போலிக் கனவென, வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர்.
சரி, இக்கருத்துகளை நம் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது? கனவுகள், மாய்மாலங்கள், போலி லட்சியங்கள், போலி மதிப்பீடுகள், பழமைக் கிரீடங்கள், தனி இனம் என்ற மார்தட்டல்கள் எல்லாம் தாக்கப்பட்டபோது, தமிழின் பல்வேறு துறையைச் சார்ந்த காவல் நாயகர்கள், கனவுக் காப்பாளர்கள், பழம்பெருமையின் வாய்ச்சவடாலை விற்று உண்டிக்கு வழி தேடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும், தங்கள் போலி முகங்களைக் காப்பாற்றிக் கொள்ள எதிர்க்கூச்சல் எழுப்பினார்களா? தமிழ் வாழ்வின் சகல துறைகளையும் மிக்க உயர்வாய்க் கண்டு, அக்கற்பனைகளில் ஆத்மார்த்தமாக அழுந்திப் போனவர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் வாதங்களை முன்வைத்துக் கருத்துப் போரிட்டார்களா?
vslஒரு சமூகம் அதுகாறும் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் உண்மையாயின், ஆத்மார்த்தமாயின், வெகுண்டெழுந்திருக்க வேண்டும். இந்த இருபது வருடங்களில், பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து, கருத்துகளில் சில விழுந்து, சில உறுதிப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளில் புனர் மதிப்பீட்டுக்கும் புது வாழ்வுக்கும் வழிகோலியிருக்க வேண்டும். அனுதினம் கழிவுகளை வெளியேற்றித் தன் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முயலும் ஒரு சுரணையுள்ள சமூகம்,  இவர் கருத்துகளை ஒரு உன்னத நிலையில் எதிர்கொண்டிருக்கும்.
ஆனால் இங்குச் சகல நிறுவனங்களிலும் நிகழ்ந்தது ஒரு தந்திரமான புறக்கணிப்பு; அறிந்தும் அறியாததுபோல் ஒரு தந்திர பாவனை; இச் சமுதாயத்தின் தடிப்பேறிப்போன சருமத்தை, மாறுபட்ட கருத்துகளின் ஊசிகள் அப்படி ஒன்றும் துளைத்துவிட முடியாது என்பதை முன்னனுபவங்களிலிருந்து அறிந்த ஒரு நிச்சயம்; அதிலிருந்து பெற்ற உதாசீனம். இதற்கு அடுத்த மட்டத்தில், கருத்துலகின் சாரலில் நனைவதான பாவனை காட்டி வருகிறவர்களும் இக்கருத்துகளை எதிர்கொள்ள விமர்சன பலம் இன்றி வசைகளைக் காற்றில் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விமர்சகர், இவரை மற்றொரு விமர்சகருடன் இணைத்து இருவரும் ‘பிளாக்மெயில்காரர்கள்’ என்றார். புகழேணியில் தன் சுய விளம்பர சாகசங்களைப் படிகள்தோறும் நிகழ்த்திக் காட்டும் ஒரு நாவலாசிரியர், இவரை ‘இலக்கிய ரௌடி’ என்கிறார். (இப்புது வார்த்தைச் சேர்க்கையை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.) மற்றொரு சிறுகதை எழுத்தாளர், வெ.சா.வை அடுத்துக் காண நேரும் சந்தர்ப்பத்தில், ‘அவர் மேலே விழுந்து தாக்குவேன்’ என்றார். விழுந்தாரா, தாக்கினாரா என்பது தெரியவில்லை. இவர்கள் ஒவ்வொருவருமே, இவர்கள் படைப்புப் பற்றி வெ.சா. நல்ல வார்த்தைகள் கூற இருந்த நேரத்தில் அதைச் சப்புக்கொட்டியவர்கள். ‘இன்னும் கொஞ்சம்’ என்று கையேந்தியவர்கள். இவர்கள் படைப்புப் பற்றி வெ.சா. தூக்கிப் பேசி மறுபக்கம் காந்திஜியைத் தூஷணை செய்திருந்தாலும் அவரோடு இணைந்துகொள்ள – குறைந்த பட்சம் மௌன சம்மத சமிக்ஞைகள் காட்டவேனும் (அதுதானே எப்போதும் சௌகரியம்!) – இவர்களில் யாருமே தயங்கியிருக்க மாட்டார்கள். பேச்சில் பலாத்காரம் கருத்துலகக் கோழைகளின்  கடைசி ஆயுதமாகும். குஸ்தி பயில்வான் விமர்சகனாகவும் இருக்கக் கூடிய சாத்தியக்கூற்றை யார் மறுக்கமுடியும்? ஆனால் குஸ்தி, இலக்கிய விமர்சனமாக  ஏற்றுக்கொள்ளப்படும் காலம் வரும் என்று தோன்றவில்லை.
இவர்கள் போகட்டும். விமர்சகர்கள் இவர்மீது என்ன பார்வை செலுத்தினார்கள்?
ஐம்பதுகளில், விமர்சன உலகில் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருந்த க.நா.சு. கூறும் புகார் ஒன்றுண்டு. நம் எழுத்தாளர்கள் கருத்துலக இயக்கம் விளைவிக்கும் சர்ச்சைகளுக்கும் கோபதாபங்களுக்கும் பயந்து படைப்புக்குள் ஒதுங்கிக்கொள்கிறார்கள் என்றும் இலக்கிய உலகில் ஒரு நூல்பற்றி, ஆசிரியர்பற்றி வாசகர்களும் எழுத்தாளர்களும் மதிப்புரையாளர்களும் விமர்சகர்களும் கருத்துகள் வெளியிடுவது சகஜம் என்ற சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும் அபிப்பிராயங்கள் இறுதி முடிவு எனக் கருதப்படும் பதற்றநிலை அகற்றப்பட வேண்டும் என்றும் க.நா.சு. கூறி வந்தார். என்னையும் நம்பியையும் விமர்சனக் கருத்துகளை முன்வைக்க அவர் பலமுறை தூண்டியதுண்டு. அவரும் செல்லப்பாவும் இயங்கி வரும் ஒரு தளத்தில், அவர்களுக்கு மேலாகவோ அல்லது பின்பலமாகவோ இயங்க எங்களுக்கு நாங்கள்  தகுதி ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறியபோது, வாசகர் நிலையில் எளிய அபிப்பிராயங்களேனும் கூற முன்வர வேண்டும் என்றார்.  ‘இலக்கிய வட்டம்’ 22ஆம் இதழில் (1964) டி.கே.சி. பற்றி எம்.கே. ராமய்யங்கார் என்பவரின் சாரமற்ற கட்டுரையை அவர் வெளியிட நேர்ந்ததென்ன என்று நான் நேர்ப்பேச்சில் விசாரித்தபோது, ‘யாருமே அபிப்பிராயம் சொல்ல முன்வருவதில்லை; ஏதோ இந்த அளவுக்காவது சொன்னாரே என்று வெளியிட்டிருக்கிறேன்’ என்றார். க.நா.சு.வின் குறையை, அவர் அழைப்பின் நியாயத்தை, அங்கலாய்ப்பை, நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். ஆனால் கருத்துலக வெளிப்பாடுகளுக்குப் பரிதவித்துக்கொண்டிருந்த க.நா.சு., ‘எழுத்து’வின் பக்கங்களில் சிவராமு, சாமிநாதன் தோன்றித் தங்களின் பார்வைகளை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபோது அளித்த வரவேற்பென்ன? வரவேற்பு என்பது பூச்செண்டு அளிப்பது அல்ல. தன் பார்வையின் தீவிரமான பொருட்படுத்தலே, ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனின் இயக்கத்துக்குத் தரும் அதிகபட்ச கௌரவமாகும். இவர்கள் பார்வை பற்றிக் க.நா.சு.விடமிருந்து இன்றுவரை நாம் பெற்றுள்ளது, நான் அறிந்தவரையிலும் ஒரு நீடித்த மௌனமே.
செல்லப்பா, வெ.சா.வின் கருத்துகளை ‘எழுத்து’வின் பக்கங்களில் எப்படி எதிர்கொண்டார்? மௌனி பற்றி, ராமாமிர்தம் பற்றி செல்லப்பா தம் கருத்துகளை விரிவாகவே அளித்துள்ளார். பிச்சமூர்த்தி பற்றி, சி. மணி பற்றி எளிய குறிப்புகள் உள்ளன. வெ.சா. பற்றி ஏதும் கூறினாரா? வெ.சா.வுடன் செல்லப்பா அடிப்படையான கருத்தொற்றுமை கொண்டிருப்பின் (விவரணங்களைவிட்டு விடுவோம். விவரணங்களில் எந்த இரு விமர்சகர்களும் முழுமையாகக் கருத்தொற்றுமை கொள்வது நிகழக்கூடிய காரியமல்ல) அவருக்கு ஏதும் சொல்ல அவசரம் இல்லாது போகலாம். ஆனால் உண்மையில் கருத்துலகில் வெ.சா. புகுந்த பின், க.நா.சு.வும் சரி, செல்லப்பாவும் சரி, வெ.சா. பக்கம் சட்டெனத் திரும்பி அவரைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது.
அடிப்படையான கோட்பாடுகளிலும் சரி, அக்கோட்பாடுகள் தந்த முடிவுகளிலும் சரி, க.நா.சு.வும் செல்லப்பாவும் ஒரே கருத்துலகைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவு. சித்தாந்த நீட்சிகளில் கொள்ளும் எளிய வேற்றுமைகள் அடிப்படை ஒற்றுமைக்கு முரணாகக் கருதத்தக்கவை அல்ல. இவர்கள் இருவரும் தங்களுக்குள் கண்ட முக்கியமான வேறுபாடு, ஒரு விமர்சகன், தன் அனுபவத்தை வெளியிடவேண்டிய விதம் பற்றியே. இவ்வேறுபாடு, ஒருவர் தம் முடிவுகளுக்கு விளக்கம் முன்வைக்க வேண்டும் எனக் காண, மற்றொருவர், முடிவுகளை வற்புறுத்துவதே போதுமானதாகும் எனக் கருதியதாகும். இதுவே ‘அலசல்’, ‘குத்துமதிப்பு’ ஆகிய இரு பார்வைகளுக்குமான வேறுபாடு என நான் கூறுவது, விவரணங்களுக்கு முழு நியாயம் செலுத்தியதாகாது. ஆனால் இக்குறை நான் கூறவரும் கருத்தைப் பாதிக்கக்கூடியதல்ல.
ஒரு நோயாளியைப் பரிசீலனை செய்து, நோய்க்கூறு பற்றிய தங்கள் ஆய்வில் வேற்றுமை கொள்ளும் காரியமாகக் க.நா.சு., செல்லப்பா ஆகியோரின் நிலைகளை நாம் கண்டால், மூன்றாவது மருத்துவர் ஒருவர் புகுந்து, தன் வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து, ‘நோயாளி இறந்து பல்லாண்டு காலம் ஆயிற்று’ எனக் கூறிய காரியமாகத் தான் வெ.சா.வின் நிலை இருந்தது. இப்போது முதல் மருத்துவர்கள், தங்கள் வாதங்களைச் சற்று நேரத்திற்கேனும் நிறுத்தி, இந்த மூன்றாவது மருத்துவரின் முடிவுகளைப் பரிசீலிக்க முற்பட்டிருக்க வேண்டும் தாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த வாதங்களின் சாராம்சம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால். க.நா.சு., செல்லப்பா ஆகியோர் கண்டது, நமது இலக்கியத் துறையில் ஒரு பெரும் சரிவு; க்ஷீணம். சரிவு எனக் கொண்டதே நேற்றைய உன்னதத்தை அவர்கள் அங்கீகரித்ததனாலேயே. வெ.சா. கண்டது ஒரு சூன்யம்; அறியப்படும் தமிழ்ச் சரித்திரம் நெடுகிலும் பரவியுள்ள ஒரு சூன்யம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, நம் முதல் மருத்துவர்கள் இருவரும் தங்கள் வாதங்களைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். மூன்றாம் மருத்துவர், தமது முடிவை வற்புறுத்திக்கொண்டும் இருந்தார். கருத்துகளை விடவும் ஆளுமை முக்கியத்துவம் பெறுகிறபோது இதுபோன்ற அபத்த நாடகங்களே நமக்குப் பார்க்கக் கிடைக்கும்.
வெ.சா.வின் கருத்துலகம் விரிவானது; ஆழமானது. வாதங்களும் விளக்கங்களும் கொண்டது. தமிழ் வாசகனின் தரத்தை நீங்காது நினைவில் வைத்து, தன் கருத்துகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிரத்தையுடனும் தவறாகப் புரிந்துகொண்டுவிடக்கூடாது என்ற கவலையுடனும் முழுமையாக முன்வைத்து இயங்கி உள்ளார். கட்டுரைகளின் கலைவண்ணம் அல்ல, நிச்சய பலன்களைப் பெற்றுத் தரவேண்டிய அவற்றின் உபயோக மதிப்பே, வெளிப்பாடு நியதிகள் அனைத்தையும் இவரிடம் நிர்ணயிக்கின்றன. மிகத் தெளிவான சிந்தனை கொண்டவர் இவர். ‘பாலையும் வாழையும்’ என்ற தலைப்பைக் கொண்ட முதல் கட்டுரையிலேயே, வெகு அனாயாசமாக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடுவதைக் காணலாம். இதிலிருந்து ‘தித்திக்கும் திருட்டு மாம்பழங்கள்’ (ஓர் எதிர்ப்புக் குரல்) வரையிலுள்ள கட்டுரைகளை வரிசையாக ஊன்றிப் படிக்கும் ஒரு வாசகன், சிந்தனை உலகில் நிகழ்ந்துள்ள ஒரு தொடர்ச்சியான யாத்திரையைப் பார்க்க முடியும். இந்த யாத்திரையில், காலப்போக்கில் ஆசிரியர் தன் பார்வையில் பெற்றுள்ள விகாசங்களையும் இவ்விகசிப்பு புதிய பரிமாணங்களைத் தொட்டு, நம் கலாச்சார நோய்களுக்கு முன்னர் கூறப்பட்டுள்ள எளிய விளக்கங்கள் வெளிறிப்போகும்படி ஆழமான காரணங்களைத் தோண்டி முன்வைப்பதையும் காணலாம். ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் போதுமானதாகவும் இவர் கருத்துலகின் முழுப்பிரக்ஞை கொண்டு பார்க்கும்போது, அதிக வீச்சைப் பெறக்கூடியதாகவும் வளர்கிறது.
உதாரணமாக ஒரு மேற்கோள் :
‘இக்காலத்திய இலக்கியச் சூழலில், மற்ற சூழல்களைப் போன்று, நம் பார்வைகள், ஈடுபாடுகள் மேலோட்டமானவையாகவே இருந்து வந்துள்ளன, வருகின்றன. கதை பண்ணுகிறவன் இலக்கியாசிரியன், அவன்தான் எழுத்தாளன். பாட்டும் செய்யுளும் எழுதித் தள்ளுபவன் (இப்போது புதுக்கவிதையிலும் பாட்டும் செய்யுளும் படையெடுத்து ஆக்கிரமம் செய்துகொண்டுள்ளன) கவிஞன். வெறும் கைத்திறன், தொழில்திறன், கலை. ‘நல்லாருக்கு’ ‘நல்லால்லே’ன்னு சொல்றது விமர்சனம் – இப்படி எதையும் கொச்சைப்படுத்தி, மலினப்படுத்தி வைத்துக்கொண்டால்தான் நமக்கு, நம் ஜீரண சக்திக்கு ஏற்றதாக இருக்கிறது. இது இன்றைய நேற்றைய வியாதி அல்ல; போன தலைமுறையைச் சேர்ந்த வியாதி அல்ல; போன நூற்றாண்டைச் சேர்ந்த வியாதி அல்ல; காலம் காலமாக, நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, நம்மைப் பீடித்திருக்கும் ஒன்று இது. (‘தரிசனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள்’, பாலையும் வாழையும் பக்கம் 243)
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகள் முழுமையாகவே இருக்கின்றன. ஆனால் வெ.சா.வின் கருத்துலகுடன் விரிவான பரிச்சயம் பெற்ற பின், இக்கருத்துகளை மீண்டும் நாம் பார்க்க நேரும் எனில், அவை வீச்சும் ஆழமும் பெற்று விகசிப்பதை உணர முடியும். இவ்வாறு தனித்தும் ஒன்றையொன்று தாங்கியும் ஒன்று மற்றொன்றுக்கு வலுத்தந்து செழுமைப் படுத்தியும் அங்கங்களும் உடம்புமாய் எழுந்துள்ள இவ்வுலகம் முன்கூட்டிப் போடப்பட்ட ஒரு திட்டத்தின் வெற்றி அல்ல. சாமர்த்தியம் அல்ல. கெட்டிக்காரத்தனம் அல்ல. தன் பார்வையில் வெகு ஆத்மார்த்தமாக ஒட்டி நின்று, உண்மை உணர்வுடன் தனது கலாச்சாரப் பிரக்ஞையை விரித்தபோது எழுந்த ஆகிருதி இது.
வெ.சா.வின் கருத்துலகை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:
நமது இலக்கியம், கலைகள், தத்துவம், சிந்தனை ஆகியவற்றின் நேற்றைய, இன்றைய நிலைகளை ஆராய்ந்து அவற்றின் வெறுமையை அம்பலப்படுத்தும் கருத்துகள். (‘பாலையும் வாழையும்’, ‘பான்ஸாய் மனிதன்’, ‘சில கேள்விகள் சில பதில்கள் சில . . . தெரியாதுகள்’ முதலியன)
இலக்கியம் பற்றியும் பிற கலைகள் பற்றியும் தன் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகள். (‘இலக்கியம் எனது பார்வை’, ‘கால தேவன்’, ‘சுரணை உணர்வு’, ‘புதுமை சோதனை’, ‘ஒரு மறு விசாரணை’, ‘கண்ணாடியுள்ளிருந்து’, ‘வெளிச்சங்கள்’, ‘தரிசனமற்ற ஒரு பயணத்தின் அழியும் சுவடுகள்’ முதலியன)
கலைஞனின் இயக்கத்திற்குச் சூழல் ஆற்றும் பங்கு. (‘கலைஞனும் சூழலும்’, ‘சி.சு. செல்லப்பா – ‘எழுத்து’ சாதனைகள்’, ‘க.நா.சு.வும் கோவிந்தாக்களும்’ முதலியன)
கலை உலகை ஊடுருவி உண்மைக்கு எதிராக இயங்கும் சக்திகளைப் பற்றிய விமர்சனம். (‘என்றும் வளைந்த வால்கள் எங்களது’, ‘தித்திக்கும் திருட்டு மாம்பழங்கள்’, ‘நா. வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்’, ‘வெ.கி.யின் பரபக்க சாமிநாதனீயம்’ முதலியன)
கலைப் பார்வைக்கும் தொழில்திறனுக்குமுள்ள வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலை உணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெ.சா.வின் ஆதார முயற்சி.
நவீன விமர்சனம், மணிக்கொடி காலத்திலும் அதற்குப் பின்னும் கு.ப.ரா., புதுமைப்பித்தன் ஆகியோர் உதிரியாகத் தொட்டுப் பேசிய கட்டுரைப் பொறிகளிலும் குற்றுயிராய் வாழ்ந்துவந்திருக்கிறது. க.நா.சு.வாலும் அதன் பின் செல்லப்பாவாலும் நவீன விமர்சனம் அதற் குரிய பிரக்ஞையோடு எழுந்தது. இவ்விமர்சனக் கருத்துகளை நாம் ஆராய்ந்து பார்த்தால், அதிகமும் அவை கலையை ஒரு தனிமனிதனின் விசேஷத் திறமையாகவும் புதுமைப் பொருளாகவும் காலமாற்றங்களில் புது அழகுகளைக் காட்டித் தன்னை வாழ வைத்துக்கொள்ள வேண்டிய காரியமாகவும் கண்டதின் விளைவு என்பது தெரியவரும். ஒரு ஹிந்துவிடம், ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்று கேட்டால், ‘கடவுளைக் காணுதல்’ என்ற பதிலைத் தந்துவிட்டு, மறு நிமிஷத்திலிருந்து எப்படி அவன் தன் லௌகீக வாழ்வில் மூழ்கிப்போவானோ அதேபோல், நமது தமிழ் விமர்சகர்களும் கலை, இலக்கியத்தின் நோக்கங்கள் பற்றிய சித்தாந்தங்களைத் தொடும் போது, ‘தரிசனம்’, ‘பார்வை’, ‘தன்னைக் கண்டடைதல்’ என்றெல்லாம் சமத்காரமாகச் சொல்லிவிட்டு, அளவுகோல்களை நடை முறைக்கு விரிக்கும்போது, ‘கலைத்திறன்’, ‘உருவ அமைதி’, ‘புதுமைச் சோதனை’, ‘நடையழகு’ ஆகியவற்றிற்கெல்லாம் அதிக அழுத்தம் தந்து, தொழில் திறன் பக்கமே சரிந்துவிட்டிருக்கிறார்கள். பார்வையை, தரிசனத்தைக் கலையின் அடிப்படையாக முன்வைத்து, சித்தாந்த ரீதியான விளக்கங்களையும் இச்சித்தாந்தத்திலிருந்து எழும் அளவுகோல்களை சகல கலைத்துறைகள் நோக்கியும் விரித்து, ஒருங்கிணைந்த ஒரு கருத் துலகைத் தந்திருப்பது வெ.சா.வின் தனிச்சாதனை என்று கூற வேண்டும்.
இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாக வெ.சா.வுக்கு முன் வந்தவர்கள் எதைக் கண்டார்கள்? வ.ரா.விலிருந்து செல்லப்பா வரையிலும் எல்லோருக்கும் பொதுவாக இரண்டு தடைகள் தென்பட்டன. ஒன்று: பொழுதுபோக்கு நோக்கம் கொண்ட பெரும் பத்திரிகைகளின் வியாபகம். இரண்டு: ரசனையற்ற, ஆனால் இலக்கிய உலகில் செல்வாக்கு கொண்ட பண்டிதர்கள் மரபின்மீது கொண்டிருந்த குருட்டு பக்தி. தத்துவத்திற்கும் இலக்கியத்திற்குமுள்ள பிணைப்புக் குறித்தோ கலைக்கும் இலக்கியத்திற்குமுள்ள பரஸ்பர பாதிப்புகள் குறித்தோ அவர்கள் ஏதும் யோசித்ததாகத் தெரியவில்லை. படைப்புக்கும் சிந்தனைக்கும் எதிரான ஊனங்கள், தமிழ்ச் சரித்திரத்தில் எதுவரையிலும் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதை அவர்கள் ஆராயவும் இல்லை. ‘மணிக்கொடி’ காலத்தினருக்குப் பாரதி ஒரு லட்சியச் சிகரம். அதைத் தமிழில் மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும். அவர்கள் லட்சியம் வெகு எளிமையானது. தமிழில் சிறந்த சிறுகதை, சிறந்த நாவல், சிறந்த நாடகம் எழுதப்பட வேண்டும். அவ்வளவே. அதற்கு வழி? சிறந்தவற்றை இனம் கண்டு கூறினால், மேலும் சிறந்தவை தோன்ற ஏதுவாகும்.
இன்றைய நோய், நேற்றைய நோயின் தொடர்ச்சியா? உன்னதமான கலைப் படைப்புகள் எத்தன்மை கொண்ட கலை உள்ளங்களில் எழுகின்றன? சிந்தனையற்ற, தத்துவ உணர்வற்ற, சமூக அந்தஸ்தே இறுதி லட்சியமாய்ப்போன ஒரு ஜீவனிடமிருந்து, உன்னத கலைப் படைப்புகள் தோன்றுமா? கலைஞன் சுயபாதிப்பு கொள்ளும்போதும் சகல பிரச்சினைகளுக்கும் ஆயத்தவிடைகளைக் கக்கிக்கொண்டிருக்கும் கட்சிக்கு ஊழியம் செய்யும்போதும் அவன் கலைப் படைப்புகள் என்னென்ன மாற்றங்கள் கொள்கின்றன? இன்றைய நமது கலைச் சீரழிவு எப்போதும் நமக்கு நேர்ந்திராத தலைக்குனிவா? அல்லது நேற்றைய சரித்திரத்தின் தொடர்ச்சியா? வடமொழி இலக்கியத்தில் உள்ள கலைப்படைப்புகள் ஏன் நம்மைப் பாதிக்கவில்லை? ஆங்கிலம் திறந்த உலக வாசலை நாம் பயன்படுத்திக் கொண்டோமா? ஏன் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை? பிற சமூகத்தில் வெற்றி  தேடித் தந்த நிறுவனங்கள், முயற்சிகள் நம் சமூகத்தில் ஏன் தோல்வியுறுகின்றன? இது போன்ற பலப்பல கேள்விகளை வெ.சா.வுக்கு முன் யாரும் எழுப்பியதில்லை. அக்கேள்விகள் அவரை நம் வாழ்வில் இதுகாறும் நாம் அறிந்திராத இருட்குகைகளுக்கு அழைத்துச் செல்வதை அவர் எழுத்தின் பக்கங்களில் பார்க்கலாம். வெ.சா.வின் தனி யாத்திரை நமது விமர்சன உலகை எவ்வளவு தூரத்திற்கு முன்நகர்த்தியுள்ளது என்பதை அவர் கருத்துகளை உன்னிப்பாகப் பார்க்கும் பட்சபாதமற்ற மாணவன் தெரிந்துகொள்ள முடியும். தமிழ் வாழ்வு பற்றி முதல் தடவையாக அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அவற்றிற்கு அவர் கண்டடைந்துள்ள விடைகளும் பதில் காணாது விடப்பட்டுள்ள கேள்விகளும் மிக முக்கியமானவை.
வெ.சா.வின் நோய்க் கண்டுபிடிப்பியியலில் எட்டியுள்ள ஒரு ஆழமான பகுதியிலிருந்து சற்றே நீண்ட ஒரு மேற்கோளை நாம் பார்ப்பது, முந்தைய விமர்சன உலகத்திலிருந்து அவரது பயணம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதைக் காட்டும்.
நாட்டியம், நாடகம், சங்கீதம், சிற்பம், ஓவியம் இவை எவற்றையும் நாம் கலையாக பாவிக்கவே இல்லை. ஒரு தொழில்முறையாகத் தான் பாவித்தோம். சரித்திரம் முழுவதும் இதற்கு அத்தாட்சி. ஏன்? நம்மை நாம் தனி மனிதர்களாக பாவிக்கவே இல்லை. தனிமனித சிந்தனை என்பதே நமக்கு, பொதுவாக அநேகமாக இந்திய மரபிலும் சரி, குறிப்பாக முழுக்க முழுக்கத் தமிழ் மரபிலும் சரி, இருந்ததில்லை. கூட்டுச் செயல்முறைதான் நம் வாழ்வாக இருந்ததே அல்லாது, தனிமனித சிந்தனை அல்ல. கலை என்பது தனிமனிதன் தன் அனுபவத்தை, தான் கண்ட தரிசனத்தை, உண்மையை ஒரு சாதனத்தின் வழியாக வெளியிடுவது. இதில் எல்லாமே புதியவை. உன்னதமானவை (unique)

  1. தனிமனிதன் என்னும் ‘தான்’,
  2. ‘தான்’ கண்ட தரிசனம்,
  3. இவ்விரண்டும் வெளியீட்டுச் சாதனத்தை பாதிக்கும் வகை.

தொழில் முறையில் முதலாவதான ‘தான்’ இல்லை. மற்றவரே உண்டு. இரண்டாவது மற்றவரிடமிருந்து பெறப்படுவது. மூன்றாவதும் மற்றவரிடமிருந்து பயின்று கற்றது. இவை எவற்றிலும் உன்னதம் (uniqueness)இல்லை.
சிற்பம், ஓவியம் எதுவுமே நம்மிடம் தொழில் முறையாகவே இருந்துவந்துள்ளது. அதனால்தான் அவையெல்லாம் அநாம தேயங்களாகக் காணப்படுகின்றன. படைத்த கலைஞனின் தனி முத்திரையை நாம் பார்க்க முடிவதில்லை. இது செயல்முறையில் கலைப்படைப்புகள் தொழில் திறன்களாகவே நமக்குக் கிட்டியுள்ளன. அவன் நமக்குக் காட்டும் உலகமும் ஒரு சமூக உடன்பாட்டு உண்மையே அல்லாது கலைஞன் என்ற தனி மனிதனின் தரிசனம் அல்ல.
கலைக்கு தனிமனிதனின் தனித்த உன்னத சிந்தனை தேவை. தொழிலுக்கு பயிற்றுவிக்கப்பட்ட தொழில்திறன் தேவை. இலக்கணம் தேவை. ஆகவேதான் கலையான நாடகத்தை நாம் ஒதுக்கியுள்ளோம். தொழில் முறையான நாடக விதிகள் நம் அநுஷ்டானத்தில் உள்ளன. கலையியல் (both analytical and speculative) துறையை நாம் ஒதுக்கியுள்ளோம். இலக்கணங்களை அரவணைத்துக்கொண்டிருக்கிறோம். சிந்தனைத் துறையை ஒதுக்கியுள்ளோம். இதன் தொழில் முறை விதிகளான நீதி போதனைகளை அரவணைத்துள்ளோம். (திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை இத்யாதி.)
இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. இலக்கியத்தை நாம் கலையாக சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. அதனால்தான் விமர்சன மரபும் கலையியலும் நம் தமிழ் இலக்கிய சரித்திரத்தில் இல்லாது போய் விட்டன. இலக்கணம் ஆட்சி புரிகிறது. நம் இலக்கியாசிரியர்கள் கலைஞர் எனப்படவில்லை. புலவர் எனவே அறியப்பட்டனர். புலமை என்பது கற்ற பாண்டித்யம். தொழில் திறன். மொழியை, யாப்பைக் கையாளும் திறன். கற்று வந்த இரு புலவரிடையே ஒருவர் கவிஞர், மற்றவர் பாடம் பயின்ற வெறும் வித்வான் என்ற பாகுபாடு அன்றுமில்லை, இன்றுமில்லை. அன்றிலிருந்து நம் புலவர்கள் கற்றதெல்லாம் வெறும் language manuals, handbooks. இலக்கியமும் ஒரு தொழிலாகத்தான் நம் மரபில்  கருதப்பட்டு வந்துள்ளது. தமிழ் மரபும் சரித்திரமும் பண்பாடும் தெரியாத ஒரு சிலர்தான் இப்போது அதை கலை என்று சொல்லுகிறார்கள்.
ஆகவே சரித்திரத்திலிருந்து, இலக்கியத்திலிருந்து, நம் கலை மரபிலிருந்து நம் தமிழ் இன ஆத்மாவின் உள்மனத்தின் ஒரு குணச்சித்திரம் ஒருவாறு இப்போதைக்குத் தெரிகிறது.
இக்குணச்சித்திரம் சிந்தனையை ஒதுக்கியது. தனிமனிதனை ஒதுக்கியது. கலையை ஒதுக்கியது. அது ஏற்றுக்கொண்டவை கலையைக் கீழ் இறக்கிய தொழில்முறை. கலைஞனைக் கீழிறக்கிய தொழிலாளன் (‘சொல்லேர் உழவனை’யும் சேர்த்து). சிந்தனையைக் கீழிறக்கிய நீதி போதனைகள், விதிமுறைகள், இலக்கணங்கள். (‘சில கேள்விகள் சில பதில்கள் சில . . . தெரியாது’கள் – பாலையும் வாழையும், பக்கம் 195)
வெ.சா. ஒரு தார்மீக அடிப்படையின்மீது தன் கருத்துலகை உருவாக்கியுள்ளார். அவர் பார்வை, தருக்க வலுக்கொண்டது; ஆதாரங்களை முன் நிறுத்தியது;  உதாரணங்களோடு துலங்குவது. ஆகவே அவர் சிந்தனைகள் அநேக இடங்களில் நம் ஒப்புதலைப் பெற்றுவிடுகின்றன. அறிந்த உலகு பற்றி இவர் கூறும் கருத்துகள்மீது நாம் கொள்ளும் நன் மதிப்பு, நாம் அறியாத துறைகள் பற்றி இவர் பேசும்போதுகூட, நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்து விடுகிறது. இந்த அளவில் இவர் சிந்தனைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கின்றன. வேறுபாடுகளை, இந்த இடம் தரும் சந்தர்ப்பத்திற்கேற்ப சிறிது பார்ப்போம்.
வெ.சா. கூறுகிறார் :
நம்மிடம் இன்னும் கலைத்திறன் வாழ்ந்து வருகிறது என்பது உண்மையானால் கிட்டத்தட்ட 1800 வருடங்களுக்கு முன்னமேயே, நாம் ஸ்தாபித்த இலக்கிய வளம், இன்றைய இலக்கியத்திற்கும் அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலான ஒரு மகத்தான செழுமையை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படியில்லை. வறண்ட பாலைவனத்தைத்தான் காண்கிறோம். (பாலையும் வாழையும், பக்கம் 22)
இலக்கிய சரித்திரம் ஏற்றுக்கொள்ளும் உண்மை அல்ல இது. முந்திய வளம் அதற்கு அனுசரணையாக அதிக வளத்தைப் பிந்திய காலத்தில் தந்திருக்க வேண்டும் என்ற வாதம் சரியில்லை. உலகில் எங்குமே செழுமையிலிருந்து அதிகச் செழுமை என்னும் ஏணியில் இலக்கியம் ஏறிச் சென்றதில்லை. ஆதி கலைஞர்கள் நிறுவிய சிகரங்கள் (ஹோமர், தாந்தே, கிரேக்க நாடக ஆசிரியர்கள், ஷேக்ஸ்பியர்) இன்றும் தாண்டப்படாதவை என்பது விமர்சன அறிஞர்கள் கருத்து. நேற்றைய செழுமை இன்றைய வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கிறதோ என எண்ணும் அளவுக்குப் பண்டை வளம் கொண்ட மொழிகளில் சரிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டை வளம் என்று ஏதும் சொல்ல இயலாத பல மொழிகளில், இலக்கியம் வெறுமையில் வேர்விட்டுப் படர்ந்து விரிந்திருக்கிறது. மரபின் பின்பார அழுத்தங்கள் அற்ற நிலை, நவீன இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறதோ என்று எண்ணவும் இடமுண்டு. விட்டுவிட்டுப் பற்றிக்கொண்டு எரியும் காட்டுத் தீயின் தன்மைகளைக் காட்டுகின்றன இலக்கியச் சரித்திரங்கள். மேதாவிலாசங்கள் சுடர்விடும்போதோ இலக்கிய வளர்ச்சி காலத்தைத் தாண்டிக் குதிக்கிறது. தமிழில் முதல் சிறுகதை எழுதிய வ.வே.சு. அய்யருக்கும் புதுமைப்பித்தன், மௌனி ஆகியோருக்குமுள்ள இடைவெளி வெறும் பதினைந்து வருடங்களே. பின்னவர்கள் தோன்றியபோது இச்சிறிய இடைவெளிக்குள்ளாகவே தமிழ்ச் சிறுகதை உலக அரங்கில் வைக்கும் தரத்தைப் பெற்றுவிட்டது.
பண்டை இலக்கியத்தை நாம் பொதியாகச் சுமந்துவருகிறோம் என வெ.சா. கூறுவதில் உண்மையுண்டு. அதே சமயம் பொதியாகச் சுமக்க மறுத்த ஒரு சிந்தனைத் தொடர்ச்சியும் நமக்குண்டு. ராஜம் அய்யர், பாரதி, வ.வே.சு. அய்யர், டி.கே.சி., புதுமைப்பித்தன்  போன்ற பல கலைஞர்கள் தமிழ் இலக்கியத்திலிருந்து தங்கள் சுயபார்வை தேர்வு செய்த பகுதிகளையே சிலாகித்தார்கள். திருக்குறள் வாழ்வது போல் திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் வாழவில்லை. ஆசாரக் கோவையும் பழமொழியும் வாழவில்லை. தராதரம் தெரியாத, விமர்சனப் பிரக்ஞை சிறிதும் அற்ற பேராசிரியர்கள் பொதி சுமக்கிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்குக் கலைஞர்கள் பொதி சுமக்க மறுத்ததும் உண்மை. பாதகமான அம்சங்களை அழுத்தமாகக் காணும் வெ.சா. நம்பிக்கைக்குரிய அம்சங்களை – அவை மிகக் குறைவாக இருப்பினும் சரி – கணக்கிலெடுத்துக்கொள்ளத் தவறிவிடுவதால் அவர் எழுத்துப் பாங்கில் சில இடங்களில் சமநிலை பாதிக்கப்பட்டுக் கசப்பின் பூச்சுப் படர்ந்துவிடுகிறது.
நமது இன்றைய இலக்கியத் தரம் உலக இலக்கியத் தரத்திலிருந்து வெகுவாகப் பின்தங்கிவிட்டது எனக் க.நா.சு. கூறிவந்தார். இவ்வுண்மையை வெ.சா. பல துறைகளுக்கும் விரித்து, பத்திரிகைத் துறை, திரைப்படம், ஓவியம், சிந்தனை, தத்துவம் ஆகியவற்றிலும் நமது சரிவை எடுத்துக்காட்டியுள்ளார். உலகக் கலைவளம் பற்றி ஏகதேசமான அறிவு கொண்டவர்கள் அவ்வுண்மையை உணர முடியும். ஆனால் தமிழினத்தை, இந்திய மொழி இலக்கியங்களுக்குள்ள பொதுவான சரிவு தவிர, சில தனிக்குறைகளும் ஆட்கொண்டிருப்பதாகவும் நம்மை ஏதோ ஒரு விசித்திர விதி இயக்குவது போலவும் வெ.சா. கூறுகிறார். வெளிப்படையாகக் கூறாத நேரங்களிலும் கூட, தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி இவர் விமர்சிக்கும் போதெல்லாம், அடிக்குர லாக இத்தனிக்குறை பற்றிய கரிப்பு வெளிப்படுகிறது. தமிழ்க் கலாச்சார நிலைகளை ஆராயும் ஒரு கட்டுரை (‘பான்ஸாய் மனிதன்’) ‘எருமைக்கு எதற்கு நீச்சல் குளம்?’ என முடியும்போதும், ‘நான் சொல்லவில்லையா? அரிஸோனா பாலைவனம் என்று’ என்ற வாக்கியத்தைக் ‘காலதேவன்’ கட்டுரையில் இடையிடையே மீட்டும்போதும் ‘எம்.ஜி.ஆர். என்னும் விசித்திரம் அதன் விகசிப்பைக் காணத் தமிழ் மண்ணையே தேர்ந்தெடுத்துள்ளது’ என்று பொருள்படக் கூறும்போதும் இக்கரிப்பின் கருத்துருவங்களில் ஒரு சிலவற்றைக் காணலாம்.
இந்தியா சகல துறைகளிலும் வெகுவாகப் பின்தங்கிப்போனது உண்மை. பொருளாதாரம், தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் நம் தாழ்வை ஆராய்ந்து பல்வேறு பார்வைகளை முன்வைத்துள்ளனர். இப்போது சரிவுக்குத் தமிழும் ஆளாகிப் போயிருக்கிறது. அதிலும் தனிச்சரிவு பெற்றுவிட்டது நம் இனம் எனக் கூறுவதற்கு ஏதும் ஆதாரம் இல்லை. இந்தியப் பின்னணியில், எந்த ஒரு மொழி இலக்கியத்தையும் மற்றொரு மொழி இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, இரு தரப்பிற்கும் சாதகமான பாதகமான சில அம்சங்கள் இருக்கக்கூடும். ஒரு சில துறைகளில் பிற மொழியில் இருக்கும் அளவுக்குக்கூடத் தமிழில் இயக்கங்கள் இல்லை. உதாரணம், நவீன நாடகம். சிறுகதையில் தமிழ் பிற மொழிகளைவிட அதிக சாதனை காட்டியுள்ளது எனக் கருத இடமுண்டு. அதிக வளர்ச்சி பெற்றுள்ள இந்தி, வங்காள நவீன இலக்கியங்களுடன் முழுமையாக ஒப்பிடப்படும்போதுதான் தமிழ் ஏதும் தனிக்குறைகள் கொண்டுள்ளதா என்பது தெரியவரும். என்னளவில் நவீன மலையாள இலக்கியத்துடன் தமிழை ஒப்பிடும்போது, தனிக்குறைகள் ஏதும் தமிழ் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, நம்பிக்கைக்குரிய காரணங்களும் அதிக அளவில் தமிழில் இருப்பதாகப்படுகிறது. தமிழில் ராஜம் அய்யரிலிருந்து இன்றுவரையிலும் சில சிறந்த கலைஞர்களின் ஆத்மார்த்தமான இயக்கம் நீடித்து வந்துகொண்டிருக்கிறது. உள்ளார்ந்த நம்பிக்கைகளை முன்வைத்து இயங்கியவர்கள் இவர்கள். தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறான இயக்கங்களும் அவற்றினளவில் அவை உயர்ந்தவையாக இருந்தாலும் சரி, வெற்றி முகம் தேடித் தரக்கூடியனவாக இருந்தாலும் சரி, அவற்றைப் பொதுவாக நிராகரித்து, அதன் காரணமாகப் பெற்ற வெகுஜனப் புறக்கணிப்பையும் திரணமாக மதித்து வந்திருக்கிறார்கள். இலக்கியத்தை சுயதரிசனத்திற்குரிய சாதனமாகக் கண்டதன் விளைவு இது. இவர்களது பார்வை புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, ராமாமிர்தம் ஆகியோரிடத்தில், தமிழிலிருந்து அவர்களுக்குச் சொந்தமான தமிழை எழுப்பியிருக்கிறது. ஒவ்வொரு வாக்கியமும் அவர்கள் பார்வையின் தனித்துவத்தைக் காட்டக்கூடியது. ஆசிரியரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மேல் அட்டை அகற்றப்பட்டுவிட்டால், மலையாள வசனப் படைப்புகளின் உள்ளடக்கத்தை வைத்து, அவ்வுள்ளடக்கத்தில் ஒளிரும் பார்வையை வைத்து, எழுதியது யார் என இனம் கண்டுகொள்வது சாத்தியம் இல்லை – ஓரிருவரைத் தவிர. அங்கு இலக்கிய உலகத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதப்படுகிறவர்கள்கூட, சமூகக் காற்று, மோஸ்தர் காற்று, அரசியல் காற்று ஆகியவை அடிக்கும் திசைகளை அவதானித்துப் பாய்மரம் விரிப்பவர்கள். எம். ஜி. ஆர். கோமாளிதான். ஆனால் இவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிடும் பெரிய கோமாளிகள் மத்திய அமைச்சரவையிலிருந்து உலக அரசியல் அரங்கு வரை பல இடங்களிலும் இருக்கிறார்கள்.
‘எழுத்து’வின் சாதனையை வெ.சா. அழுத்தமாக எடுத்துக்காட்டி இருக்கிறார். புதிய கலை உணர்வுகளையும் அவை இயங்குவதற்கான தளத்தையும் ‘எழுத்து’ கட்டி வளர்த்தது. ‘எழுத்து’ உருவாக்கிய இலக்கியச் சூழல் பற்றியும் அச்சூழல் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தந்த பலங்கள் பற்றியும் விரிவாகக் கூறும் வெ.சா. ‘எழுத்து’ தோன்றுவதற்குச் சாதகமாக நின்ற சூழல் பற்றியும் அதில் க.நா.சு. ஆற்றிய பங்கு பற்றியும் ஏதும் கூறவில்லை.
க.நா.சு. தன் விமர்சனக் கருத்துகளைப் படிப்பின் மூலமும் சிந்தனையின் மூலமும் முழுமையாகக் கண்டிருந்தவர். அக்கருத்துகளின் ஒரு பகுதி, தமிழ்ப் பின்னணிக்கு அவசியமானவை என அவர் கருதியவை, எழுத்து வடிவம் பெற்றன. அறிந்திருந்த கருத்துகளை அவர் பதிவு செய்தாரே அன்றி எழுத்தின் மூலம் அதிக வீச்சையோ தேடலின் புதிய பரிமாணங்களையோ அவர் அடையவில்லை.  அவர் சொல்ல எண்ணிய கருத்துகள் அளவில் மிகக் குறைந்தவை. ஆனால் அடிப்படையானவை. இக்கருத்துகளை அவர் தன் இயக்கத்தின் ஆரம்ப ஐந்தாண்டுகளுக்குள்ளேயே சொல்லி முடித்தாயிற்று. ‘இலக்கிய வட்ட’த்தின் தலையங்கங்களைப் பார்ப்பவர்களுக்கு, சொன்னவற்றிற்கும் மேலாக, புதுசாக ஏதும் சொல்ல அவருக்கு இல்லை என்பது தெரியவரும். ஏகதேசமாய் ஐம்பதுகளின் மத்தியிலிருந்து இவர்  தன் கருத்துகளை எழுத்தின் மூலமும் இலக்கிய அன்பர்கள் மத்தியிலும் சிறு கூட்டங்களிலும் இடைவிடாது சொல்லிக்கொண்டு வந்தார். புதுக் கவிதையும் (இச்சொற்றொடரை அன்று அவர் உபயோகிக்கவில்லை) சிறு பத்திரிகையும் தமிழில் தோன்ற வேண்டிய அவசியம் பற்றியும் அவர் சொல்லிவந்தார். சூழ்நிலையின் சுரணையற்ற தன்மையைச் சிறிதும் மதியாது, புறக்கணிப்பைப் பொருட்படுத்தாது நவீனத் தமிழ் இலக்கியக் கலைஞர்களின் பெயர்களை முன்வைத்தார். பரபரப்பையும் விளம்பரத்தையும் பார்த்து ஓடும் எவரும் செய்யக் கூடிய காரியங்கள் அல்ல இவை. வாசகன் தன் படிப்பிலிருந்து பெறும் சுய அனுபவத்தின் மூலம் தனது இலக்கியப் பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது அவர் தீர்மானம். அவரது விளக்கங்கள் இந்த வரையறைக்குள் செயல்படுபவை. இது போதும், போதாது என ஒருவர் கூறுவது வேறு விஷயம். ஆனால் நவீனத் தமிழ் இலக்கியம் என்று கருதப்பட்டு வந்த பதரிலிருந்து நம் கலைஞர்களைப் பொறுக்கி முன்வைத்துவிட்டது மிக முக்கியமான பணி. அன்று அவர் சொன்ன – அவர் மட்டுமே சொன்ன – பெயர்கள்தாம் தமிழ் இலக்கியத்தின் முதல்தரக் கலைஞர்கள் என்பது பின்னர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று அவர் உருவாக்கிய சூழலின் விளைவாகவே 1959இல் மௌனியின் கதைகளும் ‘எழுத்து’வும் தோன்ற முடிந்தது. இந்நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கவும் வரவேற்கவும் தெரிந்திருந்த ஒரு சிலரேனும் அன்று உருவாகியிருந்தார்கள் என்றால் அது க.நா.சு.வின் பாதிப்பில் ஏற்பட்ட விளைவு.
‘எழுத்து’வைத் தமிழின் தலைசிறந்த சிறுபத்திரிகையாக வெ.சா. கண்டிருப்பது சரிதான். செல்லப்பா வெளிப்படுத்திய பொறுப்பு, கலை நோக்குக்கு எதிரான தீய சக்திகள் அனைத்தையும் அமிழ்ந்து நின்று அவர் கவனித்தது, இச்சக்திகளை எதிர்கொள்ளும்போது அவர் காட்டிய பொறுமை, விமர்சனக் குரலாய்த் தனது பத்திரிகையைத் தோற்றுவித்திருந்த போதிலும் எதிர்பாராத விதமாய்ப் புதுக்கவிதைகள் முளைவிட்டபோது சட்டென இனம் கண்டு, இடம் தந்து வளர்த்த பாங்கு, சூடான இலக்கியப் பிரச்சினைகளை விவாதிக்கும் போதுகூட மனித உணர்வுகளுக்கு அவர் கொடுத்த மதிப்பு (வெ.சா.விடம் காணக்கிடைக்காத ஒரு குணம்), ஆனால் அதே சமயம் வளைந்து கொடுக்காமல் தன் கருத்துகளுக்காக அவர் போராடிய முறை எல்லாம் தமிழின் தலைசிறந்த ஆசிரியர் ஸ்தானத்தை அவருக்கு அளித்திருக்கின்றன.
ஆனால் ‘எழுத்து’வின்மீது கூரான விமர்சனப் பார்வை செலுத்த வேண்டிய அவசியமும் நமக்குண்டு. ஏனெனில் உன்னத முயற்சிகளின் குறைகளை ஆராய்வதன் மூலமே நம் மதிப்பீட்டுக் கருவிகளைச் செப்பனிட்டுக் கொள்ள முடியும். சிறுபத்திரிகைக்கான தமிழ் மரபை ‘எழுத்து’வின் நிறைகுறைகளைப் பார்த்தே உருவாக்க முடியும்.
செல்லப்பா தன் சமகாலத்தவர்களான பழைய பெரியவர்களின் படைப்புகளை வெளியிட்டபோதெல்லாம் அவரது விமர்சனத் தராசு கோணிக்கொண்டுவிட்டதை ‘எழுத்து’வின் பக்கங்கள் காட்டும். ‘வியாபாரச் சூழலில் ஓய்ந்துவிட்ட பழைய எழுத்தாளர்கள், ‘எழுத்து’வின் மூலம் மீண்டும் பிரசுரம் பெற்றார்கள்’ என வெ.சா. கூறுகிறார். ஆனால் என்ன தரத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர்கள் பிரசுரம் பெற்றார்கள்? ‘எழுத்து’வில் புதுச்சாதனம் கண்டு இயங்கிய க.நா.சு., செல்லப்பா, பிச்சமூர்த்தி தவிர மீண்டும் இடம்பெற்ற பழைய பெரியவர்கள், பழைய பெரியவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இடம்பெற்றார்கள். ‘இன்று பின் திரும்பிப் பார்த்து, புதுக்கவிதைகளில் இரண்டாம் பட்சமானவற்றையும் ‘எழுத்து’வில் செல்லப்பா வெளியிட்டுள்ளமைக்கு அவரை விமர்சிப்பது முறையல்ல’ என வெ.சா. கூறும் கருத்தோடு எனக்கு உடன்பாடு. சிக்கல்கள் நிறைந்த, புகை மூட்டங்கள் நிறைந்த புதுக் கவிதை அன்று ஒரு புதுப்பயிர். ஆனால் இந்த நியாயம் பழைய பெரியவர்கள் பிரசுரம் பெற்றதற்குச் செல்லுபடியாகாது. ஏனெனில் இவர்கள் எழுத்துகளின் தரம் ஒரு ஆரம்பப் பரிசீலனைக்குக்கூட ஈடு தராதது. எழுத்தின் தரத்தைவிட எழுதியவர்கள் பெயர்கள்தான் முக்கியம், அவர்கள் இலக்கிய உலகைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுவதுதான் முக்கியம் என்ற ஊனம் ‘எழுத்து’வில் ஆரம்பித்து பின்னால் வந்த சகல சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து, இன்று ஒரு பத்திரிகையாசிரியருக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்ற, இலக்கியப் புள்ளிகளின் பெயர் தெரிந்திருந்தால் மட்டும் போதும் என்றாகிவிட்டிருக்கிறது.
‘என்னைப் பற்றி’ என்ற கட்டுரையில், ‘எழுத்து, வாழ்க்கையின் உன்னதத்தைக் காண, மனிதன் தன் பூரணத்தை எய்துவதற்கான’ ஒரு சாதனம் என்றும் தன்னளவில் தனக்கு வாழ்க்கையே உண்மையான முழுமையான சாதனம் என்றும் பிற சாதனங்கள் எல்லாம் முழுமையின் அங்கங்கள் என்றும் வெ.சா. கூறுகிறார். அத்துடன் அவர் தன்னைச் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் தான் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள காலத்தைப் பற்றியும் தன் பார்வைகளை முன்வைத்து வருவதாகக் கூறுகிறார். நம் முன்னுள்ள இவரது கருத்துலகில் வெ.சா.வின் கலாச்சாரப் பிரச்சினைகள் மட்டுமே வெளியாகின்றன. பிற சாதனங்கள் வாழ்வின் ஒரு அங்கம் எனில், வாழ்க்கையையே ஒரு சாதனமாக இவர்  கருதுகிறார் எனில், இவரது கருத்துலகம் வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளைப் பிரதிபலிக்காமல் கலாச்சார முகங்களை மட்டும் பிரதிபலிப்பது ஏன்? வாழ்க்கை ஒரு சாதனமாகிறபோது ஒருவனது பார்வை இயற்கையாகவே வாழ்வின் முழுத்தளத்திற்கும் விரிய வேண்டும்.
இன்று நம் மக்களின் பெரும்பான்மையோருக்குக் கலாச்சார வாழ்வு அன்னியமானது. உயிர்தரித்தலுக்கு வழிகாணும் முறைகளிலும், அங்கு எழும் பிரச்சனைகளிலும் இவர்கள் அழுந்திக் கிடக்கிறார்கள். இவர்களது ஜீவாதாரப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள்  சார்ந்தவை; பொருளாதாரப் பிரச்சினைகள் சார்ந்தவை; பின் இதன் நீட்சி என அமையும் நடைமுறை அவலங்கள். இவை பற்றிய  கவலைகளில் பங்கு பெறாத நேரத்திலேயே, கலைகள் அல்ல, இலக்கியம் அல்ல, முழுவாழ்வே தனது சாதனம் என்று வெ.சா. கூறுவது முரண்பாடாக இருக்கிறது.
கலாச்சாரத் துறையைத் தனது சாதனமாகக் கொண்டவரே வெ.சா. கருத்துலகில் இவர் இயக்கத்தைப் பார்க்கும்போது, இவரது இயற்கையான காரியத்தில், சுதர்மத்தில் இவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியும். சாதனத் தேர்வுகள் உள்ளார்ந்து நிற்கும் ஜீவசக்தியின் தன்மையைப் பொறுத்தவை. ஒரு தேசத்தின் அவசரத் தேவைகளுக்கு அனுசரணையாக அமையக் கூடியவை அல்ல. ஓவியன் தன் வேலைகளைவிட்டு எலிகளைக் கொல்வதன் மூலம் இந்திய விவசாயிக்கு அதிக சேவை செய்யமுடியும் எனும் கொச்சைப் பேச்சுண்டு. ஆனால் எவனும் தன்னில் இருப்பவற்றில் மிக உன்னதமானதை வெளிப்படுத்துவதன் மூலம்தான் தனக்கும் தன் காலத்திற்கும் சேவை செய்கிறான். இதே காரியத்தைத்தான் வெ.சா. தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார்.
தமிழ்க் கலைத்துறைகள்மீது வெ.சா. கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன்; தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சா.வின் உலகமோ புரிந்துகொள்ளும் ஆற்றலைத் தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
ஆகவே, அங்கீகாரத்திற்குக் காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான். காலம் சுற்றி வந்தாவது சத்தியத்தை முத்தமிடும் என்பது கலைஞனின் நம்பிக்கை. இவ்வுண்மை பொய்யென நிரூபிக்கப்பட்டாலும் அவன் தனது ‘மூட’ நம்பிக்கையிலேயே உறுதியாக நிற்பான்.

வெங்கட் சாமிநாதனின் ‘ஓர் எதிர்ப்புக் குரல்’ கட்டுரைத் தொகுப்பின்
முன்னுரை, ஸ்ரீமணி பதிப்பகம், திருச்சுழி, 1978

வைகை, 1978

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.