சமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த Being Mortal என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த நூல், கர்ணன் மகாபாரதத்தில் சொன்ன ஒரு வாக்கியத்தோடு தொடங்குகிறது
I see it now
This world is swiftly passing.
இந்த வார்த்தைகளைப் படித்த பின்பு என் மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. அந்த வார்த்தைகளையே சுற்றியது.
நான் இப்பொழுது காண்கிறேன்
இந்த உலகம் வேகமாக நகர்வதை.
காலம் நகர்வது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு தருணத்தில் எல்லா நினைவுகளும் கூடிவிடுகின்றன..
கம்புயூட்டர் டிங் என்று ஒலி எழுப்பியது. மின்னஞ்சல் ஒன்று வந்து கிடந்தது. ’அக்டோபர் 21 வெங்கட் சாமிநாதன் காலமாகிவிட்டார்.’ புத்தகத்தை மூடிவைத்துவிட்டு. மனைவியிடம் செய்தியை சொன்னேன். என் மனைவி பெருமதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் அவர். அன்று ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை. அவர் நினைவாகவே இருந்தது.
கம்புயூட்டரில் தேடிப்பார்த்தேன். அவருடனான கடைசி கடிதப் போக்குவரத்து 2012ம் ஆண்டுடன் நின்றுவிட்டது. அந்த வருடம்தான் அவர் சென்னையை விட்டு மகனுடன் தங்க பெங்களூர் புறப்பட்டார் என்று நினைக்கிறேன். தன்னுடைய புதிய தொலைபேசி எண்களைத் தந்திருந்தார். அக்டோபர் 2, 2015 அன்று, மூன்று வருடங்கள் கழித்து, அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. இதே மாதிரியான மின்னஞ்சலை வேறு நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தார் என்று பின்னர் அறிந்தேன். வழக்கமாக அவருடைய மின்னஞ்சலில் ஒரு முறைப்பாடு இருக்கும். இதிலே இரண்டு முறைப்பாடுகள் இருந்தன. ’திருமாவளவன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அவருடைய உடல் நிலை பற்றி ஒருவரும் எனக்கு எழுதவில்லை. ரொறொன்ரோ நன்பர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமமிருக்கிறது. யாராவது அவரைப்பற்றிய செய்தியை சொல்லுங்கள்.’ இரண்டாவது முறைப்பாடு ஜிமெயிலைப் பற்றியது. ’அவர்கள் செயல்முறையை மாற்றிவிட்டார்கள். எப்படி தேடுவது என்று தெரியவில்லை’. இப்படி எழுதியிருந்தார்.
நான் அப்பொழுது பொஸ்டனில் இருந்தேன். என் மனைவியின் அறுவை சிகிச்சை அக்டோபர் 2 அன்றுதான் நடந்தது. அதனால் உடனேயே பதில் போடமுடியவில்லை. ரொறொன்ரோ நண்பர்களைத் தொடர்புகொண்ட பின்னர் வெ.சாவுக்கு இப்படி எழுதினேன். ‘திருமாவளவனின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லை என அவர் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் சொல்கிறார்கள்.’ சில நாட்களில் திருமாவளவன் இறந்துபோனார். வெ.சா அந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.
வெ.சாவுடனான முதல் தொடர்பு எப்படி கிடைத்ததென்று இப்பொழுது யோசித்து பார்க்கிறேன். ’அக்கிரகாரத்தில் கழுதை’ என்ற திரைப்படப் பிரதி நூலைப் படித்தபோது எனக்கு கிடைத்த ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். புத்தகத்தின் நேர்த்தி. இரண்டாவது வெ.சாவின் நேர்மை. ஒருவருமே செய்யாத ஒரு காரியத்தை அவர் செய்திருந்தார். அந்தப் புத்தகம் வெளிவர முன்னர் அவருடன் நல்ல உறவு இல்லாத, கருத்து மோதல்களை பெரிதாக்கும் எழுத்தாள நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் நூலின் கையெழுத்துப் பிரதியை கொடுத்து அவர்கள் அபிப்பிராயங்களை எழுதி நேரே பதிப்பாளருக்கு அனுப்பச் சொல்லி வெ.சா கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நண்பர்கள் தங்கள் கடிதங்களில் என்ன எழுதியிருப்பார்கள் என்பது வெ.சாவுக்கு தெரியாது. புத்தகம் வெளிவந்த பின்னரே அவரும் வாசகர்களோடு அதைப் படித்து அறிந்துகொண்டார். . அதிலே சில கடிதங்கள் புத்தகத்தில் உள்ள குறைகளை பெரிதாக்கி விமர்சித்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்தப் புத்தகத்தில் இத்தனை மோசமான விமர்சனங்களை சேர்த்திருக்கிறாரே இந்த மனிதர் என்று நினைத்தேன். . பாதகமாக வந்த கடிதங்களை அவர் வெளியிடவேண்டிய அவசியமே இல்லை; ஆனாலும் வெ.சா துணிச்சலுடன் இணைத்திருந்தார். அவருடைய அந்த நேர்மை எனக்குப் பிடித்தது.
அந்த புத்தகத்தை படித்த பின்னர் அவருக்கு முதல் கடிதம் எழுதினேன்.. அப்படித்தான் எங்கள் தொடர்பு ஏற்பட்டது என நினைக்கிறேன்.
இரண்டு பெரிய தமிழ் எழுத்தாளர்கள் கம்புயூட்டரில் எழுதத் தொடங்கியது. 2002, 2003 அளவில்தான். ஒன்று சுந்தர ராமசாமி, அடுத்தது வெங்கட் சாமிநாதன். இருவரும் ஆரம்பத்தில் மின்னஞ்சல்கள் எழுதி தங்கள் கம்புயூட்டர் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டது என்னுடன்தான். கலிஃபோர்னியாவில் சு.ரா தங்கியிருந்தபோது அவர் வீட்டுக்கு நான் மடிக்கணினியுடன் சென்று கம்புயூட்டரின் ஆச்சரியங்களை அவருக்கு காட்டினேன். சு.ரா சீக்கிரத்தில் மின்னஞ்சல் எழுதவும் கம்புயூட்டரில் கட்டுரைகள் படைக்கவும் ஆரம்பித்தார். வெ.சா பிரயாசைக்காரர். அதில் வேகமாக முன்னேறினார். நான் வெ.சாவுக்கு எழுதுவேன் சு.ரா எத்தனை அருமையாக கடிதங்கள் எழுதுகிறார் என்று. அதே சமயம் சு.ராவுக்கு வெ.சாவின் முன்னேற்றத்தை புகழ்ந்து தள்ளுவேன். இருவருக்குள்ளும் ஒரு ரகஸ்யப் போட்டி நடந்தது.
2003ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுவுக்கு வெ.சா தேர்வுசெய்யப்பட்டார். அந்த தகவலை நான் தொலைபேசியில் அவருக்கு தெரிவித்தபோது அவர் நம்பவே இல்லை. அது உண்மைதானா என்று திரும்பத் திரும்ப கேட்டு உறுதி செய்தார். ’இலக்கியக்காரருக்கு விருது கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருவருமே விமர்சகருக்கு விருது கொடுப்பதில்லையே’ என்றார். நான் ’உண்மைதான். எழுத்தாளர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். விமர்சகருக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் சிலை கிடையாது. ஆனால் நாங்கள் அதை மாற்றுகிறோம்’ என்றேன். அவர் விடவில்லை. ‘என்னிலும் சிறந்த எழுத்தாளர்கள் உள்ளார்களே. என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள்?’ என்றார். கனடா வந்தபோது ஒருமுறை ஸ்காபரோ வீடு ஒன்றின் வாசல்படியில் தடுக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவிட்டார். நாங்கள் பதறியபடி அவரை தூக்க ஓடினோம். சில மாதங்களுக்கு முன்னர்தான் அவருக்கு முழங்காலில் அறூவைசிகிச்சை நடந்திருந்தது. தானாகவே அவசரமாக எழும்பி உடையை தட்டிவிட்டு சொன்னார், ‘அடுத்த வருடமாவது காலில் இரும்பு பொருத்தாத எழுத்தாளரைக் கண்டுபிடித்து அவருக்கு விருது கொடுங்கள்.’
கனடா பயணத்திற்கான ஆயத்தங்கள் சம்பந்தமாக நீண்ட நீண்ட மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம். அவருடைய ஒவ்வொரு கடிதமும் முறைப்பாடுடன்தான் ஆரம்பிக்கும். கடவுச்சீட்டு, விசா, விமான டிக்கட், மருத்துவக் காப்புறுதி என் ஒவ்வொன்றாகக் கடக்கவேண்டும். அவர் எழுப்பும் பல கேள்விகளுக்கு நான் பதில் எழுதியபடியே இருந்தேன். ஒருமுறை எரிச்சலில் இப்படி எழுதினார். ‘நீங்கள் ஒரே தடவையாக எல்லா விவரங்களையும் தருவது கிடையாது. ஒவ்வொன்றாகத் தருகிறீர்கள்.’ முழு விவரங்களையும் உடனேயே கொடுத்திருந்தால் அவர் தலை சுற்றியிருக்கும். ’ஐயா, விருது வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதியிருப்பார்.
அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு நானும், பேராசிரியர் செல்வா கனகநாயகமும், செல்வமும், செழியனும் சென்றிருந்தோம். வரவேற்பு கூடத்தில் ஒவ்வொருவராக ஆட்கள் வெளியே வர அவர்கள் முகங்களை ஆராய்ந்துகொண்டு நின்றோம். எங்களில் ஒருவருக்கும் அவரை நேரில் தெரியாது. படத்தில் கண்டதுதான். பெரிய தள்ளுவண்டியில் இரண்டு சூட்கேசுகளை அடுக்கி தள்ளியபடியே வெளியே வந்தார். மலர்கொத்து கொடுத்து வரவேற்றோம். குடிவரவில் ஏதாவது பிரச்சினையா என்று கேட்டபோது ’ரொறொன்ரோ பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தை நீட்டினேன். அவர்கள் அதைத் திறந்து பார்க்கக்கூட இல்லை. வருக வருக என்று வரவேற்றார்கள்’ என்றார்.
வெ.சா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். அவர் யாருக்கும் பணியாமல் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது. அந்த விருதுக்கு தகுதி பெற்றவராக அவர் தன்னைக் கருதவில்லை. ஒரு விமர்சகனுக்கு தமிழ் இலக்கியச் சூழலில் முதன்முறையாக ஒரு விருது கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு மகிழ்ச்சி. அன்று பேச்சைக் கேட்டவர்களில் ஒருவருக்குகூட அவருடைய வார்த்தைகள் இருதயத்தில் இருந்து வந்தவை என்பதில் ஐயம் இருக்க முடியாது.
கனடாவில் இருந்தபோது மூன்று தடவை என் வீட்டுக்கு வந்தார். அவருடைய துணிகளை சலவை மெசினில் போட்டு கழுவி உலர்த்தி மனைவி மடித்து தருவார். என்னுடைய மனைவியின் சமையல் திறமை பேசும் படியாக இருக்காது. அவர் சமையலை பாராட்டியபடியே உண்டார். அவர் வைத்த ரசத்தை புகழ்ந்தார். வெ.சா வெறுமனே புகழமாட்டாராகையால் அவருடைய வார்த்தைகளை மனைவி பெரிதாக மதித்தார். இந்தியா திரும்பிய பின்னரும் ஒவ்வொரு கடிதத்திலும் மனைவியை விசாரித்து எழுத மறந்தாரில்லை. .
சில காலங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ’தென்றல்’ பத்திரிகை வெ.சாவை நேர்காணல் கண்டு எழுதியது. அவர்கள் வெ.சாவின் படத்துடன் அவருடைய மனைவியின் படத்தையும் வெளியிட்டனர். எனக்கு அதீத மகிழ்ச்சி. உடனேயே வெ.சாவுக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு, படத்தை வெளியிட்ட தென்றல் பத்திரிகையையும் பாராட்டினேன். எந்த ஓர் எழுத்தாளர் வீட்டிலும் எழுத்தாளரின் மனைவி படும் பாட்டை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பல மனைவியருக்கு கணவர் எழுத்திலே மதிப்பில்லை. எத்தனையோ இன்னல்களை மனைவியின் தலைமீது திணித்துவிட்டுத்தான் ஓர் எழுத்தாளர் எழுதுகிறார். மனைவியின் படம் தென்றலில் வெளியாகி சில மாதங்களுக்குள்ளேயே அவர் மனைவியை இழக்கவேண்டி நேர்ந்தது. ஆனாலும் அதற்கு முன்னர் அவர் மனைவிக்கு சிறப்புச் செய்தது மன ஆறுதலை தந்தது.
வெ.சா கனடாவிலிருந்து ஒரு சூட்கேஸ் நிறைய கனடிய எழுத்தாளர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்களை காவிக்கொண்டு திரும்பினார். . அவர் திரும்பும் முன்னர் அவருடைய இரண்டு புத்தகங்களில் கையெழுத்து வைத்து எனக்கு அளித்தார். நான் ஏற்கனவே வாசித்த புத்தகங்கள்தான் ஆனாலும் கையெழுத்திட்ட விலைமதிக்கமுடியாத அந்தப் புத்தகங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டேன். வெ.சா கனடாவில் இருந்த காலங்களில் என்னுடைய எழுத்தைக் குறித்தோ, புத்தகங்களைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசவில்லை. எனக்கு நேரிலே கேட்கத் தயக்கம். அவர் வாயிலிருந்து பொய் வராது. ஏதாவது மோசமாகச் சொல்லிவிட்டால் என்ற பயம்தான். அவர் விமர்சகர் ஆயிற்றே. ‘தேர்ந்த தச்சு வேலைக்காரர் கருங்காலி மரத்தில் கலைநயத்துடன் செய்த நாற்காலி கனமாகவும் ஸ்திரமாகவும் வழுவழுப்புடனும் இருக்கிறது. ஆனால் மூன்று கால்களில் நிற்கிறது’ என்று குறும்பாக ஏதாவது எழுதிவைத்துவிடப் போகிறார் எனப் பயந்தே. என் புத்தகங்களை நான் அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர், எங்கள் கடிதப் போக்குவரத்து நின்ற பின்னர், என் எழுத்தை பற்றி சிலாகித்து பத்திரிகையில் எழுதியிருந்தார்.
வெ.சாவை சந்திக்க வந்த இருளாண்டி என்பவர் ஒருமுறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘நாங்கள் வந்தது உங்களோடு சண்டைபோட. அன்று நீங்கள் எவ்வித தற்காப்பு உணர்வுமின்றி மனம் திறந்து பேசியது எங்கள் மனதை மாற்றிவிட்டது. ஒளிக்க உங்களிடம் ஏதுமில்லை. பயப்படவும் ஏதுமில்லை.’ அது ஒரு சரியான மதிப்பீடு என்று நான் நினைக்கிறேன். உண்மைக்கு கிடைத்த பரிசு. தி.ஜானகிராமனின் நாவலில் அதிக மதிப்பு வைத்திருக்கும் வெ.சா அடிக்கடி ஓர் உதாரணத்தை கொடுத்து விளக்குவார். நாவலின் கதாநாயகிக்கு ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயம். அண்ணாந்து பார்த்த அவளின் கண்களில் தஞ்சை கோபுரத்தின் உச்சியில் இரண்டு காக்கைகள் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவள் நினைக்கிறாள், ‘இரண்டு காக்கைகள் உட்காரத்தானா வானளாவிய கோயில் கோபுரத்தை ஓர் அரசன் நிர்மாணித்தான்.’ சட்டென்று அவளுக்கு உண்மை புலப்படுகிறது. வெ.சா சொல்லுவார் ‘உங்கள் கண்களை உண்மையின்மீது வைத்திருங்கள். அது நல்ல முடிவுக்கு உங்களை இட்டுச்செல்லும்.’.
விமர்சகராக இருந்தாலே பகைவர்கள் உண்டாகிவிடுவார்கள். அதிலும் நேர்மையாக ஒருவர் இருந்தால் சொல்லவே வேண்டாம். இவர் எழுதிய கட்டுரைகள் கடிதங்கள் எல்லாவற்றிலும் நான் அதிகம் மதிப்பது இவர் அமெரிக்க தகவல் மையத்துக்கு எழுதிய கடிதம். அது ஒரு classic.. அவரிடமே அதை நேரில் சொல்லி பாராட்டியிருக்கிறேன். 1997ல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்யும் பணிக்கு வெ. சாவை அவர்களாகவே அழைத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கப் போனபோது ஒரு விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்து அதை நிரப்பிவரச் சொன்னார்கள். ஏதோ வெ, சா அவர்களிடம் வேலை கேட்டு வந்ததுபோல அவமதித்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எழுதிய கடிதம்தான் அது. ’40 வருட பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும், என் நேர்மையையும் என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்தேன். ‘உன் நேர்மையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால் உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பதுபோன்ற வேலையை செய்.’ இது ஓர் அமெரிக்கர், வில்லியம் பாக்னர் சொன்னது. என் தகுதியை அளக்கும்படி நான் உங்களிடம் கேட்கவே இல்லையே.’ வெ. சா எழுதிய அந்த நீண்ட கடிதத்தில் நேர்மையையும் சுதந்திரத்தையும் வலுயுறுத்தியிருந்தார்.. இந்தக் கடிதத்தை வரலாற்றில் யார் மறந்தாலும் அமெரிக்க தகவல் மையம் மறக்காது.
இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவருடன் பழகிய நாட்கள், எழுதிய கடிதங்கள், பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பது அவருடைய மனிதாபிமானமும் நேர்மையும்தான். இப்படியான ஒருவர் தமிழ் இலக்கியத்தில் மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்தது எங்கள் பாக்கியம். அவர் இழப்பு நிரப்ப முடியாதது. சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் இப்படி இரண்டு வரிகளைச் சேர்த்திருந்தேன். ‘முன்பெல்லாம் அடிக்கடி உங்களிடமிருந்து கடிதம் வரும். இப்பவெல்லாம் எழுதுவதில்லை. என்னை மறந்துவிட்டீர்களா?’ உண்மையில் அவர் பேரில் ஒரு குறையும் கிடையாது. பல்வேறு வேலைப் பணிகளில் நான்தான் கடிதம் எழுதத் தவறியிருந்தேன். அவரிடமிருந்து பதில் கடிதம் வரும் என்று காத்திருந்தேன். சரியாக 17 நாள் கழித்து அவர் இறந்த செய்திதான் வந்தது. இனி என்றென்றைக்கும் அவரிடமிருந்து கடிதம் வரப்போவதில்லை..