சேவாக் ⊕ முல்தானின் சுல்தான்

Virender-Sehwag..record-breaking

இறுதியில் சேவாகிற்கும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.. ஒரு சர்வதேசப் போட்டியில், அரங்கு நிறைந்த மைதானத்தில், விசிறிகளின் முன்,  அமர்க்களமான சதமோ அல்லது நினைவில் நிற்கும் ஷாட்களைக் கொண்ட ஒரு ஆட்டமோ இல்லாமல் விஸ்வநாத், டிராவிட், லக்ஷ்மண் போன்ற பிற மகத்தான ஆட்டக்காரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வைப் போலவே, டெஸ்ட் போட்டி மைதானத்துக்கு வெளியே முடிந்திருக்கிறது. நினைவில் நிற்கும் கிரிக்கெட் வாழ்வினைக் கொண்டவர்கள் எல்லோருக்குமே நினைவில் நிற்கும் பிரிவு உபசாரம் அமைவதில்லை. அதிலும் இப்போது இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா திணறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சேவாக் மைதானத்துக்கு வெளியே ஒய்வு பெறுவதில் ஒரு முரண் உள்ளது.  இந்திய மட்டை வரிசையை பலப்படுத்த சேவக்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல கடிதங்களை விளையாட்டு இணைய இதழ்களில் பார்க்க முடிகிறது. இதுவே அவர் இன்னும் காலாவதியாகி விடவில்லை என்பதற்கு சாட்சியம்.
இந்திய கிரிக்கெட்வரலாற்றில் ரசிகர்களின், பிரியத்துக்கும் , மரியாதைக்கும் உரிய வீரர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் அவர்களின் பேரபிமானத்துக்குரிய, காதலுக்குரிய வீரர்கள் என்று கணக்கெடுத்தால், கடந்த 35 வருடங்களில் .கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக்.ஆகியோரே முன்னிற்பர். இவர்களுள் கபில் தேவ் முதன்மையாக ஒரு பந்து வீச்சாளர். சச்சின் தன் கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி வரையில் அதிரடி ஆட்டக்காரர் என்றாலும், பிற்பகுதியில், சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சேவாக் தன முதல் சர்வதேச ஆட்டத்திலிருந்து கடைசி ஆட்டம் வரை தன் பாணியை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. வெற்றியோ தோல்வியோ அவரது ஆட்டத்தின் தன்மையும் பாணியும், ஒரு போதும் மாறாதது..
சொல்லப்போனால் சேவாக்கின் பிரவேசமும் ஒரு ஆல்ரவுண்டர் என்ற அளவிலேயே இருந்தது.  ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் என்பதைவிட, Bits and pieces ஆட்டக்காரராகவே அவர் இந்திய ஒரு நாள் அணிக்குள் வந்தார். கொஞ்சம் ஆப் ஸ்பின் பந்துவீச்சு, மற்றும் அதிரடியாக விளையாடக் கூடிய பின்வரிசை ஆட்டக்காரராகவே அவர் அறிமுகமானார். முதலிரண்டு போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவர் தன் முத்திரையைப் பதித்தது, 2001 மார்ச்சில் மிக பலம் வாய்ந்த ஸ்டீவ் வாஹின் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக. அந்த ஒருநாள் பந்தயத்தில் சேவாக் 54 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். இது தவிர, ஹெய்டன், ஸ்டீவ் வாஹ், மற்றும் டேமியன் மார்ட்டின் ஆகிய முன்னணி மட்டையாளர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த புள்ளி விவரங்களை விட முக்கியமானது, அவர் அடித்து ஆடிய விதம். அதே வருடத்தின் நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க் அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மண்ணில் தன் முதல் சதமடித்தார்.அந்த பந்தயத்தில் சொற்ப ஓட்டங்களிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துவ்விட்டபோதும், சச்சினுடன் ஜோடி சேர்ந்து சேவாக ஒரு சதம் விளாசினார். அப்போது பார்த்தவர்கள், ஆடுகளத்தின் இரண்டு பக்கங்களிலும் சச்சினே விளையாடுவதைப் போன்று உணர்ந்தனர். சேவாக்கின் ஆட்டமும் தோற்றமுமே கூட சச்சின் போலவே இருந்தது.
இந்திய மட்டையாளர்கள் எப்போதுமே தமது மணிக்கட்டின் சுழற்சிக்கும் லாகவத்துக்கும் ப்ரசித்தமானவர்கள். மற்ற பிரபல மட்டையாளர்களின் இந்த மணிக்கட்டுத் திறன்,முக்கியமாக கால் திசையில் பந்தை திருப்பக் கூடியதாகவே இருக்கும். ஆனால் சேவாக் அந்த ஒரு ஆட்டத்தில், ஆப் சைடில் பந்துகளை விரட்டத் தன் மணிக்கட்டுகளை உபயோகித்த விதம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. மிடில் ஸ்டம்பில் கூட அல்ல லெக் ஸ்டம்பிலும் அதற்கு வெளியிலும் வந்து விழுந்த பந்துகளைக் கூட அவர் ஆப் சைடில் பாயிண்ட் மற்றும் , தேர்டு மான் ஆகிய நிலைகளுக்கு நடுவே எல்லைக் கோட்டுக்கு விரட்டினார். உண்மையில் முதலில் அப்படி ஆடிய சில ஷாட்டுகள் மட்டையின் விளிம்பில் பட்டு போனதாகவே நினைத்தேன் . ஆனால் தொடர்ந்து பார்த்தபோதுதான், அவர் மட்டையின் முகத்தை தன் மணிக்கட்டுகளை உபயோகித்துத் திருப்பும் அந்த லாகவத்தைப் பு ரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் வாஹுமே கூட பிரமித்துப் போனார். ஒரு கட்டத்தில் அவர் அந்த குறிப்பிட்ட இடத்தில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டுவதை தடுக்க இரண்டு தடுப்பு வீரர்களை அமர்த்தினார். அனால் அந்த இருவரையும் மீறி சேவாக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டே. இருந்தார். அன்று ஆரம்பமானது சேவாகுடனான பிணைப்பு. ஆஹா, டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் எத்தனை எத்தனை அற்புதமான ஆட்டங்கள்!
அதே வருடத்தின் நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மண்ணில் தன் அறிமுக ஆட்டத்திலேயே முதல் சதமடித்தார். அந்த பந்தயத்தில் சொற்ப ஓட்டங்களிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதும், சச்சினுடன் ஜோடி சேர்ந்து சேவாக் சதம் விளாசினார். அப்போது பார்த்தவர்கள், ஆடுகளத்தின் இரண்டு பக்கங்களிலும் சச்சினே விளையாடுவதைப் போன்று உணர்ந்தனர். சேவாக்கின் ஆட்டமும் தோ ற்றமுமே கூட சச்சின் போலவே இருந்தது. ஆனால் சேவாக் தனித்துவமிக்க ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மட்டையாளர் என்பது விரைவிலேயே தெளிவாகியது.
சேவாக்கை ஒரு தனிச் சிறப்பு மிக்க மட்டையாளர் ஆக்குவது என்ன என்று பார்ப்போம். பொதுவாக சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை. V யில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது, மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப்.என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும்போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு.
ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு, அது அவர் நிற்கும் இடத்திலிருந்து கவர் பாய்ண்ட் என்ற நிலைக்கும் தேர்டு மான் நிலைக்கும் இரு கோடுகள் போட்டால் வரக்கூடிய ஒரு பிரத்தியேக V . இந்த V க்குள் பந்தை அடித்து தவறாமல் எல்லைக் கோட்டுக்கு விரட்ட மிக முக்கியமானது கூர்மையான கண்பார்வை, பந்து வீசப்படும் அளவை மிக விரைவில் அனுமானிக்கும் திறன். மிக இளக்கமான மணிக்கட்டுகள் மற்றும் மிக முக்கியமாக கண்ணுக்கும் கைகளுக்கும் இடையேயான இணக்கம். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார் சேவாக், இந்த நிலைகளுக்குள் பந்தை தரையோடு மட்டுமல்ல, நினைத்த மாத்திரத்தில் அந்தத் தடுப்பு வீரர்களின் தலைக்கு மேலும் தூக்கி அடிக்கும் திறன் பெற்றிருந்தார் அவர். அது மட்டுமல்லாமல் மைதானத்தின் எந்த இடத்திற்கும் பந்தை விரட்டக்கூடிய ஒரு ஆல்ரவுண்ட் ஆட்டத்திறனும் அவருக்கு உண்டு. ஒரு நல்ல மட்டையாளரின் துவக்க அசைவுகள் என்பது சற்றுப் பின்னால் நகர்ந்து ஸ் டம்புகளின் குறுக்காக வருவது என்பதே கிரிக்கெட்டின் பாலபாடம் (Back and Across Movement)ஆனால் சேவாக்கின் எந்த ஆட்டத்திலும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை.நின்ற இடத்தில் நிலையாக நிற்பதும், பந்தின் அளவையும் திசையையும் அனுமானித்து, தன் இடது காலை விலக்கிக்கொண்டு, கைகளை வீசி அடிக்க இடம் உண்டாக்கிக் கொள்வதுமே அவரது மட்டையடி உத்தி.  இந்த விதத்தில் அவரே அவருக்கு ஒரு பயிற்சிப் புத்தகம் என்று சொல்லலாம். கிரிக்கெட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் சி.எல்.ஆர். ஜேம்ஸ் மேற்கிந்திய ஆட்டக்காரர் பிரான்க் வோரலின் ஆட்டத்திறன் பற்றி இப்படி கூறுவார். “அவரிடம் என்னென்னத் திறன்கள் இருந்தனவோஅவை அனைத்தையும் அவர் முழுமையாக பயன்படுத்தினார். அவரிடம் எந்தத் திறன்கள் இல்லையோ அது அவருக்குத் தேவைப்படவில்லை” என்று. அந்தக் கூற்று முழுமையாக சேவாக்கிற்கும் பொருந்தும்.
1980கள் வரை உலகெங்குமே துவக்க ஆட்டக்காரர்கள் என்போர், காவஸ்கர், பாய்காட், போன்று நிதானமாக விளையாடக் கூடியவர்களாகவே இருந்தார்கள்,மேற்கிந்தியத் தீவுகளின், பிரெட்ரிக்சும், க்ரீனிட்ஜுமே விதிவிலக்கு எனலாம்.இந்தியாவைப் பொருத்தவரை பாரூக் இஞ்சினீர் துவக்க ஆட்டக்காரராக இறங்கிய சமயங்களில் வேகமாக ரன் எடுக்கக் கூடியவராக இருந்தார். ஆ னால் அப்படி அமைந்த சந்தர்ப்பங்கள் குறைவு.80களின் மத்தியில் ஸ்ரீக்காந்த் வந்தார். அடித்து ஆடும் ஒரு புதுப்பாணி ஆட்டத்தைக் கொண்டுவந்தார்.அதற்குப் பின் நவ்ஜோத் சிங் சித்துவும்,ஒரு ஆக்ரோஷமான துவக்க ஆட்டக்காரர் என்றாலும், அவர் இரண்டே இரண்டு கியரில் விளையாடக் கூடியவர்.போட்டால் கட்டை அடித்தால் சிக்ஸர் என்று. ஸ்ரீக்காந்தின் ஆட்டம் மிகவும் chancy என்று சொல்லக் கூடியதாக இருந்தது. சேவாக் துவக்க ஆட்டக்கரராக டெஸ்ட் போட்டிகளில் இறங்குவதற்கு முன், சிவசுந்தர் தாஸும் தீப் தாஸ் குப்தாவுமே இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்தனர். இவர்களுக்குப் பின் வருபவர் ராகுல் டிராவிட். அந்த காலகட்டத்தில், நானெல்லாம், இந்தியாவின் மட்டை ஆட்டத்தைப்பார்க்க இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்து சச்சின் இறங்கினார் என்று தெரிந்தால் மட்டுமே தொலைக்காட்சியை ஆன் செய்வேன்.அந்தத் தருணத்தில்தான் 2002ல் , இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், திடீரென்று சேவாக்கை துவக்கக் ஆட்டக்கரராக களமிறக்கினார், கங்குலி,அதற்கு முன் அவர் இங்கிலாந்தில் விளையாடியதில்லை. துவக்க ஆட்டக்காரராக, இறங்கியதுமில்லை. ஆனால் அதுவெல்லாம் அவருக்கு பொருட்டேயல்ல. அந்த ஆட்டத்தில் 96 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அந்த நாளின் ஆட்டம் முடிய ஓரிரு ஓவர்களே இருந்த தருவாயில், இடக்கை சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி கைல்சின் ஒரு ஓவரில் ஏற்கெனவே 10 ரன்களுக்கு அவரை விளாசியிருந்தபோதும், மீண்டுமொரு சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார் சேவாக்.அதுதான் சேவாக் என்று கட்டியம் கூறிய ஆட்டம் அது.அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே துவக்க ஆட்டக்காரராக தன முதல் சதத்தை அடித்தார். அன்றிலிருந்து இந்தியாவுக்கு துவக்க ஆட்டக் காரரகவே களமிறங்கினார். பின்னர் நிகழ்ந்தது வரலாறு.ஒரு வகையில் தன் ஆட்டத்தின் மூலம் சரிந்து விழுந்து கொண்டிருந்த டெஸ்ட் ஆட்டத்தின் மீதான பார்வையாளரின் கவனத்தையும் சேவாக் மீட்டெடுத்துக் கொடுத்தார்.என்றே சொல்லலாம்.பின்னர் சௌரவ் கங்குலி தன தலைமைகே காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்கையில், சேவாக்கை துவக்க ஆட்டக் காரராக மாற்றியது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.
இந்தப் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் அமைந்த மட்டையாளர் வரிசையே இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்று எனக் கூறலாம், சச்சின், டிராவிட், கங்குலி,லக்ஷ்மண் மற்றும் சேவாக் ஆகிய இந்த பஞ்சரத்னங்கள் இந்திய கிரிக்கெட்டின் ஒளிமிகுந்த பக்கங்களை எழுதினார்கள்.இதில் மற்ற நால்வரை காட்டிலும் மட்டைத் தொழில்நுட்பத்தில் குறைந்தவர் என்று கருதப்பட்டார். ஆனால் இந்த காலகட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளின் பின்னணியில், முக்கியமாக இருந்தது, அவரின் ஓட்டங்களும், அவற்றை அவர் பெற்ற வேகமுமே என்று சொல்ல வேண்டும்.இந்திய மட்டையாளர்கள் ஒரு இன்னிங்க்சில் அடித்த 10அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் மூன்று 319 309 293 ஸ்கோர்கள் சேவாக் அடித்தவை, தவிர அவரது சராசரியான 49.34 என்பதும், கங்குலி மற்றும் லக்ஷ்மண் ஆகியோரை விடவும் அதிகம்.
அவர் ரன் குவிக்கும் வேகம் அவரை ஒரு நாள் போட்டிகளுக்கும், 20/20 போட்டிகளுக்கும் மிக மிகப் பொருத்தமானவர் என்று நினைக்க வைத்தாலும்,ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் என்றாலும்,டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் அதிகம் சோபித்தார் என்றே சொல்ல வேண்டும்.இதில் அவர் அவர் காலத்தின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கிற்கு நேரெதிர்.
கிரிக்கெட்டைப் பொருத்தவரை,ஒருவரது ஆட்டத்திறனைக் கணிக்க எண்கள் மற்றும், புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல என்பது வழக்கு.சேவாக்கின் ஆட்டத்தின் எண்களும், புள்ளி விவரங்களுமே அவர் இந்தியாவின், உலகத்தின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று நிரூபிக்கும் என்றாலும்,அவை முழுக் கதையை , அவர் ஆடும்போது ரசிகர்களுக்குக் கிடைக்கும் அந்த விறுவிறுப்பையும்,அனுபூதியையும் சொல்லவே சொல்லாது. இவற்றையெல்லாம் மீறி இன்னுமோர் விஷயம் உண்டு. இரு நாடுகளுக்கிடையேயான ,ஒரு விளையாட்டுப் போட்டி என்பது சுடுதல் இல்லாத போர் என்று கருதப்படுவதுண்டு.(WAR minus shooting ) அதிலும் இந்தியா- பாகிஸ்தான், இந்தியா-இலங்கை ஆகிய போட்டிகளில் ஒரு கூடுதல் கூர்மை உண்டு.
அதிலும் 80களில் பாகிஸ்தானின் சஹீர் அப்பாஸ், மியாந்தாத், சலிம்மாலிக் முடசர் நாசர், போன்ற மட்டையாளர்களிடம் எல்லாம், இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் பட்ட அவஸ்தைகள் ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் விசிறிக்கு ஏற்படுத்திய காயங்களுக்கெல்லாம், சேவாக் முல்தானில் அடித்த அந்த 309 ரன்கள் அருமருந்தாக அமைந்தது.அதே சமயம், இந்திய மட்டையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர், சக்லைன் முஷ்டாக்கை அந்த ஆட்டத்தில் சேவாக் எதிர்கொண்ட விதத்தில், அவர் 200 ரன்களுக்கும் மேல் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது, அந்தப் பந்தயமே அவரது டெஸ்ட் வாழ்வின் கடைசி ஆட்டமாகவும் முடிந்தது,பாகிஸ்தானுடன் மேலும் இரு இரு சதங்களையும் அடித்தார் சேவாக்.
அதைப் போலவே இலங்கையில் நம் இந்திய மட்டையாளர்கள் சோபித்தது குறைவுதான். 2008ல் புதிதாக வந்த மர்மப் பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிசும் பழைய பகைவரான முரளிதரனும் மற்ற இந்திய மட்டையாளர்களை திணறடித்தபோதும்,சேவாக அவ்விருவரையும் அலட்சியாமாக எதிர்த்து ஆடினார். ஒரு போட்டியில் இந்திய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரான 330 ரன்களில் அவர் மட்டுமே 201 ரன்கள் குவித்திருந்தார்.அந்த போட்டியில் இந்தியா ஒரு ஆறுதல் வெற்றியையும் பெற்றது. பின்னர் இலங்கை அணி இந்தியா வந்தபோது மும்பையில் அதற்கேதிறாரக அவர் பட்டையைக் கிளப்பி அடித்த அந்த 293 ஓட்டங்களும் ஒரு அலாதி திருப்தியைத் தந்தன.
2007 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா முதல் சுற்று ஆட்டத்தில் , வங்கதேசத்திடம்,வீழ்ந்தது, பின்னர் இலங்கையிடமும் தோற்று. காலிறுதிக்குகூடத் தகுதி பெறாமல் திரும்பி வந்தது மீண்டும் 2011 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வங்க தேசத்துடன் டாக்காவில் மோதியது இந்தியா.2007ன் நினைவுகள் மறையவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் சேவாக 175 ரன்கள் குவித்தார். இந்தியா எளிதாக வென்றது. பழிக்குப்பழி என்பது போல் இலங்கையை இறுதி போட்டியில் சந்தித்து கோப்பையை வென்றது..அவர் காலத்தில் உலகிலேயே சிறந்த அணியாக விளங்கிய ஆஸ்திரேலியா அணிக்கேதிராகவும் சேவாக் சோடை போனதில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை, ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக அடித்த இரு சதங்கள் 2003-4 தொடரில் மெல்போர்னில் அவர் அடித்த அந்த 195 ரன்கள் ஒரு விதம் என்றால். 2007-8 தோடரில் அடிலைடில் இரண்டாவது இன்னிங்க்சில் அடித்த சதம் முற்றிலும் வித்தியாசமானது. அந்தத் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. தலைவர் கும்ப்ளேவின் வற்புறுத்தலின் பேரில் கடைசியாக சேர்க்கப்பட்டார்.முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. பின் பெர்த்தில் நடந்த அந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த வெற்றியில் அவர் இரண்டு இன்னின்க்சிலும் கணிசமாக ஓட்டங்கள் எடுத்து தன திறமையை நிரூபித்தார். நான்காவது போட்டி அடிலெய்டில் . இரு அணிகளுமே முதலின்னிங்க்சில் ஏறக்குறைய சமமான ஸ்கோரை எடுத்து இருந்தன.. சொற்ப ரன்களே முன்னிலையில் இருந்த இந்தியா சில விக்கெட்டுகளை இழந்து, தோற்று விடும் அபாயத்தில் இருந்தபோதுதான். சேவாக் இதுவரை அவர் ஆடியிராத ஒரு அற்புதமான தற்காப்பு ஆட்டம் ஒன்று ஆடி ஆட்டம் ஆக்கும் சதம் ஒன்றை அடித்தார்.ஒரு விதத்தில் அதுவே அவரது சிறந்த சதம் என்று கூட சொல்லலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரடித்த 319 ரன்கள் ஒரு சாதனை என்றால், சதத்தில் முடியாத ஒரு ஆட்டமும் அவரது மிகச்சிறந்த ஆட்ட ங்களில் ஒன்று. சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் நான்காவது இன்னிங்க்சில் 387 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கியது இந்தியா. நிச்சயம் தோல்விதான் என்று நினைத்த சமயத்தில், புயல் வேகத்தில் 68 பந்துகளை மட்டுமே சந்தித்து 83 ரன்கள் அடித்து வெளியேறினார் சேவாக். அந்த ஆட்டம் உருவாக்கிய உற்சாக வேகத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஊக்கம் அதல பாதாளத்திற்கு சரிந்தது,பின் டெண்டுல்கர் சதமடிக்க இந்தியா ஒரு நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது. சச்சின் அந்த வெற்றிக்கு சேவாக்கின் ஆட்டம்தான் முதல் காரணம் என்றார்.
சேவாக்கின் இந்த தனிச்சிறப்பு மிக்க மட்டைத்திறன், 2010க்கு பின் திடீரென்று சரிவுக்கு உள்ளானது. ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியம் இல்லை. ஏனெனில், அவரைப் போன்ற மட்டை பிடித்தலின் அடிப்படை தொழில்நுட்பத்தில் பலமில்லாத, கண் கை ஒருங்கிணைப்பும், உள்ளுணர்வும் பொருந்திய ஆட்டக்காரர்களின் சரிவு எப்போதுமே திடீரென்று வருவதே ஆகும்.Reflexes எனப்படுவை சற்றுக் குறைந்தாலும், அது அவர் ஆடும் பாணிக்கு பெரும் ஆபத்தாக முடியும். அதுவே சேவாக்குக்கும் நடந்தது.
வேகப்பந்து வீச்சுக்கு உதவும், ஆடுகளங்களில் சற்றே நிதானமாகிவிட்ட அவரது கண் கை வேகமும், நகர்வுகளில் ஏற்பட்ட நிதானமும், அவருக்குப் பகையாகின. 2010ம் ஆண்டின் இறுதியில்,தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சேவாக் 6 இன்னின்க்சுகளில் ஒரே ஓரு அரை சதமே அடித்தார். அது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்று எண்ணியவர்களுக்கு, 2011 இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சொல்லப்போனால் 2011 இங்கிலாந்து போட்டித் தொடரில் இந்தியாவின் பஞ்சரத்னங்களில் டிராவிட் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எவருமே சோபிக்கவில்லை.காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சேவாக் மூன்றாவது டெஸ்டில் தனது டெஸ்ட் வாழ்வில் முதல் தடவையாக இரண்டு இன்னின்க்சிலும் பூஜ்யம் பெற்று வெளியேறினார். அடுத்த போட்டியிலும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. 4 போட்டிகளிலும் இந்தியா தோற்றது.
கேள்விகள் எழத் தொடங்கின, நல்லவேளையாக அடுத்தத் தொடர் பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியாவில் நடைபெற்றது. அந்தத் தொடரிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும்,ஒரு நாள் போட்டிகளியில் 219 ரன்கள் அடித்து உலக சாதனை புரிந்தார்.ஆனால் அதன் பிறகு 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சேவாக் ஒரே ஓர் அரை சதமே அடித்தார்.
அடுத்து வந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் சேவாக்குக்கு சிறப்பாக அமையவில்லை. 8 இன்னின்க்சுகளில் இரண்டே இரண்டு அரை சதங்கள் அடித்தார். அதுவும் அவரது வழக்கமான ஆட்டம் போல இல்லை. அதன்பிறகு இந்தியாவில் நடந்த இங்கிலாண்டுடனான் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாகவே விளையாடினார். பந்துவீச்சாளர்கள் இதற்குள் சேவாக்கின் பலவீனம் ஒன்றை கண்டுபிடித்து அதை உபயோகிக்க தொடங்கி விட்டிருந்தனர். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே அவருக்கு மட்டையை சுதந்திரமாக வீச வாய்ப்புத் தராமல், சற்று வெளியே இருந்து உள்நோக்கி வரும் இன்ஸ்விங்கர் பந்துகளையே அவருக்கு அதிகமும் போட்டனர். அதிகரித்துவிட்ட தன வயதினால் தன்வேகத்தை சற்று இழந்திருந்த சேவாகுக்கு இந்த வகை பந்துகள் மிகுந்த சிரமத்தைக் கொடுத்தன.
இந்த பலவீ னத்தை சமாளிக்க பயிற்சிகள் எடுத்துக் கொள்வதில் அவருக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சேப்பல் சேவாக்கிற்கு பயிற்சிகளின் மீது இருந்த ஈடுபாட்டுக் குறைவினை வெளிப்படையாகவே கண்டித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் சேவாக் டென்னிஸ் ஆட்ட மேதை ஜான் மெக்கென்ரொவுடன் ஒப்பிடத் தகுந்தவர். மெக்கென்ரொவும் பயிற்சிகளில் அவ்வளவாக, நம்பிக்கை இல்லாதவர். இருவருமே Naturally Gifted என்ற வரிசையில் வருபவர்கள்.அவர்களின் மேதைமை பயிற்சியினால் வருவதல்ல . அவர்களையும் அறியாது, உள்ளிருந்து பீறிடும் ஓர் ஊற்று அது.குறைந்தால் குறைந்ததுதான். அந்த நிலையை சேவாக் 2011ம் ஆண்டின் இறுதியில் அடைந்திருந்தார். அதோடு அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிந்தது. அதற்குப் பின் நினைவில் நிற்கக்கூடிய ஆட்டமென்றால் அது சென்ற வருட IPL அரையிறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அவர் விளாசித் தள்ளிய அந்த ஆட்டம் ( 58 பந்துகளில் 122 ரன்கள்) பழைய சேவாக்கை நினைவில் கொண்டு வந்தது. தோனிக்கும் அவருக்கும் எப்போதுமே பெரிய இணக்கம் இல்லாதிருந்த நிலையில் அந்த சேவாகுக்கு ஒரு தனிப்பட்ட திருப்தியையும் அளித் திருக்கக்கூடும்.ஒருவகையில் அது அணையும் விளக்கின் கடைசி சுடர் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் மேலே சொன்னவை மட்டுமே சேவாக் குறித்த ஒரு முழுமையான சித்திரம் அல்ல. தனித்திறன் மிக்க அவரது பேட்டிங் ஒரு பந்து வீச்சாளராக அவரது திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்ததுவிட்டது என்று கூறலாம். சமயங்களில் சில பந்தயங்களில் ஹர்பஜன் சிங்குடன் மறுமுனையில் சேவாக் தன ஆப் ஸ்பின் பந்துவீச்சில் ஈடுபடும்போது, சேவாக்கே ஒரு classical off spinnerன் திறனைப் பெற்றிருந்தார் என்று நினைக்கத் தோன்றுவதுண்டு. குறிப்பாக அவரது பந்து வீசும் திசை எப்போதும், ஹர்பஜன் போல லெக் ஸ்டம்பின் மீது அல்லாமல் ஆப் ஸ்டம்ப் மற்றும் அதற்கு சற்று வெளியே என்று ஒரு செவ்வியல் ஆப் ஸ்பின்னர் போல அமைந்தது. 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்சில், அவர் இடது கை ஆட்டக்காரரான ஆடம் கில்க்ரிஸ்ட்டை அவர் கால்களைச் சுற்றி பௌல்ட் ஆக்கியது, இன்னமும் கண்களில் நிற்கிறது.
பேட்டிங் பௌலிங் மட்டுமல்லாமல் எதிரணியினரின், வாய் வீச்சுக்கும் ஈடு கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தார் சேவாக். நிறைய போட்டிகளில் இப்போது வழக்கமாக ஆகியிருக்கும் அந்த sledging எனும் குத்தல் பேச்சுகளில் எதிரணியினர் ஈடுபடும்போது, அதற்கான சேவாக்கின் எதிர்வினை, அவர்களையும் ரசித்து சிரிக்கும்படியாகவே அமைந்திருக்க்றது. ஒரு புகழ் பெற்ற உதாரணம், முல்தான்ல் பாகிஸ் தானுக்கெதிரான அந்த 309 ரன்கள் எடுத்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், ஷோயப் அக்தர், வரிசையாக எகிறு பந்துகளையே வீசி, ஒவ்வொரு பந்தின் முடிவிலும், சேவாக்கை ஹூக் சாட் அடிக்குமாறு ஏளனத்துடன் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.அதற்கு சேவாக்,சொன்ன பதில் அவரைச் சுற்றியிருந்த பாக் வீரர்களையும், வெடித்து சிரிக்க வைத்தது .சேவாக் சொன்னது இதுதான். இவரென்ன பௌலிங் போடுகிறார அல்லது பிச்சை கேட்கிறாரா? என்றாராம்.
அதே போல் அவர் மிகப்பெரிய ஒரு இன்னிங்க்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது கூட, அலட்சியமாக பழைய இந்திப் படப் பாடல்களைப் பாடிக்கொண்டே ஆட்டத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல இருப்பார் எனக் கூறப்படுவதுண்டு. ஒரு முக்கியமான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் டிராவிட்டுடன் இனைந்து ஆடிக் கொண்டிருந்த வேளையில், திராவிடிடம், ஓவர்களுக்கு இடையேயான இடைவெளியில், வெகு கவனமாக, ஒரு இந்தி பாடலைக் குறிப்பிட்டு இது எந்தப் படத்தில் வருவது என்று கேட்டபோது தான் பேச்சிழந்து நின்றதாக திராவிட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.அதேபோல் மனதில் பட்டதை மறைக்காமல் பேசியவர் சேவாக்.ஒரு முறை முதல் விக்கெட்டுக்கான உலக ரெக்கார்ட் பார்ட்நர்ஷிப்பை தாண்ட இருந்த வாய்ப்பை இழந்தபோது , அது பற்றியும், அந்த ரிக்கார்டுக் கு சொந்தக்கரர்களான, இந்தியாவின், வினு மன்கட் மற்றும் பங்கஜ் ராய் பற்றியும் கேட்டபோது, மிக எதார்த்ததமாக, அது பற்றி எதுவும் தெரியாதென்றும் அவர்களைப் பற்றி கேள்விபட்டதே இல்லை என்றும் பதிலளித்தார்.இந்த மனதில் உள்ளதை தயங்காமல் வெளியில் சொல்லும் அவரது பழக்கமே, அவரது பிற்கால கிரிக்கெட் வாழ்வில், அவருக்கும் தோனிக்கும் சில பிரச்னைகளை எழுப்பியது என்றும், அதனாலேயே அவர் சில வாய்ப்புகளை இழந்தார் என்றும் கருதவும் இடம் இருக்கிறது.
ஆனால் வரலாற்றின், சென்ற கணத்தின் சுமைகள் இல்லாமல், ஆடும் அந்தக் கணத்தில் முழுமையாக ஈடுபட்டு ஆடும் திறன் பெற்றிருந்த அவர் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. பிரபல கிரிக்கட் எழுத்தாளர் முகுல் கேசவன், சேவாக்கின் இந்த ஒரு பண்புக்காகவே அவரை ஒரு Zen Master of Batting என்று வர்ணித்தார்.தன்னளவில் பரபரப்பையே அடையாத அதை ஒருபோதும் காட்டிக் கொள்ளாத எப்போதும் நிதானமான , சிரித்த முகத்துடன் இருந்த சேவாக் பார்ப்பவர்களுக்குத்தான் எத்தனை, விறுவிறுப்பையும், பரவசங்களையும் அளித்தார், தொழிற்முறை ஆட்டக்காரர்களில் ஒருவராகவே இருந்த போதிலும் ஒரு விளையாட்டு அது அளிக்கும் பரவசத்துக்காகவே அதை விரும்பி விளையாடும், ஒரு அசலான அமெச்சூர் ஆட்டக்காரர் அவர். நஜாப்கரின் நவாபாக இருந்து முல்தானின் சுல்தானான சேவாக் போன்ற பிறிதொரு ஆட்டக்காரரை இனி நாம் காண்பது அவ்வளவு சீக்கிரத்தில் இருக்காது என்று மட்டும் சொல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.