நாம் வாழும் வாழ்க்கையைப் பொதுவாக இரண்டே விதங்களில் அடக்கி விடலாம். ஒன்று கொடுப்பது. இன்னொன்று பெறுவது. கொடுப்பது என்றால் பணம், பொருள், சொல், செயல், மற்றும் எண்ணம் இவற்றை ஏதேனும் ஒரு ரூபத்தில் தானமாகவோ அல்லது விலைக்கோ கொடுப்பது எனலாம். பெறுவது என்றால் வாழ்க்கையின் மேலே உள்ள பலதரப்பட்ட பரிமாணங்களை அனுபவிப்பது அல்லது நுகர்வது ( விலை கொடுத்தோ அல்லது இனாமாகவோ) எனலாம். கொடுப்பதில் ஒரு பக்கம் நாம் செய்யும் தொழில், கடமையுணர்வால் அல்லது ஒரு நல்லுணர்வு தரும் உந்துதலால் செய்யும் செயல்கள், விளையும் படைப்புகள், இவற்றைச் சொல்லலாம். தவிர, எண்ணங்களால் பிறருக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு ஒரு புரிந்துணர்வை அல்லது அன்பை கொடுப்பதும் இதில் அடக்கம்.
இரண்டாவது ரகமான பெறுவது என்பதில், ஐந்துணர்வால் நாம் அனுபவிக்கும் பலவித சுகங்களும், பெறும் அறிவும், அடக்கம். நாம் பொதுவாக வாழ்க்கையிலிருந்து பெறுவதை நோக்கிதான் நகருகிறோம். ஆனால் மன நிறைவு என்பது கொடுப்பதில் அதிகம் என்று உணர்ந்தவர்களும் நம்மிடையே அவ்வப்போது தென்படுகிறார்கள். ஆங்காங்கே அவர்களுடைய அனுபங்கள் சட்டென்று நம் மனதில் மின்னலாக வீசிவிட்டு செல்லும். அந்த ஒளி கீற்று பல கணங்கள், பல மணி நேரங்கள் நம் மனதில் பிரகாசமாக இருப்பதைக் கவனித்துள்ளீர்களா?
சமீபத்தில் நான் கேள்விப்பட்ட அல்லது சந்தித்த அப்படி சிலர் இதோ: அவர் அமெரிக்காவில் வெற்றிகரமாக தொழில் செய்து வந்த ஒரு மருத்துவர். சில வருடங்களுக்கு முன்பு அவரும் அவரது கணவரும் திரும்ப இந்தியாவில் வந்து வாழ தீர்மானித்தனர். வெற்றிகரமான தொழிலையும் செளகரியங்களையும் விட்டுவிட்டுவிட எப்படி மனம் வந்தது என்பதை விளக்கும்போது, ” எங்கள் குழந்தைகள் இந்தியாவில் வளர வேண்டும் என்று நினைத்தோம்… தவிர எங்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த கல்வி மிக உசத்தியானது – பலதரப்பட்ட அனுபவங்களைக் கொடுத்தது. எங்கள் அனுபவங்களை இந்தியாவில் பிறருடன் – முக்கியமாக, தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றிற்று. ஒரு சமுதாயத்தில் நாங்கள் ஒன்றும் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். இருந்தாலும் சிறு துளி பெருவெள்ளம் இல்லையா?” என்று கேட்கிறார் இவர்.
மருத்துவத் தொழிலில் இப்போதெல்லாம் சில சமயங்களில் சில இடங்களில், நெறிகள் கடைபிடிக்கபடுவதில்லையே… எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதற்கு அவர் பதில்,” நம் ஒவ்வொருவர் உள்ளிலும் ஒரு சக்தி உள்ளது. ஏதோ கடனே என்று சம்பிரதாயமாக செய்யாமல் எந்த ஒரு செயலையும் தீவிர ஆத்மார்த்தமான முயற்சியுடன்- ஒரு லயிப்புடன் செய்யும்போது நம்மால் நினைத்ததைச் சாதிக்க முடியும். இந்த சக்தி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருந்து கொண்டு நம்மை அவ்வப்போது தூண்டிவிடுகிறது. அப்படிச் செய்யும்போது இப்படிப்பட்ட சவால்களையும் நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். இதை அடையாளம் கண்டு கொள்வதுதான் முக்கியம்.இதற்கு அடிப்படைத் தேவை, மனதில் நம் குறிக்கோளைநோக்கி ஒரு குவியம்(focus). என் தொழிலை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு நோயாளியுடனும் சட்டென்று ஆத்மார்த்தமாக நெருங்கிவிடுவது என் குணம். எப்பாடுபட்டாவது அவர்களின் பிணியை நீக்குவதுதான் முக்கியம் என்று மனதில் ஒரு உண்மையான ஆர்வத்துடன் செயல்படுகிறேன். என் தொழிலில் இது மிக அவசியம். எப்போது நோயளிகளைப் பணம் வரும் ஒரு சாதனமாக கருத ஆரம்பிக்கிறோமோ அப்போது அவர்களைக் குணமாக்கும் சக்தியையும் இழந்துவிடுகிறோம்…” என்கிறார் இவர்.
அடுத்து நான் சந்தித்ததும் ஒரு பெண் மருத்துவர். எப்போது இவரிடம் போனாலும் இவரது பளீரென்ற உடையும் கம்பீரமான பார்வையும் என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்தும். எழுந்து நின்று நம் புடவை சுருக்கங்களை நீவிவிட்டு, இன்னும் ஒரு அங்குலம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘பிரச்சனையா, வா.. ஒரு கை பார்க்கலாம்’ என்று நம்முள் ஒரு வேகத்தை வரவழைக்கச் செய்யும் ஒரு தோற்றம் இவருக்கு.
இருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73.”நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. இந்த வயதில் ஒரு துளி கூட தளர்வு தெரியாமல் அதே கம்பீரத்துடன் பணியாற்றும் அவரது உற்சாகம் எப்போதும்போல் என்னுள் ஒரு புது ரத்தம் ஊறவைத்தது. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது? அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை ஒன்றே வழி. என் கட்டியை அகற்ற முனைந்தபோது எனக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவர் – ஒரு இளைஞர் – என் வயதை யோசித்து மிகவும் கவலைப் பட்டார். நான் அவருக்கு தைரியம் சொன்னேன்: ‘நான் நன்றாக வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து முடித்தவள் டாக்டர். நான் இறப்பதைப் பற்றி கவலைப் படவில்லை. நீங்கள் என்னைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.’. என்றேன். நான் அப்படிக் கூறியதுதான் அன்று அவருக்கு தைரியத்தைக் கொடுத்தது என்று அந்த இளைய சர்ஜன் பின்னால் கூறினார். ஆனாலும் எனக்கு சில சமயங்களில் தோன்றுகிறது. இத்தனை வயதில் இப்படி ஒரு பெரிய அறுவை சிகிச்சையைத் தாண்டி என்னை ஏன் கடவுள் என்னை உயிர் வாழ வைத்துள்ளார் என்று… ஒரு வேளை மருத்துவராக நான் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் பாக்கி உள்ளன போலும் என்று எனக்குள் சொல்லிகொள்வேன்…. இந்த எண்ணமே இன்னும் தொடர்ந்து என்னை வேலை செய்ய வைக்கிறது…” என்கிறார் இவர்.
நான் அடுத்து குறிப்பிட விரும்பும் நபர் ஒரு சாதாரண குடும்பத்தலைவி. (“சாதாரண” என்று எத்தனை எளிதாக சொல்லிவிடுகிறோம்…? ஒரு குடும்பத்தை உருவாக்குவது என்ன சாதாரண வேலையா…?) இவர் ஒரு சில வருட இடைவெளியில் கணவரையும், ஒரு மகனையும் இழந்தவர். இருந்தாலும் மூலையில் சுருண்டு உட்காரவில்லை. மாறாக , தான் வசிக்கும் பலதரக் குடியிருப்பு பகுதியின் நிர்வகிக்கும் பொறுப்பை இழுத்துபோட்டுகொண்டு செய்கிறார். எப்போதும் முகத்தில் ஒரு மலர்ச்சியுடனும் புன் சிரிப்புடனும் தன் வருத்தங்களை ஒரு ஓரத்தில் மூட்டைக் கட்டிவைத்துவிட்டு செயல்படுகிறார். ” ஒரு சமயத்தில் என் உறவினர்கள் என்னைப் புரிந்துகொள்ளவிலை என்று நான் வருந்தியது உண்டு. ஆனால் இன்று அதே உறவினர்கள் எனக்கு பக்க பலமாகவும் உள்ளார்கள். வாழ்க்கை இப்படித்தான். குறைகளை ஒதுக்கிவிட்டு நிறைகளை மட்டும் ஏற்றுகொண்டு வாழும்போது மனதில் ஒரு மலர்ச்சி தானே வரும்….” என்று எளிதாக சொல்லிவிட்டு போகும் இவரைப் போன்ற “சாதாரணமானவர்கள்” ஏராளம். எல்லோருமே ஒரு காந்தியாகவோ அல்லது ஒரு லீ குவான் யூ வாகவோ இருக்க முடியாதுதான்.
ஆனாலும் அவரவர் மனதுக்கு அவரவரே அதிபதி. வாழ்க்கையிலிருந்து நாம் பெறுவது எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நாம் கொடுக்கலாம் என்று முனையும்போது அதில் ஒரு நிறைவு இருக்கதான் செய்கிறது. கொடுப்பது பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நம் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் ஆக்கப்பூர்வமான எதையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்மீக குரு, ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை – Art of Living – போல இது கொடுக்கும் கலை – Art of Giving என்று நாம் சொல்லிக் கொள்ளலாமே!
எல்லாவிதமான உறவுகளிலும் – உறவுகள் வரிசையில், சக மனிதர்கள் தவிர, இயற்கையோடு ஒத்துவாழ்வதும் உண்டு – இந்த கொடுக்கும் கலையை பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கொடுக்கும்போதும், நான் கொடுக்கிறேன் என்ற எண்ணம் மேலோங்காமல் இயல்பாக கொடுப்பது உத்தமம். எங்கே, யாருக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொடுத்தல், கொடுக்கும் கர்வமின்றிக் கொடுத்தல் அழகு. நம் கூடவே வாழ்க்கையில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ தேவை இருக்கும். அது உணர்வு பூர்வமான ஒரு பாராட்டாக இருக்கலாம்; ஒரு அங்கீகரிப்பாக இருக்கலாம்; அல்லது இதமான நாலு வார்த்தையாக – ஒரு புரிதலாக, அன்பாக இருக்கலாம். அதை நாம் கொடுப்பதில் என்ன கஷ்டம்? தாராளமாக, இயல்பாக, அகம்பாவம் இல்லாமல், திருப்பி நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது அங்கே வாழ்க்கையின் அர்த்தம் ஜொலிக்கிறது.