குடிமக்களும் ஆட்சியாளர்களும் – 2

பேஸியெ ( Béziers ) பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்கட்தொகைகொண்ட சிறு நகரம். நாட்டின் ஏனையப் பகுதிகளைப்போலவே இனம், நிறம், சமயம் என வேறுபட்ட மக்கள் அமைதியாக, பிரச்சினைகளின்றி இருந்த ஊர். எனினும் அண்மைக்காலமாக தீவிர வலதுசாரிகள் அதிகம் காலூன்றியுள்ள பகுதிகளில் அதுவும் ஒன்று, விளைவாக 2014ம் ஆண்டிலிருந்து ‘Le Front National’ என்ற தீவிர வலதுசாரிக் கட்சியின் பிடியின் கீழ் நகராட்சி மன்றம் வந்திருக்கிறது, மேயராக ரொபெர் மெனார்(Robert Menard)  என்பவர் இருக்கிறார். குறுகிய இடைவெளியில் அரங்கேறிய அடுத்தடுத்து இரண்டு நிகழ்வுகள் இந்த ஊரையும், அதன் மேயரையும் பிரான்சு நாடெங்கும் பேசவைத்திருக்கின்றன. இரண்டுமே மத்திய கிழக்கு நாடான சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தால் நேர்ந்துள்ள அகதிகள் சம்பந்தப்பட்டவை.
முதலாவது ‘பேஸியெ’ நகராட்சி மன்றம் வெளியிட்டிருக்கும் மாதாந்திர இதழ் செய்தி: ‘வந்துட்டாங்கய்யா’ என வடிவேல் தொனியில் கட்டமிடப்பட்ட ஒரு செய்தி. அச்செய்தியோடு சிரியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் நேராக ‘பேஸியெ’ நகரில் வந்திறங்கியதுபோல ஒரு படம்.
அடுத்தது சமூக வலைத்தளத்தில், அதே நகராட்சி முக்கிய மொழிகளில் வெளியிட்ட ஒளி நாடா தொடர்பானது. அக்காட்சியில் மேயர், தனது கட்சியைச் சேர்ந்த நான்கைந்து நகராட்சி உறுப்பினர்களுடனும், நகராட்சிக் காவலர்களுடனும், நகரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் ‘La Devèze’ பகுதிக்கு வருகிறார். அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றின் கதவைத் தட்டுகிறார். கதவும் திறக்கிறது. திறந்த கதவிற்கு முன்பாக அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் ஓர் இளைஞர். துபாக்கி ஏந்திய காவலர்கள், பத்திரிகையாளர்கள் புடைசூழ கோட்டும் சூட்டுமாக பிரான்சு தேச மூவண்ணத் துணிப்பட்டையைப் பூனூல்போல அணிந்த மனிதர்கள் வீட்டு வாசலில் திடீரென்று வந்து நின்றால் யார்தான் அதிர்ந்து போகமாட்டார்கள். சட்டென்று இளைஞரின் கையைப் பிடித்து அவரிடம் மேயர் “Vous n’êtes pas les bienvenus, vous devez partir ( நீங்கள் அழையா விருந்தாளி, அதனால இங்கிருந்து உடனே புறப்பட்டாகனும்) ” என்கிறார். “நீதி மன்றத்தின் உத்தரவோ, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவோ இன்றி ஓர் அகதியை நினைத்த மாத்திரத்தில் வெளியேற்ற முடியாது,” எனக்கூறி மேயருடைய முயற்சியை, உள்ளூர் கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரும் சில தொண்டு நிறுவனங்களும் தடுத்தன. தற்போதைக்கு, பிரச்சினையின் நாயகனான சிரிய நாட்டு இளைஞர் மேயரின் விருப்பத்திற்கு மாற்றாக ‘பேஸியெ’ விருந்தாளியாக அதே ஊரில்தான் இருக்கிறார்.

republicains

‘பேஸியே’ மேயரின் செயலை ஆமோதிப்பதுபோல மற்றொரு அரசியல்வாதியின் பேச்சும் பெரும் சர்ச்சைக்குக் காரணமானது.  ‘நதீன் மொரானோ’ என்ற பெண்மணி ‘Les Républicains’ என்று சமீபத்தில் பெயர்மாற்றம் செய்துகொண்ட வலதுசாரி கட்சியொன்றின் முன்னணி அரசியல்வாதி. அவருடைய சமீபத்தியக் கருத்தொன்று,  மாவட்ட நிர்வாகசபைத் தேர்தலில் அவருடைய பிரதிநித்துவத்தைச் சொந்த கட்சியே நிராகரிக்கக் காரணமாயிற்று. மிதவாத வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒரு சிலரிடத்தில் தங்கள் வாக்குகள் தீவிர வலதுசாரிகளுக்குப் போகின்றன என்ற கவலை வெகுநாட்களாகவே உள்ளது. எனவே தீவிர வலதுசாரி கட்சியின் பாணியிலான பேச்சுக்களை, அவர்கள் கொள்கைகளைத் தங்களுடையதாக்கிக்கொண்டு எதையாவது உளறுவதும், பத்திரிகையாளர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. இப்பெண்மணியைக் கடந்த செப்டம்பர் மாதம் 26ந்தேதி, பிரான்சு நாட்டின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ‘France 2’ பின்னிரவு நிகழ்ச்சியின்றில் விவாதத்தின்போது: “La France est un pays de racines judéo-chrétiennes, la France est un pays de race blanche. J’ai envie que la France reste la France et je n’ai pas envie que la France devienne musulmane.” அதாவது “பிரான்சு நாடு யூதத்தையும் -கிருஸ்துவத்தையும் வேராகக் கொண்ட நாடு, பிரான்சு வெள்ளை இனத்தவர்களின் நாடு. பிரான்சு பிரான்சாகவே என்றைக்கும் இருக்கவேண்டுமென்பதே விருப்பம், இஸ்லாமிய நாடாவதில் எனக்கு விருப்பமில்லை” – எனப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும்  அவரது பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்தனர். அப்படியொரு கருத்தை முன் வைத்ததற்காக அவருடையக் கட்சி மேலிடம் மாவட்ட நிர்வாகத் தேர்தலிலிருந்து அவரை விலக்கி வைத்திருக்கிறது.  அண்மைக்காலமாக,  மீண்டும் மதங்கள் ஆயுதங்கள் ஏந்தத்தொடங்கியதின் விளைவுகள் சமூகத்தின் பலதளங்களில் எதிரொலிக்கின்றன. தனது இனத்தை, தனது நிறத்தை, தனது கூட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்த அடையாளத்தேடல் பிரான்சிலும் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க மேற்கண்ட உதாரணங்கள்.  உலகமெங்கும் தேசியவாதமும், பாசிஸமும் பார்த்தினீயம்போல வேகமாக கடந்த சில வருடங்களாக வேகமாகப் பரவிவருகின்றன. பிரான்சும் இதற்கு விதிவிலக்கல்ல.

தேசியவாதம் என்ற சந்தைப்பொருள்

தனிமனித வாதத்தின் திரட்டு  தேசிய வாதம் எனச் சொல்லத் தோன்றுகிறது. நான், எனது எனச்சொல்ல அவனுக்குக் கூட்டம் தேவைப்படுகிறது, அந்தக் கூட்டம் அவனுடைய கூட்டமாக இருக்கவேண்டும். பின்னர் அக்கூட்டத்தில் அவனுடைய சாதியைத் தேடுவான்; சாதியில் தன் குடும்பத்தைக் தேடுவான்; குடும்பம் தன்நலனுக்கு பாதகமாக இருக்கிறபொது, தன்னைத்தேடி வெளியில் வருவான் – ஆக  இதொரு முடிவில்லா சுற்று. மனித விழுமியங்கள், உயிர்வாழ்க்கையின் முன்னெடுத்துச் செல்லும் காரணிகள் அனைத்துமே சந்தைப்பொருட்களாக இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும் தங்கள் இருத்தலை உறுதிப்படுத்த, காலச் சுழலிலிருந்து தப்பித்து எதையாவது செய்து கரைசேரவேண்டும். மாட்டிறைச்சியோ, சாதியோ, அந்நியனோ, நிறமோ, பாம்போ, பழுதோ பற்றுவதற்கு ஏதாவது வேண்டும்.
உற்பத்தியாளன் -உற்பத்தி பொருள் -சந்தை – விற்பனைபொருள்- நுகர்வோன் என்ற கண்ணிகளால் பிணைத்த இத்தொடர் நிகழ்வைப் படிமமாக எதற்கும் பொருத்திப் பார்க்கலாம். உற்பத்திபொருட்கள் விலைபோவதற்கு என்னென்ன உத்திகள் சாத்தியமுண்டோ அவற்றைச் சாதுர்யத்துடன் கையாளவேண்டும். கடைவிரிக்கப்படும் பொருள், கடந்து செல்லவிருக்கும் நுகர்வோனைத் தடுத்து நிறுத்தப் போதுமான நிறமும் மணமும் கொண்டு; கவர்ச்சியான சிப்பமாகவும்; கையாள எளிதாகவும், விலைமலிவானதாகவும், அன்றையதேவையைப் பூர்த்திசெய்பவையாகவும் இருக்கவேண்டும். வர்க்கத்தின் அடிப்படையில் புரட்சியை ஓர் உலகளாவிய பரிமாணத்தில் மார்க்ஸ் கற்பனை செய்திருந்தார். ஆனால் வக்கிரம் பிடித்த மனித மனங்களை அளக்கத் தவறியிருந்தார். இரு கோவணாண்டிகளை வர்க்க உணர்வின்றி பிரித்துவைக்க சாதி எப்படி உதவுகிறதோ, அதைபோன்றதொரு நிலைமை. இருவரும் தொழிலாளிகள் என்றாலும், “அவன் ஆஃப்ரிக்கன், என் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய தொழிலைப் பறித்துக்கொண்டான் அல்லது ஆசியாவிலிருந்து எனது பலன்களைப் பங்குபோட்டுக்கொள்வதற்காகவே வந்திருக்கிறான்” – என  ஒரு பிரெஞ்சுத் தொழிலாளி, சக தொழிலாளியைப் பற்றி நினைக்கிறான். மனித மனத்தின் இக் குரூரத் தீக் கங்குப் பற்றி எரிந்தால் தங்கள் அரசியலுக்குப் பலம் சேர்க்கும் என சாதிக்கட்சிகளில் ஆரம்பித்து இனவாதக் கட்சிகள்வரை தெரிந்துவைத்திருக்கிறார்கள்.   விளைவாக இன்று பொது உடமைக் கட்சிகளில் நேற்றுவரை உறுப்பினர்களாக இருந்த பலர் இனவாதக் கட்சிகளில் இணைந்து அந்நியர்களை -சகதொழிலாளிகளை -சகவர்க்க மனித உயிரிகளை  பிறப்பால், இனத்தால் நிறத்தால் வேறுபட்டவன் எனக்கூறி அழித்தொழிக்க முற்படுகிறார்கள். தேசியவாதம் சராசரி மக்களுக்கு, வாராமல் வந்த மாமணி யாக சித்தரிக்கப்படுகிறது. தனியுடைமையின் தீராத விளயாட்டுகளில் தேசியவாதமும் ஒன்று. பொது உடைமை சிசிஃபஸுக்கு (Sisyphe) தனியுடைமைப் பாறாங்கல்லை உருட்டும் சாபத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதானதல்ல எனபதை உறுதிசெய்யும் தற்போதைய சாட்சியம்.

பிரான்சு அரசியல் கட்சிகள்

இதுபோன்றதொரு சூழலில் வைத்தே பிரான்சு நாடு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைக் கணிக்க வேண்டியிருக்கிறது.  மனித குல விலங்குளை உடைத்து விடுவித்தலுக்காகவே சிந்தனைகளைச் செலவிட்டு அவற்றை அரசியல் கொள்கைகளாகக் வகுத்துக்கொண்ட காலங்கள் வரலாற்றிலுண்டு. கிளர்ச்சியும்- தேவையெனில் பெரும் புரட்சிக்கும் அவர்கள் தயாரயிருந்தனர், அதற்காகத் தங்கள் உயிரையும் அன்றைய அரசியல் தலைவர்கள் கொடுத்தனர். இன்றைய தலைவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் குறிக்கோளாக கொண்டிருப்பதால், அவர்கள் அடக்கி ஆளவேண்டிய மனிதர்கள் விலங்கிட்டிருக்கப்படவேண்டும்.  விடுதலைகூடாது, சிந்திக்கக்கூடாது . சமயம், தேசியம் போன்றவை அதற்கு உதவுகின்றன.
கிட்டத்தட்ட பதினைந்து அரசியல் கட்சிகள் பிரான்சு நாட்டில் இருக்கின்றன. இவற்றை வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று இரு பெரும் பிரிவுக்குள் அடக்கிவிடலாம்.  அடுத்து இடதுசாரிகளை, ‘தீவிர இடதுசாரிகள்’, ‘மிதவாத இடதுசாரிகள்’ என்றும்; வலதுசாரிகளை, ‘தீவிர வலதுசாரிகள்’, மிதவாத வலதுசாரிகள் என்றும் பிரிக்கலாம்.  இடதுசாரிகள் அணியில் Front de gauche (பொதுவுடமைச் சிந்தனையாளர்கள்), Europe Ecologie Les Verts (பசுமைவாதக் கட்சியும்), Parti socialiste (சோஷலிஸ்ட் கட்சி) இருக்கின்றன. வலதுசாரி அணியில் Les Républicains என்கிற மிதவாத வலதுசாரி கட்சியும்; Front National எனும் தீவிர வலதுசாரி கட்சியும் இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்து நாங்கள் இடதுசாரியுமல்ல, வலதுசாரியுமல்ல நடுநிலை அரசியல் கொள்கைக் கொண்டவர்கள் எனும்  L’Alternative அணியும் இருக்கிறது. முதற்சுற்றில் தனித்தனியே நின்றாலும் தேர்தல் என்று வருகிறபோது இரண்டாவது சுற்றில் இடதுசாரிகட்சிகளில் எந்த வேட்பாளர் முன்னணியில் இருக்கிறாரோ அவரை ஆதரிப்பதென்ற நிலைப்பாடுகொண்டவர்களாக இடதுசாரி அணியினர் இருக்கின்றனர். அவ்வாறே மிதவாத வலதுசாரிகளுக்கும் (Les Républicains), நடுநிலையாளகள் எனக்கூறிக்கொள்கிற L’Alternative அணிக்கும் இணக்கமான உறவு உண்டு. இதில் தனித்து விடப்பட்டிருப்பவர்கள் தீவிர வலதுசாரியாக, இனவாதக் கட்சியாக வர்ணிக்கப்படுகிற Front National என்ற கட்சி மட்டுமே. இவர்கள் பிரான்சு நாட்டில் அந்நியர்களுக்கு இடமில்லை, பிரான்சு ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளிவரவேண்டும் என்பதுபோன்ற கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள். பிரான்சின் இன்றைய பொருளாதார பிரச்சினைகள் அனைத்திற்கும் வெளிநாட்டினரே காரணம் என்பவர்கள். கடந்த இருபது ஆண்டுகளாக ‘புலி வருது’, ‘புலிவருது, புலிவருது’ என்பதைப்போல இத்தீவிர வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள், மக்கள் ஆதரவு அதிகரித்துவருகிறது எனக்கூறப்படினும் தேர்தலில்  அக்கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது தொடர்கதை.
இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும். சோஷலிஸ்டுகளுக்கு அடுத்தபடியாக இடதுசாரிக் கட்சிகளில் செல்வாக்குடையவர்கள் இன்றைய தேதியில் பசுமைவாதிகள். ஏதேதோ அடையாளத்துடன் கட்சிகள் இருந்தாலும், இடதுசாரிகள் வலதுசாரிகள் எனக் கூறிக்கொண்டாலும் அல்லது நம்மை நம்பவைத்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அனவருமே வலதுசாரிகள்தானென்பது இங்கும் அப்பழுக்கற்ற உண்மை.  இங்கே ஆறுதலான விஷயம் வாக்காளர்கள் விலைகொடுத்து வாங்க முடியாதது, இலவசங்களுக்கு ( சமூக நலத்துறை செய்யும் உதவிகள்) மசியாயது. கொடிக்கம்பங்களை காண முடியாதது, ஊர்வலங்கள் பொதுகூட்டங்கள் என்ற பேரில் ஊரை நாற அடிக்காதது.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.