இலவச மின்னூல் வெளியீடு- அறிவிப்பு

முன்னுரை

21694491192_2ca68156c6_k

பொதுவாக, நம்முடைய அணுக் கட்டமைப்பு பற்றிய புரிதல் 60 ஆண்டுகள் பழையது. அணு என்றால், மிகச் சிறிய விஷயம் – எத்தனை சிறியது என்றெல்லாம் நமக்கு கவலை இல்லை. ஆனால், அணுகுண்டு என்றால், பெரிய அபாயம் தரும் விஷயம் என்று மட்டும் அறிவோம். அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டை வீசியது என்பதும் அறிவோம். இது பெரும் அழிவை ஏற்படுத்தியதையும் அறிவோம்.
அணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர்.
இப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது;
1. ஏராளமான பொருட் செலவில் பொதுப் பயனற்ற ஒரு துறை
2. அரசாங்கங்கள் பாதுகாப்பிற்காக ரசசியமாக இயங்கும் ஒரு துறை
3. இந்தியா இந்தத் துறையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது. ஆனால், என்னவென்று தெரியவில்லை
இப்படி பல கருத்துக்கள் பொதுவாக உலா வருகிறது. அணு பெளதிகத் துறை மிகவும் முக்கியமான, சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியத் துறை. இன்று, இப்புத்தகத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், அதற்கும் அணு பெளதிக துறையும் ஒரு காரணம். குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 –ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது. இந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளிலிருந்து நமக்குக் கிட்டக் கூடிய பயன்கள் ஏதோ தீர்ந்து போய்விடவில்லை. இன்னும் பல முன்னேற்றங்கள் நாளடைவில் மனித சமுதாயத்திற்கு பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கான அடிப்படைத் தேவை அணுவைப் பற்றிய முழுப் புரிதல். இது எளிதான விஷயமல்ல. அத்தனை சிறிய விஷயத்தை ஆய்வது என்பது சாதாரண ஆராய்ச்சியும் அல்ல. இந்தக் கட்டுரைத் தொடர் எளிய தமிழில் ஓரளவிற்கு உங்கள் அணுப் புரிதலை மேம்படுத்தினால், எழுதியதற்கு பயன் அளிக்கும்.
இக்கட்டுரைகளை 2013 –ஆம் ஆண்டு வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

ரவி நடராஜன்

16 செப் 2015
டொரோண்டோ, கனடா

இரண்டு பதிப்பாளர்கள் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்;

முதல் பதிப்பாளர், பிரதிலிபி
இரண்டாவது பதிப்பாளர், freetamilebooks.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.