ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை!

Krishna_Kannan_Eat_Food_kids_Children_Play_Forest_Nature_Trees_Fruits_Gokulashtami

கிருஷ்ணன் எனும் சிறு குழந்தையின் வளர்ச்சியை, அவன் வளர்ந்து வரும் அழகினை, அதன் தொடர்பான இன்பத்தை, பெரியாழ்வார் போன்று அணுவணுவாக அனுபவித்தவர் வேறொருவருமிலர் எனத் திண்ணமாகக் கூறலாம். அவரைப் பொறுத்தவரை, அவர் கண்ணன் பிறந்து வளர்ந்த ஆய்ப்பாடிக்கே சென்று விட்டார். காலச் சுழலில் தானே யசோதையாக மாறி விட்டார். யசோதைக்குத் தன் சிறு குழந்தை ‘அப்பரம்பொருளே’ எனத் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வார் திருமாலின் அவதார மகிமைகளை முற்றும் உணர்ந்தவர்; ஆனாலும் தானே தாயாகிக் கண்ணனை ரசிக்கும் போதில் கடவுட் தத்துவப் பொருளையும், குழந்தையின் மழலை இன்பத்தினையும் ஒரு ஆனந்தக் கலவையாக்கிப் பாசுரங்களில் வழங்கி, அற்புதமான பேரின்பத்தில் தானுமாழ்ந்து, நம்மையும் ஆழ்த்தி விடுகிறார்.
பெரியாழ்வாரின் ஆறாம் திருமொழி முழுமையுமே, கிருஷ்ணன் செங்கீரையாடும் அழகை உருகி உருகி வருணிப்பதாகும். வளரும் குழந்தை ஐந்து அல்லது ஆறாவது திங்களில் மல்லாந்து படுத்துள்ள நிலையிலிருந்து புரண்டெழுந்து தவழப் பார்க்கும். ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை மடக்கி, முகத்தை நிமிர்த்தி, உயர்த்திப் பார்க்கும். பல்முளைக்க ஆரம்பிப்பதாலோ அல்லது, இனம் புரியாத மழலை ஓசைகளை எழுப்ப முயலுவதாலோ வாயிலிருந்து எச்சில் ஊறி வழியும். இது, பார்க்கவும், பழகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மிக இனிய காட்சி.
பெரியாழ்வாரின் அனுபவங்கள் மூலமே நாமும் ரசித்து அனுபவிக்கலாமே!
‘உயிர்கள் பிழைக்குமாறு உலகங்களைப் படைக்கிறாய்; ஊழிப்பிரளய காலத்தில் அவற்றை உண்டு வயிற்றில் வைத்துக் காக்கிறாய். பின்பு ஆலிலை மீது யோகநித்திரை (அறிதுயில்) கொள்ளும் உன்னதமானவன் நீ கிருஷ்ணா! தாமரை மலரன்னவை உனது கண்கள்! மைந்நிற மேனி கொண்டவன் நீ! உனது மார்பு தனக்கு மிகவும் பாதுகாப்பான இடம் எனக்கருதி அங்கு திருமகள் உறைகின்றாள். அவளுக்கு வருத்தம் தராது உனது காதில் திகழும் மகரக் குண்டலங்கள் ஒளிவிடும்படியாக நீ ஒருமுறை செங்கீரை ஆடியருளுக! ஆயர்களுக்குத் துணையான போரேறே! ஆடுக செங்கீரை!’ என வேண்டுகிறார்.
இங்கு ‘போரேறே’ என்றது மிக அழகான ஒரு பிரயோகம். தவழ முயலும் குழந்தை எழுந்தமர முயலும்போது, முழந்தாள்களையும், கைகளிரண்டையும் தரையில் பதித்து ஊன்றிக் கொண்டு,  முகத்தை நிமிர்த்திப் பார்ப்பது ஏறு போல அழகாகக் காண்பதனால், கிருஷ்ணனைப் ‘போரேறே- போருக்குத் தயாராக நிற்கும் இளங்காளை போன்றவனே’ எனத் தாய் பெருமிதத்துடன் விளிப்பதாகக் கூறுகின்றார்.
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா!
          ஊழிதொறு ஊழிபல ஆலின்இலை அதன்மேல்
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!
          பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!
செய்யவள் நின்அகலம் சேமம் எனக்கருதிச்
          செல்வு பொலிமகரக் காது நிகழ்த்திலக
ஐய! எனக்கொருகால், ஆடுக செங்கீரை,
                             ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
(பெரியாழ்வார் திருமொழி-6.1)
குழந்தைக்கு, நல்ல வாசமிகுந்த பொடியைத் தேய்த்துக் குளிப்பாட்டியும், சாம்பிராணி, அகில் முதலான புகைகளை இட்டும், மற்றும் வாசமிகுந்த மலர்களால் அழகு செய்வித்தும்  தாய் ஆனந்தம் கொள்கிறாள். தவழ்ந்து செங்கீரையாடி வருபவனிடமிருந்து இந்த நறுமணக் கலவை தவழ்ந்து வந்து காண்பவர்களைச் சூழ்கின்றது. கிருஷ்ணனாகிய இந்தக் குழந்தை, பால், தயிர், வெண்ணெய் முதலானவற்றில் மிகவும் விருப்பமுள்ளவன். அவற்றை உண்ட அவனிடமிருந்து அவற்றிற்கே உண்டான வாசனை கமழ்கின்றது. மேலும் இப்போது தான் இந்தக் குழந்தைக்குப் பல் முளைக்கத் துவங்கி, பவளம் போன்ற வாயினிடத்தே வெள்ளி முளைத்தது போலச் சில அரும்புப்பற்கள் ஒளி வீசுகின்றன.
கருமணிக்குட்டன் இவன்; அவன் கழுத்தில் தாய் காப்பிற்காக ஐம்படைத் தாலியை (சங்கு, சக்கரம், வாள், தண்டு, வேல் ஆகிய ஐந்து ஆயுதங்களால் அணிந்து கொள்ளும்படி சிறிய அளவில் செய்யப்பட்ட காப்பான ஆபரணம்) அணிவித்திருக்கிறாள். வாயிலிருந்து ஒழுகும் அமுதமனைய உமிழ்நீரானது வழிந்து கம்பிபோன்று விழும்போது இந்த ஐம்படைத்தாலியில் சிக்கியதால் இற்று, முறிந்து விழுகின்றதாம்! எத்தனை துல்லியமான நோக்கினால் விளைந்த வர்ணனை! இத்தனை அழகாக, இந்தச் சிறு குழவியாகிய கண்ணனைச் ‘செங்கீரை ஆடிவா’ எனத் தாயின் நிலையில் நின்று வேண்டுகிறார் பெரியாழ்வார் பிரான். ‘வேதங்களின் பொருத்தமான பொருளானவனே,’ என அவனை விளிக்கிறார் ஆழ்வார். குழந்தையின் தெய்வத்தன்மையை உணர்ந்த பெரியாராதலால், தன்னிச்சையாக இவ்விளி அமைந்தது எனலாமா?
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்
          பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர,
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
          கோமள வெள்ளிமுளை சிலபல் இலக,
நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே
          நின்கனிவாய் அமுதம் இற்று முறிந்துவிழ
ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை,
          ஏழுலகும் உடையாய்! ஆடுக, ஆடுகவே.
(பெரியாழ்வார் திருமொழி-6.9)
தவழ்ந்து வரும் கிருஷ்ணன் கொள்ளை அழகுடையவனாகக் காணப்படுகிறான். பார்க்கப் பதினாயிரம் கண்கள் போதவில்லையாம். ஒவ்வொரு அங்கமாகப் பார்த்து, ரசித்து, அவ்வங்கங்களில் பூட்டப்பெற்ற அணிகலன்களையும் கண்டு, அவை அவனுக்குப் பொருந்தும் அழகினையும் ரசிக்கின்றார். சின்னஞ்சிறு செந்தாமரை போன்ற சிறு திருவடிகள்; அவற்றின் சிறு இதழ்கள் போன்ற குட்டி விரல்கள். அவற்றில் அணிவிக்கப்பட்டுள்ள அழகு திகழும் திருவாழி மோதிரங்கள். கால்களை அழகு செய்யும் கிண்கிணிச் சதங்கை. அரை எனும் இடையில் பொன்னரை ஞாண். மாதுளைப்பூபோன்ற வடிவில் அமைந்த பொற்பூக்களை இடையிடையே வைத்துக் கோர்த்த பொன்மாலையும், கைகளில் மோதிரங்களும், மணிக்கட்டில் தங்க வடங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன. அட! எவ்வளவு அழகாக இவை இவனுக்குப் பொருந்துகின்றன.
இவற்றுடன் மங்கல ஐம்படையும் அணிந்திருக்கிறான். திருத்தோளில் அழகான தோள்வளைகள்; காதில் மகரக் குண்டலங்கள்: செவிகளில் பூண்ட மற்ற ஆபரணங்கள், நெற்றிச்சுட்டி, இவை அனைத்தும் ஒத்து விளங்கும்படியாக செங்கீரை ஆடுவாயாக! என வேண்டும் தாய், பெரியாழ்வாராகி ‘இவன் எங்கள் குலம் விளங்க வந்த அரசன்; குடியைக் காப்பவன்,’ எனும் பேருண்மை மனதிலெழ,”நீ ஏழுலகிற்கும் உரிமை பூண்டவனல்லவோ! செங்கீரை ஆடுக!’ என வேண்டுகிறார்.
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல்விரலிற்
          சேர்திகழ் ஆழிகளும் கிண்கிணியும், அரையிற்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்
          பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
          மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை,
          ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
(பெரியாழ்வார் திருமொழி-6.10)
இது இப்படியெனில், பில்வமங்களர் அந்தக் கிருஷ்ணனின் திருவடியழகை தியானம் செய்வதும் அதனைப் பற்றிய செய்திகளைக் கூறுவதும் இன்னொரு விதமான பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது.
ஓடியாடிய கிருஷ்ணனின் திருவடிகளின் அடையாளங்களான சங்கு, சக்ரம் முதலியன ஆயர்பாடி வீதிகளில் காணப்படுன்றன. மேலும் அவன் ஒடுவதால் அவன் காலிலணிந்துள்ள ரத்னச் சிலம்பு இனிமையாக ஒலிக்கின்றது. அதுவும் எல்லாரையும் பரவசப்படுத்துகின்றது.
மணிநூபுர-வாசாலம் வந்தே தச்சரணம் விபோ:
லலிதானி யதீயானி லக்ஷ்மாணி வ்ரஜ-வீதிஷு
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-1.16)
இதில் இன்னொரு பொருள் தொக்கி நிற்கின்றதென எனக்குத் தோன்றுகிறது. அவன் ஆயர்பாடி வீதிகளில் ஓடியாடுவதனால், எப்போதும் அவ்வடியின் சின்னங்களான சங்கு சக்கரம் முதலானவை காணக் கிடைக்கின்றன. ஓடியாடும் நிகழ்வும் சிலம்போசையினால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. இதுவே, அவன் உண்மையாகவே ஓடியாடாத போதிலும், ‘அவன் விளையாடுவதால் சிலம்பொலி கேட்கிறது’ எனும் மயக்கத்தினை உண்டுபண்ணுகிறது! எப்போதும் அவன் அங்கு ஓடிவிளையாடிய வண்ணம் இருக்கிறான் எனும் எண்ணத்தினை எழுப்பி உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைக்கிறது.
இது கீட்ஸ் தனது கவிதையில் கூறியதைப் போலவேயுள்ளது. ஒன்றைக் கற்பனை செய்து உண்மைபோலவே உணர்வதென்பது மிகவும் நூதனமான ஒரு அனுபவம் தான்.
(Keats in ‘Ode on a Grecian Urn’- Heard melodies are sweet but those unheard are sweeter)
குழந்தை கிருஷ்ணன் நந்தகோபன் திருமாளிகையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்; அன்னையும் தாதியரும் சிறிது அசட்டையாக இருந்த நேரம். பளபளக்கும் கண்ணாடி போன்ற தரை; ஆங்காங்கே ரத்தினக் கற்கள் வைத்து இழைக்கப்பட்டது. தவழும் குட்டனின் முகமானது தாமரை மலர் போலப் பளபளக்கும் தரையில் பிரதிபலிக்கின்றது. குழந்தை அதைப் பார்த்துக் களிப்பெய்துகின்றான். ‘இதோ ஒரு தாமரை! அதன் நான் பிடிக்கிறேன்,’ என முயலுகிறான். முடியவில்லை. திரும்பத் திரும்பக் குட்டிக் கைகளால் தரையில் அடித்து, அசைத்துப் பார்த்தும் அத்தாமரையைத் தொடவே முடியவில்லை! கோபமும் வருத்தமும் மிகக் குழந்தை இப்போது தாதியினுடைய முகத்தை நோக்கி, உதடுகள் நெளிய அழுகின்றானாம்! அருமையான கற்பனையில் விளைந்த இனிமையான அனுபவம் இது!
ரத்னஸ்தலே ஜானுசர: குமார:
          ஸங்கராந்த-மாத்மீய- முகாரவிந்தம்
ஆதாது-லாபஸ்-ததலாப-கேதாத்-
          விலோக்ய தாத்ரீ-வதனம் ருரோத
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-2.52)
‘அரையில் அணிந்துள்ள சதங்கைகள் ‘கிணிகிணி’யென ஒலிக்க முற்றத்தில் இடையறாது தவழ்ந்து விளையாடுகிறான் கிருஷ்ணன். இரு பாதங்களில் அணிந்த சிலம்புகள் ‘குணுகுணு’ வென்ற ஓசையை எழுப்பிக் கொண்டுள்ளன. கைகளில் அழகான கங்கணங்களை அணிந்துள்ள இந்தக் கிருஷ்ணனை நான் வணங்குகிறேன்,’ என அந்தத் தவழும் குழந்தை வடிவத்தை ரசித்துப் பாடுகிறார்.
கிங்கிணி-கிணிகிணி-ரபஸை-
          ரங்கணபுவி ரிங்கணை: ஸதாடந்தம்
குங்குணு-குணு-பதயுகளம்
          கங்கண- கரபூஷணம் ஹரிம் வந்தே    
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-2.75)
இதையெல்லாம் ஒவ்வொன்றாகக் கூறப் போந்தது ஏனெனில், குழந்தை கிருஷ்ணனின் ஒவ்வொரு அசைவும், ஆடலும், அழகும் ஓராயிரம் கற்பனைகளுக்குக் கருவாகி, காவியங்களாக உருவெடுத்து, அடியார்களை அன்புப் பெருக்கில் ஆழ்த்திவிடும் அதிசயத்தினை விளக்குவதற்காகத்தான்.
ஊத்துக்காடு வேங்கடகவி எனும் மகான், இந்தக் குட்டிக் கிருஷ்ணனை, ‘ஆடாது அசங்காது வா, மிகவும் குதித்துக் கூத்தாடாதே,’ என அன்புடனும் ஆசையுடனும் வேண்டுகிறார். எளிமையான தமிழிலமைந்த அருமையான பாடல்:
பல்லவி
          ஆடாது அசங்காது வா கண்ணா உன்
          ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே எனவே
அனுபல்லவி
          ஆடலைக் காணத் தில்லை அம்பலத்திறைவனும் தன்
          ஆடலை விட்டிங்கே கோகுலம் வந்தார்- ஆதலினால் சிறு
          யாதவனே ஒரு மாமயில் இறகணி மாதவனே (நீ ஆடாது)
          சரணம்
          சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே-அதை
          செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
          பின்னிய சடை சற்று வகை கலைந்திடுமே- மயில்
          பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
          பன்னிருகை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன்
          பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே- குழல்
          பாடிவரும் அழகா-உனைக் காண வரும் அடியார் எவராயினும்
          கனகமணி அசையும் உனது திருநடனம்
          கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)
 
‘நீ ஆடினால், உன் அழகுத் திருக்கோலம் கலைந்து விடுமே’ எனக் கரிசனப்படும் தாயின் நிலையைப் பொருத்தமாக விளக்கும் மிக சுந்தரமான பாடல் இது.
பிள்ளைத்தமிழ் என விளங்கும் சிற்றிலக்கியத்தில் செங்கீரைப் பருவம் அருமையான பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்கும். சென்ற நூற்றாண்டில் திருமேனிக் கவிராயர் என்ற புலவரால் எழுதப்பெற்ற மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் எனும் நூலானது சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்து விளங்குகின்றது.  அதிலிருந்து ஒரு செங்கீரைப் பருவப் பாடலைக் காண்போமே!
இந்தப் பிள்ளைத்தமிழ் நூலானது திருப்பேரை எனும் ஊரில் விளங்கும் திருமால் (பெருமாள்) மீது பாடப்பட்டது. பாட்டுடைத் தலைவனை பெரும்பாலும் இராமனாகவே கொண்டு இராமகாதையிலிருந்து நிகழ்வுகளை விவரித்துள்ளார் ஆசிரியர். ஆயினும் கிருஷ்ணாவதாரத்திலிருந்தும் சில செய்திகள் இடையிடவே விரவி நின்று அழகு செய்கின்றன. அதிலொரு பாடல்:
கோவலர் வாழும் ஆய்ப்பாடி எத்திசைகளிலும் மிகுந்த புகழ் வாய்ந்தது. எதனாலென்பது நாமறிந்த ஒன்றல்லவோ? கண்ணன் பிறந்து வளர்ந்து குறும்புகள் செய்து உலகத்தையே மகிழ்வித்து உய்வித்த இடம் திருவாய்ப்பாடி தானே? அந்த ஆய்ப்பாடியில் ஆய்ச்சியர்கள் என்ன செய்துள்ளனர் தெரியுமா? தமது குடில்கள் அனைத்திலும் இரு கயிறுகளைக் கொண்டு பின்னிய உறிகளில் மணிக்கலயங்களை அடுக்கி உயரே தொங்க விட்டுள்ளனராம். ஏன்? அதில் கட்டித் தயிர்- அவர்கள் வாழ்வின் உயிர்நாடி (அதனை விற்றுத்தானே அவர்கள் பிழைப்பு நடக்க வேண்டும்?) நிறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்ப்பாடியில் ஒரு கள்வன்- சின்னஞ்சிறுவன்- அவனைக் கண்டு அனைவருக்கும் பயம்; அவன் திருடுவது பால், தயிர், வெண்ணெய் இவைகளைத்தான். அவற்றினைத்தான் கட்டிக் காப்பாற்றி அவனிடமிருந்து இந்த ஆய்ச்சியர் ஒளித்து வைக்கின்றனர். பிழைப்பு நடக்க வேண்டுமே!
அவனோ பெரிய மாயக்கள்வன். எப்படியோ இவர்கள் ஒளித்து உறிகட்டி உயரே வைத்திருப்பதைக் கண்டறிந்து கொண்டு விடுகிறான். கூடவே ஒரு சிறுவர் சேனை. ‘பரபர’வென்று ஒரு குடிலினுள் புகுந்து விடுகிறான். உயரே உள்ள உறியைக் கண்டு விட்டான். ‘தரதர’வென்று பக்கத்தில் இருக்கும் கல்லுரலை இழுத்து உறியை எட்டும்படியாகப் போட்டு, அதன் மீதிலேறி, அழகாக, வாகாக அமர்ந்து கொள்கிறான். கையினைக் கலயத்தினுள்ளிட்டு தயிர்க்கட்டியை எடுத்துச் சிந்தாமல் சிதறாமல் உண்டு களிக்கிறான். ‘அமிழ்தமூறும் தனது ஒண்பவள வாயிலிட்டு’ உண்கிறான் அக்கள்வன்!
தற்செயலாக வந்து பார்க்கும் ஆய்மகளுக்குச் சினம் மூண்டெழுகின்றது.  வாகாக வந்து உட்கார்ந்து கொண்டு தயிரை உண்டு சுவைப்பவனைப் பிடித்து உரலோடு கட்டி விடுகிறாள். அவனுடைய அன்னையிடம் சென்று முறையிடுகிறாள். ‘கையும் களவுமாக’ப் பிடிபட்ட தன் மகனைக் கண்ணுற்ற தாய்க்கும் சினம் மூண்டெழுகின்றது. தயிர் கடையும் மத்தாலேயே அவனை நான்கு சார்த்து சார்த்துகிறாள் அவள். உடனே கள்வனென்று அறியப்பட்ட அச்சிறு குட்டன் தனது இரு கண்களையும் பிசைந்து கொண்டு அழுகின்றான்.
இது அவனுடைய மாய்மால அழுகை!
அன்னைக்கு உள்ளம் பாகாய்க் கரைந்து உருகி விடுகின்றது. ஆசுவாசப் படுத்துகிறாள் தன் சிறுவனை- சினந்து கொள்கிறாள் மற்ற பெண்களை- ‘எங்கள் வீட்டில் இல்லை என்று இங்கு வந்து திருடினானா? ஏதோ குழந்தை! விளையாட்டுப் போக்கில் செய்து விட்டான்! குறை கூற வந்து விட்டீர்களே!’ என்கிறாள். தாயின் தோளில் முகம் புதைத்த கள்ளன் குறை கூறிய ஆய்ச்சியினைக் கண்டு மாயச் சிரிப்பு சிரிக்கிறான். அவள் உள்ளம் இந்த மாயச்சிரிப்பில் தன் வயமிழந்து விடுகின்றது. உடனே, மனங்கனிந்த அவள் தனது பசுக்களை ஒட்டக் கறந்து, வற்றக் காய்ச்சி சர்க்கரையிட்டுச் சுண்டிய பாலையும் கொடுக்க, அதையும் ஆசையாக உண்கிறான்.
‘தித்தித்த பாலுக்கும் இச்சித்து நின்றவன்’ அக்கள்வனான கிருஷ்ணன்!
‘அத்தகைய பெருமானே! செங்கீரையாடி அருள்வாயாக! செல்வத் திருப்பேரை வல்லியின் மணவாளனே! செங்கீரையாடி அருளுக!’ எனத் தாய் வேண்டுவதாகப் புலவர் கூறுகிறார்.
சுவைமிகுந்த பாடல். சமீபத்தில் அறியப்பட்ட திருமால் மீதான ஒரு பிள்ளைத்தமிழ் நூல் இது. இனிமையும் கவித்துவமும் நிரம்பி வழியும் இது போன்ற எத்தனை எத்தனைத் தமிழ்ச் செல்வங்கள் !
எத்திக்கும் வண்புகழ் தழைத்த திருவாய்ப்பாடி
        இடையர்தம் குடில்கள் தோறும்
    இருகயிற் றுறியடுக் கியமணிக் கலசத்
        திருக்கும் தயிர்க் கட்டிகண்
டொத்திக்கை யிட்டுரல் மிதித்தேறி யடிகுந்தி
        யொரு திவலை சிந்தாமலே
    ஒண்பவள வாய் மருந்துண்டிரும் கள்வனென்
        றுரலோடு கட்டியவர் கை
மத்திட்டடிப்ப விருகண் பிசைந்தழு தரையன்
        மணிபொத்தியாடி மறுகால்
    வாயூறியச் சுவை கனிந்தாய்ச்சிய ரடைபட
        வற்றக் கறந்து காய்ச்சும்
தித்தித்த பாலுக்கு மிச்சித்து நின்றவா
        செங்கீரையாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே.

(கிருஷ்ணலீலைகள் இன்னும் வளரும்)