அமெரிக்க தகவல் நிலையத்திற்கு

VeSaa_Venkat_Saminathan_6

வெங்கட் சாமிநாதன்

டெல்லி
14.2.97

அன்புடைய ……,
நேற்று மாலை நான் உங்கள் இருவரையும் சந்தித்த போது, மிஸ்…. என்னிடம் கொடுத்த வேலைக்கு மனுச் செய்யும் படிவங்கள் இரண்டையும் இத்துடன் இணைத்துள்ளேன். அவை, பெற்றவாறே, திருப்பி அனுப்பப்படுகின்றன.
என்னிடமிருந்து எத்தகைய உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் எனக்குச் சொல்வீர்கள் என்ற எண்ணத்தில்தான் நான் அங்கு வந்திருந்தேன். நான் உங்கள் காரியாலயக் கதவை, ஏதும் வேலை கேட்டுத் தட்டவில்லை என்பதை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் காரியாலயம்தான் என் உதவியை நாடியது என்பதை நீங்கள் நினைவிலிறுத்திக்கொள்ள வேண்டும், உண்மை விவரம் அப்படியிருக்க, என்னை உங்கள் காரியாலயத்துக்கு அழைத்து, ஒரு வேலை கேட்கும் மனுவை என்னிடம் கொடுத்து அதை நிரப்பு என்று சொல்வது என்னை அவமானப்படுத்துவதாகும்.
ஏழை இந்தியர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். எனக்கு எரிச்சலூட்டியது. அப்போதே என் மனதில் பட்டதை உங்களுக்குச் சொன்னேன். இருப்பினும் உங்களைப் பாதி வழியிலாவது சந்திக்க முடியுமோ என்று நினைத்தேன்.
ஆனால், முடியாது. உங்கள் அமைப்பின் ‘பெரியண்ணன் உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்’ (Big Brother is watching you) மனோபாவம், திகைப்பும் அச்சுறுத்தலும் தருவதாக இருக்கிறது. நீங்கள் தந்த படிவம், என்னுடைய சொந்த வாழ்க்கையிலும், என் குடும்பத்தில் வாழ்க்கையிலும், அருவருப்பு ஊட்டும் அளவுக்கு ஆக்கிரமிப்பு பாவம் கொண்ட ஊடுருவலாக இருக்கிறது. சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற இந்தியாவின் பிரதான இலக்கிய கலாச்சார ஸ்தாபனங்கள் எதற்கும் என் பெயரைத் தவிர வேறு ஏதும் தேவையாயிருக்கவில்லை. அவர்களுக்கு என்னிடமிருந்த தேவை Library of Congress – க்கு புத்தகம் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதை விட பலபடிகள் உயர்ந்த தளத்தில் இருந்தது. இதற்கு எதிராக உங்கள் பெரியண்ணன் (Big Brother) அமைப்பு என்னிடம் என்ன கேட்கிறது? என் பிறப்பு தகவல்கள், படிப்பு, பெற்றோர், செய்த பணிகள், என் வேலைக்கால அதிகாரிகள், என் சகோதரர் சகோதரிகளின் தகவல்கள், என் மன ஆரோக்கியத்தின் சரித்திரம்..இப்படியாக இன்னும் நீண்டு போகிறது. என்ன ஆயிற்று அமெரிக்காவிற்கு? அதன் ஆபாசமான செல்வக் கொழிப்பும் அதைப் பைத்தியமாக்கிவிட்டதா? உங்கள் காங்கிரஸ் நூலகத்திற்குப் புத்தகம் தேர்ந்தெடுக்கும் என் தகுதியை, நீங்கள் என்னிடம் கேட்கும் தகவல் குப்பைகள் எப்படி தீர்மானிக்கும்? “தெரிய வேண்டிய அவசியம்” (Need to know) என்று ஒரு செயல்முறை உண்டு, தெரியுமல்லவா? இந்தத் தகவல் குப்பைகள் உண்மையிலேயே உங்களுக்குத் தேவையா? அல்லது ஒரு வேளை பெரியண்ணனின் (Big Brother) திமிரையும் பேராசையையும் இது வெளிக்காட்டுகிறதா? உங்கள் படிவத்தில், ‘நான் எப்போதாவது, ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஃபாஸிஸ்ட் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்ததுண்டா?’ என்று கேள்வி இருக்கிறது. கடந்த 35 வருடகாலமாக, தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் சார்பில் இயங்கும் இலக்கிய அமைப்புகளால் நான், ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்’ என்றும் ‘சி.ஐ.ஏ. உளவாளி’ என்றும், C.I.A.யின் ஊதியப்பட்டியலில் என் பெயர் இருப்பதாகவும் இன்னும் என்னென்னவோ, வசை பாடப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான். இதன் விடம்பனம் என்ன தெரியுமா? ஒரு இலக்கிய வியக்தியான என்னைத் தனக்கு ஆலோசனை சொல்லி உதவ அழைத்து, அருவருக்கத்தக்கதும், என் சொந்த வாழ்க்கையை ஊடுருவி எறியும் நோக்கம் கொண்டதுமான ஒரு வேலை மனுப்படிவத்தை என் மீது விட்டெறிந்து, என்னைத் தன்னுள் இழுத்து விழுங்கப்பார்க்கிறதே, ஏதோ நான் செங்கல் அடுக்கும் கொத்தனார் போல, என் வேலை நேரத்தின் மணிக்கணக்கில் எனக்கு ஊதியம் தருவதாகவும், நான் பாஸிஸ்டா, கம்யூனிஸ்டா அல்லவா என்று பார்க்கிறதே, அந்த உங்கள் அமைப்பில்தான் பாஸிஸத்தின் எல்லாக் குணங்களையும் பார்க்கிறேன்.
vslஆனால், இந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா ‘ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம்’ என்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். “உன்னுடைய நேர்மையையும் , சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய்” என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஓர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன். நான் வேலை பார்த்த இரவு நடன விடுதிகள் என்ன? அங்கு நிர்வாண நடனம் ஆடியவர்கள் யார் யார்? நடன விடுதியின் முதலாளிகள் யார்? என்று நாற்பதாண்டு தகவல் குப்பைகள், புத்தகம் தேர்ந்தெடுக்கும் என் தகுதியைத் தீர்மானிக்க உங்களுக்குத் தேவையா?
முதலில், என் தகுதியை அளக்கும்படி நான் உங்களைக் கேட்கவே இல்லையே.
உங்கள் இருவருக்கும் எதிராக எனக்கு ஏதும் புகார்கள் இல்லை. நீங்கள் என்னிடம் சிநேக பாவத்துடந்தான் இருந்தீர்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் அமைப்பு, செல்வத்தாலும், தன் அதிகார பலத்தாலும் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு ஃபாஸிஸ அமைப்பு. மனிதர்களை மதிக்க அந்த அமைப்பு கற்றுக்கொள்வது நல்லது. நேற்று மாலை ஒரு மணிநேரம் உங்களுடன் சிநேக பாவத்துடன் கழிந்ததற்கு நன்றி. உங்களுக்காக நான் வருந்தத்தான் செய்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள்
வெங்கட் சாமிநாதன்

திருமதி…
அமெரிக்க தகவல் மையம்,
புதுடெல்லி.

(மூலம்: ஆங்கிலம், 14.2.1997)

One Reply to “அமெரிக்க தகவல் நிலையத்திற்கு”

Leave a Reply to SESHADRI Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.