கட்டுரைக்குள்ளே போவதற்கு முன் ஒரு கேள்வி. உங்களுக்கு தெரிந்த கனேடிய பிரதமர்களில் 5 பெயர்களை சொல்லவும். சரி வேண்டாம், மூன்று? அதுவும் கஷ்டமா, ஒன்று? ஒன்று கூட தெரியாதா?
கவலை வேண்டாம். இதே நிலையில்தான் நானும் 5 வருடங்களுக்கு முன் இருந்தேன். அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு ஜாகையை மாற்றிக்கொண்டிருக்காவிடில் எனக்கும் ஒரு கனேடிய பிரதமர் பெயரையும் தெரிந்திருக்காது. அட, கனடாவில் பிரதமரா, ஜனாதிபதி முறையா என்பது கூட அப்போது தெரியாது.
இது தான் உலக அரங்கில் ஒருவிதத்தில் கனடாவின் பிரச்சனை. It’s insignificant. இத்தனைக்கும் கனடா பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சோஷியல் செக்யுரிட்டி என அனைத்து விதங்களிலும் நன்கு வளர்ந்த நாடு, உலகின் மிக அதிக தொழிற்மயமான G7 நாடுகளில் ஒன்று, உலகின் எந்த நாட்டையும் விட இந்தியர்கள், ஈழத்தமிழர்கள், பஞ்சாபிகள் என தெற்காசியர்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறிய/றும் நாடு என்றிருந்தும் ’ஒரு பய’ கண்டுகொள்வதில்லை. அமெரிக்காவை பொருளாதாரம் தொடங்கி பலவிதங்களிலும் சார்ந்த ஒரு நாடு (கனடாவின் 90 சதவீத மக்களே அமெரிக்க பார்டரின் 200 கிலோமீட்டருக்குள்ளே தான் வாழ்கிறார்கள்) என்பதால் அமெரிக்கர்களுக்கும் கனடாவென்றால் இளக்காரமே. ”That big country north of the border”. அவ்வளவே.
ஆனால் கனடாவின் இந்த இமேஜை பெருமளவு மாற்றக்கூடிய ஒரு நிகழ்வு கடந்த சில தினங்களில் நடந்தது. விஷால் அணி ஜெயித்த அதிமுக்கிய தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலை உலகமே லைவாக பார்த்துக்கொண்டிருந்த நன்னாளில் உலகின் இன்னொரு மூலையிலும் ஒரு தேர்தல் நடந்து முடிந்தது. கனடாவின் நாடாளுமன்ற தேர்தல் நடந்து, பத்து வருடங்கள் கழித்து ஒரு ஆட்சிமாற்றம். கனடாவுக்கு இன்றைய தேதியில் உலகின் மிக இளமையான, அழகான பிரதமர் கிடைத்தார்.
ஜஸ்டின் ட்ருடோ.
அவரை பற்றி பேசுவதற்கு முன், கனேடிய அரசியல் அமைப்பை பற்றி சற்றே தெரிந்துகொள்வது ஒரு காண்டக்ஸ்டிற்கு உதவும். கனடாவின் ஆட்சியாளர் எனப்பார்த்தால் அது எலிசபத் மகாராணி தான். கனேடியர்கள் அனைவரும் அவரின் பிரஜைகள். ஆனால் ப்ரிட்டனை போலவே இங்கும் அவர் மரியாதைக்குரிய கொலு பொம்மையே. அவரை தாண்டிப்பார்த்தால் கனடாவின் அரசியல் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பாராளுமன்றம், இரு அவைகள் (ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இன்னொன்று நியமன), பிரதமர், கேபினெட், நமது ஜனாதிபதியை போலவே ஒரு ரப்பர்ஸ்டாம்ப் கவர்னர் ஜென்ரல், 338 தொகுதிகள், தொகுதிவாரியாக எம்பிக்கள் இத்யாதி இத்யாதி. 4 வருடங்களுக்கொரு முறை நாடாளுமன்ற தேர்தல் நடக்கும். நாட்டில் அடிப்படையாக 3 பெரிய கட்சிகள். கன்சர்வேட்டிவ்ஸ், லிபரல்ஸ், நேஷனல் டெமாக்ரடிக் பார்ட்டி (NDP) என. இதுதவிர க்யுபெக் மாகாணத்தில் தனிநாடு கேட்கும் பிராந்திய கட்சி ஒன்று, க்ரீன் பார்ட்டி என ஒரு ஆம் ஆத்மி டைப் கட்சி என சில உதிரிகள் உண்டு. ஆனால் போட்டி என்பது இந்த 3 பெரும் கட்சிகள் இடையே தான்.
கடந்த 10 வருடங்களூக்கு மேலாக மும்முறை ஆட்சிப்பொறுப்பில் அந்தக்கால எம்ஜியார் போல அசைக்கமுடியாது அமர்ந்திருந்தவர் ஸ்டீபன் ஹார்ப்பர். மனிதர் ஒரு அயல்நாட்டு பிரதமர் இமேஜுக்கெனவே வார்த்தெடுத்தது போல இருப்பார். இளமையென்றோ, மூப்பென்றோ சொல்லமுடியாத நடுத்தர வயது, கண்ணிய பெர்சனாலிட்டி, நிர்வாகத்தில் கண்டிப்பு என நல்ல இமேஜ் அவருக்கு. அவரும் நிறைய செய்தார். அவர் ஆட்சியில் நமது வடகிழக்கு போல கண்டுகொள்ளப்படாத பிராந்தியங்கள் நன்கு வளர்ந்தன. பெட்ரோல் எண்ணெய்க்கிணறுகள், Oilsands சார்ந்த இடங்களில் எக்கச்செக்க வேலைவாய்ப்புகள், கேல்கரி போன்ற நடுத்தர நகரங்களின் முகமே மாறியது. கனேடிய டாலரும் ’pairity’ என சொல்லக்கூடிய அமெரிக்க டாலருக்கு நிகராக நின்று விளையாடியது. ‘என்னடா அமெரிக்கா இங்க வந்து பாரு’ என எம்போன்றோர் ஆனந்த கூத்தாடினோம்.
ஆனால் கடந்த ஓராண்டில் நிலைமை மாறியது. உலக அரங்கில் கச்சா எண்ணெயின் விலை கவிழ, அது கனேடிய ஆயில் தொழிலுக்கு இடியாக இறங்கியது. ஏனெனில், கனேடிய ஆயில் தொழில் லாபகரமாய் இயங்க கச்சா எண்ணெயின் விலை குறைந்தபட்சம் பேரலுக்கு 80-100 டாலர் இருக்கவேண்டிய சூழ்நிலை. அது ஐம்பது டாலருக்கும் கீழே கவிழ, எண்ணெய் கம்பெனிகள், அது சார்ந்த போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், தொழில்நுட்ப கம்பெனிகள் கொத்து கொத்தாக ஆட்குறைப்பு செய்தன. வேலையில்லா விகிதம் எகிறியது. அமெரிக்க டாலருக்கு சமமாய் இருந்த கனேடிய டாலர் பெரும் வீழ்ச்சி அடைந்து 65 பைசாவுக்கு வந்தது. இதனால் காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் விலையேறின. கேட்டால் கடைக்காரர்கள் ”கனேடிய டாலர் கவுந்துடுச்சுப்பா, நாங்க எல்லாம் அமெரிக்க டாலர்ல கண்டி வாங்கறோம்” என மூக்கால் அழுதனர். Canada in recession என மீடியாக்கள், பத்திரிகைகள் முழங்கின. ஆனால் கனடாவின் இந்த ‘ரிசஷன்’ போக்கை ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசு கடைசிவரை ஒத்துக்கொள்ளவேயில்லை. தொடர்ச்சியாக மறுதலித்து வந்தனர்.
இச்சூழ்நிலையில் கனடாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் சார்பில் ஸ்டீபன் ஹார்ப்பர் மறுபடி நிறுத்தப்பட, NDP சார்பில் அதன் கட்சித்தலைவர் தாமஸ் மல்க்கேர் என்கிற சிறந்த பார்லிமெண்ட்டேரியன் நிறுத்தப்படுகிறார். போட்டி பிரதானமாய் இவர்களுக்கிடையே தான் என நினைக்கையில், லிபரல் கட்சி சார்பில் ஜஸ்ட்டின் ட்ரூடோ என ஒரு ஆச்சரிய தேர்வு நிகழ்கிறது.
ஜஸ்டின் ட்ரூடோ பொதுவான கனேடிய தயிர்சாத அரசியல் தலைவர் தோற்றத்திற்கு மாறாக ஒரு அசம்பிரதாய தேர்வு. புரளும் தலைமுடியோடு, துளி தொப்பையில்லாது, ஹாலிவுட் ஹீரோ கணக்காய் ஒரு இளைஞர். அரசியல் பாரம்பரியம் உள்ளவர். அவரது தந்தை பியர் ட்ரூடோ 70களில் பத்தாண்டுகளுக்கு மேலாக கனடாவின் பிரதமராக இருந்தவர். அவரின் பதவிக்காலத்திலேயே பிறந்தவர் ஜஸ்ட்டின். ஆனால் ‘பப்பு’ போல ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக ஜஸ்டின் வளரவில்லை. எல்லோரையும் போல் பட்டப்படிப்பு படித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர். அப்பாவின் மறைவின் போது ஜஸ்டின் கொடுத்த அஞ்சலி (eulogy) பேச்சே அவரின் மீதான முதல் வெளிச்சம். பின்னர் மெல்ல அவரின் பேச்சாற்றலிற்காக நிறைய சமூக, சுற்றுச்சூழல் விஷயங்களுக்கு பேச அழைத்தனர். 2005-இல் க்யூபெக் மாகாணத்தின் பாப்பிநியூ என்கிற ஒரு சிறிய டவுனின் கடைத்தெருவில் லிபரல் கட்சியின் உறுப்பினர் படிவத்தை விற்க ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்தார். பிறகு படிப்படியாக 2008-இல் அதே நகரத்தின் எம்பி, 2012-இல் லிபரல் கட்சித்தேர்தலில் போட்டியிட்டு வென்று அக்கட்சி தலைவராக வெகுவேகமான வளர்ச்சி.
2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் பிரதமர் வேட்பாளாராக முன்மொழியப்பட்டபோது லிபரல் கட்சிக்கு அரசியல் அரங்கில் மூன்றாவது இடமே இருந்தது. ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் ஆட்சி நடந்த கடந்த பத்தாண்டுகளில், NDP பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து இருந்தது. லிபரல் கட்சி பல ஊழல் புகார்களில் சிக்கி மூன்றாமிடத்தில் தடவிக்கொண்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர்களும் சரி, பொதுமக்களும் லிபரல் கட்சியையோ, ஜஸ்டினையோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மனிதர் அசரவில்லை. கனடாவின் மேற்கு எல்லைக்கும், கிழக்கு எல்லைக்குமான 9300 கிலோமீட்டரில் ஒரு சிறிய நகரத்தையும் விடாது, நம் மொழியில் சொன்னால் ‘சூறாவளி பிரச்சாரம்’ செய்தார். கைவலிக்க கைகுலுக்கினார், கிழவியை கட்டிப்பிடித்தார், ‘Vote for real change’ செய்வீர்களா என நம்மூர் தலைவர்கள் செய்வதை எல்லாம் செய்தார்.
ஒருக்கட்டத்தில் ரேட்டிங்கில், ஜஸ்டின் நன்கு முன்னேறியிருக்க, கன்சர்வேட்டிவ்கள் தங்களுக்கு போட்டி NDP அல்ல, லிபரல் தான் என உணர்ந்தனர். ஜஸ்டினை நேரடியாக தாக்கும் வகையில் ‘Justin is not just not ready’ என்கிற பிரச்சாரதை முன்வைத்தனர். ஜஸ்டின் பலப்பல பிரச்சனைகளில் உளறிய வீடியோ கிளிப்களை, வெட்டி ஒட்டி தொகுத்து, “Justin is just not ready” என முத்தாய்ப்பாக முடித்து சிறுசிறு வீடியோக்களாக டிவி, இண்டர்நெட் எங்கும் வெளியிட அது வைரலானது. அடிப்படையில் “பொடிப்பய சார் அவன்” என ஜஸ்டினை மட்டம் தட்டுவதே அதன் நோக்கம்.
ஆனால் இதை உணர்ச்சிவசப்படாமல் வெகு அழகாக எதிர்கொண்டார் ஜஸ்ட்டின். பதிலுக்கு “நீ ஒழுங்கா” என ஹார்ப்பரை வையவில்லை. தான் இளமையாக தோற்றமளித்தாலும் தனக்கு 43 வயதாகிறது, நன்கு படித்திருக்கிறேன், ஆசிரியர், அமெரிக்காவில் கென்னடி அதிபரான அதே வயது தான் தனக்கும், தான் ரொம்பவும் சின்னப்பையன் அல்ல என உணர்த்தினார். எல்லாவற்றிக்கும் மேலாக கனேடிய டிவியில் ஒரு 10 செகண்ட் விளம்பரம் தொடர்ச்சியாய் வரும். ஒரு இறங்கும் எஸ்கலேட்டரில் ஜஸ்டின் ஏறுவார் “இப்படித்தான் கனடா போய்க்கொண்டிருக்கிறது, நாம் பாடுபட்டுத்தான் ஏறுகிறோம், ஆனால் அதே இடத்தில் நிற்கிறோம். Vote for real change” என அந்த விளம்பரம் முடியும். வெகு எளிதாய் புரியும்படியாய் இவ்விளம்பரம் இருக்க அது அதிரிபுதிரி ஹிட்டானது.
அவர் முன்வைத்த வாக்குறுதிகளும் எங்கு வலித்ததோ அங்கு தடவிக்கொடுப்பது போல இருந்தது. மிடில்கிளாஸுக்கு இன்கம்டேக்சை குறைப்பேன், பணக்காரர்களுக்கு ஏற்றுவேன். ஒவ்வொரு மாகாணத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகளுக்கு $500 மில்லியன் ஒதுக்குவேன், ப்ரிஸ்க்ரிப்ஷன் மருந்து வகைகளின் விலையை குறைப்பேன், ஸ்டூடண்ட் லோன்களை அவர்கள் குறைந்தபட்ச தொகை சம்பாதிக்கும் வரை கட்டவேண்டியதில்லை, பழங்குடியினர் படித்து முன்னேற மேலும் $500 மில்லியன் ஒதுக்குவேன் என ஒவ்வொரு செக்மெண்ட்டாக சொல்லியடித்த வாக்குறுதிகள்.
இதையெல்லாம் கவனித்த ஊடகங்கள், மெல்ல விழித்துக்கொண்டது. இரண்டாம் இடத்தில் இருந்த NDP கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது. கன்சர்வேட்டிவ்களுக்கு லிபரல் கடுமையான போட்டி கொடுக்கும், ஆனால் கன்சர்வேட்டிவ் தான் வரும், அல்லது தொங்குபாராளுமன்றம் வரும் என்று தான் தேர்தலுக்கு முதல்நாள் வரை கணித்தனர்.
வந்தது அக்டோபர் 19. பாராளுமன்ற தேர்தல் நாள். தேர்தலுக்கான எந்த ஒரு பரபரப்புமின்றி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முந்தைய 4 தேர்தலை விட அதிக்கபடியான வாக்குப்பதிவு. அந்தந்த ஊரில் இரவு 9.30க்கு வாக்குப்பதிவு முடிய முடிய உடனடி வாக்கு எண்ணிக்கை. (கனடாவில் எலக்ட்ரானிக் வோட்டிங் எல்லாம் கிடையாது. வாக்குச்சீட்டு தான்). இதில் குறுப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், கனடாவின் கிழக்குக்கோடியில் இரவு 9.30 என்றால், மேற்குக்கோடியில் அப்போது தான் மணி மாலை 5.30. நாட்டில் 5 டைம்சோன்கள் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல்கள் முடிந்தன. ஆனால் எலக்ஷன்ஸ் கனடா (அவர்களின் தேர்தல் கமிஷன்) இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த ஊரில் வாக்குப்பதிவு முடிய முடிய வாக்குகளை பேய்வேகத்தில் எணணி, அரைமணிக்குள்ளாக ரிசல்ட் அளிக்கத் துவங்கினர்.
முதலில் அட்லாண்டிக் ப்ராவின்சஸ் எனப்படும் கனடாவின் கிழக்கு மாகானங்களில் லிபரல் கட்சியினர் அத்தனை சீட்களையும் கைப்பற்றினர். மற்ற கட்சிகள் அனைத்தும் வாஷ் அவுட். அடுத்து நான் வசிக்கும் டொராண்ட்டொ நகரம் அடங்கிய ஒண்டாரியோ, க்யூபெக் என இரு முக்கிய மாகாணங்களில் ஈஸ்டர்ன் டைம்சோனில் தேர்தல் முடிந்து உடனடி வாக்கு எண்ணிக்கை. இங்கு எப்படி ட்ரெண்ட் எனப்பார்த்தால் டொராண்ட்டொ மாநகரை சுற்றிய அத்தனை இடங்களிலும் லிபரல் கட்சியினர் முழுமையாக 100% சதவீத வெற்றி. லிபரல் கட்சியில் இந்த தடவை சீட் கிடைத்தால் மட்டும் போதும், தீவாளி தான் என்பது போல் அத்தனை பேரும் வெற்றி. முதல் தமிழ் எம்பியான NDP கட்சியை சேர்ந்த ராதிகா சித்சபேசன் எல்லாம் படுதோல்வி. அதே சமயம், லிபரல் டிக்கட்டில் நின்றிருந்த ஆனந்தசங்கரி என்கிற ஈழத்தமிழர் பெருவெற்றி. லிபரல் கட்சியின் நிறமான சிவப்பை வைத்து “Liberals painted the city red” என செய்திச்சேனல்கள் ஃப்ளாஷ்நியூஸ் ஓட்டின. லிபரல் கட்சி ஆபீஸ்களில் பட்டாசு வெடிக்காத, லட்டுவை வாயில் திணிக்காத கொண்டாட்டம் தான்.
இதற்கடுத்து தேர்தல் முடிந்தது ப்ரைரிஸ் எனப்படும் கனடாவின் நடு மாகாணங்கள். கன்சர்வேட்டிவ்கள் தான் அங்கே ஸ்ட்ராங். குறிப்பாக கன்சர்வேட்டிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பரின் தொகுதி எல்லாம் அங்கே தான். “எங்க ஊர் சுல்தான்பேட்டை பொட்டியை உடைக்கட்டும்” என குத்தவைத்து காத்திருந்தார். அம்மாகாணங்களில் கன்சர்வேட்டிவ்களுக்கு நல்ல வெற்றியென்றாலும், அதற்குள்ளாகவே லிபரல்களின் வெற்றி ட்ரெண்ட் தெரிந்து, செய்தி சேனல்கள் லிபரல்களுக்கு வெற்றி என டிக்ளேர் செய்தன. கடைசியாக கனடாவின் மேற்கு எல்லை ப்ரிட்டிஷ் கொலம்பியா மாகாண வாக்காளர்கள் லிபரல் வெற்றி எனத்தெரிந்தே(!) ஓட்டுப்போட சென்றனர். ஒரு வழியாக அங்கும் வாக்கெடுப்பு முடிந்து, எண்ணி முடிக்கப்பட்டபோது, ஜஸ்டின் ஹீரோவாகியிருந்தார்.
லிபரல்கள் கட்சியினர் மொத்த 338 சீட்களில், மெஜாரிட்டிக்கு தேவைப்படும் பாதிக்கும் மேலாக 184 சீட்களை பிடித்து தனிப்பெரும் மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்தனர். குடும்பத்தோடு ஓட்டு எண்ணிக்கையை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ஜஸ்டின் கோட் சூட் அணிந்து கிளம்பி”இது ஜஸ்டினின் வெற்றியல்ல, உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி” என முழங்கினார். ஒரு ஹிஜப் அணிந்த பெண்மணி தன்னிடம் கோரிக்கை வைத்த செண்ட்டிமெண்ட் கதையை சொல்லி உணர்ச்சிவசப்பட வைத்தார். சோஷியல் மீடியாவில் அமெரிக்கர்கள் “ஜஸ்டின் இஸ் க்யூட்” “இதொன்னுதான் கனேடியர்கள் உருப்படியாக செஞ்சீங்க” என மீம்கள் போட்டனர். ஜஸ்டின் பாங்க்ரா ஆட்டம் போட்ட வீடியோ வரை ஃபேஸ்புக்கில் வைரலாக பரப்பட்டன.
அடிப்படையில் ஜஸ்டின் ட்ரூடோவின் வெற்றியென்பது ஒபாமா, மோடியின் வெற்றியின் மோஸ்தரை சார்ந்ததே. மற்ற கட்சியினர் கனடாவின் பாதுகாப்பு, பல்கலாச்சாரத்தன்மையை காப்பது என ஜல்லியடித்தனர். நாடு தடுமாறுகிறது என்பதையே கன்சர்வேட்டிவ்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ரிசஷன், வேலையிழப்புகள், விலைவாசி ஏற்றம் என அவர்களின் அடிமடியில் கைவைக்கும் விஷயங்களால் சோர்வுற்றிருந்த மக்களுக்கு, அடிப்படையாக தேவைப்பட்டது ஒரு மாற்றம். அதை “Vote for real change” என முன்வைத்து வாக்குகளாக ஜஸ்டின் அறுவடை செய்திருப்பது, மக்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்திற்கான நம்பிக்கை விதைகளை தான்.
நாட்டிற்கு தேர்தல் முடிந்த அடுத்த நாள் காலையில், முற்றிலும் இயல்புக்கு திரும்பிய சூழலில், ஒரு உணவகத்தில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்தேன். டிவியில் ஜஸ்டினின் அம்மாவிடம் பேட்டி.
“உங்கள் தொகுதி லிபரல் வேட்பாளருக்கு கூட டோர் கேன்வாசிங் செய்தீர்கள். ஆனால் உங்கள் மகன் ஜஸ்டினுக்கு நீங்கள் பிரச்சாரமே செய்யவில்லையே?”
“என்ன செய்யவேண்டும் என அவனுக்கு தெரியும். ஜஸ்டினுக்கு அவன் அம்மா உதவி வேண்டியது இல்லை. அவன் சின்னப்பையன் இல்லை”
ஜஸ்டின் இப்போது நிரூபிக்க வேண்டியதும் அதே. தான் சின்னப்பையன் இல்லை என்பதை கனேடியர்கள் உணரும் வகையில் ஒரு ஆட்சியை தருவதே அது.