'கோக்' அல்லது C17H21NO4 

குவாதலாஹாரா நகரம் (Guadalajara), மெக்சிகோ.
1984-ல் ஒரு சாதாரண நாள்.  போதைத் தடுப்பு அதிகாரி ‘கீக்கி’ (நிஜப்பெயர் என்ரிகே கமரேனா சாலசார்) மதிய உணவுக்காக வெளியே வரும்போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.  கடத்தியவர்கள் அவரை ஒரு வீட்டில் அடைத்து அவர் மீதான வதையை ஆரம்பித்தனர்.
முதலில் எலும்புகள் உடைக்கப்பட்டன.  அவர்களுக்குத் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை.  பின் மின்சார அதிர்ச்சிக் கொடுக்கப்பட்டது.  பலனில்லை.  பேச வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கீக்கி கதறியது ‘என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்’ என்பது மட்டுமே.
உச்சமாக அவரின் தலையில் திருகாணியால் குடையத் துவங்கினர்.  அவரின் கதறல்களும், வலி தாங்கமுடியாமல் சொல்லும் வார்த்தைகளும் ஒலிநாடாவில் பதியப்பட்டது.  அவர் சொல்லுவதிலிருந்து தங்களுக்கு வேண்டிய துப்புக் கிடைக்குமா என்பதற்காக.  கிடைக்கவில்லை. மெக்சிகோ, மற்றும் யு. எஸ். அரசுகள் அவரைக் கைகழுவின.  ஆனால் அதையும் மீறி போதைத் தடுப்பு அதிகாரிகள் 25 திறமையான அதிகாரிகளைக் கொண்டு குவாதலஹாரா பகுதியை சல்லடைப் போட்டுத் தேடினர்.  அதன் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் உடலை ஒரு மாதம் சென்றபின் தெருவோரத்தில் கடத்தியவர்கள் வீசினர் ( டான் வின்ஸ்லோ-வின் The Power of the Dog நாவல் இதை மையமாக வைத்து எழுதப்பட்டது).
இதுவரை மெத்தனமாக இருந்த போதை ஒழிப்பு மிகத் தீவிரத்தை அடைந்தது இந்த கோர மரணத்துக்குப் பிறகுதான்.  கீக்கி என்ற துணிச்சலான அதிகாரியின் கொடூரமான மரணத்துக்குக் காரணமாக இருந்தது கொக்கேய்ன்.
வட அமெரிக்க காவல் துறையின் மிகப் பெரும் தலைவலி போதை மருந்து.   மெத் (Methamphetamine) எனும் போதை மருந்து ஊக்கி மட்டும் 5 பில்லியன் டாலர்களுக்கு மக்களிடையே சட்ட விரோத கும்பல்களால் விற்கப்பட்டுள்ளது.  போதை மருந்து உபயோகிப்பாளர்கள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த வருடம் செலவழித்துள்ளனர்.  சராசரியாக மாதத்தில் 21 நாட்கள் போதை மருந்தை உபயோகித்துள்ளனர்.  2015-ல் அமெரிக்க போதை மருந்து தடுப்பு மையத்தின் வரவு, செலவுத் த்ட்டம் 26.3 பில்லியன் டாலர்கள்.
படிப்பவரின் மனவுறுதியைக் குலைக்கும் தகவல்களைக் கொண்ட போதை மருந்தை ஏற்றுமதி செய்வதில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது.
ஆரம்பத்தில் மெக்சிகோ போதைப் பொருள் உற்பத்தியில் அவ்வளவு முன்னனியில் இல்லை.    ஆனால் அதை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை யு. எஸ்-ஐ சேரும்.  யுத்தங்களுக்கு செல்லும் இராணுவத்தினர் அடிபட்டால் வலி தெரியாமல் இருக்க மார்பைன் (Morphine) செலுத்துவார்கள்.  இது வலியைக் குறைக்கும் மருந்து.    அதன் அடிப்படைக் கலவையில் போதை மருந்து இருக்கிறது.  இதன் பிரதானக் கூட்டுப் பொருள் பாப்பி விதைகள் மற்றும் ஒப்பியம் பாப்பி எனும் விதைகள்.  இந்த மருந்து செலுத்தப்பட்டவுடன் மத்திய நரம்பு மண்டலத்தை அடைந்து அதன் வலி உணர்ச்சியைக் குறைத்துவிடும்,  அதுவரை வலியில் கதறியவர் அமைதியாகிவிடுவார்.  அதன் பிறகு அவரை சுற்றி உலகமே  இடிந்தாலும் சரி.  மூளை அதைப் பதிவு செய்யாது.
இந்த மார்பைன் தேவைக்காக யு. எஸ் மெக்சிகோவை ஓப்பியம் விதைகளைத் தயாரிக்க பண உதவி செய்தது.  பல விவசாயிகள் இதில் பணம் பார்த்த்னர்.  ஓப்பியம் பாப்பியிலிருந்து ஹெராய்ன் தயாரிக்கலாம்.  இதுதான் போதை மருந்துக் கடத்தலுக்கு அடிப்படை.
தேனை எடுத்தவன் புறங்கை நக்குவது சகஜம்.  விளைந்த ஓப்பியம் விதைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கறுப்பு சந்தையில் விற்கப்பட்டது.  இதில் அர்சாங்க அதிகார்களும் ஈடுப்பட்டனர்.  ஊழல் காவல் அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தேர்ந்தெடுக்கும் முதல் வேலை போதை மருந்து குழுக்களுக்குப் பாதுகாப்பு தருவது அல்லது தானே தலைவனாகி போதை மருந்து கடத்துவது.
கொக்கேய்னின் முக்கியத்துவத்தை மெக்சிகோவுக்கு காண்பித்தது பாப்லோ எஸ்கோபார்.  வட அமெரிக்காவுக்கு கொக்கேய்னைக் கடத்த அவர் மெக்சிகர்களை உபயோகப்படுத்தினார்.  பின் மெக்சிகர்கள் சுதாரித்து தாங்களும் குழு அமைத்து எஸ்கோபாரிடமிருந்து பணத்திற்கு பதில் கொக்கேய்னையே 30-50 சதவிகிதம் கூலியாகப் பெற்ற்னர்.  அதை விற்க? இருக்கவே இருக்கிறது யு. எஸ் மற்றும் ஐரோப்பா.

co
பணம் வந்தால் பகை வரும்.  அதனுடன் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள், அடியாட்கள் எல்லாம் வருவார்கள்.  சண்டை வரும், குழுக்கள் இணையும்,, பிரியும், காட்டிக்கொடுக்கப்படும், காட்டிக்கொடுக்கும்.
அப்படிப்பட்ட குழு தலைவர் ஒருவர்தான் மீகேய்ல் கலார்தொ.  முழு பெயர் மிகேய்ல் ஆன்ஹெல் ஃபீலிக்ஸ் கய்யார்டோ (Miguel Angel Felix Gallardo).  காவல் துறையில் வேலை செய்தபோது போதை மருந்துக் குழுக்களை வேட்டையாடிய அனுபவத்தை, குற்றக் கும்பல்களுக்குத் தலைவனான பின் உபயோகப்படுத்தினார்.  இவர் இன்றைய cartel என்றழைக்கப்படும் பெருங்குழுக்களை உருவாக்கிய முன்னோடி எனலாம்.
சீனலோவா மாகாணம் கொக்கெய்ன் தயாரிப்பில் முன்னனியில் இருக்கிறது.  1800-களில் சீனர்களால் ஓப்பியம் இங்குக் கொண்டுவரப்பட்டது.  ஓப்பியம் வளர்வதற்கு சரியான வானிலை தேவை.  மிதமான வெப்பம், குளிர் இதற்கு அவசியம்.  சீனலோவா பகுதி அப்படிப்பட்டது.  எங்குப் பயிரிட்டாலும் ஓப்பியம் நம் ஊரில் தக்காளி போல வளர்ந்தது.  ஏறக்குறைய 160 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் போதை மருந்துக்குத் தேவையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  இதில் உழைப்பவர்களுக்கும், அவர் குடும்பத்திற்கும் பணமும், சாப்பாடும் நிச்சயம்.  தலைமுறையாக இதில் ஈடுப்பட்டவர்கள் உண்டு.  சினலோவா மாகாணத்தின் பள்ளிகள், கல்லூரிகள் பல இந்த போதை மருந்தின் வருமானத்தில் எழுப்பப்பட்டவை.
இங்கு உற்பத்தியாகும் போதை பொருள்கள் யு. எஸ்ஸின் கணிசமான தேவையை நிறைவேற்றுகிறது.  இதுவரை யு. எஸ்-ல் 80 பெரு நகரங்களில் சினலோவாவின் போதை மருந்து கூட்டத்தின் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.  மெக்சிகோவிலிருந்து வரும் போதைப் பொருட்களை மற்றவர்களுக்கு வினியோகம் செய்யும் பொறுப்பு இவர்களுடையது.  18 வருடங்களில் குறைந்தது 200 டன்கள் கொக்கெய்ன் யு. எஸ்ஸில் இறக்குமதி ஆகியிருக்கின்றது.  மற்ற போதை மருந்துகள் தனி.  சமீபத்தில் பிடிப்பட்டு, பின் தப்பிவிட்ட எல் சாப்போ இதன் முக்கியமான தலைவர்.
இந்தப் போதை மருந்துத் தயாரிப்பில் ஈடுப்பட்டவர் அனைவருமே ஒரு காலத்தில் அதி தீவிர வறுமையை சந்தித்தவர்கள்.  செயலற்ற அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்கள்.  மெக்சிகோவின் சீரழிந்த சட்ட ஒழுங்கு இவர்களை வெகு எளிதாக போதை மருந்துத் தயாரிப்பில் ஈடுபடுத்தியது.
போதை மருந்தினால் சமூகம் அடைந்த சீரழிவைக் கண்டு அலறிய அமெரிக்க அரசு, DEA, எனும் Drug Enforcement Administration பிரிவை 1973-ல் துவக்கியது.  அது மெக்சிகோவுக்குக் கொடுத்த அழுத்தத்தில் பல கோடிகணக்கான டாலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிப்பட்டன.  இன்னும் முக்கியமாக தலைவர்கள் பிடிபட்டனர்.  இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அவர்கள் யு எஸ் நீதித்துறையால் விசாரிக்கபடுவர்.  குறைந்தபட்ச தண்டனையே வாழ்னாள் சிறை.  பிணமாகத்தான் வெளிவரமுடியும்.
நவம்பர் 1984-ல் 480 பேர் கொண்ட மெக்சிகன் இராணுவம் யு எஸ் போதை தடுப்பு வாரியம் கொடுத்தத் தகவலின் பேரில் ஒரு பெரிய கொக்கெய்ன் பண்ணையை வளைத்து மொத்த விளைச்சலையும், பண்ணையையும் அழித்தது.  ஏறத்தாழ அன்றைய 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அழிவு.  போதைமருந்து குழுக்களுக்கு இது ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லையென்றாலும் (இந்தப் பணத்தை அவர்களால் சுலபமாக மற்ற தென்னமெரிக்க நாடுகளிடமிருந்து போதைப் பொருள்களை வாங்கி, விற்று ஈட்டிவிட முடியும்), அவர்கள் இந்த அழிவு எப்படி சாத்தியமாயிற்று என்ற விசாரணையில் இறங்கினார்கள்.  ஏனென்றால்,  காவல்துறை உள்ளூர் அரசியல்வாதிகள் எல்லாம் இவர்கள் கையில்.  அவர்களுக்குப் பணம் செல்லுமே தவிர, போதை பொருட்கள் அளவு, கடத்தப்படும் நேரம், விளைச்சல் இதைப் பற்றியெல்லாம் தெரியாது.  தெரியாமல் இருப்பது போதைக்குழுக்களைவிட அவர்களுக்கு நல்லது.  அப்படியென்றால் குழுவோடு உறவாடுபவன், அதன் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் நன்கு அறிந்தவன் இரட்டை உளவாளியாகக் குடியைக் கெடுத்திருக்கவேண்டும்.
இன்று 8 பில்லியன் டாலர்கள்,  நாளை முழு சீனலோவாவும் இராணுவ செயல்பாட்டினால் போதை மருந்தை உதறி சோளம் பயிரிடலாம்.
இதை நிறுத்த நடந்த விசாரணையில் சிக்கியவர் காவல் அதிகாரி கீக்கி.  கீக்கி போதைக் குழுக்கள் தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர்.  இதனால் இவர் மேல் நம்பிக்கை வைத்து போதை மருந்து தலைமை, தேவைக்கு அதிகமாகவே விவரங்களைக் கொடுப்பது வழக்கம்.  அதில் ஒரு விவரத்தை  மெக்சிகோ இராணுவம் பெற்று வெற்றிகரமாக முன் சொன்ன போதைக் கிடங்கை அழித்தது.
ஆனால் கீக்கி-யின் மற்றொரு முகம் அவர் அமெரிக்க போதை தடுப்பு கழகத்தின் அதிகாரி. பகையாளியை உறவாடிக் கெடுக்க அனுப்பப்பட்டவர்.   வட மெக்சிகோவிலிருந்து யு எஸ் தென் மாகணங்களுக்குப் போதைப் பொருள்கள் சேரும் வழிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்தவர்.  ஆனால் போதைக் குழுக்களுக்கு இவரின் உண்மை முகம் தெரியாது..  மிகச்சில பேருக்கு மட்டுமே மெக்சிகோவில் தெரியும்.  அதில் ஒருவர் விலை போனதில் இவர் உயிர் போனது.
இவர் மரணத்துக்குப் பின் யு எஸ் சீறி எழுந்தது.  போதைத் தடுப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.  சிறு போதைப் பொருள் குற்றங்களுக்கும் மாட்டினால் 20, 30 வருடங்கள் என்று கேள்வி கேட்காமல் உள்ளே தள்ளினார்கள்.  எதிராளி துப்பாக்கி வைத்திருக்கிறான் என்றாலே சுடப்பட்டான்.  மக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  அதிகமாக பாதிக்கப்படும் கீழ், நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டு, பள்ளிகளில் போதைத் தடுப்பு கண்டிப்பாக்கப்பட்டது.
என்றாலும் இதை ஒழிக்க அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் சோகம்.
‘கோக்’ என்று அழைக்கப்படும் கொகேய்னை எப்படித் தயாரிக்கிறார்கள்?
இதைத் தயாரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.  செடிகள் விளைவிப்பதிலிருந்து, அது மக்கள் கையில் சேரும் வரையில் பல்லாயிரக்கணக்கானவர்களின் விபரீத உழைப்புத் தேவைப்படுகிறது.  புது கோக்கோ செடிகள் உருவாக்கக் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் நன்கு வளர்ந்த மற்றொரு கோக்கோ செடியின் விதைகள் வேண்டும். சரியானபடி பார்த்து வளர்த்தால் வருடத்திற்கு மூன்று போகம் அறுவடை கிடைக்கும்.
இலைகள் பறிக்கப்பட்டவுடன் 24 மணிநேரத்துக்குள் காயவைக்கப்படவேண்டும்.  இல்லையென்றால் தூக்கியெறிய வேண்டியிருக்கும்.  பின் இரண்டு குழிகள் வெட்டப்பட்டு, முதல் குழியில் காய்ந்த இலைகளோடு, பொட்டாஷியம் கார்பனேட் மற்றும் மண்ணெண்ணெய் சேர்க்கவேண்டும்.  இந்தக் கலவையை நம் ஊர்களில் அரிசி மாவு இடிப்பது போல் இடிப்பார்கள்.  இது கொகேய்ன் கார்பனேட் எனும் பச்சையான திரவத்தைக் கொடுக்கும்.
திரவம் வடிக்கப்பட்டு, இரண்டாவது குழிக்கு மாற்றப்படும்.  இதனுடன் அடர் கந்தக அமிலம் சேர்ப்பார்கள்.  இது வேதியியல் மாற்றத்தால் கொக்கெய்ன் சல்பேட் பசை ஆகிறது.  இதைக் காய வைத்து அசிட்டோன் என்னும் இயற்கை வேதிப் பொருளோடு சேர்த்த ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை சேர்த்து பலமுறை வடிக்கட்டுவார்கள். இது கொக்கெய்ன் ஹைட்ரோ க்ளோரைட் ஆகிறது.  சுருக்கமாக கொக்கெய்ன்.
ஒரு கிலோ கொகெய்ன் தயாரிக்க 300 கிலோ கோக்கோ இலைகள் வேண்டும்.  இந்த சிக்கலான தயாரிப்பு சிலரால் மட்டுமே செய்ய முடிவதால் இதன் மதிப்பு சந்தையில் அதிகம்.  இது தவிர அதை பயணரிடம் சேர்க்கும் வரையான செலவும், அபாயமும் அதிகம்.  ஒரு கிலோ கொலம்பியா கொக்கெய்ன் 1500 டாலர்களுக்கு (கொலம்பிய பண மதிப்பில் 1 யு. எஸ் டாலர் = ஏறத்தாழ 2800 பெசொக்கள்). வாங்கப்பட்டு யு. எஸ் வந்தடையும்போது 27000 டாலர்களாகிறது.  ஒரு கிராமின் சந்தை விலை 60 டாலர்கள்.  அதாவது ஒரு கிலோ 60000 டாலர்களுக்குத் தெருக்களில் நமக்கு விற்கப்படுகிறது.  இது கலப்படமில்லாத ஒரு கிலோ.  இதனோடு பல வேதிப் பொருட்களைக் கலந்தும் விற்பார்கள்.  ஒரு கிராம் விலை குறைவு. ஆனால் விற்கும் அளவு அதிகம் என்பதால் லாபம் பல மடங்கு.
இன்று கொகெய்ன் மெக்சிகோவிலிருந்து ஐரோப்பா, ஆசியாவுக்குக் கடத்தப்படுகிறது.  அங்கு விலை யு.எஸ்-ல் விட இரு மடங்கு அதிகம்.   பலம் வாய்ந்த குழுக்கள் இதை விநியோகம் செய்கின்றன.  இதில் 1991-ல் பிளவுண்ட சோவியத் யூனியனிலிருந்து, இத்தாலி, ஸ்பெய்ன் போன்றவை அடக்கம்.
உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன.
இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது?  வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது.  முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது.  பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது.
உதாரணமாக அமெரிக்க வங்கியான வாக்கோவியா வங்கி வழியே கடத்தல் கும்பல்கள் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை ஒரு முன்னாள் பிரிட்டீஷ் காவல் அதிகாரி துணிச்சலாக செயல்பட்டு, வங்கி முட்டுக்கட்டைகளைக் கடந்து நிரூபித்தார்.  வாக்கோவியா வங்கி 110 மில்லியன் டாலர்களையும், அது தவிர 50 மில்லியன் டாலர்களையும் அபராதமாகக் கட்டியது.
இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.
இன்னும் ஏன் போதைமருந்து கடத்த முடிகிறது?  இதில் இருக்கும் லாபம், சாகசம், கிடைக்கும் பலம்,  இதன் மீது மனித இனத்தின் அதீத மோகம் என்று பல.  இந்த ஒரு வஸ்து மட்டும் மனிதனாகப் பார்த்து விலக்கினால்தான் உண்டு.
உதவிய நூல் மற்றும் தளங்கள்:
Zero, Zero, Zero – Roberto Saviano
http://www.businesspundit.com/10-largest-illegal-drug-trades-on-earth/
http://www.drugwarfacts.org/cms/Economics#sthash.OsCwlitq.wH73GzAG.dp

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.