ரெகோ

princeரெகோ அந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். எதிரில் பெருங்கூட்டம். எப்படியும் பல ஆயிரம் பேர் இருக்கக் கூடும். இத்தனை பேருக்கும் என்ன பதில் சொல்வது என்பதை நினைக்கும் போது அவனுக்கு நிரம்பக் கவலையாக இருந்தது. கூட்டத்தைக் கடந்து பின்னே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மஞ்சள் நிறக் கடலைப் பார்த்தான். தனக்குப் பெரும் பொறுப்பும் பாரமுமிருப்பதை அக்கடலைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தபடியிருந்தான். கூட்டத்தில் துளிச் சப்தமில்லை. அவ்வளவு பேரும் ரெகோவின் புருவ அசைவுக்காக காத்திருந்தனர். கடலின் கீச்சொலி முழங்கியபடி இருந்தது.
பெருமூச்செறிந்த ரெகோ சட்டென்று எழுந்தான். கூட்டம் லேசாகப் பரபரப்படைந்து அமைதியானது. அவ்வப்போது செங்காக்கைகள் இருளைக் கிழித்துக் கொண்டு வானில் குறுக்கும் நெடுக்கும் பறந்தபடி இருந்தன. அவற்றின் சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. சாதாரணமாய்ச் செங்காக்கைகள் நகருக்குள் வருவதில்லை. அவ்வாறு வருமாயின் அது துர்சகுனம் என்று மத்தாயா சொல்லியிருந்தது அவனுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
எழுந்தவன் யோசனையாக அரியணையின் மேல் கை வைத்து நின்றான். பின் மெல்லத் திரும்பி நடந்து அந்த மெல்லிய இரும்புத் திரையை விலக்கிக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அவனுக்கு யோசிக்க அவகாசமும் தனிமையும் தேவையாக இருந்தது.
வெளியே வந்தவனை மனைவி முறைத்தாள். வெகு நேரமாகக் கதவைத் தட்டியபடியே இருப்பதாகவும் அவன் கதவைத் திறக்காமல் எரிச்சல் மூட்டியதாகவும் சொல்லி முகத்தை சுருக்கினாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். தலை குனிந்திருந்தது. பின் அவன் கையில் ஒரு வயர் கூடையைத் திணித்து ஒரு தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் கொஞ்சமும் அவள் அம்மாவுக்கு கால் விரலிடுக்குகளில் அரிப்பிருப்பதால் சைபாலும் வாங்கி வரச் சொல்லிப் பணித்தாள்.
பக்கத்திலிருக்கும் கடைக்குப் போக உடை மாற்ற வேண்டியதில்லை எனவும் கட்டியிருக்கும் கைலியே போதுமென்றும் அதிகாரமாய்த் தெரிவித்து இதற்கு மேலும் தாமதிக்காமல் போய் வரும்படி இடித்தாள்.
யோசனையாய் வயர்க் கூடையைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தவனின் பாதையில் மந்திரி சுகிஷி எதிர்ப்பட்டார். அவர் முகமும் இருளடைந்திருந்தது.அவரைப் பார்த்ததும் இவன் தயங்கிப் பின் நடையை நிறுத்தினான். கிருதர்கள் எந்நேரமும் படையெடுத்துக் கடல் வழியாகவோ காடு வழியாகவோ வரலாமென்றும் அவர்களின் படை பலம் தம்முடையதை விடவும் மூன்று மடங்கு மிகப் பெரிதென்றும் ஏற்கனவே ஒற்றர்களின் மூலமாக அவர்கள் பல காலம் திட்டமிட்டு எல்லைகளை மெது மெதுவே சுற்றி வளைத்து விட்டார்களென்றும் ஏற்கனவே அவனுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறி ஆறுதல் தருவதற்குப் பதில் கலக்கமூட்டினார். அவர் கைகளை இறுகப் பற்றி ஏதேனும் நிச்சயம் செய்வதாக உறுதியளித்தான். அவர் திருப்தியடையவில்லை என்பதை அவர் பார்வை காட்டியது. மெல்லத் தலையை ஆட்டியபடியே அகன்றார்.
அவர் அகன்ற அடுத்த நொடி அவன் மனைவி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அவன் இன்னமும் வாசலில் நிற்பதைப் பார்த்துக் கடுங்கோபம் கொண்டாள். எதற்கும் லாயக்கற்றவன் என்று அவனைப் பார்த்து கத்தினாள்.கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு வாசலில் தேங்கியிருந்த சேற்றில் கால் வைத்து விடாமல் கவனமாய்த் தாண்டி நடக்கத் துவங்கினான்.
காலையிலிருந்தே மேக மூட்டமாக இருட்டுக் கோர்த்துக் கொண்டு தான் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்பது போல் போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது. மஞ்சள் கடலின்  கரையில் காத்திருக்கும் அத்தனை மக்களும் அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தனர். அது அவன் சங்கடத்தை மேலும் அதிகப் படுத்தியது. புயல் அறிகுறியால் கடல் வேறு பொங்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது கரையில் காத்திருந்த பேர்களில் ஓரிருவர் அலைகளால் தூக்கிச் செல்லப்படுவதும் திரும்ப வருவதுமாக இருந்தனர்.
தேங்காயையும் பச்சை மிளகாயும் வாங்கியவன் மனக்கிலேசத்தில் சைபாலை மறந்து விட்டான். அவன் கவலையெல்லாம் அவன் போட்ட திட்டம் சரியாக வேலை செய்ய வேண்டும் என்பது தான். அந்தத் திட்டத்தில் நிறைய ஆபத்துக்களும் பிரச்னைகளும் இருப்பதை அறிந்தே இருந்தான். இருந்தும் அதைத் தவிர வேறு உபாயங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசி முயற்சியாக அதில் இறங்கியிருந்தான்.
இத்தனை லட்சம் மக்களுக்கும் அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தான் தான் பொறுப்பு என்னும் உணர்வு அவனுக்குப் பெருமிதத்தையும் கலக்கத்தையும் ஒரு சேரக் கொடுத்தது.வீட்டை அடைந்து வயர்க்கூடையை மனைவியிடம் கொடுத்ததும் அவள் முதலில் மறந்து போன சைபாலைத் தான் தேடினாள். அது இல்லையெனவும் எதையும் திட்டம் போட்டு செய்யத் தெரியாதாவெனவும், சிறு விஷயம் கூட உருப்படியாய்ச் செய்யத் தெரியவில்லை எனவும் காட்டுக் கத்தாய்க் கத்தினாள். அவள் பேசி முடித்துச் சோர்வுறும் வரை தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தவன் அவள் ஓய்ந்ததும் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
அவன் யோசிக்க வேண்டியிருந்தது. திரும்பியவன் கண்களில் கடலுக்குள் வெகு தூரத்தில் ராட்சச அலை ஒன்று பட்டது. மிகப் பிரம்மாண்டமான அலை அது. அது அடங்க ஓரிரு நிமிடங்கள் பிடித்தது. அடங்கிய பிறகு தான் புரிந்தது அது புயலால் ஏற்பட்ட அலை அல்ல என்று. கிருதர்கள் கடல் வழி வருகிறார்கள். அவர்களது ராட்சத நாவிக் கப்பல் தான் அது. பெருமூச்செறிந்தான் ரெகோ.
கிருதர்களின் தந்தை இருந்தவரை இவனோடு நட்பாக இருந்தவர். அவர் பார்ப்பதற்கு ஜாடையில் இவன் மாமனார் போலவே இருப்பதாக அடிக்கடி எண்ணிக் கொள்வான். எந்தப் பிரச்னையுமின்றி சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த நட்பில் இடி விழுந்தது போல் அவர் இறந்தார். அவரின் இரண்டு மகன்களுக்கும் நட்பிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இவன் நாட்டை எப்போது பிடிக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் இவன் கொஞ்சம் அசந்து பிள்ளையின் ஸ்கூல் அட்மிஷன் படிப்பு ட்யூஷன் என்று பிஸியான சமயத்தில் படைகளைத் திரட்டி வேலையைக் காட்டி விட்டார்கள். இவனுக்கு இன்னமும் நம்பிக்கை இருந்தது. எப்படியும் தன் திட்டம் வேலை செய்து விடுமென்று.
படபடவென்று கதவு தட்டப்படவே நினைவுகளிலிருந்து மீண்டவன் கதவைத் திறந்தான். மனைவியும் மகனும் நின்றிருந்தார்கள். மகனுக்கு ஆய் வருகிறதென்றும் கூட்டிப் போகுமாறும் அவன் முடிக்கும் வரை பொறுத்திருந்து கழுவி விட்டு ட்ரவுசர் மாட்டி அனுப்புமாறும் பணித்தாள். திரும்பியவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக மீண்டும் இவனைப் பார்த்தவள், இதையேனும் ஒழுங்காக்ச் செய்யுமாறு கடிந்து கொண்டு நகர்ந்தாள். மகனைக் கைபிடித்து கழிவறை அழைத்துச் சென்றான். கப்பல் ஆக்ரோஷமாக ஆடியபடி வந்து கொண்டிருந்தது.
மகன் அப்பா போயிட்டேன் கழுவியுடுப்பா என்று சப்தம் கொடுக்கவும், சென்று கழுவி விட்டு விட்டு விட்டு , மகனை படிக்க அமர்த்தி விட்டு நகர்ந்தான். கப்பலைக் கவனிக்கத் தலைப்பட்டவனை மனைவியின் குரல் மீண்டும் பிடித்து இழுத்தது. மாடியில் துணிகள் காய்வதாகவும் இரவானால் மழை வந்து விடுவதாகவும் இப்போதே பனி விழத் துவங்கியிருக்குமென்றும் உடனே சென்று துணிகளை எடுத்து வருமாறும் ஏவினாள்.கப்பலைப் பற்றி தவிப்பாக இருந்தது. மடமடவென்று மாடிப் படிகள் ஏறினான்.
உப்பரிகையில் நின்றபடிக் கடலை நோக்கினான். கப்பல் தெரிந்தது. மக்கள் இன்னமும் காத்திருந்தனர். மழை இன்னமும் பெய்தபடி இருந்தது. கடல் இன்னமும் பொங்கியபடி இருந்தது. இதென்ன? திடீரென்று கப்பல் நிற்கிறது. ஒரு வேளை… ஒரு வேளை…. திடீரென்று சம்மட்டியால் அடித்தது போல் கீழிருந்து மனைவியின் குரல் வந்தது. இன்னும் என்ன செய்கிறானெனக் கேட்டு. அவசர அவசரமாகத் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான். மீண்டும் உப்பரிகையை அடைய வேண்டும். இங்கிருந்து தெளிவாய்த் தெரியும். அவன் நினைத்தது நடந்து விட்டதாவென்று அறியும் ஆவல் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
துணிகளை சோபாவில் வீசி எறிந்து விட்டு மாடியை நோக்கி ஓடினான்.மனைவியின் குத்தற் குரல் முதுகில் பாய்ந்து வந்து தாக்குவதை சட்டை செய்யாமல் மாடிக்கு ஓடினான். மூச்சு வாங்கினான். இவன் கடலை ஆர்வத்துடன் கவனிப்பதைப் பார்த்து இவனைக் கவனித்தபடியிருந்த ஒட்டு மொத்த மக்கள் கூட்டமும் கடற்திசை நோக்கித் திரும்பியது.
அப்போது தான் அது நடந்தது. கப்பலிலிருந்து திடீரென்று ஒரு ஒளி புறப்பட்டது. அது அபாயம் ஏற்பட்டால் கப்பலிலிருந்து கரைக்கு சமிஞை செய்யும் வாண வெடி. வழக்கமாக அவ்வெளிச்சம் மஞ்சள் நிறத்திலிருக்கும். ஆனால் இப்போது புறப்பட்ட வெளிச்சம் கரும் சாந்து நிறத்தையொட்டி இருந்தது. கப்பலின் முகப்பிலிருந்து புறப்பட்ட அவ்வொளி உயர்ந்து உயர்ந்து வான் நோக்கி வளர்ந்து பிரம்மாண்டமாக வெடித்துச் சிதறி ஒளிப் பிழம்பை வானில் சிதறடித்துக் காணாமல் போனது. ஓரிரு நொடிகள் தாமதித்து மீண்டும் அதே போன்றதொரு ஒளிப் பிழம்பு. பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சு பரவசத்தில் விம்மியது. அவன் ஆட்கள் திட்டம் போட்டாற் போலவே வேலையை முடித்து விட்டிருக்கிறார்கள்.
கிருதர்கள் தலைவனின் இரு மகன்களையும், அவர்களுக்குள் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து அழிக்க மிகத் திறமையான வீரர்களை அனுப்பியிருந்தான். மந்திரிக்குக் கூட இந்த விஷயம் தெரியாது. அவர்கள் தங்களுக்களிக்கப்பட்ட பணியில் வெற்றி பெற்றதற்கான அடையாளம் தான் இந்த சமிஞை.இது போல் மூன்று முறை ஒளிப் பிழம்பை வெடிக்க்ச் செய்ய வேண்டும் என்பதே கொடுக்கப்பட்டிருந்த கட்டளை. இரண்டு வெடிகள் வெடித்து முடித்து விட்டிருந்தன.
மூன்றாம் ஒளிக்காகக் காத்திருந்தான். சில நொடிகள் தாமதிக்கவே மனம் லேசாகப் பதற்றமடைந்தது. நல்ல வேளையாக மேலும் தாமதிக்காமல் மூன்றாம் ஒளிப் பிழம்பு வெடித்து மறைந்தது. மக்களை பார்த்தான். மெல்ல வலது கை முஷ்டியை முறுக்கி உயர்த்தினான். அவனது செய்கையின் அர்த்தம் புரிய மக்களுக்கு சில நொடிகளானது.
புரிந்ததும் கடல் ஓசையையே மழுங்கடிக்கும் ஆரவாரம் எழுந்தது. ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது மக்கள் எகிறிக் குதித்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடியும் முத்தமிட்டபடியும் இருந்தனர். எல்லாரும் ஒன்று கூடி “ரெகோ ஜெய்கி” “ரெகோ ஜெய்கி என்று கோஷம் எழுப்பினர். அந்த கோஷத்தைக் கேட்கக் கேட்க ஆனந்தமாக இருந்தது.கண்கள் மூடி அதில் ஆழ்ந்தவனை உலுக்கி எழுப்பியது அவன் மனைவியின் குரல். கடல் ஆர்ப்பரிப்பை விடவும், மக்களின் ஆரவாரத்தை விடவும் வலுவாக இருந்தது அவள் குரல்.
லேசான பதற்றம் தொற்றிக் கொண்டது. மெல்லக் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கீழே இறங்கினான். வாசலில் வெள்ளை வேட்டி சட்டையில் நின்றிருப்பவரை அடையாளம் தெரிந்தது. அவரிடம் கடன் வாங்கியிருப்பது நன்றாக ஞாபகம் இருந்தது. அவர் பெயர் மட்டும் மறந்து விட்டிருந்தது. பெயரை யோசித்தபடியே சங்கடமாக அவருக்கு ஒரு வணக்கம் சொன்னான்.
அவர் பதில் வணக்கம் சொல்லாமல் தன் கோபத்தைக் காட்டினார். வாழைப்பழத்தில் முள்ளேற்றுவது போல் வார்த்தைகளால் குத்தித் துளைத்தார். வட்டி கட்டவில்லை என்பதற்காக. மகன், மனைவி, மாமியார் என்று எல்லாரும் காணாமல் போய் விட்டிருந்தனர். அறைக்குள் சென்று பதுங்கியிருக்கக் கூடும். பின்னால் மக்களின் ஆரவார இறைச்சல் வேறு கேட்டுக் கொண்டே இருந்தது.
இன்னும் நான்கு நாட்கள் அவகாசம் தருவதாகவும் அதற்குள் வட்டியைக் கட்டிவிடுமாறும் எச்சரிக்கை செய்தவர் கிளம்பிப் போனார்.மீண்டும் பெருமூச்சு. வந்தவர் கிளம்பியதை அறிந்து மெல்லப் பதுங்கியிருந்த மனைவி வெளியே வந்தாள். இவன் கையாலாகாத் தனத்தை வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தாள். மாமியார் அமைதியாக நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓரிரு பாயிண்டுகளை உள்ளே பதுங்கியிருந்த சமயத்தில் தன் பெண்ணுக்கு அவர் எடுத்துக் கொடுத்திருக்கக் கூடும்.
காதுகளின் உளைச்சல் பொறுக்க முடியாமல் சட்டையை மாட்டிக் கொண்டு சட்டென்று வீட்டிலிருந்து வெளியில் வந்து நடக்கத் தொடங்கியவனை மந்திரி சுகிஷி எதிர்கொண்டார். அவர் கண்கள் பனித்திருந்தன. எதுவும் பேசாமல் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். பின் அக்கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். சிறிது நேரம் அப்படியே இருந்தவன் மெல்ல அவரிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டான். அவர் தோள்களில் தட்டிக் கொடுத்து விட்டு நடந்தான்.
அடுத்த தெருவை அடைந்தான்.அந்தப் பச்சை நிற கேட் போடப்பட்டிருந்த வீட்டை நெருங்கி உள் நுழைந்தான்.ஹாலில் கிடந்த மோடாவில் பொதேலென அமர்ந்தான். உள்ளிருந்து வந்த கிழவி அவனைப் பார்த்தாள். எதுவும் கேட்கவில்லை. வாடா என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து அவன் ஆசுவாசமடைந்திருப்பான் என்று தெரிந்தவளாக வந்தவள், அவன் சாப்பிட்டானா என்று வினவினாள். அவன் மௌனமாகவே இருக்கவும், உள்ளே சென்று உணவு தயார் செய்யத் துவங்கினாள்.
அங்கிருந்தே குரல் கொடுத்தாள். சோற்றில் தண்ணீரூற்றி வைத்திருப்பதாகவும் மோர் விட்டுப் பிசைந்து தருவதாகவும் அதை ஊறுகாயுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுமாறும் கூறினாள்.  அவனுக்கு அது பிடிக்குமென்று தெரியும். அதையே செய்து கொண்டு வந்து அவன் முன்னிருந்த மேசையில் வைத்தாள். எதுவும் பேசாமல் அள்ளிச் சாப்பிட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் தலையில் கை வைத்து மெல்லக் கோதி விட்டாள். அது அவனுக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் அவளைப் பார்த்துத் தலையசைத்தவன் நான் கொஞ்ச நேரம் மாடியில இருக்கேம்மா என்று சொல்லி விட்டு படிகளேறினான். மாடிக்கு வந்தவனின் முகத்தில் குளிர் காற்று அறைந்தது..
கீழிருந்து அம்மா “ டேய் ரகோத்தமா… ரொம்ப நேரம் பனில நிக்காதே. சளி புடிச்சுக்கும். சீக்கிரம் கீழே வந்துடு “ என்று சொல்வது தீனமாகக் கேட்டது. மெல்லக் கடற்கரையைப் பார்த்தான் . கிருதர்களின் கப்பல் காணாமல் கண் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தது. மஞ்சள் கடல் அமைதியடைந்து இருந்தது. அதைப் பார்க்கும் போது மனம் கொஞ்சம் சமனப்பட்டது மக்கள் கூட்டம் கலைந்திருந்தாலும் இன்னும் ஏராள மக்கள் சந்தோஷப் பெருக்கில் குறுக்கும் நெடுக்கும் ஓடியாடியபடி இருந்தனர். சற்றே பார்வையை நகர்த்தி துறைமுகத்தைப் பார்த்தான்.. அங்கே இவன் படம் பொறிக்கப்பட்ட கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது.அதில் அவன் மந்தஹாஸமாய்ப் புன்னகை புரிந்தபடி இருந்தான்.
 
 

2 Replies to “ரெகோ”

Comments are closed.