மாமதீ! மகிழ்ந்தோடி வா!

தனது கண்ணின் கருமணியாகிய கிருஷ்ணனெனும் சிறுகுழந்தையை உறங்கவைக்கப் பாடுவாள் தாய்; அவன் உணவுண்ணவும் அவனுடன் விளையாடவும் அவனுக்குத் தகுந்த நண்பர்களைத் தேடுகிறாள். வானில் உலவும் முழுமதி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு உறவு- சிறு குழந்தைகளால் அம்புலிமாமா என அவன் அறியப்படுகின்றான். கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கல்லவே? சந்திரனைத் தன் சிறு குட்டனுடன் விளையாட அழைக்கிறாள் அன்னை யசோதை (பெரியாழ்வார் கூற்றாக). மேலும் அவனுடைய குறும்புகளையெல்லாம் வந்து தன்னுடன் சேர்ந்து ரசித்து மகிழவும் நிலாவைக் கூப்பிடுகிறாள்.
ootukaduஅம்புலிமாமாவும் சளைத்தவனில்லை. தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவனுக்கு மமதையை உண்டாக்கி விடுகிறது போலுள்ளது! அப்போது தாயுடன் சேடியரும் சேர்ந்து அவனை, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பிரயோகித்துக் ‘குழந்தையுடன் விளையாடவா’வென அழைக்கின்றனர்.
பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏழாம் பருவமான அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் இந்த உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன.
“என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து இந்தக் கோவிந்தன் செய்யும் கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகக் கூறுகிறார் தாயான பெரியாழ்வார்.
இங்கு தாய் சமாதானமாக (சாம உபாயத்தால்) நிலாவை அழைப்பதைக் காண்கிறோம்.
தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப்
          பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
          என்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ
          நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.
(பெரியாழ்வார் திருவாய்மொழி-5)
krishna“எனது இச்சிறு குழந்தை எனக்கு ஒப்பற்ற அமுதம் போன்றவன். அவன் தன்னுடைய பிஞ்சுக் கைகளால் உன்னைச் சுட்டிக் காட்டி, “வா, வா,” என அழைக்கிறான். இந்தக் கருமை நிறக் கண்ணனுடன் உனக்கு விளையாட விருப்பம் உண்டெனில், மேகங்களில் மறையாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வா,” எனவும் நல்லவிதமாகக் கூறி (சாம உபாயத்தால்) அழைக்கிறாள் தாய்.
என்சிறு குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
          தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
          அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
          மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
(பெரியாழ்வர் திருமொழி-5)
கூப்பிடக் கூப்பிட ஏனோ அம்புலியாகிய நிலவு வரமாட்டேன் என்கிறது. தாய்க்குத் தாளவில்லை. என் குழந்தையுடன் விளையாட வர இந்த அம்புலிக்கு இத்தனை பிகுவா? தாய், தனக்கே உரிய பெருமையில் அம்புலியிடம் இகழ்ச்சியாகக் கூறுகிறாள்: “அம்புலியே! நீ உன்னைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டம் எங்கும் பரந்து சோதி விரிந்து காணப்படுகிறாய். இருந்தும் என்ன பயன்? நீ என்ன செய்தாலும் என் மகனுடைய திருமுகக் காந்திக்கு ஈடாக மாட்டாய். இந்த வித்தகனான என் குழந்தையோ விடாது உன்னைக் கையை ஆட்டி ஆட்டி அழைத்துக் கொண்டே இருக்கிறான். குழந்தைக்குக் கை நோகாதோ? நீ விரைவாக ஒடி வந்துவிடு,” என்கிறாள்.
இதனைப் பேதம் என்ற உபாயத்தால் அழைப்பதாகக் கொள்ளலாம். எளிமையான தமிழ்ச் சொற்கள் கொண்ட அன்பும் ஆர்வமும் தளும்பும் பாசுரங்கள்.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
          எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
          வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்
          கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
(பெரியாழ்வர் திருமொழி-5)
 
“சந்திரா, இந்தக் குழந்தை சக்கரத்தைத் தன் கையில் ஏந்தியவன்; எனது இடுப்பின் மீதமர்ந்து கொண்டு தனது பெரிய விழிகளால் உன்னை மலர விழித்து நோக்குகின்றான். சுட்டிக் காட்டுகின்றான் பார்த்தாயா?” சந்திரனுக்கு இவ்வாறு அவன் நோக்குவது ஆச்சரியத்தினால் நோக்குவது போலுள்ளது. ஆனால் சக்கரத்தைக் கையில் கொண்டு விழித்து நோக்குவது அவன் சினம் கொள்ளத் துவங்கியதன் அடையாளம் என தாய் கருதியதனால் அதனைச் சந்திரனிடம் கூறுகின்றாள்: “அவன் இவ்வாறு நோக்குவதன் பொருளை நீ அறிந்தாயென்றால், அதன் பொருட்டு நீ செய்யத்தக்கது என்னவென்று உணர்ந்து கொண்டாயானால், இவனுக்கு உன்மேல் வெறுப்பை உண்டாக்காமல் விரைந்து வா சந்திரா! பிள்ளை பெற்றவர்களுக்குத் தான் அந்த அருமை தெரியும்! நீ என்ன பிள்ளை பெறாத மலடனா? இல்லையே. ஆகவே உடனே வாராய்,” என்று சிறிது கடிந்து கொண்டு கூறுகிறாள்.
இலைமறை காயாக, ‘இவன் கையில் சக்கரம் உண்டு. அதைக் கொண்டு இவனால் என்ன செய்ய இயலும் எனவும் உனக்குத் தெரியும். ஆகவே வந்து விடு,’ என்று அச்சுறுத்தலைக் கோடி காட்டுகிறாள். இதனைத் தண்ட உபாயமெனக் கொள்ள இடமுண்டு. தண்டம் எனில் தண்டனை கொடுப்பது. ‘நீ வராவிட்டால் அவன் இவ்வாறு செய்வான்,’ எனல்.
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
          ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
          தக்க தறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
(பெரியாழ்வர் திருமொழி-5)
வரவில்லை அந்த மதிகெட்ட நிலா!
“தேஜஸ்வியான சந்திரனே! இவன் எவ்வளவு பெருமை பெற்றவன் என உனக்குத் தெரியுமா?  உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவி அழைக்கிறான் பார்! இவ்வாறு  இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ? உனக்கென்ன காது கேட்கவில்லையோ?” எனப் பரிகசிக்கிறாள்.
இது தானம் எனும் உபாயத்துடன் கூடிய பேச்சாம். ‘இவன் தகுதி என்ன? உனது தகுதி என்ன? தராதரம் பார்க்காமல் குழந்தை உன்னை விளையாட அழைத்தால் நீ செவிடனாக நிற்கிறாயே,’ என ஏளனம் செய்தல்.
அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுற
          மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
          குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
          புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!
(பெரியாழ்வர் திருமொழி-5)
எதற்கும் மசியாத சந்திரனிடம்,”பார் அம்புலியே! இவன் கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக்கூறுகிறாள்.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், வில் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த அழகனை வந்து தரிசித்து வணங்கிப்போ! இவற்றின் பரக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகாதே!’ எனச் சந்திரனை மறைமுகமாக எச்சரிக்கிறாளாம் தாய்!
இதனை பேத உபாயம் என எண்ண இடமுள்ளது. மனதில் வேறுபாட்டை (கலக்கத்தை) உண்டுபண்ணி, பணியச் செய்தல்.
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
          கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
          உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
          விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
(பெரியாழ்வர் திருமொழி-5)
“இவன், என் கண்மணி ஒரு சிறு பாலகன் என்று புறக்கணிக்காதே!  ஆலிலை மீது கண்வளர்ந்த சிறுகுழந்தை தான் இவன்; ஆனாலும் சினங்கொண்டால் உன்மேல் பாய்ந்து பிடித்துக் கொண்டு விடுவான் தெரியுமா?” இப்பொழுது உண்மையாகவே சந்திரனை அச்சுறுத்துகிறாள் யசோதை அன்னை!- இது தண்டம் – தண்டிப்பேன் என அச்சுறுத்தும் உபாயம்.
 

lk
இது மட்டுமா? “இவன் சிறுவன், என சிங்கக்குட்டியான எனது இந்தக் குழந்தையை எண்ணி விடாதே அப்பா! சிறுவன் என்பதற்குப் பொருள் மகாபலியிடம் (மாவலி) சென்று கேட்டுணர்ந்து கொள்வாயாக! சிறு வாமனனாக, மாணிக் குறளனாக வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்டான் தெரியுமா? நிறைமதியே! இவன் உன்னை விரைவாக வருமாறு அழைக்கிறான். உன் பிழையை- இவன் சிறியவன் என நீ எண்ணுவதை- உணர்ந்தால் நீ வந்து இவனுக்குத் தொண்டு செய்யும் உரிமையைப் பெறலாம் அல்லவோ?” என அறிவுரை கூறுகிறாளாம் தாய். இதனையும் பேதம் அல்லது தண்ட உபாயம் எனக் கருதலாம்.
சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
          சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
          சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
          நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
(பெரியாழ்வர் திருமொழி-5)
சந்திரன் எதற்குமே மசியவில்லை! தாய்க்குச் சினம் கட்டுமீறுகின்றது! கூறுவாள்: “தனது பெரிய கைகளால் வெண்ணெய்த் தாழியிலிருந்து வாரி வாரி அமுது செய்ததனால் பெருவயிறு உடைய எங்கள் கண்ணன் உன்னை அழைக்கிறான் பார்! நீ வரவில்லையானால் உன்கதி அதோகதி தான்! சக்கராயுதத்தினால் உன் தலையைச் சீவி விடுவான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. உயிர் மீது உனக்கு ஆசையுண்டானால், மகிழ்ந்தோடி எம் ஐயனோடு விளையாட வா,” என அச்சம் காட்டி அழைக்கிறாள்….. (தண்ட உபாயம்!)
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கி
          பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
          ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
          வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.
(பெரியாழ்வர் திருமொழி-5)
அம்புலிமாமா அசைந்து கொடுத்ததோ இல்லையோ அருமையான இலக்கியநயம் பொங்கும் ஆழ்வார் பாசுரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளுணர்ந்து படித்து மகிழலாமே!
நிலவுக்கும் கிருஷ்ணனுக்கும் தொடர்பு மிகவும் அதிகம். முழுநிலா இரவுகளில் அவன் இசைக்கும் அமுதமயமான வேணுகானம் கோபியரையும் மற்றெல்லாரையும் மயக்கி ஆடிப்பாடி மகிழவைக்கும்.
நிலவைப் பார்த்தாலே கண்ணன்முகம்தான் அங்கு, அந்நிலவில் தோன்றி, நம்மைப் பரவசமாக்கும்; இதனால் தான் கல்கி அவர்களும் ‘காற்றினிலே வரும் கீதம்,‘ எனும் அழகான பாடலில்,
‘நிலாமலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
          நீலநிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
          காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
          உருகுமோ என் உள்ளம்,’ என பக்தை மீரா பாடுவதாகக் கவிதை இயற்றியுள்ளார்.
அம்புலிக்குப் பல பணிகள். காதலருக்குத் துணை; கவிஞனுக்குக் கற்பனையில் துணை. தாயாருக்குத் தன் குழந்தையின் விளையாட்டுத் தோழன்; பக்தனுக்கு, தன் தெய்வத்தின் காதுத்தோடு (அபிராமி பட்டர்) அல்லது ஒளிவீசும் அவனது திருமுகக் காந்தி, என்பன,
லீலாசுகர் (பில்வமங்களர்) ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் கிருஷ்ணனுடைய திருமுகத்தினைப் பலவிதமாக வருணிக்கிறார். ஒரு ஸ்லோகத்தில் கண்ணனை ஆயர் குலத்துதித்த பூர்ணசந்திரன் என்கிறார்.
‘கல்பவிருட்சத்தினடியில் பசுக்கள், கோபர்கள், கோபிகள் (கோ, கோப, கோபீ) புடைசூழ அவர்கள் மத்தியில் நிற்பவனும் கோவைப்பழம் போலச் சிவந்த உதட்டில் வைத்த புல்லாங்குழலிலிருந்து இனிய இசையை எழுப்புபவனும், ஆயர்பாடியிலுதித்த பூர்ணசந்திரனுமாகிய கண்ணனைப் போற்றுகிறேன்,’ என்கிறார்.
மந்தாரமூலே மதனாபிராமம்
                   பிம்பாதராபூரித-வேணுநாதம்
          கோகோபகோபீஜன- மத்ய- ஸம்ஸ்தம்
                   கோபம் பஜே கோகுல-பூர்ணசந்த்ரம்
(1.100- ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்)
ஆயினும் மனம் கேட்கவில்லை. ‘என் கிருஷ்ணன் சந்திரனுக்கொப்பானவன் அல்ல. ஏனெனில் சந்திரன் கடலில் தோன்றியவன். அவனுடைய கலைகள் வளர்வதும் தேய்வதுமாய் உள்ளன. கிருஷ்ணனுடைய முகமோ அவன் பேசும் இனிமை வாய்ந்த சொற்களாகிய பல பௌர்ணமிக்கலைகளால் பூரணத்துவம் பெற்று விளங்குகிறது. அதனைச் சந்திரனுக்கு ஒப்பிடலாகாது. எதனுடைய அழகும் எப்போதும் குறைவின்றி விளங்கும் உன் முககாந்திக்கு ஒப்பாகாது,’ என்கிறார் இன்னொரு ஸ்லோகத்தில்.
 
தத்-த்வன்முகம் கதமிவாப்ஜ ஸமானகஷ்யம்
                   வாங்மாதுரீ- பஹுல-பர்வ-கலா-ஸம்ருத்தம்
          தத் கிம் ப்ருவே கிமபரம் புவனைக காந்தம்
                   யஸ்ய த்வதானனஸமா ஸூஷமா ஸதா ஸயாத்
(1.96-ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்)
இன்னும் இந்த வர்ணனையால் மனம் நிறையாதவராகி, சந்திரனே கிருஷ்ணனுடைய முகமண்டலத்திற்கு நீராஜனம் செய்கின்றான் எனவும் பாடுகிறார். இதில் அவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி; அதனை இப்பாடலில் கூறுகிறார். “முன்னோர்களான ஒப்பற்ற கவிகளாலும் பாடப்படாத ஒரு வார்த்தையை நான் கூறக் கேள் கிருஷ்ணா! இந்தச் சந்திரன் ஒரு தீபமாக இருந்து கொண்டு உன் திருமுகமாகிய சந்திரனுக்கு நீராஜனம் செய்யும் பொறுப்பினை நீண்டநாட்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தகுதியுடையவனாக இருக்கிறான்.”
சுச்ரூஷஸே யதி வச: ச்ருணு மாமகீனம்
                   பூர்வை-ரபூர்வ-கவிபிர்-ந கடாஷிதம் யத்
          நீராஜனக்ரம-துரம் பவதானனேந்தோ:
                   நிர்வ்யாஜ-மர்ஹதி சிராய சசி-ப்ரதீப:
(1.97-ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்)
எத்துணை வளமான கற்பனை! உள்ளத்தை நெகிழ வைக்கின்றது. (இவை முன்பின்னாக வரிசைப்படி அமையாவிடினும், நமது கற்பனை இவ்வாறு எண்ண வைக்கின்றது!)
ஊத்துக்காடு எனும் சிற்றூரில் விளங்கும் கிருஷ்ணனைப் பற்றி, வேங்கட சுப்பையர் எனும் பக்தர் அவன், ‘நிறைமதி போலும் முகத்தைக் காட்டி, குழலிசையைக் கூட்டித் தம்மை மோனநிலையில் ஆட்டி வைக்கிறான்,’ என அழகுறப் பாடியுள்ளார்.
நீலவானம் தனில் ஒளிவீசும்
          நிறைமதியோ உன்முகமே கண்ணா
          கோலவண்ணம் காட்டி குழலிசையைக் கூட்டி
          மோனநிலையில் எம்மை ஆட்டி வைத்த எங்கள் இறைவா
இன்னும் எத்தனை எத்தனை பேர்கள் நிலவொளியில், அந்த மாயக் கண்ணனின் மேல் கொண்ட காதலிலும் பக்தியிலும், பிரேமையிலும், அன்பிலும் உருகி நின்றனர் என்பதைக் கணக்கிட இயலுமா?

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.