மகரந்தம்


[stextbox id=”info” caption=”குப்பையைத் தங்கமாக்கும் நுகர்வுக் கலாச்சாரம்”]

billy

நேற்று ஒரு செய்தியைப் படித்தபோது தோன்றியது இது. குப்பையை மின்சக்தியாக மாற்றலாம் என்று தொழில் நுட்ப ஆய்வாளர் சொல்கிறார்கள், அதுதான் எத்தனை பயனுள்ள வேலை என்று. அதே போல நகரக் கழிவு நீரில் உள்ள துகள்களை வடிகட்டி எடுத்து வெய்யிலில் உலர்த்தினால் கிட்டுவது அருமையான இயற்கை உரம் (ஆர்கானிக் உரம்). அந்த வடிகட்டிய நீரைப் பயன்படுத்திப் பாசனமும் செய்யலாம் என்று சொல்கிறார்கள். இவை சில நலம் கருதிச் செயல்படுவோரின் முயற்சிகள்.

இன்னொரு புறம் ஒரு செய்தி, யு ட்யூப் விடியோக்களில் ஒருவருக்கும் ஒரு புண்ணாக்குக்கும் பயனில்லாத சிறு துண்டுப் படங்களைப் பிரசுரிக்கும் பல்லாயிரக்கணக்கான, இல்லை பல லட்சம் பேர்களில் சிலர் மட்டும் வருடத்துக்குப் பல மிலியன் டாலர்களைச் சம்பாதிக்கிறார்கள் என்ற செய்தி. செய்தி எழுதியவருக்குமே இதில் வருத்தம் இருக்கும் போலிருக்கிறது. இப்போது உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டிருந்தார். லாட்டரிச் சீட்டில் 200 மிலியன் டாலர்கள், சில கோடி ரூபாய்கள் சம்பாதிப்பவர்களைப் பார்த்தால், அரசு அலுவலகக் குமஸ்தா என்ன நினைக்க்க் கூடும்? அது போன்றதுதானே இந்த யுட்யூப் விடியோ மிலியனர்கள் நிலையும்.

இவர்களாவது பெரும் கேடு ஏதும் விளைக்காமல் முறைமை என்று ஒன்றைச் சொல்ல முடியாத வகையில் பெரும் நிதியைக் குவிக்கிறார்கள். இன்னொரு புறம் வேலியாக இருந்து மக்களைக் காப்போம் என்று சொல்லி விட்டு பயிரை மேயும் எத்தனை அரசியலாளர்கள் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும், உலகில் பல நாடுகளிலும் மக்களை, மக்களின் அரசுகளைக் கொள்ளை அடித்து நிதி குவிக்கிறார்கள். அவர்கள் பிணங்களின் மீது இருந்து விருந்துண்ணுபவர்கள், குழந்தைகளின் ரத்தத்தில் கை நனைத்துப் பரவசம் அடையும் பேய்கள். அவர்களோ நாயகர்களாகத் தெருத்தெருவாகச் சுவரொட்டிகளில் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள், அந்தச் சிரிப்புதான் என்னவொரு ஏளனச் சிரிப்பு.

கீழே இன்னொரு விசித்திரச் செய்தி. இதுவும் ஒரு ரத்தக் காட்டேரி பற்றிய செய்திதான். அமெரிக்கர்களிடையே சில விசித்திர நம்பிக்கைகள் உண்டு.  16 ஆம் நூற்றாண்டில் வந்து இறங்கி 17 ஆம் நூற்றாண்டு துவங்கி அமெரிக்கக் கண்டம் பூரா பரவிய வெள்ளையர் ஆடு மாடுகளைப் போல அமெரிக்கப் பழங்குடி மக்களை வேட்டையாடிக் கொன்ற செய்தியை அவர்கள் கற்கவும் கேட்கவும் பார்க்கவும் மறுக்கும் மக்கள். அந்த மக்களிடையே மிகப் பரவலாக இருக்கும் கற்பனைக் கதை என்னவென்றால் அந்த யூரோப்பிய வெள்ளையர்கள் கடும் போராட்டம், கடும் உழைப்பு மூலம் அமெரிக்கப் பெரும் நிலப்பரப்பை வென்றெடுத்து பிரும்மாண்டமான விளைநிலமாக மாற்றித் தொட்டதை எல்லாம் தங்கமாக்கினர் என்ற ஒரு அதிகற்பனை.

அதன் ஊடே மைய அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்த பெரும் ஜனநாயகப் போராளிகள் என்று சிலரைக் கொண்டாடுவார்கள் இதே மக்கள். அப்படிக் கொண்டாடப்படுவோரில் பலரும் கொள்ளையர், கொலைகாரர்கள். அப்படிப் பட்ட ஒரு கொலை/ கொள்ளையன் பில்லி என்னும் இளைஞன். (இயற் பெயர் ஹென்ரி மகார்தி.) இவன் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்கிகளைக் கொள்ளை அடித்து, பலரைக் கொன்று சில வருடங்கள் அட்டகாசம் செய்தவன். போலிஸ் இவனைக் கொல்ல மிகத் திணறி இறுதியில் சுட்டுக் கொன்றனர்.

பில்லி த கிட் என்ற பெயரில் பிரபலமான இவனின் கதை பல பாடல்கள் மூலமும், ஏன் குழந்தைப் பாடல்கள் மூலமும் கூடப் பிரபலம். இவனுடைய கதை எத்தனை பரவலாக இருந்த போதும் இவனுடைய உருவப்படங்கள் அத்தனை ஒன்றும் கிட்டியதில்லை.

சமீபத்தில் எங்கோ ஒரு சிறு ஊரில் ஒரு அட்டைப்பெட்டியில் இரண்டு டாலருக்குக்கிட்டிய ஒரு பழைய ஒளிப்படத்தைச் சில ஆர்வலர்கள் சோதித்த போது அதில் சிறு உருவமாக நின்றது பில்லி த கிட் என்று ஊகித்தனர். அவ்வளவுதான் அந்தப் படத்திற்குப் பெரும் போட்டி. இன்று அது சில மிலியன் டாலர்கள் மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தைக் கண்டு பிடித்த அதிசயக் கதையை ஒரு ஆவணப்படமாக வேறு எடுத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களின் விருப்புகள் என்னவொரு விசித்திரமான பாதைகளில் எல்லாம் போகும் என்பதற்கு இதை ஒரு சான்றாகக் கொள்ளலாமோ என்னவோ. ஜ்யார்ஜ் புஷ் என்னும் ஒரு நபரைப் பத்தாண்டுகள் அதிபராகத் தேர்ந்தெடுத்த விசித்திரத்தை விட இது பெரிதா என்று கேட்டீர்களானால் அதற்கு என்ன பதில் சொல்லி விட முடியும்?

ஒரு கொலைகாரனின் படம், அதைச் சோதிக்க நிபுணர்கள், அதற்கு ஒரு ஆவணப்படம் தயாரிப்பு, அதை வாங்கச் சில மிலியன் டாலர்கள் விலை கொடுக்கத் தயாராகச் சிலர். இப்படி ஒரு நாடு. இதை ஆதர்சமாகக் கருதும் இந்தியர்கள், தமிழர்கள் வேறு நிறையவே இருக்கிறார்கள்.  உலகம் பித்து என்று சும்மாவா சொன்னார்கள்?  செய்தி கீழே.

இதனால் வெறுத்துப் போய் உங்களுடைய 10- 5 அரசு வேலையை விட்டு விடாதீர்கள். எல்லாக் கொலைகாரர்களும் பெருநாயகர்களாவதில்லை. எல்லாக் கொள்ளையரும் அரசாட்சியைப் பிடித்து விடுவதில்லை. நீங்கள் இருக்கும் இடமே சொர்க்கமாக இருக்கலாம். உத்தரப் பிரதேசத்தில் 300 பொறியாளர்கள் பத்து வருடமாக ஒரு வேலையும் இல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அலுவலகம் வந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேலை கிடைக்குமா என்று பார்ப்பீர்களா, அதை விட்டு விட்டு இருக்கிற வேலையைத் தொலைக்கிறேன் என்று கிளம்பினால் எப்படி?

http://www.theguardian.com/us-news/2015/oct/13/billy-the-kid-croquet-junk-shop-two-dollars
[/stextbox]


[stextbox id=”info” caption=”நாத்திகத்தைக் கொல்ல இஸ்லாமிய நாடுகளின் பேரூக்கம்”]

EGYPT. Cairo.December 2013. Men pray at the Saida Zainab mosque in downtown Cairo.
EGYPT. Cairo.December 2013. Men pray at the Saida Zainab mosque in downtown Cairo.

இங்கு கொடுக்கப்படும் கட்டுரையில் அரபு நாடுகளில் இப்போது எழத் துவங்கி இருக்கும் நாத்திகத்தைப் பற்றி சிறு புல்லரிப்பு இருக்கிறது. காரணம் அது நாத்திகர்களின் ஒரு பத்திரிகை. ஆனால் அச்சமும் நெடுக வெளிப்படுகிறது. ஏன்? நாத்திகர்கள் அரபு நாடுகளில் பேரச்சத்தோடு ஒளிந்து வாழ வேண்டி இருப்பதைச் சுட்டுகிறது கட்டுரை. வங்க தேசத்தில் எப்படி நாத்திகர் என்ற குற்றச் சாட்டை வைத்துப் பலரை பயங்கரவாதிகள் கொன்று வருகிறார்கள் என்ற செய்தியை நாம் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம்தானே?

பல அரபு நாடுகளில் பயங்கரவாதத்தை விடக் கடுமையான எதிரியாகக் கருதப்படுவது நாத்திகம் என்பதால் ஆறு நாடுகளில்  நாத்திகர்களுக்கு மரண தண்டனை கொடுக்கச் சட்டங்கள் இருக்கின்றன.  சௌதி அரேபியா, குவைத், கட்டார், அரபு எமிரேட், சூடான், மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் நாத்திகமும், இஸ்லாத்தைக் கைவிடுதலும் மரண தண்டனைக்கு வழி வகுக்கும்.

எகிப்தில் நாத்திகத்தைத் தகர்த்தெறிந்து இஸ்லாத்தைப் பரப்பத் திட்டம் போட  இரண்டு அமைப்புகளுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் மேலும் பல அபூர்வமான தகவல்கள் உண்டு, படித்துப் பலனடையலாம். இந்தப் பின்னணியில் தமிழகத்து ‘நாத்திகவாதிகளின்’ அபிமான மதம் இஸ்லாம் என்பதைச் சற்று யோசித்தால் நமக்கு ஒரு சிறு புன்னகையாவது உதிக்கும். ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் புரியுமா என்பது கூட ஐயம்தான். புரியாததற்கு மொழி அல்ல தடை.

https://newhumanist.org.uk/articles/4898/the-rise-of-arab-atheism
[/stextbox]


[stextbox id=”info” caption=”தொழில் நுட்பத்தால் சொர்க்கம் பூமிக்கு இறங்குமா?”]

electronic devices wireless connectivity
electronic devices wireless connectivity

முடவர்கள் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா என்பார்கள் பழங்காலத்தவர். இன்று கையோ, காலோ இல்லாதவர்கள் கூட கொம்புத்தேனை அடையவும் முடியும், உண்ணவும் முடியும். அது சொர்க்கம் இல்லையா? இதை விதண்டாவாதம் என்று பழங்காலத்தவர் சொல்வார்கள். கேள்வியில் தொக்கி இருப்பது தன் முயற்சியால் அதை அடைவது இயலாது என்பது. ஆனால் தன் முயற்சி என்பதைச் செய்பவர்கள் இன்னும் எத்தனை காலம் அப்படி இருக்கப் போகிறார்கள் என்று இக்காலத்தவர்கள் கேட்பார்கள்.

அப்படிக் கேட்போர் அனேகமாகத் தொழில் நுட்பம் என்ற மாயச் சக்தி மனித குலத்தை மிருக நிலையிலிருந்து உயர்த்தி தேவர்கள் போல ஆக்கப் போகிறது என்ற, சிறுவருக்கான மாயாஜாலக் கதையை ஒத்த ஒரு கதையைப் பரவலாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

கீழே உள்ள கட்டுரையில் நவ்நீத் அலங் என்பார் சொல்வது இந்தக் கனவை நாம் எல்லாம் இழக்க வேண்டும் என்கிறார்போல இருக்கிறது.  ஒரு புறம் இப்படி மேற்கில் இருந்து தொடர்ச்சியாக உலகம் அழியவிருக்கிறது, கடல்கள் அமிலமாகி விட்டன, ஆர்க்டிக் உருகி விட்டது, இமயமலை ஆடுகிறது, குடிநீர் உலகெங்கும் வற்றி வருகிறது, கடும் புயல்கள் வீசி கடற்கரை நகரங்களை அழிக்கப் போகின்றன என்று கட்டுரைகளும், கதைகளும், ஹாலிவுட் திரைப்படங்களுமாக வருவதால் இந்தக் கட்டுரை என்ன பெரிய பிசாத்துக் கட்டுரை என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இவர் ஏதோ ‘தேவன் வரும் நாள் நெருங்கி விட்டது. அழிவின் ஆறு குதிரைகள் உலகை நொறுக்கப் போகின்றன என்றெல்லாம் கூவும் இறைதூதரின் வாரிசு அல்ல. ஒரு டெக்னோபில்- அதாவது பொறியியல், தொழில் நுட்பத்தின் ஆர்வலர்தான். எப்படி 80களில் கனவாகத் தெரிந்த, கதையாகத் தெரிந்த கருவிகள் எல்லாம் இன்று சர்வ சகஜமாக நம்மிடையே புழங்குகின்றன என்று பட்டியலிடும் ஆர்வத்திலேயே அது பளிச்சிடுகிறது.

ஆனால் அடுத்த பத்தியிலேயே இவருடைய லட்டைட் நோக்கமும் பெருகி வருகிறது. என்ன புதுத் தொழில் நுட்பம் இருந்தால் என்ன, எல்லாம் ஏற்கனவே இருக்கும் அதிகார, பொருளாதார வளப் பிரிப்பைத்தானே உறுதி செய்கின்றன என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் அதோடு கூட முன்பு அதிகாரம் எங்கோ ஒரு பொது இடத்தில் ஆட்சி செய்வதோடு நின்றது. இன்று அது நம் சட்டைப் பாக்கெட்டிலேயே கூடவே அனேகமாக எந்நேரமும் இருக்கிறது. நாம் 24 மணி நேரக் கொத்தடிமைகளாகி விட்டோம். செய்கிற வேலையும் சுலபமாகவில்லை,  முன்னெப்போதையும் விட இன்னும் அவசரமும், சலிப்பும் கூடியதாகத்தான் இருக்கிறது, வீடு திரும்பினாலும் நம் நேரமும் இனி நம்முடையதாக இல்லை. எந்த வெளியிலும் நாம் சுதந்திரமாயில்லை. ’ஆன் கால்’, ஜஸ்ட் இன் டைம் ப்ரொடக்‌ஷன் என்ற பெயர்களில் பெரு நிறுவனங்கள் ஒரு புறம் உழைப்பாளர்களுக்குக் கிட்ட வேண்டிய சட்டபூர்வமான உரிமைகளை மறுக்கும் விதமாக உற்பத்தி முறையை அமைத்துக் கொண்டும், இன்னொரு புறம் முந்தைய உற்பத்தியின் அதே நெருக்கடியையும் கொடுத்துக் கொண்டும் தம் உற்பத்திச் செலவைப் பெருமளவு குறைக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு இறுதியில் கிட்ட வேண்டிய பங்கின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இது என்ன முன்னேற்றம் என்று நாம் பலரும் நம் தனி வாழ்வை வைத்துக் கொண்டு யோசிப்பதை ஒரு உலகளாவிய பாணி என்று விளக்குகிறார்.

இந்த மாதிரித் தொழில் நுட்பம் புற்று நோயைத் தோற்கடித்தால் என்ன, தோற்கடிக்காவிட்டால் என்ன? அதன் வெற்றியும் நமக்கு, சாமானியருக்கு ஒரு உதவியுமாக இராது என்கிறார். அதையே இன்னும் விவரமாக, விரிவாக விளக்குகிறார்.

V என்ற எழுத்தின் உரு வெற்றிக்கான குறியீடாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதை ஒரு சினிமா இயக்குநர் ’வி ஃபார் வெண்டெட்டா’ என்ற படமாக எடுத்து அந்த வி என்ற ஒலிக்குறிப்பின் உறுதிமொழியை நாசம் செய்தார். இவர் அதே போல தொழில் நுட்பத்தால் சொர்க்கம் என்ற கனவை நாசம் செய்கிறார்.

விழிப்புடன் இருப்பது நம்மைக் காப்பாற்றும் என்றுதானே காலம் காலமாகச் சொல்கின்றன பண்பாடுகள். அளப்பரிய நுகர்வு உறக்கமா, மாளாத விழிப்பா?

http://www.newrepublic.com/article/122728/well-never-have-tech-utopia
[/stextbox]


[stextbox id=”info” caption=”நம் கருவிகள் நமக்குச் சாவு மணி அடிக்கின்றனவா?”]

apoc

தலைப்பிலுள்ள ‘நமக்கு’ என்ற வார்த்தை மொத்த மனித ராசியைக் குறித்துச் சொல்லப்பட்டது.  முந்தைய பதிவில் நவ்நீத் என்பார் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வழியே மனித ராசிக்கு மீட்சி கிட்டும் என்ற 20 ஆம் நூற்றாண்டின் சோமபானம் இப்போது புளித்த காடியாகி விட்டது. கள்ளில் கிட்டும் மெல்லிய உதைப்பு கூட அதில் இல்லை என்று ஒரு பள்ளி ஆசிரியர் போலப் பாடம் நடத்தினார்.

அடுத்த கட்டுரையில் ஹெதர் ஹாவ்ரிலெஸ்கி ஒரு புறம்  ஹெர்பர்ட் ஸ்பென்ஸரில் இருந்து ஜாரெட் டயமண்ட் வரை மேற்கின் அபாரத் திறமை, வலுவைப் புகழ்ந்து ஆரம் சூட்டிய சிந்தனையாளர்களைக் கேலி செய்து, இன்று மேற்கிலிருந்து கிழங்களின் புலம்பல்தான் கேட்கிறது என்கிறார். கிழக்கில் ஒரு சூரியன் உதித்தவுடன் மேற்கில் அஸ்தமனம்தானே என்று மேற்கு யோசிக்கிறதைச் சுட்டுகிறார்.

நிறையச் சான்றுகள் கொடுக்க முடியும், மேற்கு எப்படித் தனது அட்டஹாசமான சில நூறாண்டு அதிபத்தியம் முடிவுக்கு வரவிருக்கிறது என்று நிலை கலங்கி நிற்கிறது என்பதைச் சொல்ல. ஆனால் மேற்குக்குப் பயம் தன் அதிகாரம் பறி போவது பற்றி மட்டுமில்லை என்பதுதான் கவனிப்புக்கு உரியது. மொத்த மனிதராசியே எதிர்காலமற்ற பாழில் சிக்கப் போகிறது என்று மேற்கின் பற்பல துறையாளர்களும் பயப்படத் துவங்கி இருக்கிறார்கள். ஒரு சான்றாக ஹெதர் முன் வைப்பது இரு புத்தகங்களை.

ஒரு புத்தகம் ஜாரெட் டயமண்டின் புத்தகத் தலைப்பு போலவே ஒலிக்கிறது. ரோபாட்கள், கிருமிகள், வெட்டுநர்கள், ட்ரோன்கள் என்று இவை எல்லாமே மேற்கிற்குச் சாவு மணி அடிக்க உலகெங்கும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கிற பயங்கரவாதிகள், குற்றக் கும்பல்கள் ஆகியோர் பயன்படுத்தக் கூடிய கருவிகளாக மாறி விட்டன, இவற்றை மேற்கால் இனி கட்டுப்படுத்த முடியாததால் விளைவுகள் படு நாசமாக இருக்கப் போகின்றன என்று பெஞ்சமின் விட்ஸும், காப்ரெயெலா ப்ளுமும் ஒரு புத்தகம் எழுதுகிறார்கள். இன்னொரு புத்தகம் கிட்டத்தட்ட அதே போன்றது. எதிர்காலக் குற்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகின்றன என்று முன் கூட்டிய வரைபடத்தைப் போட்டுக் காட்டும் புத்தகம், எழுதியவர் மார்க் குட்மான்.

கட்டுரை ஒரே நேரம் ஆழமாகவும் கிண்டலாகவும் உள்ளதால் சுருக்குவதை விட அதைப் படித்துப் பயனுறுவதையே நல்ல வழியாக முன்வைக்கிறோம்.

http://thebaffler.com/salvos/apocalypse-soon
[/stextbox]


[stextbox id=”info” caption=”பெரும் தகவல் காலத்தில் பெண் நிலைக்கு லைக்கா? டிஸ்லைக்கா?”]

abuse

மேலே உள்ள பதிவில் ஒரு பத்தியில் ஹெதர் எப்படி ‘பெரும் தகவல்’ எனப்படும் Big Data நம் எல்லாருடைய அந்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் நம் அனுமதி இன்றி கைப்பற்றி அலட்சியமாக எடுத்துக் கொண்டு போய்,  அதை எப்படியெல்லாமோ தன் அதிகாரப் பறிப்புக்குப் பயன்படுத்தப் போகிறது. நாமெல்லாம் அதன் முன் புயற்காற்றில் அகப்பட்ட துரும்பு என்று குறிக்கிறார். 1999 வரை கூட தகவல் யுகம் என்பது எல்லா மனிதரையும் இணைக்கும் பாலம் என்றெல்லாம் பலூன் விட்டார்கள் பொறியியலாளர்கள். இன்று அந்தத் தகவல் வெளியெங்கும் கட்டுக்கடங்காத குற்றக் கும்பல்கள், மோசமான மன நோயாளிகள், சமூக எதிரிகள் உலவுகிறார்கள், கட்டுப்படுத்த ஆட்களும் இல்லை, அங்கு எந்த நாட்டுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதும் தெளிவாக இல்லை. பன்னாட்டரங்கில் இதற்கான சட்டதிட்டங்களும் இன்னும் போதுமான கடிதிறனோடு வரைந்து அமலாகவில்லை.

இதனால் பாலை நிலத்தில் பயணிக்கும் தனிப் பெண்டிரை எப்படிக் கள்வர் கவர்ந்து செல்வது குறித்த அச்சம் பண்டைத் தமிழகத்தில் நிலவியதோ அதே போன்ற அச்சம் பெண் பொறியாளர்களைப் பீடித்திருப்பதாகவும், அவர்கள் தொடந்து ஆண் வெறியாளர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும், பத்திரிகையாளர்கள் கூட இத்தகைய தாக்குதல்களால் பயப்படுவதாகவும் இந்தச் செய்தி சொல்கிறது. சிலிகன் வாலி எனப்படும் ஒரு பெரும் நிலப்பரப்பு ஆண்களின் ஏகோபித்த கூடாரமாக ராஜ்ஜியமாக மாறிக்கொண்டிருப்பது தகவல் தொழில் நுட்பத்துறைக்குச் சிறிதும் நல்லது பயக்காது. இந்த வெறியாட்டத்தை அவர்கள் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிடில் பெண்கள் அந்தத் துறையை விட்டு நீங்கிப் போவது மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்தச் செய்தி அறிக்கை. இப்போதைக்கு தொழில் துறை குறித்துச் செய்தி சேகரிக்கும் பெண் பத்திரிகையாளர்கள் தம் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் என்பது தெரியாத வகையில் செயல்படுகிறார்கள், இது என்ன சுதந்திர உலகு என்று கேட்கிறது இந்தக் கட்டுரை.

http://www.theguardian.com/media/2015/oct/11/female-technology-journalists-abuse-zoe-quinn
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.