தீர்வுகள் விரல் சொடுக்கில் கிடைக்காது…

கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்காத பெற்றோர் இன்று மிக மிகக் குறைவு. 2001 ல் 64.84 சதவிகிதமாக இருந்த தேசீய கல்வியறிவுக் குறியீடு, 2014ல்  74 சதவிகிதமாக  உயர்ந்துள்ளது  என்று புள்ளிவிவரங்கள்  காண்பிக்கின்றன.  தங்கள்  குழந்தைகள் கல்வி  பெற வேண்டும்  என்பதோடல்லாமல், அவர்கள்  பள்ளியில்  முதன்மை  இடத்தைப் பெற வேண்டும் என்றும் பலர்  விழைகிறார்கள். அதற்காக  தங்கள்  சிரமத்தைப்  பாராது நேரம் ஒதுக்கி குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள்.
ஆனால் சிலருக்கு தங்கள் குழந்தைகள் முன்னுக்கு வர வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது புரிவதில்லை. ஒரு காலத்தில்  மாட்டு வண்டியின் வேகத்தை அதிகரிக்க வண்டி மாட்டை ச்  சாட்டையினால் துருத்தி வேகப்படுத்துவார்கள். அதுபோல் குழந்தைகளை  செய்ய முடியுமா?  இன்று எல்லாவற்றிலும்வேகம், விரைவு  என்று  எதிர்பார்க்கும் தலைமுறையினருக்கு குழந்தை வளர்ப்பிலும்  விரல் சொடுக்கில்  தீர்வுகள் கிடைத்தால் நன்றாகதான் இருக்கும்.  ஆனால்  சில விஷயங்கள்  அப்படி மின்னல்வேகத்தில் நடைபெறாது.
சில பெற்றோருக்கு தங்கள் அன்பை தங்கள் பிள்ளைகளிடம்  வெளிப்படுத்துவதற்குக் கூட கூச்சமாக – ஆமாம், கூச்சமாகதான்!!- இருக்கும். அதாவது முன்காலத்தில்  தந்தை என்பவர் ஒரு மிக மரியாதைக்குரியவர்; அவருடன் சரிசமமாக அளவளாவது சரியல்ல என்றெல்லாம் ஒரு மரபு இருந்தது. பல குடும்பங்களில் தந்தையின் முன்நின்று பேசுவது கூட இருக்காது. 1930கள் அல்லது  40 களில்  தன் குழந்தையைத் தானே – வெளிப்படையாக –  கொஞ்சக்கூடாது  என்று நினைத்த தலைமுறை  இருந்திருக்கிறது.
அதன் விட்ட குறை தொட்ட குறை – spill over effect – இன்றும் சில குடும்பங்களில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில்  அன்பை வெளிப்படையாக காட்டுவது அவர்களுக்கு ஒரு  கௌரவப் பிரச்சனை! குழந்தைகளை நேரடியாகப் பாராட்ட மாட்டார்கள். ஒரு பார்வை அல்லது புன்சிரிப்பில் பொதிந்திருக்கும்  அவர்கள் பாராட்டு !
பெற்றோர்  மரியாதைக்குரியவர்கள்  என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குடும்பங்களில் அணுகும் முறையில் ஒரு சினேக பாவம் இருக்கும்போது சூழ்நிலையில் இறுக்கம் குறைந்து, பிணைப்பு அதிகமாகிறது. சில நாட்கள் முன்பு ஒரு பேட்டி படித்தேன்.
ஒரு உயரிய பதவி வகிக்கும் பெண் அதிகாரி ஓய்வு எடுக்கும் சமயத்தில் எதேச்சையாக அவரது மகளே அந்த நிறுவனத்தில் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாய்க்கு பெருமிதம் என்றால் மகளுக்கு சந்தோஷம் – தாய்க்குபின் மதிப்பு வாய்ந்த அந்த நாற்காலியில் தான் அமர நேர்கிறதே என்று.
பதவியேற்கும் நாளில், தாய் தன்னையும் தன் சகோதரிகளையும் வளர்த்த நாட்களை அந்த மகள்  நினைவு கூறுகிறார்.
“நாங்கள் வளரும் நாட்களில் அம்மாவுடன் எங்களுக்கு நிறைய கருத்து வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அம்மா என்றுமே எங்களைக் கடிந்து கொண்டதில்லை. எங்கள் கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றாலும் எங்கள் வழியே போக விட்டுவிடுவார். எங்கள் முடிவுகளின் நிறை குறைகளை நாங்களே அனுபவித்து உணர வேண்டும் என்பது அவர் கருத்து.எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி அப்படி என்று கட்டுப்பாடுகளோ அல்லது நீண்ட போதனைகளோ செய்ய மாட்டார். நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்களைப் புரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் காட்டுவார். அவசரமாக முடிவெடுக்காமல் எந்த சூழ்நிலையையும் அதன் போக்கிலேயே அமைதியாக சமாளிப்பார். எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் அவரது ஊக்கமும் ஆதரவும் நிச்சயம் இருக்கும்.
“உயர் பதவியில் இருந்ததால் அவருக்கு எப்போதும் நேரப்பஞ்சம். ஆனால் எங்களுடன் தினம் சில மணி நேரமாவது செலவிடுவார். குறிப்பாக எங்களுக்கு தேர்வு அல்லது ஏதேனும் மனக்குழப்பம் என்று இருக்கும்போது தன் வேலைகளை ஒதுக்கிவிட்டு கட்டாயம் எங்களுடன் இருந்து உற்சாகப்படுத்துவார். நாங்கள் அவரவர் தினசரி வேலைகளில் – நீச்சல், பாட்டு, என்று எங்கள் 24 மணி நேரமும் வரிசையாக நிர்ணயிகப்பட்டிருக்கும் – தவறாமல் ஈடுபடுகிறோமா என்று மென்மையாக கண்காணித்தபடி இருப்பார். பள்ளி விழாக்களில் எங்களை ஊக்குவிக்க அவர் என்றுமே முதல் வரிசைதான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் ரசிக்கும் எதிலும் எங்களுக்கும் ஒரு ஈடுபாட்டை உண்டாக்கிவிடுவார். இரவு எழுந்து நட்சத்திரங்களைத் தான் ரசிக்கும்போது எங்களுடன்  அதைப் பகிர்ந்து கொள்வார். தண்ணீரில் வெள்ளித் தாம்பாளமாக ஜொலிக்கும் சந்திரனைத் தான் ரசிக்கும்போது எங்களுக்கும் அந்த ரசனையில் பங்கு இருக்கும்.
இத்தனைக்கும் முகத்தில் ஒரு சுணக்கமோ அல்லது ” நான் எவ்வளவு ஒரு நல்ல தாய் பார்..” என்ற  தோரணையோ இல்லாமல்… இயல்பாக, வெகு நேர்த்தியாக, ஒரு ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் எங்கள் வாழ்க்கையை  அவர் செலுத்தியிருக்கிறார். இன்றும் அவரது பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென்றால், எங்களுடன்
சற்று நேரம் செலவழிக்க வேண்டும்… அதுதான் பிறந்த நாள் பரிசு என்கிறார்…” என்று மகள் கூறுகிறார்.
அந்தத் தாயோ ஒரே வரியில் “என்று என் மகள்கள் 16 வயதானர்களோ அன்றே அவர்கள் என் சினேகிதிகளாகிவிட்டனர்” என்று கூறுகிறார்.
நம்மில் பலர் இப்படிபட்டப் பெற்றோர்களைப்  பெற்றிருக்கலாம்; நாமும் இப்படி பட்டப்  பெற்றோர்களாக இருக்கலாம்.  மொத்தத்தில், ஒரு குழந்தையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்களோ அந்தத்  தாக்கம்தான் அந்தக் குழந்தையின்  சுபாவமாக இருக்கும்.  மனித சமுதாயம் உருவாவதில் பெற்றோர்களின்  பங்கு சாமான்யமானதல்ல. பரிட்சை  நேரங்களில்  தோல்வியைத்  தாங்காமல்  விபரீத  எல்லைகளுக்குப் போகும் சில  இளைஞர்களை ஆரோக்கியமான  திசையில்  திருப்புவது  பெற்றோர்கள்  கடமை.
எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் சகஜமான ஒன்று என்பதை இளைஞர்களுக்கு  புரிய வைக்க வேண்டும்.  ஏமாற்றங்கள் சகஜம்தான். ஆனால் அதை எதிர்கொள்ள மனதில் சக்தியை வளர்ப்பது மிக முக்கியம். ஒரு தோல்வி  வாழ்க்கையின் முடிவல்ல என்று மனம் உடைந்த இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இது அல்ல என்றால்  இன்னொன்று… இல்லாவிட்டால் வெற்றி மறுமுறை நிச்சயம் என்று நம்பிக்கை ஊட்டுவது அவசியம். ‘இதென்ன  இப்படி தோற்றுவிட்டாய்… நீ எதற்கும் லாயக்கில்லை! போன்ற கடும் வார்த்தைகள்  எந்தவிதத்திலும் உதவாது.
நம் ஏமாற்றத்தின் பாரத்தையும் குழந்தைகள் மீது காட்ட வேண்டுமா என்ன?

pc

ஆனால் அதே சமயத்தில் ‘ஹ்ம்… உனக்குக் கிடைக்காத இது ஒன்றும் அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல…’ என்று சமாதானப்படுத்துவது,  “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!” மனோபாவம்.  இப்படி செய்வது மறுபடி போராடி ஜெயிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
சோகமாக இருக்கும்போது குடைந்து குடைந்து வெறுப்பேற்றுகிறார்போல் பேசாமல், எப்படி  பேசினால் – அல்லது  பேசாமல்  இருந்தால்  இதமாகஇருக்கும்  என்று  உணரும்  தன்மை  வேண்டும்.  இளைஞர்கள்   ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  மாதிரி மனோநிலையில் இருப்பார்கள். என்ன செய்தால் இறுக்கம் தளர்வார்கள் என்று கண்டுபிடிப்பது  ஒரு வழி.
சிலருக்கு மனது விட்டு பேசினால் ஆறுதல் கிடைக்கும். சிலருக்கு தனியே யோசனை செய்ய வேண்டும். இன்னும் சில பிள்ளைகள் வீட்டு வேலைகள் அல்லது அன்றாடப் பொறுப்புகளைச்  செய்யச்சொல்லும்போது இறுக்கம் தளர்வார்கள். குடும்பம் என்ற அமைப்பின் சிறப்பு, பகிர்ந்து கொள்ளுதல்.
வேலைகளைப்பகிர்ந்து செய்யும்போது ஒரு பிடிப்பும் ஈடுபாடும் இயல்பாக வரும். தோல்வியின் சோகம் இலக்கில்லாமல் மனதில்குழப்பத்தைத் தோற்றுவிக்கும்போது குடும்ப வேலைகள் ( துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சாதாரண  வேலைகள் கூட) மனதில் ஒரு  புத்துணர்வைத் தூண்டுவிக்கும். ஆக்கப் பூர்வ  எண்ணங்கள் பிறக்க இந்தப் புத்துணர்வு  வழி  செய்யும்.
சிலருக்கு இசை மனதில் தெளிவுண்டாக்கும். சிலர் வெளியே காலாற நடந்தால் மனதில் இருப்பதைக் கொட்டுவார்கள்.  இன்னும் சிலருக்கு போனில் நீண்ட நேரம் நண்பர்களிடம் பேசினால் ஆறுதல் கிடைக்கும். இந்த மாதிரி சமயங்களில்  இவற்றைச் சுட்டிக் காட்டியே மேலும் குறை கூறாமல்  அமைதியாக தள்ளி நின்று  கவனித்தல் நல்லது.
முதல் அதிர்ச்சியிலிருந்து வெளி வர ஆரம்பித்ததும் மெள்ள ஏமாற்றத்தின் காரண காரியங்களை அலசும் நிலைக்குக்  கொண்டு வாருங்கள். தெளிவான மனதுடன் தவறு எங்கே இருந்திருக்கும் என்று அவர்களையே ஆராய விட்டு விடுங்கள். அதே சமயம், கடுமையான உழைப்புக்கு பலன் இருக்காமல் போகாது என்பதை உணர வையுங்கள். ஆக்க பூர்வமாக  யோசித்து நிவர்த்தியை அல்லது மாற்று வழியைத் தேடுவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அவர்கள்  நாளடைவில் புரிந்து கொள்வார்கள்.
பரிட்சை என்பது ஒரு உதாரணம். இந்தவெற்றி தோல்வி குறியீடு வாழ்க்கையின் இதர வெற்றி தோல்விக்கும்  பொருந்தும்.
எல்லாம் சரிதான். ஆனால் எத்தனைக் குடும்பங்களில் இப்படி அமர்ந்து பேசும் அளவு நேரம் ஒதுக்கப்படுகிறது?  பிள்ளைகள் நம்முடன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது  எத்தனைப் பெற்றோர் நேரம் ஒதுக்குகிறோம்? அவர்கள் மனம் விட்டு பேச முனையும் சந்தர்ப்பங்களில் உங்களுக்கு எத்தனை முக்கிய வேலை இருந்தாலும் அதை  போட்டுவிட்டுக் காது கொடுத்துக் கேட்க முயலுங்கள். உங்கள் வேலையை எப்போதும் தொடரலாம். ஆனால் பிள்ளைகள் மனம் திறந்து பேசும் நேரங்கள் எப்போதும் வராது.
அவர்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது பெரிதாக அறிவுரை கூறுவது அவசியம் இல்லை. சொல்லப்போனால்  இந்த சமயங்களில் அறிவுரைகளைத் தவிர்ப்பது  நலம். சில சமயம் நட்புடன், ஒரு புரிந்துணர்வுடன் தோளில் மெள்ளக் கைவைத்து முதுகில் தட்டிக்கொடுப்பதில் கிடைக்கும் ஆறுதல் பல மணி நேர அறிவுரையிலும்  கிடைக்காது.
இதற்கு சிறு வயதிலிருந்தே ஒரு சினேகமான சூழ்நிலைக் குடும்பத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் வளரும்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் ” வளர்வது” மிக முக்கியம். நாம் பழங்கால  சினிமாப் பாடல்கள் அல்லது கர்னாடக சங்கீதம் ரசிக்கும் வேளையில் அவர்கள்  புது சினிமா  இசையையோ  அல்லது இதர  நவீன  இசையையோ  ரசிக்கலாம். கால  வித்தியாசம் அவ்வளவுதான்.  நாமும் அவர்களுடன்  சேர்ந்து  அவர்களின்  ரசனையை  ரசிக்க முடிந்தால் அவர்களுக்கு நிகராக பேசக்கூடிய விஷய ஞானம் நமக்கும் இருக்குமே…!  இப்படிப்பகிர்ந்து  கொள்ளும்போது  அவர்களும்  நம்முடன்   சேர்ந்து  நம்  ரசனையிலும் பங்கு கொள்ளலாம். அவர்களின் மாறி வரும் ரசனைகளைக் கூர்ந்து கவனிப்பதும் அவசியம்  – எப்படி சினேக பாவத்துடன் அவர்கள் சம்பாஷணைகளில் பகிர்ந்து கொள்ளலாம் என்று  நாமும்  புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
நமது பிரச்சனைகளையும் மனது விட்டு அவர்களுடன் பேசலாம். இது அவர்களுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்க தெளிவை உண்டாக்கும். ‘ஓ… நம் பெற்றோரும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சமாளித்த மாதிரி நாமும் சமாளிக்க முடியும்,’ என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கைப் பிறக்கும்.
அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது நாம்  ஆபீஸ், வீடு என்று  நமது “முக்கிய” வேலைகளில் ஈடுபடும்போது அவர்கள் பிரச்சனைகளும்  சந்தோஷங்களும் நம் கண்களில் புலப்படுவதில்லை. பல பெற்றோர் தங்கள் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள்  கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். சில குடும்பங்களில்  தொழில்  நுட்ப  இடைவெளியும்உண்டு. ‘பிள்ளைகள் ஏதேதோ  தொழில் நுட்ப  ரீதியில்  பேசுகிறார்கள்; செய்கிறார்கள்; என்ன செய்கிறார்கள் என்றே புரிவதில்லை…’ என்று விரக்தியாக ஒதுங்கிக் கொள்வார்கள்.
பிணைப்பு எப்படி  உருவாகும் இந்த சூழ்நிலைகளில்? பிள்ளைகளின் தொழில்  நுட்ப  ஆர்வத்தில் ஓரளவேனும் தாங்களும்  இயல்பாக சுவாரசியம் வளர்த்துக்கொள்வது , வாழ்க்கையில்  பரஸ்பரம் ஒரே  அலைவரிசையில்  பயணிக்க உதவும்.
ஆனால் பெற்றோர் தங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்வில் தவிப்பதைத் தங்கள் தவறுகளுக்கு  சாதகமாக எடுத்துக்கொள்ளும் சாதுரியமான  இளைஞர்களும் இருக்கிறார்கள். ‘ என்னைக் கவனிக்க உங்களுக்கு நேரம் இல்லை. அதனால்தான் நான் இப்படியானேன்…’ என்று தன் நடத்தைக்கு சமாதானம் கூறும் இளைஞர்களுக்கு  குடும்பப் பொறுப்பைப் புரிய வைப்பது அவசியம். ஆரம்ப நாட்களிலிருந்தே பெற்றோரின் வெளியுலகப் பொறுப்புகள்  பற்றி பிள்ளைகளுக்கு ஒரு புரிந்துணர்வு உண்டாக்க வேண்டும். அவர்களுடையப் பிரச்சனைகள் பற்றி பிள்ளைகளுக்கு  ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசும் சூழ்நிலை.
பணம், மற்றும் வாழ்க்கை சௌகரியங்கள்  இவற்றைவிட  வளரும் குழந்தைகளுக்கு மிக முக்கியம், இதமான, நட்பான குடும்ப சூழ்நிலை. நம்மால் இதைக் கொடுக்க முடிந்தால், பணமும் வாழ்க்கை சௌகரியங்களையும் பெறுவதற்கான வெற்றிப் படிகளை நோக்கி அவர்கள் தாமாகவே  நகர்வார்கள்.

One Reply to “தீர்வுகள் விரல் சொடுக்கில் கிடைக்காது…”

  1. நாமும் அவர்களுடன் சேர்ந்து அவர்களின் ரசனையை ரசிக்க முடிந்தால் அவர்களுக்கு நிகராக பேசக்கூடிய விஷய ஞானம் நமக்கும் இருக்குமே…! இப்படிப்பகிர்ந்து கொள்ளும்போது அவர்களும் நம்முடன் சேர்ந்து நம் ரசனையிலும் பங்கு கொள்ளலாம். அவர்களின் மாறி வரும் ரசனைகளைக் கூர்ந்து கவனிப்பதும் அவசியம் – எப்படி சினேக பாவத்துடன் அவர்கள் சம்பாஷணைகளில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நாமும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
    நமது பிரச்சனைகளையும் மனது விட்டு அவர்களுடன் பேசலாம். இது அவர்களுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்க தெளிவை உண்டாக்கும். ‘ஓ… நம் பெற்றோரும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சமாளித்த மாதிரி நாமும் சமாளிக்க முடியும்,’ என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கைப் பிறக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.