குளக்கரை


[stextbox id=”info” caption=”இந்திய முற்போக்குகளின் பிற்போக்கு ஆட்சிகள்”]

money-l

இந்தப் பகுதியில் அனேகமாக அன்னிய நாட்டுச் செய்திகளைத்தான் கொடுக்கிறோம். இந்த முறை ஒரு இந்தியச் செய்தி. இது ஒரு தேசிய ஆங்கிலச் செய்தித்தாளில் வந்தது. இதை தமிழ்த் தாள்களில் காண முடிந்ததா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். ஒரு தினசரியில் இல்லை என்று தெரியும்.

இன்று உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி தன்னை முற்போக்கு அணியின் முன்னணிக் கட்சியாக பிரகடனப்படுத்துவதில் வல்லது. இதற்கு முன்பு அங்கு ஆண்ட இன்னொரு கட்சியான மாயாவதியின் வெகுஜன சமூகக் கட்சி (பஹுஜன் சமாஜ் பார்ட்டி) அதே போல அடையாள அரசியலிலும் முன்னணி, முற்போக்கிலும் முன்னணி என்று இந்திய முற்போக்குகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. இவை இரண்டும் சில பத்தாண்டுகளாக அதிகாரத்தை மாற்றி மாற்றிக் கைப்பற்றி வரும் கட்சிகள். முற்போக்குக் கட்சிகளின் ஒரு அபிமான அரசாட்சி முறை- எதையும் தேசியமயமாக்கி விடுதல். இன்னும் டீக்கடைகளைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள், பாக்கி எல்லாம் தேசியமயமானால்தான் அவர்களுக்கு இரவில் நிம்மதியாக உறங்க முடியும்.

சரி, முதலியம்தான் படு மோசமான நிர்வாக முறை என்பதோடு, மக்களைச் சுரண்டுகிறது என்ற வாதத்தை அப்படியே ஏற்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். இந்தத் தேசிய மயமாக்கப்படும் நிர்வாக முறை என்ன செய்கிறது? இங்கே ஒரு சான்று. உத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக முன்னூறு பொறியாளர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் மேஜையைத் தூசி தட்டி வைத்து விட்டு, சும்மா நாற்காலியில் அமர்ந்து விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். ஒரு மாதம், ஒரு வருடம் இல்லை, பத்து வருடங்கள். சும்மாக் கூட இல்லை, இவர்களின் சங்கம் அரசுக்குப் பத்து வருடங்களாக விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறது. இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று. அரசோ, உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஏதாவது காது கொடுத்துக் கேட்டார்களா என்றால்… என்ன விளையாடுகிறீர்களா, அப்படி எல்லாம் நடவடிக்கை எடுத்து விட்டால் அப்புறம் எதற்கு அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள்? அரசு என்பதை ஸ்தம்பிக்க வைக்கத்தானே முற்போக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள். இதை ஸ்டாலினியமும், மாவோயியமும் எத்தனை பத்தாண்டுகள் நிரூபித்தன? அதே முற்போக்குப் பெருநாயகர்களின் பாணியில் இன்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அற்புதமாக ஸ்தம்பித்த ஆட்சியால் மக்களின் நலன்களைப் பாதுகாக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து யாரும் உத்தரப் பிரதேசத்தில் சாஹித்ய அகதமி பரிசைத் திருப்பிக் கொடுத்தார்களா என்றால் … என்ன விளையாடுகிறீர்களா என்பார்கள். ஆட்சியில் இருப்பது அவர்களின் அபிமானக் கட்சி இல்லையோ? அதுவும் முற்போக்குக் கட்சி. அடையாள அரசியலின் விடிவெள்ளி வேறு. அப்புறம் எதிர்ப்பு தெரிவிக்க என்ன இருக்கிறது?

இந்த பொறியாளர்கள் சும்மா இருப்பது மட்டுமல்ல, அந்த மாநிலம் முழுதும் எத்தனை எந்திரங்களும், அமைப்புகளும் சும்மா கிடக்கின்றன என்று வேறு இந்த அறிக்கை சுட்டுகிறது.

நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்தச் செய்தியை ஓராண்டு முடிந்ததும் இந்த தேசியத் தினசரி ஏன் கண்டு பிடித்து எழுதவில்லை? மூன்று ஆண்டுகள் கழித்தாவது? சரி ஐந்து , ஏழு ஆண்டுகள்? ஓ அப்போதெல்லாம் மாயாவதி அரசு இருந்தது. சமாஜ்வாதி கட்சியையாவது ஏதாவது சொல்லி விடலாம், மாயாவதி அரசு புனிதப்பசு, அதை எதுவும் சொல்லி விடக் கூடாது இல்லையா? எப்படித்தான் அத்தனை அமைப்புகளுமாகச் சேர்ந்து மக்களை எத்துகின்றன என்றுதான் புரியவில்லை.

செய்தியைப் படித்து மகிழுங்கள் என்று சொல்ல முடியாததற்கு நாங்கள் வருந்துகிறோம். உங்களுக்கு இது என்ன புதுச் செய்தி என்று தோன்றினால், செயலின்மையின் உச்ச கட்டத்திற்குப் போகப் போட்டி போடும் நிர்வாகமாகத் தமிழக அரசு ஆகிக் கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு உடனே புரியும். இதுவும் அடையாள அரசியலின் தாரகைக்கட்சிதானே?

ஆனால் நம் பொதுவுடைமைக் கட்சிகளாகட்டும் (40 ஆண்டுகள் மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் ஒழித்து ஓரம் கட்டினார்களில்லையா அது சாதனைதானே?) இதர அடையாள முற்போக்கு அரசியல் கட்சிகளாகட்டும் இன்னும் என்று தணியும் எங்கள் தேசியமயமாக்கும் தாகம் என்றுதான் பல்லவி பாடுகிறார்கள். அதை என்ன சொல்ல?

http://indianexpress.com/article/cities/lucknow/for-10-years-no-work-only-pay-for-300-engineers-in-up-pwd/
[/stextbox]


[stextbox id=”info” caption=”கசையடி அரசின் மனித உரிமை வேஷங்கள்”]

saudi1

அமைதி மார்க்கத்தின் ஒரே சரியான வழியை உலகெங்கும் பரப்பக் கடும்பாடுபடும் நாடும், சமீபத்தில் உலகத்திலேயே மனித உரிமைகளை எப்படி நிலைநாட்டி அவற்றைப் பாதுகாப்பது என்று சிந்திக்கும் ஒரு ஐக்கிய நாட்டு அவையின் ஆலோசனைக்குழுவில் பாடுபட்டுச் சேர்ந்திருக்கும் நாடும், (மயான) அமைதியையே தம் வாழ்நாள் இலக்காகக் கருதும்  லட்சக்கணக்கான இந்திய வஹ்ஹாபியருக்கு நம்பிக்கை நட்சத்திரமுமான சௌதி அரேபியா தன் லட்சியங்களை அடைய என்ன சாதனை படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?

அந்நாட்டில் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்று போராடியவர்களின் கூட்டத்தில் ஒரு இளைஞன், அப்போது 17 வயதினனாக இருந்தவன் கைது செய்யப்படுகிறான். சமீபத்தில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சௌதியின் நட்பு நாடும், அதன் ஆளும் கூட்டத்தோடு அதி நெருக்க உறவு கொண்ட ஆள்வோர் கூட்டத்தையும் கொண்ட அமெரிக்கா சௌதியினருக்கு ஏதும் அறிவுரை அல்லது கண்டனம் அல்லது குறைந்த பட்சம் முகச்சுளிப்பு காட்டியதோ? எந்த அமெரிக்கப் பத்திரிகையாவது பெரும் தலையங்கங்கள் எழுதினவோ?

பங்கஜ் மிஸ்ராக்களும், யுவான் கோல்களும், அருந்ததி ராய்களும் கண்டனம் தெரிவித்து 15 பக்கக் கட்டுரைகள் எழுதிப் பிரசுரித்து மகிழ்ந்தனரோ? இந்திய வஹ்ஹாபியக் கும்பல்கள் ஏதும் தெருப் போராட்டம் நடத்தி மனித உரிமைகளைக் காக்கச் சொல்லி சௌதிக்கு மகஜர் அனுப்பினார்களோ? மவுண்ட் ரோடு மாவோ பத்திரிகையாவது கூக்குரல் இட்டதோ?

இவை எதுவும் நடக்க என்ன வாய்ப்பு இருக்கிறது? இப்படிக் கேட்பதே அறியாமை என்று சொல்வீர்களானால் அது முழுதும் உண்மை.
அப்படி எல்லாம் கண்டனம், தாக்குதல், அச்சுறுத்தல், தெருப் போராட்டம், பன்னாட்டுப் பத்திரிகைகளில் எழுதி வெட்கமூட்டுதல் போன்றன எல்லாம் இந்துக் கட்சிகள் அரசாளும்போது மட்டுமே நடக்கும், அதுவும் இந்தியாவுக்கு மட்டுமே கொடுக்கப்படும் சிறப்பு ட்ரீட்மெண்ட். அத்தனை அருமையான மனித நீதிக் காவலர்கள் இந்த உலக ‘இடது சாரி’ முற்போக்குப் பட்டாளத்தினர்.

சரி செய்திதான் என்ன?
http://www.thedailybeast.com/articles/2015/10/09/why-saudi-arabia-gets-away-with-murder.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”அடையாளங்கள் தற்காப்புக்கா, அதிகாரப் பறிப்பு வழி மட்டுமா?”]

gayconser

சரி வஹ்ஹாபியம்தான் ஏதேதோ குளறுபடிகளில் சிக்கி திசை இல்லா இருட்டுக்குள் பயணிக்க முனைகிறது என்று பார்த்தோம். பெண்ணியம் எங்கே செல்கிறது?

செய்தியைப் படித்தால் அதுவும் தேறி வரும் என்று தோன்றவில்லை. அடையாள அரசியல் என்பதே ஒரு புதை சேறு. நவீனத்துவத்தின் இயலாமைகளில் வேர் கொண்டது, முதலியத்தை ‘முற்போக்கு’ என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு, நுகர்வுப் பண்பாட்டைத் துறக்காமல், எப்படியோ தோற்கடித்து விட முடியும் என்று மனப்பால் குடித்தவர்கள் தம் தோல்வியை ஏற்க முடியாமல் மாற்று வழி தேடியபோது கண்டு பிடித்தது அது. அது முன்னாளில் பல நாடுகளிலும் மரபுவாதிகளின் புகலிடமான அடையாள அரசியல்.

ஏதோ அதைத் தாம் கையாண்டால் எல்லா அதிகாரச் சமன்பாடுகளையும் தமக்கு ஆதரவாக மாற்றி பாட்டாளி மக்களுக்கு அதிகாரத்தைக் கொணரலாம் என்று கற்பனை வாதத்தில் மூழ்கிய முற்போக்குகள் இன்று திக்குத் தெரியாத காட்டில் அலைகிறார்கள். ஒவ்வொரு அடையாளமும் பற்பல சிறு அடையாளங்களாகச் சிதறித் தமக்குள் மோதிக் கொண்டிருக்கையில் பெருமுதலியம் என்னும் பயங்கர் மிருகம் உலகைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. அதோடு இப்படி அடையாளங்களின் துண்டு துணுக்குகள் தம்மைத் தாமே தாக்கிச் சிதைக்க ஆயுதங்களையும் கொடுத்து உதவி, அதிலும் லாபம் சம்பாதிக்கிறது பெருமுதலியம்.
ஆனால் அடையாள அரசியல் வியாபாரிகள் அதில் கிடைக்கும் அற்ப ஆதாயங்களை விடுவார்களா? மாட்டார்கள் ஏனெனில் அடையாள அரசியலிலும் சிறு முதலீட்டாளர்கள் உண்டு. அவர்கள் தம் சிறு முதலீட்டை மக்களின் அபிமானத்தைப் பெறப் பயன்படுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றி, முன்னாள் விசிறிகள், இந்நாள் சேவகர்களாகி விட்ட அதே மக்களைக் கொண்டு அதே பாட்டாளிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுவதில் வல்லவர்கள். அதுதான் இந்தியாவிலும் நடக்கிறது, அமெரிக்காவில் வெகு காலமாகவே மிக வெற்றிகரமாக நடப்பது அதுதான். கிருஸ்தவப் பண்பாடு ஆபத்தில் இருக்கிறது என்ற பொய்யை பெருமுழக்கமாக விளம்பரப்படுத்தி வெள்ளை இனவெறியை ஊக்குவித்து பெருமுதலியம் அரசாட்சியின் மூலை முடுக்கை எல்லாம் ஆக்கிரமித்து விட்டது. இந்த 40 ஆண்டுகளில் அமெரிக்க வளங்களைச் சுருட்டித் தம் பையில் வைத்துக் கொண்டனர் அந்த 1% சதவீதத்தினர் என்று இன்று அழைக்கப்படும் சில நூறு குடும்பத்தினர். இவர்கள் உண்மையில் நாடோடிகள். அதாவது எந்த நாட்டிற்கும் தப்பியும் எந்த வரியும் கட்டக் கூடாது என்பதே இலக்காகக் கொண்ட நாடு ஓடிகள்.

இந்தச் செய்தியில் பெண்ணிய வாதம் என்ற அடையாள அரசியல் கொண்ட ஒரு வாதிக்கும், தற்பாலுறவு விழைவுள்ளவர் ஆனால் மரபுவாத அரசியல் கைக்கொண்டவர் என்ற இன்னொரு அடையாள அரசியல்வாதிக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க பெண்ணிய வாதிகளின் கருத்தரங்கம் இருவரையும் வெளியேற்றி விட்டிருக்கிறது தெரிய வருகிறது. மற்ற இடங்களிலெல்லாம் தமக்கு உரையாட உரிமையும், ஜனநாயக வெளியும் வேண்டும் என்று முழங்கும் இவர்கள் இன்னும் என்னென்ன கஜகர்ணங்களெல்லாம் போடுவார்களோ அப்படி உரையாடல்களைத் தவிர்க்க?

அந்தப்புறம் வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இங்கே இவர்கள் போட்டிருக்கும் உடை சரியில்லையா என்று கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

http://www.thedailybeast.com/articles/2015/10/08/how-a-gay-conservative-and-radical-feminist-were-banned-from-a-college-s-feminism-debate.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”துருக்கி எங்கே போகிறது”]

ஒரு புறம் அரசியல் சட்டத்தையே மாற்றி அமைத்துத் தனக்கு இன்னும் பத்தாண்டுகள் அதிபராக இருக்க வசதி செய்வதற்கு முனையும் எர்டோகன், இன்னொரு புறம் சிறுபான்மையினரான குர்துக்களின் வாழ்வை நாசம் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியும் என்று முனைந்து யோசிப்பதாகத் தெரிகிறது. சென்ற சனிக்கிழமை, இஸ்லாமியப் பேரரசுக் கட்சி என்று அறியப்படும் ஐஸில் பயங்கரவாதிகள் துருக்கியின் தலைநகரில் ஒரு தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கானோர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இறந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் அமைதி கோரி ஊர்வலம் நடத்தியவர்கள் நடுவே நடத்தப்பட்டது என்பது இஸ்லாமியப் பேரரசு அமைக்க முயலும் பயங்கரவாதக் கூட்டத்துக்கும் அமைதி என்பதற்கும் எத்தனை நெருங்கிய உறவு என்பதைச் சுட்டி இருக்கிறது. இந்தக் கொலைகாரக் கும்பலுக்கு இந்தியாவில் ஆதரவாளர்கள் வேறு ஆயிரக் கணக்கில் இருப்பதாகத் தெரிகிறது. அத்தனை பெருவிருப்பு அமைதிக்கு!

கீழே கொடுக்கப்படும் கட்டுரை ஒரு துருக்கிய அரசியல்வாதியால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் எழுதப்படுவது. இவர் சொல்வதில் பாதி உண்மை என்றால் கூட துருக்கி பெரும் சரிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. உலகப் பயங்கரவாதக் கூட்டத்தோடு சேர்ந்து மேற்காசியாவில் பல சிறுபான்மையினரை அழிக்க நடத்தப்படும் பெரும்போரில் மாட்டிக் கொள்ளப் போகிறது என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்கவியலாது.

எத்தனை நாளைக்குத்தான் துருக்கி அரசு ஓநாய்களோடும் ஓடிக் கொண்டு மான்களுடனும் நட்பாக இருப்பது போல நடிக்க முடியும்?

http://www.huffingtonpost.com/suat-kiniklioglu/turkey-abyss-erdogan_b_8295198.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.