
நான் கல்லூரியில் படிக்கையில் எங்கள் ப்ரொஃபசர் பெண்மணி ஒருவருக்கு குடும்பச் சுமையால் 35வயது வரை திருமணம் நடக்கவேஇல்லை. அதன் பிறகு திருமணம் வேண்டாம் எனும் முடிவை அவர் எடுத்தார். அதே சமயத்தில் அதே போல திருமணம் செய்யாமல் இருந்த மற்றொரு தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தோழிகள் இடையே வேறெந்த உறவும் கிடையாது. ஒருவர் வீட்டைப் பராமரிப்பதும் மற்றவர் சம்பாதிப்பதுமாக இருந்தனர்.
இப்படியாக ஒரு பல வருடங்கள் கடந்தன. இனி இப்படியே நாங்களிருவரும் இருக்கப்போகிறோம் என்றே தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வைத்திருந்தனர். ரேசன் கார்டு போன்றவை வாங்குவதில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களால் அதையும் வாங்கி வைக்கவில்லை.
அந்த சமயத்தில்…
அதுவரை சம்பாதித்து வந்த ப்ரொஃபசர் திடீரென நோய்வாய்ப்பட்டு சட்டென இறந்துவிட்டார். சட்டப்படி இறந்தவரின் சொத்து உயில் ஏதும் எழுதாமல் இறந்தமையால், இறந்தவரின் தாயார், மற்றும் சகோதர சகோதரிகளிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது.
ஏனெனில் தோழியர் இருவர் ஒரு கூரையின் கீழ் வாழ்வது என்பது ஒரு குடும்பம் ஆகாது. குடும்பம் என்றால், கணவன், மனைவி, அவர்களின் பிள்ளைகள்தான். ஆனால் இவர்களை ‘குடிமைப் பங்காளர்கள்’ எனச் சொல்லி சட்ட அங்கிகாரம் அளித்தால் என்ன?
இங்கே..
அதுவரை அவரை நம்பியே வாழ்ந்தும், தனது உழைப்பை அந்த தோழிக்கு அளித்தும் கடைசியில் அந்த துணையாக நின்ற தோழி நிர்கதியாகவே விடப்பட்டார். உண்மையில் தோழி இருந்திருந்தால், அல்லது தன் சாவு பற்றிய சிறு ஊகம் இருந்திருந்தால் கூட சொத்தை தோழி பெயருக்கு உயில் எழுதி வைத்திருந்திருப்பார் என்பது அனைவருக்குமே புரிந்தாலும், வேறேதும் செய்ய முடியவில்லை. பிறகு ’கருணை கூர்ந்து’ அந்த குடும்பம் இவருக்கு சிறு தொகை ஒன்றை அளித்தது.
சரி.
இது போலவே, திருமண உறவில் ஈடுபடாதவர்கள் ஒரே குடும்பமாக வசிப்பதுண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள், சகோதரர்கள் எனில், பெரிதளவில் சட்டப்பிரச்சனை கிடையாது.(ஆனாலும் அங்கும் பிரச்சனை உண்டுதான்.) அப்படி அல்லாமல் இணைந்த் வாழ்பவர்களும் அதிகரித்து வரும் சூழலில் சட்டம் அதற்கு என்ன செய்யப்போகிறது?
ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கிகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.
இதையேஇன்னும் கொஞ்சம் நீட்டித்து, எந்த இரு நபர்கள் இணைந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வந்திருந்தால், அவர்களை ஒரு குடும்பமாக (பாலுறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிகரித்தால் என்ன?
ஆணும் பெண்ணும், திருமண வாழ்வில் இணைந்து அவர்கள் இருவரின் உற்பத்தியாகிய சொத்து குடும்ப விருத்தி என அனைத்திற்கும் இருவருமே சொந்தக்காரர்கள் என்பது போல, அவர்களில் ஒருவர் இறப்பின் மற்றவருக்கு அந்த சொத்துக்கள்(உயில் இல்லையெனில்) சென்று சேரும் சட்ட நடை முறை போல, இருவரும் பிரிந்தால், அண்டி இருப்பவருக்கு மற்றவர் தொடர் உதவி(ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது போல..) செய்ய வேண்டும் என்பது போன்ற சட்ட உதவிகள் அளிக்கப்படவேண்டும்.
ஏனெனில், திருமணமே செய்து கொள்ளாத இரு நண்பர்கள், இணைந்து ஒருவர் பணம் சம்பாதிப்பதும். ஒருவர் வீட்டைக் கவனிப்பதுமாகவோ, அல்லது இருவரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்வதாகவோ சேர்ந்து வாழ்வதுண்டு அல்லவா? இவர்களை இதுவரை சட்டம் கணக்கில் கொண்டதில்லை. அதாவது, இருவர் இப்படி வாழ்ந்து வர, அவர்களில் ஒருவர் உயில் ஏதும் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால், அவரின் சொத்தானது, அந்த இறந்தவரின் பெற்றோர், மற்ற சகோதர சகோதரிகள் என பாகம் பிரிக்கப்படும். ஆனால் உண்மையில் அந்த சகோதர சகோதரிகள் தனக்கென குடும்பம் ஒன்றை கொண்டிருப்பர். கூடவே இருந்து தன் உழைப்பை நல்கிய நபர் நிர்கதியாக நிற்பார் அல்லவா?
இது போன்று இருவர் இணைந்து வாழ முடிவெடுத்தால் அவர்களின் உறவு எப்படிப்பட்டதாக இருப்பினும், சட்டப்படி ஒரு திருமணமான தம்பதிகளுக்கிடையே என்னவிதமான சட்ட உரிமைகள் உண்டோ அதே அள்வுக்கு இந்த குடிமைப்பங்காளர்களையும் ஏற்றால் என்ன?
இதே போல, திரு நங்கைகள், திருநம்பிகள் இவர்கள் கூட்டாக வாழ்வதுண்டு. இவர்களுக்குள் ஒருவரை ‘அம்மா’ வாகக் கொண்டு வாழ்வதும் உண்டு. இவர்களுக்குள்ளேயே தத்தெடுப்பதும் சடங்காக நடத்தப்படும். இவை எல்லாம் அவர்கள் திருப்திக்கு நடத்திக் கொள்ளப்படுபவையே.
இரு, திரு நங்கைகள், திரு நம்பிகள் இணைந்து வாழ்வாரேயாயின், அவ்விருவரின் கூட்டுக்கு, பங்கிற்கு ”குடிமைப் பங்காளர்கள்” என சட்டபூர்வ அந்தஸ்து ஏன் அளிக்கப்படக் கூடாது.?
இதே வகையிலேயே ஓர் பால் ஈர்ப்புள்ளோரும் வருவார்கள். ஓர் பால் ஈர்ப்புள்ளவர்களின் உறவு திருமண உறவைப் போன்றதே. எனவே அவர்கள் திருமண அந்தஸ்தைக் கேட்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓர்பாலின திருமணங்கள் சட்டபூர்வமாக இன்னும் ஏற்கப்படவில்லை. அதற்கான சட்டபூர்வ ஏற்பு வரும் வரையில், பாலுறவு என்பதற்கு எந்த கவனமும் தராமல், இருவர் இணைந்து வாழ்வதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் தேவையானதொன்றாக இருக்கிறது.
ஏனெனில் இவர்களிடையேயும், ஒருவருக்குப் பின் மற்றவர் இருக்க நேர்கையில் மேற்கண்ட அதே சிக்கலே வரும். அல்லவா?
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓர் பாலினம் என்பது இதுவரை குற்றமாக(crime) இருந்துவந்தது. ஆனால், சமீபத்தில் ஓர் பாலினம் என்பது Decriminalize செய்யப்பட்டிருக்கிறது.* எனவே, இவர்களையும், இவர்களுக்கென தனி சட்டம் (தேவைப்படின்) வரும் வரையில் குடிமைப் பங்காளர்களாக அங்கீகரிக்கலாம். சட்ட உரிமையும் அளிக்கலாம் என்றே தோன்றுகிறது.(Decriminalize என்றால் குற்றமல்ல என்று பொருள் அல்ல. சட்டப் பொருள் அகராதியின்படி, சட்டத்தில் குற்றத்திற்கு தண்டனை தரப்படும். இங்கே இது Decriminalize செய்யப்பட்டதால் ”தண்டனைக்குரிய குற்றமல்ல” என்றே பொருள் எடுக்க வேண்டும்). ஓரின ஆதரவாளர்கள் சார்பாக நாஸ் ஃபவுண்டேசன் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் “We hold that sexual orientation is a ground analogous to sex, and that discrimination on sexual orientation is not permitted under Article 15,” எனச் சொல்லி இருக்கிறது. (ஆனால் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இது நீதி உருவாக்குபவரின் பார்வைக்குச் செல்ல வேண்டிய ஒன்று எனச் சொல்லி இருக்கிறது.)
இந்த செயல் முறை, ஏற்கப்பட்டால், வேறு பல சட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது வேறு பல சட்டங்களிலும் சட்ட திருத்தம் கொண்டு வர நேரிடலாம்.
சொத்துரிமைச் சட்டம், ஜீவனாம்சம், பாதுகாப்பு, ஓய்வூதியம், தத்தெடுத்தல், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களில் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டி இருக்கும். ஆனால் அதன் தேவை அதிகரித்தே வருகிறது.
உதாரணமாக ப்ராவிடண்ட் ஃபண்ட் போன்றவற்றை தான் இறந்துவிட்டால் எவருக்குத் தரவேண்டும் என பணியாளர் குறிப்பிட வேண்டிய பட்டியலில், பணத்தைப் பெற உரிமையுள்ளவராக, அந்தப் பணியாளரின் கணவர்/மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர், மற்றும் குழந்தைகள் போன்றவர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.
குடிமைப்பங்காளர்கள் எனில், அந்த மற்றொரு நபருக்கும் உறவினராக இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்கிடையேயான பாலுறவு எப்படிப்பட்டதாக இருப்பினும், சட்டபூர்வ அங்கீகாரம் தரும் நிலையை நாம் வந்தடைந்துவிட்டோம்.
அப்படி ஒரு சட்ட உரிமை கிடைக்கப்பெற்றால் வேறென்னன்ன சமூக மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் சிந்தித்து, அதை நேர் செய்யவும் வழிவகை செய்யப்பட வேண்டும். உதாரணமாக முக்கியமாக தத்தெடுப்பு. கணவன், மனைவி அல்லது ஒருவர்கூட தத்தெடுக்கலாம் என்கையில், இவர்கள் தத்தெடுக்கையில் என்னென்ன சட்டச் சிக்கல்கள் வரும் என சிந்தித்து தத்தெடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டி இருக்கும்.
இந்தியாவில், எல்லா மதங்களுமே இன விருத்தியை மட்டுமே கணக்கில் கொண்டுதான் திருமணம் எனும் சடங்கை நோக்குகின்றன. சட்டத்தில் தம்பதியரில் எனக்குறிப்பிட நேர்கையில் எல்லாம், கணவன்,மனைவி என்றே குறிப்பிடுவதால், ஒருவர் ஆண், மற்றவர் பெண் என்றே எடுக்க வேண்டி இருக்கிறது. இந்து, கிறித்தவ, சட்டங்களிலும் ஆண், பெண் என்றே சொல்வதாலும் இஸ்லாமிய(பல குழுக்கள் உண்டு)சட்டத்திலும் திருமணத்தை ஆண், பெண்ணுக்கிடையேயான இன விருத்தி பற்றியதாகவே பார்ப்பதாலும், எந்த மதமும் ஓர் பால் திருமணத்தை ஏற்கவில்லை.
ஆனால் சட்டம், தம்பதியருக்குப் பிறக்கும் எந்தக் குழந்தையும், அல்லது தத்தெடுப்பால் உரிமை உண்டான குழந்தைகளுக்கும் ஒரு திருமண பந்தத்தில் பிறந்த குழந்தைக்கு உள்ள அனைத்து உரிமைகளையுமே அங்கீகரிக்கிறது. இந்நிலையில் இணைந்து வாழும் இருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது தேவையே இல்லை.
ஓர்பால் திருமணம் அங்கிகரிக்கப்படுவதை விட, மேற்சொன்ன குடிமைப் பங்காளர்கள் எனும் திட்டம் சரிவரும் என்றே தோன்றுகிறது.
அதிலும் இணைந்து வாழ்வதற்கான ஒப்பந்தம், பிரிவு நேர்ந்தால் பிரிக்கப்பட வேண்டிய உரிமை,கடமைகள் குறித்த ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம், என திட்டமிடலாம்.
இதில் இன்னொரு இலாபமும் இருக்கிறது. இரு நபர்கள் இணைந்துதான் வாழ்கிறார்கள் அங்கே திருமணம் இல்லை என்பதால், மதங்கள் உட்புக முடியாது. ஒரு வியாபார ஒப்பந்தம் போல மட்டுமே இது இருப்பதால், இரு நபர்களுமே அவரவர் மதங்களைத் தொடரலாம்.
மெல்ல மெல்ல மதங்களும் சாதிகளும் ஒழியக்கூட இந்த முறை வாய்ப்பாக அமையலாம்.
ஓர்பால் திருமணம் என்பதற்கு சட்ட அங்கிகாரம் கொடுத்தாலும், சமூக அங்கிகாரம் வரும் வரையில் இது போன்ற திட்டங்கள் உதவலாம். அதற்கும் முன்பாகவே, பலர் வேறு வழியில்லாமலோ வேறு காரணங்களாலோ இணைந்து வாழ்வதைக் காண முடிகிறது. குறிப்பாக திரு நங்கைகள், திருநம்பிகள்.
குடும்பம் என்றால் கணவன்,மனைவி, அவர்களின் குழந்தைகள் என்பதுதான். ஆனால் கூட்டாக வாழ்பவர்களை குடும்பம் எனச் சொல்லாவிட்டாலும், குடிமைப் பங்காளர்கள் என அங்கிகரித்து சட்ட உரிமை கொடுக்க வழிவகை செய்தால் என்ன?
மறுபடி சொல்கிறேன் இது ஓர்பால் திருமண அங்கிகாரம் அல்ல.
எந்த இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்தால் அவர்களை ஒரு குடிமைப் பங்காளர்கள் என அங்கிகரித்து, சட்ட உரிமை தருவது பற்றியது.
இது இந்தியாவிற்குமட்டுமானதில்லை. இந்தியா தவிரவும் பல நாடுகளில், இது போன்று இருவர் கூட்டாக வாழ்வதுண்டுதானே?
என்ன செய்யப்போகிறோம்?