கவிதைகள்: த.அரவிந்தன், சார்லஸ் புகோவ்ஸ்கி

An Egyptian man walks by a hanging basket lowered from a window in anticipation of a delivery
ஒயர் கூடையை இழுக்கும் வீடு
ஐந்தாவது மாடியிலிருந்து
நரம்புக் கயிற்றில் ஒயர் கூடையைக் கட்டி
கீழே இறக்கி
மேலே இழுக்கிறாள்
மாடு மேய்ந்து
சினை தள்ளி
கன்று ஈன்று
பால் சுரக்கிறது
காபி வேண்டியவருக்குக் காபி
டீ வேண்டியவருக்கு டீ
தயிர் வேண்டியவருக்குத் தயிர்
நெய் வேண்டியவருக்கு நெய்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
செடி முளைக்கிறது
மரம் செழிக்கிறது
அரிசி, பருப்பு, காய், கனி நிறைக்கிறது
புலாவ் கேட்டவர்களுக்குப் புலாவ்
சாம்பார் கேட்டவர்களுக்குச் சாம்பார்
கொழுக்கட்டை கேட்டவர்களுக்குக் கொழுக்கட்டை
கனிச்சாறு கேட்டவர்களுக்குக் கனிச்சாறு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
சகலத்தையும் சுமந்து
செய்தித்தாள் வருகிறது
கொலை விரும்பியவர்களுக்குக் கொலை
கொள்ளை விரும்பியவர்களுக்குக்
கொள்ளை
கற்பழிப்பு விரும்பியவர்களுக்குக்
கற்பழிப்பு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
ரகசியம் சேர்த்து
அஞ்சலில் பொட்டலம் வருகிறது
பரிசு ஆர்வலருக்குப் பரிசு
புத்தக ஆர்வலருக்குப் புத்தகம்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
அட்டைப்பெட்டி நிரம்ப
ஆம்புலன்ஸ் விளக்கு அலற
மாத்திரை வருகிறது
கூடை தேவையுள்ளோருக்குக் கூடை
கயிறு தேவையுள்ளோருக்குக் கயிறு.
த.அரவிந்தன்

caromபட்டத்தினால் என்ன பயன்?
அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்கள் தீச்சுடரில் மரிக்கிறார்கள்-
தற்கொலை மாத்திரைகள், எலிப் பாஷாணம், கயிறு
எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்…
கைகளைக் கிழித்துக் கொள்கிறார்கள்,
சன்னல் வழியே தம்மை வீசி எறிகிறார்கள்,
கண்களைத் தோண்டிக் கொள்கிறார்கள்,
அன்புக்கு மறுப்பு
வெறுப்புக்கு மறுப்பு
மறுப்பு, மறுப்பு.
அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்களால் சகிக்க முடிவதில்லை,
அவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
அவர்கள் அமைதிப்புறாக்கள்
அவர்கள் சிட்டுக்குருவிகள்,
அவர்களால் அடைய முடிவதில்லை.
ஓங்கிய ஓர் தீச்சுடர்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்
ஓர் சுடர், ஓர் நற்சுடர்
வெயிலில்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்.
அறையின் விளிம்பில் அழகானவர்கள்
சிலந்திகளாய், ஊசிகளாய், மெளனிகளாய்
நசுக்கப்பட்டுக் காணக் கிடைக்கிறார்கள்.
ஏன் நம்மை விட்டுச் சென்றார்கள் என
புரிந்து கொள்ளவே முடியவில்லை,
அவர்கள் மிகவும் அழகானவர்கள்.
அவர்களால் அடைய முடிவதில்லை
அருவருப்பானவர்களை அவர்களது அருவருப்பான வாழ்க்கைக்கு விட்டு விட்டு
இளமையிலேயே இறந்து போகிறார்கள் அழகானவர்கள்.
வெயிலில் பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுவதைப் போன்று
நேசிப்புக்குரியது, புத்திசாலித்தனமானது: வாழ்க்கை, தற்கொலை மற்றும் மரணம்.
**
முடிவு
மலர வேண்டிய நேரத்தில்
மலர்வதைப் பற்றிய அக்கறையற்ற
ரோஜாக்களைப் போன்றவர்கள் நாம்.
காத்திருந்து
வெறுத்துப் போனது போலிருக்கிறது
சூரியன்.
**
இங்கிலிஷ் மூலக் கவிதைகள்: சார்ல்ஸ் புகோவ்ஸ்கி
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
மூலம்:
‘Whats The Use Of A Title’?& ‘Finish’ by Charles Bukowsky
சென்ற நூற்றாண்டின் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து செய்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

One Reply to “கவிதைகள்: த.அரவிந்தன், சார்லஸ் புகோவ்ஸ்கி”

  1. எனக்கும் புதுக்கவிதை இயற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தினால், ராமலஷ்மியின் மொழிபெயர்ப்பை கீழ்வருமாறு எழுதிப்பார்க்க வைத்தது. இது அச்சொட்டான மொழிபெயர்ப்பல்ல. ஒரு அவசர முயற்சி. புதுக்கவிதை இலக்கணங்களுக்குள் இது வருமோ தெரியவில்லை.
    போதைக்கு அடிமைகளாய்ப் போனதனால் ஜவ்வனத்தர்
    விட்டில்களாய் தீயில் விழுந்து மரிக்கின்றார்
    பேதைகளுக்கு இயலவில்லை பாவம்.
    தூரத்துப் பார்க்கில், தொலைக்காது தம் வாழ்வை
    இன்னும் முதியோர் இருந்து சதுரங்கம்
    ஆடுகையில் அந்தோ! இவ் அழகர்கள் ஏன் சாகின்றார்?
    கையிலே ஊசி, கைமுழுதும் குத்தியதால்
    வந்த அடையாளம், வாழ்வழிந்த கவலையில்லை,
    வெறுப்பில்லை யார்மீதும், வெளிப்பாய்ந்து சாளரத்தால்
    உருக்குலைந்து சாவார், ஒரு கவலையும் இல்லை.
    எலிமருந்து, நஞ்சு எதுவானால் தானெ்ன?
    வாழ்வை முடிக்க வழியுண்டு கவலையில்லை.
    வாழ்தல் இனிதென்றால் வாழாது இவ்வுலகில்
    மாளுதலும் இனிதே மரணமும் தானினிதே!
    அழகான வண்ணத்தி, அமைதிப்புறா, மற்றும்
    சிட்டுக்குருவிகளாய் சிறகடிக்க வேண்டிய அப்
    பட்டு மனம் கொண்ட பரிதாப ஜீவன்கள்
    விட்டில்களாய் வீழ்ந்தார் விதியின் கொடுமையினால்.
    வாழ்ந்து முடித்த வயோதிபர்கள் தூரத்தே
    இன்னும் தம் வாழ்வின் இறுதிக்கணம் வரைக்கும்
    சதுரங்கமாடிச் சந்தோசத்தில் மூழ்க
    எங்கள் அழகர்களோ ஏன் வாழ்வைத் தொலைக்கின்றார்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.