”போன வாரம் எங்க மாமா அப்படி ஒரு பெரிய கலாட்டா பண்ணிட்டார்”
”என்னாச்சு?”
”மருத்துவமனையில் சேர்ந்து, 2 நாள் சிகிச்சை முடிந்து, வீட்டுக்குத் திரும்பினார். கையோட, அவருக்கு மருத்துவமனை ஒரு நுண்ணறிப்பேசியைக் கொடுத்து, அவருடைய கட்டிலில், சில கருவிகளை இணைத்துத், தனிப்பட்ட இணைய கனெக்ஷன் வேற. என் பையன் அருணுக்கு அப்படி ஏதும் விளையாட்டு விஷயங்கள் வாங்கித் தரவில்லை என்று கடுப்பு வேறு”
”விஷயத்துக்கு வா”
”மாமா அந்த நுண்ணறிப்பேசியில் என்னவோ செய்ய, வீட்டில் ஆம்புலன்ஸ் வந்து காலனியே கூடிடுச்சு. மாமா, ஜாலியா சிரிக்கறாரு”
”அப்படி என்னதான் செஞ்சாராம்?”
”மயக்கத்துல இருக்கும் போது இப்படி அப்படி தடவுங்கனு ஒரு நுண்ணறிப்பேசிய குடுத்தாங்க. சரி, போரடிக்காம இருக்க என்னவோ விளையாடக் குடுக்கறாங்கன்னு விட்டுட்டேன். உனக்குத்தான் தெரியுமே, எனக்குச் சிவப்பு கலர் பிடிக்கும்னு. அந்த நுண்ணறிப்பேசியில் உள்ள பல ஸ்லைடுகளை சிகப்பு ஆகும் வரை நகர்த்தி விட்டேன். எனக்கு என்ன தெரியும், இது வலி எவ்வளவு, மூச்சு முட்டல் எவ்வளவுனு கேக்கறாங்கனு? கண்ணாடி வேற போட்டுக்கலையா…”
***

பொது மருத்துவத்தில், பல வகை மருத்துவ சேவைகள் இதில் அடங்கும். சில நாடுகளில் (இங்கிலாந்து, கனடா), மருத்துவ சேவைகளை, மக்களது வரிப்பணத்திலிருந்து, அரசாங்கம் வழங்குகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், மருத்துவ சேவைகள் காப்பீடு மூலமாக (medical insurance) வழங்கப் படுகின்றன. அங்குள்ள குடிமக்கள், காப்பீடு பணம் கட்டுவதற்குத் தகுந்தவாறு, சேவைகள் வழங்கப் படுகின்றன. இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்க முறையை பின்பற்றத் தொடங்கிவிட்டன. இந்த இரு முறைகளிலும் உள்ள மருத்துவ சேவைப் பிரச்னைகள் என்னவோ ஒன்றுதான்.
மிக முக்கியமான மருத்துவ சேவை பிரச்னைகளில் இவை அடக்கம்:
- படுக்கைகள் அதிகம் இல்லாததால், நோயாளிகள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீடு திரும்பிய நோயாளிகளை மருத்துவப் பயிற்சியுடைய எவரும் பார்த்துக் கொள்ள வழியில்லை
- சரியான உணவு மற்றும் மருந்துகளை நோயாளிகள் உட்கொண்டார்களா என்று கண்காணிக்க வழி இல்லை
- சிகிச்சைக்குப் பின், சரியான உடற்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்றும் நோயாளிகள் கண்காணிக்கப்படுவதில்லை
- நோயாளிகளின் நிலை மிகவும் மோசமடைந்த பிறகே, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்
மருத்துவ சிகிச்சைக்குப் பின், சிகிச்சையின் பொழுது உள்ளதைப் போலவே தொடர்ந்து கவனம் இருந்தால்தான், சிகிச்சை வெற்றி பெறும். ஆயினும், இதற்கு வழியில்லாமல், இன்று, இது ஒரு மிகப் பெரிய உடல்நலப் பிரச்னை. அதிலும், வயதானவர்களைச் சரிவர கவனிப்பது, தற்போதைய மருத்துவ முறைகளில் மிகவும் கடினம்.
இன்று, வயதானவர்கள்கூட நுண்ணறிப்பேசியை பயன்படுத்தும் முறையைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால், இத்தகைய கருவிகளில் மருத்துவ இணையத்தின் மிக முக்கிய அங்கம், நுண்ணறிபேசி.
மேலேயுள்ள விடியோ இன்று நடக்கவல்ல ஒரு கருவி இணைய முயற்சி. இதில் உள்ள கருவிகள் மிகவும் எளிதானவை. ரத்தத்தில் உள்ள பிராணவாயுவை (blood oxygen level) அளக்கும் உணர்வி, மருந்துகளை அளந்து தரும் வழங்கி (medicine dispenser) , இணையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய எடை எந்திரம் (smart weighing scale).
இந்தச் சிறு கருவிகளின் கூட்டம், பயிற்சி பெற்ற நர்ஸ்களுக்கு, இணையம் மூலம் நோயாளிகளின் நிலையைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. எந்த நோயாளின் நிலை மோசமடைந்தாலும், உடனே நர்ஸ், நுண்ணறிப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, சரி செய்ய முயற்சிப்பார். இல்லையேல், நோயாளியின் உறவினரைத் தொடர்பு கொண்டு, உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஏற்பாட்டையும் செய்ய முடியும். இத்தகைய கருவிகளின் இணையம் மூலம் சிகிச்சை மேம்படுவதால், அதிக படுக்கைகள், ஆஸ்பத்திரியில் தேவையில்லை. அத்துடன், இத்தகைய முயற்சிகளுக்கு ஆகும் செலவு என்பது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை விடக் குறைவானது.
இந்த முயற்சியின் இன்னொரு முகம், டாக்டர்கள் பயன்படுத்தும் கருவிகள். பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தும் காகிதப் பதிவுகளுக்கு (patient records) அளவே இல்லை. முதலில் காகிதம், பிறகு, அதையே கணினியில் டைப் செய்து முக்கிய நோயாளிகளின் மருத்துவ அளவுகள், ஸ்கான், எக்ஸ் கதிர் சுருள் போன்ற விஷயங்களையும் மேலேற்றி விடுகிறார்கள். இதனால், கணினியில் உள்ள விஷயம் முக்கியமானதாக இருந்தாலும், பழைய செய்தி போல எப்போதாவது பயன்படும் விஷயம். இத்தனைக்கும், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மின்னணுவியலுக்குக் குறைச்சலே இல்லை. டாக்டர் நோயாளியை பார்க்கும் பொழுது பயன்படுத்துவது என்னவோ காகிதப் பதிவுதான்!
இன்று கலிஃபோர்னியாவில், ஒரு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு எல்லா மருத்துவக் குறிப்புகளும், பரிசோதனை முடிவுகளும், வில்லைக் கணினி/ நுண்ணறிப்பேசியில் வழங்கப் படுகிறது. நோயாளியின் அன்றைய நிலையும் கணினிகள் மூலம், டாக்டர்களின் வில்லைக் கணினியில் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. கருவிகள்/உணர்விகள் மருத்துவமனையின் வழங்கிக் கணினிக்கு, உடனுக்குடன் அளவுகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால், மருத்துவர்கள், காகிதத்தைத் துரத்துவதை விட்டு, நோயாளிகளைக் கவனிக்கலாம்.
இந்தப் பகுதியில் நாம் இன்றைய சாத்தியங்களைப் பார்த்தோம். இத்துறை இன்னும் குழந்தைப் பருவத்தில் உள்ளது. பல வகை புதிய உணர்விகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் பொறியாளர்கள். வெப்பம், எடை, பிராணவாயு அளவு, நாடியளவு, ரத்த அழுத்தம், சுற்றுவட்ட அளவு போன்றவற்றிற்கு, இன்று உணர்விகள் உண்டு. ஆனால், மருத்துவத் துறையில், ஒரு நோயாளி எவ்வளவு வலியில் இருக்கிறார், எப்படி அவர் பார்வையில் அவரது நிலமை உள்ளது என்பதும் முக்கியம். இவற்றை, நுண்ணறிபேசிகளில் பயன்பாடுகள் மூலம் நோயாளிகளே தெரிவிக்கும் முறைகளும் வந்துவிட்டன.
கனடாவின், மிகவும் குளிர் (இந்த நாட்டில், எங்கும் குளிர்தான் – சில பகுதிகளில், செல்ல முடியாத அளவிற்குக் குளிர்) வாய்ந்த வடக்கு பகுதிகளுக்கு, இன்று இப்படியும் ஒரு வான்கூவர் நகரத்தில் வசிக்கும் மருத்துவர் சேவை செய்கிறார்;
கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.
லாபத்திற்காக இயங்கும் அமெரிக்க முறையும், அல்லது அரசாங்கத்தால் குடிமக்களுக்கு வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் கனடா/இங்கிலாந்து போன்ற முறையும், இவ்வகைக் கருவி இணைய வசதிகளால் பயனடையும். நம்முடைய உதாரணங்கள் இத்தகைய இரு அமைப்புகளிலும் நோயாளிகளுக்கு உதவுவதைப் பார்த்தோம். எந்த முறையானாலும், நோயாளிகளின் பிரச்னையைத் தீர்க்க வழி செய்தால், இன்றைய அமைப்பை விட முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கருவிகள் மனித சேவையை என்றும் விலக்கி விடாது – துணை போனாலே அது சேவையின் தரத்தை உயர்த்தும்.