எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு

21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனப் பெருவாரியாக ஊகிக்கப்படுகிறது. மேற்கின் நிழலில் இருந்து வெளிவந்து தங்களுடைய தாக்கத்தை உலகில் மறுபடியும் நிலைநாட்டுவதாக இந்த நூற்றாண்டு அமைய எல்லா சாத்தியங்களும் உருவாகியுள்ளன என உலக அரசியலை கூர்ந்து நோக்கும் பலர் கணிக்கின்றனர். ஆசிய மறுஎழுச்சி என்பது சாத்தியமாகும் பட்சத்தில் அதை முன்னெடுத்திச் செல்லும் இரு பெரும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் குறிப்பிடப்படுகின்றன.
சீனா ஒரு வல்லரசாக, உலக நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்கும் பொருளாதார சக்தியாக வளர்ச்சியடைந்து பல வருடங்கள் ஆகி விட்டன. அதை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவின் வளர்ச்சியும், அதன் தாக்கமும் சிறிதாகவே உள்ளது. வளர்ச்சி விகிதத்திலும்,இது வரை அடைந்த வளர்ச்சியிலும், ராணுவ பலத்திலும், சர்வதேச செல்வாக்கிலும், சீனாவிற்கு இந்தியா மிக இளையவளாக தான் உள்ளது.
ஒப்பு நோக்காமல் இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சியை தனியாக ஆய்விற்கு உட்படுத்தினோம் என்றால் அது சமீபத்திய சில பத்தாண்டுகளில் பல தலைமுறைகளாக பேணி வந்த பழக்கங்களை, உலகைக் குறித்த மனோபாவத்தை பாம்பு தன் தோலை உரிப்பது போல உருவிப் பின்னே விட்டுப் புதிய நூற்றாண்டில் கால்பதித்துச் செல்வதைக் காண முடியும்.
தன்னை உலக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்ட இந்தியாவின் வருடங்களை, அதன் சரித்திர முக்கியத்துவத்தை, வெற்றிகளை, இழந்த சந்தர்ப்பங்களை, துணிந்து ஏற்றுக் கொண்ட அபாயங்களைக் குறித்த பருந்துப் பார்வையை சி. ராஜாமோகன் எழுதி 2004இல் வெளிவந்த “Crossing the Rubicon” என்ற நூல் அளிக்கிறது.

அணுஆயுத காளானின் நிழலில்

மற்ற நாடுகளின் பார்வையிலும், ஒரு வகையில் நம்மைக் குறித்த நமது பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு என்றால் அது 1998இல் இந்தியாவின் அணுஆயுத வெடிப்புச் சோதனை எனலாம். வளர்ச்சியடைந்த மேலை நாடுகளின் ஒட்டு மொத்தக் கசப்பை இந்தியா அதற்குப் பிறகான உடனடிக் காலங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அணு ஆயுதச் சோதனைகளை நடத்த வேண்டிய நிர்ப்பந்தங்களை, நெருக்கடிகளை, அதன் பின்னால் இருந்த நீண்ட கால வியூகம், உடனடி பிரச்சனைகள், அரசியல் தைரியம் போன்றவைகளை முதலில் இந்த நூல் அலசுகிறது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்தியா தன்னுடைய அணுஆயுதக் கொள்கையில் சர்வதேச நெருக்கடியை சந்தித்தது. முதல் வளைகுடாப் போருக்கு பின் அமெரிக்கா மற்றும் மற்றைய மேலை நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த கண்டிப்பைக் காட்ட ஆரம்பித்தன. அணு ஆயுதக் கொள்கையை பொருத்த வரை இந்தியாவும் முதலில் அதை ஆதரித்தது. அணு ஆயுதங்களை மொத்தமாக உலக நாடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கொள்கை இந்தியாவிற்கு உவப்பானதாக இருந்தது. அப்படிபட்ட ஒரு முகாந்திரத்தோடு ஆரம்பித்த சர்வதேச உரையாடல் தொண்ணூறுகளில் அணுஆயுதங்களின் பரவல் தடைச் சட்டம் பற்றியதாக மாறியது. அதாவது, ஏற்கனவே பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் அவற்றைத் துறக்க வேண்டும் என்ற வழிவகை நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக மேலும் புதிதாக அணுஆயுதங்களைச் சோதிக்காமல், ஆனால் அவற்றின் எல்லை வரை வந்து நிற்கும் நாடுகள் அணு ஆயுதங்களை கைவிடுமாறு ஒப்பந்தம் செய்ய வைக்கும் கொள்கையாக அது மாறியது. தொண்ணூறுகளில் நரசிம்மராவ் அரசை அமெரிக்கா அவ்வொப்பந்தத்தில் (Comprehensive Test Ban Treaty) கையெழுத்து இடுமாறு நிர்ப்பந்தம் செய்ய ஆரம்பித்தது.
இந்தியாவின் முன் இருந்தது இரு வழிகள் மட்டுமே. அணு ஆயுத வெடிப்பை நிகழ்த்தி, சோதனைகள் நடத்தி அவற்றை பகிரங்கமாக வெளியுலகிற்கு தெரிவித்து சர்வதேசக் கண்டனங்களையும், பொருளாதாரத் தடைகளையும் தற்காலிகமாக ஏற்றுக் கொள்வது. மற்றொரு வழி, அணு ஆயுதங்களைக் கைவிட்டு தற்காலிக பொருளாதார உதவி வகை லாபங்களைப் பெற்றுக் கொள்ளுதல். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் அணு ஆயுதத்திற்கு மறைமுகமாக சம்பந்தம் இருக்கும் என்ற காரணம் காட்டி பல தொழில்நுட்பங்களை நீண்ட கால நோக்கில் மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், தானே உருவாக்கிக் கொள்ளவும் தடைகளை உருவாக்கி கொள்வதாகும். நரசிம்மராவ் அதற்கு பல்வேறு காரணங்களை காட்டி கையெழுத்திடுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே மறைமுகமாக அணுஆயுத வெடிப்பு சோதனைக்கு உத்தரவிட்டார். 1995இல் அணு குண்டு சோதனை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை கண்டுபிடித்தது. அமெரிக்க தூதுவர் மூலம் இந்தியாவிற்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு அந்த முயற்சி அப்போதே கைவிடப்பட்டது. அதற்கு அடுத்ததாக வந்த வாஜ்பாய் ஆட்சியில் 1998இல் இறுதியாக போக்ரான் சோதனைகள் உலகின் கண்காணிப்பில் இருந்து தப்பி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
எதிர்பார்த்தது போலவே அமெரிக்காவும், மற்ற மேலை நாடுகளும் இந்தியாவின் மேல் கடுமையான பொருளாதாரத் தடைச் சட்டங்களை தண்டனையாக விதித்தன. பனிப்போர் முடிந்து ஒற்றைப் பெரும்சக்தியாக இருந்த அமெரிக்காவை பின்பற்றி மேற்கு யூரோப்பிய நாடுகள் முதல், ஆஸ்த்ரேலியா, ஜப்பான் வரையான நாடுகள் இந்தியாவிற்கு பலவகையில் தடைகள் விதித்தன.
நிலைமையின் உக்கிரத்தைக் குறைப்பதற்காக இந்தியா தனக்கு தானே அணு ஆயுத சோதனைக்கு தடை விதித்துக் கொண்டு அதைப் பிரகடனப்படுத்தியது. தனக்கு வேண்டிய சோதனைகளை முடித்து விட்டதாகவும், இனிமேல் மற்றொரு சோதனை வேண்டியிருக்காது எனவும் அறிக்கை வெளியிட்டது. ஒரு அணுஆயுத சக்தியாக இனிமேல் அதன் பரவலை கட்டுப்படுத்த தான் முனைப்போடிருப்பதாக அறிவித்தது.
சில வருடங்களுக்குத் தடைகளை விதித்தாலும், அமெரிக்கா அதற்குப் பிறகு இந்தியா ஒரு அணுஆயுத வல்லமையுடைய தேசம் என ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. பல சர்வாதிகார தேசங்களும், தீவிரவாதிகளும் அணுஆயுதம் ஏந்துவதைத் தடுக்க அந்தத் தொழில்நுட்பத்தை உடைய எல்லா நாடுகளும் சேர்ந்து முயற்சியும், ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை மெதுவாக அமெரிக்கா காண ஆரம்பித்தது. அந்த மன மாற்றத்திற்கு இந்தியாவும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகிய புஷ்ஷின் ஏவுகணைத் தடுப்பு முயற்சிகளுக்கு முன்னால் சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்தது.
பொறுப்புள்ள அணு ஆயுத சக்தியாக இந்தியா தன்னை முன்னிறுத்தியும், அதே நேரம் ஒற்றை வல்லரசின் சில அதீத வியூகங்களுக்கு ஆதரவை அளித்ததன் மூலமும் இந்தியாவிடம் அமெரிக்காவின் அணுகுமுறை தணிந்தது. அமெரிக்கா தன்னுடைய தடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்த சில வருடங்களுக்குள் மற்ற நாடுகளும் விலகலை உதறிவிட்டு புதிய நடைமுறை நிலைமையை ஒத்துக் கொள்ள ஆரம்பித்தன.
சோவியத் குடியரசின் பின்பலம் இல்லாமல் பலவீனமான, நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா பின்வளைவுகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன் பகடை காய்களை உருட்டிய முதல் பெரும் நிகழ்வாக போக்ரான் அணு குண்டு சோதனையைக் கூறலாம். அதன் சிக்கல்களிலிருந்து பெரும் சேதம் எதுவும் இல்லாமல் தன் இடத்தை நிறுவி வெளிவந்தது இந்தியாவின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை வெற்றியாக அமைந்தது.

rm

அணி சேரா இயக்கம்

தொண்ணூறுகளில் பள்ளிக் குழந்தைகள் முதல் வெளியுறவுத் துறை அதிகாரிகள் வரை இந்தியாவே உலக நாடுகளிடையே அணி சேரா இயக்கத்தைத் தலைமை தாங்கும் நாடு என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அணி சேராமை என்பது அணி சேரா இயக்கம் உருவாவதற்கு குறைந்தது பதினைந்தாண்டுகள் முன்னரே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அச்சாணியாக உருவாகி விட்டிருந்தது. காலனி ஆதிக்கத்திலிருந்து வெளி வரும் போதே அமெரிக்கா – சோவியத் யூனியன் தலைமையில் இரு துருவமாக உலகம் பிரிந்து நின்று கொண்டிருந்தது. இந்தியாவைத் தொடர்ந்து பழைய யூரோப்பிய ஆதிக்கத்திலிருந்து சீராகப் பல காலனிகள் சுதந்திரம் பெற்று தனி நாடுகளாகப் பிறந்து கொண்டிருந்தன. அப்படிப் புதிதாய் உதிக்கும் நாடுகள் தங்கள் நலனிற்காக ஒன்று கூடி உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒற்றைக் குரலாக தங்கள் கோரிக்கைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்வதற்காக உருவானதே அணி சேரா இயக்கம்.
அவ்வியக்கத்தின் தலைமை ஏற்று நிற்கும் நாடாக, அதிகாரபூர்வமாக இல்லாமல், இந்தியா தன்னை நிறுவிக் கொண்டது. அணி சேரா இயக்கம் எழுபதுகளில் உலக அரங்கில் சிறிது காலம் முக்கியமான குரலாக ஒலித்தது. அது ஒரு அதிகார சக்தியாக மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பு அதன் உறுப்பினர் நாடுகளுக்கு இருந்தது. உலகின் வல்லரசுகளின் கோட்பாடு எதுவும் இல்லாத இயக்கம் என்று ஆரம்பித்ததற்கு மாறாக எழுபதுகளின் இறுதியில் சோஷலிஸத்தை நோக்கி அது திரும்பியிருந்தது. அதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, வியட்னாம் போரில் அமெரிக்காவின் தோல்வி மேற்கின் தோல்வியாக, முதலாளித்துவத்தின் தோல்வியாக பார்க்கப்பட்டது. சோஷலிஸம் அடுத்த புரட்சியாக, மக்கள் சக்தியின் வெற்றியாக காணப்பட்டது. இரண்டாவது, வளைகுடா நாடுகளின் எண்ணை வளத்தை மேலை நாடுகள் பெரிதும் நம்பியிருந்தன. அவற்றின் தேவை புதிதாக சுதந்திரம் பெற்ற வளைகுடா நாடுகளுக்கு, உலக அரங்கில் தங்களின் தேவைகளைப் பேரம் பேசும் முக்கியத்துவத்தை அளித்தது. அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணைத் தொழிற்சாலைகள் முழுவதையும் அந்நாட்டு அரசாங்கங்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அரசு முன்னெடுத்து செல்லும் சோஷியலிஸம் மூலம் மேற்கின் பன்னாட்டு  நிறுவனங்களின் பிடியில் இருந்து அந்தந்த நாடுகளின் சமூகத்தை “விடுவிக்க” இயலும் என்று நம்பப்பட்டது. மூன்றாவது, அணிசேரா இயக்கத்தின் எண்ணிக்கை. தொடர்ந்து சுதந்திரம் அடைந்த நாடுகளால் வளர்ந்த அணிசேரா இயக்கத்தின் எண்ணிக்கை 1970களின் எழுபதைத் தாண்டியது. ஐக்கிய நாடுகளின் சபையில் அவர்களின் எண்ணிக்கை பலத்தால் கொள்கை விவாதங்களில் குறிப்பிட்ட ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.
ஆனால் எழுபதுகளின் இறுதியில் நிலைமை மாற்றம் கொள்ள ஆரம்பித்தது. பின்னடைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு அமெரிக்கா உலக அரங்கில் தன் ஆதிக்கத்தை புதிப்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சோவியத் குடியரசு மீளமுடியா உள்நாட்டு போரில் சிக்கித் தன் வலுவிழந்தது. மேலும் புதிதாய் விடுதலை அடைந்த பல அணிசேரா நாடுகள் சர்வாதிகாரத்தையும், அடிப்படைவாதத்தையும் முன்வைத்த அரசியலால் உள்நாட்டிலும், தங்களுக்குள்ளேயும் போரிட்டு முரண்பட்டன. தேவையின் காரணமாக மேலை நாடுகள் வளைகுடா நாடுகளின் எண்ணையைத் தவிர்த்த மற்ற எரிபொருள் ஆய்வு, உபயோகம் போன்றவற்றில் கவனம் செலுத்தி கச்சா எண்ணையின் விலையை குறைத்தன.
இவற்றின் அறிகுறிகள் தெரியவந்த போதும் அணிசேரா இயக்கம் என்ற கருதுகோளை இந்தியாவால் உதற முடியவில்லை. வராலாற்றில் முன்பிருந்த கொள்கையிலிருந்து தெளிவாகப் பிரிந்து செல்வதற்கான அரசியல் திடம் அரசுகளிடம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு நேருவின் மிக முக்கியமான வெளியுறவு கொள்கையைக் கைவிடுவது  சாத்தியப்படவில்லை. இந்திய வெளியுறவு சிந்தனைக் களத்திலும் இடதுசாரி பாதிப்புடைய அணிசேரா இயக்கம் என்ற சிந்தனை ஒரு தலைமுறைக்கும் மேலாக வேரூன்றி இருந்ததால் அதைப் பரிசீலிப்பது என்பது நடைமுறை சாத்தியமாக இருக்கவில்லை.
ஆனால் ராஜீவ் காலத்திலிருந்து நரசிம்மராவ் ஆட்சி வரை இந்தியாவின் செயல்களில் அணிசேரா இயக்கம் என்பதை ஒரு கோஷமாக தக்க வைத்துக் கொண்டு மேற்கை நோக்கிய ஆதரவை அதனடியில் செயல்படுத்தும் முறை ஆரம்பித்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் அணிசேரா இயக்கத்தின் ‘இந்திய கோணத்தின்’ நடைமுறைப் பயன் முடிந்துவிட்டது என எல்லோருடனும் மறைமுகமாகச் சம்மதித்து விட்டு அதை ஒரு லட்சியமாக மட்டும் கருத்தில் கொண்டு இயங்குகையில், அதே சமயம் சமகாலப் பிரச்சனைகளுக்கு மற்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை இந்தியா செய்து கொள்ள ஆரம்பித்தது.

அமெரிக்க – ரஷ்ய நடனம்:

அமெரிக்காவுடனான சுதந்திர இந்தியாவின் கொள்கை ரஷ்யாவுடனான (அல்லது சோவியத் குடியரசு) கொள்கையுடன் பிணைந்தது, சமீபத்திய பத்தாண்டுகள் தவிர. மற்றொரு பார்வையில் ரஷ்யாவுடனான கொள்கை அமெரிக்காவுடனான உறவின் கூறுகளால் வடிவமைக்கப்பட்டது என்றும் சொல்லலாம். இந்தியா மேற்கின் சக்திகளிலிருந்தும், வடக்கின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்து தன்னைப் பேணிக்கொள்ளும் என கூறிவந்த போதும் யதார்த்தம் வேறுவிதமாகவே இருந்தது. சுதந்திரத்திற்கு பின் 1950, 60களில் மேற்கின் ஜனநாயக சமூகத்தைக் கொண்டிருந்த ஒற்றைப் பெரும் மக்கள் திரளான இந்தியா, அமெரிக்க மற்றும் மேலை நாடுகளுடன் குறைந்தபட்ச உறவையே பேணிவந்தது என்பது ஒரு வரலாற்று முரண். கம்யூனிஸ சீனா, சர்வாதிகாரிகள் ஆண்ட பாகிஸ்தான் என்ற எதிர் நாடுகளால் சூழப்பட்டிருந்தாலும் இந்தியா மற்றொரு கம்யூனிஸ நாடான சோவியத்திடமே அணுக்கம் கொண்டிருந்தது. எழுந்து வரும் சீனாவிற்கு எதிராக இந்தியாவை வைக்க அமெரிக்கா சில நேரங்களில் முன்னெடுப்பு எடுத்தாலும் நிலைபெற்று விட்ட பரஸ்பர தவிர்ப்பை மீறி எதுவும் ஆக்கப்பூர்வமாக உருவாகவில்லை. மேலும் சீனாவுடனான போரில் இந்தியாவிற்கு போர் தளவாடங்களை எதிர்பார்த்த அளவு கொடுத்து உதவாதது அப்போரில் இந்தியா தோற்றதற்கு காரணம் என்பதும் கசப்பை, ஐயத்தை கூட்டியது. 60களில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய திட்டங்களைக் குறித்த அச்சம் இந்தியாவின் கொள்கைகளை வடிவமைத்தன. அதே நேரம் இந்த ஆபத்துகளைச் சமன் செய்யும் சக்தியாக கம்யூனிஸ சோவியத்தை நோக்கி இந்தியா நகர்ந்தது. சோஷலிஸக் கொள்கைகள் இந்தியாவின் அரசியலில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்ததோடு சோவியத்துடனான நெருக்கம் முழுமையடைந்தது. எழுபதுகளில் இந்தியா-சோவியத்யூனியன் தங்களைப் பரஸ்பரம் புறசக்திகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான ஒத்துழைப்பை ஏற்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. அதைச் சரியென நிரூபிப்பது போல பங்களாதேஷ் யுத்ததின் போது அமெரிக்கா பாகிஸ்தானிற்கு ஆதரவாக தன் கடற்படையை நகர்த்தியதை அறிந்த போது இந்தியாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன் நீர்மூழ்கி கப்பலை அனுப்பி அமெரிக்காவின் பங்களிப்பை சமன் செய்தது. அப்போருக்குப் பின் இந்தியாவின் ராணுவத்தின் தேவைகளுக்கு இறக்குமதி செய்ய சோவியத் ஒற்றைப் பெரும் அளிப்பாளராக ஆனது.
தன்னை ஏகாதிபத்தியத்திய சக்தியான அமெரிக்காவிலிருந்து காத்துக் கொள்வதற்காக சோவியத் உறவை நியாயப்படுத்தும் போதும் இந்தியா சோவியத்தின் ஏகாதிபத்திய கொள்கைகளுக்கும், செயல்களுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுத்து விட்டது. ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்தை அடைய முயன்ற அமெரிக்காவை, ஜனநாயகத்தை தன் அரசியலமைப்பின் அடித்தளமாக கொண்ட இந்தியா, அதற்கு முற்றும் எதிரான கம்யூனிஸத்தை அடித்தளமாக கொண்ட சோவியத்தின் ஏகாதிபத்தியத்தை கொண்டு எதிர்கொண்டது ஒரு புதிர் தான். ரஷ்யாவின் நிழலில் மறைந்து விட்ட அமெரிக்காவுடனான இந்திய உறவு எண்பதுகளில் மறுபடியும் கையிலெடுக்கப்பட்டது. இந்தியாவைச் சீனாவின் எதிர் காயாக வைக்கலாம் என்ற தேவை எழுபதுகளில் சீனாவின் தாராளயமாக்கத்தினால் அமெரிக்காவிற்கு இல்லாமல் போனது. அமெரிக்காவின் நுகர்வுப் பொருள் தேவைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் உற்பத்தியாளராகவும், அமெரிக்க தொழில் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதியாள நாடாகவும் சீனா வெகு வேகமாக உருவாகி வந்தது. அதனால் எண்பதுகளில் இந்தியாவின் முக்கியத்துவம் என ஒன்று அமெரிக்கக் கணக்கில் இல்லை.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முக்கியமான துறைகளில் இந்தியர்கள் பல காலங்கள் அமெரிக்காவில் இருந்த போதும் அவர்களைக் கொண்டு இந்தியா எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆஃப்கனிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்கொள்ள பாகிஸ்தானின் உறவு அமெரிக்காவிற்கு மிக முக்கியமானதாக தேவைப்பட்டது. ரஷ்ய-இந்திய கூட்டிற்கு எதிராக பாகிஸ்தான்-சீனாவை அமெரிக்க சர்வதேச அரங்கில் ஆதரவளித்தது.
எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் காஷ்மீர் பிரச்சனையில் வெளிப்படையாகவே அமெரிக்காவின் பாகிஸ்தானிய ஆதரவு நிலை இந்தியாவின் அமெரிக்க எதிர்ப்பை, எரிச்சலைக் குறைக்க உதவவில்லை. பாகிஸ்தானின் ஆதரவிற்காக அது இந்தியாவில் கட்டவிழ்த்து விட்ட தீவிரவாதத்தை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. சர்வதேச அரங்கில் அதிகாரபூர்வமாக தீவிரவாதத்தை எதிர்த்துக் குரல் எழுப்பிக் கொண்டே பாகிஸ்தானின் செயல்களை அனுமதித்தது.
தொண்ணூறுகளில் நரசிம்மராவ் ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்ற இந்தியாவின் புதிய வெளியுறவு கொள்கைகள் மாறிய உலக அரங்கைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. பழைய லட்சியவாதத்தின் இடத்தில் பயன் கருதிய சுயநலம் வைக்கப்பட்டது. கோஷங்களால் ஆன அரசியல் புனிதங்களின் இடத்தில் பரஸ்பர நன்மையைக் கருத்தில் கொண்டு உருவான இருதரப்பு கொள்கைகள் வைக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் நரசிம்மராவ் அரசு பெரிதும் குறிப்பிடப்படும் இந்திய பொருளாதாரத்தின் தாராளமாக்கலைத் தொடங்கி வைத்தார். சோவியத்தின் வீழ்ச்சியும், இந்தியாவின் காலியான பொருளாதாரமும் அப்படிப்பட்ட ஒரு திடீர் முடிவை எடுக்க தூண்டின என்றாலும் அதற்கான நடவடிக்கைகளும், மனமாற்றமும் சில வருடங்கள் முன்னரே உருவாகி வந்தவை என்பது உண்மை.
அணு குண்டு சோதனைக்குப் பின் அமெரிக்காவின் அதிகபட்ச கோபத்திற்கு உட்பட்டாலும் திரை மறைவில் வெளியுறவு அதிகாரிகள் மூலமும், அமெரிக்கத் தூதருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமும் இந்தியா தன் நம்பகத்தன்மையை அதிகரித்துக் கொண்டிருந்தது. மறுக்க முடியாத அணு ஆயுத சக்தியாக பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, அமெரிக்காவிடம் உறவை முறித்துக் கொள்ளாத செயல்பாடுகளின் பலன் கார்கில் யுத்தத்தில் இந்தியாவிற்குச் சாதகமாக பாகிஸ்தானை அதன் துருப்புகளை பின்வாங்கச் சொல்லி அமெரிக்கா வற்புறுத்தியதில் வெளித் தெரிந்தது.
அதற்குப் பின் அமெரிக்காவின் இரண்டாம் புஷ் ஆட்சியில் அவருடைய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு முன்னே சென்று இந்தியா ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா எதிர்பார்த்திராத சாதகமான செயல். அதனால் சுமூகமாகப் பயணிக்க ஆரம்பித்த இரு தரப்பு உறவுகள் 2001இல் நடந்த உலக வர்த்தக மையத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பின் உறுதியானது. தீவிரவாதம் என்ற பொது எதிரிக்கு முன், ஏற்கனவே தீவிரவாதிகளால் நீண்ட காலமாக பாதிப்பிற்குள்ளான ஒரு தேசமாக நின்ற இந்தியாவின் வாதங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொண்டது. அமெரிக்காவும் இந்தியாவும் முதல்முறையாக அடிப்படைவாதத்தால் தாக்குதலுக்குள்ளான சக ஜனநாயக நாடு என்று ஒருவர் மற்றவரைப் பார்க்க ஆரம்பித்தன. தங்களுக்குள்ளே உள்ள மிகப்பெரிய பொதுக்கூறான ஜனநாயகத்தைக் கண்டு கொள்ள இவற்றுக்கு ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் ஆனது என்பது மற்றொரு விந்தை.
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக் கொண்ட வேளையில் இந்தியா தன்னுடைய நெடுநாள் நட்பு நாடான ரஷ்யாவுடன் தொடர்பை விட்டுவிடவில்லை. தன்னுடைய ராணுவத்திற்கான ஆயுதங்களை பெரும்பாலும் ரஷ்யாவிடம் வாங்கிக் கொண்டு அதே நேரம் அமெரிக்கா மற்றும் வேறு மேலை நாடுகளிடம் ஆயுத, ராணுவ தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டது. அமெரிக்காவுடனான புதிய உறவு அவப்புரிதல்களை ரஷ்யாவிடம் ஏற்படுத்தி விடக்க்கூடாது என்பதில் இந்தியா மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டது. 1962இல் அமெரிக்காவை பெரிதும் நம்பி கைவிடப்பட்டு சீனாவிடம் தோல்வியடைந்தது. சோவியத் யூனியனிடம் தன்னுடைய பாதுகாப்பையும், ராணுவ பரிமாற்றங்களையும் வைத்துக் கொண்டு அது உடைந்த போது உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டு போனது. இம்முறை நரசிம்மராவ் ஆட்சியில் ஆரம்பித்து, வாஜ்பாயி ஆட்சியின் முடிவு வரை தன் உறவை பலநாடுகளுடன் முரண்பாடு இல்லாத சமநிலையுடன் பிரித்து உருவாக்கி ஒரு புதிய பாதையை இந்தியா அமைத்துக் கொண்டது.

ifp

சீனாவைப் பின்பற்றி

அறுபதுகளில் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்த போது சர்வதேச அரங்கில் சீனாவின் நிலை என்னவோ அதைப் போன்ற ஒரு நிலையில் இந்தியாவும் தொண்ணூறுகளில்  இருந்தது. இந்தியா புதிய நூற்றாண்டில் நுழையும் தருணங்களில் சீனா பெரும் சக்தியாக உருவெடுத்து விட்டிருந்தது. சீனாவுடனான போரில் தோற்ற அவமானத்தில் இருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டது இந்த காலங்களில்தான். சீனாவின் புதிய உலக அரசியல் ஆசைகளின் மேல் சந்தேகம் கொண்டும் அதே நேரம் அதன் வளர்ச்சிப் பாதையில் தானும் பயணிக்க வேண்டும் என்ற இசைவில்லாத இரு கண்ணோட்டங்களுடன் இந்தியாவின் சீன உறவு அமைந்தது.
போக்ரான் அணுகுண்டு சோதனை முடிந்து சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த போது, வாஜ்பாயி க்ளின்டனுக்கு அனுப்பிய கடிதம் ஊடகங்களின் வழியே வெளியிடப்பட்டது. அரசு முறை ரகசியமாக இருந்திருக்க வேண்டிய அந்த கடிதம் அமெரிக்கா அரசாலேயே பொதுவெளியில் பகிரப்பட்டது என ஐயம் ஏற்பட்டது. இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கான முதன்மையான காரணம் வலிமைபெற்று வரும் அணு ஆயுத தேசமான சீனாவே என்று வாஜ்பாயி அமெரிக்க அதிபருக்கு தெரிவித்திருந்தார். முதல் அணுகுண்டு சோதனையின் போது பெரிதாகக் கண்டு கொள்ளாத சீனா, இரண்டாவது சோதனைக்கு பின், குறிப்பாக இந்த கடிதம் வெளியானதற்கு பின் மிக வன்மையாக தன் எதிர்ப்பை இந்தியாவிடம் வெளியிட்டது. அதோடு 90களில் சிறிதாக இளக ஆரம்பித்திருந்த இந்திய-சீன உறவு மறுபடியும் குளிர்ந்து உறைந்தது.
இந்திய சீனா உறவு பல தளங்களில் பலவிதமான பரிமாணங்களை உள்ளடக்கியது. எழுபதுகளில் ஆரம்பித்த சீனாவின் வளர்ச்சியை இந்தியா ஆச்சரியத்துடனும், பதைப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது. 90களில் இந்தியா தன் பொருளாதாரத்தையும், உலகின் வலிமையான தேசங்களுக்கிடையே ஒரு சக்தியாக உருவாக வேண்டும் என்று முடிவெடுத்த போது அது சீனாவின் வளர்ச்சி பாதையை ஒட்டிய கொள்கைகளை எடுத்தது. வினோதமாக, போக்ரான் சோதனைக்குப் பின் இந்தியாவின் உலக நாடுகளுடன் சமரசம் செய்து கொண்டே தன்னை முன்னெடுத்து செல்ல உருவாக்கிய பல வழிகள் 60களில் சீனா அணுகுண்டு சோதனை செய்த பின் உலக அரங்கில் நடந்து கொண்டவைக்கு ஒத்தவையாகும். தன் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்து வைத்ததை சீனாவின் புத்தகத்திலிருந்து ஒரு பக்கமாகவே காணலாம். ஒரு கட்சி ஆட்சி, அதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் சமரசங்கள், ஒருமித்த முடிவிற்கான கால தாமதம் எனப் பல தடைகள் இல்லாத காரணத்தால் சீனா பெற்ற வளர்ச்சி விகிதத்தை இந்தியாவால் நெருங்க இயலவில்லை.
சீனாவின் அசுர வளர்ச்சியை இந்தியாவால் புறக்கணித்துச் செல்ல இயலாது. சீனப் பொருளாதாரத்தின், வணிகத்தின் தாக்கம் இந்தியாவை சுற்றி இருக்கும் தேசங்களை வசீகரிப்பதைக் காணாமல் இருக்க முடியாது. மியன்மார், பங்களாதேஷ், வியெட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளோடு உருவாக்கிய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தங்கள் பெரிதாக இந்தியாவிற்கு பயனளிக்கவில்லை. சீனாவை எப்படிச் சமாளிப்பது என்பதை விட இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளுடன் தகவல் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்துவதே இந்தியாவின் முக்கியமான தேவையாக இருந்தது.
சீனாவைப் பின்பற்றிச் செல்லும் பொருளாதாரப் பாதை இருக்குமென்றால், சீனாவின் பலத்தைக் குறித்த அச்சமும், எதிர்ப்பும் கூடிய மற்றொரு பார்வை இந்தியாவிற்கு உண்டு. பாகிஸ்தானுக்கு ரகசியமாக உதவி செய்து அணு ஆயுத சக்தியாக உருவாக்க சீனா முயன்று வெற்றி கண்டது. அந்த வியூகத்தின் மூலம் என்றைக்குமாக தன்னை உலக அரங்கில் எழ இயலாத வண்ணம் இந்திய துணைக்கண்டத்தில் சிக்கிக் கொள்ள வைத்து விட்டது என இந்தியா நினைக்கிறது. கார்கில் யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக எவ்வித ஆதரவும் அளிக்காததை, சீனா இதைச் சிறு நாடுகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனையாக கண்டு தன்னை இதற்கு மேலான ஒரு தேசமாக பார்ப்பதால்தான் என காரணம் கூறும் தரப்பு இந்தியாவில் வலுவாக இருந்தது.
பரஸ்பரம் சந்தேகத்தாலும், அச்சத்தாலும் இருபதாம் நூற்றாண்டில் சீனாவும் இந்தியாவும் ஒருவரை மற்றொருவர் நடத்தி வந்தாலும், இந்த நூற்றாண்டில் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியின் பொருட்டு நட்புறவைப் புதுப்பிக்க ஆரம்பித்துள்ளன. புதிய நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனையை தீர்க்க பல அடிகள் முன்னெடுத்தன. சீரான இடைவெளிகளில் இரு நாடுகளின் தலைவர்கள், உயர்நிலைக் குழுக்களும் சந்தித்து எல்லைப் பகுதியை நிரந்தரமாக்குவதற்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர். ஆனால் இறுதியான எல்லை வரையறுத்தல் என்ற நிலைக்கு இரு பக்கங்களிலும் எதிர்ப்பு இருந்தது. அடுத்ததாக இந்தியா 1975இல் சிக்கிமை தன்னிடம் இணைத்துக் கொண்டதை சீனா அதிகாரபூர்வமாக ஒத்துக் கொண்டது. இந்தியா திபெத் குறித்த விஷயங்களில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை உலக அரங்கில் எடுப்பதை வெகுவாகத் தவிர்க்க ஆரம்பித்தது. இவை யாவும் நிரந்தர தீர்வுகள் என இரு தேசங்களும் ஒத்துக் கொள்ளவில்லை. இன்றைய நிலையில் அவரவர் முன்னேற்றத்திற்கான தடைகளில் இருந்து விலகி இருப்பதற்கான தற்காலிக ஏற்பாடாகத்தான் இதெல்லாம் தோன்றுகிறது.

பாகிஸ்தான்

இந்திய பாகிஸ்தான் உறவு என்பது இரு நாடுகளின் சுதந்திர வரலாற்றை வெகுவாக வடிவமைத்த ஒன்று. இந்நூல் விவரிக்கும் காலகட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் பெரும் பங்கு வகித்தது. ஆனால் முன்பு போலில்லாமல் இந்தியாவின் பிரதான வெளியுறவு பிரச்சனை என்பதிலிருந்து விலகிச் சமாளிக்கவல்ல ஒரு எதிரியாக பாகிஸ்தான் மாறியது எனலாம். ஆனால் அதை அடைவதற்குப் பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன. பாகிஸ்தானிடம் உறவைப் புதுப்பிப்பதற்கான புதிய முயற்சியை ராஜீவ் காந்தி பெனாஸிர் பூட்டோவோடு இணைந்து ஆரம்பித்தார். ஆனால் பெனாஸிர் பூட்டோ அதை சந்தர்ப்பமாக உபயோகித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்தார். ஆஃப்கனிஸ்தானில் அத்தரப்பட்ட போரினால் சோவியத் ரஷ்யாவை தோற்கடித்த தன்னம்பிக்கையில் அதை இந்தியாவிடமும் பாகிஸ்தான் உபயோகித்தது. அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லலாம் அல்லது இந்தியாவை ஒரு ஒப்பந்தத்திற்கு பணிய வைக்கலாம் என்பதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தது. தொண்ணூறுகளில் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள இந்திய தடுமாறியது. அதற்கு எதிர்வினையாக காஷ்மீரை கட்டுக்குள் வைக்க எடுத்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களாக ஐநா சபையில் வெளியிட்டது. வாஜ்பாயின் முதல் ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. வாஜ்பாயி லாகூரில் நவாப் ஷெரீபுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ ஜெனெரல் முஷாரப் கார்கில் படையெடுப்பிற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார்.
கார்கில் போர் பாகிஸ்தானின் பல ராணுவ, அரசியல் கணக்குகளை திருப்பிப் போட்ட நிகழ்வு எனலாம். ஃபெப்ரவரி 1999 லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா மே 1999 பாகிஸ்தான் கார்கில் யுத்தத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையில் அந்த யுத்தத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் மிக எளிதாக இந்தியாவை இராணுவ யுத்தியில் பின்னடைவடைய  வைத்தது. அணு ஆயுத சக்தியான தான் எதிர்பாரா தாக்குதல் மூலம் கார்கிலின் ராணுவ அனுகூலமான மலையுச்சிகளை கையகப்படுத்திக் கொண்டு அதையே புதிய எல்லைக் கோடாக என்றைக்குமாக நிறுவி விடலாம் என பாகிஸ்தான் கணக்கிட்டது. இந்தியா போரினால் ஏற்படக் கூடிய விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக ஐநாவிற்குச் சென்றால் காஷ்மீர் பிரச்சனையை இறுதியாக சர்வதேச நாடுகள் தலையிடும் ஒன்றாக மாற்றி விடலாம் என்பதும் இன்னொரு யூகம்.
ஆனால் அதன் பிறகான நிகழ்வுகளெல்லாம் தர்க்கத்திற்கு மாறாக நடைபெற்றன. வாஜ்பாயி இந்திய ராணுவத்தை எல்லையை மீட்பதற்காக அனுப்பினார். காஷ்மீர் போராளிகள்தான் அவ்விடங்களை கையகப்படுத்தியுள்ளனர் என்ற பாகிஸ்தானின் கூற்று பொய்யென அங்கு பிடிபட்ட சான்றுகள் நிரூபித்தன. எல்லாவற்றையும் விட மேலாக தனக்கு சாதகமான நிலை எடுக்கும் என நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்கா அதற்கு மாறாக பாகிஸ்தான் தன் துருப்புகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டது. சீனாவின் பாராமையும், அமெரிக்காவின் கைவிடலும் பாகிஸ்தான் எவ்வித கோரிக்கையும் வைக்காமல் வெளிப்படையாக தன் துருப்புகளை வாபஸ் பெறுவதாக அறிவிக்க வைத்தது. அதன் பிறகு வாஜ்பாயி இன்னொரு முறை அமைதிக்கான முயற்சிகளை இரண்டாவது ஆட்சியின் போது முஷாரஃபின் பாகிஸ்தாலுடன் மேற்கொண்டார். அது ஆக்ராவில் எவ்வித அதிகாரபூர்வமான நிலைபாடும் எடுக்கப்படாமல் முடிவு பெற்றது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள ஒப்பந்தத்தில் காஷ்மீர் தீர்வு முதன்மையாக இருக்க வேண்டும் என்று அழுத்தியது. இந்தியா வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்களோடு ஒன்றாகவே காஷ்மீர் பிரச்சனையும் இருக்க முடியும் என்று கூறியது. மேலும் காஷ்மீர் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தையும் சேர்த்தே பேசப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலை பாகிஸ்தானால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. லாகூரைப் போலவே ஆக்ரா பேச்சுவார்த்தை முடிந்து சில மாதங்களில் இந்திய பார்லிமெண்டை பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தாக்கினர். இந்தியாவை செயலிழக்கச் செய்திருக்கக் கூடிய அந்த தாக்குதல் இறுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக இந்தியா தன்னுடைய மொத்த ராணுவத்தையும் பாகிஸ்தானை நோக்கி அனுப்பியது. முன்பு போலில்லாமல் சீன எல்லையை பாதுகாக்க வேண்டும் என்ற பதைப்பு ஏதுமின்றி இந்தியா பாகிஸ்தானை நோக்கி தன் பலத்தை திருப்பியது.
பாகிஸ்தானின் அணுஆயுத பயமுறுத்தலின் யதார்த்தம் எதுவரை என சோதித்து பார்க்க இந்தியா அந்த நாட்களில் முடிவெடுத்தது எனலாம். சர்வதேச நாடுகள் தங்களின் தூதுவர்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் மிக உயர்நிலை ராணுவ, அரசியல் தலைவர்களை அனுப்பி சமரசம் பேசின. இந்தியாவின் நிலைபாட்டை புஷ் மிக வெளிப்படையாக ஆதரித்தார். தன் பார்லிமெண்டை ஒரு நாடு தாக்கினால் தானும் இந்தியா போலத்தான் முடிவெடுப்பேன் என பேட்டியளித்தார். இறுதியில் முஷாரஃப் தீவிரவாதத்தை குறித்த புதிய கொள்கையை கோரிக்கைகள் ஏதுமின்றி அறிவித்தார். தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை நீக்குவதற்கு ஒத்துக் கொண்டார். இந்தியா தன் பக்கம் இருந்த உலக நாடுகளின் பெரும் ஆதரவை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள தவறியது எனலாம். தீவிரவாதக் குழுக்களை அகற்றியதற்கான சான்றுகளை கொடுக்குமாறும், தொடர்ந்து அப்பிரச்னையை உலக அரங்கில் வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டும் பாகிஸ்தானிடம் நிர்பந்த அரசியல் தந்திரத்தை காட்டாமல் இருபது தீவிரவாதிகளின் பெயரைக் கொடுத்து அவர்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் அவர்கள் தன்னிடம் இல்லை என்று கூறி இந்தியாவின் கோரிக்கைகளின் தீவிரத்தை நீர்க்கச் செய்தது.
இந்தியாவினால் அரசியல் தந்திரம் மூலம் பாகிஸ்தானை ஒரு எல்லைக்கு உள்ளே நிறுத்தி வைக்க முடிந்தது. மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா கூறினாலும் அது யதார்த்தம் அல்ல. இந்தியாவின் சமீப போர்களில் அமெரிக்காவின் கை முக்கியமானது. பாகிஸ்தானோடு பெரும் போர் நிகழாமல் தடுத்து நிறுத்த அமெரிக்காவின் ஆதரவு வேண்டும் என்பது நிதர்சனம். அமெரிக்காவின் சாதக நிலைக்கு முக்கியமான இரண்டு காரணிகளை கூறலாம்.
ஒன்று, 90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.

மறுஉருவாக்கம் அடைந்த உலகில்

நரசிம்ம ராவ் ஆட்சி காலத்திலிருந்து இந்தியா தன்னுடைய வெளியுறவு கொள்கையை எதிர்காலத்தை முன்னோக்கியதாக மாற்றிக் கொண்டது. அதாவது தற்காலிக உறவுகளோடு குறுக்கிக் கொள்ளாமல் மற்ற நாடுகளுடன் நீண்ட கால உறவுகளை வளர்த்தெடுப்பதற்கான அடித்தளங்களை கொண்ட கொள்கையை செயல்படுத்த ஆரம்பித்தது. அதன் செயல்திட்டத்தை ஆறு பகுதிகளாக பிரித்து நடைமுறைப்படுத்தியது.
முதலாவது, மற்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பைப் புதிப்பித்துக் கொள்வது. இரண்டாவதாக, நிறுவனம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த இணைப்புகளை அண்டை நாடுகளுடன் உருவாக்கிக் கொள்வது. மூன்றாவது, சாலை மற்றும் ரெயில் பாதைகள் மூலம் இந்தியாவின் தொலை தூர மாநிலங்களையும், மற்ற அண்டை நாடுகளையும் அணுகும் வழிவகைகளை பெருக்கிக் கொள்வது. நான்காவது, எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வளம் மிக்க நாடுகளிலிருந்து பெரும் பைப்புகள் மூலம் இந்திய சந்தையின் தேவையுடன் இணைப்பது. ஐந்தாவது, மிகமுக்கியமான நாடுகளுடன் ஆயுத பேரம் செய்து கொள்ள ஆரம்பிப்பது. இறுதியாக, எல்லா முடிவுகளிலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அரசியல்ரீதியாக போட்டியிடுவது.
தொண்ணூறுகளில் நரசிம்மராவின் ‘கிழக்கை நோக்கி”ய கொள்கை புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் பலனை ஈட்டித் தந்தது. ஜப்பான், கொரியா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளுடனான அந்த கொள்கை பத்தாண்டுகளில் இந்தியாவின் வர்த்தகத்தை உயர்த்த வெகுவாக உதவியது. போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பின் சில காலம் ஆஸ்த்ரேலியாவும், ஜப்பானும் தங்களுடைய தொடர்பை வெகுவாக குறைத்துக் கொண்டன. ஆனால், முன்பே குறிப்பிட்டிருந்தது போல, அமெரிக்கா தன்னுடைய விலக்கத்தை விட்டு இந்தியாவுடன் இருதரப்பு உறவுகளை ஆரம்பித்தவுடன் இந்நாடுகளும் பழைய நிலைக்கு வந்தன. கிழக்கை நோக்கிய கொள்கையின் மற்றொரு முக்கிய செயலாக இந்தியா வடகிழக்கு மாநிலங்களை தென் கிழக்கு ஆசியாவின் நாடுகளுடன் ரயில் பாதைகள் கொண்டு இணைத்ததாகும்.
சோவியத் குடியரசின் உடைவோடு மத்திய ஆசியாவில் எண்ணை மற்றும் நிலவாயு வளம் பொருந்திய பல புதிய நாடுகள் உருவாயின. இயல்பாகவே சோதனைக்கு உட்படுத்தப்படாத இந்தியாவின் வெளியுறவு துறையின் செயலாற்றல் போட்டி நாடுகளுடன் மத்திய ஆசிய நாடுகளின் எண்ணை வளத்திற்காக போட்டியிட்டது. துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஸகஸ்தான் போன்ற நாடுகளின் முற்போக்கு அரசுகளுடன் இந்தியாவிற்கு உறவின் சாதக அம்சங்கள் இருந்தாலும் இறுதியில் வென்றது அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா மட்டுமே. தன் எரிவாயுத் தேவையை பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்ட எண்ணை குழாய்களை செயல்படுத்த பாகிஸ்தான் தன் நாட்டிலும், ஆஃப்கனிஸ்தானிலும் முட்டுக்கட்டை போட்டது. தாலிபானை ஆதரிப்பது மூலம் பாகிஸ்தான் அந்நாட்டின் நிழல் அரசாக அந்த திட்டப்பணிகள் நடைபெறாமல் வெற்றிகரமாக தடுத்தது. அதோடு சேர்த்து ஆஃப்கனிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கை, இருப்பை முழுவதுமாக அகற்றுவதில் வெற்றி காணும் நேரத்தில், அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. தாலிபானின் சரிவை பயன்படுத்திக் கொண்டு இந்தியா புதிய ஆஃப்கனிய அரசுடன் உறவைப் புதுப்பித்தது.
முதல் வளைகுடா போரின் முடிவோடு இந்தியா வளைகுடா நாடுகளை குறித்த பார்வை கோணத்தை திருத்தியமைக்க ஆரம்பித்தது எனலாம். கச்சா எண்ணையை வாங்கும் நாடு என்ற ஒற்றை பரிமாணத்தில் அங்கிருக்கும் நாடுகளை பொத்தாம் பொதுவாக அணுக முடியாது என்பது தெளிவானது. வாங்குனர் என்பதிலிருந்து மேலெழுந்து ஆழமான உறவுகளை ஒவ்வொரு நாடுகளுடனும் உருவாக்கிக் கொள்ளும் தேவையை இந்தியா உணர்ந்தது. இதன் முக்கிய அம்சமாக உள்நாட்டுத் தேர்தல் அரசியல் நிர்ப்பந்தங்களுக்காகக் கொண்டிருந்த இஸ்ரேலுடனான விலக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை அந்நாடுகளுடனான வர்த்தக உறவைப் பாதிக்கும் காரணியாக இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியது. ஆரம்பத்தில் இந்தியாவின் மனமாற்றம் இஸ்லாமிய நாடுகளில் சலசலப்பை உருவாக்கினாலும் வெகு சீக்கிரமே அவை களையப்பட்டன. உலகின் இரண்டாவது பெரும் முஸ்லீம் மக்கட்தொகையை கொண்ட நாடு என்பதை வளைகுடா நாடுகள் கணக்கில் கொண்டன எனலாம். இக்காலக்கட்டத்தில் பொது எதிரியான தாலிபானை முன்வைத்து இந்தியாவும் இரானும் மிக நெருக்கமாகின. அதே நேரம் ஈரானின் முதல் எதிரியான இஸ்ரேலுடன் இந்தியா தன் உறவின் வேர்களை ஆயுதம், தொழில்நுட்பம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் வலுப்படுத்திக் கொண்டது. இவர்களிடமிருந்து வெகுவாக விலகி நிற்கும் சவுதி அரேபியாவில் மிகப்பெரும் எண்ணிக்கையில் இந்திய நாட்டினர் சென்று வேலை செய்தனர். ஏறத்தாழ பத்தாண்டுகளில் உள்நாட்டு அரசியல் மற்றும் வரலாற்று அழுத்தத்தாலும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தியாவின் வளைகுடாக் கொள்கை அவற்றை உதறி விட்டு முற்றிலும் புதிய பாதையை அமைத்துக் கொண்டு 21ஆம் நூற்றாண்டில் வெற்றிகரமாக நுழைந்தது.

துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியம்

சுதந்திரம் அடைவது வரை பிரிட்டனின் ஒற்றை குடைக்குக் கீழ் இந்திய துணைக்கண்டம் இருந்தது. சென்ற நூற்றாண்டின் பாதியில் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்ததிலிருந்து பின் இந்திய துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிலோன், பர்மா என இன்னும் வேறு சில நாடுகளாகவும் இன்று தனி அடையாளங்களுடன் மாறிவிட்டது. இந்திய துணைக்கண்டம் என்றும் தெற்காசியா என்றும் கூறப்படும் இந்த பகுதியை சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இந்தியா தன் செல்வாக்கிற்கு மட்டுமே உட்பட்ட ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது எனலாம். இயல்பாகவே அப்படி ஒரு நோக்கமுடைய நாட்டை சுற்றியுள்ள சிறு நாடுகள் அதை நெடுநாள் பொறுத்துக் கொள்ளாது. இந்திய துணைக்கண்டத்திலும் அதுவே நடந்தது. இந்திய பெருங்கடலின் சுற்றம் முழுவதும் தன் கட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா தன்னைச் சுற்றிய சிறு நாடுகளின் வர்த்தக, அரசியல் செயல்பாடுகளில் மிகக் கறாராகத் தன் கோரிக்கைகளை வைத்து அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியது. துணைக்கண்டத்திற்கு வெளியே எதிர்த்த ஏகாதிபத்தியத்தின் கூறுகளை இந்தியா தன்னை விட சிறிய அண்டை நாடுகளிடம் காட்ட தயங்கவில்லை. இந்தியாவின் ஒத்திசைவில்லாத இரு வெளியுறவு கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான தருணம் இந்த காலகட்டங்களில் வந்தது.
உலகமயமாக்கலின் கரங்கள் மெதுவாக சீனா வழியே சிறிலங்கா, மாலத்தீவு, பர்மா, நேபால் போன்ற நாடுகளில் உள்ளே நுழைந்தது. அடக்கி வைக்கப்பட்டிருந்த இந்த நாடுகள் இயல்பாகவே இந்தியாவின்பால் எரிச்சலையும், பதட்டத்தையும் அடைந்திருந்தன. இந்திய எதிர்ப்பு என்பது நேபாலிலும், சீறிலங்காவிலும் வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்று சில காலங்கள் பங்களாதேஷ் இந்தியாவிடம் சுமூகமான உறவு கொண்டிருந்தது. அதன் பிறகு அதுவும் இந்தியாவிடம் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது. பொருளாதார ரீதியாக தங்களுக்கு நன்மை தரும் விஷயங்களில் கூட இந்திய எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்பதற்காக முடிவுகளை எடுத்தன. 80களில் இந்தியாவின் திருப்தியின்மையை கண்டு கொள்ளாமல் சீனாவிடம் சென்றாலும் ஒரு பாதகம் இல்லை என்று அவை கண்டுகொள்ள ஆரம்பித்தன. அதற்கேற்றார் போல சீனாவும் இந்நாடுகளில் மிக முக்கியமான பல செயல் திட்டங்களையும், கட்டுமானங்களையும் கூட்டு முயற்சியாகச் செய்ய ஆரம்பித்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் ஐஸி814 கடத்தல் சம்பவத்தின் மூலம் நேபாலில் பாகிஸ்தானின் செல்வாக்கு தெளிவானது. எல்லைக் காவல் இல்லாத எல்லையைக் கொண்ட இந்திய-நேபால் எல்லை பெரும் அபாயமாக மாறியது.
நரசிம்மராவைத் தொடர்ந்து வந்த குஜரால் ஆட்சியில் புகழ்பெற்ற குஜ்ரால் கோட்பாடு வடிவமைக்கப்பட்டது. இந்திய அண்டைநாடுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கோட்பாட்டில் இந்தியா இதுவரை பின்பற்றி வந்த ஏகாதிபத்திய போக்குகள் நீக்கப்பட்டன. இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் அதைத் தொடர்ந்த செயல்பாடுகளிலும் இந்தியா மற்றவர்களிடமிருந்து குறைவாக வேண்டி, தன்னிடமிருந்து அதிகமான பங்களிப்பை அளிப்பதாக கூறியது. இந்தியச் சந்தையின் தாராளமயமாக்கலின் பயனாக துணைக்கண்டத்தின் நாடுகளுக்குள் மிக எளிதான வர்த்தகம் உருவானது.
தன் ஆதிக்கமும் முக்கியத்துவமும் தேய்ந்துவிட கூடாது என்ற எண்ணத்தில் இந்தியா நடைமுறைபடுத்தினாலும் அது முற்றிலுமாக வெற்றி பெறவில்லை என்று சொல்லலாம். சீனாவின் நுழைதல் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் சீராக ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் செல்வாக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் பகுதியை பிரித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் 2001 தாக்குதலோடு முடிவுக்கு வந்தது. ஆஃப்கன் போரும், ஈராக் போரும் இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் இருப்பை வெகுவாக அதிகரித்து விட்டன. மேலும், 2004இல் இந்த நூல் எழுதப்படும் வரை, இந்தியாவுடன் சிறிய அண்டைநாடுகள் முழுவதுமாக இசைந்துவிடவில்லை. முக்கியமாக பாதுகாப்பு குறித்த இந்தியாவின் அச்சங்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

முடிவாக

வாஜ்பாயின் ஆட்சியின் இறுதி காலங்களில் இந்நூல் வெளிவந்தது. பெரும் மாற்றங்களுக்கு பின் புதிய பாதையில் பதட்டத்துடன் செல்லும் ஒரு வெளியுறவு கொள்கையை காட்டுவதோடு விவரிப்புகள் முடிகின்றன. சர்வதேசச் சந்தையில் தன்னைப் பொருத்திக் கொண்டதன் மூலம் இந்தியா இனிமேலும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. உலக நிகழ்வுகளில் தனக்கு சாதகமான பாதிப்புகளை உருவாக்கிக் கொள்ளும் நாடாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதற்கு தொலைநோக்குள்ள கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றும் சென்ற நூற்றாண்டுகளின் முடங்கிய கொள்கைகளுக்குள் மறுபடியும் செல்ல முடியாது என்ற நிதர்சனத்தை தீர்க்கமாக உணரவேண்டும். இந்தியாவின் மிக முக்கியமான கூறுகளாகிய ஜனநாயகம், மதச்சார்பின்மை, முற்போக்கை நோக்கிய சமூக நகர்வு போன்றவற்றை உலக அரங்கில் கறைபடியாமல் முன்வைப்பது மிக முக்கியம் என்று வற்புறுத்தி நூல் முடிகிறது.

One Reply to “எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.