உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி

nobel

உலக இலக்கியத்தின், 2015 ஆம் வருடத்துக்கான நோபெல் பரிசை வென்றிருப்பவர் பேலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் என்ற பெண் எழுத்தாளர். இந்தப் பரிசளிப்பு பற்றி, வோர்ட்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் எனப்படும் லாப நோக்கற்ற இலக்கியப் பத்திரிகையின் பதிப்பாசிரிய மேலாளர் சூஸன் ஹாரிஸ் என்பார் எழுதிய ஒரு பாராட்டுக் கட்டுரையிலிருந்து சில பத்திகளை இங்கு தருகிறோம்.

இவருடைய எழுத்து, ”நம் காலத்தின் கடும் துன்பங்களுக்கும், சோகங்களுக்கும் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாக விளங்கும் பல குரல் ஒலிப்பு” என்று அந்தப் பரிசளிப்பு அறிக்கை சொல்கிறது. ஸ்வீடிஷ் அகதமியின் நிரந்தர செயலாளரான சாரா டானியஸ் சொன்னது இது,”கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக இவர் சோவியத் மற்றும் பிற்பட்ட காலத்துத் தனிநபர்களின் வரைபடத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இது உண்மையிலேயே சம்பவங்களின் வரலாறு அல்ல. உணர்ச்சிகளின் வரலாறு அது- இவர் அளிப்பது உண்மையிலேயே ஒரு உணர்ச்சி ஊறியெழும் உலகம், எனவே இவர் தன் பல புத்தகங்களில் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகள், உதாரணமாக செர்னோபில் பேரழிவு, ஆஃப்கனிஸ்தானில் சோவியத் யூனியனின் போர், ஆகியன எல்லாம் சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பின் வந்த காலத்துத் தனி நபர்களைத்தான் ஆழ நோக்குகின்றன. இவர் சிறு குழந்தைகளோடும், பெண்களோடும், ஆண்களோடும் ஆயிரக்கணக்கில் பேட்டிகளை எடுத்திருக்கிறார். நமக்கு அதிகம் தெரிய வராத மனிதத் துயரங்களின் வரலாற்றை அளிக்கிறார். .. அதே நேரம் இவர் நமக்கு உணர்ச்சிகளின் வரலாற்றையும், ஆன்மாவின் வரலாற்றையும் கொடுக்கிறார்.”

ஒரு பேட்டியில் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் சொல்கிறார்:”நிஜ வாழ்வுக்கு மிக அருகில் கொண்டு நிறுத்தும் ஒரு அணுகுமுறையை நான் தேடிக் கொண்டிருந்தேன். நிஜம் என்னை எப்போதுமே ஒரு காந்தம் போல ஈர்த்துக் கொண்டிருந்தது, என்னைச் சித்திரவதை செய்தது, என்னை மனோவசியப்படுத்தியது. அதை நான் காகிதத்தில் கைப்பற்றி விட முயன்றேன். எனவே நிஜ மனிதக் குரல்களில், ஒப்புதல்களில், சாட்சிகளின் சான்றுகளில், ஆவணங்களில் கிட்டிய ஒரு மனிதப் பாணியை நான் உடனே கைப்பற்றிக் கொண்டேன். இப்படித்தான் நான் உலகைக் கேட்கிறேன், பார்க்கிறேன் – மனிதக் குரல்களின் கூட்டிசையாகவும், அன்றாட வாழ்வின் விவரங்களின் கூட்டுப் பிம்பங்களாகவும். இப்படித்தான் என் காதுகளும், கண்களும் இயங்குகின்றன. இந்த முறையில் என் புத்தியின், உணர்வுகளின் மொத்த சாத்தியங்களும் தம் முழுமையை அடைகின்றன. இந்த வழியில்தான் நான் ஒரே நேரம் ஒரு பத்திரிகையாளராகக, சமூகவியலாளராக, உளவியலாளராக மேலும் ஒரு போதகராக இருக்க முடிகிறது.”

ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சிற்கு சொல்வனம் பதிப்புக் குழுவினர் தம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.

————————————————

பின்குறிப்பு:

ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் ஒரு படைப்பை அடுத்த இதழில் வெளியிடத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதற்கான முன்னனுமதியை வாங்கும் முயற்சி நடக்கிறது. மாரியன் ஷ்வார்ட்ஸ் என்னும் மொழிபெயர்ப்பாளர் தன் அனுமதியைக் கொடுத்துள்ளார். 139 ஆம் இதழில் வெளியிட முயல்வோம்.