ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம்

downfall

டந்த ஆண்டு டிசம்பர் மாதம், எனது அலுவலக வேலையாக பெர்லின் சென்றிருந்தேன். மைனஸ் டிகிரி குளிரை எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறோம் என்ற கவலையை வெளியே காட்டிக்கொள்ளாமல், எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெர்மனிய மொழிபெயர்ப்பாளர் ஃபிஷ்ஷரிடம், ‘இன்றைய ஜெர்மனியர்கள் ஹிட்லரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டேன்”  என்று இக்கட்டுரையை ஆரம்பித்தால் ஒரு கெத்தாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஜாதகத்தில் எழுதியிருக்கவேண்டும்.  எனது பணித் தொடர்பாக, பல்லாவரம் வரையிலும் கூடச் செல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு வேலையில் நான் இருப்பதால், தனது கம்பெனி வேலையாக அடிக்கடி ஜெர்மனி சென்று வந்துள்ள என் தம்பியிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில்  ஆச்சர்யத்தை அளித்தது.
அவனும் பல ஜெர்மானியர்களிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறான். சொல்லி வைத்தாற் போல் அனைவரும் பேச்சைத் திசை திருப்பி, நழுவிவிட்டார்களாம். இவன்  ஒரு வயதானவரிடம் மீண்டும், மீண்டும் கேட்க… அதற்கு அவர்,  ”நாங்கள் அதையெல்லாம் மறக்கவே விரும்புகிறோம். வேறு ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவோமே. இனிமேல் யாரிடமும் இது பற்றிக் கேட்காதீர்கள். ஏனெனில் நாங்கள் யாரும் அது குறித்து பேசுவதை விரும்புவதில்லை,” என்று பதிலளித்திருக்கிறார். ஆம்…. ஒரு நாட்டு மக்களே, தனது சொந்த தேசத்தின் ஒரு காலகட்ட வரலாற்றை மறக்க விரும்புகிறார்கள். காரணம்… ஹிட்லர்.
ஆனால் வரலாற்றால் அதிகம் வெறுக்கப்படும் ஒரு நபரைப் பற்றித்தான் எத்தனை புத்தகங்கள்? எவ்வளவு திரைப்படங்கள்? ஹிட்லர் இறந்து 70 வருடங்களுக்குப் பிறகும், ஹிட்லரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம்? ஏனெனில் ஹிட்லரின் வாழ்க்கை மிகவும் அசாதாரணமான ஒன்று.  ஜெர்மனியின் அதிபராகி,  இரண்டாம் உலகப்போருக்கு காரணமாகி, ஐரோப்பாவையே வெற்றிகொண்டு, சுமார் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்து,[1]கடைசியில் தோல்வியைத் தழுவி, ஒரு சிறிய ரகசிய அறையில், கடைசி நிமிடத்தில் மணந்துகொண்ட தனது காதலியுடன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட அபத்தம், எந்த ஒரு சுவாரஸ்யமான நாவலை விடவும் ஈர்ப்புத் தன்மை அதிகம் கொண்டது. லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன?
2004ல்  வெளிவந்த ‘டௌன்ஃபால்’ (Downfall) என்ற திரைப்படம், ஹிட்லரின் இறுதி பத்து நாட்களை  மிகவும் விரிவாக சித்தரித்துள்ளது. இத்திரைப்படம், ‘der untergang’ என்ற பெயரில் ஜெர்மன் மொழியில், ஆலிவர் ஹெர்ஷ்பீகலின் (Oliver Hirschbiegel)) இயக்கத்தில் வெளி வந்தது [2]. இது ஹிட்லரின் செயலர்களில் ஒருவராக இருந்த ட்ரௌடல் யுங்க (Traudl Junge) என்ற பெண்மணி எழுதிய, ‘அன்ட்டில் தி ஃபைனல் ஹவர்ஸ்’, ஜோஆஹிம் ஃபெஸ்ட் (Joachim Fest) எழுதிய ‘இன்ஸைட் ஹிட்லர்ஸ் பங்கர்’ ஆகிய நூல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. (2002 இல் ஜெர்மன் மொழியில், 2004 இல் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு வெளியாயின.)
ஹிட்லரின் இறுதி காலத்தில் அவரிடம் செயலராக இருந்த  ட்ரௌடல் ”உண்மையில் நான் நாஜி ஆதரவாளர் இல்லை. நான் நினைத்திருந்தால் அப்பணிக்கு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் எங்கு சென்றிருக்கக்கூடாதோ, அங்கு என்னை விதி கொண்டு போய் சேர்த்தது. இதற்காக என்னை மன்னிக்கவே முடியாது…” என்று கூறும் காட்சியுடன் இப்படம் துவங்குகிறது.
ஏப்ரல் 20, 1945. ஹிட்லரின் 56 ஆவது பிறந்த நாள். ஹிட்லர், ஹிட்லரின் காதலி ஈவா ப்ரௌன், ஹிட்லரின் பாதுகாவலர்கள், செயலர்கள்  மற்றும் நம்பிக்கைக்குரிய தளபதிகள் பெர்லின் நகரில், ரைஸ்கான்ஸலாய் (Reichskanzlei-Reich Chancellery ) கட்டிடத்தின் கீழ்ப்புறத்தில் இருந்த ஒரு பங்கரில் தங்கியிருக்கின்றனர். அன்று காலை பெர்லின் நகரம், சோவியத் ரஷ்யாவின்  வெடிகுண்டுத் தாக்குதலுடன் விடிகிறது. ஜெனரல் வில்ஹெம் பர்க்டார்ஃப் மற்றும் தளபதிகளுடன் ஹிட்லர் ஆலோசனை நடத்துகிறார். தொலைபேசியில் ஹிட்லரிடம் பேசும் ஜெனரல் கார்ல் கோல்லர், ரஷ்யாவின் செம்படையினர் மத்திய பெர்லினிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டாகக் கூற, கோபமாகும் ஹிட்லர், ”நீங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறீர்கள்? விமானப் படையினர் அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.” என்று கத்துகிறார்.
பின்பு நடைபெறும் பிறந்த நாள் விழாவில், எஸ்எஸ் அமைப்பின்(எஸ்எஸ் அமைப்பு, ஹிட்லரின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு உதவிப் பட அமைப்பு ஆகும். ஆனால் அது பின்னாளில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக உருவாகி, இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஏராளமான  படுகொலைகளில் ஈடுபட்டது.) தலைவர் ஹிம்லரும், எஸ்எஸ்ஸின் துணைத்தளபதியும், ஹிட்லரின் காதலி ஈவா ப்ரௌனுடைய சகோதரியின் கணவருமான ஹெர்மன் ஃபீகலைனும் ஹிட்லரிடம் பெர்லினை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர். அதற்கு ஹிட்லர், ‘நாம் ரஷ்யப்படையை வீழ்த்தியாக வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சிக்கு தயாராவோம்.’ என்று கூறுகிறார்.
மறுநாள் தளபதி ஹெல்மூத் வைட்லிங்கை, பெர்லினை பாதுகாக்கும் படையின் தலைவராக நியமிக்கிறார் ஹிட்லர். பிறகு தளபதிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் உயர் ராணுவ அதிகாரி மோன்கே (Mohnke), பெர்லினை நோக்கி ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதை தெரிவிக்கிறார். கோபமடையும் ஹிட்லர், ”துருப்புகள் அனைவரும் துரோகிகள். கோழைகள். தளபதிகள் யாரும் தங்கள் கடமையை சரிவர ஆற்றவில்லை” என்றெல்லாம் கத்திவிட்டு, பிறகு உண்மை நிலவரம் உணர்ந்து அமைதியாகி, ”நாம் தோற்றுவிட்டோம். ஆனால் எந்த நிலையிலும் நான் பெர்லினை விட்டுச் செல்லமாட்டேன். அதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்வேன்.” என்று கூறுகிறார்.
பிறகு கூட்ட அறையை விட்டு வெளியே வரும் ஹிட்லர் தன் காதலி ஈவாவிடம், ”விமானம் ஏற்பாடு செய்கிறேன். ஜெர்மனியின் தென் பகுதிக்கு தப்பிச் சென்றுவிடு.” என்று  கூற… ஈவா அதனை மறுத்து ஹிட்லருடனே தானும் சாகப் போவதாக கூறுகிறார். கோயபல்ஸின் மனைவி மேக்தா கெப்பல்ஸ் (magda goebbels), தனது ஆறு குழந்தைகளுடன் பங்கருக்கு வருகிறார். தோல்வியடையும் பட்சத்தில் குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடனே கெப்பல்ஸ் தம்பதி அங்கு வந்துள்ளனர்.
ரஷ்யப்படைகள் ஜெர்மனியில் நுழைந்தவுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருக்கும் ஹிட்லர் ஈவா, செயலர்கள் ட்ரௌடல் மற்றும் கெர்டா போர்மனுடன், தற்கொலை செய்துகொள்ளும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கிறார். துப்பாக்கியைக் காட்டி ஈவா ப்ரவுனிடம், ”இதை வாயில் நுழைத்து சுட்டு;க்கொள்ளவேண்டும்.” என்கிறார் ஹிட்லர். அதற்கு ஈவா, ”நான் சாகும்போது அழகாக சாகவேண்டும். அதனால் சயனைடு சாப்பிட்டே சாகவேண்டும்.” என்று கூறுகிறாள்.
பெர்லின், ஏப்ரல் 23 1945. ஈவா தனது சகோதரிக்கு கடிதம் எழுதுகிறார். மேக்தா கெப்பல்ஸ், தனது முந்தைய திருமணம் மூலமாக பிறந்த பெரிய மகனுக்கு கடிதம் எழுதுகிறார். இந்த கடித வாசகங்களின் பின்னணியில் ஜெர்மன் அழியும் காட்சிகள், மக்கள் வெளியேறும் காட்சி… கோப்புகள் எரிக்கப்படும் காட்சி என்று பலவும் காண்பிக்கப்படுகின்றன.
மேற்கு நாடுகளுடன் சரணடைவது தொடர்பாக, ஹிட்லருக்குத் தெரியாமல் எஸ்எஸ்ஸின் தலைவர் ஹிம்லர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இவ்விஷயம் ஹிட்லருக்கு தெரிய வர, ஹிட்லர் கோபத்தின் உச்சிக்கு  செல்கிறார். ஹிம்லரின் துணைத் தளபதி ஹெர்மனை (ஈவா ப்ரௌனின் சகோதரியின் கணவர்) ஹிட்லர் பார்க்க விரும்ப… அவர் பங்கரில் இல்லை என்றும், பெர்லினில் இருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது. ஹிட்லர் ஹெர்மனைக் கொல்ல ஆணையிடுகிறார். ஹெர்மனின் மனைவியான தனது சகோதரி கர்ப்பமாக இருக்கிறாள்… வேண்டாம் என்று ஈவா வேண்டுகோள் விடுத்தும், துரோகத்திற்கு இதுதான் தண்டனை என்று ஹிட்லர் கூறிவிடுகிறார். ஹெர்மன் எஸ்எஸ் படையினரால் கைது செய்யப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
படைத்தளபதிகள் கூட்டத்தில் பல நகரங்களையும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஹிட்லர் அப்போதும் நம்பிக்கை இழக்காமல், “தளபதி வால்த்தர் வெங்க் 12 ஆவது படைப்பிரிவுடன் வந்து, 9ஆவது படைப் பிரிவுடன் சேரும்போது எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார். ட்ரௌடலிடம் தனது அரசியல் அறிக்கையை டிக்டேட் செய்யும் ஹிட்லர், ”கடந்த 30 ஆண்டுகளாக ஜெர்மன் மக்களுக்காகவே பாடுபட்டேன். பல நூறாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி இந்த அழிவிலிருந்து மீண்டு வரும். நமது வெறுப்பு மீண்டும் புதுப்பிக்கப்படும். நமது அழிவுக்கு காரணமானவர்கள் பழி வாங்கப்படுவார்கள்..” என்று கூறுகிறார்.
முடிவு நெருங்குவதை உணரும் ஹிட்லர், ஈவா பிரௌனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். ராணுவ அதிகாரி மோங்கேயிடம் ஹிட்லர், ”பெர்லினை இன்னும் எவ்வளவு நேரம் காப்பாற்ற முடியும்?” என்கிறார். ”ரஷ்யப் படையினர்  சில நூறு மைல்கள் தூரத்திலேயே உள்ளனர். 20 மணி நேரம்தான் காக்கமுடியும்.” என்கிறார் மோங்கெ.  ஹிட்லர் தான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்கிறார். பிறகு தனது பாதுகாவலர் குன்ஸியை((Gunze) ) அழைக்கும் ஹிட்லர், ~~நாங்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, எங்கள் உடல்கள் ரஷ்யப்படையிடம் கிடைத்தால், அதை மியூசியத்தில் காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்கள். எனவே எங்கள் உடல்களை உடனே எரித்துவிடவேண்டும்.” என்று தெரிவிக்கிறார். குன்ஷா (Günsche) 200 லிட்டர் பெட்ரோல் தயார் செய்து வைத்துக்கொள்கிறான்.
டாக்டர்களை அழைக்கிறார் ஹிட்லர்.  டாக்டர், ”துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொள்ளும் போது சில சமயம் அது கண் நரம்பை மட்டும் பாதித்துவிட்டு, உயிரை எடுக்காமல் விட்டுவிடும். எனவே வாயில் சயனைடு கேப்சூலை வைத்து கடித்துக்கொண்டு, அதே சமயத்தில் துப்பாக்கியின் ட்ரிகரையும் இழுக்கவேண்டும்.” என்று கூறுகிறார். பிறகு டாக்டர், ஹிட்லருடைய ஆணைப்படி ஹிட்லருடைய செல்ல நாய் ப்ளோன்டிக்கு சயனைடு கேப்சூலைக் கொடுத்து கொல்கிறார்.
1945, ஏப்ரல் 30. தனது செயலர் ட்ரௌடல் மற்றும் மேக்தா கெப்பல்ஸுடன் உணவருந்தும் ஹிட்லர், ~~எல்லாம் முடிந்துவிட்டது.” என்கிறார். பிறகு ஹிட்லரும், ஈவாவும் தமக்கு நெருங்கியவர்களிடம் கைகுலுக்கி விடைபெற்றுக்கொள்கின்றனர். அப்போது அவர் மேக்தா கெப்பல்ஸிடம் மட்டுமே பேசுகிறாh, ”ஜெர்மனியிலேயே வீரமான தாய் நீதான்.” என்று கூறும் ஹிட்லர்  ஸ்வஸ்திக் பதக்கத்தை மேக்தாவின் உடையில் அணிவிக்கிறார். பிறகு அவர்கள் தங்கள் அறைக்குள் செல்ல அறைக் கதவு சாத்தப்படுகிறது. ஹிட்லரின் அறையிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. பிறகு ஹிட்லர் மற்றும் ஈவாவின் உடல்களை தூக்கிச் செல்லும் காவலாளிகள், உடல்களை  திறந்தவெளியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர்.
மேக்தா கெப்பல்ஸ் தனது குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்துக் கொல்ல முடிவெடுக்கிறார். ஆதற்கு முன்பாக, ஒரு மருத்துவர் உதவியுடன் அவர்களுக்கு தூக்க மருந்தை அளிக்கிறாள். உடல்நலனுக்காக என்று கூறி அந்த மருந்தை அளிக்கிறாள். ஹெல்கா என்ற பெரிய பெண்ணுக்கு மட்டும் சந்தேகம் வந்து அதை அருந்த மறுக்க, வலுக்கட்டாயமாக மருந்தைப் புகட்டுகின்றனர். ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் தனது குழந்தைகளின்  பற்களுக்கிடையில் மேக்தா சயனைடு கேப்சூலை வைத்து, அவர்களுடைய பற்களை வைத்து அழுத்த… அவர்கள் உடனடியாக இறக்கிறார்கள். குழந்தைகளைக் கொன்றுவிட்டு சீட்டுகளை டேபிளில் விரித்து விளையாடும் ஃமேக்தாவை, கெப்பல்ஸ் வெற்றுப் பார்வை பார்க்கிறார். பிறகு திறந்தவெளிக்கு தனது மனவியை அழைத்துச் செல்லும் கெப்பல்ஸ், அவளைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார்.
1945 ஆம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் தேதி ஜெர்மனி அதிகார பூர்வமாக ரஷ்யப்படையிடம் சரணடைகிறது. முக்கியப் பொறுப்பில் இருந்த பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர் .சிலர் சரணடைகின்றனர். இந்த குழப்பத்திற்கிடையே பங்கரிலிருந்து வீரர்களுடன் வெளியே வரும் ட்ரௌடல், ஹிட்லரிடம் வீர விருது பெற்ற சிறுவன் பீட்டருடன் ஒரு சைக்கிளில் செல்லும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.
ஏறத்தாழ 3 மணி நேரம் ஓடும்;;;;;;; இப்படத்தை பார்த்து முடித்தபோது இரவு மணி 2. வெளியே அமைதி. ஒரு வினாடி ‘என்ன வெடிகுண்டுகளின் சத்தத்தை காணோம்…” என்று தோன்றியது. நானே அந்த பங்கருக்குள் இருந்து இப்போதுதான் வெளிவந்தது போல் ஒரு உணர்வு.
இரவு நான் உறங்கும்போது கனவில், ஹெர்மேன் , மேக்தா கெப்பல்ஸின் குழந்தைகள், ராணுவ அதிகாரி மோங்கெ, ட்ரௌடல், ஹிம்லர்,  கெப்பல்ஸ் என்று பலர் வந்து போனது போல இருந்தது.
ஒரு கலைப்படைப்பின் மகத்தான வெற்றி இதுதான். ஒரு சிறந்த படைப்பு உங்களை அந்தப் படைப்போடு கட்டிப்போட்டுவிடுகிறது. அந்த வகையில் டௌன்ஃபால் கலாபூர்வமாக ஒரு வெற்றிப்படம். ஆனால் ஒரு மனிதனாக, ஹிட்லர் இந்தப் படத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவுகிறார். போரில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவதாக அவரிடம் தெரிவிக்கும்போது, ”நாம் ஒரு போரையே இழக்கும்போது, மக்களை இழந்தால் என்ன?” என்கிறார். மேலும் ஒரு காட்சியில், ”பெர்லினை காப்பதற்காக இதுவரை 20000 இளம் வீரர்களை பலி கொடுத்துள்ளோம்.” என்று கூறப்படும்போது, ஹிட்லர் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி, ”அதற்குத்தானே அவர்கள் இருக்கிறார்கள்…” என்று கூறுகிறார். இவ்வாறு படம் முழுவதும் ஒரு சர்வாதிகாரியின் அசலான முகம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மிகுந்த ஆராய்ச்சி மற்றும் உழைப்புக்கு பிறகு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான விஷயம், ஹிட்லராக நடித்திருக்கும் ப்ரூனோ கேன்ஸின் நடிப்பு.  தளர்ந்து போன நடையுடன், தோல்வியின் வலியுடன் நடமாடும் கேன்ஸ் அபாரமாக நடித்துள்ளார். தளபதிகளிடம் ஆவேசமாக கத்தும் காட்சிகளில், கேன்ஸ் தனது உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கேன்ஸின் நடிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹிட்லரின்  வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் கெர்ஷா, கேன்ஸின் குரலும், அந்த ஆவேசமும் அப்படியே ஹிட்லரை ஒத்திருப்பதாக கூறியுள்ளார்.
அடுத்து குறிப்பிடவேண்டிய விஷயம்… ஆலிவரின் இயக்கம். மேக்தா கெப்பல்ஸ் தனது ஆறு குழந்தைகளின் வாயிலும் சயனைடைத் திணித்து கொல்லும் காட்சியில், வசனம்… பின்னணி இசை… அழுகை… என்றெல்லாம் எதுவுமில்லாமல், அந்த அப்பாவிக் குழந்தைகளின் மரணத்திற்காக நம்மை மனமிரங்க வைக்கிறார்.
சரி… இந்த படத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? ஒரு தேசம் பிறிதொரு தேசம் அல்லது தேசங்களின் மீது தொடுக்கும் எந்த ஒரு போரும், பல்லாயிரம் உயிர்களை கொல்வதைத் தவிர தனது இறுதி இலக்கை அடைவதே இல்லை. முதல் உலகப் போரால் பிரச்னைகள் தீரவில்லை. மாறாக அது இரண்டாம் உலகப் போருக்கே வழிவகுத்தது. அமெரிக்கா, வியட்நாம் மீது படை எடுத்து என்னை சாதித்தது? அமெரிக்காவின் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அங்கு அமைதியைக் கொண்டு வரமுடியவில்லை. வரலாறு நமக்கு மீண்டும், மீண்டும் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம்தான் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம்.

oOo

பின்குறிப்பு: (பதிப்புக் குழுவினரிடமிருந்து)

[1] இறந்த யூதர் எண்ணிக்கை குறித்து நிறைய சர்ச்சை உண்டு. யூத எதிர்ப்பு பெருகி விட்ட இந்நாளில் இன்னும் யூதர்கள் கொல்லப்பட்டதெல்லாம் பொய் என்று அரசியல் ஆதாயத்துக்காகச் சொல்லும் ஒரு கூட்டம் உலகெங்கும் இருக்கிறது. யூரோப்பில் நிறைய நாஜிகளும், இதர யூதர்களின் எதிரிகளும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வலையுலகில் வலம் வருகிறார்கள். யூதர்களைத் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் பார்த்திராத தமிழகத்து உதிரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கூட இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை வலையிலும், மேடைகளிலும் நடத்தி வருகிறார்கள்.  இது பற்றிய பற்பல ஆய்வுகளைக் கொடுக்க இது இடமில்லை. ஆனால் இஸ்ரேலின் இடது சாரிப் பத்திரிகையான ஹாரெட்ஸ் 2013 இல் பிரசுரித்த சிறு கட்டுரைக்கு ஒரு சுட்டியை இங்கு தருகிறோம். அதில் இந்த எண்ணிக்கை எப்படி பெறப்பட்டது என்பது குறித்து சிறு விவரணைக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 5.9 மிலியனிலிருந்து 6.2 மிலியன் வரை இருக்கலாம் என்பதைச் சொல்கிறார்கள். அந்தச் சுட்டி இதோ: http://www.haaretz.com/jewish-world/jewish-world-features/.premium-1.540880
[2] ஹெர்ஷ்ஃபீகல் தன் 13 நிமிடங்கள் என்ற படம் பற்றிக் கொடுத்த ஒரு பேட்டியை இங்கு காணலாம். ஒரு மனிதனால் கூட மனித சரித்திரத்தை மாற்றி அமைக்க முடியலாம், கொடுமையை எதிர்த்து நிற்பது அத்தனை வலுவான செயல் என்று இந்தச் சுருக்கமான விடியோவில் சொல்கிறார்.

அந்தப் படத்தின் ஒரு காட்சித் துண்டு இங்கே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.