ரஞ்சனி

sad-woman-silhouette-1

நீலக்குழல் விளக்கொளி அறையெங்கும் பரவி இரவின் முழுமையை ரஞ்சனியின் மனதில் நிலைத்தது.கதவில் தொங்கிய மாவிலைகள் அசையும் நிழலையேப் பார்த்திருந்தாள். எழுந்து வெளியே போகமல் ஏன் இப்படியே இருக்கிறேனென்று எண்ணிக் கொள்கிறாள். சீனுவின் சீரான மூச்சொலி, குழந்தைகள் புரண்டு படுக்கும் அசைவு  எல்லாவற்றையும் உணரமுடிகிறது. ஆனால் அவள் அப்பெரும் வெளியில் நிற்கிறாள். வெள்ளிநிறத்தில் மின்னும் மணலும், நிலவொளியில் அசைந்தோடும் தண்ணீரின் அசைவும்,  குளிர் வாடையும் அவள் மேனியில் படர்வதை நிஜம் போல் உணரமுடிகிறது. எழும்பி தாழ்ப்பாளைத் திறக்கிறாள். மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவற்றில் சாய்ந்து நின்றவாறிருக்கிறாள். பிறை நிலவொளி மங்கலாய் ஒளிரும் வெளிச்சத்தில் தோட்டத்தைப் பார்க்கிறாள். மருதாணி மரத்தின் பூக்கள் அசைகின்றன.
மகேஸ் சித்திக்கு எப்பவும் நிலா வெளிச்சத்துல உக்காரப் பிடிக்கும். வீட்டில் எல்லாரும் தூங்கியபிறகு பௌர்ணமி நிலவொளியில் அவள் முதன்முதலில் கரிய வடிவங்களாய் நிலவொளியில் மின்னும் இலைகள் அசைந்தாடும் மரங்களைப் பார்த்தவாறு ஆற்றங்கரைக்கு கொய்யாத்தோப்பு வழியில் நடந்தது சித்தியுடன் தான்… சித்தி பயமாயிருக்கு என்றவளை சேர்த்து அணைத்துக்கொண்டவள் ஏண்டி பயப்படற, நம்ம எடந்தான இந்த எடத்த ராத்திரியில பார்த்தா தான் நல்லாருக்கும் என்றாள்.
மொத மொதல்ல வருதுல்ல அதான் பாப்பா பயப்புடுது என்றாள் உடன் வந்த செந்து.
முழு நிலவொளியில் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பது பேருவகையாய் இருந்தது. யாருமின்றித் தனியே அவ்விடம் மனதில் திகிலைத் தந்தாலும் உள்ளம் பரபரத்தது. அவ்வுணர்வு ரஞ்சனிக்கு எதையோ புதிதாய்த் தந்தது.பாறை இடுக்குகளிலிருந்து வளர்ந்திருந்த புற்களும், சிவந்த பூக்களும் வெள்ளியாய் துள்ளும் நீரும் அவளைக் கிறங்கச்செய்தன. ரஞ்சி இப்பிடியே வாழ்நாள் முழுக்க உக்கார்ந்து இந்த நிலாவப் பாத்துட்டே இருக்கனும்… அவள் விழிகளில் பளபளத்த கண்ணீர் கன்னங்களில் வழிகிறது.
சித்தி …அழறயா? கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.சித்தியின் மூக்குத்தியும்,கூந்தல் பிசிறுகளும் நிலவொளியில் ஒளிர்கின்றன. ஆற்றின் குதூகலமான துள்ளலையே பார்க்கிறாள். பாப்பா நீ இந்த ஊர்லயே இருக்காத வேற எங்கனா தூரமா கல்யாணங்கட்டிக்கிட்டுப் போயிடு…
ஏன் சித்தி
இங்க இருந்தா இந்த எடத்த மட்டுந்தான பாத்துக்கிட்டே இருக்கனும். எனக்கு காசி,இமய மலை எல்லாத்தையும் பாக்கனும், எந்த நோக்கமும் இல்லாம ரெண்டு பேரும் கைய கோத்துண்டு தெரியாத ஊரெல்லாம் வலம் வரணும்… இப்படி நெறய…. நீயாவது பாம்பேக்குப் போயிடு. என்ன மாதிரி ஏமாந்துடாத…. திரும்பி வருகையில் சித்தி எதுவுமே பேசவில்லை. கையில் ஒரு குச்சியை வச்சிக்கிட்டு செடிகளைஅடிச்சிட்டே வந்தா.
மகேஸ் சித்தி எப்பவும் அவளுடன் தான் நிறைய பேசுவாள். ரஞ்சி  எம்மனசு புரியாம எல்லாரும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க. எங்கூட பேசக்கூட அவனுக்கு புடிக்கல, எப்பிடி போயி வாழறது? கையில் மருதாணியை இட்டுக்கொண்டே பேசுவாள்…
கிணற்றடியில் துணிதுவைக்கையில் இவள் பக்கத்தில் கருங்கல்லில் உட்கார்ந்திருப்பாள். சித்தியின் கதைகளெல்லாம் இவளுக்கு அவ்வளவு சுவாரசியமாயிருக்கும்.
மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்த கதையா அவளையும் உங்கதையக் கேக்க வைக்காத மகேஷ்… அம்மாவின் வசைகளுக்கு இருவரும் சிரிப்பார்கள்..
என்னடி சிரிப்பு?ஒழுங்கா சம்பாதிச்சி போடற ஆத்துக்காரனுக்கு ஆக்கிப்போட்டு அவங்கூட வாழ முடியல உனக்கு.இப்பிடி கதைய சொல்லிண்டே இருந்தா அவந்தான் என்ன பண்ணுவான்?

    ஏன் சித்தி உனக்கும் சித்தாவுக்கும் சண்டையா? கல்லூரி விடுமுறையில் கேட்டாள்.

ரஞ்சி சித்தா நல்லவர் தான். ஆனா எனக்கு அவ்ளோ நல்லவன் வேணாம். சோறு மட்டுந்தானா. அவனுக்கு நான் பாடறது, பேசறது எதுவுமே புடிக்கல. அவன் சொல்றத மட்டும் கேக்கணும்.  எனக்குன்னு எதுவுமே இல்லயா?

திருமண வாழ்வு ரஞ்சனிக்கு நன்றாகவே இருந்தது. சீனு அவள்மீது அக்கறையாய்த் தானிருந்தான். இருவரும் சேர்ந்து ரசித்த மாலைப்பொழுதுகள் மனதை நிறைத்தன. கோவாவில் அவன் தோளில் சாய்ந்தவாறு கடற்கரையில் உலவிய நேரங்கள் வாழ்வை அவளுக்கு சொர்க்கமாக்கின…

மகேஸ் சித்தி மடியில் சாய்ந்தவாறு கேட்ட  தங்கம்மா கங்கம்மா கதை அவள் நினைவுக்கு வரத்தொடங்கியது எப்போது ….

அக்கா தங்கச்சிய கும்புட்டிருக்கயா? அவங்க கத தெரியுமா?

    பொன்னாக உருகும் சூரிய ஒளி சிவந்து பரவிவெண்ணிறம் கொள்வதும்,வானில் நீலம் கருக்கொள்வதையும் கண்கள் மலர பார்த்திருந்தாள். காலைப்பனியின் நடுக்கும் குளிர் வாடை, புற்களின் மீதெங்கும் பனித்திவலைகளில் சிதறும் வண்ணங்கள், பசும் நீரின் மீதெழும் ஆவிப்பரப்பு, தலையைத்தூக்கிப் பார்க்கும் நீர்க்கோழிகள், தரையில் படர்ந்திருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் ஊதா, மஞ்சள், நீலம், வெண்மை என அவற்றின் நிறங்கள், ஊசிப்புற்களின் கூம்பு வடிவ பூக்களில் அமரும் தும்பிகள், என ஏரிக்கரைப் புல்பரப்பு மனதை இதமாக்க ஈரம் வழிந்தோடிய கருங்கல்லின் மீது அமர்கிறாள் ரஞ்சனி. பனியின் குளுமை கல்லிலிருந்து உடலுக்குத் தாவுகிறது.முழங்கைகளைக் கட்டிக்கொள்கிறாள்.

பொன்னொளிரும் காலை வேளையில் அவ்விடத்தின் தனிமை,குளிர், நீரில் எழும்பும் சிற்றலைகள்,மரங்களிலிருந்து சொட்டும் திவலைகள் அவளை முழுமையாய் நிரப்பின. உயர்ந்து வளர்ந்திருந்த தைல மரங்களும், புளியமரங்களும், பசும் இலைகளெங்கும் ஈரத்தில் மினுக்கும் புங்க மரங்களும்,வெண்மையான அரசமரப் பரப்பும், அதில் ஊரும் எறும்புகளும், சிட் சிட்டென ஓசையெழுப்பும் குருவிகளும், முட்டை முட்டையாய் காய்களுடன் படர்ந்திருக்கும் காட்டாமணக்குப் புதர்களும், அவற்றைப் பிண்ணிப் படர்ந்திருக்கும், கொடிகளும், நீலவண்ண குடை வடிவப் பூக்களும் சிறிய அடர்ந்த செடிகளும் காலங்காலமாய் அவள் அமர்ந்திருப்பதைப் பார்க்கின்றன.நாணல்களும் செடிகளும் அசைந்தாடும் அசைவில் சிலந்தி வலைகளிலிருந்த பனித்துளிகள் ஏரி நீரில் சொட்டுகின்றன.புற்களில் படர்ந்துள்ள சிறிய மலர்களின் வண்ணங்களைப் பார்க்கிறாள்.அவற்றின் பூரிப்பு அவளுக்கு புன்னகையைத் தருகிறது.சிறிய மண் நிறப் பூச்சி நீண்ட கொம்புகளுடன் தாவிச்செல்கிறது. சாம்பல் வண்ண பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது. எறும்புகள், பசும் புழுக்கள், கரிய வண்டுகள், கம்பளிப் புழுக்கள், சிறு அவல் வடிவச் சிறகு கொண்ட பூச்சி என அங்கிருக்கும் உயிர்களின் உலகு அவளை ஈர்க்கிறது.

மனதின் குரோதம் வன்மம் … யார் மீது?எவர் மீது? தன் மீது தன் இயலாமை மீது.  ஏன் மீறிச்செல்ல முடியவில்லை… ஒருக்காலும் முடியாது… கோபம் கொஞ்சங்கொஞ்சமாய் அவள் குருதியெங்கும்,சதையெங்கும் பரவி உச்சியை அழிக்குமா? மனப்பிறழ்வா?…  அப்படியே அது மாறி மோகமாய், காதலாய் நேசமாய் உலகையே மூழ்கடிக்கும் பாசமாய் மாறுவது எனக்கு மட்டுந்தானா? எல்லா பொம்மணாட்டிக்கும் இப்படித்தானா?

காலத்தின் வெளியில் கனிந்து
காத்திருக்கும் சுடரொளி!

ஏற்றிய தீபச்சுடர் அணையும் வேளை காற்று அறியுமா! மோனச்சுடரின் வெம்மை . தனிமை, உண்மை, ஒளிரும் கண்கள், கன்னங்களின் மென்மை, சிவந்த கழுத்தின் நீல நரம்புகள், புறங்கழுத்தின் கூந்தல் சரிவு, மருளும் பார்வைகள்!! அவள் உள்ளுள் சென்றிட முடியுமா? அதன் வேட்கையை அறிந்திட இயலுமா?

    தூக்கிக் கட்டிய கூந்தலும் கருமை பொங்கும் விழிகளுமாய் செந்து கதை சொல்லும் அழகே ரஞ்சியை ஈர்க்கும்.

அக்கா அப்பிடியே செலயாட்டம் இருப்பா. வராத ஊருல இந்தல்லாம் அவளக்கேட்டு வராங்க. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பூரிப்பு. உள்ளூரிலேயே காளியானுக்குக் குடுத்தாங்க. சரியா ரெண்டாம் மாசம் கெணத்துக்கு தண்ணியெடுக்கப்போன தங்கம்மா தவறி விழுந்து செத்துட்டா. படையல் வச்சு அடுத்த முகூர்தத்துல அவ தங்கை கெங்கம்மாவை காளியனுக்கு கட்டி வச்சாங்க. அப்பல்லாம் அப்படித்தான் வழக்கம். அவளாவது நல்லா இருக்கான்னு நெனச்சி பெத்தவங்க இருந்தப்ப அவளும் அதே கெணத்துல உழுந்துட்டான்னு தகவல் வருது.ஊரே அழுது மாளுது.

அந்த வருசம் கொடயில தெய்வம் வந்து ஒரு கன்னிப்பொண்ணு சொன்னப்பதான் எல்லாருக்கும் தெரியுது. “என் அப்பனே ஆத்தாவே சாதியே சனமே இந்த பூமாதேவி சாட்சி ஆகாச ராசா சாட்சி நெலா சாட்சி சூரியன் சாட்சி நான் பொண்ணாப் பொறந்து வளந்த இந்த ஊரிலயே வாழ்ந்தேன். கல்யாணங்கட்டுனவன் என்ன படுத்துன கொடுமைய தாள முடியாத நான் கெணத்துல உழுந்தேனே.. எந்தங்கச்சிய அவங்கிட்டயே குடுத்தீங்களே. அவளால தாள முடியுமா. பூஞ்சிட்டு மாதிரி பறந்துகிட்டிருந்தவ எப்பிடி தாங்குவா., அவளும் அந்த் கெணத்துலயேக் குளுந்துட்டா…. அவங்கள தான் நாம்ப அக்கா தங்கச்சியா கும்படறோம்.”

   கேட்டுக்கொண்டிருந்த மகேசும் ரஞ்சனியும்   அழுதிரிக்கிறார்கள்.

அக்காளும் தங்கையும் அவள் நினைவுகளில் வரத்தொடங்கிய போது கல்லாகியிருந்தாள். நிலவு பொழியும் இரவில் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கையில் பார்த்த கூழாங்கற்கள். எத்தனை கோடைகளை மாரிக் காலங்களை வெள்ளங்களைப் பார்த்தவை அக்கற்கள். வெள்ளி ஒளியில் ஒவ்வொன்றும் ஒரு முழு நிலவாய்த் தோற்றப்பிழை. நீரில் ஆயிரம் நிலாக்கள். மூழ்கும் அவள் யௌனவம். கரையும் மேடுபள்ளங்கள். மழமழப்பு.

வாழ்க்கையின் பக்கங்கள் அவளுக்கு உவப்பானதாய் சிலதே. மற்றவையெல்லாம் கனவுகள். அவை பறப்பவை மூழ்குபவை; வழிந்தோடுபவை; உயிர் ஒடுங்க மலர்பவை; பிரபஞ்ச வெளியெங்கும் படர்ந்து கொய்பவை. பொன்னரளிப் பூக்களாய் சொரிபவை. இரவில் மலர்ந்து மயக்கும் செவ்வரியோடிய நித்யமல்லி இதழ்கள். செடி காணாது பூக்கும் காட்டு மலர்கள். மணல் எங்கும் படர்ந்து ஓடி விளையாடும் சமுத்திர அலைகள்.

பீன்ஸ் பருப்பும்,வெந்தயக் குழம்பும் பண்ணவா பிறந்தாள். முரண்கள் மோதல்கள் பேச்சுகள் சமாதானங்கள் … என்றும் முடியாது எனும் உச்சத்தில் மௌனியானாள்.
அவன் கண்ணன் பார்த்தன் மதுசூதனன் நந்தகோபன் காண்டீபன் ராதாமணாளன் வில்லேந்தும் விஜயன் சுபத்ராவின் மித்திரன். மனமெங்கும் நிறைபவன். அவள் கனவெளியில் கலவையாகி சிந்தையானவன். எண்ணங்களில் உயிர்ப்பவன். எப்பொழுதும் உடனிருந்து சகி என்று பிரியத்தில் உச்சி முகர்கிறான். செஞ்சாந்தும் செம்பகமும் கலந்து வீசும் புத்தம் நறுமணம் அவள் அனுபவங்கள். உயர்ந்து நிற்கும் மலைமுகட்டில் எவர் கண்களும் தீண்டாமல் தனித்து வளர்ந்து பரவி மணம் பரப்பும் சந்தன விருட்சம் அவள் அக உலகு. காயங்களில்லை சீண்டல்கள் இல்லை; சீறும் நாகங்களாய் எழும் பெருமூச்சுகள் இல்லை; அலங்காரங்கள் இல்லை; களைதல்கள் இல்லை…

உவகை உவப்பு பூரண சமர்ப்பணம் நினைவுகள் எண்ணங்கள் மட்டுமே செயல்களே அற்ற மோனம்..

       பனியில் பாதி  மலர்ந்திருக்கும் இதழ்களெங்கும் திவலைகள் வழியும் மஞ்சள் ரோஜா.   மயக்கும் மணம் பரப்பும் பூத்துச் சொரியும் செவ்வலரிக் கொத்துகள் சுவர் இடுக்கில் தளதளவென வளர்ந்து தளிர்க்கும் ஆலஞ்செடி..

அவள் கனவுகளில் அவன் வரத்தொடங்கினான். பின் நிஜம் போன்ற நினைவுகளில். அவள் சிரித்தாள், மலர்ந்தாள், நாணினாள், முகம் சிவந்தாள். அவளைச் சிரிக்க வைத்தான்.

மழையில எதுக்கு நிக்கற பைத்தியமாட்டமா.எப்ப பாத்தாலும் என்ன சிரிப்பு.அர்த்தங்கெட்ட வேளையில என்ன பாட்டு. அதுவும் கண்ணீர் விட்டுக்கிட்டு, கொழந்தைகளை வெச எனக்கு கெட்ட வார்த்தை தான் வரும். தோசை வார்த்துக் கொடுத்தா கொறஞ்சிடுவையா.

கண்ணீர் கூட வருவதில்லை.பனி மட்டுமான வெண்மைப் பரப்பில் நின்று மேருவை பால் நிலவொளியில் பொன்னொளிர் காலைக் கதிரில் மயக்கும் நீலத்தில் தரிசிக்க ஏன் ஆசைகொண்டாள் சித்தி . அவள் மனதின் அகன்ற பரப்பு எதுவுமற்ற வெளி நான் நீ என்ற வேறுபாடின்றி எங்கும் நிறையும் முழுமை பூரணத்துவம் மட்டுமே வேண்டினாள்.

அவள் எண்ணங்களில் மகேஸ்வரியும் தங்கம்மாவும் கெங்கம்மாவும் சங்கமிக்கத் தொடங்கினார்கள்… காலங்காலமாய் பெண்மையாய், மலராய், பாறையாய் அவள் அமர்ந்திருக்கிறாள்.