மாணிக்குறளனே தாலேலோ!

Baby-Krishna-With-Murli-Photos
சின்னஞ்சிறு குழந்தைகளைத் தாலாட்டி, பாட்டுப்பாடி உறங்க வைப்பதென்பது மிகவும் இன்ப மயமான அனுபவம். அக்குழந்தை ‘இவ்வாறு வளர வேண்டும், பெரிய பெயர் பெற வேண்டும், அருஞ்செயல்கள் செய்ய வேண்டும்’ எனவெல்லாம் தாய் தன் குழந்தையைப் பற்றிக் காணும் கனவுகளைப் பாட்டாக ‘தாலேலோ’ என்று நாவினை அசைத்துப் பாடி மகிழ்கிறாள். குழந்தையும் இவையனைத்தையும் கேட்ட வண்ணம்  உறங்குகிறது.
தாயின் பாடல்கள் அப்பிஞ்சு மனதில் பதிந்து எழுச்சியை உண்டு பண்ணும் எனத் தாயுள்ளம் எண்ணுகிறது. அன்பினை வளர்க்கும்; வளர்ந்தபின் அவள் ஆசையை நிறைவேற்ற முனையும் எனெவெல்லாம் நினைக்கிறாள் தாய். பாடுகின்ற தாயின் உள்ளக் கனவுகள், அவள் வளர்க்கும் மதலையின் செயல்கள் மூலமாக ஒரு நல்லதொரு மகனையோ மகளையோ உலகிற்கு அளிக்க அஸ்திவாரமிடுகின்றன எனலாம். இது மானிடக் குழந்தைகளுக்குப் பொருந்தும்.
தெய்வத்தைக் குழந்தையாக்கித் தாலாட்டுப் பாடினால்…..?
அதன் குறும்புகளை ரசிக்கலாம். அழகினைப் போற்றலாம். அவன் கடவுளாகச் செய்த, செய்கின்ற, செய்யப் போகின்ற நிகழ்வுகளைப் பற்றிப் பாடிக் களிக்கலாம். இவ்வாறு தான், பெருமை பெருமை பொங்கும் ஒரு தாயின் நிலையில் நின்று பெரியாழ்வார், குழந்தை கிருஷ்ணனைக் கண்வளரச் செய்யப் பாடுகின்றார்.
“கிருஷ்ணா, உனக்கு எப்பேர்ப்பட்ட தொட்டிலை பிரம்மன் அனுப்பி வைத்திருக்கிறான் என்று பார்த்தாயா? மாணிக்கம் கட்டி, அதன் இடையில் வைரத்தினை இழைத்து மாற்றுக் குறையாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறு தொட்டிலை, உனக்கென்றே செய்து அனுப்பி வைத்திருக்கிறான். மழித்த தலையுடன் சிறுவன் வாமனனாக வந்தவனே! தாலேலோ! இந்த வையத்தையே உன் திருவடிகளால் அளந்தவனே தாலேலோ!”
மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ!
          வையம் அளந்தானே தாலேலோ!
(பெரியாழ்வார் திருமொழி-4)
ஏனோ குழந்தை கிருஷ்ணன் உறங்காமல் சிணுங்கி அழுகின்றான். அவனைச் சமாதானம் செய்விக்கத் தாய், “உனக்காக யார் யார் என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறர்கள் பார் கண்ணே! தேன் நிறைந்த பூவில் வாழும் திருமகள், காட்டில் விளைந்த நறுமணம் மிகுந்த திருத்துழாயினை அழகிய மாலையாகக் கட்டியும், கற்பகப் பூக்களாலான நெற்றி மாலையையும் உனக்காகவே, திருக்குடந்தையில் பள்ளி கொண்ட என் பெருமானுக்காகவே கொடுத்து அனுப்பியிருக்கிறாள் பார்! என் கோவே! அழாதே குழந்தாய்! கண்ணுறங்குவாயாக! தாலேலோ!” என்கிறாள்.
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல்அழேல் தாலேலோ!
          குடந்தைக் கிடந்தானே! தாலேலோ!
(பெரியாழ்வார் திருமொழி-4)
“நீ உறங்கி எழுந்திருந்த பின் உன்னை, என் குட்டிக் கண்ணனை நான் நீராட்டுவேனே! அடடே! அதற்காகவே மான் வாகனம் கொண்ட துர்க்கை, உனது திருமேனிக்கு ஏற்றவிதத்தில் நல்ல வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, சிவந்த கண்களில் தீட்ட கருநிற மை, சிந்தூரப்பொடி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாள் பார்! ஐயனே! அழாதே அப்பா!  திருவரங்கத்தில் பள்ளி கொண்டவனே, நீ இப்போது உறங்குவாயாக, தாலேலோ!” எனக் கூறுகிறாள்.
மெய்திமிரும் நாணப் பொடியோடு மஞ்சளும்
செய்யதடங் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும்
வெய்யகலைப் பாகிக்கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா! அழேல்அழேல் தாலேலோ!
          அரங்கத்து அணையானே தாலேலோ!
(பெரியாழ்வார் திருமொழி-4)
தாலாட்டிற்கென்றே ஏற்பட்ட ராகங்கள் சில- நீலாம்பரி, குறிஞ்சி முதலியன. இருப்பினும் தாயன்பு பலவித ராகங்களிலும் தாலாட்டைப் பாடுகின்றது. எல்லா அன்னையருக்குமா அழகுற இசைபாடத் தெரியும்? குழந்தைக்குத் தாயின் குரலொலியே தாலாட்டு தானே? அவள் நாவினை (தால்- நாக்கு) அசைத்து ‘ருலு லுலு லுலு வாயீ…’ எனும்போது அதில் என்ன அமைதியைக் காண்கிறதோ குழவி, கண்ணயர ஆரம்பித்து விடுகின்றதே!
இப்படிப்பட்ட தாலாட்டின் இனிமையில் உறங்கும் குழந்தைகள் ஒரு ரகம்; இன்னொரு ரகம், தாயாரைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்கும் ரகம். காக்கை குருவி கதைகளிலிருந்து, புராணக் கதைகள் வரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்! கதை சொல்லும் தாயின் இனிய குரலின் ஏற்றத் தாழ்வுகளில் கிறங்கிக் கண்ணயரும் சில குழந்தைகள்; மேலும் சில குழந்தைகள் கதைகளைக் கேட்டவாறு உறங்காது கதையில் ஒன்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தாயைத் துளைத்தெடுக்கும்!
கிருஷ்ணன் செய்த குறும்பைப் பாருங்கள்!
ஆயர்பாடியில் நந்தகோபன் இல்லத்தில் குழந்தை கிருஷ்ணனை உறங்க வைக்க முயன்று கொண்டிருக்கிறாள் தாய் யசோதை.
“கதை சொல்லு அம்மா!” எனத் தொல்லை செய்த தனது குழந்தைக்கு ஒரு கதை சொல்கிறாள் அவள்:
“ராமன் என்று ஒரு ராஜா இருந்தாராம்,” என்பாள் யசோதை; “ஊம்”.
“அவருக்கு சீதை என்று ஒரு அழகான மனைவி இருந்தாளாம்.” “ஊம்.”
“ராமனுடைய தகப்பனார் சொல்படி அவர்கள் இருவரும் காட்டுக்குப் போனார்கள்; அங்கே பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்து வந்தார்கள். அப்போது ராவணன் என்கிற ஒரு ராக்ஷஸன் வந்து தந்திரமாக சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டானாம்,” என்று யசோதை சொன்னது தான் தாமதம் ….
கதை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைக்குத் தன் முற்பிறப்பின் (ராம அவதாரத்தின்) நினைவு வந்து விட்டதோ என்னவோ; தடாலென்று தொட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொள்கிறான் கிருஷ்ணன்.
“ஹே! சௌமித்ரே! (லக்ஷ்மணா!) எங்கே என்னுடைய வில்? அதை எடு, என்னிடம் கொடு (நான் ராவணனை வதம் செய்ய வேண்டும்),” என்று பரபரப்பாகக் கூறுகிறானாம்.
பில்வமங்களர் எனப்படும் லீலாசுகர் தாம் இயற்றிய ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் இதனை ஒரு அழகான ஸ்லோகத்தில் கூறுகிறார்.
ராமோ நாம பபூவ ஹூம் ததபலா
                             ஸீதேதி ஹூம் தௌ பிதுர்-
                             வாசா பஞ்சவடீதடே விஹரதஸ்
                             தாமாஹரத் ராவண:
நித்ரார்த்தம் ஜனனீ கதாமிதி ஹரேர்-
                             ஹூங்காரத: ச்ருண்வத:
                             ஸௌமித்ரே க்வதனுர்-தனுர்-
                             தனுரிதி வ்யக்ரா கிர: பாது ந:
 
ராமனென்ற ஒருவனும் சீதையான மனையளும்
                             ராஜனான தந்தைசொல் ஏற்றுமே வனம்புகுந்து
                    சேமமாகப் பஞ்சவடியைச் சேர்ந்திருந்த நாளிலே
                             சோரனான ஓரரக்கன் இராவணன் வஞ்சமாய்
                    தாமரைசேர் மாதவளைத் தான்கவர்ந்தான்’ எனத்தாய்
                             கூறிடும்சொற் கேட்டபோதில் கீதையின் நாயகன்
                    ‘சௌமித்ரா லட்சுமணா வில்லையெடு’ என்றெழுந்தான்
                             சீறியெழும் கிருஷ்ணன் சொல்செவ்வியதோர் காப்பன்றோ?
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 2.71)
 
இவ்வாறெல்லாம் கதை கேட்டபடி உறங்க முயலும் கிருஷ்ணனை, “ஜோ அச்சுதானந்தா, ஜோ ஜோ முகுந்தா,” எனக் கொஞ்சிச் சீராட்டுகிறாள் யசோதை. “என் குழந்தை எவ்வளவு புத்திசாலி, சமர்த்து, நந்தகோபன் வீட்டு முற்றத்தில் அழகாக விளையாடும் உன்னைப் போய், ‘வெண்ணெய்த் திருடன்,’ என்கிறார்களே! நான் உனக்குத் தங்கக் கிண்ணத்தில் பால் தருவேன். என் அருமைக் குழந்தையே, திருப்பதியில் வளர் மதனகோபாலனே,”என்று யசோதை கொஞ்சித் தாலாட்டுவதாக தாளப்பாக்கம் அன்னமாச்சாரியர் ஒரு அழகான பாடலை இயற்றியுள்ளார்.
ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா
ராவே பரமானந்த ராம கோவிந்தா (ஜோ ஜோ)
 
நந்தனிந்தனு சேரி நயமு மீரங்கா
சந்த்ரவதனலு நீகு சேவ சேயங்கா
அந்தமுகவரி இண்ட்ல ஆடுசூடங்கா
மந்தலகு தொங்கமா முத்து ரங்கா (ஜோ ஜோ)
 
அங்கஜுனி கன்ன மாயன்ன இடு ராரா
பங்காரு கிண்ணலோ பாலு போசேரா
தொங்க நீவனிசதுலு பொண்டுசுன்னாரா
முங்கிதானாதாரா மோஹனாகாரா (ஜோ ஜோ)
கிருஷ்ணனைக் குழந்தையாக்கி அவனுடைய பால லீலைகளில் ஆழ்ந்து விடுவது பக்தி செலுத்துவதில் ஒரு அழகான வகை. பக்தி செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் இறைவனைக் குழந்தையாக எண்ணிக் கொஞ்சுவதில்லை. குழந்தையாகக் கொஞ்சும் போது  இறைவன்- அடியார் என்ற நிலையைக் கடந்து, இவன், இந்தக் குழந்தை என்னுடையவன், என அவனிடம், இறைவனிடம் (அவனை இறைவன் என்று உணர்ந்தும் உணராத நிலையில்)  எல்லையற்ற அன்பும் பாசமும் பிணைப்பும் ஏற்படுகிறதே, இது பக்திக்கும் மேல் ஒருபடி உயர்ந்த உறவல்லவா?
குழந்தைக்கு அன்னை மட்டுமே தான் தாலாட்டுப் பாட முடியுமா? அடியாருமே பாடலாம் அல்லவா? நாராயண தீர்த்தர் அந்த யதுகுலத் திலகனுக்கு நீலாம்பரி ராகத்தில் அழகான பொருள்செறிந்த ஒரு தாலாட்டினைப் பாடியுள்ளார்.
நாராயணதீர்த்தர் என்ற மகான் நாரயணீயம் இயற்றிய பட்டத்ரியைப் போல் கிருஷ்ணனைப் பலவிதங்களில் பாடிக் கொண்டாடியவர்.  இந்தத் தாலாட்டில் கூறுகிறார்:
“யாதவரிடையே, யதுகுலத்தில் அவதரித்த கிருஷ்ணனே! சாதுக்களான பற்றற்றவர்க்குப் பற்றானவனே! உயரிய எண்ணங்களின் பிறப்பிடமே! தாமரைக் கண்ணனே! அழகான சங்கு போன்ற கழுத்தினை உடையவனே! பிம்பா பழம் போன்ற சிவந்த உதடுகளையும் சந்திரன் போலும் முகத்தினையும் கொண்டவனே!”
இது கண்ணனின் அவதார மகிமையை முற்றும் உணர்ந்து யோகநிலையில் நிற்கும் ஒரு அடியவர் பாடிவைத்த தாலாட்டு; அவரும் குழந்தையின் அழகில் தன்னை இழந்து பாடுவதை உணரலாம்.
மாதவ மாமவ தேவா கிருஷ்ணா
யாதவ கிருஷ்ண! யதுகுல கிருஷ்ண (மாதவ)
 
சாதுஜனாதார சர்வபௌம
மாதவ மாமவ தேவா (மாதவ)
 
அம்புஜலோசன கம்புசுபக்ரீவ
பிம்பாதரா சந்த்ரபிம்பானனா
சாம்பேயநாஸக்ர லக்னசுமௌக்திக
சாரதசந்த்ர ஜனிதமதனா (மாதவ)
(நாராயண தீர்த்தர்)
 
குழந்தை கிருஷ்ணன் உறங்கிவிட்டான். யசோதைக்கு  அவன் அருகாமையை விட்டு நீங்க மனமேயில்லை. உறங்கும் அந்த அழகனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கிறாள். ‘அட! யார் இந்தக் குழந்தைக்கு அழகாகத் தலைக்கொண்டையிட்டு, பூச்சூடியிருக்கிறார்கள்?’ கோகுலத்தில் எல்லாப் பெண்களுக்குமே அவன் செல்லக் குழந்தையல்லவோ?  அவரவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு அலங்காரம் பண்ணுவதும், இன்னொன்றும்… எனத் தனக்குள் மகிழ்ந்து கொள்ளும் யசோதைக்கு திடீரென நினைவு வருகின்றது. ‘எத்தனை அழகாக இருக்கிறான் இவன்; என் கண்மணிக்குக் கண்ணேறு பட்டு விடப் போகின்றதே; ஆரத்தி எடுக்க வேண்டும்,’ என எண்ணிக் கொள்கிறாளாம்.
அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு
அரும்பு முடிந்தது யாரு?
 
அரும்பு முடிந்ததாரு விரும்பி உனக்கே கிருஷ்ணா
புலம்புவார் உன்னைக் கண்டால் பொல்லாத கோபிமார்கள் (அற்புதமே)
 
முத்துக் கொண்டைக்கு முல்லை மலர்வைத்து முடிந்தாற்போல்
நெற்றியில் ரத்னச் சுட்டி நேராய்ப் பதித்தாற்போல்
அற்புதமான கிருஷ்ணா திருஷ்டி வைத்தூரார் உன்னை
பார்த்தால் என்னடா செய்வேன் பாலகோபால கிருஷ்ணா (அற்புதமே)
 
காணாமலே தேடி கமலமுகத்தை நாடி
கோபியர் எல்லாம் வாடி கோபருடனே கூடி
வாடா என் கண்மணியே தாடா எனக்கோர் முத்தம்
வாடா என் குஞ்சலமே ஆரத்தி எடுக்குறேன் (அற்புதமே)
இது ஒரு அழகான பாரம்பரியத் தாலாட்டுப் பாடல். எனது பாட்டியார், அத்தை முதலானவர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இருப்பினும், நமது வீடுகளில் ஒரு பாட்டியோ, அத்தையோதான் இயற்றி இருக்க வேண்டும் என்பது பாடலின் வரிகளிலிருந்து உணர முடிகின்றது.
பெரியாழ்வார் கிருஷ்ணனைக் குழந்தையாகக்கண்டு பாடிய பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்திற்கு முன்னோடி எனத் தமிழ்மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ‘பிள்ளைத்தமிழ்’ பெரிதாக வளர்ச்சியுற்ற காலத்தில், ஆண்பால் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானே பெரிதும் பாடப்பட்டவன். விநாயகர் மீது ஒரு பிள்ளைத்தமிழ் உள்ளது.
அழகான, வியத்தற்கரிய நிகழ்வுகள் கொண்ட குழவிப்பருவத்தினை உடைய கிருஷ்ணன் மீது (திருமால், விஷ்ணு) பிள்ளைத்தமிழ் நூல்களே இல்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. சமீபத்தில் திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. கவி காளருத்திரர் என்பவர் இயற்றியது என அறிகிறோம். அதிலிருந்து மூன்றாம் பருவமான தாலாட்டுப் பருவத்திலுள்ள ஒரு பாடலையும் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்யலாமே!
பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்கள், தாயின்நிலையில் நின்று  பாடுவர்.
குழந்தையை உறங்கவைக்கத் தாலாட்டுப்பாடும் தாய் இங்கு அவனுடைய அருமை பெருமைகளைக் கூறி அவனைக் கண்வளர்த்துகிறாள்:
“அடியவர்கள்பால் அளவில்லாத கருணை கொண்ட ஆசாபாசங்கள் மிக்கவனே! தாமரை மலரில் அமர்ந்த பிரம்மனைத் தன் வயிற்றில் சூல்கொண்டவனே!
(நாபிக்கமலத்தில் பிரம்மனைக் கொண்டவன் திருமால்).
“தேன்இதழ்களை விரிக்கும் தாமரையில் உறையும் வனிதையான திருமகளின் கொண்கனே!
“எதிர்கொண்டுவரும் சகடம் (சகடாசுரன்) உடையுமாறு நீட்டிய சிறுதாளினை உடையவனே!
“உனது தாளினை வணங்காத அசுரர் (இராவணாதியர்) ஓடுமாறு (அழியுமாறு) சேனைநடத்தியவனே!
“இசையை ஒலிக்கும் வண்டினம் மொய்க்கின்றதும் தேனும் வாசமும் மிகுந்ததுமான துளப மாலைகளை அணிந்தமையால் துளபமணம் கமழ் தோள் உடையவனே!
“தாரகைகளின் தலைவனான சந்திரன் இடறிக்கொள்ளும் அளவுக்கு வானளாவ உயர்ந்த திருமாலிருஞ்சோலைமலையில் உறை அழகனே! தாலோ! தாலேலோ!
“அலைகள்கொண்டுகொழிக்கும் கடலை அமளியாகக் (படுக்கையாக) கொண்டு அதன்மேல் துயில்பவனே! தாலோ! தாலேலோ!” எனவெல்லாம் பாடிப்பூரிக்கிறாள் தாய்.
அடியவரளவி னோக்கியகருணை யாசாபாசாபூ
                  வயனொடுவயிறு சூற்கொளுமுதிய லோகாலோகாதே
          மடழவிழ்கமல வீட்டுறைவனிதை லீலாகாராநேர்
                  வருசகடுடைய நீட்டியசிறிய தாளாதாள்சூடா
          முடியுடையவுண ரோட்டெழநடவு சேனாரூடாபாண்
                  முரலளிநறவு வாக்கியதுளவு தோடோயாமோதர
          உடுபதியிடறு காக்கிரியழக தாலேதாலேலோ
                  உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ.    
(திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ்)
கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் பாமரரிலிருந்து பெரும்புலவர் வரை அனைவரின் கற்பனைக்கும், சிந்தனைக்கும், பாடற்பொருளாக விளங்கியதை எண்ணி வியந்து மகிழாமலிருக்க இயலவில்லை அன்றோ?

(கிருஷ்ண லீலைகள் தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.