மகரந்தம்


[stextbox id=”info” caption=”புத்தக விற்பனையில் வெற்றி என்பது என்ன?”]

Books_Stacked_Library_Sales_Shops_Barnes_Noble_Amazon_Ebooks_Print_Bound_Shelf_Lots

மேற்கு வளமானது என்று நாம் எல்லாரும் – இந்தியர்கள்/ ஆசியர்கள் ஆகியோரைச் சொல்கிறோம்- கருதுகிறோம். அது ஒரு அளவு உண்மைதான், வளம் என்பது ஓரு வகையில் ஒப்பிடல் மூலமாகவும் தெரிய வருகிறது. நிஜம் என்பது இத்தகைய மேம்போக்கான பார்வையில் புலப்படுவதில்லை.

மேற்கில் ஏராளமானோர் அடி மட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள், அந்த வறுமை இந்திய வறுமை/ ஆசிய வறுமை அளவு மோசமானதாக இல்லாமல் இருக்கலாம். மொத்த மக்களில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழாமல் இருக்கலாம். ஆனால் வறுமைக் கோடு, அடிமட்டம் ஆகியன எல்லாம் வெறும் பணத்தால் அளக்கப்படுவன அல்ல. நிஜ வாழ்வில் ஒரு தளத்தில் பணத்தை விட மனித உறவுகளும், சக மனிதர்களின் ஆதரவும் எல்லாம் அதிக மதிப்புள்ளன. குடும்பத்து வலைப் பின்னல் என்பது பணத்தால் அளக்க முடியாத சக்தி உள்ள ஒரு வளம். இந்திய/ ஆசிய வறுமையில் ஆழ்ந்திருப்பவர்களில் பலருக்கு இந்த குடும்ப வலைப் பின்னல் ஓரளவு ஆதரவை நல்கும் என்பது நம் அனுபவம், எதிர்பார்ப்பு. ஆனால் சமீப காலங்களில் இந்த வலைப் பின்னல் அறுகத் துவங்கி இருக்கிறது என்பதும் உண்மைதான்.
மேற்கில் இந்த பின்னலின் ஆதரவு மிகக் குறைவாக இருந்தது என்பது சென்ற நூற்றாண்டில் பெரும்பகுதியில் உண்மையாக இருந்தது எனலாம். இன்று நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. முன்பு போல இளைஞர்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஏதோ கிடைத்த வேலையைப் பற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தம் வாழ்வைத் தாமே அமைத்துக் கொள்ள முயல்வதில்லை. மாறாக, கல்லூரிப் படிப்பு முடித்து சில வருடம் வெளி ஊர்களில் வேலை பார்த்தவர்கள் கூடத் திடீரென்று வேலைகள் கை நழுவிப் போனதாலும், மாற்று வேலைகள் கிட்டுவது கடினமாக இருப்பதாலும், திரும்ப வந்து தம் பெற்றோரின் குடையின் கீழ் சில வருடங்கள் கூட வாழ நேர்வது பற்றி பல மேலைப் பத்திரிகைகள் எழுதத் துவங்கி உள்ளன. கௌரவ மேற்கு நாடு என்பதாகக் கருதப்பட்ட ஜப்பானில் கூட இப்படி இளைஞர்கள் மறுபடி தம் பெற்றோரின் ஆதரவில் வாழ நேர்வது நடக்கத் துவங்கி இருப்பதாகத் தெரிகிறது.
இப்படி மாறி வரும் மேற்கின் பொருளாதார அமைப்பில், முன்பும், இப்போதும் தொடர்ந்து சிக்கலான வாழ்க்கையில் மாட்டி இருக்கிற ஒரு கூட்டத்தைப் பற்றியது இந்தக் குறிப்பில் கிட்டும் சுட்டி.
அது எல்லா நாடுகளிலும் அவதியிலேயே வாழ்க்கையைப் பெருமளவு கழிக்கிற ஒரு கூட்டம். எழுத்தாளர் கூட்டம். இவர்கள் தெருவில் உறங்கி, கந்தைத் துணி கட்டி, ஒரு வேளை சாப்பாட்டுக்குத் திண்டாடும் நிலையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கடும் வறுமைக்கு ஒரு மெலிய தளத்தைத் தாண்டிய இடத்தில்தான் இருப்பார்கள். அதுவும் தமிழ்நாடு, தவிர பெரும்பாலான இந்திய மாநிலங்களில் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் கூட்டம் மிகச் சிறியது. பத்திரிகைகள் பெருமளவு விற்கும் மாநிலமான தமிழகத்தில் எழுத்தாளரை மதித்துப் போதிய சன்மானம் கொடுக்கும் பத்திரிகைகள் குறைவு.
பெரும் செய்தித்தாள் நிறுவனங்களே கூட உயர்நிலைப் பதவிகளில் உள்ளவர்களுக்கு நிறைய ஊதியம் கொடுத்து விட்டு, அடி நிலை எழுத்தாளர்களுக்குக் கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டுவன என்று தொழிலில் உள்ள எழுத்தாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவு ஊதியமாவது கிட்டிக் கொண்டிருந்திருக்கிறது.
சமீபத்தில் மேற்கில் நிலைமை மாறி எழுத்தாளர்கள் வாழ்க்கை மிக வீழ்ச்சி அடைந்து வருகிறது. செய்தித்தாள்கள் மேற்கில் பல நாடுகளில் மூடப்பட்டு வருகின்றன. பெரும் உலகச் செய்தித்தாள் நிறுவனமான நியுயார்க் டைம்ஸ் கூட ஒரு கட்டத்தில் திவாலான நிலைக்கு வந்திருந்தது. ஒரு மெக்ஸிகன் பிலியனேர் அந்தப் பத்திரிகையை வாங்கி அதற்குத் தற்காலிகமாக உயிரூட்டினார். இப்போது ஏதோ குற்றுயிரோடு ஓடுகிறது.
2000 ஆவது ஆண்டு தாண்டிய முதல் பத்தாண்டுகளில் மிகக் கீழிறங்கிப் போன செய்தித்தாள்கள், புத்தகப் பிரசுர நிலையங்கள் ஆகியன இப்போது ஒரு அளவு நிதானத்துக்கு வந்திருக்கின்றன, மடிந்த ஏராளமான சிறு ஊர் செய்தித்தாள்கள், பல சிறு புத்தக நிறுவனங்கள் எல்லாம் போன பின் எஞ்சியவை இன்னும் பிரசுரமாகி வருவதால் நமக்கு ஏதோ நிலைமை சரியாகி விட்டது என்ற பிரமை இருக்கலாம்.
இந்தக் கட்டுரை அப்படி ஒரு கருத்து இருந்தால் அது நிச்சயம் பிரமைதான் என்று சொல்கிறது. 2009 இலிருந்து நோக்கினால் எழுத்தாளர்களின் சராசரி வருமானத்தில் 30% சரிவு என்கிறது கட்டுரை. தவிர பெருவாரி எழுத்தாளர்கள் வருடத்துக்கு 11000 டாலர்கள் போலத்தான் சம்பாதிக்கிறார்கள் என்றும் சொல்கிறது. அடிமட்ட வேலைகளில் இருந்தால் கூட வருடத்துக்கு 15000 டாலர் போலவாவது சம்பாதிக்க முடியலாம். ஆக பிழைத்திருக்க நிறைய எழுத்தாளர்கள், இப்படி வேறு வேலைகள் செய்தபடிதான் எழுதுகிறார்கள். காஃபிக்கடைகளில் காஃபி ஆற்றுதல், ரெஸ்ட்ராண்டுகளில் சாப்பாடு பரிமாறுதல், தட்டு கழுவுதல், பள்ளிகளில் உபரி வாத்தியார்களாகவோ, கல்லூரிகளில் தற்காலிக உரையாளர்களாகவோ பணியாற்றுதல், இப்படி… இவற்றில் பெரும்பாலானவை தற்காலிக வேலைகள் அல்லது அடிமட்ட சம்பளம் மட்டுமே கொடுப்பவை.
சரி போகட்டும், இதில் இந்திய / தமிழ் எழுத்தாளர்களுக்கு நிறைய சமமான அனுபவங்கள் உண்டு என்று நமக்குத் தெரியும். ஆனால் வேறொரு இடத்திலும் மேலை எழுத்தாளர்கள் இந்திய/ தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களை இப்போது சந்திக்கத் துவங்கி இருக்கிறார்களாம்.
முன்பு உலகச் சந்தை என்று ஒன்று இருப்பதால் அனேகப் புத்தகங்கள் சில பத்தாயிரம் பிரதிகளாவது விற்கும். சமீபத்து வருடங்களில் பெருவாரியான பல்கலைகளும், சிற்றூர் நூலகங்களும் புத்தகங்கள் வாங்கத் தமக்கிருக்கும் நிதி வசதியில் நிறைய வெட்டுகளைச் சந்திக்கின்றன என்பதால் அவற்றால் வாங்கப்படும் பிரதிகள் மிகக் குறைந்து போய்க் கொண்டிருக்கின்றன.
தவிர புத்தகமே படிக்காத இரண்டு தலைமுறையினர் உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் பெருமளவும் டிஜிடல் வாசிப்புதான். அவற்றிலும் சிறு நேரத்தில் படித்து விடக்கூடியவற்றைத்தான் படிக்கிறார்கள். தவிர எலெக்ட்ரானிக் பதிப்புகளும் பெருகி வருகின்றன என்பதால் அச்சுப் புத்தகங்களின் மவுசு வீழ்ந்து விட்டிருக்கிறது.
இவற்றால் பாதிக்கப்படுவோரில் உயர் இலக்கியகர்த்தாக்கள் என்று கருதப்படுவோர் மிக அதிகம். புக்கர் பரிசு, புலிட்ஸர் பரிசு, நோபெல் பரிசு என்று பெரும் பரிசுகளுக்கான முதல் கட்டத் தேர்வில் அல்லது இறுதிக் கட்டத் தேர்வில் இருக்கும் புத்தகங்கள் இருபது முப்பது வருடங்கள் முன்பு நிறைய பிரதிகள் விற்கும். இன்றோ பரிசு வென்றவை கூட 10,000 பிரதிகள் கூட விற்பது அதிசயமாக இருக்கிறது என்று தெரிகிறது. முதல் தடவை பிரசுரமாகும் எழுத்தாளர்களின் புத்தகங்கள், அவை சிறப்பாக இருப்பதாகப் பல எழுத்தாளர்கள் தெரிவித்து, விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் எழுதி முற்படுத்தினாலும் கூட, ஓரிரு ஆயிரம் பிரதிகள் விற்றால் அதிசயம் என்றும் கட்டுரை சொல்கிறது. முழுக் கட்டுரை இரு பக்கங்கள் கூட இராது என்பதால் படித்துப் பாருங்கள். பின் ஏன் எழுத்தாளராக வேண்டும் என்று பலர் இன்னும் தாகத்தோடு உலவுகிறார்கள் என்று நாங்கள் அதிசயப்படுவது போல நீங்களும் உணர்வீர்கள். 🙂

http://www.npr.org/2015/09/19/441459103/when-it-comes-to-book-sales-what-counts-as-success-might-surprise-you
[/stextbox]


[stextbox id=”info” caption=”இஸ்ரேலின் பத்திரிகைகள் எந்தெந்த சாரிகளில் நிற்கின்றன? “]

haaretz-October-20_full1

மாற்றுப் பத்திரிகைகள் என்ற வகை ஜீவராசிகள் இஸ்ரேலில் நிறைய இருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எப்போதுமே நிறைய வாதிடுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதை பல நாடுகளிலும் யூதர்கள் ஒரு மரபாகவே தொடர்ந்து வருகிறார்கள். இஸ்ரேல் உருவான போது முதலில் செய்த சில காரியங்களில் ஒன்று பத்திரிகைகளை உருவாக்கியது, அதுவும் ஹீப்ரூ மொழியில். இத்தனைக்கும் வந்து சேர்ந்த யூதர்களில் நிறையப் பேர் ஹீப்ரூ மொழி தெரியாதவர்கள், பல யூரோப்பிய மொழிக்குழுக்களில் பிறந்து வளர்ந்தவர்கள்.
இன்று யூத பண்பாட்டு வளர்ச்சி பற்றியோ, உலக யூதர்களின் நிலைகள் பற்றி இஸ்ரேலியரின் கருத்துகள் பற்றியோ, இஸ்ரேலின் அரசியல், பொருளாதார நிலைகள் பற்றியோ, அந்த அரசின் சர்ச்சைகள் முடிவுகள் பற்றியோ தெரிந்து கொள்ள நாம் ஹீப்ரூ பத்திரிகைகளைப் படிக்க வேண்டி இருக்கும். சரி, ஹீப்ரூ பத்திரிகைகள் எல்லாம் யூத மையம் கொண்டனவா என்றால் அப்படியும் இல்லை. அவற்றில் நிறைய உதிரிக் கட்சிகள் உள்ள இஸ்ரேலிய அரசியல் பிரதிபலிக்கிறதாம். எத்தனை கட்சிகள் உள்ளனவோ அத்தனை பத்திரிகைகள் இருக்கின்றன என்கிறது இந்தக் கட்டுரை.
இதில் வலது, மத்தியம், இடது என்ற பாகுபாடுகள் உண்டு என்றாலும் அப்படி ஒரு அர்த்தமுள்ள பாகுபாடில்லை அது என்று தெரிகிறது. பண்பாட்டில் இடது, பொருளாதாரத்தில் மத்தியம், அரசியலில் வலது என்று ஒரே நேரம் பல இடங்களில் தம்மைப் பொருத்தும் பத்திரிகைகளே அதிகம் என்று தெரிகிறது. எந்தெந்தப் பத்திரிகைகள் என்னென்ன விதமாக உலகைப் பார்க்கின்றன என்று பட்டியலிடுகிறது இந்த இங்கிலிஷ் கட்டுரை.

http://972mag.com/the-political-line-of-israeli-papers-a-readers-guide/4072/
[/stextbox]


[stextbox id=”info” caption=”கூகிள் நிறுவன வலைப் பக்கத்தை விலைக்கு வாங்கிய இந்திய மாணவர்”]

Google_Bought_Website_Internet_Domains_greensmiley

சன்மய் வேத் ஒரு இந்திய வம்சாவளி மாணவர், எம்பிஏ படிப்பில் பாப்ஸன் கல்லூரியில் பாஸ்டன் நகரில் படிக்கிறவர், முன்னாள் கூகிள் நிறுவன ஊழியர். நேற்று கூகிள்.காம் பெயரை 12 டாலருக்கு கூகிள் டொமைன்ஸிலிருந்தே வாங்கி விட்டார். கூகிள் பாதுகாப்புக் குழு இதைக் கண்டு பிடித்து ஒரே நிமிடத்தில் அந்த டீலைக் கான்ஸல் செய்து விட்டார்களாம். ஆனால் இது எப்படி நடந்தது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.  அவரோ இன்னும் தனக்குக் கிட்டிய பெரும் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நிமிடத்துக்காவது கூகிளின் பெயர் தன்னுடையதாக இருந்தது என்பது அவருக்கு அதிசயமாகவும் இருக்கிறதாம். அதாவது இப்படி ஒரு பிரும்மாண்டமான நிறுவனம் தன் பெயரைக் காபந்து செய்து வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை எப்படிப் பார்ப்பது என்று அவர் கேட்காமல் கேட்கிறார்.  பலரைக் கேட்ட போது தெரிய வருகிறது- மைக்ரோசாஃப்ட் ஒரு கட்டத்தில் ஹாட்மெயில் என்ற பெயருக்கான பதிவு உரிமையை இங்கிலாந்துப் பகுதியில் இழந்து விட்டதாம். கவனப் பிசகால், புதுப்பிக்கப்படாமல் இருக்கவும், வேறு ஒருவர் அந்தப் பெயரை வாங்கி விட்டார். சன்மய் வேத் என்கிற அந்த மாணவருக்கு ஒரு நிமிடம் கிட்டிய சொத்து ஒரு தகவல் அமைப்பின் குளறுபடியால் கிட்டிய கானல் நீர், அந்த முகவரியை அவர் வாங்கி இருக்க வழியில்லை என்று பாதுகாப்பு நிபுணர்கள் சிலர் சொல்கிறார்களாம்.

http://www.bostonglobe.com/business/2015/10/02/babson-student-owned-google-com-for-minute/1LrNTSPz3iIGE8c8xBZYYM/story.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”மேற்கும் கிழக்கும் எப்படி வேறுபடுகின்றன?”]

West_East_Boss_China_USA_Europe_Manager_Leader_Perception_Company_Organization

மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் கட்டமைப்பாளர் (டிஸைனர் என்று சொல்வார்கள்) இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் அவர் ஆவணப்படுத்தி வந்திருக்கிறார்.  இவற்றைத் தொகுத்து ஒரு புத்தகத்தில் சேர்த்து 2007 இல் வெளியிட்டிருக்கிறார்.  ஜெர்மன் மொழியில் வெளியான அந்தப் புத்தகத்தின் இங்கிலிஷ் மொழி பெயர்ப்பு இந்த வருடம்தான் வெளியாகவிருக்கிறது. அது பற்றி வெளியான இந்தச் சிறு அறிமுகக் கட்டுரையில் யாங் லியுவின் பல படக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே இந்திய அனுபவங்களுக்கு ஒத்து வரும் என்றில்லை. சில ஒத்து வரும். படங்களை மட்டும் பார்த்தால் கூட நமக்குச் சிலதெல்லாம் உடனே புலப்படும், அட ஆமாம் என்று நினைப்போம்.
http://www.slate.com/blogs/the_eye/2015/10/01/yang_liu_s_east_meets_west_pictograms_about_cultural_differences_from_a.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஏழைகள் ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள்?”]

sowell-economy-tax-book_Wealth, Poverty and Politics

வளமான மேற்கு பற்றி முந்தைய பதிவு பேசியது. அதில் கரு என்னவோ எழுத்தாளர்களின் வாழ்க்கை எப்படி மேற்கில் தொடர்ந்து க்ஷீணித்து வருகிறது என்பதைத்தான் பேசி இருக்கிறது. சமூகத்தைப் பல விதங்களில் கவனித்து, பெரும் கூட்டு வாழ்க்கையில் அலைக்கழியும் மாந்தருக்கு அவரது சூழலின் பேரியக்கத்தில் என்னென்ன போக்குகள் உண்டு, அவை என்ன விதத்திலெல்லாம் மக்களை பாதிக்கின்றன என்பனவற்றைப் புரியும் விதங்களில் உருக்கொடுத்து விவரித்து அர்த்தத்தை மறு படைப்பு செய்யும் எழுத்தாளர்களே வறுமையின் பிடியில் சிக்கி அலைக்கழிகிறார்கள் என்றால் அந்தச் சமூகம் சுயத்தை அறிவதற்கு முயற்சி செய்யாததோடு, அந்த முயற்சியில் நுண்மையைக் கொணர்வாரை உதாசீனமும் செய்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்தக் குணம், போக்கு, வளங்கள் அற்ற சமூகங்களில் அதிகமாகக் காணப்படும். அல்லது போரில் சிக்கி மீண்ட சமூகங்களில், பேரிடர்களில் மாட்டியுள்ள சமூகங்களில் இந்த வகை உதாசீனம் இருக்கும், காரணங்களுடன்.

பல நூறாண்டுகளாக எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும், அந்தஸ்தும் கொடுத்து வாழ்ந்து வந்துள்ள மேற்கு இப்போது வளமற்ற சமூகங்களின் போக்குகளைப் பிரதி செய்யத் துவங்குகிறது என்றால் அதற்கு என்ன பொருள் காணலாம் என்று நாம் யோசிக்கலாம். அப்படி யோசிக்கையில் மேற்கின் வளம் இன்று வற்றி வருகிறது என்பது ஒரு விதமாக நமக்குப் புலப்படும். ஆனால் மேற்கு வளம் வற்றுகையில் தன் சமூகங்களை எப்படி கையாள்கிறது? இந்தியா, ஆசியா, ஆஃப்ரிக்காவுக்கெல்லாம் கடந்த 50 ஆண்டுகளாகப் பாடம் நடத்தி, வறுமையை எப்படிக் கையாண்டால் அதிலிருந்து மீண்டு வளத்தை அடையலாம் என்று போதிக்க முயன்ற மேற்கு பல வகைகளில் இந்தப் போதனைகளில் தோற்றிருக்கிறது. அதன் போதனைகளை நேரடியாகப் பயன்படுத்த முயன்ற அனேக நாடுகளும், சமுதாயங்களும் கடும் தோல்வியை அடைந்திருக்கின்றன. அல்லது வளர்ச்சி என்பது மிகவும் பாரபட்சம் மிக்க ஒரு சமுதாயப் போக்கைப் படைத்து மேலும் கிளர்ச்சிகளுக்கே வழி வகுத்திருக்கிறது. இன்னும் பல எதிர்மறையான விளைவுகளையும் நாம் காணலாம்.
தான் பிறருக்குப் போதித்தவை தன் பல நூறாண்டு அனுபவங்களின் விளைவுகள் என்று மேற்கின் அறிவாளர்களுக்கு இப்போது தெள்ளெனப் புரிந்தாலும், அந்த அனுபவங்களன்றி வேறெப்படி அவர்கள் சிந்திக்க முடியும் என்பது அவர்கள் நிலைப்பாடு.

இன்று மேற்கின் சமுதாயங்களில் வறுமை பரவத் துவங்கி இருக்கையில் தம் அனுபவங்களில் தாம் பெற்ற பாடங்களைப் பிறருக்குப் போதிப்பதை விடுத்து, தாமாவது பின்பற்றினால் ஏதும் நன்மை கிட்டுமா என்று அவர்கள் பார்க்கலாம் இல்லையா? அதைச் செய்கிறார்களா என்று நாம் ஆராயலாம்.

இந்த வகை ஆராய்வில் அங்கு நிலவும் மரபுவழிச் சிந்தனைக்கும், தற்காலச் சிந்தனைக்குமிடையே உள்ள கடும் உரசலை நாம் காணலாம். இங்கு ஒரு புத்தகத்தின் மதிப்புரை கிட்டி இருக்கிறது. இது வாஷிங்டன் போஸ்ட் என்ற ஒரு செய்தித்தாளில் வந்த மதிப்புரை. இந்த மதிப்புரை பல பத்தாண்டுகளாக இந்தத் தலைப்பைப் பற்றி ஆய்வுகள் செய்தும், அவற்றில் பெருவாரி அமெரிக்கப் பல்கலையாளருக்கு மாறாகச் சிந்தித்தும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ள தாமஸ் ஸோவெல்லின் சமீபத்துப் புத்தகத்தை சீர்தூக்கி இருக்கிறது.

ஸோவெல் ஒரு விந்தை மனிதர். இவர் துவக்க கட்டத்தில் மார்க்சியராக இருந்து அமெரிக்க அரசின் தொழிலாளர் இலாக்காவில் வேலை பார்த்த அனுபவத்தில் மரபுவாதியாகிப் போனார். அதற்குப் பிறகு கடந்த 40 வருடங்களாக வருடத்துக்கு ஒரு புத்தகமாவது எழுதி இருக்கிறாராம். இதோடு தினசரிகளில் பத்திகள், தொலைக்காட்சிகளில் பேட்டிகள் என்று வேறு. இவையோடு, அமெரிக்காவின் பல புகழ் பெற்ற பல்கலைகளில் பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.

இவருடைய கருத்துப்படி சமத்துவம் என்பது ஒரு போலிக் கருத்தியல், மாயமான். அசமத்துவம் என்பது எப்போதும் நிலவும் ஒன்று அதை அழிக்க முடியாது, அகற்றவும் முடியாது. வறுமை என்பது நிகழக் காரணம் வறுமையில் வாழும் மனிதர்களின் சுயமுயற்சி என்பது பழுதுபட்டதாக இருப்பதுதான்.

இந்த மதிப்புரை இப்படிப்பட்ட வாதங்களைக் குறை சொல்கிறது. இருப்பினும் ஸோவெல் சொல்வதில் உள்ள சில நியாயங்களையும் ஒத்துக் கொள்கிறது. அரசுடைய உதவி இன்றி வறுமைக் கோட்டின் அருகில் அல்லது கீழே வாழும் மக்கள் நல்ல நிலைக்கு வருவது கடினம் என்பதை முன்வைக்கிறார் மதிப்புரையாளர்.

அமெரிக்காவில் வறுமையை அகற்றும் முயற்சிகளுக்கு வளம் படைத்தவரும், பெருநிதிக்கிழார்களும், பெரும் வணிக வங்கிகளும், பொதுவாக அனேக வெள்ளையரும் எதிரிகள் என்பதை இந்த மதிப்புரை நேராகவோ, மறைமுகமாகவோ சுட்டுகிறது. படித்துப் பாருங்கள்.

https://www.washingtonpost.com/opinions/heres-why-poor-people-are-poor-says-a-conservative-black-academic/2015/09/03/df8ff1fc-1ab4-11e5-93b7-5eddc056ad8a_story.html

இதன் பிறகு அந்தப் புத்தகத்தையே (கிட்டினால்) படித்துப் பார்க்கலாமே? நம் வாசகர்களில் யாராவது படித்திருந்தால் ஒரு மதிப்புரை எழுதுங்கள். இந்தியப் பார்வையில் இந்தப் புத்தகத்தின் வாதங்கள் எப்படித் தெரிகின்றன என்று எழுதினால் நல்லது.
[/stextbox]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.