எங்கள் ஊர் திருவிழா… அந்த சமயத்தில் பேயோட்டுவதும் நடக்கும். பேய் பிடித்த பெண்ணுக்கு அடி என்றால் அடி..செம்ம அடி.. அத்தோடு அவளும் ஏதேதோ சொல்லிக் கொண்டு, கத்திக் கொண்டு…அதில் எதுவுமே நமக்குப் புரியாது. சாமியாடி ஐயா மட்டும் அவளின் பின்னோடு ஓடுவார். கையில் திருநீறும், வேப்பிலைக் கொப்பும்..கையில் பிடித்தபடி..
இதில் வகை வேறு உண்டு. சில பேய்பிடித்த பெண்கள், உட்கார்ந்த இடத்திலேயே ஏதேதோ கத்திக் கொண்டே இருப்பார்கள். வேப்பு அடி ஒன்றைக் கொடுத்து, திருநீறு பூசி விட்டால் போதும்.
மிகச் சிலரே ஓடுவதும் ஆடுவதுமாக இருப்பார்கள்.
இது மன நலக்கோளாரு என்றும், அது மருத்துவத்தால் குணமாகும் என்றும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் பேய் பிடித்தவர்கள் எல்லோருமே பெண்களாகவே இருப்பது ஏன்? என்றே எனக்குத் தோன்றும். மனநல மருத்துவர்களோ, பெண்களுக்கு சொல்ல இயலாத மனக்குமுறல் அதிகம் அதனால் என்கிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ சாமி எனும் கான்சப்டை ஆண்களை விட பெண்கள் அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்கள் அதை அருமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றும்…பல சமயங்களில்..இதற்கு மூத்த பெண்களும் ஆதரவு என்றும் தோன்றும்.
சமீபத்தில்…
அந்தப் பெண் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இல்லை. எங்கோ ஓடிவிட்டான் என்றார்கள். என்னிடமும் வேலை கேட்டார். ஆனால், ஒவ்வொரு புதனும் வேலைக்கு வரமாட்டார். காரணம் புதன் மதியம் பனிரண்டு மணிக்கு அவருக்கு அம்மன் அருள் வரும் என்றும், அப்போது குறி கேட்க பலரும் வருவார்கள் என்றும் அதனால் அன்று மட்டும் தன்னால் வர இயலாது என்றும் சொன்னார்.
வேலை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்தவீட்டில் அவருக்கு வேலை கிடைத்தது. அவர் சுவாரசியமாக இருக்கவே அவரை அதிகம் கவனிக்க ஆரம்பித்தேன்.
தினமுமே காலை, ஆறு மணிக்கெல்லாம் தலை குளித்து மிக மிக சுத்தமாக வேலைக்கு வருவார். வேலை செய்யும் வீட்டில் எதுவுமே சாப்பிட மாட்டார். ஒன்றரை மணி நேரம் வேலை. முடித்ததும், அங்கேயே மறுபடி குளியல். பின் வீடு திரும்புவார். அளவுக்கு மீறிய சுத்தத்தினால், அவருக்கு அதிக சம்பளம் தரப்பட்டது.
புதன் அன்று அவர் குடிசுக்கு ஏகப்பட்ட ஆட்கள் வருவார்கள். பெண்களோடு வருபவர்களுக்கு மட்டுமே அருள் சொல்லுவார். மற்ற நாட்களிலும் கூட அவருக்கு அந்த பேட்டையில் ஒரு மரியாதை/பயம் இருந்தது.
இங்கே வேலைக்கு வரும் இடத்திலும், அவர் ’அருளாடி’ என்பதால், அதிக அசுத்தமான வேலைகள் கொடுக்கப்பட மாட்டாது. ஊராருக்கெல்லாம் அவர் ‘அம்மா”.
திடீரென்று…
எப்போதுமே மஞ்சள் அல்லது சிவப்பு உடை மட்டுமே அணியும் அவர், வேறு நிற உடைகள் அணிந்து வர ஆரம்பித்தார். புதன் அன்று சாமி வருவதும் நின்று விட்டது. சட்டென ஏன் இந்த மாற்றம்?
ஜெயிலில் இருந்து அவள் புருசன் வீடு திரும்பிவிட்டானாம். ☺ புருசனோடு ‘இணையும்’ பெண்களுக்கு சாமி அருள் வராதாம்.
புருசன் பாதுகாப்பு இல்லாததால் அதுவரைக்கும் சாமி பாதுகாப்பு எவ்வளவு அழகாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது?
அதே போல, அம்மாக்கள் ஆண்களிடம் தவறாமல் சொல்லும் வாசகம்…”பொட்டல் காட்டுல முனி அலைவா. அவளுக்கு இளவட்டம்ன்னா ருசி. பிடிச்சிக்கிடுவா. மதிய வெயில் நேரத்தில அங்கிட்டெல்லாம் இளவட்ட ஆண்கள் போகக்கூடாது”
ஏனென்றால் எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் என தனித் தனி கழிப்பறை கிடையாது. அந்த பொட்டல் காடுதான் பெண்கள் ஒதுங்க. தனியாகவோ, சேர்ந்தோ அவர்கள் ஒதுங்கப் போக வேண்டி இருக்கும். அந்தப் பகுதியை பெண்ணுக்கானதாக ஆக்க, ஆணுக்கு போடப்படும் கடிவாளமே அந்தப் புரளி.
மூட நம்பிக்கைதான் இது. ஆனால் எவ்வளவு அழகானது? நான் அதிகம் ரசித்த மூட நம்பிக்கை இது.
பெண்கள் தங்களுக்குள் வாய்விட்டுப் பேசாமலேயே மறைமுகமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆணைத்தள்ளி வைக்க விரதம் என்றும்… அதற்கு மாமியாரும் ஆமாம் என்பதும்… எதையேனும் பெண் செய்ய நினைத்தால், ஒவ்வொருவரிடமும் சொல்லி அனுமதி வாங்குவதற்கு பதில்…சாமி பேரில் சொல்லி செய்ய முடிந்திருக்கிறது.
”பெண்ணின் தாலியில் எவ்வளவு தங்கம் சேர்கிறதோ, எவ்வளவு திடமாக இருக்கிறதோ அவ்வளவு ஆயுசு கெட்டி அவனுக்கு” எனும், நம்பிக்கை(மூட?). குறைந்த பட்சம் அவள் தாலியின் தங்கத்தை அவன் தொடமாட்டான் அல்லவா?
ஆணை குடும்பம் எனும் கூட்டுக்குள் வைக்க எவ்வளவு பிரயத்தனங்கள்? பொறுப்பற்று அவன் வெளியேறினால், அவனால் எத்தனை பேருக்கு நட்டம்? அதனாலேயே கோவில், ஆன்மிகம் என எல்லாவற்றிலும் அவனுக்கே முதல் மரியாதை. பூரண கும்ம மரியாதை முதல், வீட்டில் பிள்ளை பிறந்தால் அது அவனுடையது என அவனுக்கே தகவலைத் தலையில் ஏற்ற….எத்தனை எத்தனை நாடகங்கள்?
உனக்குப் பிடித்தாற்போல் என் வாழ்வை அமைத்துக் கொள்கிறேன். என் வாழ்வு என்பது தனியான ஒன்றில்லை. உனக்குப் பணிவிடை செய்து உன்னை சந்தோசமாக வைத்திருக்கவே நான். உனக்குப் பிடித்த உடை அணிந்து, உன் பார்வைக்காகக் காத்திருந்து…உன் தாய் என் தாய் அல்லவா? அவளைப் பாதுகாக்கும் பொறுப்பும் என்னுடையது. நீ கவலை கொள்ளாதே. அதுதான் கற்பு. சீதையின் வாரிசல்லவா நான்? நீ குடும்பம் எனும் கட்டுக்குள் இருந்தால் போதும் எனக்கு.
எத்தனை எத்தனை நாடகங்கள்? அவன் முன்?
சிறுபிள்ளைக்கு வெல்லம் காட்டி விளக்கெண்ணை கொடுப்பது போல..
ஏன் உண்மையைச் சொல்லி அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை?
ஏனெனில், அவன் மொழி, தேவை எல்லாமே வேறு. ஆணும் பெண்ணும் ஒப்பு நோக்கத் தக்கவர் அல்ல. ஆனால் இணைந்தால்தான் சந்ததி…அதனால்.
இப்படி பல இடங்களில் மறைமுகமாகவே இவர்கள் பேசிக்கொண்டிருக்க… அல்லது சாமி பெயரில் விளையாடிக்கொண்டிருக்க..அந்த விளையாட்டுக்கு அவர்களே அந்தப் பெண்களே பலியானதுதான் இன்று மிச்சம்.
அதன் எச்சம் இதோ…
எங்கள் கிராமப் பகுதிகளில் தம்பதிகளுக்கு இடையே பூசல் / அறுத்துவிட வேண்டும் எனப் பெரியவர்கள் முடிவெடுத்தால், அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும் அதனால் சேர்ந்து வாழ தன் மகனால் இயலாதெனவும் ஊர்க்கட்டுக்குச் சொல்லிவிட்டு, தம்பதி உறவை அறுத்துவிடுவார்கள். அருளாடியை அழைத்து பேயோட்டுவது நடந்தாலும் பிரிந்தவர் பிரிந்தவரே.
படித்த நகரத்துக் குடும்பம் எனில் கோர்டில் போய் பெண்ணுக்கு ஹிஸ்டிரியா, மன நோய் எனச் சொல்வதன் கிராமத்து வடிவம் இது.
இன்று, அலுவலகம் ஓடுகையில் தொங்கத் தொங்கத் தாலி எரிச்சலூட்டுகிறது. தாலியை புனிதமாக தலையில் ஏற்றிய ஆணுக்கோ அது அவனின் ஆயுளை நிர்ணயிக்கும் ஒன்றாக மனதில் உருவேறிக் கிடக்கிறது. “என்னது? தாலியைக் கழற்றுவதா?” என்கிறான் அவன். “பேங்கில் பண்ணத்தைப் போடச்” சொல்கிறாள் பெண்.
பெற்ற பிள்ளை, அவனுடையது என்பதை அவனுக்கே அவள்தான் சொல்ல வேண்டிவந்தமையால் அவன் பெயர் இனிஷியலானது. இப்போது எவரை நம்ப வைக்க வேண்டும். இது நம் பிள்ளை என நமக்குத் தான் தெரியுமே? பின் எதற்கு? நம் இருவரின் உற்பத்திக்கு நம் இருவரின் பெயர் என்கிறாள் அவள்.
”கோவிலில் நானும் மனுசிதானே? பின் ஏன் உன் கோத்திரம் சொல்லி என் பெயருக்கு அர்ச்சனை? எனக்கென அடையாளம் இல்லையா?”- என்கிறாள்.
”நான் சம்பாதிக்கிறேன். வீடு வாங்குகிறேன். அதில் எப்படி ஆண் என்பதால் மட்டும் அவனை முன்னிறுத்தி பூசை?” – இதுவும் அவளின் கேள்விதான்.
”என் தேவையை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனக்கான பிள்ளையை நானே பெற்றேன். அவர்களை வளர்க்கவும் நானே சம்பாதிக்கிறேன். இதில் அவன் பங்கு என்ன? அவன் குடும்பக் கூட்டிலிருந்து வெளியேறினால்தான் என்ன? எதற்காக அவனை குடும்பம் எனும் கூட்டுக்குள் வைக்க வேண்டும். அவனாகவே விரும்பி அந்த கூட்டுக்குள் வந்தால் ஏற்கிறேன். அதற்காகவெல்லாம் அவனின் கடமைகளை நான் சுமக்க முடியாது. அவன் அம்மா அவன் பொறுப்பு. ”
”கற்பா?
கற்பு, விசுவாசம், இந்தப் பெயரில் எல்லாம் இனி எங்களை கட்டுப் படுத்தமுடியாது. எது கற்பு என்பதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்துக் கொள்கிறோம்.” –என்கிறாள் இவள்.
பெண் ஒருத்தி இவனுடைய பொருளாக இருப்பதே கற்பு என கற்றுக் கொடுக்கப்பட்ட ஆண் மலைத்தே போகிறான்.
புது விளக்கம் புரியவில்லை. ஏனெனில் முன்னது அவனுடைய கம்ஃபர்ட் சோன். பிரச்சனை அவனுக்கு இல்லை.
இந்தப் பிரச்சனைகள் சமன் ஆக பெண்ணியம் பேசுவதை விட, மறுபடி வாய்மூடியே முன்பு செய்ததே போல பெண்கள் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதே சரி.
ஏனெனில் சந்ததி பெருக்குவது எனும் செயல் அவள் கையில்தான் இருக்கிறது. மேலும், ஆண்/பெண் இருவரின் மொழியுமே இன்னும் வெவ்வேறாகவே இருக்கிறது.
“தாலி போடுறதில்லேன்னு ஆத்தாவுக்கு வேண்டிக்கிட்டிருக்கேங்க”
சரிவரலாம்.
Well Done for the logical thinking!